Search This Blog

25.9.11

கி.வீரமணி கூட்டத்தில் கல்வீச்சு - ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறை

காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம்

காந்தியை கொன்ற, மத்திய அரசாலே 3 முறை தடை செய்யப்பட்ட

காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம்

ஜாதி ஒழிய சமத்துவ சமுதாயம் மலர பாடுபடுகின்ற எங்கள்மீது

கற்களை, டியூப்லைட்டுகளை வீசி தாக்குவதா?

தமிழர் தலைவர் கண்ணியத்துடன் எழுப்பிய கேள்வி

கூட்டத்தினர் மீது கல்வீச்சு நடந்தபோது பரபரப்பு... (விருகம்பாக்கம், 24.9.2011)

தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (விருகம்பாக்கம், 24.9.2011)

காந்தியைக் கொன்ற, 3 முறை மத்திய அரசாலே தடை செய்யப்பட்ட, காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்றக் கூட்டம் மக்கள் அறிவு பெற, நாட்டில் மனிதநேயம் மலர்ந்தோங்கிட ஜாதியை ஒழித்து சமத்துவ சமுதாயம் மலர பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற எங்கள் கூட்டத்தில் கல்வீசி தாக்குவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளக்கவுரை யாற்றினார்.

சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ்.காலிதத்தனம்

எப்படியாவது திராவிடர் கழக பொதுக் கூட்டத்தை நிறுத்த வேண்டும். திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி பேசுவதை தடுத்து நிறுத்தி முறியடிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி அமைப்பினர் பா.ஜ.க.வினர் ஆகியோர் திட்டமிட்டு வன்முறை கலவரத்தில் கூட்டம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை தொடர்ந்து ஈடுபட்டனர். கூட்டத்தில் கற்களை வெளியில் இருந்து பல முறை வீசினர்.

கல்வீச்சு, டியூப்லைட் தாக்குதல்

பொதுக்கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த டியூப்லைட்டுகள் சுமார் 5க்கும் மேற்பட்டவைகளை உடைத்தெறிந்தனர். இப்படிப்பட்ட பதற்ற மான சூழ்நிலையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுமார் முக்கால் மணிநேரத்திற்கு மேல் மனிதநேயத்துடன் அதே நேரத்தில் ஆவேசமாகவும் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையில் கூறியதாவது:


இன்றைக்கு இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காவல்துறையினருடைய அனு மதியோடு ஏற்பாடு செய்து நடைபெற்றுக்கொண் டிருக்கின்ற இந்த கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பொதுக்கூட்டம் நடைபெறக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள், பி.ஜே.பி.யினர் திட்டமிட்டு பொதுக்கூட்டத்தில் கற்களை வீசியிருக்கிறார்கள்.

எனக்கு கறுப்புக்கொடியா?

அது மட்டுமல்ல. நான் இந்த பொதுக்கூட்டத் திற்கு வரும் பொழுதே எனக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்திருக்கிறார்கள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கூட என்னிடம் கேட்டார். நீங்கள் வரும்பொழுது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் உங்களுக்கு கறுப்புக்கொடி காட்டினார்களா? என்று கேட்டார்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை என்று சொன்னேன்.

இன்று ஒரு நாளில் மட்டும் பல நிகழ்ச்சிகள்

நான் காலையில் வேலூருக்குச் சென்று அங்கு அய்யா அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் வேலூர் வி.அய்.டி பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதன் அவர்களுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிவிட்டு மாலை சென்னைக்கு வந்து பெரியார் திடலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அவசரமாகப் புறப்பட்டு இந்த மேடைக்கு வந்து சேர்ந்தேன் என்பதை நண்பர் சுப.வீரபாண்டியனிடம் கூறினேன்.

வெளியே கிளம்பும்போதே செலவு கணக்குதான்

ஒன்றைத் தெளிவாக இந்தக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாங்கள் கறுப்புச்சட்டை அணிந்துகொண்டு வெளியே வரும்பொழுதே உயிரை துச்சமென மதித்து வந்துதான் நாள்தோறும் மக்களைத் திருத்த அவர்களை அறிவாளிகளாக்க அவர்களுடைய வாழ்வு முன்னேற பாடுபட்டுக்கொண்டு வருகின் றோம்.

