Search This Blog
3.9.12
சென்னை அய்.அய்.டி.யில் என்ன நடக்கிறது?
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனிகளாக இருந்துவருவது அனைவருக்கும் தெரிந்த உண்மையே!
இடஒதுக்கீடு என்பது மருந்துக்கும் அங்கு கிடையாது. மாணவர்களில் ஆரம்பித்து பேராசிரியர்கள், பணியாளர்கள் என்று பேச ஆரம்பித்தால் அத்தனையும் அக்கிரகாரத்தின் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டவையாக இருக்கும்.
தப்பித் தவறி அதிக மதிப்பெண்கள் அடிப் படையில் இடம் பிடித்து விடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் முழுமை யாகக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்று வெளியில் வருவது என்பதும் முயற்கொம்பே!
பேராசிரியர்கள் எல்லாம் பார்ப்பன மயமாக இருக்கும் ஒரு நிறுவனத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவ மாணவிகள் மனமகிழ்ச்சியோடு படித்து மீள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியொரு இறுக்கமான சூழ்நிலை!
சென்னை அய்.அய்.டி.யில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நான்கு மாணவ - மாணவி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கான காரணங்கள் என்ன என்பது கண்டிப்பாக ஆராயப்பட வேண்டும்; இல்லை எனில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர் கதையாகத்தான் ஆகும். படித்து முடித்து திட்ட அறிக்கை (Project) தயாரித்துப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் அளிப்பதிலும் பார்ப் பனப் பேராசிரியர்கள் பல்வேறு வகைகளிலும் தொல்லைகளைக் கொடுப்பது என்பதை ஒரு யுக்தியாகக் கைக் கொள்கிறார்கள்.
நன்கு படித்தவனாக வளாக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பார்ப்பனர் அல்லாத ஒரு மாணவன் பணியில் சேரத் துடித்துக் கொண் டிருந்த நேரத்தில், பார்ப்பனப் பேராசிரியர் உனது திட்ட அறிக்கை சரியில்லை; அதனை முடித்துக் கொடுத்து விட்டு செல் என்று கூறியதால் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் வந்தது.
அய்.அய்.டி. என்கிற சாம்ராஜ்ஜியத்துக்குள் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம். செய்தி யாளர்கள் உள்ளே நுழைந்து அவ்வளவு எளிதாக செய்திகளைத் திரட்டிவிட முடியாது. அப்படி சென்றால் அடி உதைதான். அந்த வகையில் பெண் செய்தியாளர் கூடத் தாக்கப் பட்டதுண்டு.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெருகு மானசா (வயது 23) அய்.அய்.டி. வளாகத்துக் குள் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்டு செய்தி சேகரிக்கவும், படம் எடுக்கவும் அங்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவர், அய்.அய்.டி. பேராசிரியர் ஒருவராலும், காவலர்களாலும் தாக்கப்பட்டுள்ளார்.
அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அடிபட்ட பத்திரிகையாளர்மீதே வழக்குத் தொடர திட்டமிட்ட வகையில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அய்.அய்.டி. மாணவிகள் அய்ந்து பேர் பெயரால் அந்தப் புகார் கொடுக்கப்பட் டுள்ளது. அக்கிரகாரத்தின் ஆதிக்க புரியாக இருக்கக் கூடிய சென்னை அய்.அய்.டி. நிரு வாகம் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது தான்!
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து கொண்டு வேதகால தர்பாரைச் செய்து கொண்டு இருக்கிறது. முறையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு (மாண வர்கள் சேர்க்கை, பேராசிரியர்கள் சேர்க்கை உட்பட) சமூகநீதிக் கொடி அந்த வளாகத்தில் பறந்தாலொழிய இதற்குத் தீர்வு காண முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் தடையைப் பெற்று விடுவது போன்ற சித்து விளையாட்டுகளிலும் கைதேர்ந்தவர் கள் இவர்கள்.
