Search This Blog

7.9.12

பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு-இதுதான் பார்ப்பனர் சாமர்த்தியம்

பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு (1)

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்பது குறித்து ஒரு சர்ச்சை வெடித்துக் கிளம்பி இருக்கிறது.

ஒரு ஆச்சரியமான விடயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்வதற்காக 77 ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டுவிட்ட நிலையில், 2001 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இப்பொழுது அலகாபாத் உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் ஏதோ ஒரு வகையில் அந்தச் சட்டத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு முடக்குவது ஏன்? முடக்கவேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேறு வகையாக விளம்பரப்படுத்தப்படுவதையும் கவனிக்கவேண்டும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மீதுதான் இந்தத் தீர்ப்புகள்.  உச்சநீதிமன்றம் 77 ஆவது சட்டத் திருத்தத்தைச் செல்லாது என்று சொல்லிவிட்டதா? அப்படியே சொல்லி விட்டதாகக் கூற முடியாது. வேறு எப்படி சொல்லியிருக்கிறது? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கும் பொழுது அதற்கான புள்ளி விவரங்களும் தர வேண்டும் என்றே கூறியுள்ளது உச்சநீதிமன்றம்!

இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளில் கூட இதுபோன்று புள்ளி விவரங்களைக் கேட்டதுண்டு.

பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்பதற்குப் புள்ளி விவரங்களைக் கூறுவது ஒன்றும் கடினமானதும் அல்ல. என்றாலும் ஒவ்வொரு முறையும் அவ்வாறு அளிப்பது நடைமுறை சாத்தியமற்றது, தேவையற்றது.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று எழுதும் கல்கி இதழ்கூட (9.9.2012, பக்கம் 85) மத்திய அரசில் உள்ள 93 செயலாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை என்று தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்டுவிட்டதே!

மத்திய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நாட்டில் 24 உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு 15 விழுக்காடும், மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடும் அளிக்கப்படவேண்டும்.

ஆனால், உண்மை நிலவரம் கலவரமாக அல்லவா இருக்கிறது. 740 விரிவுரையாளர் இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட இடங்களோ வெறும் 399. அதேபோல மலைவாழ் மக்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய விரிவுரையாளர் பதவிகளில் இன்னும் நிரப்பப்படாத இடங்கள் 172.

ரீடர் பதவிகளை எடுத்துக்கொண்டால், எஸ்.சி., எஸ்.டி.,க்கு நிரப்பப்படாத இடங்கள் 84 விழுக் காடாகும்.

பேராசிரியர் பதவிகள் என்று எடுத்துக் கொண்டாலும் எஸ்.சி., எஸ்.டி.,க்கான நிரப்பப்படாத பதவிகள் 92 விழுக்காடு.

இவ்வளவு வெளிப்படையாகப் புள்ளி விவரங்கள் இருக்கும்பொழுது, பதவி உயர்விலும் இட ஒதுக்கீடா என்று புருவங்களை உயர்த்துவதும், இதனால் முன்னேறவேண்டும் என்ற உணர்ச்சியை அழித்து விடும் என்று இதோபதேசம் செய்வதும் எந்த அடிப்படையில்?

உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லவில்லை. தக்க புள்ளி விவரங்களை எடுத்துக்கூறித் தாராளமாக பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பதே தீர்ப்பின் நிலை.

புதிய சட்டத் திருத்தம் தேவைப்படும்பொழுது எல்லாத் துறைகளிலும் உள்ள புள்ளி விவரங்களையும் இணைத்து, மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல வழியில்லாத வகையில் அரசமைப்புச் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்த்துவிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு மறுபடியும் பார்ப்பன உயர்ஜாதி சக்திகளும், ஊடகங்களும் தங்களுக்கே உரித்தான நச்சு விதைகளைத் தூவ ஆரம்பித்துவிட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
                                 --------------------------"விடுதலை”5-6-2012

பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு (2)

பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்  திருத்தம் (77-ஆவது) 2001 இல் நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்டு, நடத்தப்பட்ட விவாதத்தில் எல்லோரும் ஒரு மனதாக ஆதரவுக் கைகளைத் தூக்கிய நேரத்தில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்த திருவாளர் சோ இராமசாமி மட்டும் எதிர்ப்புக் கையைக் காட்டினார். அப்பொழுது அவர் அவையில் பேசிய பேச்சின் குறிப்பை இவ்வார துக்ளக்கில் (6.9.2012 பக்கம் 17, 18) மறுபதிவு செய்து, இப்பொழுதும் என் கருத்து அதுதான் என்கிறார்.

