பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அவசியம் தேவையே! தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை
பணி நியமனம் - பதவி உயர்வையும் உள்ளடக்கியதே!
தாழ்த்தப்பட்டவர்களோடு, பிற்படுத்தப்பட்டோருக்கும்
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அவசியம் தேவையே!
தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை
பணி நியமனம் என்பதில் பதவி உயர்வும் அடங்கியதே என்று தெளிவாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருக் கிறது. எனவே, தாழ்த்தப்பட் டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு தேவையே - அதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவின் ஜாதிமுறை - வருணாசிரம தர்ம முறைதான் மிகப் பெரும்பாலான மக்களை கல்வி வாய்ப்புகளைப் பெற இயலாதவர்களாக - பெறக் கூடாதவர்களாக - ஆக்கியதற்கு அடிப்படைக் காரணம்.
சூத்திரர்கள் - 4 ஆம் பிரிவினர் - 5 ஆம் பிரிவினரான பஞ்சமர்கள் - ஆறாம் (கீழ்) பிரிவினரான எல்லா வர்ணப் பெண்கள் - ஆகியவர்களுக்குக் கல்வி உரிமை அடியோடு மறுக்கப்பட்ட மனுதர்ம சமுதாய அமைப்பின் விளைவே இது!
சமூகநீதி என்பது சட்டப்படி அடிப்படை உரிமை!
இதனை மாற்றிடவே, திராவிடர் இயக்கம் சமூகநீதிக் கிளர்ச்சியை செய்து, ஓரளவு வெற்றி பெற்று, இன்று ஒடுக்கப்பட்டோர்களாகிய மேற்கூறிய பிரிவினர் கல்வி வாய்ப்புக்களை குறிப்பிட்ட அளவில் பெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வியறிவு இல்லாததால், அவர்கள் இதுநாள் வரை, வெறும் உடலுழைப்புப் பணியாளர்களாய் இருந்துவர வேண்டியதாயிற்று.
இப்போது அது மாறி வருகின்றது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளினால் சமூக ரீதியாக வும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களும் இப்போது கல்வி கற்க வாய்ப்பு ஏற்பட்டது.
ஏக போகக்காரர்களின் கூச்சல்!
இதற்குமுன் கல்வியை ஏகபோகமாக்கிய பார்ப்பனர் கள், அவர்தம் சுற்றுக்கோள்களான சில முன்னேறிய ஜாதியினரும் இதற்காக கூச்சல் போட்டு, பொய் அழுகை போலிக் கூப்பாடு - தகுதி போச்சு, திறமை அழிந்தது என்று முதலைக் கண்ணீர் வடித்து, இன்னமும் தம் வசம் உள்ள ஊடகங்கள், அதிகாரவர்க்கத்தினர் மூலம் (நீதித்துறையும் அடக்கம்) தடுத்து இந்த மக்கள் - பசியேப்பக்காரர்கள் பந்தியில் உட்கார வைப்பதை காண சகிக்காமல் - புளியேப்பக்காரர்கள் பேனாமூலம் - பிரச்சாரம் மூலம் காகிதப் போராட்டம் நடத்துகின்றனர்!
மற்றவர்களுக்குச் சமமாக வரும்வரை...
மலைவாழ் மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பதவிகளில் இட ஒதுக்கீடு செய்வதைத் தடுக்க முடிய வில்லை; அப்படி இருந்தும் அவர்களுக்குரிய விகிதா சாரங்களில் - பிரதிநிதித்துவம் இன்னமும் சுதந்திரம் வந்து 65 ஆண்டுகள் ஆகியும் கிடைக்கவில்லையே!
பதவி உயர்வில் (புரோமோஷன்) அவர்களுக்கு முன்னுரிமை தருவதால் என்ன குடிமூழ்கிப் போய்விடும்?