நாங்கள் வீட்டை விட்டு வரும்பொழுதே திரும்பி வரமாட்டோம். சென்றால் செலவு கணக்கு திரும்ப வீட்டிற்கு வந்தால்தான் வரவுக்கணக்கு என்று தான் எங்களுடைய பொதுத்தொண்டை நாள்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

உயிரை துச்சமென கருதக்கூடியவர்கள்

இங்கே என்னை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இங்கே அமர்ந்திருக்கின்ற தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆனாலும், எங்கள் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆனாலும், அல்லது எங்களுடைய தோழர்கள் எவராக இருந்தாலும் உயிரை துச்சமாக கருதக் கூடியவர்கள்.

இந்த இயக்கமே எதிர் நீச்சலில் வளர்ந்த இயக்கம் . தந்தை பெரியார் அவர்களே எதிர் நீச்சலில் தனது வாழ்நாள் முழுக்க பிரச்சாரம் செய்து மக்களுக்காக பாடுபட்டார்.

பெரியார் அவர்கள் மறைந்து 38 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கு தந்தை பெரியாருடைய கொள்கைகள், இலட்சியங்கள் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

பெரியார் ஒரு சகாப்தம்

பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும் பொழுது பெரியார் ஒரு சகாப்தம் அவர் ஒரு திருப்பம், அவர் ஒரு காலகட்டம் என்று சொன்னார்.


ஏதோ இங்கே கல்வீசி இந்த கூட்டத்தை கலைத்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். அய்யா அவர்கள் மீது கல்வீசி காலித்தனங்கள் செய்த எத்த னையோ சம்பவங்கள் உண்டு.

கற்காலத்தில்தான் வாழுகிறீர்களா?

நாம் கற்காலத்தில்தான் வாழுகிறோமா? அல்லது தற்காலத்தில் வாழுகிறோமா? உங்களை எல்லாம் கற்காலத்திலிருந்து விடுவித்து பொற்காலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற் காக எங்களுடைய உயிரைக் கொடுத்து நாள்தோறும் அறிவுப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.

அழகிரியே உரத்துப் பேசு

பட்டுக்கோட்டை அழகிரி கூட்டத்திலும் கற்கள் வந்து விழும். அப்பொழுது அவர் சொல்லுவார். கற்கள் வந்து விழவிழ அழகிரியே இன்னும் உரத்துப் பேசு, அழகிரியே இன்னும் நெஞ்சை நிமிர்ந்துப் பேசு என்ற எண்ணம் தான் வரும் என்று பேசுவார்.

உனக்குத் தெளிவிருந்தால் எங்களுடன் இதே இடத்திற்கு வந்து வாதம்செய். எங்களுடைய கருத்துகளை சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு. உனக்கு தைரியம் இருந்தால் தெளிவு இருந்தால் இதே இடத்தில் பொதுக்கூட்டம் போட்டு பதில் சொல்.
எனதருமை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சகோதரர்களே நீங்கள் அந்த அமைப்பு களில் புரியாமல் இருக்கிறீர்கள்.

பார்ப்பனர் ரத்தம் குடிக்கப் பார்க்கின்றனர்

பார்ப்பன நரிகள் நம்மை முட்டவிட்டு ஆரிய நரிகள் ரத்தம் குடிக்கப் பார்க் கின்றன. இது உங்களுக்கு புரியவில்லை. நீங்களும் ரத்தம் சிந்தக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் நாங்கள்.

ஏதோ எங்கள் மீது கற்கள் வந்து விழுந்தால் நாங்கள் ஓடிப்போய்விடுவோமா? அல்லது கூட்டத்தை நிறுத்தி விட்டு ஓடிப்போய்விடுவோமா?

எங்கள் மீது கற்கள் வீசினால் கூட்டம் நின்றுவிடுமா?

நீங்கள் எங்கள் மீது கற்களை வீசினால் அதனால் கூட்டம் நின்றுவிடும் என்று மட்டும் கருதாதீர்கள். ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே, உங்களுக்குத் தவறான வழிகளை காட்டிக்கொண்டிருக்கிறார் கள். நீங்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.