வீதிக்குப் பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும்.
-----------------------"விடுதலை” தலையங்கம் 3-9-2012
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ழையான தகவல்
தினத்தந்தி (2.9.2012) இதழில் சென்னை அய்க்கோர்ட்டின் வரலாறு என்ற தலைப்பில் இடஒதுக்கீடு தொடர் பான ஒரு கட்டுரை தவறான தகவல் களோடு வெளிவந்துள்ளது.
1950-க்கு முன்னர் தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று குறிப் பிடப்பட்டுள்ளது. 1928ஆம் ஆண்டே நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான சுயேச்சை மந்திரிசபை வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையைப் பிறப்பித்தது. இதற்கு அடிப்படை காரண மாக விளங்கியவர் அமைச்சராக பதவி வகித்த முத்தையா முதலியார் ஆவார். எனவே பெரியார் அவர்கள் பல குழந் தைகளுக்கு முத் தையா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
1950ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றமும் செப் டம்பரில் உச்சநீதிமன்றமும் பிற்படுத்தப் பட்டவர்க்களுக்கான இடஒதுக்கீடு செல் லாது என்று அதிர்ச்சி தரும் தீர்ப்பை அளித்தன. அதைக்கண்டு வெகுண் டெழுந்த பெரியார் திருச்சியில் வகுப் புரிமை மாநாட்டை கூட்டினார். மாணவர் கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக் கணித்தனர்.தமிழ்நாடெங்கும் கிளர்ச்சி வெடித்தது. அதன் விளைவாகவே இந்திய அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப் படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சென்பகம் துரைராஜன் என்ற பெண் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து மருத்து வப்படிப்புக்கு விண்ணப்பம் செய்ததாகவும், இடஒதுக்கீடு அரசாணைப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீட்டை ரத்துசெய்யகோரி வழக்கு தொடரப் பட்டதாகவும் தினத்தந்தி வெளியிட் டுள்ளது. உண்மையில் செண்பகம் துரை ராஜன் என்ற பெண் மருத்துவக்கல் லூரிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதும் பின்னாளில் தெரியவந்தது.
- கி. தளபதிராஜ்
மாவட்ட திராவிடர் கழக செயலாளர், மயிலாடுதுறை
இலக்குவனார்
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வாய்மேடு எனும் கிராமத்தில் சிங்காரவேலருக்கும் இரத் தினம் அம்மையாருக்கும் பிறந்த (17.11.1910) இலட்சு மணன் தான் பிற்காலத்தில் செந்தமிழ்க் காவலர் சி.இலக் குவனார் என்ற ஏற்றம் பெற்ற பெருமகன்.
தந்தை பெரியார் அவர் களின் படை வரிசையில் ஆற்றல் மிகுந்த தளபதி. அவர்தம் நினைவு நாள் இந்நாள் (3.9.1973).
திருவையாறு தமிழ்க் கல்லூரியில் படித்த இவர் தொல்காப்பியத்தையே ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை மிக்கவர். முனைவர் பட்டமும் பெற்றவர்! (அதனு டைய எச்சம்தான் அவரின் மகன் பேராசிரியர் மறைமலை இலக்குவன் போலும்!)
இலக்குவனார் அவர் களால் ஆங்கில மொழி யாக்கம் செய்யப்பட்ட தொல்காப்பியத்தைத் தான் முதல் அமைச்சர் அண்ணா மேற்கொண்ட தம் வெளி நாட்டுப் பயணத்தின்போது யேல் பல்கலைக் கழகத்திற் கும் அளித்தார். வாடிகன் போப்புக்கும் கொடுத்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது தான் தமிழ்க் காப்புக் கழகத்தினைத் தொடங்கி னார் (6.8.1962) தமிழ்க் காப்புக் கழகத்தின் கொள்கை என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழியக்கம் கூறும் குறிக்கோள்களே.
