Search This Blog

21.9.12

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு


வரதராஜூலு கூட்டிய பார்ப்பனரல்லாதார் கூட்டம்
நூல்    :    பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
ஆசிரியர்    :    பழ. அதியமான்
வெளியீடு    :    காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில் _ 629 001.
பக்கங்கள் :    480- ரூ. 375.
-நூலிலிருந்து.....
பார்ப்பனரல்லாதாரின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க தலைவர்கள் கூட்டம் ஒன்றை 1926 அக்டோபரில் வரதராஜுலு கூட்டினார். அக்கூட்டத்திற்குப் பெரியார் உட்பட பல தலைவர்களை அழைத்தார். அதை ஒட்டி தேசிய அறிக்கை ஒன்றினையும் தமிழ்நாடு அலுவலகத்திலிருந்து அனுப்பினார். அதைக் குறித்த பெரியாரின் எதிர்வினை பின்வருமாறு:
சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாக பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்றும் வளர விட்டுக்கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும் என்பது வரதராஜுலு அறிக்கையில் கூறியிருக்கும் கருத்துகளில் ஒன்று. இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்னதாகவே கொண்டுள்ளோம்.... இதை வெளிப்படையாய் வலியுறுத்த முன்வந்ததற்கு நன்றி. அவர் எடுத்துக்கொள்ளும் எவ்வித முயற்சிக்கும் ஆதரவளிக்க வேண்டியது தமிழ் மக்கள் கடமை (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 2009, ப. 895).

வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசைவிட்டு விலகியபோது இப்போதுதான் காங்கிரசு பரிசுத்தமானது என்று எஸ். சீனிவாச ஐயங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926: 3 அக்டோபர் 1926). பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதல் செய்யும் காங்கிரசு தலைவர் எஸ். சீனிவாச ஐயங்காரோடு வரதராஜுலுவும், திரு.வி.க.வும் இணங்கி இருப்பது பற்றி கேலியும், கிண்டலும், கண்டனமும் பெரியார் செய்துவந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து வரதராஜுலு விலகினார் என அறிந்து நாட்டின் நல்ல காலத்தின் பயன் என்று பெரியார் எழுதினார். (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926).
காங்கிரசில் பார்ப்பனரல்லாதாரின் நிலைமை
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் எதிர்விளைவாகவே பார்ப்பனர் அல்லாதாருக்குக் காங்கிரசில் மதிப்பும் பதவியும் வாய்ந்தது என்று பல சமயங்களில் பெரியார் எடுத்துக் காட்டினார். அவ்வகையிலேயே காங்கிரசில் வரதராஜுலுவுக்குப் பதவி கிடைத்தது என்றும் ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.
ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருக்குமானால் அரசியல் சங்கங்களிலாவது டாக்டர் வரதராஜுலு நாயுடு, கலியாண சுந்தர முதலியார், தண்டபாணி பிள்ளை, சிங்காரவேலு செட்டியார், பாவலர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப்பிள்ளை, வெங்கிடு கிருஷ்ணப்பிள்ளை, இராமசாமி நாயக்கர், சக்கரை செட்டியார், மயிலை இரத்தினசபாபதி முதலியார், முனுசாமி கவுண்டர், அமீத் கான் சாயபு, ஷபி முகம்மது சாயபு, மாரிமுத்துப் பிள்ளை முதலிய எத்தனையோ கனவான்கள் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் வந்திருக்க முடியுமா? முடியுமென்று சொல்வார்களானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதபோது ஐந்தைந்து வருஷம் ஜெயிலுக்குப் போன உண்மையான தேசபக்தர்களான ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளை முதலிய கனவான்கள் உண்மையான தேசத் துரோகிகளான பல பார்ப்பனர்கள் மூட்டை தூக்கியும், அவர்களைச் சுவாமிகளே என்று கூப்பிட்டுக்கொண்டும் அவர்கள் வாலைப்பிடித்துத் திரிந்தால் மாத்திரம் வாழும்படியான நிலைமையில் இருக்கவில்லையா? (குடிஅரசு, 31 அக்டோபர் 1926).
வரதராஜுலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜுலு கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜுலுவை ஆதரித்தது.
சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகையில் பேர் போடுவதாகவும், படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத் துணியும் உபயோகித்துக்கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொதுஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரியபெரிய உத்தியோகங்களையும், பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா? அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).
குடிஅரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜுலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.
நவீனம்: வரதராஜுலுவும் பெரியாரும்
(மாறிவரும் காலத்தை உணர்ந்து புதியனவற்றை ஏற்றுக்கொள்ளும்) நவீன மனிதராக வரதராஜுலுவைக் கருத முடியாது என அவரோடு நன்கு பழகிய வ.ரா. குறிப்பிட்டுள்ளார். அப்படி பழமைவாதியாக அவரை முற்றாக ஒதுக்கிவிட முடியாது. பெரியாரைப் போல் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டாடுபவராக இருக்கவில்லை என்றாலும் பண்பாட்டு மாற்றங்களைச் சூழ்நிலைக்கேற்ப ஏற்பவராகவே இருந்தார் வரதராஜுலு. அதற்கு ஒரு சான்று 1933இல் மதவாதிகளால் எதிர்க்கப்பட்ட கர்ப்பத் தடையை வரதராஜுலு ஆதரித்தார். பெண் ஏன் அடிமையானாள்? எனச் சிந்தித்த பெரியார் கர்ப்பத் தடையை ஆதரித்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பி.எஸ். சிவசாமி ஐயர் தலைமையில் நடந்த கர்ப்பத் தடையின் அவசியம் குறித்த கூட்டத்தில் (31 அக்டோபர் 1933, சென்னை) வரதராஜுலு கலந்துகொண்டார்.
கர்ப்பத் தடை போன்ற லௌகீக விஷயங்களில், சாஸ்திரம் பற்றிக் கவலையே கொள்ளக்கூடாது.... பழைய காலத்து சாஸ்திரங்கள் கர்ப்பத் தடையை ஆதரிக்கின்றனவா அல்லவா என்பது பற்றியும் கவலை வேண்டாம். இந்தக் காலத்தில் நடந்துகொள்ள வேண்டியது பற்றியே கவனிக்க வேண்டும்.
குழந்தைகளில்லாவிட்டால் அது பெருங்குறையாகவிருக்கிறது. அதிகமாகி விட்டாலும் கஷ்டம்... கர்ப்பம் ஏற்படாதபடியே தடுப்பது சரியா? அல்லது கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனைக் கலைப்பது சரியா? கர்ப்பத்தைச் சிதைத்து அது சம்பந்தமான குற்றங்கள் செய்த கைதிகளே பெரும்பாலோராய் சிறையில் இருக்கக் கண்டிருக்கிறேன்... நமது (இந்து) வைதீகர்கள் கர்ப்பத் தடை விஷயத்தில் குறுக்கிட்டு கூச்சல் போடவில்லை. ஆனால் அவ்வேலையைக் கத்தோலிக்கர்களுக்கு விட்டிருக்கிறார்கள்.... சர்க்கார் எவ்வித எதிர்ப்பையும் அலட்சியம் செய்யாமல் ஆஸ்பத்திரிகளில் தகுந்தவர்களைக் கொண்டு கர்ப்பத் தடை முறைகளைப் போதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் (குடிஅரசு, 5 நவம்பர் 1933) என்பது வரதராஜுலு அக்கூட்டத்தில் விடுத்த கோரிக்கையாகும்.
கர்ப்பத் தடையை ஆதரித்துச் சென்னையில் நடந்த அக்கூட்டத்தின் நிகழ்வுகளைச் சுதேசமித்திரன் வெளியிட்டிருந்தது. பலரும் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்த்துப் பிரசுரித்திருந்த அது வரதராஜுலுவின் பேச்சைத் தமிழில் பேசினார் என்று ஒருவரியில் முடித்துவிட்டது. அதைக் கண்டித்து எழுதியது குடிஅரசு.
இங்கிலீஷ் பேச்சுகளை எல்லாம் மொழிபெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜுலுவின் தமிழ்ப் பேச்சைப் பூராவாகப் போடாததற்குக் காரணம் என்ன? தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப்பனரல்லாதார் மீதான துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பன பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக! (குடிஅரசு, 5 நவம்பர் 1933).
கட்சியிலும் சமூகத்திலும் தனக்கும் தன் கல்வித் திட்டத்திற்கும் எதிர்ப்பு அதிகமாகிவிட்டதை உணர்ந்த இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து உடல் நிலையைக் காரணம் காட்டி விலக முடிவு செய்தார். அதற்கு முன்னதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பெற்றது. புதிய தலைவர் தேர்வில் வரதராஜுலுவுக்கும் பெரியாருக்கும் முக்கியப் பங்கிருந்ததாகத் தெரிகிறது.
கூட்டம் (சென்னை சட்டசபை காங்கிரசு கட்சிக் கூட்டம்) ஆறு மணி அடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் துவக்கப்பட்டது. தமக்குப் பதிலாகக் கட்சித் தலைவர்
பதவிக்கு நியமனச் சீட்டுகளைப் பதிவு செய்யுமாறு ஆச்சாரியார் கேட்டுக்கொண்டார். டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு காமராசர் பெயரை முன்மொழிந்தார்.
என்.அண்ணாமலைப் பிள்ளை அதை வழிமொழிந்தார். கி.சுப்பிரமணியத்தின் பெயரை பக்தவத்சலம் முன்மொழிய டாக்டர் யூ.கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.
தேர்தல் நடைபெற்றது. காமராசருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. (விடுதலை 31 மார்ச் 1954).
8 ஏப்ரல் 1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதையடுத்து காமராசர் முதலமைச்சரானார். ஏ.பி. ஷெட்டி, எம். பத்வத்சலம், சி. சுப்பிரமணியம், பி. பரமேசுவரன் ஆகியோர் அமைச்சர்களாக அமைந்தனர். காமராசர் பொறுப்பேற்றதும் புதிய கல்வித் திட்டத்தை விலக்கிக் கொண்டார்.
1953 முதல் 1954 வரை நடந்த புதிய கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டத்திலும் அதன் இறுதிப் பகுதியாக அமைந்த முதலமைச்சர் மாற்றத்திலும் வரதராஜுலு பெரியாருடன் இணைந்து செயலாற்றியதைக் கண்டோம். 1925இல் நடைபெற்ற சேரன்மாதேவி போராட்டத்தை இது நினைவூட்டுகிறது. இரண்டு போராட்டங்களும் கல்வி சார்ந்தவை. இரண்டும் காங்கிரசுகாரர்களின் செயல் திட்டங்களாக அமைந்தவை. வர்ணாசிரமப் புதுப்பித்தலாகப் பார்ப்பனரல்லாதாரால் கணிக்கப்பட்டவை. 25 ஆண்டுகள் இடைவெளி கொண்ட இரண்டிலும் பார்ப்பனரல்லாத தலைவர்களான வரதராஜுலுவும் பெரியாரும் இணைந்து போராடினார்கள்.
இறுதியான இரண்டு போராட்டங்கள்
காமராசர் முதலமைச்சரான பிறகு வரதராஜுலு மூன்று ஆண்டுகளே வாழ்ந்தார். காமராசர் ஆட்சியின் இக்கட்டத்தில் தேசியக் கொடி, இராமர் பட எரிப்புப் போராட்டங்களில் பெரியார் ஈடுபட்டார். சட்டமன்ற உறுப்பினரான வரதராஜுலு பெரியாருக்கும், காமராசருக்கும் பாலமாகச் செயல்பட்டார்.
1955 ஆகஸ்ட் மாதத்தில் இந்தி எதிர்ப்பின் ஒரு அடையாளமாக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். வரதராஜுலுவின் முயற்சியினால் வெளியான முதலமைச்சர் காமராசரின் அறிக்கையை அடுத்துப் பெரியார் அப்போராட்டத்தை விலக்கிக் கொண்டார். இதன் பின்னணியில் வரதராஜுலு இருந்தார்.
தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணர்கிறேன். ஆகவே நான் எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால் எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
..... முதல் மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்பக் கொடி கொளுத்துவதைத் தற்காலிகமாகவே ஒத்திவைத்து திராவிடர் கழகத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொது மக்களையும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்றைக்குக் கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1974, ப. 1836).

