Search This Blog

15.9.12

அண்ணா வெறும் படமல்ல அறிவுப் பாடம்

அண்ணா படமல்ல

இன்று அறிஞர் அண்ணாவின் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - தமிழ் நாடெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

அண்ணா - ஓர் அரசியல் கட்சியை தொடங்கினார், ஆட்சியைப் பிடித்தார்  - அவர் வெறும் அரசியல்வாதிதான் என்று எவரேனும் கணக்குப் போடுவார்களேயானால், அதைவிடத் தவறான கணிப்பு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அவர் வெறும் அரசியல்வாதி என்றால் அவர் ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டப் பேரவையிலும் பிரகடனப்படுத்தியிருக்க மாட்டார்.

நாடாளுமன்றத்திற்கு சென்றபோதே தனது கன்னிப் பேச்சில், நான் திராவிடர் இனத்தைச் சேர்ந்தவன் (னுசயஎனையை ளுவடிஉம) என்று மிகப் பெருமை யோடு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (ஏப்ரல் 1962).

தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதுகூட குறுகிய காலத்தில் அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே என்று செய்தி யாளர்கள் கேட்டபோதுகூட அதனை மறுத்துத் தனது திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தை - நீதிக் கட்சி வழிவந்த வரலாற்றை மறக்காமல் சுட்டிக் காட்டினார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோதுகூட தம் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று ரிப்பன் கட்டடத்திற்குள் நுழையும் முன், அந்த வளாகத்தில் சிலையாக நின்று கொண்டிருக்கும் வெள்ளுடைவேந்தர் பி. தியாகராசருக்கு உச்சி முதல் பாதம் வரை மாலை அணிவித்து நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் என்ற வரலாற்று உணர்வோடு ஆணை பிறப்பித்தவர்.


குறுகிய காலத்தில் ஆட்சியில் இருந்தாலும் யாரும் கை வைக்க முடியாத வரலாற்றுச் சாதனைகளை அசைக்க முடியாத கல்வெட்டாகப் பதித்தவர்.

(1) சுயமரியாதைத் திருமண சட்டம் (2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல் (3) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழும், ஆங்கிலமும் தான் இங்கு என்று சட்டம் செய்தவர்.

இந்த மூன்றில் கை வைக்க முடியாத காலம் தொட்டு, இந்த நாட்டை அண்ணாதுரைதான்  ஆண்டு கொண்டு இருக்கிறார் என்ற அர்த்தம் நிறைந்த சொற்களைப் பதித்தவர்.

தானும் சரி, தன்னைச் சேர்ந்த உறுப்பினர்களும் சரி, சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ கடவுள் பெயரால் பதவிப் பிரமாணம் எடுக்காத நிலையை உறுதி செய்தவர்.

இன்னும் சொல்லப் போனால் அரசு அலுவலகங் களில் எந்தவித மத, கடவுள் சின்னங்கள், சிலைகள் இடம் பெறக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.

எவ்வளவு காலம் ஆண்டோம் என்பது முக்கிய மல்ல; ஆண்ட காலத்தில்  கொள்கை ரீதியாக என்ன சாதிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம் என்பதை முற்றும் உணர்ந்த கொள்கை மாமணியாக ஒலித்தவர் அண்ணா.

திராவிட என்ற பெயரைக் கட்சிகளில் இணைத் துக் கொண்ட எவரும் அண்ணா காட்டிய இந்த வழியில் எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதே அவர்களுக்கு அவர்களாகவே மதிப்பிட்டுக் கொள்வதும், சறுக்கிய இடங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.


குறிப்பாக அண்ணா பெயரைக் கட்சியின் முன்னொட்டாக வைத்துக் கொண்டுள்ள அ.இ. அ.தி.மு.க. முதலில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.

அண்ணாவின் கொள்கைவழி நடப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அண்ணா பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் கொள்கை என்றால் அடிப் படையானது பகுத்தறிவுக் கொள்கைதான்! அதில் எந்த அளவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்பது அழுத்தமான - முன்னணியில் நிற்கக் கூடிய முதற் கேள்வியாகும்.

கட்சியின் அதிகாரப் பூர்வமான நமது எம்.ஜி.ஆர். இதழில் ஆன்மிகம் பரப்புவதுதான் அறிஞர் அண்ணா வின் கொள்கையா? இராசி பலன் இடம் பெறுவது தான் அண்ணாவின் கொள்கையை மதிக்கும் பாங்கா? இவற்றைவிட அண்ணா அவர்களை எப்படி அவமதிக்க முடியும்?

குற்றப் பத்திரிகை படிப்பதற்காக இதனைச் சுட்டிக் காட்டவில்லை - அண்ணாவை மதிப்பது என்பது அவர் கொள்கையை மதிப்பதுதானே தவிர அவமதிப்பதல்ல என்று இடித்துக் கூறுவதற்காகத் தான்; அண்ணா வெறும் படமல்ல அறிவுப் பாடமாகும்.

                         -----------------------"விடுதலை” தலையங்கம் 15-9-2012

16 comments:

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணா பிறந்த நாள் வாழ்த்து

இன்று, செப்டம்பர் 15 - தந்தை பெரியார் தம் பகுத்தறிவுத் தளபதிகளில் முதன்மையான வரான அறிஞர் அண்ணாவின் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா! இன உணர்வுத் திருவிழா!

