நமக்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமானால்
1. பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும்.
2. அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3. அவ்வுருவங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வணங்க வேண்டும்.
4. அக்கடவுள்களின் அவதாரங்களையும் அவற்றின் நடவடிக்கைகளையும் தேவைகளையும் நம்ப வேண்டும்.
நமக்கு மத நம்பிக்கை வேண்டுமானால்
1. ஜாதிப்பிரிவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2. மதச் சின்னங்களை (டிரேட் மார்க்கை) ஒப்புக் கொள்ள வேண்டும்.
3. ஆத்மாவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
4. மேல் கீழ் உலகங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. மறுபிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்
என்பவற்றை விளக்கிக் காட்டி மக்களிடம் கடவுள் - மத மறுப்பு பிரச்சாரம்
செய்ய வேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறேன்.
இன்றைய சைவர்களுடைய சைவப் பிரச்சாரம் பெரிதும் பெரிய புராணம் ஒன்றிலேயே அடங்கிவிட்டது. அது அஸ்திவாரம் இல்லாத ஆகாயக்கோட்டை. அது வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட பக்த
விஜயம், பக்த லீலாமிர்தம் என்னும் வைணவ புராணங்களுக்குப் போட்டியாக (அதைப்
போல்) ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் காலம் இராமாயண - பாரதத்திற்குப்
பிந்தியதேயாகும். அநேகமாக வைணவ பக்தர்கள், ஆழ்வார்கள்
ஆகியோரின் கதைகள் போலவே, ``சரித்திரங்கள்'' போலவே சைவ சமய நாயன்மார்கள்,
பக்தர்கள் கதைகளும் ``சரித்திரங்களும்'' இருக்கும்.
இரண்டிலும் உள்ள முக்கிய விஷயங்கள்,
அற்புதங்கள் எல்லாம் விஷ்ணு, சிவன் கடவுள்கள் கழுகுமீதும், மாடுமீதும்
நேரில் வந்து வைகுண்டமும் கைலாயமும் ஆகிய பதவிகளுக்கு பக்தர்களை அழைத்துப்
போனதாகவே பெரிதும் முடியும். அவற்றின் கருத்தும், பக்தி செய்தால் அதுவும்
பக்தியின் பேரால் எவ்வளவு முட்டாள்தனமும் ஒழுக்கக் கேடும் இழிதன்மையுமான
காரியமும் செய்தாலும் பக்தி காரணமாக வைகுண்டம், கைலாயம் பெறலாம் என்பதை
வலியுறுத்துவதேயாகும்.
இப்படிப்பட்ட பக்திப் பிரச்சாரங்களேதான்
மனித சமுதாயத்தில் பெரிதும் ஒழுக்கக்கேட்டையும் நாணயக் கேட்டையும்
உண்டாக்கிற்று என்று சொல்லப்படுமானால் அது மிகையாகாது.
காலத்திற்கு ஏற்றபடி கடவுள்கள் சமயங்கள்
சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். கிறிஸ்து, இஸ்லாம் கடவுள்,
சமயங்கள் சீர்திருத்தப்பட்ட கடவுள், சமயங்களேயாகும்.
பெரிய புராணக் கதையும் பக்த விஜயக் கதையும் காட்டுமிராண்டித்தனமான காலத்தில், கருத்தில் ஏற்படுத்தப்பட்டவையேயாகும்.
அவற்றில் ஒவ்வொன்றாக காலப் போக்கில் குறிப்பிட இருக்கிறேன். சமயத் தலைவர்கள் சீர்திருத்துவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?
பார்ப்பனர்கள் சிலர்
சீர்திருத்தத்திற்குப் பயப்படுகிறார்கள் என்றால் அவர்கள் இன்றைய சீர்கேடான
கீழ்த்தரமான கடவுள், சமயக் கொள்கைகளால் உயிர் வாழுகின்றார்கள். உயர்வு
பெறுகிறார்கள். அது போய்விடுமே என்று அவர்கள் அலறுகின்றார்கள். குறுக்கே
படுக்கின்றார்கள்.
நாம் இன்றைய சீர்கேடான நிலைமையினால் நாச
முறுகிறோம். தலையெடுக்காமல் சேற்றில் அழுந்திக் கிடக்கிறவர்கள் போல்
சிக்குண்டு கிடக்கின்றோம். ஆகவே, பார்ப்பானைப் போல் நாம் எதற்காகப்
பிடிவாதக்காரர்களாக இருக்க வேண்டும்?
நம் கடவுள்களும் கோயில்களும் ஆகம
முறைகளும் நம்மைக் காட்டுமிரண்டியாக ஆக்கி நம் அறிவையும் மானத்தையும்
கொள்ளை கொள்ளுவதல்லாமல் நம் பொருள்களை எவ்வளவு நாசப்படுத்தி வருகிறது?
கிறிஸ்துவ, இஸ்லாம் மத பிரச்சாரம் படிப்பு
- படிப்பு - படிப்பு என்பதிலேயே இருக்கிறது. அவர்கள் இந்த நாட்டில்
பார்ப்பனர்களைப் போலவே மைனாரிட்டி சமுதாயங்களாக இருந்தாலும்,
பார்ப்பனர்களைப் போலவே நம்நாட்டில் மண்வெட்டி மண்கூடை எடுக்காமல் நல்வாழ்வு
வாழ்கிறார்கள். அரசியலில் நம்மைவிட நல்ல உயர்பங்கும், அரசியலில் நம்மைவிட
நல்ல உயர் பங்கும், சமுதாயத்தில் நல்ல பாதுகாப்பும் பெற்று வாழ்கிறார்கள்.
இதற்கு அவர்களுக்கு உதவியது அவர்கள் சமயம்தான். நம் கடவுளையும்,
சமயத்தையும் ஏற்ற மக்கள் தான் 100-க்கு 100 மலமெடுக்கிறார்கள், கசுமாலக்
குழியில் இறங்கி சேறு எடுக்கிறார்கள். 100-க்கு 75 பேர் மண்வெட்டியையும்
நம் பெண்கள் மண் சுமக்கும் கூடையையும் சொத்தாக வைத்து வாழ்கிறார்கள்.