காமராசர் ஆட்சிக்கு ஊறு வந்துவிடாமலும், அதேசமயம் தன்னுடைய தேசியக் கொள்கையை விட்டுக்கொடுத்து விடாமலும் அரசியல்ரீதியாகப் பெரியார் எதிராகச் சென்றுவிடாமலும் அமையக்கூடிய நடவடிக்கைகளை எடுத்தவராக வரதராஜுலு இச்சந்தர்ப்பங்களில் செயல்பட்டார் எனச் சொல்லலாம்.
1956இல் நிகழ்ந்த பெரியாரின் இராமர் பட எரிப்புப் போராட்டத்தை வரதராஜுலு எதிர்த்தார். அதைப் பெரியார் பின்வருமாறு எதிர்கொண்டார்.
நான் மதிக்கத்தக்க இரண்டு நபர்களிடமிருந்து இராமன் உருவம் கொளுத்தப்டக்கூடாது என்று ஒரு வேண்டுகோள் -- அதாவது ஒரு வகை எதிர்ப்பும் கொடி கொளுத்துவதைத் தடை செய்யும்படி சர்க்காரைக் கேட்டுக்கொள்ளும் மற்றொரு வகை எதிர்ப்பு ஒன்றும் ஆக இரண்டு எதிர்ப்புகளைப் பத்திரிகையில் பார்த்தேன்.
இந்தக் கனவான்கள் எனது மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களில் எம்.எல்.ஏ. ஒருவர். இவர் மக்கள் பிரதிநிதி உரிமை கொண்டவர். மற்றொருவர் ஒரு மடாதிபதி ஆவார். இவர்கள் இருவரும் யார் என்றால், வரதராஜுலு நாயுடு அவர்களும் குன்றக்குடி மடாதிபதிகளுமாவார்கள்.
ஆதாரத்தின் மீதும், பலத்தின் மீதும், ஆமோதிப்பின் மீதும் நடத்தப்படுகிற ஒரு காரியத்தை ஒரே வார்த்தையில் வேண்டாம் என்றும், தடைசெய் என்றும் பொறுப்புள்ள மரியாதையுள்ள இரு பெரியார்கள் சொல்லிவிடுவது என்றால் இதில் எப்படி நம் கருத்தைக் கூறாமல் இருக்க முடியும்? மற்ற வேறு யாராவது இருந்தால் நான் இவ்வளவு இலட்சியம் செய்யமாட்டேன்.....
என் உள்கருத்தை அறிந்து, நான் சொல்லும் காரணங்களை காட்டும் ஆதாரங்களை எடுத்துத் தலைப்பில் காட்டி, அதை மறுத்து அல்லது சமாதானம் சொல்லிக் கொளுத்த வேண்டாம், கொளுத்துவது தப்பு என்று சொல்லுவது எதிர்ப்புப் பண்பாகும். நமக்கும் உதவி செய்வதாகும். அப்படியில்லாமல் மக்கள் மனம் புண்படும் என்பது மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பவருக்காகத் தான் கவலைப்படத் தக்கதாகுமே தவிர மக்களை மூடத்தனத்திலிருந்து அதனால் ஏற்பட்ட இழிவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பவனுக்கு மக்கள் மனம் புண்படுவது என்பது மதிக்கத்தக்க தாகுமா? (விடுதலை, 30 ஜூலை 1956).

