ஆசிரியர் அவர்களின் நலம் என்பது இந்தச் சமுதாயத்துக்கான நலம் உடல் நலம் பேணி நீண்ட காலம் வாழ வேண்டும் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா.நன்னனின் கனிவுரை
நம் ஆசிரியர் வீரமணி அவர்களின் உடல்நலம் அவருக்காக அல்ல. நமது சமுதாயத்துக்காகவே அவர் உடல் நலம் பேணப்பட்டு நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கனிவான உரையாக வழங்கினார் பெரியார் பேருரையாளர் மா.நன்னன்.
விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அரை நூற் றாண்டு (50 ஆண்டுகள்) பெருவிழா சென்னை - பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் 25.8.2012 அன்று காலை நடைபெற்றது.
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா.நன்னன் அவர்கள் நிகழ்ச்சியில் தொடக்கவுரை யாற்றினார்.அவரது உரை வருமாறு:
வணக்கம் என்பது ஆரியத்திலிருந்து வந்த அழுக்கு!
அன்பார்ந்த தலைவர் அவர்களே, இந்த விழாவில் பல்வேறு பொறுப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கின்ற, உரையாற்ற இருக்கின்ற பெருமக்களே, அவையிலே வீற்றிருக்கின்ற அருமை தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம் சொல்வது எனக்குப் பிடிப்பதில்லை. வணக்கம் சொல்லக்கூடாது என்று நினைக்கின்றவன். மனிதனுக்கு மனிதன் வணக்கம் சொல்வது தேவையற்றது.
வாழ்த்தலாம், வரவேற்கலாம், அன்பு காட்டலாம். அதைவிட்டுவிட்டு ஏன் வணங்க வேண்டும், கூடாது. நான் என் பையனை வணங்குவது, என் பெயரனை வணங்குவது, கொள்ளுப் பெயரன் ஆகியோரை நான் வணங்கவேண்டுமா? இது ஆரியத்திலிருந்து நமக்கு வந்து சேர்ந்த அழுக்கு. அவன்தான் நாம் எல்லாம் அவனை கும்பிட வேண்டும் என்று நமஸ்காரம் என்று சொன்னான்; தமிழியக்கம் வந்தபோது, நமஸ்காரத்தை வணக்கம் என்று மொழி பெயர்த்தார்கள். அது எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது, எப்படி வந்தது என்கிற கவலையில்லாமல், எல்லோரும் வணக்கம், வணக்கம், வணக்கம் என்று சொல்கிறார்கள்.
பகுத்தறிவாளர்களாகிய நாம் அதைப்பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும் என்று இந்த அவையில் என் வேண்டுகோளாக வைக்கின்றேன்.
பகுத்தறிவாளருக்குத்தான் முதன்மை
இரண்டாவது வேண்டுகோளையும் வைக்கிறேன்,
சால்வை போர்த்துவதைப்பற்றியும் நான் சொல்ல விரும்புகிறேன். அறிவுக்குத்தான் முதன்மை, பகுத்தறிவாளருக்குத்தான் முதன்மை. ஆகவே அதனைப்பற்றியும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று உங்களை மிக அடக்கத்தோடு வேண்டிக் கொள்கிறேன். (இந்த முறை திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே பின்பற்றத் தொடங்கபட்டு விட்டது.)
என்னென்ன செய்தோம் என்பதை புத்தகமாக அச்சிட வேண்டும்
மூன்றாவது வேண்டுகோளையும் வைக்கிறேன். திராவிடர் இயக்கத்துக்கு நடேசனார் காலம்முதல் டாக்டர் நாயர், பிட்டி தியாகராயர், பெரியார், அண்ணா, கலைஞர், நம்முடைய ஆசிரியர் இவர்களுக்கு வந்த பிரச்சினைகள் என்னென்ன?
நமது ஏடுகள், ஜஸ்டிஸ், சுயமரியாதை, பகுத்தறிவு, விடுதலை, பிஞ்சுகள் வரை ஆகியவற்றுக்கு வந்த பிரச்சினைகள், திராவிட இனத்துக்கு வந்த பிரச்சினைகள் இவற்றிலிருந்தெல்லாம் இந்த இயக்கம் எப்படி எப்படியெல்லாம் செயல்பட்டு பயன் அடைந்து இருக்கிறது என்பதை எழுதி வைக்கவேண்டும்.
விடுதலைக்கு அய்யா என்ன செய்தார், யார் யார் என்னென்ன செய்தார்கள் என்றால், யாருக்குத் தெரியும்? ஆசிரியருக்குத்தான் தெரியும். அந்தப் பாதையைப் பின்பற்றுகிறார். நமக்கெல்லாம் தெரிந்த ஒரே ஒரு காரணம், ஆசிரியர் தலையங்கம் எழுதுவதைப்பற்றி அய்யாவிடம் கேட்டபோது, இந்து தலையங்கத்திற்கு நேர்மாறாக எழுது என்று அய்யா யோசனை கூறினார்.
திராவிடர் கழகத்திற்கு முடிவே கிடையாது
இது ஆசிரியர் அவர்கள் சொல்லி, எங்களுக் கெல்லாம் தெரியும். நாளைக்கு வரப் போகின்ற தலைமுறைகளுக்கு எப்படித் தெரியும்?
இந்த இயக்கம் அழியாது! திராவிடர் இயக்கத்திற்கு அழிவு கிடையாது. திராவிட இனம் அழிந்தால், திராவிட நாடு அழிந்தால், அப் போது கூட இந்த இயக்கம் புதிய நாட்டை உண்டாக்கி, புதிய திராவிடர்களை உண்டாக்க முயற்சி செய்வார்களே தவிர, இதற்கு முடிவே கிடையாது. ஏனென்றால், இது ஒரு இயற்கையான இயக்கம். திட்டமிட்டு நான்கு பேர் கூடி, கட்சி தொடங்கி, அடுத்த தேர்தலில் நாம் நின்று, யார் முதலமைச்சராக வருவது? இரண்டாவது அமைச்சராக வருவது யார்? டில்லிக்குப் போவது யார்? இந்த மாதிரிதான் நாட்டில் உள்ளன.
ஆனால், திராவிடர் இயக்கம் மாதிரி ஏதாவது ஒரு கட்சியை யாராவது தொடங்கி இருக்கி றார்களா? இயற்கையின் தேவையையொட்டி, இயற்கையாக தோன்றிய ஒரு இயக்கம் திராவிடர் இயக்கம்.கம்யூனிசத்தைகூட என்னால் அப்படி கணக்குப் போட முடியவில்லை.
எனக்குத் தெரிந்தவரையிலே இப்படி இயற்கை யாக, இயல்பாக, இயற்கையின் தேவையையொட்டி தொடங்கப்பட்ட இயக்கம் திராவிடர் கழகம். இந்த இயக்கம் என்றென்றைக்கும் இருக்கும். இதனுடைய தேவைகள் மாறிக்கொண்டே இருக்கும். இப்போது நாம் சொல்வதெல்லாம் நிறைவேறிவிட்டதா? எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.
அப்போது எவ்வளவோ பிரச்சினைகள் வரும், அதற்கெல்லாம் தீனி போடவேண்டிய நம்முடைய இயக்கத்திற்கு மட்டும்தான் தகுதி உண்டு. ஆகவே, அந்த இயக்கத்திற்கு, பின்னால் வருகின்றவர்களுக்கு, ஆசிரியர் அவர்களே உங்கள் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய வைத்திருப்பீர்கள்; அதிலே நீங்கள் இதற்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என்றைக்குமே விடுதலை ஆசிரியராக நீங்களா இருக்கப் போகிறீர்கள். எல்லோரும் வாழ்த்துவார்கள்; நானும் வாழ்த்துகிறேன். ஆனால், உண்மை அதுவல்ல.
அவர்களுக்குத் தெரியவேண்டும்
விடுதலை அலுவலகத்தில் வந்து உட்காரும் போது, விடுதலைக்கு ஒரு பிரச்சினை வந்தால், திகைக்கக்கூடாது, எடு நம்ம புத்தகத்தை, அப்போது எப்படி இருந்தது, இந்தப் பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது? என்று அவர்களுக்குத் தெரிய வேண்டும்.
நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே, அய்யா வழிதான் எங்கள் வழி, அய்யா வழிதான் எங்கள் வழி என்று. உங்களுக்குத் தெரிகிறது அய்யா வழி - நாளைக்கு வருகின்றவர்களுக்கு தெரியும் என்று எப்படிச் சொல்ல முடியும்? நான்காவது தலை முறையில் வருகின்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நம்மால் கணக்குப் போட முடியாது.