சமூக நீதிப் பிரச்சினையில் பார்ப்பனர்கள், அதிலும் குறிப்பாக இவர் எப்படி இருப்பார் என்பது தெரிந்த கதைதான்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பு - உரிய பயிற்சி பெற்று நியமிக்கப்பட வேண்டும் என்றால், அங்கே தகுதி திறமை பற்றி பேசமாட்டார். பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டும்தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று அடம் பிடிப்பார்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் வெகு காலமாக நிராகரிக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்றால், அங்கு தகுதி, திறமை பற்றி ஒப்பாரி வைப்பார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அங்குப் பார்ப்பனர் நலம், ஆதிக்கம் என்ற அளவு கோல்தான் அவர்களின் உதிரத் துடிப்பாக இருக்கும்.

அரசு ஊழியத்தில் உள்ளவர்களில் நம்பிக்கையை இது நாசம் செய்யும். கடுமையாக உழைக்கிற நேர்மையான ஊழியர் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறக்கவில்லை என்ற காரணத்துக்காக ஓரம் கட்டப்படுகிறபோது, அவருடைய தன்னம்பிக்கை எந்த அளவில் இருக்கும்? அம்மாதிரியான ஊழியர்கள் தங்கள் பிறப்பினால் ஏற்படுகிற தலைமை பணியிலிருந்து ஓய்வு பெறுகிற வகையில் தாங்கிக் கொள்ள வேண்டியதுதானா? இது முழுமையான அநீதி என்கிறார் திருவாளர் சோ.

ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறக்கவில்லை என்ற காரணத்துக்காக ஓரம் கட்டப்படுகிறார்களாம் பார்ப்பனர்கள். அதே நியாயத்தைத்தான் நாமும் கேட்கிறோம். குறிப்பிட்ட பார்ப்பனர் ஜாதியில் பிறக்க வில்லை என்பதற்காகத்தானே தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப் பட்ட  பார்ப்பனர் அல்லாத மக்கள் காலம் காலமாகக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டார்கள்!

பார்ப்பனர்களின் இந்தச் சமூகக் கட்டமைப்பு - வருணாசிரம அமைப்பு முறைதானே பெரும்பான்மையான மக்களை கல்வி வாசனையற்ற மக்களாகக் கட்டிப் போட்டது.

1937இலும் 1952இலும் சென்னை மாகாணத்தின் தலைமை அமைச்சராக வந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) முறையே 2,500 கிராமப் பள்ளி களையும், 6,000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடி - அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இந்தியா குடியரசாக ஆன நிலையிலும், புதிய அரசியலமைப்பு சாசனம் கொண்டு வரப்பட்ட காலத்திலும் கூட இவ்வாறு பார்ப்பனர்களால் செய்ய முடிந்ததே!

இந்தச் சமூக பாதிப்பிலிருந்து பெரும்பான்மையான மக்களைக் காப்பாற்றிட, கரையேற்றிடத்தானே இந்த இட ஒதுக்கீடு!

கொஞ்ச காலத்திற்கு ஏற்பட்டுள்ள வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் காலம் காலமாக வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய வர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தானா?

இதே பிரச்சினையை இன்னொரு பார்ப்பன ஏடான கல்கி (9.9.2012 பக்கம் 85) என்ன எழுதுகிறது தெரியுமா?

இப்பொழுது கொடுக்கப்படும் பதவி உயர்வுகளின் அடிப்படையில் பார்த்தால் கூட மனித ஆற்றல் பயன்படுத்தப்படும் அளவீட்டின் வரிசையில் இந்தியா 127 ஆவது இடத்தில்தான் இருக்கிறது. தகுதி, திறமை எங்கே போயிற்று? என்று கேள்வி எழுப்புகிறது கல்கி.