அரசு தடைவிதித்திருந்தாலும் இராமன் பட உருவத்தைக் கொளுத்தியது குற்றமல்ல என்று பெரியார் விடுதலையில் கட்டுரை எழுதும்படி இப்போராட்டம் ஒருவகையாக முடிவுக்கு வந்தது
(விடுதலை, 2 ஆகஸ்டு 1956).


9 comments:

தமிழ் ஓவியா said...




டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர்

டி.முருகேசன் நியமனம் புதுடில்லி, செப் 21: டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதியரசர் டி.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 12 ஆண்டு காலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றியவர். டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர் நியமிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் கி.வீரமணி பெரியாரின் வெற்றி முரசு



தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமை இருளை அகற்றிய அறிவு அகல் விளக்கை ஏற்றி வைத்த தந்தை பெரியார் உலகத் தமிழர்களின் தலைமை சான்ற மறுமலர்ச்சி சிந்தனைத் தலைவர் என்பதை உலகறியும்.

தந்தை பெரியார் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும், அந்த வரலாற்றை இக்காலத்தில் படிப்பவர்களுக்கும்தான் தந்தை பெரியாரின் தன்னேரில்லாத தறுகண்மைத் தொண்டுகள் தெரியும்.

அக்காலத்தில் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மக்கள் பட்ட துயரமும் துன்பமும் சொல்லில் அடங்கா. எழுத்தில் வடிக்க இயலாத பெருங்கொடுமைத்துவங்கள் நிறைந்ததாகும்.

பெரிய சாதி பார்ப்பனர் கள், அனைத்துச் சாதி மக்களையும் கீழே போட்டு மிதித்தனர். மேல் சாதிக்காரர்கள் அடுத்தடுத்த கீழ் சாதிக்காரர்களை அடிமைப்படுத்தி ஆட்டிப் படைத்தனர். மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைப் படாதபாடுபடுத்தி புழு, பூச்சிகளைவிட கேவலமாக நடத்தினர்.

மதம், சாதி, கடவுள் பெயரால் தமிழர் கள் வீழ்த்தப்பட்டனர். இந்தக் காலகட் டத்தில் தமிழகத்தின் விடியலாகத் தந்தை பெரியாரின் திராவிட இயக்கம், அவர் வழி அறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் புத்துணர்ச்சியும், எழுச்சியும், விழிப்பும் தான் இன்றைய தமிழர்கள் நல்வாழ்வு உயர்வாழ்வு.

இதற்காக அன்று எத்தனை, எத் தனையோ இளைஞர்கள் கழுமரம் ஏற்றப் பட்டது போன்ற துன்பங்கள், துயரங்களை ஏற்றனர். தங்கள் வாழ்வை இழந்து தமிழர்கள் சுயமரியாதைக்காக தமிழ் மண்ணுக்காக, தமிழர்க்காக உரமாயினர். திராவிட இயக்கம் என்றர்லே அடி உதை, மிதி, சிறை என்று படாதபாடுபடுத்து வார்கள் அன்றைய ஆட்சியினர், மேல் சாதித் திமிர்த்தனத்தினர்.

சொத்து சுகத்தை, நலத்தை, ஊணை, உயிரை, இழந்து வளர்த்த இயக்கம்தான் திராவிட இயக்கங்கள். இன்றைய தலைமுறையினர் நன்றியோடு இதனை நினைக்கவேண்டும்.

இன்று தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ்கிறார்கள் என்றால் அதற்குரிய தந்தை பெரியார் தந்த விலைக்கு ஈடே கிடையாது! அறிஞர் அண்ணாவிற்குப் பின் இன்றுவரை திராவிட இயக்கத் தேரோட்டத்தை இழுத்துப் பிடித்துத் தொண்ணூறு அகவையிலும் தொடரும் கலைஞர் போன்றவர்களின் தியாக, ஈகத்திற்குத் தமிழ்ச் சமுதாயம் கடமைப் பட்டுள்ளது.

இந்த வழித் தடத்தில் தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடு களுக்காக எத்தனையோ இன்னல்களை, இடையூறுகளை விடுதலை, இதழ் வழி சுயமரியாதைச் சுடர் விளக்கை அணை யாத விளக்காகக் காத்து உலகுக்கு ஒளிகாட்ட வைத்தவர் ஒப்பாரும், மிக்காரு மில்லாத தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் ஆவார்.

தந்தை பெரியார் தந்த விதைகளை யெல்லாம் பக்குவமாகப் பாதுகாத்து, அந்தந்தக் காலகட்டத்திற்கு என்ன தேவையோ அதற்குத் தக பருவகாலத் திற்கு ஏற்ற பகுத்தறிவோடு அந்த வித் துக்களை, நல்ல நிலங்களை நன்னில மாகப் பயன்படுத்தி விதைத்து இன்று பல்வேறு துறைகளில் தமிழர்களுக்கு நலம் பயக்கும் சீரிய நேர்த்திய கடமையை நம் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் வியக்கத்தக்க கடமையை விடுதலை இதழின்; இயக்கத்தை நடத்தி வெற்றி நடைபோடுகிறார்.

தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விடுதலை இதழை ஒரு சிறப்பு மிக்க இதழாக நடத்துவதோடு, வேறு எந்த இதழிலும் சொல்ல அஞ்சும் செய்திகளை எல்லாம் துணிவோடு வெளியிட்டு, எந்த வகையிலும் தமிழர் பகைமைகளோடு சமாதானம் செய்து கொள்ளாமல் விடுதலை முரசு கொட்டி வருகிறார்.

விடுதலை 50 ஆண்டு நிறைவை நாம் போற்றும் போது, பெருமகனார் வீரமணி அவர்கள் அரும் பெரும், தமிழர் தொண்டினையும் போற்றி, நல்ல உடல் நலத்தோடு, பலத்தோடு, தமிழர்களுக்கு நூறாண்டு மேலாண்டு, பல்லாண்டு தொண்டாற்ற நீடூழி வாழ வாழ்த்தி வணங்குவோம்.

(நன்றி: தமிழ்ப் பணி, செப்டம்பர் 2012)

தமிழ் ஓவியா said...


தீட்சிதர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சிறார் திருமணத்தை (பால்ய விவாகம்) தடுக்கும் சாரதா சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால் அந்தச் சட்டம் வெகுநாள் செயலாக்கப்படாமலேயே முடக்கப்பட்டது. தந்தை பெரியாரின் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் பயனாக சட்டத்தின் துணையில்லாமலேயே சிறார் திருமணங்கள் குறைந்தன. சமீப காலத்தில் திருச்சி யிலும், வேலூரிலும், தர்மபுரியிலும் நடக்கவிருந்த சிறார் திருமணங்களை மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு நிறுத்தினார்கள் எனச் செய்திகள் வருவது வரவேற்கத்தக்கதே.

ஆனால், இன்றும் சரளமாக சிறார் திருமணத்தை நடத்தும் தில்லைவாழ் தீட்சிதர்களை இந்தச் சட்டம் நெருங்காதது ஏன்? கடலூர் மாவட்ட நிருவாகம் தூக்கத்திலேயே உள்ளதா? அல்லது தீட்சிதர்கள் பக்கம் திரும்பக் கூடாது என கண்மூடி தவம் செய்கிறதா? பள்ளிக்குச் செல்லும் 10, 11 வயது சிறுமிகள்கூட கழுத்தில் மஞ்சள் கயிறுடனும், காலில் மெட்டியுடனும் செல்வது வெகு சரளமான காட்சி. அந்த மாணவிகள் பள்ளி மாணவர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாவது தனிக் கதை.

நாம் தீட்சிதர்களிடம் விசாரித்தால் இதில் பெண்ணடிமைத்தனமோ, வரதட்சணை விவ காரமோ, இல்லையென்றும் கோயில் அர்ச்சகர் பணி குடும்பஸ்தர்களுக்கே உண்டென்பதால் இளவயதுத் திருமணம் தவிர்க்க முடியாதது என்கிறார்கள். தந்தை பெரியார் கூறியபடி பிறவி முதலாளிகளாக வருமானம் பார்க்கும் அர்ச்சகர் தொழிலுக்காக அறிந்தே செய்யும் இந்த அநியாயம் தொடரலாமா?

மாவட்ட நிருவாகத்தின் கீழ் சிதம்பரம் இல்லையா? அல்லது தீட்சிதர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? சிதம்பரத்தில் சிறார் திருமணக் கொடுமையை மாவட்ட நிருவாகம் தடுத்து நிறுத்தாவிட்டால் பொது மக்கள் கூடி போராட்டம் நடத்த நேருவதுடன் பொது நல வழக்கும் தொடரப்படும். எச்சரிக்கை!

- தி. சோமசுந்தரம்
பிள்ளையார்ப்பட்டி

தமிழ் ஓவியா said...

தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாள்



இந்த ஸ்தலத்தில் (திருப்பதியில்) வீற்றிருக்கும் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளும் ஒரு ஜமீன்தாரேயாவார். நூற்றுக் கணக்கான ஏழை மக்களின் இரத்தத்தை இவர் உறிஞ்சி வருகிறார். நேர்த்திக் கடன் செய்பவர்களும், இந்தியாவின் பல பாகங்களிலிருந்து யாத்ரீகர்களும், பக்தர்களும் ஆயிரக்கணக்கானவர்கள் திருப்பதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் வருஷாவருஷம் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு முட்டாள்தனமாகப் பதினாறு லட்சம் ரூபாய்கள் வீதம் செலவு செய்கின்றனர். எனக்கு இத்தகைய கடவுள் மீது சிறிதேனும் நம்பிக்கையே இல்லை. நீங்கள் தோழர் வெங்கடேஸ்வரர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், அவருடைய ஆட்சியின் கீழ் சரியான நியாயம் வழங்கப்படுகிறதா? அவர்மீது நான் நம்பிக்கை வைப்பதற்கு மறுதலிக்கிறேன்.

இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினி கிடக்கிறார்கள். முதலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய கொள்கைப்படி சுயராஜ்யம் என்றால், அபேத வாதந்தான்.

- என்.ஜி.ரங்கா

தமிழ் ஓவியா said...

