Search This Blog
25.9.12
ஆஸ்திகமும், நாஸ்திகமும்
1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று.
2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணையில் முளைத்தது.
3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.
4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.
6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும்; நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.
7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும்; நாஸ்திகத்தால் அவை அழியும்.
8. ஆஸ்திகமும் நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.
9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்துவமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.
10. ஆஸ்திகம் அழியக்கூடியது; நாஸ்திகம் என்றும் அழியாதது.
11. ஆஸ்திகம் சில சமயம் நாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும்; ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.
12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும், நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.
13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாபநஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.
14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமே நன்மையளிக்கும்; பெருமையளிக்கும். ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஓங்குக!!
--------------------------அறிஞர் அண்ணா - “திராவிடநாடு” 31.10.1943
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பகுத்தறிவுப் பொன்மொழிகள்
1. விசாரணை செய்யவும், ஆராய்ச்சி செய்யவும், விவாதம் செய்யவும், சுதந்தரம் அளிக்காத மதம், உண்மையான மதமாயிருக்க முடியாதென்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளவேண்டும்?
2. கடவுள் தங்களுக்கு நன்மை செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டும் என்று சிலர் சொல்வதானால், கடவுள் பலருக்குத் தீமை செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன செய்யவேண்டும்.
3. மதக்குறி என்பது, மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக்காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.
4. மனித சமூகத்திற்கு அப்பாலிருந்து உற்பவிக்கப்பட்ட தென்ற ஒழுக்கம் என்பதாக ஒன்று இருப்பதை நாம் ஒப்புக் கொள்வதில்லை.
5. கடவுள் மாறாதவர் என்று சொல்லுகிறீர்கள்! ஆனால் அவருடைய பரிணாமமாகிய இவ்வுலகத்தில் சகல வஸ்துக்களும் சதா மாறிக்கொண்டே இருப்பதற்குக் காரணமென்ன?
6. கஷ்டத்திலிருந்து உண்மையும், கடைத்தேற்றலிலிருந்து நன்றி விசுவாசமும், துக்கத்திலிருந்து சுகமும், விடுதலையிலிருந்து நம்பிக்கையும் பிறக்கிறது.
7. ஒரு மனிதன் தன் தோல்வியையும், குறைகளையும், பலவீனத்தையும், சுமத்துவதற்கும், தனக்கு இசைந்து வராத ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அது கைவரப்பெறாமல் தவிக்கும் காலத்தில் தன்மனோவேதனையைத் தவிர்த்துக் கொள்வதற்கும் ஒரு சாதகமாயிருக்க ஏற்படுத்திக்கொண்ட ஒரு கற்பனையும் ஒரு கருவியுமே கடவுள் என்பது?
8. புரோகிதன், பண்டு முதல் மனிதனால் மனிதனை மேன்மேலும் அஞ்ஞான இருளில் முழுகவைத்து அவனை அடிமையாகவும், கோழையாகவும் செய்து வருகின்றான்.
9. செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்; பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் என்றிங்கூதடா சங்கு.
10. கோவில் வழிபாடு மக்கள் பக்தியை வளர்க்க வென்றால், அதற்குச் செய்யும் பணச்செலவு யார் வயிற்றை வளர்ப்பதற்கு?
அண்ணா -”திராவிட நாடு” (19.9.1943)
அப்பேத்கார் அறிவுரைகள்
டாக்டர் அம்பேத்கார், சென்னையிலே பல சொற்பொழிவுகளிலே தந்த அறிவுரைகளிலே சில பொறுக்குமணிகளைக் கீழே தருகிறோம். உங்கள் குறிப்பிலே இருக்கவேண்டுமென்று.
பதவிப் பிரியர்கள்
பிராமணரல்லாதார் கட்சி, தேர்தலிலே தோற்றதற்குக் காரணம், அக்கட்சியிலே பதவிபெற வேண்டுமென்ற நோக்கத்தோடு இருந்தவர்களின் போக்குதான்.
கட்சி தலைதூக்குகிறது
பிராமணரல்லாதார் கட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கண்டு களிப்படைகிறேன்.
காந்தியார் குணம்
காந்தியார் காங்கிரசின் தலைவராக இருக்கிறார். வேறு எந்தத் தேசத்தில் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளுவார்? எதிர்காலத் தலைவராக ஏற்றுக்கொள்வர்? எதிர்கால திருஷ்டியோ தற்கால திருஷ்டியோ, இவைகளைப் பரிசீலனை செய்யும் சக்தியோ அவருக்கு இல்லை.