ஆகவேதான் சொல்கிறேன், அப்படி ஒரு புத்தகத்தை இயக்கத்திற்கும், ஏடுகளுக்கும் நம்மு டைய திட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் எந்தெந்த சூழ்நிலையில், எப்படி எப்படி அதிலிருந்து நாம் மீண்டோம் என்பதை எழுதி, பகுதி பகுதியாகப் பிரித்து ஒரு நல்ல நூலாகக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்காக நீங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தருள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கே திரு. சாமிதுரை அவர்கள் வரவேற்புரை யாற்றினார்கள் என்று நான் சொல்லமாட்டேன்; வரவேற்றார்கள் என்றுதான் சொல்வேன். இங்கே 50 ஆண்டுகாலம் என்று சொல்வதைவிட அரை நூற்றாண்டு என்று சொன்னால், அது நிறைவாக இருக்கின்ற மாதிரி எனக்குத் தெரிகிறது. நம்முடைய இயக்கம் நடேசனார் காலமாக இருந்தாலும் சரி, யாருடைய காலமாக இருந்தாலும் சரி, திட்டமிட்டுத் தொடங்கப்படவில்லை. நடேச னாரும், நாயரும், தியாகராயரும் மூன்று பேரும் சேர்ந்து, இன்னும் நான்கு பேரைச் சேர்த்துக் கொண்டு நாம் என்ன கட்சி தொடங்கலாம்? என்ன பெயர் வைக்கலாம்? என்ன பெயர் வைத்தால் மக்கள் மத்தியில் விறுவிறுப்பாக இருக்கும்.
இயல்பாய் தோன்றிய இயக்கம்
பசங்களுக்குச் சாப்பிடுவதற்கு இடம் இல்லை என்கிறார்களே! பள்ளிக்கூடத்திலே விட மாட்டேன் என்கிறார்களே! இப்படித்தானே நினைத்தார்கள்; நினைத்திருப்பார்கள். அதுதான் இயற்கை. இயல்பாய் தோன்றிய இயக்கம் நம்முடைய சுய மரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம். மற்றதெல்லாம் கம்பளி பூச்சியை இதிலே சேர்க்கிறார்கள். என்ன அது கம்பளி பூச்சி?
கம்பளிப் பூச்சியை யாரும் சாப்பிடுவதில்லை
அண்ணா அவர்கள் அன்று சொன்னார்: முருங்கை மரத்திலுள்ள கீரை, முருங்கைக்காயை சாப்பிடுகிறோம்; முருங்கைப் பட்டையைக்கூட மருந்துக்குப் பயன்படுத்துகிறோம். முருங்கை மரத்தில் இருக்கின்றது என்பதற்காக கம்பளி பூச்சியை யாரும் சாப்பிடுவதில்லை என்று சொல்லியிருக்கிறார்.
திராவிடர் கழகம் என்ற மரத்திலே தோன்றிய கம்பளிப் பூச்சிகள் உண்டு. அந்தக் கம்பளிப் பூச்சிகளை இங்கே நான் குறிப்பிடவில்லை. இயற் கையாக தோன்றியது இந்த அமைப்பு. இயற்கை என்றாலே தேவையானது என்பது பொருள். தேவையானதுதான் இயல்பாக இருக்கும். அதற்கு அழிவு என்பதே கிடையாது.
நம்முடைய பகுத்தறிவு ஆராய்ச்சியில், கடவுளைபற்றியெல்லாம் எண்ணுகிற போது, இந்தக் கால தத்துவம், இயற்கை, செயற்கை என்று எண்ணிக் கொண்டு வரும்பொழுது, ஏற்படுகின்ற அந்தத் தெளிவு, இதிலும் எனக்கு ஏற்பட்டது. நான் அதைப்பற்றி எண்ணி, எழுதியும் இருக்கிறேன். இயக்கத்தைப்பற்றி எழுதும்போது, இயற்கையிலே தொடங்கி எழுதியிருக்கிறேன். அப்படி எழுதுகிறபோது, இயற்கை அழிவற்றது; மாறலாம்; திரியலாம் (பால் திரிவதுபோல); ஆனால், அழியாது. இயற்கை என்றைக்குமே அழியாது, அழியவும் முடியாது.
இயற்கை அழிந்தால் என்ன ஆகும்? யாருக்குத் தெரியும்? இயற்கையையே ரொம்பப் பேருக்குப் புரியாது. செடி முளைப்பது, மழை பெய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே தோழர்களே, அந்த இயக்கம் இயல்பாக தோன்றிய ஓர் அமைப்பு. ஆகவே, அதற்கு முடிவு இருக்காது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் என்று சொல்லும்பொழுது எனக்கு ஒன்று தோன்றுகிறது. தொல்காப்பியத்திற்குப் பல பேர் உரை எழுதி இருக்கிறார்கள். அதிலே ஒரு வருக்கு என்ன பெயர் தெரியுமா? பேராசிரியர் என்று பெயர். எல்லா உரையாசிரியரும், பேராசிரியர் சொன்னார், பேராசிரியர் சொன்னார் என்று சொல்கிறார்கள். அதற்காக அவர் என்ன தோன்றும் பொழுதே பேராசிரியராகவா இருந்திருப்பார். இல்லை, அவர் பெயரை யாரும் சொல்லவேண்டிய தேவை இல்லாத வகையில், பேராசிரியர் என்ற பெயர் தமிழ் அறிவுலகம் முழுவதும் பரவி நிலைத்து வலுவாக இருந்துவிட்டது.
ஆசிரியர் என்று சொன்னால், இவர் ஒருவரைத்தான் குறிக்கும்
அதுபோல, ஆசிரியர் என்று சொன்னால், பள்ளிக்கூட ஆசிரியர்கள், நாடக ஆசிரியர், வேறு சில ஆசிரியர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், யாரை வேண்டுமானாலும் கேளுங்கள், ஆசிரியர் என்று சொன்னால், இவர் ஒருவரைத் தான் குறிக்கும் (பலத்த கைதட்டல்). பேராசிரியர் என்று சொன்னால், தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களைக் குறிக்கும்.
அது திட்டமிட்டு வருவது இல்லை. திராவிடர் கழகத்தில் தீர்மானம் போட்டா ஆசிரியர் என்று சொன்னார்கள். முதன்முதலில் அவரை அலுவலகத் தில் பார்க்க வந்த கட்சிக்காரர்கள், உள்ளே இருக்கிறாரே, அவர்தான் விடுதலை ஆசிரியர் என்று சொல்லியிருப்பார்கள்.
கைகளை உயர்த்தி படபடவென்று பொரிந்து தள்ளுவார்
இயக்கத்திலே அவர்கள் செல்லப் பிள்ளைபோல் வந்தார்கள்; அவர் குழந்தையாக இருந்து பேசும் பொழுது, கூட பேசினவன் நான். மேசைமேல் டீப்பாய் ஒன்று போட்டு, இவரை அதன்மேல் ஏற்றி விடுவார்கள். இவர் கையை உயர்த்தி படபட வென்று பொரிந்து தள்ளுவார். எல்லோரும் ஆவென்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர் பேசிய பிறகு மற்றவர்கள் எல்லாம் பேசுவார்கள். கூட்டம் முடிவதற்குள் இவர் தூங்கி விடுவார். கூட்டம் முடிந்து போகும்போது இவரை யாராவது தூக்கிக் கொண்டு போவார்கள். இவருக்கு நினைவு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போதிருந்தே இவரை எனக்குத் தெரியும். வந்த மாட்டையும் கட்டுவதில்லை; போன மாட்டையும் தேடுவதில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்.
திராவிட செல்வத்தை அன்பாலே கட்டிப் போட்டார்
என்னையே நம்பி நான் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு வருகிறேன். இவரை எப்படி கட்டிப் போட்டார் பார்த்தீர்களா? வந்த மாட்டை கட்டுவதில்லை என்று சொன்னாரே! மாடு என்றால் செல்வம் என்று இன்னொரு பொருள். இந்த செல்வத்தை, இந்த திராவிட செல்வத்தை அன்பாலே கட்டிப் போட்டுவிட்டார்.
அப்படிப்பட்ட பெரியார் அவர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்த இயக்கத்திற்கு இன்றியமையாதவர்; தேவையானவர் என்பது பொருந்தாது. இன்றியமையாதவர் என்பதை அய்யா முடிவு செய்து, இங்கே இவரை அமர்த்தி யிருக்கிறார். ஆசிரியர் அவர்களுக்கு விடுதலை ஆசிரியர் பொறுப்பை கொடுத்ததுபோல, வேறு யாருக்காவது இது மாதிரி பொறுப்பை கொடுத் திருக்கிறாரா? என்று நினைத்துப் பார்த்தேன்.
பெட்டிச் சாவியை அண்ணாதுரையிடம் கொடுக்கின்ற மாநாடு
1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் பெட்டிச் சாவியை அண்ணாதுரை யிடம் கொடுக்கின்ற மாநாடு என்று அம் மாநாட்டுக்குப் பெயர். நான் அரசாங்க வேலையில் இருப்பதால், சி.அய்.டி.யைப் போட்டு என்னை கண்காணித்து வந்தனர். அதனால் நான் கறுப்புச் சட்டை அணிவதில்லை. மாநாட்டுக்கு நான் சென்றபோது, நீதியரசர் மோகன் அவர்கள் அப்போது என்னிடம் சொன்னார், கறுப்புச் சட்டை அணியவில்லை என்றால், உள்ளே விடமாட்டார்கள் என்றார். துண்டு ஒன்றை வாங்கிப் போர்த்திக் கொண்டு மாநாட்டிற்குச் சென்றேன்.