படிப்பிலும் கிறிஸ்தவர்களும்,
இஸ்லாமியர்களும் நம்மை விட இரண்டு பங்கு மூன்று பங்கு வீதம் அதிகமானவர்கள்
படித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நம்
மதவாதிகள், மதத் தலைவர்கள், மதப் பிரச்சாரகர்கள் நம் மக்கள் குறைகளையும்,
இழிநிலையையும், அறியாமையையும் மாற்றுவதற்கு என்ன செய்தார்கள்?
செய்கிறார்கள்? செய்யப் போகிறார்கள்? ``திருநாமம் அஞ்செழுத்தும்
செப்பாதாரும்'' என்றும், ``திருப்பதி மதியாப் பாதம்'', ``சிவனடி வணங்காச்
சென்னி'' என்றும் பாடினால் போதுமா? கூழில்லாமல் கும்பி பாழாவதைப்பற்றிச்
சிறிதுகூடச் சிந்தியாமல், ``நீறு இல்லாத நெற்றிபாழ்'' என்றும் பிரச்சாரம்
செய்தால் போதுமா?
நம் நாட்டையும், நம் மனித சமுதாயத்தையும்
தலையெடுக்கவொட்டாமல் பாழாக்கிய பார்ப்பனர்களைப் போலவே நம் சமயவாதிகள் சிவ,
விஷ்ணு சமயாச்சாரியார்கள் என்று சொல்லப்படுமானால் அதற்கு யார்தான்
மறுப்புக் கூற முடியும்? இன்று தமிழ்நாட்டிலே கோயிலுக்கு அழுது நாட்டை
நாசமாக்கியவர்களான நாட்டுக்கோட்டை செட்டிமார்களில் பலர் துணிந்து
மனந்திரும்பி கல்வி அளிக்கும் வள்ளல்களாக இருக்கிறார்கள். அண்ணாமலை
கல்லூரியே ஏற்படாமலிருந்தால் நம்மவர்களில் உயர் படிப்பு படித்தவர்கள்
ஆயிரக்கணக்கில் இவ்வளவு பேர் இருக்க முடியுமா? முடியாது, முடியாது, முடியவே
முடியாது என்று சொல்லுவேன். மற்றும் அழகப்பா கல்லூரி, தியாகராஜர் கல்லூரி
ஆகியவற்றால் நம் பிள்ளைகள் எவ்வளவு பேர் படித்தவர்களாக ஆகி இருக்கிறார்கள்,
ஆகி வருகிறார்கள் என்பதைப் பார்த்தும் நம் சமயாச்சாரியார்களுக்கு நல்லறிவு
வரவில்லையானால் அது நம் நாட்டைப் பிடித்த நோய் என்றுதானே
சொல்லவேண்டியதாகும்.
திருச்சியில் கிறிஸ்தவக் கல்லூரி
கிறிஸ்தவருக்கும், பார்ப்பனருக்கும் தான் பெரிதும் பயன்படுகிறது.
பார்ப்பனர் கல்லூரிகள் பார்ப்பனர்களுக்கே பயன்படுகிறது.
இஸ்லாம் கல்லூரியில் இஸ்லாமியர்கள் போக மீதிதான் நமக்குக் கிடைக்கலாம். அப்படியெல்லாம் செய்வதில் அவர்கள் மீது குற்றமென்ன? இவ்வளவு பெரிய பழைமையான தமிழன் நகரத்திலே தமிழனுணர்ச்சி உள்ள தமிழர் இருந்தும் தமிழனுக்குக் கல்லூரி இல்லை. சீரங்கமும், திருவானைக்காவலும், தாயுமானசாமி மலையும், சமயபுரமும் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை இலட்சம் ரூபாய்களை நாசமாக்குகிறது. எவ்வளவு பேரை முட்டாளாக்குகிறது?
இஸ்லாம் கல்லூரியில் இஸ்லாமியர்கள் போக மீதிதான் நமக்குக் கிடைக்கலாம். அப்படியெல்லாம் செய்வதில் அவர்கள் மீது குற்றமென்ன? இவ்வளவு பெரிய பழைமையான தமிழன் நகரத்திலே தமிழனுணர்ச்சி உள்ள தமிழர் இருந்தும் தமிழனுக்குக் கல்லூரி இல்லை. சீரங்கமும், திருவானைக்காவலும், தாயுமானசாமி மலையும், சமயபுரமும் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை இலட்சம் ரூபாய்களை நாசமாக்குகிறது. எவ்வளவு பேரை முட்டாளாக்குகிறது?
இந்தக் கோயில்களை இடித்து அல்லது இந்தக்
கோயில்களுக்கு வருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வீதம்
``கேட்டில் வரி வசூல் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
இலவசக் கல்லூரிப் படிப்பு கொடுத்தால் எந்த சாமி கோபித்துக் கொள்ளும்? எந்த
பக்தன் நாசமாய்ப் போய் விடுவான்?
தருமபுரம் திருவாவடுதுறை, திருப்பனந்தாள்
முதலிய நூற்றுக்கணக்கான சைவ மடாதிபதிகளின், ஆண்டொன்றுக்கு சுமார் அய்ம்பது
இலட்சத்துக்குக் குறையாது கோடி ரூபாய்வரை வரும்படியும், தஞ்சை மாவட்டத்தில்
சுமார் ஆண்டொன்றுக்கு அய்ம்பது இலட்சத்துக்குக் குறையாத வரும்படி உள்ள
கோயில்களின் வரும்படியும், தமிழ்நாட்டில் மற்றும் லட்சம் லட்சமாக வரும்படி
வரக்கூடி கோயில்களின் வரும்படியும் கல்விக்கு செலவழித்தால் தமிழ்நாட்டில்
பி.ஏ., படிக்காத ஆணையோ, பெண்ணையோ காண முடியும்? மற்றும் சர்க்கார்
கொடுக்கும் பஸ், லாரி பர்மிட்களும், பண்டங்களுக்குக் கொடுக்கும்
பர்மிட்களும் ஏன் ஒரு யோக்கியமான அதாவது சுயநலத்துக்குப் பயன்படுத்தாத
தன்மையில் ஒரு கல்வி ஸ்தாபனம் ஏற்படுத்தி அதற்குக் கொடுத்து அவர்களிடம்
கல்வி நிருவாகம் கொடுத்து சர்க்கார் மேற்பார்வையில் அதன் வரும்படியைக்
கொண்டு நடத்தச் செய்யக் கூடாது?