இந்திய அரசியல் சட்டத்தில் 16(4) பிரிவு Adequately என்ற சொல்லுக்கு - மற்றவர்களோடு சமமாக வருகின்ற அளவில் போதிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதே - அதனைச் சரியாக செயல் படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை அல்லவா?
உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்கம்
உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்கம் அதனைத் தடுத்தது. (ஏற்கெனவே அரசியல் சட்டத் திருத்தம் 77 ஆவது 2001 இல் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டிருந்தும்) - உ.பி. சட்டத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்கு (மட்டும்) பதவி உயர்வு தரும் சட்டத்தை செல்லாது எனக் கூறியது, அரசியல் சட்ட விரோத தீர்ப்பாகும்!
அன்று சீதாராம் கேசரி கூறியது என்ன?
இதற்காக மீண்டும் இப்போது ஒரு திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்றவிருப்பதை நாம் வரவேற்கிறோம் - ஆனால், அதே நேரத்தில் ஏற்கெனவே சீதாராம் கேசரி அவர்கள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து (நரசிம்மராவ் பிரதமர் அப்போது) நாடாளு மன்றத்தின் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து அதைக் கொணரவில்லையே என்றபோது அடுத்துச் செய்வோம் என்றனர்! செய்யவில்லையே - 11 ஆண்டுகள் ஓடிவிட்டனவே.
இப்போதும் மத்திய அரசு - அதுபற்றி கவலைப் படாமல், பிற்படுத்தப்பட்ட மக்களை அதில் சேர்க்காமல் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்?
நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தி.முக.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு இதனை வற்புறுத்தியுள்ளார்!
முலாயம்சிங் கூறுவது என்ன?
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் இதனை எதிர்த்ததற்குக் காரணம், பிற்படுத்தப்பட்டவருக்கு மற்றொரு அளவுகோல் ஏன்? அவர்களுக்கும் பதவி உயர்வு தரவேண்டிய வகையில் சட்டத் திருத்தம் அமைவதில் என்ன சிக்கல், என்ன தயக்கம்? என்றுதான் கேட்டுள்ளார்!
இவ்வளவு காலம் சென்ற நிலையில், இப்போதுதான் நாடாளுமன்ற எம்.பி.,க்களை கொண்ட தனியே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி பார்லிமெண்ட்ரி கமிட்டியே அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் 60 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் அவர்களது நலன் பாதுகாக்கப்பட வேண்டாமா? இது உரிமை - பிச்சை அல்ல!
உடனே பார்ப்பன ஊடகங்கள் ஒப்பாரி வைக்கக் கிளம்பிவிட்டன! ஆகா, தகுதி என்னாவது, திறமை போய்விடுமே என்கின்றனர்?
60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு இருந்ததே என்று மாய்மாலக் கூச்சல் போடுகின்றன!
6000 ஆண்டு அநீதி!
6000 ஆண்டு அநீதிக்கு முன்னால் 60 ஆண்டு சமூகநீதிச் சட்டங்கள் எம்மாத்திரம்?
அதுவும் இந்தியா முழுவதும் இல்லையே! மேற்கு வங்கத்தில் என்ன நிலை? குஜராத்தில் என்ன நிலை?
போதிய அளவு வாய்ப்பு இல்லாததினால் தானே இந்தக் கோரிக்கை; அவர்களுக்குரிய விகிதாச்சாரம் தரப்பட்டிருந்தால், இந்தக் கோரிக்கைக்கு அவசியமே வந்திராதே! Adequately என்ற சொல்லுக்குTill it is equalised - மற்றவர்களோடு சமமாக வரும்வரை என்று தானே பொருள்.
அரசியல் சட்டம் 16(4) பிரிவு -- Backward Class of Citizens என்ற சொற்றொடர் பொதுவில் (S.C., S.T., OBC, MBC எல்லோரையும் இணைத்தே) நுழைக்கப்பட்டது என்பதை மறந்து ஏன் குறுக்கவேண்டும்?