நாங்கள் எதையும் அறிவுப் பூர்வமாக அணுகுகிறவர்களே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக அணுகக் கூடியவர்கள் அல்ல

கருத்தை கருத்தாலே சந்திக்கக் கூடியவர்கள்

நாங்கள் கருத்தை கருத்தாலே சந்திக்கக் கூடியவர்கள். வன்முறையிலே நம்பிக்கை இல்லாதவர்கள். உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால் நாங்கள் பேசிய இன்ன கருத்து தவறு என்று சொல்லுங்கள். எங்களைப் பொறுத்த வரை இனம் இனத்தோடு மோதக் கூடாது என்று கருதக்கூடியவர்கள். நாளையே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கூட திருந்தக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள்.

திருந்து அல்லது திருத்து

தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவமே திருந்து அல்லது திருத்து என்பதுதான். நாங்கள் தவறான கருத்துகளைச் சொன்னால் எங்களைத் திருத் துங்கள். எங்கள் கருத்து சரியானது என்று புரிந்துகொண்டால் நீங்கள் திருந்தி விடுங்கள். எந்த கேள்விகளுக்கும் என்றைக்கும் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கின்றவர்கள். நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள். கடைசி மூடநம்பிக்கையாளர் இருக்கிற வரை, கடைசி பார்ப்பனர் ஆதிக்கம் இருக்கிறவரை, தந்தை பெரியார் கொள்கைக்கு வேலை உண்டு. அண்ணா சொல்லுவார். பெரியாரின் போர் முறை எப்படிப்பட்டது என்று சொல்லும்பொழுது சொல்லுவார். கண்ணுக்குத் தெரியாத மூலபலத்தை முறியடிப்பது தான் பெரியாரின் போர் முறை என்று சொல்லுவார். உலகத்தி லேயே வேறு எந்த நாட்டில் இங்குள்ளது போல் வர்ணாஸ்ரம தர்மம்-குலதர்மம் இருக்கிறது? எந்த நாட்டில் ஜாதி உண்டு?

எந்த நாட்டிலாவது ஜாதி உண்டா? பிறக்கும் பொழுதே ஒருவன் பார்ப் பானாகப் பிறக்கின்றான். பிறக்கும் பொழுதே இன்னொருவன் பறையனாகப் பிறக்கின்றானா? இல்லையே.

ஜாதி ஒழிந்த சமுதாயம் மலரவேண்டும். சமத்துவ சமுதாயம் பூத்துக் குலுங்க வேண்டும். என்பதற்காகத்தான் நாங்கள் வாழ்நாள் முழுக்க பாடுபட்டுக்கொண்டு வருகின்றோம்.

இந்து மதத்தை மட்டும்தானே நீங்கள் பேசுகிறீர்கள்? ஏன் இஸ்லாம் மதத்தைப் பற்றி பேச வில்லை? ஏன் கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றிப் பேசவில்லை என்று எண்ணலாம். அழுக்கு எங்கே இருக்கிறதோ அங்கு சோப்பு போட்டு தேய்த்துக்குளிக்கின்றோம்.

நீங்கள் கூட்டுங்களேன் அந்த குப்பையை!

எங்கே குப்பை இருக்கிறதோ அந்த இடத்தை கூட்டுகின்றோம். அடுத்த வீட்டில் குப்பை இருக்கிறதே என்று சொன்னால் அந்த குப்பையை நீங்கள் போய் கூட்டுங்கள்.

உங்களுடைய இந்து என்ற சொல் என்ன தமிழ் மொழிச்சொல்லா? இந்த நாட்டுக்கே சம்பந்தமில்லாத சொல். கைபர் போலன் கணவாய் வழி வந்த வர்கள் இந்து மதம் என்று பெயர் வைத்தார்கள். இந்து மதம் என்றால் அது வேதமதம். பார்ப்பன மதம், சனாதன மதம் என்றுதான் பெயர்.

எங்களைப் பற்றி எழுதுவார்கள். ஜெயிலுக்கும், பெயிலுக்கும் புதுச்சேரியில் அலைந்து கொண்டிருக்கின்ற சங்கராச்சாரியாரைப் பற்றி எழுத மாட்டார்கள்.

சூத்திரன் என்ன பாரத ரத்னா பட்டமா?

உன்னுடைய மனுதர்மத்தில்தானே உன்னை சூத்திரன் என்று சொல்லப் பட்டிருக்கிறது. சூத்திரன் என்றால் தாசி மகன் என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் இருக்கின்ற தோழர்களே சூத்திரன் என்றால் அது பாரத ரத்னா பட்டம் என்று கருதுகிறீர்களா?