மதமும், கடவுளும் மக்களுக்கு தொண்டு
செய்யவா? அல்லது மக்கள் மதத்திற்கும், கடவுளுக்கும் தொண்டு செய்யவா?
பலியாகவா? என்று கேட்டு முடிக்கின்றேன்.
குறிப்பு: இதை நம் கழகத் தோழர்கள் நல்ல வண்ணம் படித்து மக்களுக்குப் பிரச்சாரம் செய்யவேண்டுகிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் -"`விடுதலை", 12.10.1962
16 comments:
மத,கடவுள்களை சாடுவதில் பெரியாருக்கு உள்ள துணிச்சல் இன்னும் யாருக்கும் வரவில்லை என்பதே உண்மை.
இனியவன்...
356 அல்ல 365
கருநாடக மாநிலம் காவிரி நீர்ப் பிரச்சினை யிலும் கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து நடந்து கொண்டு வருவ தால், தீர்ப்புகளையும் மதிக்காத தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 365அய் (356 அல்ல) பயன்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
- செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத்தலைவர் சென்னை - 6.9.2012)
தேர்தல் பிரச்சினையாகும்!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் மேலும் கால தாமதம் செய்யாமல் விரைவாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தப் பிரச்சினை முக்கியமானதாக தலை தூக்கி நிற்கும்.
- செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் - சென்னை - 6.9.2012)
வன்முறை வேண்டாம்!
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு சுற்று லாவுக்கு வரும் பயணி களுக்கு - உணர்ச்சி வயப் படும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எக்காரணத்தை முன் னிட்டும் அது வன் முறையாக மாறக் கூடாது. உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி அறிவு வயப்பட்டு நம் உணர்வுகளை வெளிப் படுத்த வேண்டும்.
நாம் மேற்கொள்ளும் செயல்கள், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்கக் கூடாது என்பதை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண் டும்.
- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் சென்னை - 6.9.2012)
இலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பங்குகளை விற்பதை எதிர்த்து 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்
சென்னை, செப்.6- இலாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியை எதிர்த்து செப்டம்பர் 10ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற் குழுக் கூட்டம், 6-9-2012 வியாழன் காலை 10 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் மானமிகு துரை-சக்ரவர்த்தி நிலையத்தில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இரங்கல் தீர்மானம் - 1 :
இரங்கல் தீர்மானம் திராவிடர் கழகச் சட்டத்துறைத் தலைவர் ஆற்றல் மிகு கழக முன்னணி வீரர் வழக்குரைஞர் கி. மகேந்திரன் (வயது 59 -மறைவு நாள் 25-8-2012)
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - மறைவிற்குப் பிறகு மருத்துவ மனைக்கு உடற்கொடை, கண்கொடை அளித்த வேலூர் மாவட்டம் திமிரி ஆ.நா. ரங்கராசன் (வயது 86 - மறைவு 19-8-2012)
புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி அவர்களின் சகோதரரும் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் அவர் களின் மகனுமான சிவ. அரசமணி (வயது 64 - மறைவு 29-8-23012)
தமிழ் உணர்வாளரும் பகுத்தறி வாளருமான திருவாரூர் புலவர் சரவண தமிழன் (மறைவு 27-8-2012)
ஆகியோரின் மறைவிற்கு இச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர்களுக்கும், தோழர் களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
சிவகாசியில் பட்டாசுத் தொழிற் சாலை விபத்தில் 35 பேர் பலியான கொடுமைக்கு இச் செயற்குழு தனது வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் களின் குடும்பத்தினருக்கும் ஆறு தலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் - 2 : கழகத் தலைவர் உடல் நலம் பெற்று மீண்டமைக்கு வாழ்த்துகள்
அமெரிக்கா சென்ற இடத்தில் ஏற்பட்ட உடல் நலப் பிரச்சினைகள் தொடர்பாக நல்ல அளவுக்கு நவீன மருத்துவ உதவி பெற்று நலமுடன் திரும்பி, வழக்கம்போல இயக்கப் பணிகள், கொள்கை பணிகளைத் தொடரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு இச்செயற்குழு தமது உளம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 3: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் முன் ஆர்ப்பாட்டம்
இலாபம் கொழிக்கும் நிறுவனமும், இந்தியாவின் நவரத்தினா பட்டியலில் இடம் பெற்றிருக்கக் கூடியதுமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் 5 சதவிகித பங்குகளைத் தனியார்க்கு விற்க முடிவு செய்துள்ளதை இச்செயற்குழு கண்டிக்கிறது.
பல கால கட்டங்களில் இது போன்ற முயற்சிகளில் நிறுவனம் ஈடுபட்ட பொழுதெல் லாம் திராவிடர் கழகம் கண்டனக் குரலை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளது. வேறு சில அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இப்படி தனியார்க்குப் பங்குகளை விற்க முயற்சிப்பது - எதிர்ப்பு கிளம்பியவுடன் கை விடுவது என்கிற போக்கு ஆரோக்கியமான நடைமுறைக்கும், நிருவாகத் தன்மைக்கும் உகந்ததல்ல என்பதை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. தனியார்க்கு 5 விழுக்காடு பங்குகளை விற்கும் முடிவினைக் கண்டிக்கும் வகையில் என்.எல்.சி. முன்பு வரும் 10-09-2012 தேதியன்று கழகச் செயல வைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர் மானமிகு முனைவர் துரை. சந்திரசேகரன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் இச்செயற்குழு தீர் மானிக்கிறது.