பிற்படுத்தப்பட்டோருக்கும் தேவையே!
எனவே, மத்திய அரசு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குத் தருவதுபோலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பதவி உயர்விலும் வாய்ப்புத் தரவேண்டும்.
Appointment என்ற சொல்பற்றி சென்னை உயர் நீதிமன்றம், ரங்காச்சாரி வழக்கில் தீர்ப்புச் சொன்னபோது, ‘‘Appointment includes Promotion also’’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதே - பின் ஏன் இந்த பாரபட்சம்?
அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட எம்.பி.,க்களும் ஒட்டுமொத்த குரல் கொடுக்க முன்வரவேண்டும்!
உரிமைக் குரல் எழுப்புவோம்!
S.C., S.T., OBC எல்லாம் இணைந்து அனைவருக்கும் அனைத்தும் என்று போராடவேண்டும்.
பார்ப்பனரின் பிரித்தாளும் தந்திரத்திற்கு எஸ்.சி., எஸ்.டி., மக்கள் பலியாகிவிடாமல், நாம் அனைவரும் கைகோர்த்து உரிமைக்குரல் எழுப்ப முன்வரவேண்டும்!
-----------------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம். --"விடுதலை” 5-9-2012
Search This Blog
5.9.12
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு (1)
தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்பது குறித்து ஒரு சர்ச்சை வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
ஒரு ஆச்சரியமான விடயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்வதற்காக 77 ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டுவிட்ட நிலையில், 2001 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இப்பொழுது அலகாபாத் உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் ஏதோ ஒரு வகையில் அந்தச் சட்டத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு முடக்குவது ஏன்? முடக்கவேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேறு வகையாக விளம்பரப்படுத்தப்படுவதையும் கவனிக்கவேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முத லமைச்சராக இருந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மீதுதான் இந்தத் தீர்ப்புகள். உச்சநீதிமன்றம் 77 ஆவது சட்டத் திருத்தத்தைச் செல்லாது என்று சொல்லிவிட்டதா? அப்படியே சொல்லி விட்டதாகக் கூற முடியாது. வேறு எப்படி சொல்லியிருக்கிறது? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கும் பொழுது அதற்கான புள்ளி விவரங்களும் தர வேண்டும் என்றே கூறியுள்ளது உச்சநீதிமன்றம்!
இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளில் கூட இதுபோன்று புள்ளி விவரங்களைக் கேட்டதுண்டு.
பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்பதற்குப் புள்ளி விவரங்களைக் கூறுவது ஒன்றும் கடினமானதும் அல்ல. என்றாலும் ஒவ்வொரு முறையும் அவ்வாறு அளிப்பது நடைமுறை சாத்தியமற்றது, தேவையற்றது.
தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று எழுதும் கல்கி இதழ்கூட (9.9.2012, பக்கம் 85) மத்திய அரசில் உள்ள 93 செயலாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை என்று தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்டுவிட்டதே!
மத்திய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நாட்டில் 24 உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு 15 விழுக்காடும், மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடும் அளிக்கப்படவேண்டும்.
ஆனால், உண்மை நிலவரம் கலவரமாக அல்லவா இருக்கிறது. 740 விரிவுரையாளர் இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட இடங்களோ வெறும் 399. அதேபோல மலைவாழ் மக்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய விரிவுரையாளர் பதவிகளில் இன்னும் நிரப்பப்படாத இடங்கள் 172.
ரீடர் பதவிகளை எடுத்துக்கொண்டால், எஸ்.சி., எஸ்.டி.,க்கு நிரப்பப்படாத இடங்கள் 84 விழுக் காடாகும்.
பேராசிரியர் பதவிகள் என்று எடுத்துக் கொண்டாலும் எஸ்.சி., எஸ்.டி.,க்கான நிரப்பப்படாத பதவிகள் 92 விழுக்காடு.