ஆதாரத்துடன் சொல்லுகின்றோம். உன்னுடைய மனுதர்மத்தில் 412 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதே. இதைப் பார்த்து எங்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. உங்களுக்கு அறிவையும், மான உணர்வையும் ஊட்ட நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

பெரியாரால் படித்தோம்

தந்தை பெரியார் வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீட்டால்தான் இன்று பல வெளிநாடுகளில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியாருடைய உழைப்பு அல்லவா காரணம். உலகில் அடிமையாக வாழ்ந்த நீக்ரோக்களுக்குக் கூட சூத்திரன் என்ற இப்படிப்பட்ட ஒரு அவமரியாதை ஏற்பட்டதில்லையே!

உன்னுடைய குலதர்மம் இருந்திருந்தால் உன்னுடைய பிள்ளை படிப்பதற்கு வாய்ப்பும், வெளிநாட்டில் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆவதற்குரிய வாய்ப்பும் கிடைத்திருக்குமா? குலதர்மக் கல்வியை ஒழித்தவர் தந்தை பெரியார் அல்லவா?

எதிர்ப்பு-சலசலப்பு எல்லாம் எங்களிடம் நடக்காது

உங்களுடைய எதிர்ப்பு சலசலப்பு என்பதெல்லாம் கருப்புச்சட்டைக்காரர் களிடம் நடக்காது. நாங்கள் காவல் துறையை மதிக்கிறவர்கள். நாங்கள் சட்டத்தை மதிக்கிறவர்கள். நீங்கள் வன்முறையிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்.

கொத்து கொத்தாக கற்களைவீசி, டியூப்லைட்டுகளை உடைத்து இந்தக் கூட்டத்தை கலைத்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது நடக்காது. நாங்கள் மதவெறியை ஒழித்து மனித நேயத்தைப் பரப்புகிறவர்கள்.

3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம்

உங்களுடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த நாட்டிலே மூன்று முறை தடைசெய்யப்பட்ட இயக்கம். காந்தியை கொன்ற கோட்சே யார்? ஆர்.எஸ்.எஸ். காரன் அல்லவா? நான் கீதையைப் படித் தேன். வன்முறைக்கு ஆயத்தமாக வேண் டும் என்று சொல்லப்பட்டிருக் கின்றது.

எனவே காந்தியை கொன்றது தவறு அல்ல என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவன் கோட்சே. டில்லியில் காம ராஜரை உயிரோடு எரிக்க முயன்ற கூட்டத்தினர்தானே ஆர்.எஸ்.எஸ் சங்பரி வார் கூட்டம்.

அம்பேத்கர் விசன் வடநாட்டிலிருந்து அம்பேத்கர் விசன் என்ற பத்திரிக்கையில் 30 பக்கங்களுக்கு மேல் இந்தியில் பாராட்டி அவருடைய கருத்துகளை எழுதியிருக்கின்றார்கள். பெரியாருடைய படத்தை அட்டையிலே போட்டிருக்கின்றார்கள்.


பெரியார் அவருடைய இளமைக் காலத்தில் காசிக்கு சந்நியாசியாகச் சென்றார். ஆனால் இன்றைக்கு அதே காசியில் பெரியார் ஒரு தத்துவ கர்த்தா வாக வரவேற்கப்படுகின்றார்.

பெரியார் மூச்சுக்காற்று

எனவே ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே, பி.ஜே.பி., நண்பர்களே நீங்கள் இருட்டில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு அறிவு வெளிச்சத்தைக் கொடுப்பவர் பெரியார்.

பெரியார் என்பவர் மூச்சுக் காற்று போன்றவர் அந்த மூச்சுக் காற்றை நீங்கள் மறுக்க முடியாது. கலைஞர் அவர்கள் ஆட்சியில் அறிவித்த தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதனைக் கொண் டாடக்கூடாது என்று ஒரு பண்பாட்டு படை எடுப்பு இப்பொழுது உள்ளே புகுந்திருக்கிறது. மனிதநேய அடிப்படையில் சொல்லு கின்றோம். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் உயிர் ஊசலாடுகிறது. இப்பொழுது உலக அளவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வருகிறது.