தீர்மானம் எண்- 4 : இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த- இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும் என்ற உணர்ச்சி உலகெங்கம் தலை தூக்கி நிற்கும் இந்தக் கால கட்டத்தில், ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இராணுவப் பயிற்சி அளிப்பது ஈவு இரக்கமற்றது என்பதோடு அல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதும், மனிதாபிமானக் கண்ணோட்டத்திற்கு எதிரானதும் ஆகும்.
ஒவ்வொரு முறையும் அத்தகைய பயிற்சிகளை இங்கு கொடுக்கும் போது தமிழ் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் பொழுதெல்லாம் பயிற்சியைத் தமிழ் நாட்டில் நிறுத்தி, தமிழ்நாட்டுக்கு வெளியே கொடுப்பதும், தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் மோசமான நடவடிக்கை என்று இச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.இந்தியாவில் வாழக்கூடிய தமிழ் நாட்டு மக்களின் தொப்புள் கொடி உறவு கொண்டவர்களான ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, கொடுமைகளை தம் நாட்டு மக்களைச்சார்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட ஒன்று என்ற எண்ணத் தில் இந்திய அரசு செயல்படவேண்டும் என்றும் இந்திய அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
எந்த வகையிலும் இராணுவப் பயிற்சி உட்பட இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவிக் கரம் நீட்டக் கூடாது என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
அது போலவே ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரண மானவரான இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு எந்த விதமான அழைப் பையும் இந்திய அரசோ வேறு அமைப் புகளோ கொடுக்கக்கூடாது என்றும், அப்படி கொடுப்பது உலகத் தமிழர் களையும், மனித உணர்வு, மனித நேயம் கொண்டவர்களையும் அவமதிப்பது ஆகும் என்றும் இச்செயற்குழு தெரி வித்துக் கொள்கிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இச்செயற்குழு கண் டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு நிரந்தர ஏற்பாட்டினை உறுதியாகச் செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்- 5 : சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைவு படுத்துக!
தமிழர்களின் நீண்ட நாள் எதிர் பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தி, நிறைவேற்றச் செய்யாமல் முட்டுக் கட்டை போடும் சக்திகளுக்கு இச் செயற்குழு தனது வன்மையான கண் டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம் வகுத்துத் தந்த அந்த 6-ஏ என்ற நீர்த் தடத்திலேயே திட்டப் பணிகள் மேற் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத் திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தினை இச்செயற்குழு வரவேற் கிறது.
இந்த நிலையில், இத்திட்டத்தை நிறை வேற்றிட கால தாமதம் செய்யும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் வாய்தா கேட்டு காலத்தை நீட்டிப்பது முரண்பட்டதும் - மத்திய அரசின் மீதான நம்பகத் தன்மைக்கு ஊறு விளைவிப்பதுமாகும்.
எனவே, திட்டத்தை விரைந்து செயல் படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மான எண்- 6 (அ) : காவிரி நீர்ப் பிரச்சினையும் தமிழ்நாட்டின் உரிமையும்
காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநில அரசு சட்டவிரோதமாகவும், நியாய விரோதமாகவும் நடந்து கொள்கிறது என்றால், மத்திய அரசோ அதற்குத் துணை போகும் வகையில் நடந்து கொள்கிறது. இது தமிழ் நாட்டு மக்களை வஞ்சிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
காவேரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டுவது தொடர்பாக பிரதமர் அலு வலகம் பற்றி உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ள கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.
மத்திய அரசு என்ற பெயருக்கேற்ப நடுநிலையோடு, சட்டப்படியான நிலையை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதமர் அவர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாண்டு கருநாடக அரசு தண் ணீரைத் திறந்து விடாத காரணத்தால் தமிழ் நாட்டில் குறுவை சாகுபடி நடைபெற முடியாமல் அறவே நாசமாக்கப்பட்டு விட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகிவிட்டது.
இதனால் தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை யோடு விவசாயத்தை நம்பி வாழும் கோடானுகோடி ஏழை விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமே பறிக்கப்பட்டுவிட்டது.
இதற்கு மேலும் பொறுத்திடவோ, காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக் கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு காவிரி நதி நீர் ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு உரிமை உடையதும், நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளின்படி யுமான அளவு காவிரி நீர் தமிழ் நாட்டுக்குக் கிடைத்திட உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமரை இச் செயற்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண்- 6 (ஆ) : முல்லைப் பெரியாறு நீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திடுக!
முல்லைப் பெரியாறு நீர்ப் பிரச் சினையிலும் உச்சநீதி மன்ற ஆணைக்கு எதிராக கேரள அரசு நடந்து கொண்டு வருவதால் இது போன்ற ஜீவாதார பிரச்சினைகளில் சட்டத்தை மதிக்காத - தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத அரசு கள் மீது சட்டப்படியான நடவடிக்கை களை எடுக்குமாறு மத்திய அரசை இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்- 7 : மாநிலப் பொறுப்பாளர்களுக்கு...
மாநிலப் பொறுப்பாளர்கள் மூன்று மாத காலத்திற்குள் தங்கள் பணிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக் கான பணிகளின் இறுதி வடிவத்தை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.
தீர்மானம் எண்- 8 (அ) : குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம்
இம்மாதம் செப்டம்பர் 27 முதல் 30 முடிய குற்றாலத்தில பெரியாரியல் பயிற்சி முகாமை நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம் எண்- 8 (ஆ) : தேனி வட்டார மாநாடு
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17 அன்று, தந்தை பெரியார் பிறந்த ஊராகிய ஈரோட்டில் தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும்.
திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை உள்ளடக்கிய மண்டல மாநாட்டை நடத்துவது என்று தீர் மானிக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் சார்பில் வரும் 1-10-2012 அன்று வட்டார மாநாட்டை தேனியில் நடத்துவது என்று தீர்மானிக் கப்படுகிறது. 6-9-2012
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்து இனி இதுபோல் நடக்காமல் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் தமிழர் தலைவர் அறிக்கை
சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து, சுமார் 50 பேர்களுக்கு மேல் பலி கொண்டது என்பதை அறிய மிகுந்த வேதனையும், துயரமும் அடைகிறோம். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
இதில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையும் 50அய்த் தாண்டுவதாக அமைகிறது. இதற்குமுன் எப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு மிகப் பெரும் கோரத் தீ விபத்தாக இது அமைந்துள்ளது மிகவும் அதிர்ச்சியைத் தருவதாகும்!
தேவை - நிரந்தரத் தீர்வு
பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், குடும்பத்தினருக்கும் தமிழக அரசு நட்ட ஈடு - இழப்பீடு தந்துள்ளது; அதைவிட முக்கியம் - இதன் மூல காரணத்தைத் தக்க ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அறிந்து, நிரந்தரமாக இனிமேல் அத்தகைய விபத்துகள் தொடர முடியாத அளவுக்குப் போதிய பாதுகாப்புகளைச் செய்ய, அனைத்துப் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் ஆணை பிறப்பிப்பதும் அவசர - அவசியமாகும்.
மறைந்த அத்தொழிலாளர்களின் பிள்ளைகள், மகளிர் படிக்கவும், குடும்பத்தினர் வேலை பார்த்து தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் போதிய வசதி வாய்ப்புகளை அக்குடும்பத்தினருக்கு உருவாக்கித் தருவது மிகவும் இன்றியமையாதது.
சென்னை
6.9.2012
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை பெரியார் திடலில் பாராட்டுக் கூட்டம் கறுப்பு மலர்களும், செம்மலர்களும் இணைந்து கருத்தியல் கூட்டணி அமைத்து கடமை ஆற்றிடவேண்டும் தோழர் அருணன் பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் அறைகூவல்!
பகுத்தறிவாளர் கழகமும், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியும் இணைந்து சென்னை பெரியார் திடலில் 5-9-2012 அன்று மாலை 6 மணி அளவில் முற்போக்கு எழுத்தாளர் தோழர் அருணன் அவர் களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்று தோழர் அருணன் அவர்களைப் பாராட்டி, சிறப்புச் செய்து உரையாற்றினார்.
சென்னை - பெரியார் திடல் அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் பாராட்டு நாயகர் தோழர் அருணன் பற்றிய தொகுப்பினை பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் ஓர் அங்கமான புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வழங்கினார்.
தோழர் அருணனின் அண்மைக்காலப் படைப்பான காலந் தோறும் பிராமணியம்நூல் தொகுப்புகளின் (எட்டு பாகங்கள்) குறிப்புகளை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன், தொகுத்து வழங் கினார்.
காலந்தோறும் பிராமணியம் நூல் தொகுப்புகளின் படைப்பாளி தோழர் அருணனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
சீரிய சிந்தனையாளரும், பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளருமான, தோழர் அருணன் அவர்கள் ஒரு அருமையான படைப்பினை அண்மையில் அளித்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது. எழுத்தாளர் பலரும், சிந்தனையாளர் மிகப் பலரும் எழுதிடத் தயங்கிய - தயங்கி வரும் தலைப்பினை மிகவும் துணிச்சலாக மேற்கொண்டு காலந்தோறும் பிரா மணியம் நூல் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
ஆதிக்கத்தின் அடையாளம் பிராமணியம்; மனிதநேயத் தின் விரோதி பிராமணியம்; சமத்துவத்தின் எதிரிடை பிராமணியம், பொதுவாக, பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் காலம் தொடங்கி இன்று வரை கறுப்புச் சட்டைக்காரர்கள் பிராமணர்களை பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடுவது இயக்க செயல்முறை வழக்கம். காரணம் வருணாசிரம (அ)தர்மத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால் வருணத்தினருள் பிராமணர் மட்டும் அனைவருக்கும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.
இத் தத்துவம் நமக்கு உடன்பாடானது அல்ல; எதிர்க்கப்பட வேண்டிய நிலையிலும் உள்ளது. பிராமணர் என குறிப்பிடும் நிலையில் சூத்திரர் எனும் நிலையும் ஏற்கப்படுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே சூத்திரத் தன்மையினை மறுப்பதற்கு அதே நேரத்தில் உயர் வருண பிராமணியத்தை எதிர்ப்பதற்கு பார்ப்பனியம், பார்ப்பனர் எனும் சொல்லாட்சிகளை தெளிவாகக் குறிப்பிட்டு, பிரச்சாரம் தொடர்ந்து வருகிறது.
பாராட்டுக் கூட்டத்திற்கு வருகைதந்தோர்.
தந்தை பெரியார் தனக்கே உரிய எளிமையான விளக்கத்தினையும் இதற்கு அளித்துள்ளார். ஒரு ஊரில் பல வீடுகள் இருக்கும். தனி நபர் விருப்பம் என்று ஒரு வீட்டினர் மட்டும் இது பதிவிரதைகள் வாழும் வீடு என எழுதி அவர் வீட்டுக் கதவில் தொங்கவிட்டால் எப்படி இருக்கும்? மற்ற வீட்டினர், அதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
அதைப் போலவே, பிராமணன் என்று ஒரு வகுப்பினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வ தால் பிராமணன் எனக் குறிப்பிட்டால், வருணாசிரமத் தின்படி சூத்திரன் நிலையினை ஏற்றுக் கொண்டதாக - இது பதிவிரதைகள் வாழும் வீடு என அடையாளப் படுத்துவதை மற்ற வீட்டினர் ஒப்புக் கொண்டதைப் போல ஆகிவிடும். எனவே பிராமணர் எனும் குறிப்பு வழக்கில் வேண்டாம். பார்ப்பனர் எனக் குறிப்பிடுவதே சரியாகும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் தனது கவிதைகளில் கூட பார்ப்பனர் எனக் கூறாமல் மேற்படி யான் என குறிப்பிட்டுச் சொல்லுவார்.