சுவையான ஆராய்ச்சியாக இருக்கும்
ஆனால், அண்ணா அந்தப் பெட்டிச் சாவியை அய்யாவைக் கேட்காமல் நான் திறக்கமாட்டேன் என்கிறார். சாவி கொடுத்திருக்கிறார், ஆனால், அவரை கேட்காமல் நான் திறக்கமாட்டேன் என்று நல்ல பிள்ளையாக அறிவித்தார்.
அய்யா அவர்கள் எத்தனை நிகழ்ச்சிகளிலேயே, எத்தனைப் பேர்களிடத்திலே தகுதி அறிந்து விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தால், அது ஒரு சுவையான ஆராய்ச்சியாக இருக்கும்.
அவர் பிடித்த பிடி தளராது இருப்பதில்லை. கோட்பாடு, கொள்கை, நடைமுறை அதிலெல்லாம் சரி; மக்கள் நலன், திராவிடர் இனத்தினுடைய வாழ்வு, இயக்கத்தினுடைய வாழ்வு, இயக்கத் தோழர்களைப்பற்றிய பிரச்சினை இப்படிப்பட்ட பிரச்சினை வருகிறபொழுதெல்லாம், மிகத் தாராளமாக விட்டுக் கொடுப்பார். அவருக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும்கூட விட்டுக் கொடுப்பார். நாசமாப் போங்க அப்படின்னு சொன்னார் என்றால், சரி என்று அர்த்தம்.
பெரியார், பெரியாராகவே இருக்கிறார்
வெளியில் இருக்கின்ற பல பேர், அய்யா அவர்களைப்பற்றி சொல்லும்போது, சர்வாதிகாரி அப்படி, இப்படி என்று சொல்லுவார்கள்.
எதிலே சர்வாதிகாரம் இருக்கவேண்டும்; எதிலே மற்றவர்கள் கருத்தை பரிசீலித்து ஏற்கவேண்டி யதை ஏற்கவேண்டும்; எதிலே ஏற்க வேண்டாததாக இருந்தாலும், பொது நன்மை கருதி இப்போதைக்கு நாம் ஏற்கவேண்டும் எல்லாவற்றிலும் அவர் பெரியார், பெரியாராகவே இருக்கிறார் (பலத்த கைதட்டல்).
அய்யா அவர்கள், ஆசிரியரது ஏகபோகத்தில் உள்ள விடுதலை அலுவலகத்தை ஒப்படைக்கிறேன் என்று ஆசிரியரிடத்திலே சொன்னாரே, அந்த மொழி, பெரியார் வாயிலிருந்து வந்த மொழி என்பதை, பெரியாரைப்பற்றி நெருங்கி இருந்து தெரிந்துகொள்ளாத பெரியாருடைய சொந்தங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
எனக்கு உடம்பெல்லாம் நடுங்குகிறது
ஆசிரியருடைய திறனை நாம் புரிந்து கொண்டி ருப்பதைவிட, இந்தத் திறமையைத் தேர்ந்தெடுத்த அந்தப் பெரியாரியலை, பெரியாரின் அந்தப் பண்பை எண்ணிப் பார்க்கும்பொழுது, எனக்கு உடம் பெல்லாம் நடுங்குகிறது.
எப்படிப்பட்ட கூர்ந்த மதி; ஆயிரம் பேர் நிற்கிறார்கள், அப்படி கையை நீட்டி இவரைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால்,
எத்தனைப் பேர் வந்திருப்பார்கள், நான் இங்கே வேலை செய்கிறேன் என்று. ஏன் நான்கூட கொஞ்ச நாள் போயிருந்தேன், நான்கு மாதமோ, ஆறு மாதமோ இருந்தேன்; இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று அய்யா அவர்களுக்கு தெரிந்து எனக்கு ஒரு வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டார். ஜோலார் பேட்டை பார்த்தசாரதிதான் இதற்குச் சாட்சி.
கரிவரதசாமி
நான் படித்து முடித்த கையோடு, பெட்டி படுக்கையோடு, அய்யா பின் வந்தேன். அப்போது அய்யாவுடன் கஜேந்திரன் இருந்தார் அய்யாவின் அணுக்கத் தொண்டராக இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக நான் இருந்தேன்.
குடிஅரசுப் பத்திரிகையில் கரிவரத சாமி என்பவர் இருந்தார். இப்ப நினைத்தாலும் எனக்கு அவரை நினைத்தால் பயமாக இருக்கிறது. குடிஅரசு அலுவலகத்தில், ராத்திரி முழுவதும் தண்ணீர் தொட்டியில் விழுந்து நிரம்பி இருக்கும். அதில்தான் நான்கைந்து பேர் குளிக்க வேண்டும். காலையில் தொட்டியில் உள்ள தண்ணீரை அளந்து பார்ப்பார். தண்ணீர் குறைந்தால் உடனே திட்டுவார். அவர்கிட்ட என்னாலே காலம் தள்ள முடியாது என்று நினைத்து, அய்யா நான் உங்கள் கூட வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். இப்படித்தான் இரண்டொரு பிழைகளை நான் செய்தேன்.
அய்யா அவர்கள் இதனைப் புரிந்துகொண்டு, என்னை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அப்படிப்பட்ட அய்யா அவர்கள், இவருக்குத் தொழில் போனாலும் பரவாயில்லை, கட்சிக்கு வந்தால் தேவலாம் என்று நினைக்கிறார் என்றால், அவருடைய திறமைக்கு வேறு எதுவும் நிகரல்ல.
ஆசிரியர் அவர்களே, அய்யாவின் வாயாலே இப்படி பாராட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏகபோக உரிமையை அய்யா அவர்கள் கொடுத்திருக்கிறார்.
ஆசிரியர் அவர்களும், இன்றுவரையில் அய்யா வின் கோட்பாடுகளுக்கு மாறாமல் எழுதிக் கொண்டும், இயக்கத்தை நடத்திக் கொண்டும் வருகிறார். இப்படிப்பட்ட ஆசிரியர் அவர்கள், ஒரு 50 ஆண்டுகாலம் சிறப்பாக இந்த இயக்கத்தையும், ஏட்டையும் இயக்கிக் கொண்டு வருகிறார். அவர் களுக்கு நான் வைக்கும் நான்காவது வேண்டுகோள்,
உங்கள் நலம் உங்களுக்கல்ல; எங்களுக்கு உரிமையுடையது
ஆசிரியர் அவர்கள் தன்னுடைய உடல்நலத்தை கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு பார்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் நலம் உங்களுக்கல்ல; எங்களுக்கு உரிமையுடையது. நீங்கள் அலட்சியமாக இருந்தால், இந்தச் சமுதாயம் புறக்கணிக்கப் பட்டதாகப் போய்விடும்.
திராவிடர் கழகம்போல சமுதாயப் பிரச்சி னைகளிலே நேருக்கு நேராக சந்திக்கக் கூடிய ஒரு அமைப்பு வேறு எங்கே இருக்கிறது. நாட்டுக்கு சங்கதிகளை சொல்கிறார். சங்கதி என்ற வார்த் தைகூட அய்யாவின் வார்த்தை.
திராவிடர் கழகத்திற்கு உள்ள ஒரே நலம், இனநலம்தான்
திராவிடர் கழகத்திற்கு ஏதாவது ஆசை, சுயநலம் ஏதாவது உண்டா? மற்ற எல்லா இயக்கத்திற்கும், கட்சிகளுக்கும் உண்டு. ஆனால், திராவிடர் கழகத்திற்கு உள்ள ஒரே நலம், இனநலம்தான். திராவிட இனம், அதைவிட விரிவாக மனித இனம். நம்ம இயக்கத்திற்கு, நம்முடைய எதிரிகள் - இன எதிரிகள், மற்றவர்களுக்கு உள்ள எதிரிகளுக்கும், நம் எதிரிகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நம்முடைய எதிரிகள் நம்மோடுதான் இருக்கிறான்.
இனி இப்படியொருவர் தோன்றுவாரா....?
இந்த நல்ல நாளிலே நம் ஆசிரியர் அவர்கள் 50 ஆண்டுகாலம் தம்முடைய பணியை பாராட்டத்தக்க முறையில், இனி இப்படியொருவர் தோன்று வார்களா என்று நினைக்கும்படியாக பணியாற்றி இருக்கிறீர்கள். ஆசிரியர் அவர்களே, நீங்கள் நலமுடன் வாழவேண்டும். அந்த நலன் எங்களுடைய நலன்; இந்த சமுதாயத்தினுடைய நலன். ஆகவே நீங்கள் அதனைப் பேண வேண்டும் என்று சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
- இவ்வாறு முனைவர் மா.நன்னன் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.