அவர்களை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்படவேண்டும். 30 கல் தொலைவிலே தமிழினம் அழிக்கப் பட்டதே அவர்கள்இந்துக்கள் இல்லையா?

கலைஞர் ஆட்சி

தமிழின உணர்வைப் பற்றி சகோதரர் பழ.நெடுமாறன் அவர்களும், சுப. வீர பாண்டியன் அவர்களும் பேசினார்கள். அதற்காக அவர்கள் சிறை வைக்கப்பட் டார்கள்.

அடுத்து கலைஞர் ஆட்சி வந்தது. நாங்கள்தான் பொதுக்கூட்டத்திலே சொன்னோம். கோயில் பூட்டுக் கதவையே (அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்) திறந்தவர் முதல்வர் கலைஞர். இவர்களுடைய பூட்டையும் திறக்க வேண்டும். என்று கேட்டோம். அதற்குப் பிறகு வெளியே வந்தார்கள். அவர்களுக்கும் போடப் பட்டிருந்த வாய்ப்பூட்டும் அகற்றப்பட் டது.

இனிமேல் அடிக்கடி இந்த பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவோம். இத்தோடு நின்றுவிடமாட்டோம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறைக்கு கழகத் தோழர்களைக் கைது செய்வதா?


விருகம்பாக்கம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறைக்கு கழகத் தோழர்களைக் கைது செய்வதா?


  • காவல்துறையினரின் போக்கு கண்டிக்கத்தக்கது
  • கழகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொதுச் செயலாளர் அறிக்கை

விருகம்பாக்கத்தில் நேற்று (24.9.2011) மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காலிகள் மேற்கொண்ட வன்முறை குறித்தும், காவல் துறையினர் நடந்துகொண்ட போக்கு குறித்தும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங் குன்றன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை விருகம்பாக்கத்தில் , உரிய காவல் துறை அனுமதி பெற்று நேற்று மாலை (24.9.2011) சிறப்பாக நடைபெற்றது. திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசையோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கழகத் தோழர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர் களும், பொது மக்கள் உள்பட ஏராளமானோர் திரண் டிருந்தனர்.

கூட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.ரா. இரத்தினசாமி, செயலாளர் வே. ஞானசேகரன், தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோரின் பேச்சைத் தொடர்ந்து, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தை நோக்கி கற்கள் வந்து விழுந்தன. கழகத் தோழர்களும், பொதுமக்களும் பதற்றம் அடைந்தனர். கொந்தளிப்பான சூழ்நிலையில் தோழர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் - குற்றவாளிகளைக் காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் - கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதுதான் நமக்கு முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறினார். ஒலிபெருக்கியிலும் அவ்வாறே கூறப்பட்டது.

தோழர்களும் கட்டுப்பாட்டோடு கூட்டம் நடத்துவதில் கவனமாகவே இருந்தனர்.

தொடர்ந்து பேசினார் கழகத் தலைவர்

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் மீண்டும் கூட்டத்தை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. ஒரு கும்பல் கையில் கற்களோடும், கம்புகளோடும் உடைந்த டியூப்லைட்டுகளிலும் மேடையை நோக்கி வந்து கொண் டிருந்தது. கம்புகளையும் உடைந்த டியூப்லைட்டுகளையும் கற்களையும் மேடையை நோக்கி வீசினர். ஆனால் கூட்டத்தை நிறுத்தாமல் கழகத் தலைவர் விளக்கம் கொடுத்துப் பேசிக் கொண்டேயிருந்தார்.

எங்கள் கருத்தைக் கூட்டம் போட்டு பேசிக் கொண்டி ருக்கிறோம். நாங்கள் பேசியதில் தவறு இருந்தால், நாளை இதே இடத்தில் நீங்கள் கூட்டம் போட்டு பதில் சொல் லலாம். நாங்கள் நாளை மறுநாள் அதற்கு பதில் சொல் லுவோம். ஜனநாயக உரிமை - பண்பாடு என்பது இதுதான். அதனை விட்டுவிட்டு தற்காலத்திலும் இப்படியெல் லாம் கற்களை வீசுவது - கற்கால மனிதர்களின் மனப்பான்மை; இதனை மாற்றி, நாட்டை பொற்காலத் துக்கு அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகத்தின் கொள்கை என்று பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன.