தோழர் அருணன் அவர்களுக்கும் இந்த அணுகுமுறை உடன்பாடானது என்றாலும், வாசர்களை எளிதில் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில்தான் காலந்தோறும் பிராமணியம் எனும் தலைப்பினைத் தெரிவு செய்துள்ளார் எனக் கருதுகிறோம். இந்த பிராமணிய எதிர்ப்பு என்பது எளிதான பணி அல்ல. ஆண்டாண்டு காலமாக பல சிந்தனையாளர்கள் எழுத்து வடிவத்தில், செயல்முறையில் பிராமணியத்தை கடந்த காலத்தில் எதிர்த்து வந்துள்ளனர். ஆனால் அந்த எதிர்ப்புக்கு ஆதரவு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை.
பிராமணிய எதிர்ப்பாளர்கள் மனச் சோர்வுற்று ஒதுங்கி விடுவார்கள்; அப்படியே இருந்துவிட்டவர்கள் பலர். கடை விரித்தோம்; கொள்வார் இல்லை என வள்ளலாரும் மனம் நொந்துள்ளார். ஆனால் காலந்தோறும் பிராமணியம் நூல் படைப்பாளி, தோழர் அருணன் மனம் நொந்து போகிறவர் அல்ல. கடை விரித்தோம்; மக்கள் மனம் கொள்ளும் வரை கடையினை மூடமாட்டோம் எனும் துணிச்சலுக்குச் சொந்தக்காரராக உள்ளவர். அவரது முயற்சிகள் வெல்லவேண்டும். முற்போக்குச் சிந்தனை யுடன், தெளிவான சிந்தனையுடன், புரட்சிகரமான கருத்துகளை இந்தத் தொகுப்பில் வழங்கியுள்ளார்.
களப்பிரர் காலம் இருண்ட காலமா? எனும் வினாவினை எழுப்பி அது இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்பதையும் வலுவாக்கி விளக்கம் தருகிறார். குப்தர்கள் காலம் பொற்காலம் எனும் வரலாற்றுப் புரட்டைப் புரட்டிப் போடும் போக்கு அவரது எழுத்துகளில் உள்ளது. மனித நேயத்திற்கு ஏதிரான கருத்துகளின் உள்ளடக்கமாக உள்ள மனுசாஸ்திரம் வலுப்பெற்ற, குப்தர்கள் காலம் எப்படி பொற்காலமாக இருக்க முடியும்? 1857ஆம் ஆண்டில் சிப்பாய் கலகம் என குறிப்பிடப் பட்ட செய்தியினையும் தோழர் அருணன் நூலில் குறிப்பிடு கிறார்.
(இந்து) மத கருத்து வலுப்பெற்றிட, ஆதிக்கம் செலுத்திட ஏற்பட்ட கலகத்தை சுதந்திரப் போராட்ட நிகழ்வாக சித்தரிக்கும் நிலை வரலாற்றாளர்கள் மத்தியில் உள்ளது. அப்படியே பதிவும் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கலகம் மதம் சார்ந்த கருத்துகள் வலிமையடைய, ஆதிக்க சக்திகள் உருவாக்கிய கலகம் என்பதை தோழர் அருணன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துத் தொழிற்சாலை
படித்தவர்கள் எல்லாம் எழுதுவதில்லை. பேசுபவர்கள் எல்லாம் எழுத்து மூலம் படைப்பாளிகளாகி விடுவதில்லை. வெகு சிலரே எழுதுகின்றனர். பல சாதனையாளர்கள் கூட எழுதவில்லை. எழுதுவதற்கு ஒரு வித மனப்போக்கு விகிதம் (sense of proposition) வேண்டும். அற்புதமான பணியினை தோழர் அருணன் செய்து வருகிறார். சலிப்பில்லாமல் எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தோழர் அருணனை எழுத்துத் தொழிற்சாலை என அழைப்பது மிகவும் பொருத்தமாகும்.
மனிதநேயத்துக்கு விரோதமானது பார்ப்பனியம்
தோழர் அருணன் எடுத்துக் கொண்ட கருப் பொருளான பிராமணியம் - பார்ப்பனியம் மனித நேயத்திற்கு எதிரானது; விரோதமானது. அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், “What Congress and Gandhiji have done to the Untouchables” என்ற நூலில், மாந்தரிடையே பேதத்தை வளர்ப்பது பிராமணியம், பேதத்தில் வளர்ந்தது பிராமணியம் எனக் குறிப்பிடுகிறார். ஒரு முறை இதயம் பேசுகிறது இதழ் ஆசிரியராக இருந்த மணியனின் வற்புறுத்தலின் பேரில் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் தாமரை மணாளன் என்னிடம் செவ்வி காண வந்திருந்தார். செவ்வி நடைபெற்ற பொழுது ஒரு கேள்வியினை முன்வைத்தார்.
ஏன் நீங்கள் anti-Brahmin (பார்ப்பன எதிர்ப்பாளர்) ஆக இருக்கிறீர்கள்?
நான் பதிலளித்தேன்: Yes, I am anti-Brahmin, because I am pro-human. (ஆம்; நான் பார்ப்பன எதிர்ப்பாளன்தான்; ஏனென்றால் நான் மனிதத்தை நேசிக்கிறேன்) ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதால் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல வேண்டி வந்தது. மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் பார்ப்பனிய எதிர்ப்பாளராகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். பார்ப்பனர்களின் புனித(?) நூலாகக் கருதும் பகவத்கீதை வருணாசிரமத்தை - பிறப்பின் அடிப்படை யிலான பேதத்தைக் கற்பிக்கிறது. கடவுள் பிறவியிலேயே பேதத்தைப் படைத்ததாகக் கூறுகிறது.