புத்தம் மரணம் கச்சாமி!

புத்தர் விழா தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது பெரும் கொந்தளிப்பை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

தத்துவார்த்த வகையில் பார்க்கப் போனால் புத்தர் விழாவில் பங்கேற்க சற்றும் அருகதை இல்லாத ஆசாமிதான் இந்த ராஜபக்சே.

அன்பும், கருணையும், பண்பும், மனித நேயமும் குலுங்கும் பூஞ்சோலையாம் புத்தர் எங்கே? தமிழர்களின் உடலை உயிரோடு கொத்தித் தின்னும் கொடிய கழுகாம் ராஜபக்சே எங்கே?

ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தன் உயிரைத் தத்தம் செய்ய முன்வந்த கவுதமப் புத்தர் எங்கே? புத்தர் சிலைகளை - தமிழனை வெட்டி, அவன் ரத்தத்தால் குளிப்பாட்டும் கொடுங்கோலன் ராஜபக்சே எங்கே? மனித குலத்துக்கே மாசு மருவற்ற நல்வழி காட்டி மனிதர்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் அன்பு இழைகளால் இணைத்த அந்தக் கருணைச் சீலர் எங்கே? இனவெறி கொண்டு - இட்லரும்கூட எனக்கு ஈடு இல்லை என்ற தோரணையில், பச்சிளங் குழந்தைகள் தங்கி இருந்த விடுதிகளில்கூட குண்டு மழை பொழிந்து அந்தச் சின்னஞ்சிறு மலர்களைக் கொன்று குவித்த குரூர மனிதனான இந்த ராஜபக்சே எங்கே?

யாகங்களின் பெயர்களால் உயிர்ப் பலி கொடுக்கும் உன்மத்தர்களை நேருக்கு நேர் சந்தித்து, இதோபதேசம் செய்து திருத்த முன்வந்த அந்தத் திருமேனி எங்கே? ஆசைகாட்டி மோசம் செய்யும் வகையில் ஓரிடத்திற்குப் பல்லாயிரக் கணக்கான தமிழர்களை வரச் செய்து ஒரே நேரத்தில் கொடிய ஆயுங்களை வீசிப் பிணக் குவியலாக்கிய இந்தப் பேர் வழி எங்கே?

புத்தம் என்பது ஒரு நெறி என்ற நிலையை வெறியாக்கிய, ஓநாயல்லவா இந்த ராஜபக்சே! இன்னொரு இனத்தை இல்லாமல் செய்வதற்கு சிங்களவர்கள் மத்தியில் இனவெறியை ஊட்டிய - இரக்கம் என்ற ஒன்று இல்லாத இடி அமீன் அல்லவா இவர்!

இலங்கை அரசின் அதிகாரப் பூர்வமான மதம் பவுத்தம். புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர்தான் அங்கு அதிபராக வர முடியும் என்பது சட்டத்தின் நிலை அங்கு.

இதன் பொருள் என்ன? தமிழர்கள் அந்நாட் டின் குடிமக்கள் இல்லை என்பதுதானே? தமிழர்களுக்கென்று தாய்மொழி, இனப் பண்பாடு, வாழும் உரிமை கிடையாது என்று உறுதி செய்யப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சித் தலைவர் தானே ராஜபக்சே? இல்லை என்று மறுக்க முடியுமா?

இனவெறி, இன்னொரு இனத்தின் அழிப்பு, சொந்த நாட்டு மக்கள் மீதே போர்ப் பிரகடனம், அழிக்கப்பட்ட மக்கள் போக எஞ்சிய வர்களும் முள்வேலி முகாமுக்குள் முடக்கி இருக்கும் மோசமான நிலை; ஈழத் தமிழர்கள் என்று சொல்லுவதற்கான எந்தத் தடயமும், அடையாளமும் சற்றுமின்றி முற்றிலும் ஒழித்துக் கட்டும் பாசிச நடவடிக்கைகள் பவுத்தக் கொள்கை என்ற பெயரால் இலங்கையில் நடக்கிறதா - இல்லையா?

பவுத்தத்தில் ஆரிய ஊடுருவலால் அதன் அடிப்படைத் தத்துவங்கள் திரிபு நிலைக்கு ஆளாக்கப்பட்டதே! அன்பு நெறி - அபாய வெறியாக அல்லவா மாறி விட்டது?

பவுத்தம் பரவுயுள்ள நாடுகளில், பவுத்தத்தின் அடிநாதம் அழிக்கப்பட்டு விட்டதே! இல்லை என்றால் இலங்கையில் சிங்கள வெறி பவுத்தத்தின் பெயரால் தாண்டவம் ஆடுமா? ஆடுகின்ற நிலையில், பவுத்த நெறியாளர்கள் எதிர்க் குரல் கொடுத்திருக்க மாட்டார்களா?

புத்தம் சரணம் கச்சாமியல்ல - புத்தம் மரணம் கச்சாமி!

சங்கம் சரணம் கச்சாமியல்ல - சங்கம் கலகம் கச்சாமி!

தம்மம் சரணம் கச்சாமியல்ல தம்மம் தண்டம் கச்சாமி

- என்பதுதான் இன்றைய இலங்கையின் நிலைமை.