நூறாண்டு காணும் திராவிடர் இயக்கத்தின் லட்சியங்களை - அதன் பதாகைகளை பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் பலரும் தத்தம் தோள்களில் ஏந்தும் வண்ணம் ஈர்ப்புச் செய்யக் காரணமானவர் அவர்!

அறிஞர் அண்ணா ஓர் பல்கலைக் கொள் கலன்!

சமுதாயத்தை மாற்றவே தனக்கு - அரசியல் ஓர் கருவி என்று கருதி ஆட்சி புரிந்தவர் அண்ணா!

ஓராண்டில் அவர் செய்த முப்பெரும் சாதனைகள்:

1) சுயமரியாதைத் திருமணச் சட்டம்

2) தமிழ்நாடு பெயர் மாற்றம்

3) இருமொழிக் கொள்கை

இவை சமூகப் புரட்சி வரலாற்றின் தனிச் சரித்திரத்தில் மூன்று பெரும் அத்தியாயங்கள் ஆகும்!

தந்தை பெரியாரை, தான் கொண்ட - கண்ட ஒரே தலைவர் என்று பெருமிதத்துடன் முழங்கிய பெருமைக்குரிய சீடர்!

அவர் புகழ் வாழ்க! பகுத்தறிவு வளர்க!!
18-9-2012

தமிழ் ஓவியா said...

செப்டம்பர் 17


எத்தனையோ நாட்கள்
இட ம் பெயர்கின்றன
இந்த செப்டம்பர் மாதத்தில்
பதினேழுக்கு மட்டும்
என்ன அப்படி ஒரு
ஈர்ப்பு?
இருட்டைப் பகல் என்று
சொன்னவன் - இருக்கட்டும்!
அதை நம்பிக்கிடந்த
அசட்டுக் குப்பைகளின்
அறிவு செவுளில் அறைந்து
அட மடப்பயலே!
இருள் எப்படியடா பகல்?
எவனோ ஒரு ஏமாற்றுக்காரன்
இருட்டிலே பிழைப்பு
நடத்துபவன்
ஏய்த்துப் பிழைக்கச்
சொன்ன கதையைக்
கண்ணை மூடிக் கொண்டு
நீ பார்த்ததால் அல்லவா
இருளாய்த் தெரிந்தது பகல்?
என்று இடித்துச் சொன்ன
சூரியன் உதித்த
கிழக்குதான் இந்த செப்.17
ஜாதி என்னும் சாக்கடையில்
புழு வாய்க்கிடந்த
புழுக்கைகளை
புலியாய் மாற்றுவதற்கு
சுயமரியாதையை ரத்தத்தில்
ரசவாதம் செய்த புரட்சி மருத்துவர் என்பதால்
பூத்த மலர் கொண்டு
புகழாரம் சூட்டுகின்றார்
புலியோடு நம் நட்பு
தொடரும்!
பொறுக்கும் பன்றியோடு
அல்ல, அல்ல!
பெண்ணைப் பேயென்று
பேசியவன்
பெற்றெடுத்த தாயை
வேசி என்பவனே!
அய்வருக்கும் மனைவியாக்கி
கூட்டுறவு சங்கம்
நடத்தியவனின்
நாக்கை அறுத்து
நாய்க்குப் போட்ட நாயகர் என்பதனால்
நாடே போற்றுகிறது -
நம் தலைவர் பெரியாரை!
துக்ளக் என்ன
சுண்டைக்காய்!
கல்கி என்ன
கத்தரிக்காய்!
சங்கர மடமென்ன
வெங்காயம்!
வாசிங்டன் வாழ்த்துகிறது
வாஞ்சையோடு
பிரிட்டனும் பெருமையோடு
பேசுகிறது
பேரிகை முழங்குகிறது
சிங்கப்பூரும் மலேசியாவும்
சேர்ந்திசை பாடுகிறது
துபாயும், குவைத்தும்
துந்துபி முழங்குகிறது
மியான்மர் மட்டுமென்ன -
மீசை முறுக்குகிறது!
அன்று சொன்னான்
அல்லவா
அந்தப் புதுவைக் கவிஞன்
புரட்சிக் கவிஞன்!
மண்டைச் சுரப்பை
உலகு தொழுமென்று!
அவன் வாயில்
சர்க்கரையைக் கொட்டு!
நடப்பிலே பார்க்கின்றோம்
நாட்டுடைத் தலைவர்
நானா திசை கடந்து
நல்லோர் நெஞ்சமெனும்
தொட்டிலிலே
அசைந்தாடிச் சிரிக்கின்றார்
அறிவின் ஊட்டத்தோடு
ஆதவன் புகழ்பாடி
அறிவின் மொத்தத்தை
அனுபவிப் போம் நாமே!
இருளை இருள் என்போம்
பகலைப் பகல் என்போம்
முடவாதம் பேசும்
மூர்க்கர்களுக்கு
மூளை மாற்று
அறுவை சிகிச்சையை
மேற்கொள்வோம்!
மேலே மேலே செல்வோம்
மெருகேறும் உலகமே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்
15-9-2012

தமிழ் ஓவியா said...

கடவுள்



1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.