தான் படைத்ததை தான் நினைத்தாலும் மாற்ற முடியாது எனவும் கடவுள் பிரகடனப்படுத்துகிறார். ஆன்மாவுக்கு அழிவில்லை என புத்தியைப் பேதலிக்க வைக்கும் ஆபத்தான கருத்தையும் தெரிவிக்கிறார். கடவுளைக் கற்பித்தவரைக் கூட விட்டுவிடலாம். ஆன்மாவைப் படைத்தவன் மிகவும் ஆபத்தானவன். இதனால்தான் தந்தை பெரியார் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் எனச் சொல்லி விட்டு, ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிக் கிறவன் மகா மகா அயோக்கியன் எனக் கூறினார்.
ஆத்மாவால் பலன் பெறும் பார்ப்பனியம் மகாமகா அயோக்கியத்தனமானது. அந்தப் பார்ப்பனியத்தை - பிராமணியத்தை, மனித நேய விரோதத் தத்துவத்தை தோலுரித்துக் காட்டி காலந்தோறும் பிராமணியம் எனும் தனது படைப்பில் காலங்கள் பல கடந்தும் போற்றப்படும் பணியினை தோழர் அருணன் செய்துள்ளார். பெரிய பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டிய, பணியினை குழு நிலையில் செய்து முடித்திட வேண்டிய இந்த மாபெரும் பணியினை தனி மனித முயற்சியாக தோழர் அருணன் செய்து முடித்துள்ளார்.
இதற்காக அவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்; எத்தனை நூலகங்களுக்குச் சென்றிருப்பார்; எத்தனை ஊர்களுக்குச் சென்று அலைந்திருப்பார்; அல்லல் பட்டிருப்பார். அவரது அரும்பணி போற்றுதலுக் குரியது. போற்றப்பட வேண்டும். இங்கு வருகை தந்துள்ள அனைவரும் இந்த எட்டு தொகுதிகளையும் பணம் கொடுத்து வாங்கிட வேண்டும். தாங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாங்கி வழங்கிட வேண்டும். விழாக் காலங்களில், வீட்டில் நடக்கும் மகிழ்ச்சி வேளைகளில் இந்த புத்தகத் தொகுதியைப் பரிசாக அளிக்கலாம்.
Literature is a record of best thoughts (சிறந்த சிந்தனைகளின் பதிவே இலக்கிய மாகும்) என்பது ஆங்கில அறிஞர் எமர்சனின் கூற்று. இந்த எட்டு தொகுப்பும் அப்படிப்பட்ட சிறந்த சிந்தனை களின் பதிவுகளே ஆகும். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்தனைகள் சமுதாயத்துக்குத் தேவையான மூச்சுக் காற்று போன்றது; உயிர்க் காற்று (பிராணவாயு) போன்றது.
தோழர் அருணனின் பணி போற்றிப் பாதுகாக்கப் படவேண்டும். துணிச்சல் மிக்க இவரது படைப்புகளைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்.இப்படிப்பட்ட சிந்தனைகள் பல்கிப் பெருகிட வேண்டும். பல அருணன்கள் உருவாகிட வேண்டும்.
போற்றுதலுக்குரிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பில் பெரியார் இயக்கம் பற்றிய விமர்சனங்களும் உண்டு என்பதும் எமக்குத் தெரியும். அந்த விமர்சனங்கள் அனைத்தும் எங்களது சிந்தைக்கு அளிக்கப்பட்டதாகவே கருதுகிறோம். அந்த விமர்சனங் கள் மந்தைக்கு அல்ல; மக்கள் மன்றத்திற்கு அல்ல எனக் கருதுபவர்கள் நாங்கள். எது நம்மைப் பிரிக்கிறது என்பதை விட எது நம்மை இணைக்கிறது என பார்ப்பது அறிவுட மையாகும். ஆக்க ரீதியாக செயலாற்றும் பெரியார் இயக்கத்தினரும், பொது உடைமைக் கருத்தினரும் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
கறுப்பு மலர்களும், செம்மலர்களும் இணைந்து கருத்தியல் கூட்டணி அமைத்து (அரசியல் கூட்டணி அல்ல) கடமை ஆற்றிட வேண்டிய காலம் கனிந்துள்ளது. மதவெறி அமைப்பு களிடமிருந்து மக்களை - மனித நேயத்தினைக் காப்பாற்ற வேண்டிய பணி நமக்கெல்லாம் உண்டு. அந்தப் பணியில் களம் புகுவோம். அத்தகைய பணியின் ஒரு கட்டம்தான் தோழர் அருணனுக்கான இந்தப் பாராட்டு விழா. தோழர் அருணனின் பகுத்தறிவு, மனிதநேயப் படைப்புகள் பல்கிப் பெருகட்டும். பாராட்டுகள். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! பெருகிடுக மானிட சமத்துவம்!!!
- இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
6-9-2012
தோழர் அருணன் ஏற்புரை
தோழர் அருணன் தனது ஏற்புரையில், மார்க்சியம் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும் கருத்தியல், பிராமணியம் அசமத்துவத்தை உருவாக்குவது. அசமத் துவத்தை நிலை நிறுத்திட வலியுறுத்தும் கருத்தியல் பிராமணியம். எனவே ஒரு மார்க்சியவாதி பிராமணிய எதிர்ப்பாளராகத்தான் இருக்க முடியும். அது இயல்பு. எனக்கு உற்சாகம் வகையில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்விற்கு நன்றி. எனக்கு மகிழ்ச்சி தந்திடும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் உரை தனது படைப்பாக்கப் பணியினை ஊக்கப்படுத்தும் எனக் குறிப்பிட்டார். (தோழர் அருணன் ஆற்றிய முழு ஏற்புரை பின்னர் விடுதலையில் வரும்.)
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் நன்றி கூற பாராட்டுக் கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்திற்கு திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி, தீக்கதிர் இதழின் ஆசிரியர் தோழர் அ.குமரேசன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தோழர் முத்து, பொதுவுடமை எழுத்தாளர் பா.வீரமணி, திராவிடர் தொழிலாளர் அணித் தலைவர் நாகலிங்கம், மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் பொறுப் பாளர்கள், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்!