இது ஒன்று போதாதா இலக்குவனாரின் வீரஞ் செறிந்த இனமானம், மொழி மானம் மேம்பட்ட பகுத்தறிவு உள்ளத்திற்கு?
சமயமெனும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது! -என்ற அடிநாதம் தானே தமிழியக்கம்.?
முதல் அமைச்சர் பக்தவத் சலம் ஆட்சியில் இலக்கு வனார் மீது தொடுத்த வழக் குகள் ஒன்றா - இரண்டா? 14 வழக்குகள். அனைத்தை யும் நெஞ்சு நிமிர்வோடு சந்தித்தார்.
இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர், உள்ளம் கவர்ந்த வர். இதழ் நடத்துபவர், அவர் வெளியே இருந்தால் அர சுக்கும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது என்றார் அரசு வழக்குரைஞர்.
எந்த அடிப்படையில் இம்முடிவு என்று எதிர் வினா தொடுக்கப்பட்டது அரசு வழக்கறிஞர் எனக்குள்ள தெளிவால் கூறுகிறேன் என்றார். இதற்கு இலக்கு வனார் தரப்பில் பதிலடி என்ன தெரியுமா?
அப்படியானால் என் தெளிவால் கூறுகிறேன். இம்மாநிலத்திற்குக் கேடு முதல்வர் பக்தவத்சலனாரால் ஏற்படுகிறது. அவரை வெளியே விடாமல் சிறைப் படுத்தினால் கேடெல்லாம் ஒழிந்துவிடும் என்கிறேன்.
ஒப்புக் கொள்வீர்களா? நீதி மன்றம் ஒப்பிச் சிறைப்படுத்த ஆணை தருமா? என்பது தான் அந்தப் பதிலடி.
இந்தத் துணிவு எத் தனைப் பேருக்கு வரும்?
இனமானம், மொழிமானம் இரண்டையும் இரு விழி எனக் கொண்ட அந்த வீரத் திருமகனை நினைவு கூர்வ தோடு அந்த உரத்தையும் பெறட்டும் தமிழினம்!
- மயிலாடன் 3-9-2012
இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சியா? திமுக எதிர்ப்பு - அவை ஒத்தி வைப்பு!
புதுடில்லி, செப்.3- இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையான குரல் கொடுத்ததைக் கண்டு இரு அவைகளும் ஒத்தி வைக் கப்பட்டன.
இன்று (3-9-2012) நாடாளுமன்ற அலுவல்கள் துவங்கியவுடன், தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் மக்களவையிலும் - திருச்சி சிவா, எம்.பி., மற்றும் கனிமொழி, எம்.பி., ஆகியோர் தலைமையில் மாநிலங்கள வையிலும் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஒருமித்த குரலில் இலங்கையில் நடைபெற்ற போரின்போது 40,000 அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்திற்கு இந் திய அரசாங்கம் பயிற்சி கொடுப்பதை நாங்கள் கடுமையாகக் கண்டித்து எச்சரிக்கிறோம்.
இந்திய அரசு இலங்கை ராணுவத்தினரை உடனடி யாக திருப்பி அனுப்பிட வேண்டும். இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய மண்ணில் எந்த மாநிலத்திலும் ராணுவ பயிற்சிப் அளிப்பதை திரா விட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிப்பதோடு, பிரதமர் தலையிட்டு, பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதன்பின்னர் இரு அவைகளும் நண்பகல் 12 மணியளவில் ஒத்தி வைக் கப்பட்டன.
மோடிமீது நீதிபதி நேரடி தாக்கு!
அகமதாபாத், செப்.3 நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப் பாற்ற முதல்வர் நரேந்திர மோடியின் அரசு தீவிர மாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயா வுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப் பளித்த நீதிபதி ஜோத் சனா யாக்னிக் தெரி வித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக் கடி ஏற்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத் திற்குப் பின்னர் சிறு பான்மை இஸ்லாமி யர்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள் ளிட்ட இந்து அமைப்பு கள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கொல்லப்பட் டனர்.