கொடுமை
தாழ்த்தப்பட்டவர்களாகிய நாங்கள் சென்ற 2000 வருஷ காலமாகப் பிராமண ஆட்சியில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டிருக்கிறோம்.
காங்கிரஸ் வலை
தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பறிகொடுததுக் காங்கிரசை வலுக்கச் செய்வதுதான் காந்தியாரின் நோக்கமென்பதை அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறேன். வட்ட மேஜை மகாநாட்டில் ஜினனாவிடம்போய் அவருடைய 14 கோரிக்கைகளுக்குத் தான் இணங்குவதாகவும் அதற்கு மாறாக எனக்கு (அம்பேத்காருக்கு) ஜின்னா சலுகை காட்டகூடாதென்றும் கேட்டார். இதற்கு ஆதாரமான தஸ்தாவேஜு என்னிடம் இருககிறது. ஆனால் முஸ்லீம் பிதிநிதிகள் காந்தியாரின் வலையில் அகப்படவில்லை.
அன்று ஒருபோர்
புத்த மதத்திற்கும் பிராமண மதத்திற்கும் வெகுநாள் சச்சரவுகள் நடந்தன. கொள்கையில் மட்டுமல்ல; அரசியல் சமூகத் துறைகளிலும் போராடினார்கள்.
விஷமம்
நான் வேதங்களைப் படித்திருக்கிறேன், சதுர்வர்ணப் பிரயோகங்களும் மந்திரதந்திரங்களுமே அவைகளில் மலிந்து கிடக்கின்றன. இவைகளைப் போதிக்கும் முளையில் பக்கபலமாக பகவத்கீதையையும் மனுஸ்மிருரிதயும் உபயோகிக்கிறார்கள். அவைகளில் விஷமத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
மதப்பிடி
இந்த மதசம்வாதம் சுமார் 1500 வருஷங்களுக்கு மேலாக நடந்ததாகத் தெரிகிறது. இறுதியில் ராஜதர்மத்தைக் கொலை செய்து பிற்போக்கான எதிர்புரட்சியான பிராமண மதம் வெற்றி பெற்றது. அந்தப் பிற்போக்கான மதத்தின் பிடியில்தான் நாம் இருக்கிறோம். புத்தமதம் க்ஷீணித்தது நமக்கு ஒரு பெரிய நஷ்டம். அதனால், சமூக சமத்துவமும், அறிவை உணரும் தத்துவமும் மற்றும் பலவும் ஒழிந்தன.
அறிவு வழி
இனியாவது எல்லோரும் அறிவின் வழியே நடக்க முன்வாருங்கள். அறிவுக்குப் பொருத்தமில்லாத் தன்மை. வேதாந்த விவகாரத்திலிருந்து, சமூகத் துறையிலும், பிறகு அரசியல் விஷயத்திலும் புகுந்துவிட்டது. எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன்.
ஆணவக் கூட்டம்
இந்நாட்டிலே பிராமணர்களே ஆளும் கூட்டமாக இருந்து வந்திருக்கிறார்கள். ஜாதி விதியாசம் பாராட்டி, மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு என்று கருதும் இயல்பினரிடம் நாட்டு ஆட்சி இருக்கலாமா? அவர்களைக் கொண்ட தேசீய சர்க்காரால் நமக்கு என்ன பயன்?
(திராவிடநாடு - 15.10.1944)
பாஞ்சாலியும் பாரதத்தாயும் -அண்ணா
“நான் ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன்” என்று குடிசைக்குள் இருந்த குந்தியிடம் அருச்சுணன் கூறினான். “அப்படியானால், அதனை ஐவருமே புசியுங்கள்” என்று ஆணையிட்டாள் அன்னை குந்தி. அருச்சுணன் திடுக்கிட்டான். நான் கொண்டுவந்தது கனியன்று, ஒரு கன்னி” என்றான். “அப்படியா? அதைப்பற்றிக் கவலைப்படாதே. நீ கொண்டு வந்தது கனியானாலும், கன்னியானாலும், அது உங்கள் ஐவருக்குமே சொந்தமானது; ஆகையால், அக்கன்னியை நீங்கள் ஐவருமே பங்கிட்டுக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் ஐவருமே அவளுக்குக் கணவராகுங்கள்” என்று குந்தி கூறினாள். அதன்படி பாண்டவர் ஐவருமே பாஞ்சாலியை மணந்து பங்கு போட்டுக் கொண்டனர் என்பது பாரதக் கதை.