அதையேதான் நாமும் திருப்பிக் கேட்கிறோம். மத்திய அரசுத் துறைகளில் 93 செயலாளர்களில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை என்பதுதான் இன்றைய நிலையும் கூட.

குரூப் ஏ பிரிவு உத்தியோகங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் 13 விழுக்காடே. மலைவாழ் மக்கள் 3.8 விழுக் காடும், பிற்படுத்தப்பட்டவர்கள் 5.4 விழுக்காடும் தானே இருக்கின்றனர். (எடுத்துக்காட்டுக்கு இவை).

மீதி அத்தனை இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பவர்கள் உயர் ஜாதி மக்கள்தான். தகுதி திறமை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்தானே! இந்த நிலையில் மனித ஆற்றல் வரிசையில் உலகத் தர வரிசையில் இந்தியா ஏன் 127 ஆவது இடத்தில் இருக் கிறது? தகுதி, திறமை எங்கே போயிற்று? என்று நாங்கள் கேட்க வேண்டிய கேள்வியைக் கல்கி கூட்டம் நம்மைப் பார்த்துக் கேட்கிறதே - இதுதான் பார்ப்பனர் சாமர்த்தியம் என்பது.

இறுதியாக ஒரு கேள்வி: பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது. அது பணி மூப்பில் உள்ளவர்களைப் பாதிக்கும்; திறமை போகும் என்பவர்கள் நேரடித் தேர்வு மூலம் (Direct Recruitment) முந்தாநாள் படித்து, நேற்றுத் தேர்வு எழுதி, வெற்றி பெற்று இன்று மேல் பதவியில் உட்காருகிறார்களேஅதைப்பற்றி என்ன சொல்வார்களாம்?

                         --------------------”விடுதலை” தலையங்கம் 6-9-2012

10 comments:

தமிழ் ஓவியா said...

தீர்மானங்கள்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில் நேற்று (6.9.2012) நடைபெற்றது.

பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. வரும் 10ஆம் தேதி நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டம் பற்றிய தீர்மானம்.

இலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளைத் தனியார்க்கு விற்பதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம்! இதற்கு முன்புகூட இதே காரணத்துக்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதுண்டு.

ஆனாலும் இடை இடையே தமிழர்கள் தூங்குகிறார்களா? அல்லது விழித்துக் கொண்டு இருக்கிறார்களா? என்று சோதனை செய்து பார்ப்பது போல் ஓடி விளையாடிப் பார்க்கிறது என்.எல்.சி. நிருவாகம் (மத்திய அரசு!)

இந்தப் போக்கினை மாற்றிக் கொண்டு இலாபம் தரும் பொது நிறுவனங்களின் பங்கினை எக்காரணத்தைக் கொண்டும் விற்கவே கூடாது.

அரசுக்கு நிதி தேவை என்றால் கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரட்டும்; வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வரட்டும். அதைவிட்டுவிட்டு பொன் முட்டையிடும் வாத்தினை அறுப்பது பொறுப்பற்ற செயலாகும்.

இதற்கு முன்பும் இதுபோன்ற பிரச்சினைக் காக என்.எல்.சி. முன் ஆறு முறைப் போராட்டம் நடத்தியுள்ளது திராவிடர் கழகம் என்பதை நினைவூட்டுகிறோம். (14.3.2002, 9.1.2006, 28.6.2006, 8.7.2009, 30.6.2010, 3.6.2011)

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் மற்றும் குறிப்பிடத்தக்கது - தமிழ்நாட்டு மக்களின் உரிமைப் பிரச்சினைகள் பற்றியதாகும்.

காவிரி நீர், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம் இவற்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உதாசீனப்படுத் தியுள்ளன. கண்டிப்பாக இவை நீதிமன்ற அவமதிப்பாகும்.