தொடர்ந்து கழகத் தலைவர் பேசிக்கொண்டே இருந்தார். முழுமையான அளவில் பேசியே முடித்தார். கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்ற காலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

காவல்துறையினரின் போக்கு

காலிகள் 54 டியூப்லைட்டுகளையும், நாற்காலிகளை யும் உடைத்துக் கொண்டேயிருந்தனர். இவ்வளவும் காவல்துறையினர் முன்தான் நடந்து கொண்டிருந்தது. காவல்துறையோ செயலற்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தது.
இவ்வளவு நடந்து கொண்டிருந்தும், காவல் துறையினர் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது -

ஒரு மாநிலத் தலைவர் கலந்து கொள்ளும் கூட்டம் அது!

அத்துமீறி கூட்டம் நடக்கும் பகுதியில் நுழைய முனைந்த இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வினரோடு சமாதானப் பேச்சுக்களை நடத்திக் கொண்டி ருந்தார்களே தவிர, காவல்துறையினரின் கடமைக்கான - செயல்பாடுகளே இல்லை. தொடக்கத்திலேயே லத்தி சார்ஜோ அல்லது அத்து மீறி நுழைந்தவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையையோ எடுத்திருந்தால் பிரச்சினை முற்றிப் போயிருக்காது.

கழகத் தோழர்களைத் தடுத்தனர்

கூட்டப் பகுதியிலிருந்து திராவிடர் கழகத் தோழர்கள் கற்களை வீசிய பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்வதில்தான் காவல்துறையினரின் கருத்தும் கவனமும் இருந்தன.

முக்கியமாக ஒரு மாநிலத் தலைவர் பேசும் கூட்டத்தில் இப்படி கலாட்டா செய்கிறார்களே, கல் வீசுகிறார்களே அவர்களைப் பிடிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்பதில் சற்றும் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்பது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்.

பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியது குறித்த சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படாதது - ஏன்?

காவல் துறையினரின் இத்தகைய போக்கு ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை உற்சாகப்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு புகார் செய்யப்படும்

இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் செய்யப்படும்.

திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்கள் நாடெங்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக் கூடியவைதான். காரணம் இது ஒரு பிரச்சார இயக்கமாகும். இதுகுறித்து காவல்துறை இயக்குநர் மாநிலம் தழுவிய அளவில் உரிய வழிகாட்டுதலை சுற்றறிக்கையாகக் கொடுக்க வேண்டும்.

அடுத்து நமது நடவடிக்கை

நிலைமையைப் பொறுத்து பொதுக் கூட்ட ஏற்பாடு களைச் செய்யும் கழகத் தோழர்கள், எத்தகைய அணுகுமுறையினை மேற்கொள்வது என்பது குறித்துக் கழகத் தலைமை முடிவு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உளவுத்துறை என்ன செய்தது?

விருகம்பாக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்திட காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்தும், விளம்பரம் செய்தும் அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகக் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று காவல்துறையிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். தென் சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் சி. செங்குட்டுவன் அவர்களிடம் காவல் துறையினர் இது பற்றிக் கூறியபோது, கூட்டம் போட்டுப் பேசுவது என்பது உரிமை - கூட்டத்தில் எங்கள் தலைவர், பெரியார் கருத்துக்களைக் கூறுவார்; ஆர்.எஸ்.எஸ். காரர்கள் புகார் கூறுவதால் எங்கள் கருத்துரிமையை யாரும் பறிக்க முடியாது என்று கூறினார்.

வழக்கமாக விருகம்பாக்கத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடத்திட காவல்துறை அனுமதியும் வழங்கியுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில், காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்திருக்கவேண்டாமா? உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.

கழகத் தோழர்களைக் கைது செய்வதா?

கடைசியில் திராவிடர் கழகத் தோழர்கள் அய்வரையும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரையும் காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டத்தில் கலாட்டா செய்தவர்கள் யார்? கூட்டத்தை நடத்தக்கூடாது என்று அத்துமீறி நுழைந்தவர்கள் யார்? தலைவரை நோக்கி கற்களை வீசியவர்களின் நோக்கம் என்ன? தலைவருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்? என்பதைப் பற்றி சிந்தனை செலுத்தாமல், அடித்தவர்களையும், அடிபட்டவர் களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது காவல் துறையினரின் கடமை உணர்ச்சிக்கு உகந்தது தானா?