Search This Blog
6.9.12
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்!
பொன் முட்டையிடும் வாத்தான நவரத்னா அங்கீகாரம் பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நெய்வேலி நகரத்தில் 10.9.2012 திங்கள் காலை 11 மணிக்கு பெரியார் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், புதுவை, அரியலூர் மாவட்டங்களின் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
பதவி உயர்விலும் இடஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி.களுக்கு அளிப்பதும் வரவேற்கத்தக்கது பிற்படுத்தப்பட்டவருக்கும் அளிப்பது ஏற்புடையதே! கழகத் தலைவர் வீரமணி அறிக்கையைச் சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை
சென்னை, செப். 6- தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத் தப்பட்டவருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
கலைஞர் அவர்கள் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் தற்போது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக் கப்படுகிறது. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிக்க அலகாபாத் உயர்நீதி மன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றமும் தடை விதித்த காரணத்தால், நாடாளு மன்றத்தில் அதற்காக சட்டம் இயற்ற மத்திய அரசு தீர்மானித்தது. ஆனா லும் கடந்த சில நாட்களாக நாடாளு மன்றம் அன்றாடம் முடக்கப்படும் நிலையில், பதவி உயர்வில் இட ஒதுக் கீடு அளிக்க வகை செய்யும் மசோதா வினை இந்தத் தொடரில் நிறைவேற்ற இயலுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பதவி உயர்விலும் அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத் திருத்தத்தை நமது அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. அவர் அளித்த பேட்டி யிலே கூட இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் அமளி நிலவிய போதிலும், அதற்கு மத்தியில் அரசுப் பணிகளில், பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவை யில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத் திருத்தத்தை சமாஜ்வாடி கட்சியும், அதன் தலைவர் முலாயம் சிங் அவர்களும் எதிர்த்திருக்கிறார் கள். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், மலைவாழ் மக்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லவில்லை, அவர் ளோடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து அந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வில்லையே என்று தான் கேட்டிருக்கிறார். இது நமக்கும் ஏற்புடைய கொள்கைதான். இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நமது கழக நாடாளு மன்றக் கட்சித் தலைவர் தம்பி டி.ஆர். பாலு இதனை வற்புறுத்தியிருக்கிறார்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி
இதைப் பற்றி திராவிடர் கழகத் தலைவர், மானமிகு இளவல் கி. வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கை ஒன்றையும் இன்று விடுத்துள்ளார். மசோதா மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அமளி தொடர்ந்து அவையை ஒத்தி வைத்து உள்ளார்கள். மழைக்காலக் கூட்டத் தொடர் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த நிலையில் இந்த முக் கியமான மசோதா நாடாளுமன்றத் தில் நிறைவேற அனைத்துக் கட்சி களும் தங்கள் ஒத்து ழைப்பை நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள் கிறேன். - இவ்வாறு கலைஞர் அவர் கள் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு நதி பின்னோக்கி ஓடுமா?
எழுத்துரு அளவு
ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை அய்சக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி நதியானது சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம்.
மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.
இதன் விளைவாக கடல் நீர் பெரும் பிரவாகமென நதிக்குள் புகுந்தது. இதன் விளைவாக நதி நீரும் கடல் நீரும் சேர்ந்து பின்னோக்கிச் சென்றன. இது நதியின் போக்கையே மாற்றியது. சாதாரண நாட்களில் மிஸ்ஸிஸிபி நதியில் கடலை நோக்கி வினாடிக்கு1,25,00 கன அடி வீதம் நீர் பாய்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் புயல் தாக்கிய போது கடலிலிருந்து நதிக்குள் வினாடிக்கு 1,82,000 கன அடி வீதம் வெள்ள நீர் பாய்ந்தது. இது நதியை பின்னோக்கி ஓடும் விளைவை ஏற்படுத்தியது. புயல் வெள்ளம் நதிக்குள் பாய்ந்ததன் விளைவாக நதியின் நீர் மட்டம் வழக்கத்தை விட 10 அடிக்கும் அதிக மாக உயர்ந்தது. நதியில் பெல்லி சாஸே என்னுமிடத்தில் உள்ள அளவுமானிகள் இவை அனைத்தையும் பதிவு செய்து காட்டின.
பொதுவில் நதி முகத்துவாரப் பகுதியில் புயல் தாக்கினால் தற்காலிக அளவில் நதி பின்னோக்கி ஓடுவது சகஜமே. கடந்த 2005 ஆம் ஆண்டில் இதே வட்டாரத்தை கேத்ரினா என்னும் பெயர் கொண்ட பயங்கரப் புயல் தாக்கிய போது இதே போல மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது. அப்போது நதி நீர் மட்டம் வழக்கத்தை விட 14 அடி அதிகமாக இருந்தது.
மிஸ்ஸிஸிபி நதி கடலில் கடக்கும் இடத்தில் அமைந்த நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களுக்கு புயல் என்றாலே பெரும் பீதி தான். காரணம் இந்த நகரமும் சுற்று வட்டாரப் பகுதிகளும் கடல் மட்டத்தை விடத் தாழ்வாக உள்ளன. கடல் பொங்கினால் கடல் நீர் நகருக்குள் புகுந்து விடாமல் தடுக்க மிக விரிவான அள்வில் ஏரிக்கரை போல நெடுக நல்ல உயரமான தடுப்புக் கரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் தாக்கி கடல் நீர் வெள்ளமெனப் பாயும் போது இந்த தடுப்புக் கரைகளையும் தாண்டி நகருக்குள் வெள்ளம் புகுந்தால் பெரும் பிரச்சினை தான். கட்ரினா புயல் தாக்கிய போது நகரம் வெள்ளக்காடாகி பல வார காலம் தண்ணீரில் மிதந்தது. நதி ஒன்று பின்னோக்கி ஓடுவதற்கு புயல் ஒன்று தான் காரணம் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்த மிசவுரி மாகாணத்தில் மிஸ்ஸிஸிபி நதிக் கரையில் நியூ மாட்ரிட் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரம் அமைந்த வட்டாரத்தில் 1812 ஆம் ஆண்டில் கடும் பூகம்பம் நிகழ்ந்தது. அப்போதும் மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது.
உங்களுக்குத் தெரியுமா?
பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு.அய்யரால் ஜாதிவெறியுடன் நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலம், மலேயா நாட்டுத் தமிழர்கள் அளித்த ரூ.20 ஆயிரம் நன்கொடையால்தான் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?
திருவண்ணாமலை என்றாலே தீபம் எல்லார் நினைவிற்கும் வரும் _தற்போது நித்தியாநந்தா நினைவுக்கு வருவது வேறு!
அந்தத் தீபத்திற்கு ஒரு புராண கதை உண்டு.
சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலையுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவாய் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே பறவையாகவும், பன்றியாகவும் தோன்றினர் என்பதே அப்புராணம்.
அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாய்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
நிகழ்விற்கான காரணம் புரியாதவர்கள், தங்கள் கற்பனையான காரணங்களைச் சொல்லிப் புனைந்தவையே புராணங்கள்.
சூரிய கிரகணம், சந்திர கிரஹணம் இரண்டிற்கும் காரணம் புரியாதவர்கள், திருப்பாற்கடல் கடைந்து, அமிர்தம் கிடைத்தது, இராகும் கேதும் தெரியாமல் உண்டன. அதைச் சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்தன, அதை விஷ்ணு தண்டித்தார், அதனால் ஆத்திரமுற்ற இராகு கேது ஆண்டுக்கொருமுறை சந்திரசூரியனோடு சண்டையிடுவதே மேற்கண்ட இரண்டு கிரஹணங்கள் என்றது புராணம். ஆனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுவது சந்திர கிரஹணம், பூமியின் குறுக்கே சந்திரன் வருவது சூரிய கிரஹணம் என்றது அறிவியல். அறிவியல் கூறியது உண்மையானது. புராணம் பொய்யானது.
இதேபோல், திருவண்ணாமலையில் நிகழ்ந்த உண்மை தெரியாது, அதற்கு புராணம் எழுதினர். அயல்நாடுகளில் அடிக்கடி நிகழும் எரிமலை வெடிப்பு இந்தியாவில் இல்லை. காரணம் இது (தமிழகம் - இந்தியா) நில மாற்றங்கள் பல நிகழ்ந்து வலுப்பெற்ற பூமி. ஆகவேதான் இங்கு நிலநடுக்கமும் அதிகம் இல்லை. எரிமலை வெடிப்பும் இல்லை.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது திருவண்ணாமலை. அறிவியல் ஆய்வுப்படிச் சொல்லவேண்டுமானால் இமயமலை. உருவாவதற்குமுன் உருவான மிகப் பழமையான மலை திருவண்ணாமலை.
