தமிழர் தம் தேசியத் திருநாள்!
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திருச்சி - திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பல திட்டங்களை, கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழினத்தின் தேசியத் திருவிழா பெரியார் பிறந்த நாள் விழா (செப்டம்பர் -17) என்பது பரவலாக்கப்பட்டு, நல்ல வகையில் இதற்கான காரணங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு, ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இந்த விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படிச் செய்ய வேண்டும். ஊரில் பொது விழாவாக வேண்டும். விழா நடத்தப்பட்டால் சிறுவர் முதல் முதியோர் வரை இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்படும்.
அறிவுப் போட்டிகள், உடற்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று நடத்துவதன் மூலம் இந்த விழாவை விரிவு செய்து கொண்டே போகலாம்.
தமிழர்களின் இன இழிவை அடிப்படையாக வைத்து தீபாவளி போன்ற மூடநம்பிக்கை பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கோயில் திருவிழாக்கள் என்ற பெயரில் அசுரர்களை வதம் செய்வதாகத் தலப் புராணங்களை எழுதி வைத்துள்ளனர். அசுரர்கள் என்றால் வேறு யாருமல்லர். இந்த மண்ணுக்குரிய பூர்விக மக்களான திராவிடர்கள்தான். வந்தேறிகளாள ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக திராவிடர்களைக் கொன்றொழித்த நாள்களைத்தான் விழாவாகக் கொண்டாடும்படிச் செய்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க கொடுமை - சூழ்ச்சி என்னவென்றால் எந்த இன மக்கள் சூழ்ச்சியால் கொன்றொழிக்கப்பட்டார்களோ அந்த மக்களே அதன் தன்மையைப் புரிந்து கொள்ளாத வகையில், பாதிப்புக்கு ஆளான இனத்தைச் சேர்ந்த மக்களே விழாக் கொண்டாடுவதுதான். இந்தச் சூழ்ச்சியை பாதிக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள முடியாததற்குக் காரணம், அம்மக்களை ஆட்கொண்ட பக்திப் போதைதான்.
கடவுளே கொன்றார் என்று கூறி அதற்கொரு மகத்துவத்தை ஏற்படுத்தி விட்டனர்.
இந்தப் பரிதாபத்துக்குரிய மக்களை இந்த இழிவுச் சேற்றிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமானால் அதற்கொரு மாற்றுத் திட்டமாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை வீட்டுக்கு வீடு கொண்டாடும் படிச் செய்து, இந்த மாபெரும் புரட்சியாளர்தான் நம் இன மக்களுக்கு தன்மான உணர்வை ஊட்டினார், பகுத்தறிவு வெளிச்சத்தைக் கொடுத்தார், இன இழிவை ஒழித்தார், ஜாதியால் நம் இன மக்கள் பிளவுண்டு கிடப்பதை எடுத்துக் கூறி நம் இன ஒற்றுமையை வளர்த்தார். ஓரினம் நாம் என்கிற உணர்வை நம்மிடையே ஊட்டினார், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிற மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, கல்வி கற்கும் வேட்கையை ஏற்படுத்தி அதற்கான உரிமைகளையும் ஈட்டித் தந்தார். கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெறுவதற்குக் காரணமாக இருந்தார். பெண்ணடிமையை ஒழித்தார் சமத்துவத்தை யும், சமதர்மச் சிந்தனையையும் வளர்த்தார். அதனால் இந்த மாபெரும் தலைவன் பிறந்த நாள் நம் இனத்தின் தேசியத் திருநாள் என்ற ஒரு நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
முதல் கட்டமாக நமது கழகத் தோழர்கள் தத்தம் இல்லங்களில் புத்தாடை பூண்டு விருந்துகள் ஏற்பாடு செய்து கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். உற்றார், உறவினர்களை அழைக்கலாம்; அவர்கள் வீட்டிற்கும் செல்லலாம். இப்படி நமது சமுதாய உறவுகளை தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்ற பெயரில் விரிவுபடுத்துவோம்.
உள்ளூரில் உள்ள கல்விக் கூடங்களுக்குச் சென்று இனிப்புகளை வழங்க வேண்டும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை ஏழை - எளிய மக்கள் வீட்டுப்பிள்ளை களுக்கு வழங்கலாம். ஒலி பெருக்கியை வைத்து தந்தை பெரியார் அவர்களின் அறிவுரைகளையும், இயக்கப் பகுத்தறிவுப் பாடல்களையும் ஒலி பரப்பலாம்.
கழகம் வெளியிட்ட சிறு சிறு நூல்களையும் பரிசாகக் கொடுக்கலாம். கழகம் வெளியிட்டுள்ள வண்ணமிகு அய்யா பிறந்த நாள் சுவரொட்டிகளை பொது இடங்களில் தட்டிகளில் ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும். சுவர்களில் ஒட்டுவதைவிட இதற்குக் கூடுதல் பலன் கிடைக்கும்.
வீட்டு வாசலில் தந்தை பெரியார் படத்தை அலங்கரித்து வைக்கலாம். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் யுக்திகளைப் பயன்படுத்தி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் செய்ய வேண்டும்.
இதனால் தந்தை பெரியார் அவர்களுக்குப் புதிதாகப் பெருமை வந்து சேரப் போவதில்லை. மாறாக மக்கள் அதனால் பயன் பெறுவார்கள். பகுத்தறிவுச் சிந்தனை களால் கூர் தீட்டப்படுவார்கள்; சமுதாயம் மறுமலர்ச்சி பெறும்.
மதங்களால் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் மண்டையை உடைத்துக் கொண்டு அல்லல்படும் அபாயத்திலிருந்து மக்கள் மீட்கப்படுவதற்கு மதமற்ற ஒரு புத்துலகம் உருவாக்கப்பட வேண்டும். அதனை உருவாக்கும் உயர் எண்ணங்கள் மலரும் சோலைதான் தந்தை பெரியார்.
அந்த அறிவுத் தந்தையின் புரட்சி மலர்களை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்க்கும் தூதன்தான் - தந்தை பெரியார் நமக்கு அளித்துச் சென்ற அறிவாயுதமான விடுதலை
விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தையும் நமது ஆசான் பிறந்த நாளிலிருந்தே துவக்குவோம்! வெற்றி பெறுவோம்! வாழ்க பெரியார்!
---------------------"விடுதலை” தலையங்கம் 13-9-2011
1 comments:
முதலில் நான் தான்
நல்ல கருத்தை பகிந்ததற்க்கு நன்றி
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
Post a Comment