இவ்வளவு வெளிப்படையாகப் புள்ளி விவரங்கள் இருக்கும்பொழுது, பதவி உயர்விலும் இட ஒதுக்கீடா என்று புருவங்களை உயர்த்துவதும், இதனால் முன்னேறவேண்டும் என்ற உணர்ச்சியை அழித்து விடும் என்று இதோபதேசம் செய்வதும் எந்த அடிப்படையில்?
உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லவில்லை. தக்க புள்ளி விவரங்களை எடுத்துக்கூறித் தாராளமாக பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பதே தீர்ப்பின் நிலை.
புதிய சட்டத் திருத்தம் தேவைப்படும்பொழுது எல்லாத் துறைகளிலும் உள்ள புள்ளி விவரங்களையும் இணைத்து, மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல வழியில்லாத வகையில் அரசமைப்புச் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்த்துவிட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு மறுபடியும் பார்ப்பன உயர்ஜாதி சக்திகளும், ஊடகங்களும் தங்களுக்கே உரித்தான நச்சு விதைகளைத் தூவ ஆரம்பித்துவிட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!! --விடுதலை” தலையங்கம் 5-9-2012
மருத்துவப் புரட்சிக்கு வித்திட்ட கறுப்புத் தாய்!
அமெரிக்காவில் வர்ஜினியா என்ற மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரு புகை யிலை விவசாய - அடிமைகளாக முன் னோர்கள் இருந்த கறுப்பின அமெரிக்கப் பெண்மணி ஹென்ரிட்டா லாக்ஸ்.
இவர் 5 ஆவது, 6 ஆவது வகுப்பு மட்டுமே படித்த ஒரு ஏழைப் பெண்மணி. அய்ந்து (5) குழந்தைகளுக்குத் தாயாகி விட்டவர்.
1951 இல் அவர் மெரிலாண்ட் பகுதியில் (வாஷிங்டன் டி.சி. - அருகில் உள்ள பகுதிதான்) பிரபல ஜான்ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்!
குழந்தைப் பருவம் முதலே இந்த பெண்மணிக்கு மூச்சுத் திணறல் வரு வதுண்டு அடிக்கடி. மூக்குப் பகுதி கொஞ்சம் வளைந்திருக்கும் (Deviated Septum) பல ஆண்டுகளாக பல் வலி உபாதையும் அடிக்கடி.
15 வயது முதலே கணவனோடு தாம்பத்திய வாழ்வு. பிறகு உடலுறவில் நாட்டமில்லை. காரணம், அவர்களை அறியாமலேயே அந்தப் பெண்ணுக்கு கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer). இவரது தாய், தந்தைக்கு இவர் 10 பிள்ளைகளில் மூத்தவர்.
இந்தப் பெண்ணை ஜான் ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அது அவருக்கு வெளிநாடு போல் தோன்றியது. காரணம், அவர்கள் பேசும் ஆங்கிலம்கூட இவருக்குச் சரிவரத் தெரியாது.
புகையிலை விவசாய அறுவடை, பன்றி வளர்ப்பு - இவைதாம் இவருக்குத் தெரியும்.
இவருக்கு Cervix என்ற சொல்லோ, Biopsy என்ற வார்த்தையோ எதுவும் தெரியாது! எழுதப் படிக்கவே தெரி யாதவர் இவர்!
தனது வலி பற்றி டாக்டர்களிடம் சொன்னார்; ரத்தம் கசிந்து கொண் டிருந்ததை அறிந்து கூறினார். மூன்று மாதம் கழித்து ஒரு பெரிய கட்டியாக அது மாறியது.
அவர் உயிருடன் மருத்துவமனையில் இருக்கிறபோது, அவருக்குத் தகவல் தெரியாமலேயே அவரது உடம்பிலிருந்து செல்கள்(Cells)
எடுத்து குளிர்பதனப் பெட்டி அறையில் வைக்கப்பட்டன! அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அந்த செல்கள் எடுத்து வைக்கப்பட்டன.