இதன்மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுபோன்ற விடயங்களில் இந்திய அரசமைப்புச் சாசனம் என்ன கூறு கிறது? அதனைத்தான் சுட்டிக் காட்டுகிறது திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு. 356 அய்ப் பயன்படுத்த வேண்டாம்; 365அய்ப் பயன்படுத்தலாமே என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தீர்மானத்தை விளக்கி, செய்தியாளர்களின் கூட்டத்திலும் விவரித்தார் - அதனை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

மூன்றாவதாக, சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் பற்றியது. திட்டத்தின் 75 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், யாரோ ஒரு தனி நபர் ராமன் பாலம் இடிக்கப்படுகிறது - அப்படி இடித்தால் இந்துக்களின் மனம் புண்பட்டு விடும்; எனவே அந்தப் பாதையில் திட்டத்தை நிறைவேற்றிட அனுமதிக்கக் கூடாது என்று வழக்குத் தொடுப்பதும், அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடைக் காலத் தடை விதிப்பதும் - இந்தியா இன்னும் கடைந்தெடுத்த பிற்போக்குச் சகதியில் நீச்சல் போடுகிறது என்பதற்கான அடையாளமாகும்.

ராமன் என்பவன் ஒரு இதிகாசக் கற்பனைப் பாத்திரம். இந்த மூடநம்பிக்கையை முன் வைத்து மக்களின் நல்வாழ்வு - வள வாழ்வு வளர்ச்சித் திட்டத்தை முடக்கக் கூடாது என்பதுதான் திராவிடர் கழகத் தீர்மானத்தின் சாரமாகும்.

மத்திய அரசும் தான் எடுத்த நிலையில் உறுதியாக நின்று, திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பதே கழகத்தின் நிலைப்பாடு.

அவ்வாறு செய்யாவிட்டால் 2014இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தப் பிரச்சினை முக்கிய இடத்தை வகிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியது கூர்மையானது - இதனைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக! 7-9-2012

தமிழ் ஓவியா said...

கண்ணன் காமுகன்விஷ்ணு - கிருஷ்ண அவதாரத்தில் நடத்திய அசுத்தங்களையும், கோபியர்களுடன் செய்த லீலைகளையும், அவர்களுடன் கூடிச் செய்த அக்கிரமங்களையும் மனித மனதைக் கெடுத்து கறையாக்கிய அழுக்குச் செயல்களும் எத்தனை, எத்தனை.

பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் கோபியரைப் புணர்ந்த அத்தியாயம் 22ஆம் பாடலைக் காணுங்கள்.

பொங்கினர் காவுதோறும் புதுமணற் குன்றுதோறும்

பங்கயச் செங்கண்மாயன் பானிலாப் பயன்கொண்டோங்கு

கங்கயந்திரை வாயுற்ற கனியிள வண்ணம் போலும்

கொங்கை வீழ கோதை மாதர் குழாத்தொடு பாடினானே.

மேய தோகையினமென மயிலான

சாயலார் முலைதழீஇ விளையாடிப்பின்

மாயன் வைகறையில் வண்குளர் தண்டார்

ஆயர் பாடியில்ல டைந்தனன் மன்னோ

(அத்தியாயம் - பாடல் 15 - பாகவதம்)

மயிலின் சாயலொத்த மங்கையருடைய தனங்களைக் கிருஷ்ணன் தழுவி விளையாடிக் கொண்டிருந்து, காலையில் ஆயர் பாடியிற் சேர்ந்தான் என்பதாம்.

இதுதானா ரட்சகனாய்க் கருதப்பட்ட கிருஷ்ண பகவானுடைய அரும்தொழில்? இது காமிகளுக்கேற்றதா? சாமிகளுக்கேற்றதா?

வெள்ளி வெண்முல்லையம் மெல்லினர் துன் றுவிரைக் கோதைக்

கள்ள விழோதியரிற் றோறும் வெண்ணெய் கவர்ந்துண்டோன்

அள்ளிலை வேல்விழியாரமுதம் யுரையஞ்சாயல்

ஒள்ளிழை பச்சிள வேய்புரை தோணல முண்டானே.

(பாகவதம் -39ஆம் பாட்டு)

கோபிகா பெண்களுடன் வீடுகளெல்லாம் வெண் ணெய் திருடிச் சாப்பிட்ட கண்ணன், வேலையொத்த கண்களையும், அழகான சாயலையும், ஒளிமிக்க பூசணங்களையும் உடைய கூனி எனும் பெண்ணோடு புணர்ச்சி செய்தானாம். அடுத்து, தன் குருவான இராயன் கோசு என்றவரின் மனைவி இரதை என்பவளைக் களவாடிப் போய், அவ ளுடன் காட்டில் கூடிப் புணர்ந்தும், பிருந்தாவனத்தில் பல இடச்சியரை ஆலிங்கனம் செய்து, வடமதுரையில் பதினாறாயிரம் பெண்களுடன் லீலை புரிந்தானாம் கிருஷ்ணன்.

