Search This Blog

2.10.11

காந்தி பிறந்தநாளில் மறக்கக்கூடாதவை!


1. காந்தி, தமக்குப் பயன்படும் வரையில் பாரிஸ்டர் காந்தியைப் பார்போற்றும் மகாத்மா ஆக்கினர்.

2. வகுப்புரிமையின் நியாயத்தை உணர்ந்து (1946 முதல்) அன்றைய காங்கிரஸ் முதல் அமைச்சர் ஓமாந்தூர் (O.P. இராமசாமி ரெட்டியார்) மீது, வகுப்புத் துவேஷி என்று குற்றப்புகார் வாசித்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு - வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகு, புரோகிதம் செய்து சனாதனம் காக்க வேண்டிய பிராமணர்கள் டாக்டர் படிக்க, பிணம் அறுக்கப் போகலாமா? என்று கேட்டார் காந்தியார். கேட்ட ஓரிரு நாள்களிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்ற கோட்சே என்ற மராத்தியப் பார்ப்பனரால் கும்பிட்டுக் கொண்டே, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டார். (30-1-1948 இல்).

125 வயது வரை வாழ்வேன் என்று சொன்ன காந்தியாரைக் கொன்றது ஆரிய-பார்ப்பன-ஹிந்து மதவெறி. அதே மாதிரி இன்றும் சாகாமல் - சாகடிக்கப்படாமல் அரசியல் கட்சியாகி அரியணை ஏறியும், மீண்டும் அரியணை ஏறத்துடிக்கிறது.

3. இப்படி துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்த காந்தியை - மகாவிஷ்ணுவே கோட்சே அவதாரம் எடுத்து, பூபாரம் தாங்கியது போதும், மோட்ச லோகத்திற்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றதாக ஒரு நவீன புராணத்தை அக்கிரகார ஆனந்த விகடன் தனது தீபாவளி மலரில், கட்டைவண்டி புரபொசர் கே.சாமிநாதன் என்ற பேராசிரியப் பார்ப்பனரால் எழுதியும் பதிவு செய்தது கொடுமையிலும் கொடுமையல்லவா?

4. தென்னாட்டு வருகையின்போது, கோயில்கள் விபச்சார விடுதிகளாகவே இருக்கின்றன என்று தயங்காமல் கூறியதற்காக, திருவல்லிக்கேணி நாகராஜ சர்மாக்களும், சாஸ்திரிகளும் மைலாப்பூர் அய்யர்களும் நாகூசாமல் திட்டித் தீர்க்க வில்லையா?

5. (சுயமரியாதை இயக்கம் (1926 இல்) துவங்குவதற்கு முன்பு) முன்பெல்லாம் மைலாப்பூர் சீனுவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்த எங்களை (கஸ்தூரிபாய் காந்தியும்) இப்போது (1928 - சுயமரியாதை இயக்கம் மும்முரமாக குரல் கொடுத்ததன் விளைவு) அவர்கள் வீட்டு அடுப்பங்கரை வரையில் செல்ல அனுமதித்துள்ளனர் என்று காந்தியாரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். (ஆதாரம்: தமிழ் நாட்டில் காந்தி என்ற அ. இராமசாமி (அய்யர்) தொகுத்த ஆயிரம் பக்க நூல்.)

6. இந்திய அரசியல் சட்டத்தில் ஹிந்தியை ஆட்சி மொழியாக்கிய வரைவுக்குழு பார்ப்பனப் பெரும்பான்மையர் காந்தியார் சொன்ன ஹிந்துஸ்தானை (உருது கலந்ததை) விட்டு விட்டு சமஸ்கிருத எழுத்தையே கொண்ட தேவநாகரி - கடவுள் எழுத்து பாஷை என்று எழுதி, காந்தியாரின் கருத்துக்கு முற்றிலும் மாறாக நடந்தனர் என்பது முக்கியம்.

7. பெங்களூருவில் காந்தியாரும், தந்தை பெரியாரும் சந்தித்துப் பேசியபோது, என்ன நாயக்கர். இவ்வளவு தூரம், பிராமண எதிர்ப்பாளராக நீங்கள் ஆகவேண்டுமா? அது சரி உங்கள் கண்ணோட்டத்தில், பிராமணர்களில் நல்லவர்கள் ஒருவர் கூடவா இல்லை? கோபாலகிருஷ்ண கோகலே நல்ல பிராமணர் இல்லையா என்று கேட்டார். அதற்கு (தந்தை பெரியார்) அன்று ஈ.வெ.ரா. காந்திஜி, தாங்கள் ஒரு பெரிய மகாத்மா. அப்படிப்பட்ட நிலையில் தங்கள் கண்ணுக்கே ஒரே ஒரு நல்ல பார்ப்பனர்தான் தென்பட்டுள்ளார்; நானோ மிகச் சாதாரணமானவன்; வெறும் ஆத் மாவைக் கூட நம்பாதவன். என் கண்ணுக்கு எப்படி நல்ல பார்ப்பனர் எளிதில் தெரிவார்கள் என்று பட்டென்று அடக்கத்துடன் பதில் கூற காந்தியார், இராமநாதன் உட்பட அனை வருமே சிரித்து விட்டனராம். அது இன்னமும் உண்மையாகத்தானே இருக்கிறது?

-------------- கி. வீரமணி அவர்கள் 2-10-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

cm.mani said...

அருமை,அருமை....