பொதுவாக இப்படி எடுக்கப்படும் செல்கள் உயிருடன் இருப்பதில்லையாம்! இது மிகவும் உயிர் நிலையிலேயே பராமரிக்கப்பட்டு, இன்றும் பலவித நோய்களுக்கும், சிகிச்சைகளுக்கும் மூலாதாரமாகப் பயன்படுகிறதாம்!
மைக்ரோஸ்கோப் என்ற நுண் ணாடியின்மூலம் பார்த்தால் வறுக்கப்பட்ட முட்டை (Fried Egg) போல அந்த செல்கள் காணப்படுமாம்! ஹீலாவின் செல்கள் வளர்ந்தன; வளர்ந்துகொண்டே இருக்கின்றன 350 மில்லியன் அடிக்கு. (35 கோடி அடி நீளம்; 5 அடி அவரது உயரம்). அவர் இறந்துவிட்டார்; அவரி டமிருந்து எடுக்கப்பட்டு, பாதுகாத்து பராமரிக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச் சிக்குப் பயன்படும் அந்த செல்கள்மூலம் மருத்துவ ஆராய்ச்சி நாளும் வளர்ந் தோங்குகிறது இன்றும்கூட!
போலியோ வாக்சின், கீமோதெரபி, குளோனிங், ஜீன் மேப்பிங், விட்ரோ ஃபர்ட்டிலைசேஷன் போன்ற பல முக்கிய ஆய்வுகளுக்கு அவரது தியாகம் அவரது அனுமதியின்றியே அமெரிக்க டாக்டர்கள் செய்தது - மனித குல வளர்ச்சிக்கு அந்தக் கறுப்பின, ஏழைத்தாயின், படிக்காத ஒரு பெண் ணிடம் அறக்கொடை (செத்தும் கொடுத்ததால் அப்படி அழைப்பதில் தவறில்லையே) மனித குலத்திற்குப் பயன்படுகிறதே!
ஹெல்த் இன்ஷுரன்ஸ் கூட கட்ட முடியாத அந்த கறுப்புப் பெண்ணின் செல்கள் மூலம் இன்றும் - அவை பல நூறு கோடி டாலர்களை பலர் சம் பாதிக்க மூலதனமாக முதலாகப் பயன்படுகிறது!
இதை ஒரு நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர், பெண்தான் - சிறப்பான வரலாறாக மருத்துவ உலகின் மிகப் பெரிய புரட்சியாக மலர்ந்த ஒரு அருமை யான நூலாக படைத்துள்ளார். அண்மையில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது நியூஜெர்சியில் ஒரு பேரங்காடியில் இந்த நூல் ஒரு மூலையில் 20 சதவிகித தள்ளுபடியுடன் கிடைத்தது!
இந்நூல் எப்படிப்பட்டது?
‘‘A thorny and provocative book about cancer, racism, Scientific ethics, and cripping poverty’’ - The immortal life of Henrietta Lacks.
இதன் தமிழாக்கம்:
புற்றுநோய், இனவெறி, அறிவியல் நன்னெறி, வாழ்க் கையை முடக்கிப் போடும் வறுமை ஆகிய முட்களைப்பற்றி, ஆத்திர மூட்டக் கூடிய, சிந்தனையைத் தூண்டும் நூல் - ஹென்ரிட்டா லாக்சின் அழிவே இல்லாத வாழ்க்கை.
லாக்ஸ் மகளைக் கண்டுபிடித்து, கோபம் - சோகம் நிறைந்த அந்த மகளுடன் கலந்து பேசி இந்நூலை எழுதி உலகுக்கு இந்தக் கதையைத் தந்தவர் ரெபாக்கா ஸ்கூலூட் (Rebecca Skloots) என்ற பெண் எழுத்தாளர். இவர் ஒரு மனிதநேயர்; கடவுள் நம்பிக்கையற்றவரும்கூட. அவருக்கும் உலகு கடமைப்பட்டுள்ளது!
குறிப்பு: இந்நூல் 2010 ஆம் ஆண்டு பல பரிசுகளைப் பெற்ற ஒரு நூல்!
லாக்ஸ் செல்லை அவர் அனுமதியின்றி எடுத்த அமெரிக்க டாக்டர் இன்னமும் 100 வயது கடந்து வாழ்ந்து கொண்டுள்ளார். இதை நான் வேறு வழியில் கண்டறிந்தேன்!
---கி.வீரமணி - வாழவியல் சிந்தனைகள் 5-9-2012
வ.உ.சி.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் இவருக்கு இணையான தியாகி யார்? என்று கேள்வி கேட்கலாம்! அந்த அள வுக்கு உயர்ந்த பெருமகன் வ.உ.சிதம்பரனார். அவரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் இப்பொன்னாள் (1872).
என்ன செய்வது! அவர் பாழாய்ப் போன இந்தத் தமிழ்க் குலத்திலே பிறந்து விட்டாரே.
இந்திய வரலாற்றில் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முதல் மனிதர் இவர்!
சிறையிலே சொகுசு வாழ்வா? செக்கிழுத்த செம்மல் என்ற சொல் லாடல் அவர் பட்ட துன்பத் திற்கான பட்டா!
மாவட்ட துணை ஆட்சி யர் ஆஷ் துரைக்கு மிகவும் நெருக்கமான ரங்கசாமி அய்யங்கார் என்பவர், தமக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்த தோழரிடம் வ.உ.சி.யைப்பற்றி கேவல மாகப் பேசியபோது, அந்தத் தோழருக்கு வெடித்த சினத் தால், முழுச் சவரம் செய் யாமல், அரைகுறையாக விட்டுவிட்டுச் சென்றுவிட் டாராம். நாட்டுப் பற்று மிக்க அந்தத் தன்மான தோழர் - இது ஒரு கட்டம்!
சிறையிலிருந்து வ.உ.சி. விடுதலை பெற்றபோது அவரை வரவேற்க வந்த வர்கள் வெறும் அய்ந்தே பேர்கள்தானாம்!
வாட்டும் வறுமையில் தன் வாழ்வைக் கடத்தும் நிலைதான் அவருக்கு.
வெள்ளையனே வெளி யேறு இயக்கம் நடந்த போது கட்சியை விட்டு வெளியேறிய ராஜாஜிதான் இந்தியாவின் முதல் கவர் னர் ஜெனரல். தாம் செய்த தியாகத்துக்காக(?) கிண்டி கவர்னர் மாளிகை தோட் டத்தையே தியாகி மானிய மாக கேட்டவர்தான் ஸ்ரீமான் ராஜாஜி.
ஆனால், வ.உ.சி.யின் நிலை என்ன? தன் மகனுக் காக ஒரு அரசு வேலைக்குச் சிபாரிசு செய்யும்படி வ.உ.சி. தந்தை பெரியார் அவர் களுக்குக் கடிதம் எழுதி னார் என்றால், அதன் தன் மையை என்னவென்று சொல்ல!
அவருடைய எஞ்சிய காலம் தந்தை பெரியாரு டனும், சுயமரியாதை இயக் கத்துடனும் கலந்தது என் பது ஒரு சிறப்பான தகவ லாகும்.
வ.உ.சி.யின் இன் னொரு பக்கம் உண்டு. அது மிகப்பெரிய தமிழ் ஆய்வாளர் - சிந்தனை யாளர் - எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதிக்குவித்த பெருமகன் - இனமானம் - மொழிமானம் மிக்க அந்த ஏந்தலை இந்நாளில் நினைவு கூர்வோம்.
- மயிலாடன் 5-9-2012
Post a Comment