அதில் நரோடா பாட் டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய் யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறை யில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.
இந்க கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் குஜ ராத் அமைச்சரும், மூன்று முறை எம்.எல்.ஏவுமான மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத் சனா யாக்னிக் தீர்ப் பளித்துள்ளார். அதே போல முன்னாள் விஎச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு அவரது வாழ்நாள் முழு வதும் ஆயுள் சிறையில் அடைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
தனது தீர்ப்பின் போது நீதிபதி ஜோத்சனா சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது மாயாவைக் காக்க மோடி அரசு தீவிரமாக முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாயாவைக் காக்க மோடி அரசு, பல வழி களிலும் முயன்றதாக நீதிபதி தனது கருத்தில் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். நீதிபதி ஜோத்சனா மேலும் கூறுகையில், மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப் புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் எஸ்அய்டியை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன.
பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக் காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத்னானியின் பெயர் கூட இந்த சம்பவத்தில் வந்து விடாதபடி கடுமையாக முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் நீதிபதி.
முதலில் நரோடா பாட்டியா சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில காவல்துறையினர் பதிவு செய்த எப்அய்ஆரில் மாயாவின் பெயரே இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அவர் மீது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் புகார் கூறியும் கூட மாயாவின் பெயரை குஜராத் காவல்துறையினர் சேர்க்கவில்லை. அவரை கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் தலையீட்டால் சிக்கிய மாயா
அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்தும் கூட பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புகார் கூறினர். காவல்துறையினர், மாயாவைக் காக்க முயல்வதாக வாஜ்பாயிடமே அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாஜ்பாய் தலையீட்டின் பேரில், மாயா தொடர் பான 27 புகார்களை குஜராத் காவல் துறையினர் ஏற்றனர். அதன் அடிப்படையில் மாயாவின் பெயரைச் சேர்த்து ஒரு எப்அய்ஆரை குஜராத் காவல்துறையினர் பதிவு செய்தனர். அதன் பின்னரே விஎச்பி தலைவர் ஜெய்தீப் படேல், நரோடா காவல் துறை ஆய்வாளர்இன்ஸ்பெக்டர் மைசூர்வாலா ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
அதாவது ஒரு முதல்வராக நரேந்திர மோடி செய்யத் தவறியதை வாஜ்பாய் தலையிட்டு செய்யும் நிலையை ஏற்படுத்தி விட்டது அப்போதைய மோடி அரசு. இருப்பினும் கூட தொடர்ந்து மாயாவுக்குச் சாதகமாகவே குஜராத் காவல்துறையினர் நடந்து வந்தனர். எப்அய்ஆரில் பெயரைச் சேர்த்த வேகத்திலேயே அந்த வழக்கை மூடி விட்டது குஜராத் அரசு. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா, இந்த மூன்று பேரையும் குற்றப்பத்திரிக் கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய போது அவரை உடனே இடமாற்றம் செய்து விட்டது மோடி அரசு. அகமதாபாத்தை விட்டே அவர் மாறுதல் செய்யப்பட்டார்.
இருப்பினும் நரோடா பாட்டியா வழக்கில், மாயா உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்புகள் அடங்கிய தகவல்களை குறுந்தகடு, மூலம் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டார் ராகுல் சர்மா. அதன் பின்னர், தான் சேகரித்த அத்தனை தகவல்களையும் அப்படியே நானாவதி ஆணையத் தின் முன்பும், யுசி பானர்ஜி விசாரணைக் குழுவின் முன்பும் கொட்டினார் ராகுல் சர்மா. இதன் மூலம் மாயாவின் அக்கிரமச் செயல்கள் அம்பலத்திற்கு வந்தன.