“அன்று, பாஞ்சாலி இருந்த நிலையிலேயே இன்று பாரதத்தாய் இருக்கிறாள்” என்று தோழர் காந்தி அவர்கள் கூறுவது மேற்சொன்ன கதையை நினைவூட்டுகிறது.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள கதை, மெய்யோ பொய்யோ அல்லது மெய்யும் பொய்யுங்கலந்த கற்பனையோ, எப்படியிருந்தாலும், தோழர் காந்தியார் தாம் கூறும் கற்பனா தேவியான பாரதத்தாய்க்குப் பாஞ்சாலியை ஒப்பிட்டு, இவளும் அவள் நிலையை அடைந்துவிட்டாளே என்று அல்லற்படுகிறார்.
தோழர் காந்தியாரால் குறிப்பிடப்படும் பாரதத்தாய், இன்று பிரிட்டிஷாரின் பாதுகாப்பிலிருக்கிறாள். காந்தியார், அவள், தமக்கே சொந்தமென்றும் அவளைத் தம்மிடமே ஒப்படைத்து விடும்படியும் பிரிட்டிஷாரிடம் கேட்கிறார். ஆனால் பிரிட்டிஷார் அதற்கு இணங்கவில்லை. “உமக்கு மட்டும் அவள் சொந்தமன்று; அவளை அடையத் தகுதியுடைய வேறு சிலரும் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் உம்மைப்போல, ஏகபோக உரிமை பாராட்டி அவளைத் தங்களிடமே ஒப்படைத்துவிடும்படி கேட்கவில்லை. உங்கள் பாதுகாப்பிலிருக்கும் பாரதத்தாய் காந்தியாருக்கு மட்டும் சொந்தமானவளன்று, எங்களுக்கும் அவள் சொந்தமானவளே, ஆகையால், பங்கு விகிதாசாரப்படி, அவளைப் பங்கு போட்டுக் கொடுப்பதே முறையென்று உம்மைப்போலவே அவளுக்குச் சொந்தக்காரர்களான திராவிடர்களும் முஸ்லீம்களும் கேட்கின்றனர்” - என்று பிரிட்டிஷார், குந்தியின் முறையைக்கூடப் பின்பற்றாமல் குறுக்கே நிற்கின்றனர்.
ஆனால் காந்தியாருக்கு மட்டும், தாம் ஏகபோக உரிமை பாராட்டி அனுபவிக்கலாம் என்ற எண்ணத்துக்குப் பாரதத்தாய் இணங்காமல், பாஞ்சாலி நிலையை அடைந்து விட்டாளே என்ற கவலை பிறந்துவிட்டது. இந்தக்கவலை காந்தியாருக்கு மட்டுமன்று, இந்நாட்டு அமைப்பு முறையை ஓரளவுக்காவது சிந்தித்து உணரக்கூடிய சாதாரண மக்களுக்குக்கூட, இந்நாடு பாஞ்சாலி நிலையிலேயே உள்ளது, இதனை ஒருவர் மட்டும் ஏகபோக உரிமை பாராட்ட முயல்வது தவறு என்ற கவலை பிறக்காமல் இருக்க முடியாது. ஆனால், காந்தியாருக்கு ஏற்பட்டுள்ள இத்தந்நலக்கவலை, இந்நாட்டிலுள்ள ஏனை அரசியல் தலைவர்களுக்கிருக்கும் பொதுநலக் கவலையாக மாறுவதற்குத் தோழர் இராச கோபாலாச்சாரியாரால் கொடுக்கப்பட்டுவரும் “பிரிவினை மருந்து,” மருத்துவனால் கூறப்பட்ட பத்தியங்களோடு கொடுக்கப்படாத மருந்துபோல் பயன் அளியாதுபோனாலுங்கூடக் - குந்தியின் நிலையிலுள்ள பிரிட்டிஷார் இப்பங்கு விகிதாச்சாரமுறையை ஏற்றுக்கொள்ள மறுத்தாலுங்கூடத், தோழர் காந்தியாரால் குறிப்பிடப்பட்டபடி, பாஞ்சாலி நிலையிலேயே இருந்த நாடு - இருக்கவேண்டிய நாடு - இருந்தே தீரவேண்டிய நிலைமையை அடைந்தே தீரும் என்பது மட்டும் உறுதி.
திராவிட நாடு(27.5.1945)
Post a Comment