பவுத்தம் தோன்றிய மண்ணிலே நர வேட்டை மனிதனுக்கு அழைப்பு - வரவேற்பு என்பது வெட்கப்பட வேண்டியதே! 21-9-2012

தமிழ் ஓவியா said...

சிரார்த்தப் பித்தலாட்டம்: ஒரு பார்ப்பனர் கருத்து

காலஞ்சென்ற திரு.ஏ.ராமச்சந்திர அய்யர் என்பவர் - கொச்சி சமஸ்தானத்தில் திவான் பேஷ்காராக இருந்து பென்ஷன் பெற்றும், கவர்மெண்ட் வித்தியா இலாகாவில் வேலை பார்த்தவர். சித்தூரில் கவர்மென்ட் ஸ்கூல் இருந்தபொழுது அவர் அதன் தலைமை உபாத்தியாயராகவும் இருந்தவர். அவர் காலமாவதற்கு முன்பு எழுதி வைத்த உயிலில் அபூர்வமான சில உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
அவை வருமாறு:

சுயேச்சை பெரிதும் பாராட்டும் பிராமணர்களின் விஷயமாய், கவுண்டி, ஒத்தன், கொத்தன், காவேரிஸ் நானம், தசதானம் முதலியவைகளுக்காக ஒரு தம்படி கூடச் செலவழிக்கக் கூடாதென்று என்னுடைய வாரிசுகளுக்குத் தெரி வித்துக் கொள்கிறேன். மேலே கண்ட சவுண்டி, ஒத்தன், முதலிய கர்மாக்கள் சம்பந்தமாய் செலவு செய்யப்படும் பணத்தினால் எள்ளளவும் பயனில்லையென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

தங்களுடைய சுயநலத்தினால் பிராமணர்கள் இறந்து போனவர்கள் சந்ததியாரிட மிருந்து பணத்தை உறிஞ்சுவதற்காகவே அவைகளை ஏற்படுத்தியிருக் கிறார்களேயொழிய வேறில்லை. இட்டாருக்கு இட்ட பலன் சித்திக்கு மென்னும் முதுமொழி உண்மையே.

ஒருவன் இறந்து போன பிறகு அவனுக்காக நற்கதி கிடைக்குமென்று நான் நம்பவே இல்லை. நம்முடைய முன்னோர்களை கவுரவப்படுத்த வேண்டுமென்பதையும் அவர்களை மறந்து விடக் கூடாதென்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.

இறந்து போனவனைக் குறித்து வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடி அவனுடைய கண்ணியத்திற்கு குறைவில்லாமல் அவனுடைய சந்ததி யாரும் பந்துமித்திரர்களும் நன்னடக்கையுடன் நடந்து கொள்வது போதும். ஒரு பிறவியில் செய்த கன்மங்களுக்கு ஏற்றபடி அடுத்த பிறவி சித்திக்கும், ஆதலின் ஒருவன் சந்தோஷத்துடன் சுகித்திருப்பதற்குக் காரணம், அவனுடைய செய்கைகளேயாகும். சாம சுலோகங்களைப் பெரிதாகப் பாராட்டுவது பாவமாகாவிட்டாலும், அதுகெட்ட சுபாவமென்றே நினைக்கிறேன்.

ஆகவே, இதைக் கண்ணுறும் நண்பர்கள் இனிமேலாவது சுயமரியாதை இயக்கத்தின் மீது சீறி விழாமல், அவர்கள் என்ன செய்ய சொல்லு கிறார்களென்பதைக் கவனித்துப் பார்த்து குருட்டு எண்ணங்களையும், மூடப் பழக்கங்களையும், அடிமை புத்தியையும் அடியோடு அகற்றி சுயமரியாதை பெற்று மனிதத் தன்மையுடன் கூடிய சுகவாழ்வு வாழ்வாராக!

- குடிஅரசு, 19.10.1930

தமிழ் ஓவியா said...

கோவில் சமத்துவமா?

கோவிலில் ஜாதி வித்தியாசம் கிடையாது. யாவரும் உள்ளே செல்லலாம் என்கிறார்கள்.

எந்த கோவிலிலாவது பார்ப்பனர் (பிராமணர்) அல்லாதவன் பூசை செய்ய, சமையல் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறானா?

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம்



சகோதரர்களே! நமது பார்ப்பனர்களால் பதினாயிரக் கணக்கான வருஷங்களாக நம் தலையில் வைக்கப்பட்ட இழிவானது வெகுசுலபத்தில் வெகு சீக்கிரத்தில் மாறக் கூடிய காலம் வந்திருக்கிறது; இதை இழந்து விடாதீர்கள். இது சமயம் தவறினால் பின்னால் விமோசனமோ இல்லையென்றே சொல்வேன்.

நமது உணர்ச்சியை இது சமயம் உலகம் ஒப்புக் கொண்டு விட்டது. பார்ப்பனர்களும் இதுவரை தங்கள் சூழ்ச்சியின் பெயரால் ஆண்மை அடைந்திருந்தவர்கள், இப்போது வெட்கப்படுகின்றார்கள். நல்ல சமயத்தை விட்டு விடாதீர்கள்! பணங் கொடுக்கக் கூடியவர்கள் பணங்கொடுங்கள்! பத்திரிகை வாங்கிப் படிக்கக்கூடியவர்கள் வாங்கிப் படியுங்கள்! ஒன்றும் உதவ முடியாதவர்கள் பார்ப்பனர்களின் காலில் விழாதீர்கள்.