காலிகளைச் சந்திக்கும் திராணி கழகத்திற்கு உண்டு

ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது என்பதால் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் காலித்தனத்தில் இறங்குவார்களேயானால், அவற்றைச் சந்திக்கும் திராணி திராவிடர் கழகத்திற்கு உண்டு - உறுதியாக உண்டு.

அதே நேரத்தில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய கழகத்தினால், முறைப்படி காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு உரிய முறையில் புகார் கடிதம் கொடுக்கப்படும்.

கழகத் தலைவர் கலந்து கொண்ட கூட்டத்தில் விஷமிகள் கலாட்டா - கல்வீச்சு என்ற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்த கழகத் தோழர்களும், தமிழர்களும் தொடர்ந்து தொலைபேசி மூலம் விவரங்களைக் கேட்டுக் கொண்டே உள்ளனர். பதற்றமான ஒரு சூழல் பல இடங்களிலும்.

கழகத் தலைவரின் கட்டளையை ஏற்றுத் தோழர்கள் அமைதி காத்தனர். பொறுப்புணர்வுடன் கழகத் தலைவர் அவ்வாறு அவர் அறிவுறுத்தாதிருந்தால் நிலைமை விபரீதமாகப் போயிருக்குமே!

தோழர்கள் பதற்றமும் அடைய வேண்டாம். உரிய நடவடிக்கைகளை தலைமைக் கழகம் எடுத்துக் கொண்டி ருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கலவரம் செய்தவர்களையும் பாதிப்புக்கு ஆளான கழகத் தோழர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகும் காவல்துறையின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு கவலையளிப்பதாகவே உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

70 ஆண்டு காலமாக மேடைகளில் பேசிக் கொண்டி ருக்கும் தலைவரின் கூட்டத்திற்கே அச்சுறுத்தல் என்றால் மற்ற மற்ற கூட்டங்களின் நிலை என்ன? காவல் துறையினரின் அலட்சியப் போக்கில் மாற்றம் தேவை! தேவை!!

-------------- கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம் “விடுதலை” 25-9-2011


விருகம்பாக்கம் கூட்டம்
கழகத் தோழர்கள் கைது - விடுதலை

சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் கலவரம் செய்த கீழ்க்கண்ட சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் இளங்கோ (இந்து முன்னணி மாவட்டத் தலைவர்), செந் தில், விட்டல், மனோகர், நாகேஸ்வரராவ், செந்தில் குமார், தயாளன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குற்ற எண் 17,73/2011, சட்டப் பிரிவுகள் 147, 148, 294(b), 324, 336. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

கழகத் தோழர்கள் கைது

கழகத் தோழர்கள் தமிழ் சாக்ரட்டீஸ், நடராசன், அரசு, பரசுராமன், ஏழுமலை ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை 23ஆவது மெட்ரோ பாலிட்டன் குற்றவியல் நீதிபதி அகிலா ஸ்டாலின் முன்பு ஆஜர் செய்யப்பட்டு, சொந்தப் பொறுப்பில் (ஜாமீனில்) விடுவிக்கப்பட்டனர். குற்றப் பிரிவு எண் 1772/2011 சட்டப் பிரிவு 147, 148, 294(b), 324, 336.


தினகரன் வெளியிட்ட செய்தி
வீரமணி கூட்டத்தில் கல்வீச்சு

சென்னை, செப் 25- சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நேற்றிரவு நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் தி.க. தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் அப்பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர் சுமார் 40 பேர் கூட்டத்தை நடத்த விடாமல் கற்களை மேடை மீது வீசி ரகளை செய்தனர்.

இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர். பின்னர் வீரமணி பேச்சை தொடங்கியபோது சிலர் கோஷம் போட்டனர். திடீரென அவரது பேச்சைக் கேட்ட இந்து அமைப்பினர் அவர் மீது கற்களை வீசினர் ஆனால் அது அவர்மீது விழவில்லை. உடனே தி.க தொண்டர்கள் திரண்டு வந்து கற்களை வீசிய இந்து அமைப்பினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பிறகு போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது.

