Search This Blog

14.9.12

எந்தப் பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தமிழரசி, தமிழரசன் என்று பெயர் சூட்டப் பட்டது?

கல்கியின் இரு பதில்கள்

கல்கி வார இதழ் (16.9.2012) இரண்டு கேள்விகளுக்கு இரண்டு பதில்களை அளித்துள்ளது.

கேள்வி: தமிழரசன், தமிழரசி எனத் தமிழ் நாட்டில் பெயரைச் சூட்டுவதுபோல் மற்ற மொழிக் காரர்கள் தங்கள் மொழியை முன்னிலைப்படுத்திப் பெயர் சூட்டுவதில்லையே - ஏன்?

பதில்: தமிழ் மொழியின் தொன்மை, இனிமை குறித்து மகாகவி பாரதி போன்ற பலரின் கவிதைகள் நம் உள்ளத்தில் வேரூன்றியது ஒரு காரணம். அதனால் தாய்மொழிப் பற்று அதிகரித் தது. தமிழை வைத்து திராவிடக் கட்சிகள் அரசியல் பண்ணியது இரண்டாம் பட்சமான மற்றொரு காரணம்.

என்று கல்கி பதில் கூறுகிறதே! எதைச் சிந்தித்தாலும், சொன்னாலும், எழுதினாலும் பார்ப்பனர்களுக்கே உரித்தான அந்தக் குணம் மட்டும் ஜென்மத்தில் பிறந்தது  எதைக் கொண்டு சாற்றினாலும் போகவே போகாது.

பாரதியார் என்ன தமிழ் உணர்வை ஊட்டினார்? ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று பாரதி பாடியதில் உள்ள பார்ப்பனத்தனத்துக்கு விளக்கமும் தேவையோ!

அடுத்து ஆன்ற மொழிகளிலுள்ளே ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் எனும் வரிகளில் செத்துப் போன ஆரிய மொழியான சமஸ்கிருதத்துக்கு நிகரானது தமிழாம்.

சரி, இன்னொன்றையும் கேட்கலாம்; பாரதியார் தான் தமிழுணர்வை ஊட்டினார்; அதனால்தான் தமிழரசன், தமிழரசி என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர் என்பது உண்மையானால், பாரதி ஊட்டிய (?) அந்த உணர்வின் அடிப்படையில் எந்தப் பார்ப்பான் வீட்டுப் பெண்ணுக்குத் தமிழரசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது? எந்தப் பார்ப்பனப் பையனுக்குத் தமிழரசன் என்று பெயர் சூட்டப் பட்டது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டைக் கூற முடியுமா? விரலை மடக்க முடியுமா?

தமிழுணர்வு பீறிட்டது புரட்சிக்கவிஞர் படைப்பால் என்று கூறலாம். தமிழியக்கம் ஒன்றே ஒன்று போதுமே - தமிழுணர்வும், தமிழின உணர்வும் பொங்கி எழுவதற்கு!

கல்கியின் பதிலில் இரண்டாவது நச்சுத் தன்மையும் கவனிக்கத்தக்கதாகும். தமிழை வைத்து திராவிடக் கட்சிகள் அரசியல் பண்ணியது இரண்டாம் பட்சமான மற்றொரு காரணமாம்.

திமுக தன்னை அரசியல் கட்சியாக்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது 1957ஆம் ஆண்டு என்று வைத்துக் கொண்டால், ஆச்சாரியார் எனும் ராஜாஜி சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக 1937இல் வந்தபோது, இந்தியைத் திணித்ததால் தந்தை பெரியார் தலைமையில் தமிழ் நாடே பொங்கி எழுந்ததே. அதனுடைய விளைச்சல்தான் தமிழ் உணர்வு!

நாராயணசாமி, நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன், அன்பழகனாகவும், சோமசுந்தரம், மதியழகனாகவும், கோதண்டபாணி, தில்லை வில்லாளனாகவும், அரங்கசாமி, அரங்கண்ணலாகவும் மறுமலர்ச்சி பெற்றதும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டதன் எதிர்விளைவாகும்.

அந்தக் காலகட்டத்தில் திராவிடக் கட்சி எந்த அரசியலைப் பண்ணியதாம்? அதனால் தமிழரசன், தமிழரசி நடைமுறைக்கு வந்ததாம்?