இப்படி கண்ணன் செய்த காமுகச் செயல்கள் எத்தனை? கோகுலாஷ்டமி கொண்டாடும் கிருஷ்ணனின் பக்தர் களே சிந்தியுங்கள்!

இரா.கண்ணிமை

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் பிறப்புப்பற்றி மறைமலை அடிகள்விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோவிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் - பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டிப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையை புணர வேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தானாம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததாயிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ?

அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்!

இக்கதை விலங்கின் புணர்ச்சியை கண்டு வரம்பு கடந்த காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது.

பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.

தமிழ் ஓவியா said...

தேவாரப் பாடல்பிடியதன் உருவுமை கொள மிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

(திருவலிவலம் கோவில் கொண்ட இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை; உருவுமை கொள - உருவத்தை பார்வதி கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)

சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உரு கொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்!

இப்படிப்பட்ட அசிங்கப் பிறப்பாளன் தான் விநாயகன்.

தமிழ் ஓவியா said...

சிந்தனைத்துளிகள்

நேற்று என்பது ஒரு ரத்து செய்யப்பட்ட செக்; நாளை என்பது ஒரு புரோ நோட்டு; இன்று என்பது ரொக்கப்பணம் அதை அறிவுடமையுடன் செலவு செய்யுங்கள்.

- ஆண்டர்சன்

பேசிவிட்ட வார்த்தை, தொடுத்து விட்ட அம்பு, கடந்து விட்டகாலம், இழந்து விட்ட வாய்ப்பு இவைகளை மீண்டும் பெற முடியாது.

- ஜான்சன்

பகலவன் படாத பனிக் கட்டி போன்றது புகழ் வாழ்வு

- ஷேக்ஸ்பியர்

தமிழ் ஓவியா said...

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்று பசப்பும் பார்ப்பனர்களின் கவனத்துக்கு... 149 அரசு செயலாளர் பதவிகளில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லையே! டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு

சென்னை, செப்.7- மத்திய அரசுத் துறைகளில் உள்ள 149 அரசு செயலாளர் என்ற உயர்மட்டப் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர். ஒருவர்கூட இல்லை என்பதை மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த புள்ளி விவரங்களை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு படம் பிடித்துள்ளது.

அரசு உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோரும் பழங்குடி யினத்தவரும் எந்த அளவில் இடம் பெற்றிருக்கின்றனர் என்று பார்த்தால், 149 உயர் அரசு செயலாளர் அளவிலான பதவிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்பதே இன்றுள்ள நிலை. பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே இந்த நிலை பதவிகளில் உள்ளனர் என்று பிரதமர் அலுவலக விவகார அமைச்சர் நாராயணசாமி பதிலளித்துள்ளார்.

அடுத்த அளவில் கூடுதல் செயலாளர் பதவிகளில் உள்ள 108 அதிகாரிகளில் வெறும் 2 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். 477 இணைச் செயலாளர்களில் 31 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவினர் (6.5 விழுக்காடு) 15 பேர் பழங்குடியினத்தவர் (3.1 விழுக்காடு). 590 இயக்குநர் பதவிகளில் 17 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் ( 2.9 விழுக்காடு) 7 பேர் மட்டுமே பழங்குடியினத்தவர்கள் (1.2 விழுக்காடு)

இந்தப் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. என்றாலும் சிவில் தேர்வுகள் மூலம் பணிக்கு வந்தி ருக்கும் தாழ்த்தப்பட்ட (15 விழுக்காடு இட ஒதுக் கீட்டிலும்), பழங்குடியின (7.5 விழுக்காடு இட ஒதுக் கீட்டிலும்) அதிகாரிகளில் ஒரு பெரும் எண்ணிக்கையி லானவர்கள் இந்த நேரத்தில் செயலாளர், கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர் போன்ற உயர் பதவி களை அடைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். அய்.ஏ.எஸ். பதவிகள்

தமிழ் ஓவியா said...