இதையே பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த எஸ்அய்டி சிறப்பு விசாரணைக் குழுவும் முக்கியமாக கவனத்தில் கொண்டது. இந்த குறுந்தகடு ஆதாரம் தான் மாயாவையும், பஜ்ரங்கி உள்ளிட்டோரையும் சிறையில் தள்ளப் பேருதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 3-9-2012
காவிரி நதிநீர்: நீதிபதியின் சீற்றம்
புதுடில்லி, செப்.3- காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை நடை பெற்றது.
உச்ச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசா ரணைக்கு வந்த போது முதலில், மத்திய அரசு வழக் கறிஞரைப் பார்த்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துக் கான தேதி குறிக்கப்பட்டுவிட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இன்னும் தீர்மானிக்கப் படவில்லை. மாநில அரசுகளிடம் தேதி கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.
இதில் கடுப்படைந்த நீதிபதிகள், காவிரி நதிநீர் ஆணையத் தின் தலைவராக பிரதமர் இருக்கும் போது இத்தனை தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு தரப்பில், மாநில அரசுகளுக்கு பிரதமர் அலுவலகம் எந்த கடிதமும் எழுதாமல் நீர்வளத் துறையின் ஜூனியர் அதிகாரி ஒருவர் மூலம் மாநிலங் களின் தேதி கேட்டு கடிதத்தை அனுப்பி வைத்திருக் கின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் அலுவலகம் என்று நாங்கள் பார்க்கிறோம். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், மத்திய அரசு வழக்கறி ஞரிடம், இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் என்ன கூறியிருக்கின்றனர் என்று தெரியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தலையைச் சொறிந்த மத்திய அரசு வழக்கறிஞர், இன்னும் படித்துப் பார்க்கவில்லை என்று சொன்னார். கருநாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், காவிரி நதிநீர் ஆணையத்தை செல்லாது என்று சொல்லியிருக்கிறார் என்படை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஏன் மத்திய அரசு இப்படி காவிரி நீர் பிரச்சினையில் இத்தனை மெத்தனமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.
இதனால் வேறு வழியின்றி மன்னிப்பு கேட்கும் நிலைக்குப் போன மத்திய அரசு வழக்கறிஞர் மிகுந்த தயக்கத்துடன் அனைத்து விவரங்களுடன் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்துக்கு தகவல் தெரி விக்கிறேன் என்றார். பின்னர், காவிரி நதிநீர் ஆணையத் துக்கான தேதியை மத்திய அரசு குறிக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே காவிரி நதிநீர் ஆணையத்துக்கான தேதி யை தீர்மானித்து அறிவிக்கும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரி வித்தனர்.
யாருக்கு அல்வா?
திருமலை வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் எடைக்கு எடை கல்கண்டு காணிக்கை அளிப்பதற்காக துலாபாரத்தில் அமர்ந்து வேண்டுதலை நிறைவேற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே. நாள்: ஞாயிற்றுக்கிழமை (தினமணி 3.9.2012 - பக்.14).
ஒரு மத்திய அமைச்சர் இந்த நிலைக்கு ஆளாகலாமா? அரசின் மதச் சார்பற்ற தன்மைக்கு இது அழகா?
யாருக்கு அல்வா கொடுக்கிறீர்கள் என்ற சொலவடை மாறி கடவுளுக்கே கற்கண்டா என்ற சொலவடை வழக்கத்திற்கு வந்தால் ஆச்சரியம் இல்லை.
படைத்தளபதிகளில் ஒருவரை இழந்தோமே! மதுரை மகேந்திரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கழகத் தலைவர் வேதனை!