(நன்றி: தினகரன் 25.9.2011)

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கண்டனம்


திராவிடர் கழக நிகழ்ச்சியில் வன்முறையை ஏவியவர்களுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். அறிக்கை வருமாறு:

திராவிடர் கழகம் சார்பில் நேற்று (24.09.2011) மாலை, சென்னை விருகம்பாக்கத்தில் பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டம் நடைபெற்றது. அப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசத் தொடங்கியதும், ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்த சிலர், கற்களை வீசிக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். மக்கள் கலையவுமில்லை, கூட்டம் நிறுத்தப்படவுமில்லை.

அதற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், 40,50 பேர்களைக் கொண்ட ஒரு கும்பல் கையில் கற்களோடும், கம்புகளோடும் மேடையை நோக்கி வந்தது. கலவரக்காரர்களோ, கம்புகளையும், டியூப்லைட்டுகளையும் மேடையை நோக்கி வீசினர்.

கருத்துகளை, கருத்துகளால் சந்திக்கும் துணிவும், நேர்மையும் அற்றவர்கள் செய்யும் இதுபோன்ற கலவரங்களைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற கலகங்களைக் கண்டு கருஞ்சட்டைப் படை ஒருநாளும் கலங்காது என்பதை உரத்து அறிவிக்கிறது.
- இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

------------------”விடுதலை” 25-9-2011

2 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகக் கூட்டத்தில் கலகம் விளைவிப்பதா? கலைஞர் கண்டனம்


தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் திராவிடர் கழகம் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 24.9.2011 அன்று நடைபெற்றபோது - தமிழர் தலைவர் வீரமணி பேசும்போதும் - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசும்போதும் - ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் இடைமறித்து எதிர்க்குரல் எழுப்பியதோடு - கற்களைக் கொண்டு தாக்க முயன்றிருப்பதும், அதற்கு இந்த அரசின் காவல்துறை ஒத்துழைப்பு தந்திருப்பதும், இனமான உணர்வை எழுப்பும் கருத்துக்களை எதிர்க்க சக்தியற்றவர்கள் நடத்திய வன்முறைச் செயல்கள்; கலவரமாக ஆகியிருப் பதும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு நல்க வேண்டுமேயல்லாமல் கலகம் விளைவிப்போருக்கு துணை போயிருக்கக் கூடாது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கூறுகிறேன் என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-------------"விடுதலை” 26-9-2011

தமிழ் ஓவியா said...

விருகம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., விஷமிகளின் கைவரிசை மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு அவமதிப்பு குறித்துக் காவல்துறையிடம் புகார்

சென்னை- விருகம்பாக்கத்தில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற - தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் (தமிழர் தலைவர் கி. வீரமணி அவர் களும் பங்கேற்ற நிகழ்ச்சி) ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி காலிகள் கோழைத்தனமாக மேடையை நோக்கி கல்லெறிந்தது - 50-க்கு மேற்பட்ட டியூப்லைட்டுகளை உடைத்துவிட்டு ஓடியது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் நேரில் புகார் கொடுத்துள்ளார் (26.9.2011).

காவல்துறை அதிகாரிகளின் எதிரி லேயே டியூப்லைட்டுகளை விஷமிகள் அடித்து நொறுக்கியதைப் பார்த் திருந்தும், பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் எந்தப் பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இதுகுறித்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள், பாதிக் கப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இரு தரப்பினர்மீதும் ஒரே வகையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல் துறை. அதாவது அடித்த வனும், அடிபட்டவனும் ஒன்று என்ற பார்வை காவல்துறைக்கு எப்படி வந்தது என்று தெரிய வில்லை.

இந்த இரண்டு நிலை குறித்தும் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் நேற்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் சிலைக்கு துளசி மாலை

சென்னை அண்ணாசாலை - சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்குக் காலிகள் - விஷமிகள் 25ஆம் தேதி இரவோடு இரவாக துளசி மாலையைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இதுகுறித்தும் மாநகரக் காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் கொடுக்கப்பட்டது.

விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை ஆணையர் திரிபாதி அய்.பி.எஸ். அவர்கள் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றனும், வழக்குரைஞர் த. வீரசேகரனும் சென்றிருந்தனர்.
---"விடுதலை” 27-9-2011