Search This Blog

11.1.15

பெரியார் பார்வையில் பொங்கல்!

தந்தை பெரியார் பார்வையில் பொங்கல்!

தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கை தான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது?
என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடை யில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண் டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளை ஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் பொங்கல் பண்டிகைகளைப் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.


450 பொங்கல் வாழ்த்து

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால், இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத்திரம் 450-க்கு மேற்பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)


இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திர மல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்களை சேர்ந்தவர்களாகும். இந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண்டாடியதைப் பற்றி மாத்திர மல்லாமல் இதைக் கொண்டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளியையும் மற்றும் பல ஆரியப் பண்டிகை களையும் வெறுத்து விலக்கி இருப்பது மகிழத் தக்கதாகும்.


தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண்டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக் கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மை யாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றியறிவித்துக் கொள்ளக் கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன் வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந் ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது  - பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங் கலை பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.


ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர் களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர் களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை, கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமி ழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம் பிக்கை கொள்ளுகிறேன் என்பது ஆகும்.


மற்றொரு வாழ்த்து


இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் காலமும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் தொடக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.


ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரியர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு _ தமிழர்களுக்கு இழிவும் ஏற்படுவதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர் களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு வருவதானவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவை கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்மநூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.


இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர் களையும் அறிவற்ற தமிழ் மடையர்களை யும் பல தந்திரங்களால் மானம், அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவை சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய இரத்தத்திலும் கலக்கும்படி செய்துவிட்டார்கள்.


இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு ஜட்ஜூ பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திர மல்லாமல் இராமாயணம், கீதை முதலிய வைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கியனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளி யாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுபவன் -_ கருதப்படுகிறான் என் கின்ற தன்மைக்கு அவை வந்துவிட்டபடி யால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்மைப்பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை - தமிழர் சமுதாயத்தை இழிவிலிருந்தும் பிறவி அடிமைத் தன்மையிலிருந்தும், முன்னேற்றத் தடையிலிருந்தும் என்ன விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவது, அதற்காக தொண்டாற்றி மடிவது என் வாழ் நாளினுடையவும் நான் விடும் மூச்சினு டையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடைய வும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமாயணம், கீதை, பாரதம் ஆகியவை களைத் தமிழர்களுடைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய, முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங்கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை, முதலியவை களுக்குப் பதிலாக ஒருநெறி, கலை, வழி காட்டுவதற்கு என்று குறளைக் காட்ட வேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.



குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழமாட்டானா? வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லாவிட்டால் மனிதன் வாழலாம்; ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால் ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக, கடை மனிதனாக ஆக்கப்பட்டுவிட்டதால் ஆக் கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப்படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள்ளும்படி செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவதற்கு ஒரு சாதனம் விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது.


ஆகவே, தமி ழனுக்கு இருக்கும் இழிவை - கடைத் தன்மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும்  அறிவு வருவதற்குக் குறளைத் தூண்கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.


எனது பொங்கல் பரிசு!


நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்?  பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? என்பதை மனிதன் மான முள்ள, அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் - திராவிடன் சிந்திக்கட்டும் என்பது தான் எனது வேண்டுகோளும், ஆசையு மாகும். ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங்களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.


ஆகவே இந்த ஆண்டு - பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டதே யாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவைபோல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந் தார்கள். அப்படியே பாரதம், கீதை, இரா மாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாக கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும், குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று.


ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்கு பதிலாகப் பொங்கலை யும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை - கீதை, இராமாயணம், பாரதம் ஆகியவைகளை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச்செய்து விட்டு அதற்குப் பதிலாக அவை இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால் தமிழர்களுக்கு இப்பொங்கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக்கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக்கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு, அன்புக்கு, நம்பிக்கைக்கு தட்சிணை யாகக் கொடுக்கிறேன்.


பதில் பரிசு தருவீர்களா?

இந்த எனது தட்சிணையை, காணிக் கையை தமிழ்மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால் குறைந்த அளவு என்பால் அருளும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்டவேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள்கூர்ந்து - கருணைகூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளி யாகும் நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.


உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காண வேண்டுமானால் அவன் பார்ப்பனப் பத்திரிகையை வாங்காதவன் _ ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத் திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.


தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமா யணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கிய காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்ப தற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.


ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும்தான். அதாவது,


1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி பொங்கல் விழாக் கொண் டாடுவது.


2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலியவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்று படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.


3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமிழர்கள் திராவிடர்களால் நடத்தப் படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.


பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலையங்கம் பின்னால் எழுத இருக் கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதா வது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.

பொங்குக பொங்கல்!
பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!

--------------------------------------------------- தந்தை பெரியார், "விடுதலை" 19.01.1949

11 comments:

தமிழ் ஓவியா said...

காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலையா? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்

மதுரை, ஜன.11_ காந்தி யாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்பதும், கொலைகாரனை புனிதப் படுத்த நினைப்பதும் அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் கண்டனம் தெரி வித்துள்ளார்.

மதுரை கலைஞர் கருணாநிதி நகர் சோக்கோ அறக்கட்டளையில் நேற்று (10.1.2015) பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வழக் குரைஞர் அணி சார்பில் கண்டன கருத்தரங்கு நடந் தது. இதில் வழக்குரைஞர் ரத்தினம் அறிமுக உரை யாற்றினார். சிறப்பு விருந் தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் கலந்து கொண்டு காந்தியடிகளைக் கொன்ற கோட்சேவை புனிதமாக்குவதா? என்ற தலைப்பில் பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-

அரசமைப்புச் சட்டத்தை நம்புகிறவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தயக்கம் இருக்காது. எனவே உண்மையின் அடிப்படை யில் நான் கலந்து கொண்டேன். மதங்களின் மீதோ, கடவுள்களின் மீதோ எனக்கு பற்று கிடையாது. இந்து பெற்றோருக்கு பிறந் தவன். எனது குடும்பத்தின ரும், நண்பர்களில் பலரும் மதநம்பிக்கை கொண்ட வர்கள். அவர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். வள்ளலார் ஆன்மிகவாதி. அவரை பெரியார் போற் றினார். கோட்சே மதப்பேய் பிடித்தவன்

விவேகானந்தர், திரு.வி.க., நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் போன்றவர்களும் மதநம்பிக்கை கொண்ட வர்கள் தான். மதநம்பிக்கை இருக்கலாம். வள்ளலார் தனது பாடலில், மதமெ னும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார். மதப்பேய் என்ற மதவாதம் கூடாது. கோட்சே, மதப் பேய் பிடித்தவன். அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப்பட்டவர் காந்தி. அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30_1_1948 அன்று நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக் காக வாதாட எவரும் முன் வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். மகாத்மாவை கொன்றவனையே 18 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்தனர். அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோகம் செய் தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் கொன்றேன் என் றான். மதப்பேய் பிடித்ததால் தான் அவன் காந்தியை கொலை செய்திருக்கிறான்.

கொலைகாரனை புனிதமாக்குவதா?

கொலைகாரனை புனிதமாக்குவதை எவரும் விரும்பமாட்டார்கள். அவன் பாவியல்லவா? அப்படிப்பட்டவனுக்கு இந்தியா முழுவதும் சிலை வைப்போம் என்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானவர்களை புனிதப்படுத்தாதீர்கள். பகவத் கீதையையோ, பைபிளையோ, குர் ஆனையோ பாடப் புத்தக் கத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறுவது மதவாதம். ஆனால் அவற்றில் உள்ள அறநெறிக்கதைகளை பாடமாக்குங்கள் என்றால் அதை அனுமதிக்கலாம். இஸ்லாமியவாதம், கிறிஸ்தவ மதவாதம் என் றெல்லாம் கூறுகிறார்கள். இந்துத்துவாவை மட்டும் இந்து மதவாதம் என கூறாமல், இந்திய தேசிய வாதம் என்கிறார்கள். இதனையெல்லாம் அரசி யலமைப்பு சட்டத்தை நேசிப்பவர்கள் எதிர்க்க வேண்டும். விவேகானந்தர் கடைசிவரை இந்துத்துவா என்ற வார்த்தையை உப யோகிக்கவே இல்லை. ஒரு பொதுக்கூட்டத்தில், பகவத் கீதை தேசிய நூலாக அறி விக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பேசி யுள்ளார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு அர சியல்வாதி பேசலாம். நீதியரசர் பேசலாமா? அவ ருடைய இந்த கருத்தை தனது தீர்ப்பில் கூறியி ருந்தால் கூட நான் இங்கே சொல்லியிருக்க மாட்டேன்.