புராணக் கதையின் அடிப்படையை ஆய்வு செய்த நான், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு உண்மையை ஊகித்து கவிதையில் சொன்னேன். அதன்பின் விடுதலை நாளேட்டில் கட்டுரையாய் எழுதினேன்.
சிவன் பூமிக்கும் வானுக்கும் நெருப்பாய் நின்றார் என்று புராணம் சொல்வதால், உண்மை நிகழ்வு என்னவாய் இருக்கும் என்று சிந்தித்த எனக்கு அங்கு மிகப் பெரிய அளவில் எரிமலை வெடித்திருக்க வேண்டும். அதன் காரணம் புரியாதவர்கள், கடவுள் சோதியாய் எழுந்ததாய் எண்ணியிருப்பர் என்றும், கனிம வளத்துறை அல்லது, நிலவியல் துறை அறிஞர்கள் ஆய்வு செய்தால் நான் கூறுவது உண்மை என்பதை உறுதி செய்யலாம் என்று எழுதினேன். இதோ அந்தக் கவிதையும், விடுதலைக் கட்டுரையின் பகுதியும்:
திருவண்ணாமலை
மண்மூட வேண்டிய
கண்மூடி வழக்கங்கள்
விண்முட்டி எரிகின்ற
விபரீத நிலை
விரயத்தின் உலை!
எரிமலை வெடிப்பின்
இயல்பறியா மக்கள்
அரிபிரம்மன் காணா
அரன் (அழல்) வடிவு என்றார்.
அடிக்கடி வெடிக்கும்
அயல் நாட்டிலெல்லாம்
படியளக்கும் பரமனென்று
பக்தி கொள்வதில்லை!
கிரிவல ம(கி)டைமை என்னும் தலைப்பில் 17.04.2001 முதல் மூன்று நாள்கள் விடுதலையில் நான் எழுதிய கட்டுரையில்.
எரிமலை வெடிப்பு சிவன் நெருப்பாக நின்றார் என்று திரிக்கப்பட்டது...
மலையிலிருந்து நெருப்பு வெடித்து வெளிவந்ததும் இறைவன் ஜோதியாய் நிற்கிறார் என்று வணங்கினர். அதையொட்டி அருணாசல புராணம் எழுதப்பட்டது. ஆக, திருவண்ணாமலை என்பது எரிமலை வெடிப்பின் விளைவாகும்.
பெருஞ்சுடராக நெருப்பு வெளிப்பட்டதால், அதைக் கொண்டாட மலை உச்சியில் பெரும் தீபம் ஏற்றினர். காரணம் எரிமலை வெடிப்பு மலையுச்சியில் தான் நிகழும்.
திருவண்ணாமலை மண்ணை அகழ் ஆய்வு செய்தால் இந்த உண்மைப் புலப்படும். என்று அக்கட்டுரையில் 12 ஆண்டுகளுக்குமுன் எழுதினேன்.
தற்போது திருவண்ணாமலையை ஆய்வு செய்த கனிம வளத்துறை ஆய்வாளர்கள், திருவண்ணாமலை பாறைகள் எரிமலை வெடிப்பில் உருவானவை என்று உறுதிசெய்துள்ளனர். இது இமயமலையைவிட மிகப் பழமையான மலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம் _ தினமணி-, 01.08.2012, பக். 7)
பெரியார் தொண்டரின் கணிப்பு பிழையாகாது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அருணா ஜலம் என்பது அருணா + அஜலம் என்று புரியும். அருணா என்றால் நெருப்பு. அஜலம் என்றால் மலை. நெருப்பு மலை (எரிமலை) என்ற பெயர் காரணப் பெயர் ஆகும். புராணம் எழுதித்தான் அதை ஆரியர்கள் மாற்றி (ஏமாற்றி) விட்டனர்.
அருணகிரி என்றாலும் அதே பொருள்தான்.
ஆக, திருவண்ணாமலை தீபம் என்பது எரிமலை வெடிப்பின் அடையாளமேயன்றி அதில் கடவுள் கற்பிதத்திற்குக் கடுகளவும் இடமில்லை. எனவே, கிரிவலமும் வேண்டாம், தீபமும் வேண்டாம்.
அண்ணாமலையில் தீபச்சுடர் ஏற்றும் மடமையை மாற்றி, அய்யா பெரியாரின் அறிவுச் சுடர் ஏற்றுவோம்!
- மஞ்சை வசந்தன்
செய்திகளை பகிர்ந்து கொள்ள எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?
எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?
Print
Email
திருவண்ணாமலை என்றாலே தீபம் எல்லார் நினைவிற்கும் வரும் _தற்போது நித்தியாநந்தா நினைவுக்கு வருவது வேறு!
அந்தத் தீபத்திற்கு ஒரு புராண கதை உண்டு.
சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலையுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவாய் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே பறவையாகவும், பன்றியாகவும் தோன்றினர் என்பதே அப்புராணம்.
அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாய்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
நிகழ்விற்கான காரணம் புரியாதவர்கள், தங்கள் கற்பனையான காரணங்களைச் சொல்லிப் புனைந்தவையே புராணங்கள்.
சூரிய கிரகணம், சந்திர கிரஹணம் இரண்டிற்கும் காரணம் புரியாதவர்கள், திருப்பாற்கடல் கடைந்து, அமிர்தம் கிடைத்தது, இராகும் கேதும் தெரியாமல் உண்டன. அதைச் சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்தன, அதை விஷ்ணு தண்டித்தார், அதனால் ஆத்திரமுற்ற இராகு கேது ஆண்டுக்கொருமுறை சந்திரசூரியனோடு சண்டையிடுவதே மேற்கண்ட இரண்டு கிரஹணங்கள் என்றது புராணம். ஆனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுவது சந்திர கிரஹணம், பூமியின் குறுக்கே சந்திரன் வருவது சூரிய கிரஹணம் என்றது அறிவியல். அறிவியல் கூறியது உண்மையானது. புராணம் பொய்யானது.
இதேபோல், திருவண்ணாமலையில் நிகழ்ந்த உண்மை தெரியாது, அதற்கு புராணம் எழுதினர். அயல்நாடுகளில் அடிக்கடி நிகழும் எரிமலை வெடிப்பு இந்தியாவில் இல்லை. காரணம் இது (தமிழகம் - இந்தியா) நில மாற்றங்கள் பல நிகழ்ந்து வலுப்பெற்ற பூமி. ஆகவேதான் இங்கு நிலநடுக்கமும் அதிகம் இல்லை. எரிமலை வெடிப்பும் இல்லை.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது திருவண்ணாமலை. அறிவியல் ஆய்வுப்படிச் சொல்லவேண்டுமானால் இமயமலை. உருவாவதற்குமுன் உருவான மிகப் பழமையான மலை திருவண்ணாமலை.
புராணக் கதையின் அடிப்படையை ஆய்வு செய்த நான், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு உண்மையை ஊகித்து கவிதையில் சொன்னேன். அதன்பின் விடுதலை நாளேட்டில் கட்டுரையாய் எழுதினேன்.
சிவன் பூமிக்கும் வானுக்கும் நெருப்பாய் நின்றார் என்று புராணம் சொல்வதால், உண்மை நிகழ்வு என்னவாய் இருக்கும் என்று சிந்தித்த எனக்கு அங்கு மிகப் பெரிய அளவில் எரிமலை வெடித்திருக்க வேண்டும். அதன் காரணம் புரியாதவர்கள், கடவுள் சோதியாய் எழுந்ததாய் எண்ணியிருப்பர் என்றும், கனிம வளத்துறை அல்லது, நிலவியல் துறை அறிஞர்கள் ஆய்வு செய்தால் நான் கூறுவது உண்மை என்பதை உறுதி செய்யலாம் என்று எழுதினேன். இதோ அந்தக் கவிதையும், விடுதலைக் கட்டுரையின் பகுதியும்:
திருவண்ணாமலை
மண்மூட வேண்டிய
கண்மூடி வழக்கங்கள்
விண்முட்டி எரிகின்ற
விபரீத நிலை
விரயத்தின் உலை!
எரிமலை வெடிப்பின்
இயல்பறியா மக்கள்
அரிபிரம்மன் காணா
அரன் (அழல்) வடிவு என்றார்.
அடிக்கடி வெடிக்கும்
அயல் நாட்டிலெல்லாம்
படியளக்கும் பரமனென்று
பக்தி கொள்வதில்லை!
கிரிவல ம(கி)டைமை என்னும் தலைப்பில் 17.04.2001 முதல் மூன்று நாள்கள் விடுதலையில் நான் எழுதிய கட்டுரையில்.
எரிமலை வெடிப்பு சிவன் நெருப்பாக நின்றார் என்று திரிக்கப்பட்டது...