மதுரை, செப். 3- படைத் தளபதிகளில் ஒருவரை இழந்து நிற்கிறேன் என்றார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவராக இருந்து அண்மையில் மறைந்த சுய மரியாதைச் சுடரொளி வழக்கறிஞர் கி.மகேந்திரன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 02.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மதுரை கே.புதூரில் உள்ள டி.நோபில் அரங்கத்தில் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் வர வேற்று திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.செல்வம் ஒருங்கிணைத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கி.மகேந் திரன் இணையர் கவுரி மகேந்திரன், மகள் திவ்யா, மைத்துனர் கார்த்திகேயன், மாமனார் பாலகிருட்டி ணன், மகன் கவுசிகன் ஆகியோர் முன்னிலையில் கி.மகேந் திரன் அவர்களின் படத்தினை திறந்துவைத்தார்.
வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ஏ.கே. ராமசாமி, அய்.ஓ.பி. வங்கி அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் வீரராகவன், முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர் திரு.பாண்டித்துரை, தி.மு.க.வினைச் சேர்ந்த துரை.எழில்விழியன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எம்.விஜயகுமார், நீதிபதி பொ.நடராஜன் (ஓய்வு), வழக்கறிஞர்கள் ம.தி.மு.க. ஆசைத்தம்பி, ஏ.பழனியாண்டி, காராளன், வாஞ்சி நாதன்,தர்மராஜ், கி.மகேந்திரன் அவர்களின் மாமனார் பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் மகேந்திரன் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து உரையாற்றினர்.
படமல்ல - பாடம்!
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாடமா கவும் படமாகவும் இருக்கும் கி.மகேந்திரன் அவர் களைப் பற்றிய நினைவேந்தல் சிறப்புரையை நிறை வாக ஆற்றினார். மிகப்பெரிய துயரத்திலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. எனது படைத்தளபதிகளின் ஒருவரை இழந்து உங்கள் முன்னால் நிற்கின்றேன்.
விடுதலை இணையத்தில் செய்தியைப் பார்த்து விட்டு உலகம் முழுவதும் எனக்கு ஆறுதல் கூறுகின்றார்கள் என்றாலும் எவராலும் ஆற்றுப்படுத்த இயலாத துயரம், பாதிப்பு உள்ளது. கட்டுரை எழுதினாலும் கவிதை எழுதினா லும் கலை நயம் இருக்கும் . பொதுக்குழுவுக்கு வர இயலவில்லை என்பதனை எனக்கு கடிதமாக எழுதி அனுப்பி உள்ளார் என்று கூறி கடிதத்தை வாசித்தார்.
பல்வேறு கட்சியினைச் சார்ந்தவர்கள், பலதரப்பட்ட வர்களால் இந்த அரங்கம் நிரம்பி வழிகிறது. இதுதான் இந்தக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி, இந்தக் குடும்பத்தை கழகத்தில் இணைந்து பணி யாற்ற அழைக்கின்றேன். இந்தக் குடும்பத்திற்கு அனைத்து வகையிலும் நாங்கள் துணை நிற்போம் என்று உரையாற்றினார். (முழு உரை பின்னர் வரும்) மறைந்த வழக்கறிஞர் கி.மகேந்திரன் இணையர் கவுரி மகேந்திரன் நன்றியுரையாற்றினார். அவர் தனது உரையில் எனக்கு கணவராக மட்டுமல்ல, எனது தாய் தந்தையை விட அதிகம் அன்பு செலுத்துபவராக எனது கணவர் இருந்தார்.
எதிலும் என்னை கட்டாயப்படுத்தியதில்லை. நான் வேலை பார்க்கும் இடத்தில் எனது கணவரால் எனக்கு மரியாதை, சமூகத்தில் எனக்கு மரியாதை என அனைத்திலும் எனக்கு நிறைவூட்டினார். தாராளமாகச் செலவு செய்வார். எனது மகள் திவ்யா நல்ல வேலை பார்க்கின்றாள், எனக்கு அவளைப் பற்றிய கவலை இல்லை ஆனால் எனது மகனுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இவ்வளவு பேர் திரளாக வந்து எனது கணவர் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி, ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி என்று மிகவும் உருக்கமாக உரையாற்றினார்.
Post a Comment