பொதுக்கூட்டத்தில் பேசியதால் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94304.html#ixzz3ObbF9jyE

தமிழ் ஓவியா said...

குயில் இதழில் புரட்சிக் கவிஞர்

போர்! தமிழ்ப் போர்!!

நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது.
தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.

ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.
தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.

தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.

நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.

தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.

தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.

எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!

தமிழ் ஓவியா said...

அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.
நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.

தமிழ்

தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?
தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.

தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!
சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.

ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று.
இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடு வது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.

அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.

தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழ ரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதி யினனா? நீ வேறு இனத்தவனா? இரு!

அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!

நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!
போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!
தமிழ்த் தாய் வெல்க!
தமிழர்கள் விடுதலை எய்துக!

குயில் 23.2.1960

Read more: http://viduthalai.in/page3/94223.html#ixzz3ObgU5gIA

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதத் துணைவேண்டாத் திராவிடத் தனித்தன்மை

- டாக்டர் கால்டுவெல்



திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளி லிருந்து பற்பல இயல்பு களில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும், அத் திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமற்கிருதத்திலிருந்து பிறந் தனவாகச் சமற்கிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன.

தாங்கள் அறிந்த எப் பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண் டிதர்கள். அவர்கள் கூறும் அம்முடிவை, முதன் முதலில் வந்த அய்ரோப்பிய அறி ஞர்களும் அவ்வாறே ஏற்றுக் கொண் டனர்.

தங்கள் கருத்தை ஈர்த்த ஒவ் வொரு திராவிட மொழியும் சமற்கிருதச் சொற்களை ஓரளவு பெற்றிருப்பதை அவர்கள் காணாதிருக்க முடியாது. அவற்றுள் சில இவை எம்மொழிச் சொற்கள் என்பதை அரும்பாடுபட்டே அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் பெரிதும் சிதைவுண்டிருக்கும்.

எனினும் சில சிறிதும் சிதைந்து மாறுபாடுற்றிரா என்பது உண்மை. ஆனால், அம்மொழி ஒவ்வொன்றும் சமஸ்கிருதம் அல்லாத பிறமொழிச் சொற்களையும், சொல்லுரு வங்களையும் அளவின்றிப் பெற்றிருப் பதையும் அவர்கள் தெளிவாகக் காண்பர் என்றாலும், அச்சொற்களே அம்மொழி வடிவில் பெரும் பகுதியை உருவாக் குகின்றன;

அச் சொற்களிலேயே அம் மொழியின் உயிர்நாடி நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்திருக்க மாட் டார்கள். அவ்வறியாமையின் பய னாய், அம்மொழிகளில் காணலாகும் அச்சமற் கிருதப் புறத்தன்மைகளுக்குக் காண முடியாத யாதோ ஒரு சில மூலத்திலி ருந்து தோன்ற வேற்று மொழிக் கலவை யாம் என்ற பெயர் சூட்டி அமைதி யுற்றனர்.

உண்மையில் சமற்கிருத மொழிச் சிதைவுகளாய் கௌரிய இனத்தைச் சேர்ந்த வங்காளம் போலும் மொழிகளிலும், சமற்கிருதத்திற்குப் புறம்பான சில சொற்களும் சொல்லுரு வங்களும் இடம் பெற்றுள்ளன; அப் பண்டிதர்கள் கருத்துப்படி, திராவிட மொழிகளுக்கும் அக்கௌரிய மொழி களுக்கிடையே மதிப்பிடத்தக்க வேறு பாடு எதுவும் இல்லையாதல் வேண்டும்.