உண்மை நிலையைக் காணும்போது, அதிகம் பேர் விரும்பும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ்., பணிகளில் நியமிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் அவர்களுக்குரிய இட ஒதுக்கீட்டு அளவுக்கும் குறைவானவர்களாகவே உள்ளனர். நேரடியாக நியமிக்கப்பட்ட 3,251 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 13.9 விழுக்காடு தாழ்த்தப் பட்டவர்களும், 7.3 விழுக்காடு பழங்குடியினரும் உள்ளனர்.

ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 12.9 விழுக்காடு மட்டுமே. இந்தப் புள்ளி விவரங்களும் கூட 2011 இல் மக்களவையில் அமைச்சர் நாராயணசாமி அளித்தவையே ஆகும்.

அரசமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் அளிக்க விரும்பி அளித்துள்ள இட ஒதுக்கீட்டு நடைமுறையில் ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உரிய இடங்களைப் பெறவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்கள் இதனை மேலும் உறுதிப் படுத்துகின்றன.

நிரப்பப்படாத காலியிடங்கள்

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மக்களவையில் அமைச்சர் நாராயணசாமி அளித்த புள்ளி விவரப்படி 73 அரசு இலாக்காக்களில் தாழ்த்தப் பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 25,037 பணியிடங்கள் இன்னமும் நிரப்பப் படாமல் காலியாக உள்ளன என்று தெரிய வருகிறது. இந்த காலிப் பணியிட எண்ணிக்கை பல ஆண்டு காலமாக நிரப்பப்படாததால், கூடிக் கொண்டே வந்துள்ள எண்ணிக்கையாகும். இவற்றில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு நியமனம் இரண்டுமே அடங்கும். பதவி உயர்வுக்கு தகுதியான நபர் இல்லாததால் 4,518 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பழங்குடியின ருக்கான 28,173 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இவற்றில் 7,416 இடங்கள் பதவி உயர்வால் நிரப்பப்பட வேண்டியவை.

மத்திய அரசுப் பணியாளர்களைப் பற்றி மேலோட்ட மாகப் பார்த்தால் அவர்களில் 17 விழுக்காடு தாழ்த்தப் பட்டவர்களும், 7.4 விழுக்காடு பழங்குடியினர் இருப்பதாகவும் தோன்றும். ஆனால் படிப்படியாக பதவி உயர்வுகளில் பார்க்கும்போது, ஏ பிரிவு அதிகாரிகளில் 11.1 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களும், 4.6 விழுக்காடு பழங்குடியினத்தவர்களும் மட்டுமே உள்ளனர். அதே போல் பி பிரிவு அதிகாரிகளில் 14.3 விழுக்காடு தாழ்த்தப் பட்டவர்களும், 5.5 விழுக்காடு பழங்குடியினத்தவரும் உள்ளனர். சி.பிரிவு அதிகாரிகளில் மட்டும் அவர்களது இடஒதுக்கீட்டு அளவுக்கு ஏற்ற முறையில் 16 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களும், 7.8 பழங்குடி இனத்தவர்களும் உள்ளனர். டி. பிரிவு அலுவலர்களில் 19.3 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களும், 7 விழுக்காடு பழங்குடியினத்த வர்களும் உள்ளனர்.

டி. பிரிவுகளில்

டி-பிரிவு ஊழியர்களில் 40 விழுக்காடு தாழ்த்தப் பட்டவர்கள் இருப்பது, ஏதோ எல்லா பணியிடங்களிலும் அவர்கள் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. மக்களிடையே வேறுபாடு காட்டப்படுவது ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொள்ளும் நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் இன்னமும் கீழ்நிலைப் பணியாளர் களாகவே சேவகம் செய்ய வேண்டிய நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மை சுடுகிறது 7-9-2012

தமிழ் ஓவியா said...

நைனா

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் அய்.நா. தலையிட வேண் டும் என்று டெஸோ மாநாட்டில் தீர்மானம் போடப்பட்டுள்ளதுபற்றி? இதனால் பலன் ஏதும் கிட்டுமா?

பதில்: அய்.நா. தலை யிடுவதாவது, நம்மூரில் உள்ள நைனா யாராவது தலையிட்டால் தான் உண்டு.

(துக்ளக் 5.9.2012 பக்கம் 26).