மலையிலிருந்து நெருப்பு வெடித்து வெளிவந்ததும் இறைவன் ஜோதியாய் நிற்கிறார் என்று வணங்கினர். அதையொட்டி அருணாசல புராணம் எழுதப்பட்டது. ஆக, திருவண்ணாமலை என்பது எரிமலை வெடிப்பின் விளைவாகும்.
பெருஞ்சுடராக நெருப்பு வெளிப்பட்டதால், அதைக் கொண்டாட மலை உச்சியில் பெரும் தீபம் ஏற்றினர். காரணம் எரிமலை வெடிப்பு மலையுச்சியில் தான் நிகழும்.
திருவண்ணாமலை மண்ணை அகழ் ஆய்வு செய்தால் இந்த உண்மைப் புலப்படும். என்று அக்கட்டுரையில் 12 ஆண்டுகளுக்குமுன் எழுதினேன்.
தற்போது திருவண்ணாமலையை ஆய்வு செய்த கனிம வளத்துறை ஆய்வாளர்கள், திருவண்ணாமலை பாறைகள் எரிமலை வெடிப்பில் உருவானவை என்று உறுதிசெய்துள்ளனர். இது இமயமலையைவிட மிகப் பழமையான மலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம் _ தினமணி-, 01.08.2012, பக். 7)
பெரியார் தொண்டரின் கணிப்பு பிழையாகாது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அருணா ஜலம் என்பது அருணா + அஜலம் என்று புரியும். அருணா என்றால் நெருப்பு. அஜலம் என்றால் மலை. நெருப்பு மலை (எரிமலை) என்ற பெயர் காரணப் பெயர் ஆகும். புராணம் எழுதித்தான் அதை ஆரியர்கள் மாற்றி (ஏமாற்றி) விட்டனர்.
அருணகிரி என்றாலும் அதே பொருள்தான்.
ஆக, திருவண்ணாமலை தீபம் என்பது எரிமலை வெடிப்பின் அடையாளமேயன்றி அதில் கடவுள் கற்பிதத்திற்குக் கடுகளவும் இடமில்லை. எனவே, கிரிவலமும் வேண்டாம், தீபமும் வேண்டாம்.
அண்ணாமலையில் தீபச்சுடர் ஏற்றும் மடமையை மாற்றி, அய்யா பெரியாரின் அறிவுச் சுடர் ஏற்றுவோம்!
- மஞ்சை வசந்தன்
தளர்ந்துவரும் மத நம்பிக்கை
அனைத்துலக வின்காலப் நிறுவனம்
அண்மையில் 57 நாடுகளில் 50,000 மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில், மதவழிபாட்டுத் தலத்துக்கு நீங்கள் செல்கிறீர்களா - இல்லையா என்பதைக் கடந்து, நீங்கள் மதம் சார்ந்தவர்களாக அல்லது மதம் சாராதவர்களாக அல்லது நாத்திகர்களாக உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
2005 இல் இது போன்று எடுக்கப்பட்ட ஆய்வின்போது 69 விழுக்காடு அயர்லாந்து மக்கள் தங்களை மதம் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். ஆனால் இந்த ஆய்வின்போது இந்த எண்ணிக்கை 22 புள்ளிகள் குறைந்து 47 விழுக்காடாக ஆகியுள்ளது. மேலும், 10 விழுக்காட்டு மக்கள் தங்களை நாத்திகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
வியட்நாமில் மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை 53 விழுக்காட்டிலிருந்து 23 புள்ளி குறைந்து 30 விழுக்காடாக இப்போது உள்ளது.
உலக அளவில் தங்களை மதநம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தற்போது வெறும் 59 விழுக்காடாக மட்டுமே . 2005 இல் இருந்து தற்போது இது 9 புள்ளிகள் குறைந்துள்ளது. அத்துடன் 13 விழுக்காட்டு மக்கள் தங்களை நாத்திகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். இது 4 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
2005 ஆம் ஆண்டுக்குப் பின் மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
மதத்துடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 13 புள்ளி குறைந்து 60 விழுக்காடாக ஆகியுள்ளது. மேலும், 5 விழுக்காட்டு அமெரிக்கர்கள் தங்களை நாத்திகர்கள் என்று அறிவித்துள்ளனர்; 2005 இல் இருந்ததை விட இது 4 புள்ளிகள் அதிகமாகும்.
தகவல்: டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ
நிலவு மனிதன் மறைந்தார்
சென்ற நூற்றாண்டின் மிக முக்கிய அறிவியல் நிகழ்வு நிலாவுக்கு மனிதன் சென்றதுதான். மனித இனத்தின் மாபெரும் பாய்ச்சல் என்று வர்ணிக்கப்பட்ட அந்தப் பயணத்தில் பங்கெடுத்து நிலவில் தன் காலைப் பதித்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், ஆகஸ்ட் 25 இல் தனது 82 ஆம் வயதில் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், சின்சினாடியில் மறைந்தார்.
பதவிப் பசியில் பா.ஜ.க அணுகுமுறையில் மாறவேண்டிய காங்கிரஸ்
இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தினை கடந்த சில நாள்களாக நடக்க விடாமல் முடக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும் நடந்து வருவது, ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசுவதாகும்.
பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவர் அதனை அறிவிக்காவிட்டால் நாங்கள் நாடாளுமன்றத்தினை நடத்த அனுமதிக்கவே மாட்டோம் என்று சபையில் சண்டித்தனம் செய்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தினைக் கேலிக் கூத்தாக்குகின்றனர் எதிர்க்கட்சியினர்!
முன்பு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பில் நிலக்கரி சுரங்கத்துறை இருந்தபோது, நிலக்கரிச் சுரங்க வருவாய் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சி.ஏ.ஜி. என்ற மத்திய அரசின் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளதை வைத்தே இத்தனை அமளி, துமளி- ஆர்ப்பாட்டங்கள்!
நாம் முன் வைக்கும் சில நியாயமான கேள்விகளுக்கு அந்த எதிர்க்கட்சியினரும், அவர்களது ஒலி குழாய்களாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்துறையினரும் பதில் அளிக்க முன்வர வேண்டும்.
1. இந்தத் தொகை - அனுமானமா? உண்மையான இழப்பா? (It is only a presumptive loss) கற்பனை ஊகம்தானே!
கடந்த காலத்தில் அப்படிச் செய்யாமல் ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு தொகை கூடுதலாக அரசுக்குக் கிடைத்திருக்கக் கூடும்; இதனைக் கடைப்பிடிக்காமல் விட்டதால் இந்த (யூக) இழப்பு என்றுதான் CAG Report கூறுகிறது.
இப்படி பிரதமருக்கு நெருக்கடி கொடுத்து பதவி இழந்து பசியால் வாடும் பா.ஜ.க., மேலும் 2 ஆண்டுகள் 2014 பொதுத் தேர்தல் வரை காத்திருக்காமல் குறுக்கு வழியில், நாட்டில் ஒரு அவசரத் தேர்தலை மக்கள்மீது திணித்து விட்டால், தங்களுக்கு ஒரு சான்ஸ் - குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல கிடைத்து விடாதா என்ற நப்பாசையின் காரணமாகவே இப்படிக் கூச்சல் போடுகின்றனர்!
இதற்கு மூல காரணம் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலவீனமான உண்மையான கூட்டணி நெறியைக் கடைப்பிடிக்காமல், மற்ற தோழமையினரை பலிகடாக்களாக்கி, தாங்கள் தப்பித்தால் போதும், அவர்களைத் திருப்தி செய்ய, அழி வழக்குகளைப் போட்டாவது எதிர்க்கட்சியினர் வாயை மூடினால் போதும் என்று 2ஜி அலைக்கற்றை வழக்கினை இதே போன்ற ஒரு யூக நட்டத்தினை சிகிநி அறிக்கை வைத்து, எதிர்க்கட்சி யினர் வாய்க்கு அவலைத் தந்ததின் விளைவுதான் இன்று அக்கட்சி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நோக்கி ஏவும் எதிர்க்கட்சியின் ராஜினாமா கோரிக்கை!
2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அது கொள்கை முடிவு (Policy Decision of the cabinet; government) என்று துவக்கத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, பிறகு தி.மு..க அமைச்சரையும் சம்பந்தா சம்பந்தமின்றி திருமதி கனிமொழியையும் குற்றவாளிகளாக இணைத்து சிறையில் பல மாதங்கள் வைத்தது எவ்வகையிலும் நியாயமா? இழப்பு பூஜியம்தான் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் போன் றவர்கள் கூறியபிறகும்கூட இது நடந்திருக்கிறது.
அதன் பார தூர விளைவுதான் - அதே அனுமான - யூக இழப்பாக அதைவிட பெரிய இழப்பை ஊதிக் காட்டி, உலகத்தார் கண்ணில் ஊடக கொயபெல்ஸ் களின் உதவி மூலம் இப்படி ஒரு திட்டமிட்டே பிரச்சாரத்தைச் செய்து, அப்பதவிக்குள்ள மரியா தையையும் காற்றில் பறக்க விடச் செய்கின்றனர்!