அவன் காலைக் கழுவி தண்ணீர் சாப்பிடாதீர்கள்; அவனுக்குப் பணங் கொடுத்து விழுந்து கும்பிட்டால் உங்கள் பெற்றோர்களுக்கும், உங்களுக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் மோட்சம் உண்டு என்று நினைக்கும் முட்டாள் தனத்தை ஒழியுங்கள்! பார்ப்பனர் மூலம்தான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.

அவன்தான் தரிசனை காட்ட வேண்டும்; அவனைத்தான் தரகனாக்க வேண்டும் என்கிற அறியாமையை யாவது விலக்குங்கள். சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம் காதொடிந்த ஊசிக்கும் சமானமாகாது. மனிதரின் பிறப்புரிமை சுயமரியாதை! சுயமரியாதை! சுயமரியாதை!! என்பதை உணருங்கள்.

ஈ.வெ.இராமசாமி திராவிடன் 1927, மார்ச் 8

தமிழ் ஓவியா said...

டாக்டர் வரதராசலு நாயுடு

நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள்தான் தமிழ்நாடு இந்த மும்மூர்த்தி கள்தான் காங்கிரஸ் என்று பேசப்பட்ட காலம் ஒன்று உண்டு.

இதில் நாயுடு என்றால் டாக்டர் வரதராசலு நாயுடு, நாயக்கர் என்றால் தந்தை பெரியார், முதலியார் என்றால் திரு.வி.க. ஆவார்கள்.

இந்த மும் மூர்த்திகளில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் நினைவு நாள்தான் இன்று (1957).

டாக்டர் வரதராசலு நாயுடு இந்து மத அபிமானிதான் ஆனாலும் சேரன்மாதேவியில் காங்கிரசின் சார்பில் நடத்தப் பட்ட குருகுலத்தில், அதன் நிருவாகியான வ.வே.சு. அய்யர், பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் என்று வேறுபாடு செய்து, சமபந்திக்கு இடம் இல்லாமல் தனித்தனியாக உணவு பரிமாறச் செய்ததைக் கண்டித்தவர்.

அப்பொழுது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக டாக்டர் வரதராசலு நாயுடுவும், செய லாளராக தந்தை பெரியார் அவர்களும் இருந்தனர்.

குருகுலத்தில் ஜாதி வேறு பாடு காட்டப்படுவது குறித்துக் கலந்து பேச திருச்சியில் காங்கிரஸ் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது (27.4.1925).

அக்கூட்டத்தில் பச்சையாக பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு பக்கமும், பார்ப்பனர் அல்லாதார் இன்னொரு பக்கமும் அணி பிரிந்து காரசாரமாக விவாதிக்கும்படி நேரிட்டது.

வேதங்களிலும், சாஸ்திரங் களிலும் வருணப் பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் ஏற்பாடு செய்யப் பட்டு இருக்கின்றன. வேத விதி முறைப்படிதானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டு இருக்கிறார். இதில் என்ன தவறு? என்று ஒரு பார்ப்பனர் வ.வே.சு. அய்யருக்கு ஆதரவாகப் பேசினார். பெரியாருக்கு வந்ததே கோபம்!

ஜாதி பாகுபாட்டுக்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரங்களும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கர்ச்சனை செய்தார். (1922 இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் இதே கருத்தைச் சொன்னதும் கருத்தூன் றத்தக்கது!)

பெரியாரை அடுத்து டாக்டர் வரதராசலு நாயுடு ஆவேசப் புயலாக வெடித்தெழுந்தார்.

ஆரியர்களின் வேதகால கலாச்சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடம் இல்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்று வெடித்தார்.

பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? டாக்டர் வரதராசலு நாயுடு பார்ப்பனத் துவேஷப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறி அவர் மீது ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்துப் பேசித் தீர்மானத்தைத் தோற் கடித்தார் பெரியார். அதன் காரணமாக டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், ராஜாஜி, என்.எஸ்.வரதாச்சாரி, கே. சந்தானம் அய்யங்கார், சாமிநாத சாஸ்திரி ஆகிய அய்ந்து பார்ப்பனர்களும் உடனே கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டனர்.

1954 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி, தந்தை பெரியாரின் கடும் எதிர்ப்பின் காரணமாக முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகிய நேரத்தில், சென்னையில் அரசினர் தோட்டத்தில் (இப்பொழுது ஓமந்தூரார் வளாகம்) இருந்த டாக்டர் வரதராசலு நாயுடு இல்லத்தில் தான், அவரின் முயற்சியால் தந்தை பெரியார் காமராசர் ஆகியோர் அமர்ந்துப் பேசி காமராசர் முதலமைச்சர் ஆவது பற்றி முடிவெடுக்கப்பட்டது.

இன்னொரு முக்கிய தக வல் உண்டு. தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக வலியுறுத்திய வரும் டாக்டர் நாயுடு அவர்களே! (17.9.1956).

----------------------மயிலாடன் அவர்கள் 23-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை