Search This Blog

10.9.12

பெரியார் தனி மனிதரல்லர். தமிழர்களின் மீட்சித் தத்துவம்

வீடெலாம் நாடெலாம் விழா மணம் வீசட்டும்!
 
தமிழர்களுக்குத் தன்மானவுணர்வு - பகுத்தறிவு உணர்வுகளையூட்டிய வரலாற்று நாயகர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17. இவ்வாண்டு 134ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறோம்.

பார்ப்பனப் பண்பாட்டுப் படை எடுப்பால், வருணாசிரமக் கட்டுவிரியனின் நஞ்சால் ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிளவுண்டு நாம் ஓரினத்துக்குச் சொந்தக்காரர்கள் - நீண்ட நெடிய  வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்ற உண்மையை மறந்து சிதறுண்டு, திரிபுகளுக்கு ஆளாகிக்கிடக்கின்றோம்.


ஜாதி என்ற சொல்லேகூட தமிழ்ச் சொல் அல்ல; - இது தமிழர்களுக்கு உரியதன்று. நம்மைப் பிரித்தாளுவதற்குப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி என்பதைக் கிளிப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் சுற்றிச் சுற்றி பாடங்கள் நடத்தி பொது மக்கள் மத்தியில் தம் வாழ்நாள் எல்லாம் பிரச்சாரக் களத்தில் நின்றவர், அந்தப் பகுத்தறிவுப் பகலவன்.

இந்தப் பார்ப்பன ஆதிபத்தியத்தை எதிர்த்து வரலாற்றில் எத்தனையோ பேர்கள், அமைப்புகள் போராடியிருக்கின்றனர். கவுதமப் புத்தர் அதைத்தான் செய்தார். சித்தர்களும் எதிர்த்து தான் பாடல்களை இயற்றினர்.


பக்தி மார்க்கத்திலும் வடலூர் இராமலிங்க அடிகள்கூட எதிர்குரல் கொடுத்துள்ளார். மறை மலை அடிகள், கா.சு.பிள்ளை போன்ற சைவ தமிழறிஞர்கள்கூட ஆரியத்தின் மேலாண்மை குறித்துக் கலகம் செய்தனர்.

என்றாலும் ஆரியம் அவர்களை எல்லாம் மென்று தின்று ஏப்பமிட்டு விட்டது. அது நிலைகுலைந்தது தந்தை பெரியார் அவர்களிடத்தில்தான்! இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது, மகாபுருஷர்கள் எல்லாம் வெளியேறத் திட்டமிட்டு விட்டார்கள் என்று பார்ப்பனக் குலாதிபதி சக்ரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியாரே (ராஜாஜி) கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டாரே! (1971).


இந்தியத் துணைக் கண்டத்திலேயே பார்ப்பனர் அல்லாத மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோருக்கு சமூக  நீதி கிட்டுவதற்காக இடஒதுக்கீடுக்கு வழி செய்யும் ஆணை தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்ததும் திராவிடர் இயக்கமே!

இந்தப் பிரச்சினைக்காக காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டவர் தந்தை பெரியார் அன்றோ!

இன்றைக்கு இந்தியாவிலேயே 69 விழுக் காடு வாய்ப்பினை சட்ட ரீதியாக தமிழ்நாட்டில் ஒடுக்கப் பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் அனுபவிக் கிறார்கள் என்றால் அதற்கான மூச்சுக்காற்று தந்தை பெரியார் அவர்களே!

சமூகநீதிக் களத்தில் மட்டுமல்ல; பெண் ணுரிமை, பகுத்தறிவுச் சிந்தனை, பண்பாட்டுக் காப்புரிமை, தமிழ்நாட்டு உரிமை மீட்பு என்று எல்லா வகையிலும் தந்தை பெரியார் அவர் களின் சிந்தனையும், உழைப்பும் முத்திரை களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றுவரை வழிகாட்டியும் வருகின்றன.

மதவாதம் என்னும் புழுதிக் காற்றை தமிழ் நாடு புறந்தள்ளுகிறது என்றால் அதற்கான  ஆசானும் அய்யாவே!

எனவே தமிழர்களின் தேசியத் திருவிழா தந்தை பெரியார் பிறந்த நாளே! அந்நாளில் நம் வீட்டுக் குழந்தைகளைப் புத்தாடை பூணச் செய்து இனிப்புகள் வழங்கி, உற்றார் உறவினர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறுதல் உட்பட எல்லா வகையிலும் புத்தாக்க விழாவாகக் கொண் டாடுவீர் தமிழர்காள்!

ஆங்காங்கே இந்த உணர்வை ஊட்டுவதற்கான ஆக்க முயற்சிகளில் ஈடுபடுங்கள் கழகத் தோழர்களே!


தந்தை பெரியார் தனி மனிதரல்லர். தமிழர்களின் மீட்சித் தத்துவம் - ஒரு குறியீடு! தற்காப்புத் தத்துவ ஆயுதங்களும் உண்டு, தாக்கும் திறனும் அதற்குண்டு. அது நம் கையில் இருக்கும் வரைதான் பாதுகாப்பு என்பதை மறவாதீர்கள். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

                             ---------------------"விடுதலை” 10-9-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

இடம் இல்லை!
செய்தி: பிரதமர் பதவிக்கு சுஷ்மா சுவராஜ்தான் பொருத்தம்

- பால்தாக்கரே (சிவசேனா)

சிந்தனை: பந்தியிலேயே இடம் இல்லை; இலையில் என்ன பொத்தலாம்?

குறிப்பு: பிஜேபி ஆட்சிக்கு வராது - அத்வானி உபயம். உத்தரவிட்டது யாரோ?

செய்தி: அண்ணா வளைவை உடைக்க நான் உத்தரவிடவில்லை. - முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா

சிந்தனை: அப்படி என்றால் உத்தரவிட்டது யார்?

பேஷ்! பேஷ்!! நல்ல நிர்வாகம்!!! 10-9-2012

தமிழ் ஓவியா said...

தனி ஒழுக்கம்

திராவிடர் கழக சட்டத் துறையின் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம், கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் 8.9.2012 அன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் ஒரு நிகழ்வை நினைவூட்டி னார். மண்டல் குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நீதிபதி களின் (ஜீவன்ரெட்டி, பரி பூர்ணம் அய்யங்கார்) கொடும்பாவிகளை எரித்து - கழகத்தால் நடத்தப்பட்ட போராட்டம் அது. (23.8.1996)

நான் உட்பட கழகத் தோழர்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக் கப்பட்டோம்.

சிறையில் திராவிடர் கழகத் தோழர்கள் நடந்து கொண்ட முறை, கட்டிக் காத்த பண்பாடு சிறை அதிகாரிகளைப் பெரிதும் கவர்ந்தது. மற்ற கைதி களும் மலைத்தனர்.

பகலில் கழகத் தோழர் கள் அனைவரும் ஒரே இடத்தில் தான் இருப்போம். அப்பொழுது கழகக் கொள்கைகள், நடைமுறை கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஒரு நாள் ஒரு கேள் வியை முன் வைத்தேன். உங்களில் எத்தனை பேர் சிகரெட்டு பிடிக்கும் பழக் கம் உள்ளவர்கள் என்பது தான் அந்தக் கேள்வி.

சிகரெட் பிடிப்பதால் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் தனி மனித வாழ்வும் குடும்பமும் எப்படியெல்லாம் நசுங்கிப் போகும்? என்று எடுத்துக் கூறப்பட்டது.

ஏற்கெனவே இந்தப் பழக்கம் உள்ள தோழர்கள் அன்றே அந்தப் பழக்கங் களைக் கைவிடுவது என்று உறுதி எடுத்துக் கொண் டனர். சிறையில் உள்ள தோழர்களைச் சந்திக்கப் பார்வையாளர்கள் வருவார் கள். பல பொருள்களைக் கொண்டு வந்தும் கொடுப் பார்கள். பீடிக் கட்டுகள் கட்டாயம் அதில்இடம் பெறும்.

ஒரு நாள் நமது கழகத் தோழர்களைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் வழக்கம் போல பீடிக் கட்டுகளையும் கொண்டு வந்திருந்தனர்.

சிறை அதிகாரி அவற்றை நம் தோழர்களிடம் எடுத் துச் செல்லுமாறு கூறிய போது, அதிகாரியே திடுக் கிடும் ஒரு சம்பவம் நடந் தது.

அய்யா, நாங்கள் சிகரெட், பீடி பிடிப்பதில்லை என்று முடிவு எடுத்து விட் டோம் - எங்கள் தலைவர் அவர்களின் - அன்பு - அறிவுக் கட்டளை இது! எனவே இந்தப் பீடிக் கட்டு களைத் திருப்பி அனுப்பி விடுங்கள்! என்று சொன் னார்களே பார்க்கலாம்.

சிறை அதிகாரி களுக்கோ அதிர்ச்சி, எங்கள் பணிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவத் தையோ, தோழர்களையோ இப்பொழுதுதான் நாங்கள் முதன் முதலாகப் பார்க்கி றோம் என்றார்களே பார்க்க லாம்.

- மயிலாடன்

குறிப்பு: வேலூர் சிறைக்குள்ளிருந்த தோழர் கள் மட்டுமல்ல, இப்பொ ழுது வெளியில் உள்ள தோழர்களும் இதனை ஏன் கடைபிடிக்கக் கூடாது?

10-9-2012

தமிழ் ஓவியா said...

போதை


மகன்: டாஸ்மாக்கில் விலை ஏற்றமாமே அப்பா?

அப்பா: போதையில், விலை ஏற்றம் எல்லாம் தெரியவாபோகிறது மகனே?
10-9-2012

தமிழ் ஓவியா said...

தற்கொலை ஒரு தீர்வாகுமா?

இன்று உலக தற்கொலை தடுப்பு நாள்!

வேடிக்கைதான்! தற்கொலைகள் மிகவும் அதிகமாக நாளும் பெருகி வருவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது!

மாணவன் அல்லது மாணவி (பள்ளிக்கூட அளவில்) சரியாகப் படிக்கவில்லை என்று தாய் - தந்தை யரோ, ஆசிரியர்களோ கண்டித்தால் உடனே பிஞ்சு உள்ளங்களான இம்மாணவச் சிறார்கள் உடனே வடிடி ளநளேவைஎந தற்கொலைக்கு ஆளாக்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலச் செய்திகள் ஏடுகளில், தொலைக் காட்சி, ஊடகங்களில் அன்றாடம் தவறாமல் இடம் பெறுகின்றன!

முன்பெல்லாம் எப்போதோ வயது - முதிர்ந்தவர்கள் கடன் தொல்லை யிலோ, அல்லது எல்லை மீறிய துயரத்தைத் தாங்க முடியாத காரணத்தாலோ மட்டும்தான் (அபூர்வ மாக) தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருந்தது!

இப்போது...? இம் என்றால் தற் கொலை; ஏனென்றால் தற்கொலை, மிகக் குறைந்த வயதுள்ள பக்குவப் படாத மொட்டும் பூவும், பிஞ்சும்கூட இப்படிப்பட்ட பலவீனங்களுக்கு ஆளாகி விடுவதுதான் எவ்வளவு வேதனை! தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த கட்டத்தில் இப்போது நாளொரு மேனியும் பொழுதொருவண்ணம் இப்போது காசு நிறைய சம்பளம் - வளமை அதிகமான தால் தற்கொலை! முன்பு வறுமை, கடன் தொல்லையால் தற்கொலை - இப்போது நேர் எதிரிடை யான விசித்திர நிலை!

இப்போது கணினிப் புரட்சி வந்து கை நிறையச் சம்பாதிக்கும் நிலை புறத் தோற்றமாக உள்ளது.

அதே நேரத்தில் போட்டி உலகும், அதன் விளைவாக ஏற்படும் மன அழுத்தங்களும் கணினி தவிர, தங்கள் உலகம் தவிர வெளி உலகு, மற்ற மக்களின் கஷ்ட நஷ்டங்கள் வறுமை, வேலையின்மை, பாசப் பிணைப்பின்மை இவைபற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை. அதன் விளைவே இது!

பிஞ்சில் பழுத்து, தற்கொலை எனும் நஞ்சில் வாழ்வை முடித்துக் கொண்டு, சருகாகி பின் உதிராது, தளிராக உள்ளபோதே கருகிக் காய்ந்து வீழ்ந்து விட்டால் பிறகு பூ எங்கே, மொட்டெங்கே, கனி எங்கே?

தமிழ்நாட்டில் மேற்குப் பகுதி மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் சுற்று வட்டார புறநகர் மாவட்டங் களில்தான் தற்கொலைகள் அதிகம் பெருகிடும் வளையங்களாகி உள்ளன என்று இன்று ஒரு செய்தி, ஒரு ஆங்கில நாளேட்டில் வெளிவந்துள்ளது!

அந்தப் பகுதியில் மனநல மருத்துவ மனையொன்றும் தேவை என்பதுபோல எழுதப்பட்டுள்ளது அச்செய்தித் தொகுப் பில்!

மருத்துவமனைகள் பெருகுவதுபற்றி தேவை என்று உணரலாம்!

ஆனால் மனநல மருத்துவமனைகளும் பெருகிட வேண்டுமா? (சிகிச்சைக் கண் ணோட்டத்தில் தவறில்லை என்றாலும் எவ்வளவு வேதனையான செய்தி இது?)

கோவை (அரசு) மருத்துவமனையில் உள்ள மன உளவியல் மருத்துவத் துறையில் நோய்த் தாக்குவது ஒருபுறம். அதிலும் 20 முதல் 35 வயது இளைஞர்கள் இந்த தற்கொலை எண்ணத்திற்கு ஆளா கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமை!

1990இல் மண்டல் கமிஷன் அமலாவது எதிர்த்து டில்லி ஊடக மேதாவிகளே, அப்பாவி மாணவர்களுக்கு விளம்பர ஆசையூட்டி, நெருப்பு வைத்துக் கொண்டு சாவதைப் படம் பிடித்து ஊக்குவித்த சமூகவிரோதச் செயலை எவரே மறப்பர்? இளைஞர்களே, மாணவர்களே, பாதிப்புக்குள்ளான மனமயக்கம் - மனக் குழப்பத்திற்கு ஆளாகி பலியிடும் இளம் வாலிப வாலிபிகளே!

இந்த எண்ணம் கடலில் பெரும் அலை வருவது போன்றது; அப்போது எழுந்து அதிலிருந்து நின்று விட்டால் அது உங்களை இழுத்துச் செல்லாது; தப்பித்துக் கொள்வீர்கள்; இல்லை யேல் அந்த அலை இழுத்துச் சென்று சுழலுக்குள் தள்ளி உயிரைப் பலி கொண்டு விடும்!

கோழைத்தனத்தை விட்டு, மனதில் உறுதி கொள்ளுங்கள்; தோல்வி கண்டு துவளாதீர்கள், நிமிர்ந்து நில்லுங்கள்!

பிரச்சினைகள் இல்லாத வாழ்வும் இல்லை; மனிதர்களும் இல்லை.

அதற்குத் தீர்வுகள் இல்லாமல் இல்லை - எனவே அஞ்சாமல், துஞ் சாமல், அவசரப்பட்டு தற்கொலை குழியில் தள்ளிக் கொள்ளாமல் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

பிரச்சினைகள் கண்டு ஓடாதீர்! ஓதுங்காதீர்!! பதுங்காதீர் - தீர்வு காண துணிவுடனே விடைகண்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

----கி.வீரமணி 10-9-2012

தமிழ் ஓவியா said...

இயக்கத் தோழரின் பாராட்டத்தக்க பணி!

அரக்கோணத்தை மய்யமாகக் கொண்டு; வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள் ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒளிபரப்பாகின்ற உள்ளூர் கேபிள் அலைவரிசையான MPTV (Manpower Media network)-யில், அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர், தோழர் சு. லோகநாதன், தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை 30(Sec) விளம்பரப்பட மாக (பெரியார் வலைக்காட்சியின் உதவியுடன்) தயாரித்து, 07.09.2012 முதல் ஒளிபரப்பி வருகிறார். அது மட்டுமல்லாமல், தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17இல் பெரியார் திரைப் படத்தையும் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகிறார். காலத்திற்கேற்ற இந்த பிரச்சார உத்தியை மற்ற மாவட்ட இயக்கத் தோழர்களும் பின்பற்றலாமே!11-9-2012