இவ்வாறு, திராவிட மொழியில் காண லாகும் சமற்கிருதப் புறத்தன்மைகளை, வேற்று மொழிக் கலவையாக மதித்து ஒதுக்குவது, உண்மை நிலையிலிருந்து உருண் டோடி வீழ்வதாகும். மேலும், திராவிடம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையின ராக மொழி நூல் வல்லுநர்க்கு ஏற் புடையதாய் விளங்கினும், இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது.

மேலே கூறிய பண்டிதர்கள் சமற்கிருத மொழியை ஆழக் கற்று, வட இந்திய மொழிகளை விளங்க அறிந்தவரே எனினும் அவர்கள் திராவிட மொழிகளை அறவே கண் டறியாதவராவர்; அல்லது, ஒரு சிறிதே அறிந்தவராவர்.

ஒப்பியல் மொழி நூல் விதி முறைகளில் ஒரு சிறு பயிற்சியும் பெறாத எவரும், திராவிட மொழி களின் இலக்கண விதிகளையும் சொற்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அவற்றைச் சமற்கிருத இலக்கண முறைகளோடும் ஒப்புநோக்க அறியாத எவரும், திராவிட இலக்கண அமைப்பு முறையும், சொல் லாக்க வடிவங்களும், இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அவற்றின் எண்ணற்ற வேர்ச் சொற்களும், எத்தகைய சொல் லாக்க, சொற்சிதைவு முறைகளினாலேயா யினும், சமற்கிருதத்திலிருந்து தோன்றி யனவாகும் என்று கூற உரிமையுடையவராகார்.

(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -
தமிழாக்கம்: புலவர் கா. கோவிந்தன்)

Read more: http://viduthalai.in/page3/94224.html#ixzz3Obi86O00

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பார்வையில்...

பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.

பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப் பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வர லாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)

தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.

தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை விடுதலை ஏடு வெளி யிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.

பொங்கல் விழாவை புதுப்பொலி வுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப் பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது.

உலகம் பூராவும் அறுவடைத் திரு விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.

இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்கு களை வேண்டிய மட்டும் திணித் துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித் தும் ஆழமான கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத் தமாக இருக்கும்.

ஒரு பொங்கல் நாளில் (விடுதலை 13.1.1970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்-கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல் லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்ப தாகத் தை மாதத்தையும் முதல் தேதி யையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.

இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும். ஆங்கி லத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.

என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.

- கி. வீரமணி

Read more: http://viduthalai.in/page3/94228.html#ixzz3ObihoI2X

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினரைச் சீண்டும் பா.ஜ.க. அமைச்சர்


போபால், ஜன.13_ முஸ் லீம்களின் தொழுகையும் சூர்ய நமஸ்காரம் தான் என மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராஸ் ஜெயின் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த 2007 ஆம் ஆண் டில் இருந்து சூர்ய நமஸ் கார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்,முஸ்லீம்களின் தொழு கையும் ஒருவித சூர்ய நமஸ்காரம்தான். சிறு பான்மையினரும் சூர்ய நமஸ்காரம் செய்யவேண் டும். ஆனால் விருப்பம் இல்லாத மாணவர்கள் சூர்ய நமஸ்கார நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜெயி னின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநில அரசு சூர்ய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் துள்ளது. அந்த நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் ஜெயின் இவ்வாறு தெரி வித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் ஏதாவது கருத்து தெரி வித்து சர்ச்சையில் சிக் குவது வழக்கமாகிவிட் டது என்பது குறிப்பிடத் தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/94368.html#ixzz3Oi8DDH6w

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்கது - இங்கல்ல, கருநாடகத்தில்
அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு

சுடுகாடு


மைசூரு, ஜன.13- கருநாடக மாநிலத்தில் கிரா மங்களில் உள்ள அனைத்து சுடுகாடுகளும் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவானது என்றும், எஞ்சி இருக்கும் சுடுகாடுகளும் அரசின் சுடுகாடு களாக மாற்றப்படும் என்றும் கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் வி.சிறீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மைசூருவில் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனிவாச பிரசாத் கூறும்போது, இதுகுறித்து அரசு தேவை யான உத்தரவுகளை துணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ளது. சுடுகாடுகளைப் பொதுவாக்கு வதற்குரிய மாற்றங்கள் குறித்து குடியிருப்பவர் களிடமிருந்து எவ்வித எதிர்ப்புகளும் இன்றி அவர்களின் வசதிக்காகவே நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.