பொன் முட்டையிடும் வாத்தான நவரத்னா அங்கீகாரம் பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நெய்வேலி நகரத்தில் 10.9.2012 திங்கள் காலை 11 மணிக்கு பெரியார் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், புதுவை, அரியலூர் மாவட்டங்களின் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
பதவி உயர்விலும் இடஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி.களுக்கு அளிப்பதும் வரவேற்கத்தக்கது பிற்படுத்தப்பட்டவருக்கும் அளிப்பது ஏற்புடையதே! கழகத் தலைவர் வீரமணி அறிக்கையைச் சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை
சென்னை, செப். 6- தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத் தப்பட்டவருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
கலைஞர் அவர்கள் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் தற்போது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக் கப்படுகிறது. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிக்க அலகாபாத் உயர்நீதி மன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றமும் தடை விதித்த காரணத்தால், நாடாளு மன்றத்தில் அதற்காக சட்டம் இயற்ற மத்திய அரசு தீர்மானித்தது. ஆனா லும் கடந்த சில நாட்களாக நாடாளு மன்றம் அன்றாடம் முடக்கப்படும் நிலையில், பதவி உயர்வில் இட ஒதுக் கீடு அளிக்க வகை செய்யும் மசோதா வினை இந்தத் தொடரில் நிறைவேற்ற இயலுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பதவி உயர்விலும் அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத் திருத்தத்தை நமது அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. அவர் அளித்த பேட்டி யிலே கூட இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் அமளி நிலவிய போதிலும், அதற்கு மத்தியில் அரசுப் பணிகளில், பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவை யில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத் திருத்தத்தை சமாஜ்வாடி கட்சியும், அதன் தலைவர் முலாயம் சிங் அவர்களும் எதிர்த்திருக்கிறார் கள். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், மலைவாழ் மக்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லவில்லை, அவர் ளோடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து அந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வில்லையே என்று தான் கேட்டிருக்கிறார். இது நமக்கும் ஏற்புடைய கொள்கைதான். இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நமது கழக நாடாளு மன்றக் கட்சித் தலைவர் தம்பி டி.ஆர். பாலு இதனை வற்புறுத்தியிருக்கிறார்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி
இதைப் பற்றி திராவிடர் கழகத் தலைவர், மானமிகு இளவல் கி. வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கை ஒன்றையும் இன்று விடுத்துள்ளார். மசோதா மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அமளி தொடர்ந்து அவையை ஒத்தி வைத்து உள்ளார்கள். மழைக்காலக் கூட்டத் தொடர் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த நிலையில் இந்த முக் கியமான மசோதா நாடாளுமன்றத் தில் நிறைவேற அனைத்துக் கட்சி களும் தங்கள் ஒத்து ழைப்பை நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள் கிறேன். - இவ்வாறு கலைஞர் அவர் கள் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு நதி பின்னோக்கி ஓடுமா?
ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை அய்சக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி நதியானது சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம்.
மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.
இதன் விளைவாக கடல் நீர் பெரும் பிரவாகமென நதிக்குள் புகுந்தது. இதன் விளைவாக நதி நீரும் கடல் நீரும் சேர்ந்து பின்னோக்கிச் சென்றன. இது நதியின் போக்கையே மாற்றியது. சாதாரண நாட்களில் மிஸ்ஸிஸிபி நதியில் கடலை நோக்கி வினாடிக்கு1,25,00 கன அடி வீதம் நீர் பாய்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் புயல் தாக்கிய போது கடலிலிருந்து நதிக்குள் வினாடிக்கு 1,82,000 கன அடி வீதம் வெள்ள நீர் பாய்ந்தது. இது நதியை பின்னோக்கி ஓடும் விளைவை ஏற்படுத்தியது. புயல் வெள்ளம் நதிக்குள் பாய்ந்ததன் விளைவாக நதியின் நீர் மட்டம் வழக்கத்தை விட 10 அடிக்கும் அதிக மாக உயர்ந்தது. நதியில் பெல்லி சாஸே என்னுமிடத்தில் உள்ள அளவுமானிகள் இவை அனைத்தையும் பதிவு செய்து காட்டின.
பொதுவில் நதி முகத்துவாரப் பகுதியில் புயல் தாக்கினால் தற்காலிக அளவில் நதி பின்னோக்கி ஓடுவது சகஜமே. கடந்த 2005 ஆம் ஆண்டில் இதே வட்டாரத்தை கேத்ரினா என்னும் பெயர் கொண்ட பயங்கரப் புயல் தாக்கிய போது இதே போல மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது. அப்போது நதி நீர் மட்டம் வழக்கத்தை விட 14 அடி அதிகமாக இருந்தது.
மிஸ்ஸிஸிபி நதி கடலில் கடக்கும் இடத்தில் அமைந்த நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களுக்கு புயல் என்றாலே பெரும் பீதி தான். காரணம் இந்த நகரமும் சுற்று வட்டாரப் பகுதிகளும் கடல் மட்டத்தை விடத் தாழ்வாக உள்ளன. கடல் பொங்கினால் கடல் நீர் நகருக்குள் புகுந்து விடாமல் தடுக்க மிக விரிவான அள்வில் ஏரிக்கரை போல நெடுக நல்ல உயரமான தடுப்புக் கரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் தாக்கி கடல் நீர் வெள்ளமெனப் பாயும் போது இந்த தடுப்புக் கரைகளையும் தாண்டி நகருக்குள் வெள்ளம் புகுந்தால் பெரும் பிரச்சினை தான். கட்ரினா புயல் தாக்கிய போது நகரம் வெள்ளக்காடாகி பல வார காலம் தண்ணீரில் மிதந்தது. நதி ஒன்று பின்னோக்கி ஓடுவதற்கு புயல் ஒன்று தான் காரணம் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்த மிசவுரி மாகாணத்தில் மிஸ்ஸிஸிபி நதிக் கரையில் நியூ மாட்ரிட் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரம் அமைந்த வட்டாரத்தில் 1812 ஆம் ஆண்டில் கடும் பூகம்பம் நிகழ்ந்தது. அப்போதும் மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது. 6-9-2012
Post a Comment