பார்ப்பனர்கள் தமிழர் கள் பால் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சிக்கு, துவேஷத்துக்கு இந்தப் பதில் ஒன்றும் போதும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்.நா. தலையிட வேண்டும் என்ற வேண்டுகோள் உலகில் பல நாடுகளிலிருந்தும் மனிதா பிமானத்தோடு வெளிவந்து கொண்டிருக்கும் கால கட்டம் இது!

உலகத் தமிழர்கள் உதிரக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் எருது புண் காக்கைக்குத் தெரியுமா? தமிழர்களின் புண் பார்ப் பனர்களுக்குப் புரியுமா?

மழலைகள் தங்கி இருந்த விடுதியில்கூட குண்டுபோட்டு அழித்தது இலங்கை சிங்கள இராணு வம்.

பிரிட்டன் வானொளி - 4 ஈழத் தமிழர்கள்மீது ஏவப்பட்ட சித்திரவதையை உலகம் முழுவதும் அறியச் செய்தது. ஆனால் இங்குள்ள சோ போன்ற பார்ப்பனர்கள் ஆனந்த ராகம் பாடிக் கொண்டு திரிகிறார்கள்.

அதே நேரத்தில் இந்தப் பார்ப்பனர்களின் மனப் பாங்கு அவாள் விடயத்தில் எப்படி இருக்கிறது?

அதையும் துக்ளக்கி லிருந்தே எடுத்துக் கூறு வோம்!

20.8.2008 துக்ளக் ஏட்டில் கேள்வி ஒன்றுக்கு திருவாளர் சோ என்ன பதில் எழுதினார்?

லட்சக்கணக்கான ஹிந்துக்கள் காஷ்மீரிலி ருந்து வெளியேறி, அகதி களாக டில்லியிலும், நாட் டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததும் அவர் களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலை களை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று மனம் நொந்து சோ எழுதியதையும் இந்த இடத்தில் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும்.

காஷ்மீர் ஹிந்துக்கள் என்றால் பொருள் புரி கிறதா? பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் பார்ப்பனர்களைத்தான் ஹிந்துக்கள் என்று குறிப் பிடுகிறார். அதில்கூட கவட்டுத்தனம்தான்.

பார்ப்பனர்களுக்காக அவர் வக்காலத்து வாங்கு வது தெரிந்துவிடக் கூடா தாம்! இந்தச் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

தமிழர்கள் என்றால் ஒரு விமர்சனம், பார்ப் பனர்கள் என்றால் வேறு ஒரு விமர்சனம் தெரிந்து கொள்ளுங்கள் இவர்கள் தான் பார்ப்பனர்கள்!

- மயிலாடன்
7-9-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு
பழக்க வழக்கம் செய்தி: குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும்

- சிருங்கேரி சங்கராச்சாரியார்

சிந்தனை: என்ன அந்த நல்ல பழக்கம்? நாம் பிரா மணாள் அவாள் சூத்திராள் என்று பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு ஊட்டும் சமாச்சாரங்களையா?

நடைபாதை செய்தி: சென்னை வடபழனியில் பள்ளி மாணவன் வாகனம் மோதி பலியானான். நடைபாதை இல்லாதது தான் இதற்குக் காரணம்.

சிந்தனை: நடைபாதைகளில் இருக்கும் கோயில்களை முதலில் இடித்துத் தள்ளுவார்களா?
கழிவுகள்: நகர்ப்புறக் கழிவுகளை முறையாகப் பயன்படுத் தினால் 1700 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்கள் கழிவு மேலாண்மைக் கருத்தரங்கில் பங்கு பெற்றவர்கள்.

(சென்னை: 6-9-2012)Dr.தமிழ் said...

வணக்கம்
உங்களிடம் ஒரு மின்னஞ்சல் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..அது குறித்து உங்கள் பதில்களும் எனக்கு தேவை.
உங்கள் மின்னஞ்சல் முகவரி என்னவென்று எனக்கு சொல்லவும்.தர பிரியமில்லைஎனில் அந்த கட்டுரையை உங்களுக்கு எப்படி அனுப்புவது என்பதை சொல்லவும்
நன்றி\
வணக்கம்

drtamil123@gmail.com