அரசு ஆழ்துளைக் கிணறு, மேற்கூரை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைத்து உள்ளூர் பணியாளர்களைக்கொண்டு பராமரிக்கப்படும். இந்த முயற்சியில் ஆட்சேபணை ஏதுமிருந்தால், துணை ஆணையர்கள் இரண்டு ஏக்கர் அளவில் நிலத்தை கிராமத்தில் பெற்று அரசு சார்பில் பொது சுடுகாடு, அத்தியவசியத் தேவைகளுக்கான வசதிகளுடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மைசூரு வட்டத்தில் கிராம செயலாளர்கள் சங்கத்தினரின் நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகிய வற்றை வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனி வாச பிரசாத் வெளியிட்டார். இடுகாடு மற்றும் சுடுகாடுகளுக்கு கிராமங் களில் ஜாதி அடிப்படையில் இருக்கும் பிரச் சினையைத் தீர்க்கும் வகையில் நாங்கள் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவாக ஒவ்வொரு கிராமத் திலும் ஒரேயொரு பொது சுடுகாடு, எரிமேடை அரசு சார்பில் அமைத்திட உள்ளோம். சுடு காடுகள், எரிமேடை ஆகியவை முழுமையாக அரசு சுடுகாடுகளாக அறிவிக்கப்படும்.

மைசூர் மாவட்டத்தில் திரைப்பட நகர் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒரே இடத்தில் படப்பதிவு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/94375.html#ixzz3Oi8MB7XC

தமிழ் ஓவியா said...

சாமியாரிணிகள் விஷயமா?

சீடன்: விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி என்ற சாமியாரிணி இந்துக் கள் நான்கு குழந்தை களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக் கிறாரே, குருஜி?

குரு: இது சாமியாரி ணிகள் தலையிட வேண்டிய விஷயமா, சீடா!?

Read more: http://viduthalai.in/e-paper/94379.html#ixzz3Oi8TV3c8

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் பிரச்சினை: நீதிமன்றத்தில் சந்திப்போம்!


சிறீரங்கம் ரெங்கநாதன் கோவிலில் ஒரு அக்கிரமம் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறப்புக்குப் பிறகு வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரை யான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோவிலிலிருந்து அவர்களின் வீட்டுக்குப் பல்லக்கில் சுமந்து செல்லவேண்டுமாம் - இதற்குப் பிரம்ம ரத மரியாதை என்று பெயராம். இதற்குப் பிரம்ம ரதம் அல்லது சீமான் தாங்கி என்ற பெயரும் உண்டு.

இதே சிறீரங்கத்தில் 2011 (அக்டோபர் 8) இல் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஓர் எச்சரிக்கை செய்தார். இப்படி மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரான நிகழ்வை அனுமதிக்க முடியாது. மீறி சுமந்தால் திராவிடர் கழகம் மறியல் செய்து முறியடிக்கும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.

அப்பொழுது கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடந்துகொண்டும் இருந்தது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு பிரம்ம ரதத்தைத் தடை செய்தனர்.

இந்து அறநிலையத் துறை ஆணையர் செயராமன்தான் அத்தகைய ஆணையைப் பிறப்பித்தார். அதனை எதிர்த்து ரங்கநாதன் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கொன்றைத் தொடர்ந் தனர். நீதிமன்றம் அர்ச்சகப் பார்ப்பனர்களை எச்சரித்த தோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தது. அதன்படி மூன்று ஆண்டுகளாக பிரம்ம ரதம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், திடீரென்று இவ்வாண்டு மீண்டும் பார்ப்பனரைச் சுமக்கும் பிரம்ம ரதத்தைச் செயல்படுத்த முனைந்தனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், அப்படி தூக்கிச் சென்றால் மறியல் செய்வோம் என்று அறிவித்ததது.