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பால் சமஸ்கிருத ஊடுருவலால் கெட்டதுதானே தமிழும், தமிழனும்?

மனிதனை நான்கு வருணமாகப் பிளந்தது போதாது என்று சமஸ்கிருதம் என்ற நரி புகுந்து தமிழிலும் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டதே! அதன் விளைவு தானே தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும்?

துவேஷ உணர்வும், புத்தியும்   பார்ப்பனர்களிடத்திலே இன்னும் பதுங்கி இருக்கிறது என்பதன் அடையாளமே கல்கியின் பதில்.

தமிழா தமிழனாக இரு!

தமிழா இனவுணர்வு கொள்!!

(இன்னொரு பதில் குறித்து நாளை)

                   ---------------------------”விடுதலை” தலையங்கம் 13-9-2012


 கல்கிக்குப் பதில்!

கேள்வி: தீண்டாமையை அறவே ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளாரே!

பதில்: பரிசுத் தொகை உயர்த்தப்படுவதால் கிராமங்களில் தீண்டாமை அறவே ஒழியாது. கிராம அளவில் மக்கள் மனங்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் பொதுவசதிகள் மேம் படுத்தப்பட வேண்டும். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் முடுக்கி விடப்பட வேண்டும். கல்வியும் வாழ்க்கைத் தர உயர்வும்தான் தீண்டாமையை ஒழிக்கும்.

                           ------------------------(கல்கி 16.9.2012)

நல்ல அறிவுரைதான், அதே நேரத்தில் இந்த வகையில் கல்கியோ, அவர்களின் வட்டாரமோ, அவர்கள் ஏற்றிப் போற்றும் காமகோடி பீடாதிபதிகளோ எந்த ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டுள்ளனர் என்று தெரிவிக்க முடியுமா?

தீண்டாமை என்பது தனியாக நிற்கிறதா? அது ஜாதியின் கொடிய விளைவு தானே! அந்த ஜாதியின் சின்னமான பூணூலை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் விழாதானே பார்ப்பனர்கள் நடத்தி வரும் ஆவணி அவிட்டம்?

முதலில் பூணூலை நாங்கள் தரிக்கப் போவதில்லை என்று ஒரே ஒரு வார்த்தையைக் கல்கியில் எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்.

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன வர்தானே மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி?


பாலக்கோட்டில் முகாமிட்டிருந்தாரே அந்தச் சங்கராச்சாரியார் - அவரை அங்கு சென்று சந்தித்தவர் சாதாரணமானவரல்லர். மகாத்மா காந்திதான்; தீண்டாமை ஒழிப்பில் பெரியவாளின் ஆதரவு தேவை என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாரே! இறங்கி வந்தாரா?

மாறாக என்ன சொன்னார்? ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்ப வர்கள் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார் களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகு மென்றே நாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிற தென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.
(நாள்: 15.10.1927 நூல் தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 575-576).

இந்த மனிதநேயமற்ற, மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கிற - மனிதனை மனிதன் வெறுக்கின்ற காஞ்சி சங்கராச்சாரியாரின் கூற்றை எதிர்த்து ஒரு வரி எழுதுமா இந்தக் கல்கிக் கூட்டம்?

சங்கராச்சாரியாரின் கவலை எது பற்றியது? சாஸ்திர சம்பிரதாயங்களை மதிக்கின்ற, நம்புகின்றவர்களைப் பற்றித்தான்; இந்த சாஸ்திர சம்பிரதாயங்களின் காரணமாக தீண்டத்தகாதவர் கள் என்று ஒதுக்கப்படுகின்ற கோடானு கோடி மக்களின் மனம் புண்படுவதுபற்றி - பதைப்பது பற்றி கவலை துளியும் இல்லை.


இப்பொழுதுகூட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சொன்னால் ஆகமங்களைக் காட்டி சாத்திர சம்பிரதாயங்களைக் காட்டி, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர் களும் பார்ப்பனர்கள் தானே? அதனைக் குறை கூறி ஒரே ஒரு வரி எழுதட்டுமே கல்கி - சவால்விட்டே கேட்கிறோம்.

இப்படி தீண்டாமையை கடவுள், மதம், பக்தி, சாஸ்திரங்களோடு பாதுகாப்பாக சம்பந்தப்படுத்தி முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டு சந்தர்ப்பவாதமாக தீண்டாமை கூடாது என்பது பசப்புவது அசல் பித்தலாட்டம் அல்லவா!

சங்கரமடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் சங்கராச் சாரியாராக வரும் நாளே உண்மையான சுதந்திரம் வந்ததற்கு அடையாளம் என்று காகாகலேல்கர் சொன்னதை ஏற்றுக் கொள்வார்களா?

மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் எனும் நிலை இன்றுவரை தொடர்கிறதே!

தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படும் மக்கள் வெள்ளமெனப் பொங்கி எழுந்து தீண்டாமையை நம்பும் - கடைப்பிடிக்கும் சக்திகளை மூழ்கடிக்கும் காலம் வராமலா போகப் போகிறது!


எச்சரிக்கை! எச்சரிக்கை!!

                                 --------------------------”விடுதலை” தலையங்கம் 14-9-2012

12 comments:

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி.யா - அக்கிரகாரமா?

டில்லி செப்.14- சென்னை அய்.அய்.டி. யில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரிய ராக இல்லை என்பது தகவல் அறியும் சட்டத் தின் கீழ் தெரியவந் துள்ளது.

இந்த கல்வி மய்யத் தில் மெத்தம் 212 பேரா சிரியர்களும், 91 இணைப் பேராசிரியர்களும், 177 துணைப் பேராசிரியர் களும் உள்ளனர்.

ஆனால், இதில் ஒரு வர் கூட பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர் இல்லை. அதே போல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெறும் 3 பேர் தான் பேராசிரியர்களாகவும், 3 பேர் தான் இணைப் பேராசிரியர்களாகவும், 4 பேர் மட்டுமே துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

பழங்குடி சமுதா யத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே துணைப் பேராசிரியராக உள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரிய ராக இல்லை என்பது மட்டுமல்ல, இணைப் பேராசிரியராகக் கூட இல்லை. ஆனால், துணைப் பேராசிரியர் கள் பதவியில் மட்டும் 7 பேர் உள்ளனர்.

அய்.அய்.டி.களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லாததே இதற்குக் காரணமாகும். துணைப் பேராசிரியர் பதவிக்கான தேர்வில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. இதனால் தான் இந்தப் பதவிக்காவது பிற்படுத்தப்பட்டவர்கள் வர முடிந்துள்ளதாகத் தெரிகிறது.

இதே நிலைமை தான் அய்.அய்.டி. காரக்பூர், அய்.அய்.டி. காந்திநகர், அய்.அய்.டி. ரூர்கி, அய்.அய்.டி. ரேபர் என பல இடங்களிலும் நிலவுகிறது.

ஹைதராபாத் அய். அய்.டி.யில் மட்டுமே 22 பிற்படுத்தப்பட்டவர் கள் பேராசிரியர்களாக உள்ளனர்.

இந்தத் தகவல்களை தகவல் பெறும் சட்டத் தின் கீழ் மகேந்திர பிரதாப் சிங் என்பவர் திரட்டியுள்ளார். அய்.அய்.டி. டெல்லி, அய்.அய்.டி. மும்பை ஆகிய அய்.அய்.டி.க்கள் இவருக்கு இன்னும் பதிலைத் தரவில்லை. தந்தால் தான் அதன் வண்டவாளம் தெரிய வரும்.
14-9-2012

தமிழ் ஓவியா said...

உடனடியாக டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிநேற்றுமுதல் டீசல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூபாய் அய்ந்து (ரூ.5) ஏற்றி அறிவித்துள்ளது மத்திய அரசு. அத்துடன் வீட்டு உபயோகத்திற்கென உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆறு மட்டுமே ஒரு ஆண்டுக்கு அனுமதி! (அதாவது 30 நாளுக்கு அரை சிலிண்டர்தான்!) மீறி ஏழாவது சிலிண்டர் மற்றும் கூடுதல் சிலிண்டர்களைப் பயன்படுத்தினால் மேற்கொண்ட ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூபாய் 773 அளவில் கொடுத்து வாங்க வேண்டும். இதன்படி - ஊடகங்கள் கூற்றுப்படியே மாதம் ஒன்றுக்கு ரூ.2220 - அதாவது 50 விழுக்காடு செலவு கூடுதலாகும். திராவிடர் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

வாழ்வின் முதுகெலும்பை முறிக்கும் கொடுமை!

இதைவிட ஏழை, எளிய, நடுத்தர, வியாபார, விவசாயிகள், குடும்பத் தலைவிகள் ஆகியோரது வாழ்வின் முதுகெலும்பை முறிக்கும் கொடுமை வேறு உண்டா?

விவசாயிகள், தொடரும் மின்வெட்டு காரணமாக, பம்ப் செட்டுகளை இயக்க டீசல் என்ஜின்களைத்தான் - வாடகைக்கு எடுத்தும்கூட பயன்படுத்தும் நிலையில், லிட்டருக்கு டீசல் விலை அய்ந்து ரூபாய் ஏற்றம் என்றால், இது விவசாய உற்பத்தி உட்பட பல தரப்பட்ட மக்களுக்குச் சுமை - அதுவும் தாங்க முடியாத சுமையாக ஆகிவிடாதா?

மத்திய ஆட்சியாளர்கள் கூட்டணி அரசு (ரு.ஞ.ஹ) என்ற போதிலும்கூட, கட்சித் தலைவர்களை கலந்து விவாதித்து ஒரு முடிவு எடுக்கும் ஓர் ஆரோக்கிய அரசியலை நடத்தாமல், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக முடிவு எடுப்பது சரிதானா? (அமைச்சரவை முடிவு என்பது சரியான சமாதானமாகாது).

பெரியண்ணன் மனப்பான்மை!

தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அதன் தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டாமா?

எல்லாவற்றிலும் இப்படி ஒரு முடிவைத் திணிப்பது, பொது மக்களிடத்தும் சரி, கூட்டணியிலும் சரி அக்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் பெரியண்ணன் மனப்பான்மை ஆகாதா? ஆளும் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

இல்லத்தரசிகளின் கோபாக்கினியில் சிக்கி, மீண்ட அரசுகள் உண்டா? சிந்திக்க வேண்டும் - மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சித் தலைமை.

வேறு வழிகளில் இழப்பைச் சரி செய்ய வேண்டும்

இத்தகைய விபரீத யோசனைகளைக் கூறும் அதிகாரவர்க்கத்திற்கும், வெகு மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மேலும் அந்த உயர் அதிகார வர்க்கம் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக செயற்பாடுகளை இவர்களுக்கு ஆலோசனைகளாக வழங்கி, இந்த ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாக்கும் பணியில் உள்ளதாகவே தெரிகிறது. அதற்கு ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதன் தலைமையும், இரையாகலாமா?

உடனடியாக விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

டீசல் விலை உயர்வு கலைஞர் கருத்து


தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சற்றும் எதிர்பாராத தும், மிகவும் அதிகமா னது மான டீசல் விலை உயர்வு தொடர்ச்சியான பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் விலை கடுமை யாக ஏறிவரும் நிலையில், டீசலுக்கு அறிவிக்கப் பட்டுள்ள இந்த விலை உயர்வானது, ஏழைகளை யும், நடுத்தர மக்களையும், மாத ஊதியம் பெற்று குடும்பம் நடத்தக் கூடியவர்களையும் பெருமள விற்கு பாதிக்கும். மேலும், உயர்ந்து வரக்கூடிய பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, டீசலுக்கு செய்யப்பட்டுள்ள விலை உயர்வினை தாமதம் ஏதுமின்றி திரும்பப் பெற வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் உடனடியாக, கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தைக் கூட்டி, இதுகுறித்து விவாதித்து முடி வெடுக்க வேண்டும் என இவ்வேளையில் கேட் டுக் கொள்கிறேன்.

மேலும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று செய்யப் பட்டுள்ள அறிவிப்பும் உடனடியாகத் திரும்பப் பெறப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

இது தேவையா? பெண்களே முடிவு செய்யுங்கள்

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட் டில் பெண்கள் முன்னேற்றம் மிக வேகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நூறாவது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சீறிப்பாய்ந்தது.

அதேபோல, கல்வி என்றாலும் சரி, வேலைவாய்ப்பு என்றாலும் சரி, தாய்க்குலத்தின் முன்னேற்றம் விண்ணைத்தொடும் அளவில், வேகமாக மேலே ஏறிக் கொண்டு இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எந்த துறையை எடுத்தாலும், ஆணுக்கு சரி நிகர் சமானமாய் பெண்கள் தங்கள் திறமை யைக் காட்டிக்கொண்டு இருக்கிறார் கள்.

எடுத்துக்காட்டாக, ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் ஒரு பஸ் மீது தாக்குதல் நடந்தது. அந்த வழியாகச்சென்ற ஆண்களும், பெண் களும் பல இன்னல்களுக்கு ஆளான நிலையில், ஆண் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் சற்று தயங்கிக்கொண்டிருந் தனர். அப்போது, பெண் போலீஸ் துணை கமிஷனராக இருந்த லட்சுமி, கையில் லத்தியை எடுத்துக்கொண்டு மிகத் துணிச்சலாக வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்ததைப் பார்த்து, மற்ற ஆண் அதிகாரிகளுக் கும், போலீஸ்காரர்களுக்கும் நெஞ்சில் சுருக்கென்று தைத்து, தைரியத்தை வரவழைத்தது.

பெண்கள் சமுதாயம் இன்று ஆல மரமாக வளர்ந்து, செழித்து, படர்ந்து இருக்கிறது என்றால், அதற்கான விதையை ஊன்றியவர் தந்தை பெரி யார்தான். இப்போது பேசுகிறோமே, பெண்களுக்கு சொத்துரிமை, விதவை கள் மறுமணம் போன்ற பல பெண் விடுதலை தொடர்பான எண்ணங் களுக்கு வித்திட்டவர் அவர்தான்.

அந்த விதைதான் இன்று முளைத்து, செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதுபற்றி குறிப்பிடும்போது, பெண் அடிமை ஒழிக்கவந்த அய்யாவை அடை யாளம் கண்டுதான், தமிழ்நாட்டு தாய்க் குலம் பெரியார் என்று, தந்தைக்கு தனிப்பெரும் பட்டம் தந்து தனது நன்றி யுணர்வைக் காட்டியது என்று குறிப்பிட் டுள்ளார்.

பெண்களை, ஆண்களுக்கு குற்றேவல் செய்யும் நிபந்தனையற்ற அடிமைகளாக நினைக்கும் போக்கை, நமது சமுதாயத்தின் சரிபகுதி மக்களான பெண்கள் சமுதாயம், எதற்கும் லாயக் கற்ற, பயனற்ற, பதுமைகளாக இருக்கும் நிலையை மாற்ற, தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட பெரியாரின் அதிரடி முயற்சி களால்தான் இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் முத்திரை பதித்து வருகி றார்கள்.

இப்படி ஒரு பக்கம் பெண்கள் உயர்ந்த நிலைக்கு சென்று கொண்டி ருக்கும்போது, மீண்டும் அவர்களை பழைய நிலைமைக்கு கொண்டுவரும் ஒரு முயற்சியில் மத்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபடுவது பல விமர்சனங் களுக்கு உட்படுத்தியுள்ளது.

வேலைக்கு செல்லாமல் இல்லத்தரசி களாய் வீடுகளில் அனைத்து வேலை களையும் செய்து கொண்டிருக்கும் பெண் களுக்கு, கணவன் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை பரிசீ லித்து வருகிறது. நடைமுறைக்கு இது சாத்தியமா? என்பதை பெண்கள்தான் பரிசீலித்து முடிவு செய்யவேண்டும்.

ஆணும், பெண்ணும் இரண்டு குதிரை களாக பூட்டப்பட்டு இழுத்துச் செல்வது தான் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை என்ற தேர். அவர்கள் இருவரும் ஜோடி பறவை கள். இதில், யார் மேல், யார் கீழ் என்று எப்போதும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பல வீடுகளில் ஆண்கள் தங்கள் சம்பளம் முழுவதை யுமே தங்கள் மனைவியிடம் கொடுத்துத் தான் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கச் சொல்கிறார்கள்.

அப்படியானால், வேலைபார்த்து சம்பாதித்து, வீட்டுக்கு தேவையான வேலைகளை செய்யும் கணவன்மாருக்கு யார் சம்பளம் கொடுப் பது? இப்போதெல்லாம் கணவன் மனைவி இருவரும் வேலை செய்யும் போது, வீட்டு வேலைகளையும் இரு வருமே பகிர்ந்து கொள்ளும் மனப் பான்மை வளர்ந்துள்ளது. அப்படியா னால், யார் யாருக்கு சம்பளம் கொடுப் பது? இதுமட்டுமல்லாமல், வீட்டில் சமையல் வேலை உள்பட பல வேலை களை செய்யும் பெண்களுக்கு ஒவ் வொரு வேலைக்கும் எவ்வளவு சம்பளம் என்பதை யார் நிர்ணயம் செய்வது? இதை யார் கண்காணிப்பது?

இப்படி இல்லாத ஊருக்கு வழியை காட்டுவதை விட்டுவிட்டு, ஏற்கெனவே முன்னேறி வரும் பெண்கள் சமு தாயத்தை இன்னும் முன்னேறச் செய்வது எப்படி?

என்று சிந்திப்பதே சாலச்சிறந்ததாகும். இவ்வாறு சம்பளம் கொடுப்பதால், இல்வாழ்க்கை துணைவி என்ற நிலையைவிட்டு, கீழே இறக்கி, சம்பளத்துக்கு வேலைசெய்யும் ஒரு பணிப்பெண் போல நினைத்தால், அன்பு எங்கே வளரும்? நான்தான் பணம் கொடுக்கிறேனே என்ற ஆணவ போக்குதானே ஆண்களிடம் வளரும், ஆணாதிக்கம் தானே தலைதூக்கும்.

எனவே, இது தேவையா? என்பதை நமது தாய்க்குலத்தின் முடிவுக்கே விட்டுவிடுங்கள்.

நன்றி: தினத்தந்தி தலையங்கம் 14.9.2012

தமிழ் ஓவியா said...

நாஸ்திகன் யார்? பெரியார் விளக்கம்நாஸ்திகன் என்பதற்கு கடவுள் இல்லை என்பவன் என்று பொருள் இல்லை. புராண, இதிகாச, வேத, சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களைளே - அவற்றைப் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே பார்ப்பனர்கள் நாஸ்திகர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

இராமா யணத்தில் - பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் புத்தர் முதலான வர்களை - பகுத்தறிவைப் பயன்படுத்திய தற்காக - நாஸ்திகர் என்று குறிப்பிட்டிருக் கிறார்கள். இவை இன்று நேற்று ஏற்பட்ட வையல்ல. யார் ஒருவர் பார்ப்பன ஆதாரங் களில் கை வைக்கிறானோ, அவனுக்கெல்லாம் நாஸ்திகப் பட்டம் சூட்டியிருக்கிறார்கள். ராவணன் பெரிய சிவபக்தன். ஆனால், பார்ப்பன ஆதாரங்களை எதிர்த்ததால் நாஸ்திகன் எனப்பட்டிருக்கிறான். அப்படியே இரணியனும்.

- தந்தை பெரியார்

(திருச்சி - பொன்மலையில் தந்தை பெரியார் உரை - 22.09.1956, (விடுதலை - 25.9.1956) தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியார் 78ஆவது ஆண்டு பிறந்தநாளில் பங்கு பெற்று பொன்னாடை போர்த்தினார் - விழாக்குழு சார்பில் சமுதாயப் புரட்சி வீரர் எனும் தந்தை பெரியார் உருவம் பொறித்த தங்கப்பதக்கமும் அவ்விழாவில் அளிக்கப்பட்டது.)

தமிழ் ஓவியா said...

மகர தீபம் மோசடி - கேரள அரசே ஒப்புதல்மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது - இயற்கையானதல்ல என்பதை வலியுறுத்தி தடை செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கேரள அரசின் சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளர் ஆர்.அனிதா தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

மகர சங்கராந்தி நாளன்று பொன்னம் பலமேடு பகுதியில் வானத்தில் தெரியும் மகர ஜோதி ஒரு நட்சத்திரம்; அது இயற்கையாக தோன்றக் கூடியதே! மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல.

ஆனால், மகர ஜோதி வானத்தில் தோன்றும் அதே நேரத்தில் பொன்னம் பலமேட்டில் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது மகரதீபம் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது. அது மனிதர்களால் ஏற்றப்படுவது தான். அதைத்தான் பக்தர்கள் மகரஜோதி என்று கும்பிட்டு வருகிறார்கள்.

காலம் காலமாக இது நிகழ்கிறது. அந்த மகர ஜோதி தெய்வீகமானது என்று நாங்கள் (தேவசம் போர்டு) கூறியதில்லை. மகர ஜோதி பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகர ஜோதி ஏற்றப்படுவதை தடை செய்ய முடியாது.

(விடுதலை, 26.4.2011)

தமிழ் ஓவியா said...

எம்.என்.ராய்

அறிவிருந்தும் அறிவைப் பகுத் தறிந்து பயன்படுத்தாதது வருந்தத் தக்கது. இவ்விதம் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் கடவுள் குஞ்சு களாக நடிக்க முற்படுகிறார்கள்.

இது அறிவை நல்ல துறையில் செலுத்தாதக் குறைபாட்டை மறைக் கும் பித்தலாட்டமேயாகும். இவர்கள் மெய்ம்மையை விடுத்து பொய்மையைக் கையாள்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

சொல்லுவது ஆனந்தவிகடன்!கேள்வி: மகாபாரதத்தில் கிருஷ்ணன் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன் உள்பட கவுரவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குருசேத்திர போர் வரை செல்ல விட்டார்?

பதில்: முதன் முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் படி, கிருஷ்ணர் யாதவர்களின் அரசனே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று போர் வேண்டாம் என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப் பிறபட்ட காலத்தில்தான் . பிறகு கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப்பெரிய அளவில் கிருஷ்ணன் வழிபாட்டை முதலில் துவக்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்.

(ஆனந்தவிகடன், 31.10.2007)

அரசன் கடவுளானது எப்படி? யார் அப்படி ஆக்கினார்கள்? மனிதன்தானே. மனிதன்தான் கடவுளைக் கற்பித்தானே தவிர கடவுள் மனிதனைப் படைக்கவில்லை என்பது இப்பொழுது புரிகிறதா!

தமிழ் ஓவியா said...

சாராயக் கடவுள்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியிலிருந்து 5 மைல் தொலைவில் கால பைரவர் கோயில் உள்ளது. அங்கு சாமிக்கு சாராய நை வேத்தியம் செய்கின்றனர். பைரவர் வாயிலும் ஊற்றுகின்றனர். மீதியை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கு கிறார்கள்.

- ராஜி ராதா, பெங்களூர், (ராணி, 1.2.2009)

தமிழ் ஓவியா said...

நேரில் பேசுவோம் ஈரோட்டில்!ஈரோடு எனும் பெயர் வரைபடத்தில் ஈர்ப்பு மிக்க பெயர். அதற்குக் காரணம் அந்த ஊரில் ஈரோடு வெ. இராமசாமி என்னும் புரட்சியாளர் பெரியார் தோன்றியதே!.

வாலிப வயதில் அந்த ஊரில் அந்த மாபெரும் தலைவர் வலம் வந்தார். அந்த நகரின் நகராட்சித் தலைவராகவும் இருந்து சாதனை முத்திரை பொறித்தார்.

ஆட்சித் துறையில் அவர் சென்றிருந்தால் கூட அதிலும் அசகாய ஆளுமை படைத்தவராக இருந்திருப்பார் என்பதற்கு ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்து அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகள் கட்டியம் கூறும். அந்தப் பணிகளுக்காக ராவ் பகதூர் பட்டம் கூட அவருக்காகக் காத்திருந்தது. கால் கடுதாசியில் எழுதிக் கொடுத்துவிட்டு நடை யைக் கட்டிய நாயகர் ஆயிற்றே அவர்.

ஈரோட்டில் அவர் எப்படி இருந்தார்? அவரது அருமை நண்பர் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் பேனாவுக்குத்தான் அந்த ஓவியத்தைத் தீட்டும் சக்தியுண்டு.

ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களி யாட்டில் அயர்ந்தவர். உண்டாட்டில் திளைத் தவர். ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார் போல எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்காக தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்?

- என்ற ஓவியம் தீட்டினார் திரு.வி.க.

ஆம். அவர் ஈரோட்டு வேந்தர்தான் - அந்த ஈரோட்டில் 1930 இல் மே 10, 11 ஆகிய இரு நாட்களில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடத்தி, புரட்சித் தீக்குச்சியை கொளுத்திப் போட்டார்! எந்தப் பொதுக் கூட்டங்களிலும், ஆரம்பத் திலாவது, முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவை செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இந்த ஒரு சிறு எடுத்துக்காட்டு போதும் - அந்தச் சிங்கத்தின் உள்ளக் குகைக்குள் வெடித்துக் கிளம்பும் புரட்சியின் ஆழத்திற்கும் ஆவேசத்துக்கும்!


தமிழ் ஓவியா said...

மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இதே ஈரோட்டில்தான் (1932 டிசம்பர் 28, 29) சுயமரியாதை இயக்க சமதர்மத் திட்டத்தை வெளியிட்டு வெள்ளைக்கார ஆட்சியாளர்களையே அதிர வைத்தார். கம்யூனிச பூதத்திற்குக் கால் கோள் செய்கிறாரோ இந்தத் தாடிக்காரர் என்று பூதக் கண்ணாடியை வைத்து நோட்டமிட ஆரம்பித்தனர்.

ஈரோட்டை மய்யப்படுத்தி எத்தனை எத்தனையோ நிகழ்வுகளைத் தோரணம் கட்டித் தொங்கவிடலாம்.

இதே ஈரோட்டில்தான் (23, 24-10-1949) திராவிடர் கழக 19 ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டைக் கூட்டி சாரட்டில்அண்ணாவை அமர வைத்து, வழி யெல்லாம் நடந்து வந்து வழி காட்டினார். தந்தை பெரி யார் அண்ணாவிடம் பெட்டிச் சாவியைக் கொடுக்கத் தயார் என்றதும் அந்த ஈரோட்டு மாநாட்டில்தான்.

திருக்குறள் மாநாடு, புத்தர் மாநாடு, குலக்கல்வித் திட்ட ஒழிப்பு மாநாடுகள் என்று அலை அலையாக வரலாற்று நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்ட ஊர் இந்த ஊர்.

குடிஅரசு பிள்ளை பிறந்து தவழ்ந்ததும் இந்தப் பூமியில்தான்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகும் கூட பெரியார் நூற்றாண்டு விழா உள்ளிட்ட எத்தனை எத்தனையோ மாநாடுகள் பவளவிழா கண்ட விடுதலைக்குச் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா (2009) நடந்ததும் இந்த ஈரோட்டில்தான்.

இயக்கத் தந்தையின் தாய்ப் பூமியாம் ஈரோடு இவ்வாண்டு செப்டம்பர் 17 இல் புதிய விழா காண இருக்கின்றது. புகழ் பூத்த தம் தனயனுக்கு 134 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது ஈரோடு.

ஊரெல்லாம் விழாக் கோலம் - சுவர் எல்லாம் எழுத்துக் கோலம்! எங்கெங்கும் கருஞ்சட்டைத் தொண்டர்களின் சிட்டு நிகர் சுறுசுறுப்பான பணிகள்.

பேரணியும் உண்டு - மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சம் இல்லை.

இந்த ஆண்டு நம் அய்யா பிறந்த ஊருக்குப் போகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியிலே கழகக் குடும்பங்கள் தயாராகி விட்டன.

காலை - மாலை இரு வேளைகளிலும் கருத்தரங்கங்கள். அய்யா பிறந்த நாள் மலர் வெளியீடு தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார் (பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன்) நூல் வெளியீடு - விழாவுக்குத் தனி சிறப்பு முத்திரை.

கலைஞர் தொலைக்காட்சியில் திராவிட இயக்க நூற்றாண்டு விழாவினையொட்டி மூன்று வார காலம் தமிழர் தலைவர் ஆற்றிய தொடர் உரையின் குறுந்தகடுகள் வெளி யிடப்பட உள்ளன.

எல்லா வகைகளிலும் சிறப்பு! சிறப்பு!! அமர்க்களம் போங்கள்!

நேரில் பேசுவோம் - மகிழ்வோம், வாருங்கள் தோழர்களே!

- மின்சாரம்
14-9-2012

bharatdessam said...

<¿¡ý ±øÄ¡§Á ±òÐ츢§Èý ¬É¡ ¦À¡¢Â¡÷ ¾Á¢Æý þø§ÄÄ>