2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர்களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்குகிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேரே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக்கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது.

ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக்கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

வாழை இலையும் முள்ளும்



என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! நீங்கள் வாழை இலையைப்போல் மென்மையானவர்கள். நாங்கள், நாங்கள் என்றால் திராவிட இனத்தவர்கள் முள்ளுச்செடி போல வன்மையும், கூர்மையும் வாய்ந்தவர்கள். முள் வாழையிலை மீது உராய்ந்தாலும் வாழையிலைதான் கிழியும்; வாழையிலையே வந்து முள்ளுடன் மோதினாலும் வாழையிலைதான் கிழியும். அதுபோல நீங்களாக வந்து எங்கள் இனத்துடன் மல்லுக்கு நின்றாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். அல்லது, நாங்களாக வந்து உங்களிடம் போரிடத்தக்க நிலை நேரிட்டாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். ஆகையால்தான் கூறுகிறேன் நம் இருவருக்குள்ளும் போரோ, பிணக்கோ, பூசலோ, பகையோ நேரும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள். அப்படி நடந்து கொண்டால், கஷ்டம் உங்களுக்குத்தான்; எங்களுக்கல்ல. வாழையிலையும் முட்செடியும் மோதிக் கொள்ளும் நிலை நேரிட்டால் காயம் இலைக்குத்தான், முட்செடிக்கல்ல!

- தந்தை பெரியார் - 24.11.1957

தமிழ் ஓவியா said...

நம்பூதிரிப் பார்ப்பனருக்குள் சீர்திருத்தம்

மலையாளத்தைச் சேர்ந்த கவளப் பரை ஜமீனுக்குட்பட்ட ஒரு நம்பூதிரி வாலிபர் தங்கள் ஜாதி அனுஷ்டானங் களுக்கு விரோதமாய் அதாவது ஒரு நம்பூதிரி தன் தமயன் இருக்கும்போது கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது. மற்றபடி நாயர் பெண்களைத்தான் வைப் பாட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எதிரிடையாய் தங்கள் வகுப்பில் ஒரு நம்பூதிரி பெண்ணை மணம் செய்து கொண்டார். இது விச யத்தில் மற்ற நாயர்கள் ஒன்று சேர்ந்து கண்டித் தும், அந்த வாலிபர் நம் பூதிரியை ஒன்றும் செய்ய முடிய வில்லை. பிறகு, அந்த ஜமீன்தார் திரு.களப்பரை முப்பல் நாயரிடம் சென்று முறையிட்டார்கள். அந்த நாயர் களவான் நம்பூதிரியைப் பகிஷ் காரம் செய்ய தனது குடியரசுகளுக்கு உத்தரவுவிட்டு விட்டார். இந்த கஷ்டம் சகிக்க வொட்டாமல் நம் பூதிரி வாலிபர் தனது மனைவியை தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஆனபோதிலும், நம் பூதிரி வாலிப சங்கத்தார் ஓர் சுற்ற றிக்கை விளம்பரம் வெளிப்படுத்தியிருக் கிறார்கள். அதன் சாரமாவது.

நம்பூதிரிகள் விஷயத்தில் திரு.கவளப்பரை நாயர் பிரவேசித் திருப்பதைப் பார்க்கும்போது நாயர் பெண்களுக்கு சந்ததியை உண் டாக்கும் நம்பூதிரி காளைகள் இல்லாமல் போய்விடுமே என்ற எண்ணத்தால் பிரவேசித்திருப்பதாக தெரிகிறது. ஆதலால் இனிமேல் இந்த சுயமரியாதையற்ற நாயர் பெண்களிடம் கலவி செய்ய ஆசைப்படாதீர்கள். இதனால் நம் ஜாதிப் பெண்களின் கண் ணீர் ஆறாய் பெருகுகிறது. இனிமேல் நம்பூதிரிப் பெண்களையே திரு மணம் செய்து கொள்ளுங்கள் என்று சுற்றறிக்கை விடுத்திருக் கிறார்கள்.

- குடிஅரசு 26.10.1930 பக்கம்.13.

தமிழ் ஓவியா said...

பிராமணன் வந்தானா?



ஒரு குடித்தனக்காரன்:- அய்யா ஆ ஆ ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகு தய்யா ! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கின்றது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளை குட்டிகளுக்கு புண்ணியமாகும்

சித்திரபுத்திரன்: அய்யய்யோ ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடி: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா !

சித்தி: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணன் இருக்கின்றார்களா?

குடி: ஆம் அய்யா, காலையில் ஒரு பிரா மணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொண மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார்.

சித்தி: சரி, சரி, உங்க வீதி வீடுகள் வெந்து போனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.
குடி: என்ன அய்யா, எனக்கு தெரிய வில்லையே !

சித்தி: இது தெரியாதா உனக்கு; பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்ட தில்லையா?
குடி: நான் கேட்டதில்லையே !

சித்தி: அட பயத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பதுபோல் மூக்குக்குப் பக்கத்தில தூக்குகிறார்களே ! அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய்விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடி: அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந் தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்க விட்டு இருக்கமாட்டேனே, ஏமாந்து போய் விட்டேன்.
சித்தி: அது மாத்திரமா! _ பிராமணாள் வாயிலும் நெருப்பு வயிற்றிலும் நெருப்பு: இது உனக்கு தெரியாதா?

குடி: தெரியவில்லையே! சற்று தெரியும்படியாய் சொல்லுங் களேன்.

சித்தி: பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய்ப் போய்விடுவாய் என்று சொல்லுகின்றார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்பதால்தானே அவர்கள் அப்படிச் சொல்லுவது. தவிரவும், பிராமணாள் நம்மைப்பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய்விடுவோம் என்று சொல்லுகின் றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவ தாயிருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லாவிட்டால் முடியுமா?

குடி: இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு. இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழுவது. இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவதானால். இந்த நாலு பிராமணாளாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய்விடும் போலிருக்கிறதே.

சித்தி: பின்னே தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராம ணர்களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின் றார்கள்.

குடி: ஓ ! ஹோ !! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல்லு கின்றார்களா ! சரி இனி புத்தியாய் பிழைத்துக் கொள்ளுகிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்துவிடுங்களய்யா.


சித்திரபுத்திரன் , குடிஅரசு

தமிழ் ஓவியா said...

பெரியார் சொன்னது...........
எழுத்துரு அளவு
நாமம் போட்டுவிட்டுப் போன இராமானுஜர்!




1958_ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது. நான் எழுதிய பூவுலக சொர்க்கம் என்னும் நாடகத்திற்குத் தலைமை தாங்கி சிறப்பிக்கும்படி சில நண்பர்களுடன் சென்று பெரியாரிடம் கேட்டேன். தனி நாடு கோரிக்கையை அந்த நாடகத்தின் பாத்திரங் களின் வாயிலாக நான் எள்ளி நகையாடி இருப்பதை பெரியாரி டம் மறைக்காமல் சொன்னதால், முதலில் பார்க்கலாம் என்று தலை அசைத்தவர், இறுதியில் தலைமை தாங்க மறுத்துவிட் டார். முதலில் பார்க்க லாம் என்று அவர் தலை அசைத்ததற்குக் காரணம் உண்டு. அந் நாடகத்திற்கு முதல மைச்சர் காமராசரும், பழம்பெரும் தேசபக்தர் மதுரை சிதம்பர பாரதியும் வருவதற்கு இசைந்திருக்கிறார்கள் என்பதனால் தான். முதலில் கலந்துகொள்ளலாம் என்று அவருக்குத் தோன்றியது. பெரியார் இறுதியில் வர மறுத்து விட்டதால், காமராசர் தலைமை தாங்கி, சிதம்பர பாரதி நாடகத்தைப் பாராட்டிப் பேசினார்.
அந்த நாடகத்தில் ஒரு கட்டத்தில் வைஷ்ணவ மதத் தலைவரான இராமானுஜரைப் பாராட்டிப் பேசுகிற கட்டம் ஒன்று உண்டு. அதாவது, இராமானுஜர் ஜாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்தவர் என்று பெரியாரிடம் நான் பேசுகிறபோது குறிப்பிட்டேன்.

அதைக் கேட்டதும் பெரியாருக்கு சிரிப்பு வந்தது. நான் இராமானுஜர் ஒரு பார்ப்பனர் என்பதற்காகத்தான் அவரைப் பாராட்டுவது இல்லை என்று ஒருவர் தம்மிடம் குறைபட்டுக் கொண்டதாக பெரியார் தமது பேச்சைத் துவக்கினார். எனது கருத்தும் அதுவாகத்தான் இருக்கும் என்பதால்தான், அந்தத் திசையில் பேச்சைத் துவக்கினார். இராமானுஜரின் நல்ல எண் ணத்தை நான் குறை சொல்லவில்லை. அவருடைய போதனைகளை அவரது நடைமுறைகளே கொன்றுவிட்டன என்று கூறி முதலிலேயே ஒரு அணுகுண்டை வீசினார்.

அவர் போதனைகளும், நடை முறைகளும் அறிவுபூர்வமாக இருந்து இருக்குமானால், அவரை புகழ்ந்து துதி பாடி வருகிற கூட்டத்தின் ஒரு சிறு அளவுக்காவது ஜாதி ஒழிப்பு உணர்வு அல்லது ஜாதி பேதமற்ற உணர்வு வளர்ந்து இருக்கவேண்டும். அப்படிப்பட்ட உணர்வு அய்யங்கார் களிடம் இருக்கிறதா? என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

இராமானுஜர் இன்னொரு கேட்டையும் செய்தார். வைஷ்ணவ மதாச்சாரியார் என்று பெரிதும் மதிக்கப்படுகிற இராமானுஜர் 11ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். அந்த மதத்திற்கு அதற்கு முன்பு நெற்றியில் குறியிடும் வழக்கமில்லை. அவர்தான் முதன்முதலில் தனது மதத்தைச் சார்ந்தவர்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்ளவேண்டும் என்கிற விதியை ஏற்படுத் தினார் என்று பெரியார் கூறியவுடன் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அப்படியா, அய்யா என்று நாங்கள் ஆச்சரியத் துடன் வினவினோம்.

ஆமாம், நான் என்ன கற்பனை செய்து பேசுகிற வனா? அதுதான் வரலாறு. என் குடும்பம் வைஷ்ணவ குடும்பம். எங்களுக்குப் பல விஷயங்கள் தெரியும். வைஷ்ணவ பரிபாஷையில் சொல்லவேண்டுமானால், திருமண் என்று அதனைக் குறிப்பிடுவது வழக்கம்.

அதுவும் ஒருவகை மண் தான். அது மைக்கா இனத்தைச் சேர்ந்த மண். அந்த மண்ணை மைசூர் மாநிலத்தில் (இப்போது கர்நாடக மாநிலம்) உள்ள மேல் கோட்டைப் பகுதியில் தான் பூமியிலிருந்து பரள் பரளாக வெட்டி எடுக் கிறார்கள்.

அந்த மண்ணை எடுத்து தண்ணீர் நிறைந்த தொட்டிகளில் சில நாள்கள் வரை ஊற வைக்கிறார் கள். அது ஊறிப் பதமான பிறகு அதைக் கரைத்து, அதிலுள்ள கல் மண் வண்டல் ஆகியவற்றை வடிகட்டி அகற்றுகிறார்கள்.

நீர் வற்றிய பிறகு எஞ்சியுள்ள தூய மண்ணைப் பிசைந்து தேவை யான அளவுகளில் கையினாலோ அச்சினாலோ உருவாக்கி உலர்த்தி நாமக்கட்டிகளாக விற்பனை செய்கிறார்கள். இப்போது கேட்டுப் பாருங்கள். பகவானே, தனது நெற் றியில் ஆதி காலத்தில் அணிந்திருந் தான் என்று சிலர் உளறுவார்கள். ஜாதி ஒழிக்க புறப்பட்டவர் நமக்கு கடைசியில் நாமம் போட்டுவிட்டுப் போனார் என்று கூறிச் சிரித்தார்.

இராமானுஜரால் ஜாதி ஒழிய வில்லை. அதற்கு மாறாக அவர்களுக்குள்ளாகவே இரண்டு ஜாதிகள் தோன்றி, சீ நாமம், ஹி நாமம் என்ற ஊர் ஊருக்குக் கட்சி கட்டிக் கொண்டு கோர்ட்டுகளில் அலைந்து திரிந்தார்கள். வெள்ளைக் கார நீதிபதிகள் இவர்களைக் கண்டு சிரித்தார்கள் என்று கூறி பெரியார் மீண்டும் சிரித்தார்.

- மயிலைநாதன்
பெரியார் ஒரு நடைச்சித்திரம் (1984)

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன் -



எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போன வர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்த படி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத் தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில் லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளை களும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்ட மாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந் திருக்காதா?

தமிழ் ஓவியா said...

உன் புகழ் நிலைக்கும் மிகு தந்தையே!

கவிச்சக்கரவர்த்தி
கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம்



வெண்தாடி வேந்தரே! வீரமிகு தந்தையே!
ஆண்டுகள் 134 ஆனாலும் - அகிலமெல்லாம்
உம் புகழ் பரவிகொண்டே இருக்கிறது
சமதர்ம கொள்கை கொண்ட
சாகா வரம் பெற்ற சற்குணாளனே! தந்தை பெரியாரே!
விடுதலை வேட்கை கொண்ட வெற்றித் திருமகனே!
ஏழைகளின் உள்ளத்திலே என்றும் குடி கொண்டிருக்கும்
தன்மான தமிழ்ச் சிங்கமே!
நானும் அருமை அண்ணாச்சியும்
அன்றொரு நாள் பெரியார் திடலிலே
முன்னிடத்திலே கட்டிலிலே அமர்ந்து
என்னையும் அருமை அண்ணாச்சியையும்
அன்புடன் அரவணைத்து வாழ்த்திய நினைவு
பசுமரத்தில் அடித்த ஆணி போல்
உள்ளத்திலே உறவாடி கொண்டிருக்கிறது
என் அன்பு தமிழ்த் தந்தையே!
நீங்கள் விட்டுச் சென்ற பணிகளை
தலைவர் வீரமணி தரணியெல்லாம் கொண்டு செல்கிறார்
தமிழன் பெருமையை நிலை நிறுத்துகின்றார்
நீர் இருந்திராவிட்டால் ஏழைகளுக்கு உயர்வில்லை
பாமரர்களுக்குப் பட்டறிவு கிடையாது
தாழ்த்தப்பட்ட மக்களை இன்றோ
மேட்டுக்குடி மக்களும் தாழ்ந்து பணிந்து
நீங்கள் விதைத்த விதையால் இன்று ஓங்கி வளர்ந்து
எல்லோருக்கும் நிழல் தருகிறது!
அதற்குக் காரணம் உங்கள் பகுத்தறிவு, சமூகநீதி
தமிழன் என்று பெருமை
வாழ்வதற்கு தலை நிமிர்ந்து நிற்க செய்த அய்யா
உங்களுக்கு 134வது பிறந்த நாள் விழா!
வாழும் போதே வரலாறு படைத்த
சாதனைச் சக்கரவர்த்தியே!
சமதர்ம கொள்கையோடு சகலருக்கும்
வாழ்வு கொடுத்த வரலாற்று நாயகனே!
எங்கள் எல்லோரையும் வளர்த்து
உங்களை என்றும் நினைவு கூரும் வகையில்
வாழ்ந்து வருகிறோம்
உயர்வோம், உயர்வு பெறுவோம், உயர்ந்துகொண்டே இருப்போம்
தந்தை பெரியார் என்ற தார்மீகம் உள்ளவரே!
தமிழ் உள்ளளவும் தமிழர் உள்ளளவும்
உங்கள் புகழ் நிலைத்து இருக்கும்

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் எழுத்துகள்




....... எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1935ஆம் ஆண்டில்தான். அப்போது நான் பி.ஏ. (ஆனர்சு) பரீட்சை எழுதியிருக்கிறேன். பரீட்சை முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கடுத்த திருப் பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது. அங்கு தான் பெரியாரும் நானும் முதன் முதலில் சந்தித்தது. எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அவருடைய சீர்திருத்தக் கருத்துகள் எனக்குப் பெரிதும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய்? என்று கேட்டார். படிக்கிறேன்; பரீட்சை எழுதி யிருக்கிறேன் என்றேன். உத்தியோகம் பார்க்கப் போகிறாயா? என்றார். இல்லை; உத்தியோகம் பார்க்க விருப்பம் இல்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம் என்று பதில் அளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவரானார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகி விட்டேன், பொது வாழ்வில்!
ஆரியர் -_ திராவிடர் சதா காலமும், பார்ப்பனர்களை, நாம் தூஷிப்பதில்லை _ அவசிய முமில்லை. ஒருமுறையைக் கண்டிக் கிறோமே தவிர, தனிப்பட்ட நபர் களையல்ல, மார்வாடிக் கடை என்று கூறும்போது எப்படி அதிக வட்டி வாங்கும் அனைவரையும் அந்தச் சொல் குறிக்கிறதோ அதுபோல, பார்ப்பனீயம் என்று கண்டிக்கும் போது பார்ப்பனர் மட்டுமல்ல, வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் பார்ப்பனரல்லாதாரும் அந்தப் பட்டத்துக்கு உரியவர்கள் ஆகிறார் கள். எனவே பார்ப்பனர்களைத் தூஷிக்கிறோம் என்று எண்ணுவது தவறு.

பார்ப்பனரை ஏன் கண்டிக்கிறோம்?

இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவைகளை, மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி யும், உயர்வு என்று கூறியும் வரு வதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான். ஆரியர் _ திராவிடர் என்று கூறுகிறோம். -_ அண்ணா 23.11.47 திராவிட நாடு கேள்வி பதில் பகுதி.
பார்ப்பனீயம்!

கடிவாளம் சிறியது, ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்ததுதான்! மூக்கணாங் கயிறு தனது வால் பருமன் கூடத் தான் இல்லை. ஆனால் மாடு அதனி டம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும். அதைப் போலச் சிறிய சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்து வத்தைக் கற்பித்து விட்டால், பிறகு அந்தச் சமூகத்தாரின் செல் வாக்கு நிச்சயம் வளரும்.... இதனால் தான் பார்ப்பனீயம் என்னும் பிரச்னை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

26.10.47 திராவிடநாடு இதழில் அண்ணா.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன் மொழி



மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

@@@@@@@

கழுதைக்கும் எருமைக்கும் 1000 வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது. மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்திச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

@@@@@@@

நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங்கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும். ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்து விட்டது. இந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணா அவர்களின் 104ஆம் பிறந்த நாள் அண்ணா படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு



அறிஞர் அண்ணாவின் 104ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது படத்திற்கு கழகத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (சென்னை - 15.9.2012)

சென்னை, செப்.15- அறிஞர் அண்ணா அவர் களின் 104ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2012) அவரது படத் திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதலமைச் சருமான அறிஞர் அண்ணா அவர்களின் 104ஆம் பிறந்த நாளான இன்று (15.9.2012) தமிழக முழுவதும் கொண்டா டப்படுகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அறி ஞர் அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட் டுள்ள அண்ணா படத் திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று காலை 11 மணியளவில் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை வைத்து மரி யாதை செய்தார்.

இந்நிகழ்வில் திராவி டர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளா ளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் க. பார்வதி, திருமகள் மற் றும் பொதுக்குழு உறுப் பினர் எம்.பி. பாலு, ஏ.பி.ஜே. மனோரஞ் சிதம், திராவிடர் கழக சென்னை மண்டலச் செயலாளர் நெய்வேலி ஞானசேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வ நாதன், பெரியார் திடல் மேலாளர் பி. சீதா ராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், சி. வெற்றிச் செல்வி, தங்கமணி குண சீலன், இறைவி, மீனாட்சி, தங்க. தனலட்சுமி, மரகத மணி, மணியம்மை, சினேகா, உடுமலை, கலை யரசன், கலைமணி, சுரேஷ், பிரபு, சங்கர், பழனி, நாகரத்தினம், தஞ்சை தங்கவேலு, பிரபாகரன், தளபதி, வெங்கடேசன், தளபதி பாண்டியன், மகேந்திரன், ஆர். சத்திய குமாரன் சந்திரகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு
அரசியல் சாசனத்தில் உள்ள சமதர்மம் என்னவாயிற்று?
சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் முடிவு அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிப்போம் தமிழர் தலைவர் அறிக்கை



சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவை யின் முடிவை ஒன்று சேர்ந்து முறியடிப் போம் என்று திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

என்றைக்கு நரசிம்மராவ் பிரதமராகி, நிதி அமைச்ச ராக மன்மோகன்சிங் அவர்களது ஆலோசனைப்படி நிதித்துறை - அரசியல் கொள்கை வகுக்கப்பட்டதோ அன்றைய நாளிலேயே, உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற ஒட்டகம் இந்திய நாட்டில் கூடாரத்திற்கு உள்ளே நுழைந்தது.

அதன் மூலம் புறத்தோற்றத்திற்கு நாட்டின் பொருளா தார வளர்ச்சி மேலோங்குவதைப் போல தோன்றினாலும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செயல்படுத்திய சமதர்மக் கொள்கை கள் மெல்ல மெல்ல விடை பெறத்துவங்கின.

தமிழ் ஓவியா said...

அந்நியச் சுரண்டலைக் கண்டித்து, விதேசியை வெறுத்து, சுதேசியை முன்னிலைப்படுத்தும் கொள்கை யைக் குழி தோண்டிப் புதைக்க ஆரம்பித்தனர்!

ஏகபோக முதலாளிகளுக்கு கதவு திறப்பு

உலக வளர்ச்சியோடு ஒத்துப் போவதில், போட்டி போடுவதில் தவறில்லை; ஆனால் நம் நாட்டில் உள்ள சிறு விவசாயிகள், சிறுசிறு வணிகர்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்திற்கு உலை வைத்து, திறந்து விடப்பட்ட ஏகபோக முதலாளிகளின் சுரண்டல் களமாக நம் நாடு மாறிவிட்டது.

நாளுக்கு நாள் ஏழைகள் பெருகும் - பணக்காரத் திமிங்கிலங்கள் வாழும் நாடாக மாறி வருகிறது.

சமதர்மம் ஏட்டுச் சுரைக்காய் ஆன கொடுமை!

இந்திய அரசியல் சட்டத்தின் பீடிகையில் (Preamble) 1976 ல் சேர்க்கப்பட்ட சமதர்மம் (Socialism) என்ற வார்த்தையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக ஆக்கி விட்டது கொடுமையிலும் கொடுமை!

வீர சுதந்திரம் வேண்டி நின்றோர், விதேசியை எதிர்த்து சுதேசிக் கப்பல் விட்டு, காலமெல்லாம் வெஞ் சிறையிலும், விடுதலையான பின்பும், வறுமைச் சிறையிலிருந்தும் மீளாமல் வாடி வதங்கிய, தியாகம் என்ற சொல்லின் முழுமுதல் இலக்கியம் போல் என்றும் வரலாற்றில் ஒளி வீசித் திகழும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. போன்றோர்தம் போராட்டம் எல்லாம் விழலுக் கிறைத்த நீராக, வீணுக்கு உழைத்த உழைப்பாக ஆகிவிட்டதே இன்று!

அந்நிய நாடுகளின் நிர்ப்பந்தம்

அந்நிய முதலீட்டுக்கு அகலமாகக் கதவு திறக்கப்பட்டுவிட்டது!

அந்நிய நாட்டின் நிர்ப்பந்தங்களுக்கு அடிமையாகி (பொருளாதார களத்தில்) ஆட்டுவிக்கும் வகையில் ஆடும் அரசாகவல்லவோ நம் நாட்டு மத்திய அரசு - மன்மோகன்சிங் அரசு ஆகிவிட்டது! அந்தோ, சமதர்மமே, உன் கதி இப்படியா?

51 சதவிகிதம் 49 சதவிகிதம் என்ற விகிதக் கணக்கில் அந்நிய முதலீடு உள்ளே - சில்லறை வணிகத்திலும் அக்டோபஸ் என்ற ஆபத்தான எட்டுக் கால் பிராணி போல் நுழைய அனுமதியளித்துவிட்டது!

தந்தை பெரியாரின் தொலை நோக்குப் பார்வை

இதற்குப் பெயர் சுதந்திர நாடா? வெள்ளைக்காரன் போய் கொள்ளைக்காரன் வந்தான் என்பதால் துக்க நாள் என்று தந்தை பெரியார் அவர்கள் தொலை நோக்கோடு, பேரெதிர்ப்பையும் பொருட்படுததாமல் துணிந்து தனித்து நின்று சொன்னது, 100 க்கு 100 விழுக்காடு உண்மையாகி வருகிறதே!

உலக மயத்தின் காரணமாக நம் நாட்டு அரிசி, கத்தரிக்காய், எல்லாம் கூட வெளிநாட்டவர் (பேட்டன்ட்) காப்புரிமைக்குப் பலியாகிவிட்ட நிலையில், எஞ்சியிருந்த நம் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் இந்த முயற்சியை விட மோசமான நிலை வேறு உண்டா?

மோடி மஸ்தான் வேலை!

வெளிநாட்டவர் வந்தால் போட்டி Competition அதிகம் ஆகும்; அதன் மூலம் மலிவு விலையில் மக்களுக்குக் கிடைக்கும். வேலை வாய்ப்புப் பெருகும்; வளர்ச்சி பெருகும் என்பதெல்லாம் மோடி மஸ்தான் மோசடி வித்தையே!

முதலில் விலையைக் குறைத்து வைத்து நம் நாட்டில் உள்ள பாரம்பரிய விவசாயிகள், சில்லறை வணிகர்கள் போட்டியிட முடியாத அளவுக்கு, கடைகளை அவர்களை மூடிவிடும்படிச் செய்து, பிறகு வெளிநாட்டுச் சில்லறை வர்த்தகக் கொள்ளை லாபக் குபேர ஏகபோக முதலாளிகள் - வைத்த விலைக்குத்தான் மக்கள் வாங்கித் தீரவேண்டும் என்று ஆக்கிவிடும் நிலை, தானே உருவாகும்!

திராவிடர் கழகம் எதிர்க்கும்!

எனவே இதனைத் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்க்கிறது.

கீரை விற்றுப் பிழைக்கும் கிராமப்புற முனியம்மா ஆயாக்களுக்கு இனி பிழைப்புக்கு வழியே இருக்காது!

இப்போது அத்தனை வெளிநாட்டு உணவுக் கூடங் களும் நம் நாட்டு நகர்ப் புறங்களில் மட்டுமல்ல, வளர்ந்த, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூட வந்து டேரா போட்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றன!

Franchise என்ற பெயரால் நடந்தாலும் இறுதி லாபம் வெளிநாட்டிற்குத்தானே!

கொக்கோகோலா, செவன்அப், மிராண்டா போன்ற குளிர்பானங்கள் நம்மூரில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வந்த சோடா, கலர் ஏழைகளின் செரிமான ஜிஞ்சர் பீர், உட்பட நடத்தப்பட்டு வந்த வியாபாரத்தை ஒழித்துக் கட்டின. அவற்றை நம்பி வாழ்ந்தவர்களும் வறுமைக்கு ஆட் பட்டனர். ரெடிமேட் சட்டைகள், உடைகள் எல்லாம் கூடிட வெளிநாட்டுக் கம்பெனிகளின் கிளைகளாக இங்கேயே தனது அகலக் கால்களை விரித்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே!

ஒன்றுபட்டு முறியடிப்போம்

எனவே இதனைக் கட்சி வேறுபாடின்றி எதிர்த்துக் குரல் கொடுத்து 50 லட்சத்துக்கும் அதிகமான மண்ணின் மைந்தர்களின் சில்லறை வாணிகர்களின் வாழ்வாதார உரிமையைக் காக்க நாம் அனைவரும் கைகோர்த்து நிற்போம் வாரீர்! வாரீர்!! தி.மு.க. தலைவர் கலைஞர் தமிழக முதல் அமைச்சர் ஆகியோர் எதிர்த்துள்ளனர்; தமிழகத்தில் இதற்கு அனுமதி இல்லை என்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களது நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.

ஒன்றுபட்டு நின்று முறியடிப்போம்!



சென்னை
15-9-2012

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கலைஞர் பேட்டி



சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட் டைக் கொண்டு வந்தால் சிறு வணிகர்களுக்கு அது பெரும் போட்டியாக அமைந்து விடுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர் :- சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினைக் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறதே, அதைப் பற்றி தி.மு.க.வின் கருத்து?

கலைஞர் :- தி.மு.கழகம் அதை ஏற்கனவே எதிர்த்திருக்கிறது. பல்வகைப் பொருட்கள் (மல்டி பிராண்ட்) சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால், இங்கேயுள்ள சிறு வணிகர்களுக்கும், அவர்களை நம்பியிருப்போருக்கும் பெரும் போட்டியாக அமைந்து விடும்.

இதனை நடை முறைப்படுத்துவதை மத்திய அரசு, மாநில அரசின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருப்பதால், நமது மாநிலத்தில் இதனை ஏற்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை. இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தியாளர் :- கடந்த முறை இந்தப் பிரச்சினை வந்தபோது தி.மு.கழகம் அதை எதிர்த்தது.

இப்போது எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?

கலைஞர் :- விரும்புகிற மாநிலங்கள் அமல் படுத்தலாம் என்பதுதான் நிலை. நமது மாநிலம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்!

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...

இந்து மதமும் தமிழரும்



(நக்கீரன் என்ற புனைப்பெயரில் எழுதியது)

மலடி மைந்தன், முயல் கொம்பை ஏணியாக அமைத்து வான்வெளியிலுள்ள மலரைப் பறிந்து வந்தான் என்று ஒருவன் கூறும் கதையைப் போல, தொடக்கமோ, முடிவோ அற்ற ஒரு முழு முதல் பொருளை மத நூல்கள் கூறும் வழியே சென்று அப்பெரும் பொருள் அளிக்கும் இன்பத்தைப் பெறலாம் என்று கூறுவது போன்ற அறியாமை பிறிதொன்று இல்லை.

மலடி மைந்தன் போன்றது கடவுள்; முயல்கொம்பு போன்றது மத நூல்கள் கூறும் நெறி; வான் மலர் போன்றது கடவுள் அளிக்கும் பேரின்பம். இதுகாறும் கூறியவை கடவுளைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இதிலும் தெளிவடைய மாட்டார்க்கு விரும்பினால், பின்னும் தெளிவாக விளக்கப்படும்.

திராவிட நாடு இதழ் - (17.5.1942)