கடந்த 10 ஆம் தேதி காலையில் மறியல் செய்த திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, நூற்றுக் கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்போடு பிரம்ம ரதத்தினை அரங்கேற்றியுள்ளனர் (ரெங்கநாதன் சக்திமீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை போலும்! கடவுளை மற, மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை!).

இது ஓர் அப்பட்டமான நீதிமன்ற உரிமை அவமதிப்பே! (Contempt of Court).

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய ஆணையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 24.11.2012 அன்று கைசிக ஏகாதசி தினத்தன்று திருவேத வியாச ரெங்கராஜ பட்டர் அவர்கள் கைசிக ஏகாதசி புராணம் வாசித்து, பல்லக்கில் தூக்கிச் செல்வதைத் தவிர இதர மரியாதை களைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை திட்டவட்டமாக ஆணை பிறப்பித்ததற்கு எதிராக அப்பட்டமாக மீறுகிறார்கள் என்றால் எந்தத் தைரியத்தில்?

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்து அறநிலையத் துறை ஆணையரோ, அதிகாரிகளோ நீதிமன்ற ஆணையை மீறுவதற்கு எப்படி துணிந்தனர்?

ஒருக்கால் அமைச்சர்கள் தலையிட்டதால் இந்த அத்துமீறலைச் செய்துள்ளனரா? நீதிமன்ற அவமதிப்பு என்றால், அமைச்சர்கள் யாரும் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கப் போவதில்லை. தலைமைச் செயலாளரோ அல்லது இந்து அறநிலையத் துறை ஆணையரோதான் கூண்டில் ஏறிப் பதில் சொல்லியாகவேண்டும்.

மாநிலத்தில் உள்ள ஆட்சி - திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இப்படியொரு ஆன்மிகத்தனத்தில் செயல்பட்டு வருகிறது என்று கருதலாமா?

தமிழ் ஓவியா said...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக கோவில் குளங்கள் என்று சுற்றித் திரிவது, யாகம் நடத்துவது, திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கும், அந்தக் கட்சியின் பெயரிலும், கொடியிலும் இடம்பெற்றுள்ள அறிஞர் அண்ணா ஏற்றுக்கொண்ட, வலியுறுத்திய கொள்கை களுக்கு விரோதமானது என்றாலும், அவை சட்டச் சிக்கலுக்குள் வராது.
ஆனால், இப்பொழுது சிறீரங்கத்தில் நடைபெற்று இருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதாகும். எனவேதான், தமிழர் தலைவர் அறிவித்தார் - நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று.

ஆட்சி அதிகாரம் இருந்தால் எப்படியும் நடந்து கொள்ளலாம்; நீதிமன்ற தீர்ப்புகளையும் தூக்கி எறியலாம் என்ற மனப்பான்மை ஆபத்தானது. இலங்கைத் தீவில் ஆட்டம் போட்ட அதிபரின் கதியை உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது சிறீரங்கநாதனா வந்து சாட்சி கூறப்போகிறான்? நான் சொல்லித்தான் நடந்தது என்று கூறவா போகிறான்?

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதன் மனிதனை சுமப்பது கேவலம் என்று நினைக்கவேண்டாமா? அப்படி நினைக்கவில்லை என்றால், அதற்குள்ளிருப்பது ஜாதி இறுமாப்பும், ஆணவமும்தான் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

திருக்குறளில் ஒரு குறள் உண்டு:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனுக்கும், பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனுக்கும் இடையே உள்ள நிலை மையைச் சுட்டிக்காட்டி, அறத்தின் பயன் இதுதான் என்று கூறவேண்டாம் என்று எவ்வளவு அழகாக மனிதப் பண்பை, உரிமையைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.

மதத்தை மய்யப்படுத்தி நடக்கும் எல்லாவித அக்கிரமங் களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் முடிந்த பரிகாரம் அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்ப தாகும். அதனையும் நிறைவேற்றி முடித்து, ஆதிக்கக் கூட்டத்தின் ஆணிவேரை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Read more: http://viduthalai.in/page-2/94394.html#ixzz3Oi8kead7

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும்.
_ (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/94393.html#ixzz3Oi8t97qi