எந்த அடிப்படையில் பிரதமர் ராஜினாமா? நிலக்கரி ஊழல் (Coalgate என்ற ஊடகப் பெயர் வந்துள்ளதே) நிரூபிக்கப்பட்டுவிட்டதா? விவாதம்கூட நாடாளுமன்றத்தில் நடத்த இந்த எதிர்க்கட்சிகள் தயாராக இல்லையே! ஒரு சில கட்சிகள் இப்போதுதான் பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலையில் விழாமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று முன்வந்து கூறுகின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 2ஜி அலை வரிசையில் தெளிவான ஒரு நிலைப்பாட்டினை மேற்கொள்ளவில்லை; உறுதியோடு இருந்திருந்தால் இந்நிலை அதற்கு வந்திருக்காது.
முதலில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு கூட்டத் தயங்கி, காலந்தாழ்த்தி, பிறகு இரண்டு குழு விசாரணையை ஏற்று, பிறகு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா என்று ஆக்கி, பிறகு வழக்கு சி.பி.அய். மூலம் போட்டு - இவ்வளவும் ஏற்படாத இழப்புக்காக! (ஏற்பட்ட இழப்பாக இருப்பின் ஒரே விதமான தொகை அல்லவா குற்றச்சாட்டுகளில் வந்திருக்கும். அப்படி அல்லவே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு மாதிரி! வழக்கு இருப்பதால் நாம் உள்ளே புக விரும்பவில்லை).
இப்போது நிலக்கரி ஊழல் என்பதும் கூச்சல் மூலம் பாமர வாக்காளருக்கு இந்த உண்மை தெரியாமலேயே ஆக்கப்படக் கூடும். குற்றம் செய்திருந்தால் - அதனைச் சொல்ல வேண்டிய இடம் நாடாளுமன்றம் தானே?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களின் சரியான ஒரு கருத்தை எடுத்து வைத்துள்ளார். காங்கிரஸ் இது வரை தன்னைக் காப்பாற்றிடும் விளக்கமே (defensive) தந்து வந்துள்ளது; அதை சற்று மாற்றி (offensive) எதிர்க்கட்சிகளின் முரண்பட்ட வாதங்களை, புரட்டுகளை, ஊழல்களை அவர்கள் ஆளும் மாநிலங்களும் இதற்குக் காரணமாக உள்ளன என்ற தகவல்களையெல்லாம் எடுத்துத் திருப்பி அடித்துக் கூற முன் வர வேண்டும்.
அது மட்டுமா? பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கில் குற்றவாளிகளாக உள்ள பா.ஜ.க. தலை வர்கள்மீதுள்ள வழக்கு ஆண்டுகள் 1992 முதல் 2012 வரை 20 ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடப்பதா?
ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் அறிக்கை குப்பைக் கூடையில் போடப்பட்டு எத்தனை ஆண்டுகள்?
குஜராத், கருநாடகா மதவெறி ஊழல்கள் பற்றி பேச்சு மூச்சு உண்டா?
ஊழலை ஒழிக்க பா.ஜ.க.வின் முகமூடிகள் யார் யார் எந்தெந்த சுவாமிகள் என்று சொல்ல வேண்டாமா?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முதலில் கூட்டணியின் கட்சிகளுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து, நடந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை திருப்தி செய்ய எவரையும் பலி கொடுக்க முன் வந்ததின் விளைவுதான் - இப்படிப்பட்ட நிலைமைகள்.
ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவர்கள் சும்மா இருப்பார்களா?
தோழமைக் கட்சிகளிடம் தோழமை வேண்டாமா?
நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் தோழமையைத் தேடாமல், உறுதியுடன் இருந்து, மதச் சார்பின்மையை, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட துணிவுடனும், கூட்டணித் தெளிவுடனும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் சந்தர்ப்பவாதம் (Political Expediency) என்பது பலன் தராது - யாருக்குமே!
கொள்கை முடிவுகள் தொலைநோக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களைப் பதிவு செய்து அதிர வைக்கட்டுமே!
வாக்கெடுப்புக்கு வழி கேட்கட்டுமே! இன்னும் 2 ஆண்டுகள் பொறுத்திருக்காமல் இப்படி ஒரு குறுக்கு சால் ஒரு போதும் பயன்தராது.
அது ஜனநாயக முறை ஆகாது. காங்கிரஸ் 2ஜியிலிருந்து மாறி, தனது அணுகுமுறையில் புதிய கோணம் புதிய பார்வையைச் செலவழித்து மக்களிடம் உண்மைகளை விளக்க முன் வர வேண்டும்.
கி.வீரமணி,
ஆசிரியர்
புரட்சி ஏட்டின் உலக சாதனை
உலக வரலாற்றில் ஒரு சாதனை நாளிதழ் `விடுதலை.பகுத்தறிவுக் கொள்கை முழக்கமாக ஒலிக்கும் ஒரே நாளிதழாக இருப்பது ஒரு சாதனை என்றால்,அந்த இதழின் 78 ஆண்டுகால வரலாற்றில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒருவரே ஆசிரியராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இயங்குகிறார் என்பதும் சாதனைதானே!
அந்தச் சாதனையைப் பதிவு செய்யும் விழா 2012 ஆகஸ்ட் 25 ல் சென்னை பெரியார் திடலில் நடந்தது. உலக அளவில் செய்தி ஏடுகள் வரலாற்றில் ஹெரால்டு மேக்மில்லன் என்பவர்தான் அதிகபட்சமாக 27 ஆண்டுகள் ஒரே ஏட்டின் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்று இவ்விழாவில் பங்கேற்ற மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள் தெரிவித்தார். இந்தக் குறிப்பை வைத்துப் பார்த்தால் நிச்சயம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு கின்னஸ் சாதனையாளர்தான்.
அன்று காலையில் நிகழ்ந்த விழாவில்,தங்கள் உள்ளம் திறந்து உண்மை உரைத்த ஒவ்வொரு சான்றோரும் அழுத்தமான கருத்துகளை உதிர்த்தார்கள்.
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா. நன்னன் தனது உரையில்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும்; அவர்தான் நம் ஆசிரியர் வீரமணி அவர்கள்.
விடுதலையை வீரமணியின் ஏக போகத்தில் ஒப்படைக்கிறேன் என்று பெரியார் சொன்னார் என்றால், இது நம் ஆசிரியருக்கு மட்டும்தான். வேறு எவரிடமும் இத்தகைய நம்பிக்கையை பெரியார் வைத்திருந்தார் என்று சொல்ல முடியாது. பெரியாரிடம் செல்லப் பிள்ளையாக வந்து ஏவுகணையாக வளர்ந்தார். நமது ஆசிரியர் அவர்கள் சிறுவராக இருந்த அந்தக் கால கட்டத்தில் நானும் அவருடன் இருந்து பிரச்சாரம் செய்திருக்கின்றேன்.
நமது ஆசிரியர் அவர்களை பெரியார் அவர்கள் தேர்ந்தெடுத்தது. எத்தகைய கூர்த்தமதி? தன் அன்பினாலே ஆசிரியரை தந்தை பெரியார் கட்டிப் போட்டார். ஆசிரியருடைய நலம் என்பது சமுதாய நலமாகும். அவர் உடல் நலனை நன்கு பேண வேண்டும், என்று குறிப்பிட்டார்.
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன்,`` வல்லத்தில் நான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த நாளை மிகப் பெருமையாகக் கருதுவதேன். என் சக நீதிபதிகள்கூட என்னை இதுபற்றிக் கேட் டார்கள். அப்பொழுது அவர் கூட்டத்தில் நான் சொன்னேன். பெரியார் என்ற ஒரு மாமனிதர் இல்லாவிட்டால் நாம் எல்லாம் எங்கே இருந்திருப்போம்?
இந்தப் பதவிகள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்குமா என்று பதில் சொன்னேன். சதா மக்களைச் சந்திப்பது - பேசுவது - படிப்பது - எழுதுவது - கல்வி நிறுவனங்களை நிருவகிப்பது என்று சதா உழைத்துக் கொண்டே இருப்பவர் ஆசிரியர் வீரமணி. அவருக்குத் தூங்க நேரம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
விடுதலை ஆசிரியர்தான் என்றாலும் அவருக்கு மட்டும் விடுதலை இல்லை என்று பாராட்டினார்.
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். மோகன் தனது உரையில்,``இந்த விழா மகிழ்ச்சிக்குரிய விழா! எனது மாணாக்கர்களில் தலைசிறந்த சிறப்பான மாமணி ஆசிரியர் வீரமணி, தமிழ்நாட்டின் சிறந்த பொக்கிஷம்! விடுதலை ஆசிரியர் பொறுப்புக்கு வராவிட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகக்கூட வீரமணி ஆகி யிருக்கக் கூடும். ஆனால் அதைவிட நாட்டுக்காக, நம் இன மக்களுக்காக நீதியை வழங்கிக் கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
காலையில் சான்றோர்களின் பாராட்டு நிறைந்தது. மாலையில் இதழியல் துறையினர் பங்கேற்ற நிகழ்வு தமிழகத்தின் மூத்த இதழாளர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் தொடங்கியது. இன்றைய முன்னணி ஊடகவியலாளர், கலைஞர் தொலைக்காட்சித் தலைவர் ரமேஷ் பிரபா, 1930 களிலேயே மாதந்தோறும் ரூ 200 நட்டத்தில் இயங்கிவந்த விடுதலையைக் காப்பாற்ற பெரியார் அவர்கள் மேற்கொண்ட முயற்சியையும்,அதற்காக சர் ஆர்.கே.சண்முகம் அவர்களிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை இருந்ததையும் சுட்டிக் காட்டினார். அந்த அளவுக்கு பெரியாராலேயே நடத்த முடியாத விடுதலை நாளேட்டை தான் பொறுப்பேற்ற 50 ஆண்டுகளாக இடைவிடாமல் ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டை நடத்துவதே மாபெரும் சாதனை என்றார்.தமிழர்களில் குறிப்பிடத்தக்க ஆங்கில ஊடகவியலாளரான ஏ.எஸ்.பன்னீர் செல்வம், இந்துத்துவாவின் தாக்கம் பற்றியும்,மண்டல் அறிக்கை அமலாக்கமும்,அதன் விளைவுகள் பற்றியும் நல்ல தெளிவைக் கொடுத்தது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் என்று நன்றியுடன் வெளிப்படுத்தினார். உ.பி.யிலிருந்து வருகை புரிந்திருந்த லக்னோ பல்கலைப் பேராசிரியர் ஜஸ்பால் சிங் வர்மா விடுதலை ஏடு எங்கள் மொழியில் எங்கள் மாநிலத்திற்கும் வேண்டும் என்றும்,பெரியாரின் கருத்துகள் எங்கள் மக்களுக்கும் சொல்லப்படவேண்டும் என்று தனது ஆவலை வெளியிட்டார்.அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன், சுயமரியாதை, மனித நேயம், சமூக நீதிக்குப் போராடும் ஆசிரியரைப் பாராட்டி 1980 களில் அன்றைய பொதுவுடைமை ரஷ்யாவிற்கு ஆசிரியருடன் பயணம் சென்றதை நினைவு கூர்ந்தார்.அங்கு தெருக் கூட்டும் தொழிலாளிகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுங்கள் என்று கேட்டுக்கொண்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மனிதநேய உணர்வினை உள்ளம் சிலிர்க்கக் கூறியபோது அரங்கம் கையொலி எழுப்பியது.
விழாத்தலைமையேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உரை முத்திரை உரையாக அமைந்தது. ``இன்று நடைபெறுகின்ற இந்த விழா உங்களுக்கெல்லாம் என்ன உணர்வை ஊட்டியிருக்கிறதோ; அந்த உணர்வைவிட ஒரு படி மேலாக ஏன் ஆயிரம் படிகள் மேலாக எனக்கு உணர்வை ஊட்டி யிருக்கின்ற விழாவாகும். `விடுதலை, `குடியரசு, `பகுத்தறிவு என்றெல்லாம் ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்த அந்தக் காலம் தொட்டு இன்று அந்த ஏடுகளுடைய பயனை அனுபவித்துக் கொண்டி ருக்கின்ற இந்தக் காலம் வரையில் இந்த ஏடுகள் எவ்வளவு சங்கடங்களுக் கிடையே, இடர்ப்பாடு களுக்கிடையே வெளிவருகின் றன, வெளிவந்தன என்பதை நினைவு கூர்ந்திடுவது தான், யாரை இன்றைக்கு நாம் பாராட்டுகிறோமோ, யாருக்கு வாழ்த்து வழங்குகிறோமோ அதற்கு உரிய பயனை தரக்கூடிய ஒன்றாக அமையும்,என்று குறிப்பிட்ட கலைஞர்,``என் வீடு இது; என் வீட்டிற்குள்ளேயே வந்து என்னுடைய தம்பியை - என்னுடைய ஆருயிர் இளவலை நான் பாராட்டுகிற நேரத்தில், என்ன உணர்வு எனக்கும், பாராட்டப்படுகின்ற வருக்கும் ஏற்படுமோ அந்த உணர்வில் இம்மியும் குறைவில்லாமல் இன்றைய தினம் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை துடிக்கின்ற எங்களது இதயங்களைக் கேட்டால் அது சொல்லும்.
விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்றைக்கு பத்திரிகை உலகத்தில் திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுகின்ற - திராவிட இயக்கத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இரண்டு மாபெரும் சக்திகளாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணருவார்கள். நான் விடுதலையிலே நம்முடைய இளவல் வீரமணி அவர்களைப் போல 50 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தவன் என்று மார்தட்டிக் கொள்கின்ற அந்தப் பெருமையை பெறாவிட்டாலும்கூட, விடுதலை பத்திரிகையை தினந்தோறும் படிக்கின்ற ஒருவன் நான்.அதைப் படித்த பிறகு தான் அடுத்த பத்திரிகையை எடுப்பது என்கின்ற வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவன் நான் என்று பெருமிதம் பொங்க தன் மன உணர்வுகளை வெளிப்படுத்திய கலைஞர் அவர்கள், ``நம்முடைய சமுதாயத்தை சீரழிக்கின்ற உயர் ஜாதியின ருடைய ஆணவங்கள், அட்டகா சங்கள், அவர்களுடைய நிதானமற்றப் போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறியோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்திரங்கள் இவை களையும், அதே நேரத்தில் நம்முடைய ஏடுகளின் மூலமாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம். அதை முரசொலி முடிந்த வரை செய்யும்.விடுதலை நிச்சயமாக எப்போதும் செய்யும்.எடுத்த எடுப்பிலேயே சனாதனத்தை, மதத்தை, மதவெறியை, மடாதிபதிகளின் கொட் டத்தை இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளையெல்லாம் அடையாளம் காட்டி எச்சரித்த, எச்சரித்துக் கொண்டிருக்கின்ற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
இந்தப் பேரியக்கம் இன்றைக்கும் மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடை போடுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால், பெரியார் இல்லா விட்டாலும் என்னுடைய இளவல் வீரமணியைப் போன்றவர்கள் (கைதட்டல்) இருக்கின்ற காரணத் தினாலேதான். பெரியார் விட்டுச் சென்ற எந்த உடை மைகளையும், கொள்கை உட்பட எதையும் காப் பாற்றுவதற்கு திறன் உடையவர் யார்? யார்? யார்? என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் வீரமணியார்! வீரமணியார்! வீரமணியார்! என்பது தான்,என்று உணர்வு மேலிட பாராட்டிய கலைஞரின் கருத்தை கூடியிருந்த பல்லாயிரவரும் கையொலி எழுப்பி ஆமோதித்தனர்.
நிறைவாக ஏற்புரையாற்றிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,``தமிழகத்தில் விடுதலை, முரசொலி ஆகிய இரண்டு ஏடுகள் எதிர்நீச்சலில் வளர்ந்தவை. இவை செய்தித்தாள்கள் அல்ல. விழுந்த இனத்தை எழுந்து நிற்க கூடிய துணிச்சலை கொடுக்கக்கூடிய ஏடுகள்.
பத்திரிகை மூலம் மிகப்பெரிய புரட்சி செய்தார் தந்தை பெரியார். எனக்கு அவர் கிடைத்தார். அவரது கொள்கைகள் கிடைத்தன. அவரது தத்துவத்தால் நான் மனிதன் ஆனேன். என்னைப் போல மற்றவர்களும் ஆக வேண்டும் என்று பாடுபடுகிறேன். பத்திரிகை சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும், உண்மையை எடுத்துச்சொல்வ தாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார். தந்தை பெரியார் ஒப்படைத்த பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு அன்று பெரியார் இருந்தார். இன்று எங்கள் மூத்த சகோதரராக கலைஞர்இருக்கிறார்.
நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை பத்திரிகை. சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும். தந்தை பெரியாரின் கொள்கைகள், லட்சியங்கள், திராவிட இயக்கத்தின் வெற்றி தொடரும். ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், இனத்தின் மீட்சிக்கு விடுதலை பத்திரிகை போர் வாளாகவும், கேடயமாகவும் எப்போதும் துணை நிற்கும், எனச் சூளுரைத்தார். உலகப் பத்திரிகை வரலாறு இதுவரை கண்டிராத இந்தச் சாதனைக்கு மகுடம் சூட்டிய விழாவாக மட்டுமல்லாமல், பெரியாரின் கொள்கை வெற்றியில் இன்னுமொரு மைல் கல்லாகவும் ஆகஸ்ட் 25 அமைந்து வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுவிட்டது.
தொகுப்பு: பெரியாரிடி
Post a Comment