பொங்கல் என்பது திராவிடர் திருநாள் மகர சங்கராந்தி என்பது ஆரியர் திரிபு!
திராவிடர் திருநாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் உரை
சென்னை, ஜன. 28- பொங்கல்
என்பதற்கும் மகர சங்கராந்தி என்பதற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்து
விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
16.1.2015 அன்று சென்னை பெரியார் திடலில்
நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்
தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நம்முடைய விழாக்களிலேயே சிறப்பான விழா இந்தத் திராவிடர் திருநாள் பொங்கல் விழா என்பதாகும்.
சலசலப்புக்கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை
அடிப்படையிலே, சிலர் சொன்னதைப்பற்றிச்
சொன்னார் கள், சிலருக்கு அவர்கள் உயிரோடு இருக்கிறோம் என்று
காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காக அவர்கள் சில யுக்திகளை
கையாள்கிறார்கள். ஆரியத்தின் அம்புகளாக மாறுகிறார்கள். அதற்குத் தக்க
கூலியும் பெறுகிறார்கள் விளம்பரங்கள் மூலமாக.
ஆகவே, அந்த வகையில், சிலருடைய சலசலப்புக்
கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை. பெரியார் திடலுக்கு முன்னால், பல
விஷயங்களைச் செய்தவர்கள் இருக்கிறார்கள்; பின்னாளில் அவர்களே மாறி,
அவர்கள் வருத்தம் தெரிவித்து, இங்கே வந்தவர்களும் உண்டு. ஆகவே, ஏதோ சில
நிகழ்ச்சிகளைப்பற்றி அவர்கள் இப்படி நாம் பேசி விளம்பரம் கொடுக்கவேண்டும்
என்று நினைக் கிறார்கள்.
அவற்றை நாம் புறந்தள்ளி, திராவிடர் தமிழர்
திருநாள் என்பதா இப்பொழுது போட்டி? திராவிடர் என்று சொன்னால், அதிலே
தமிழர் அடங்கியிருக்கிறது என்பதுதான் அடையாளம். ஆனால், ஏன் திராவிடர்
திருநாள் என்று நாம் சொல்கிறோம் என்று சொன்னால், திராவிடருக்குத்தான்
திருநாள் உண்டு, விழா உண்டு; மற்றவர்களுக்கு அது வெறும் பண்டிகைதான் உண்டு.
அதை நன்றாகப் புரிந்துகொள் ளவேண்டும்.
தினசரி விஷத்தை கக்குகின்ற தினமலர் நாளேடு
எந்த அளவிற்கு இன்றைக்கு ஆரியம் தலை
தூக்கி ஆடுகிறது; தங்கள் கையில் வாய்ப்புகள் கிடைத் திருக்கிறது என்பதற்காக
மிகப்பெரிய அளவில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம், தினசரி
விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நாளேடு, பார்ப்பன நாளேடு தினமலர்
நாளேடு.
இந்தத் தினமலர் நாளேட்டில், 15 ஆம்
தேதியிட்ட நாளேட்டில், மனம் நிறைய மகிழ்ச்சி பொங்கட்டும்; பொங்கல் ஸ்பெஷல்
என்று ஒரு பக்கம் எழுதியிருக்கிறார்கள். இதில், தமிழர் என்ற சொல்லைக்கூட
அவர்கள் பயன்படுத்துவ தற்குத் தயாராக இல்லை.
ஏமாந்த தமிழா! கூலிக்கு மாரடிக்கும் தமிழா!
தமிழ்
என்ற பெயராலே, தமிழ்த் தேசியம் என்ற முத்திரை யோடு வரக்கூடிய மிக
வேடிக்கையான, விவரம் புரியாத, அடி முட்டாள் தமிழனாக இருக்கின்ற தமிழர்களே,
உங்களுக்கும் சேர்த்து சொல்கிறோம். இதைத் தேர்ந்து நீங்கள் படியுங்கள்!
புரிந்துகொள்ளுங்கள்!
நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை, நாம்
தீர்மானிப் பதில்லை; நம் எதிரிதான் தீர்மானிக்கிறான். இது மாவோவின் வாசகம்
மட்டுமல்ல; அனுபவத்திலும் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு செய்தி.
அந்த வகையில், மனம் நிறைய மகிழ்ச்சி பொங்கட்டும்; பொங்கல் ஸ்பெஷல்; பொங்கல் சிறப்பு நாள் என்று கூட கிடையாது - பொங்கல் ஸ்பெஷலாம்.
அதில், மிக முக்கியமான தகவல்கள்; யாருக்கும் தெரியாத தகவல்கள் எல்லாம், அற்புதமான தகவல்களையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.
திராவிடர் திருநாள் என்று சொல்லக்கூடிய
இதனுடைய தத்துவம், எதன் எதிர்ப்பிலே அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப்
புரிந்துகொள்ளவேண்டுமானால், எதிரிகள் கையாளுகின்ற விளம்பரத்தை, அவர்களுடைய
கருத்துப் பிரச்சாரத்தை, அதிலும் புதிதாக தங்களுடைய ஆட்சி நிலவுகிறது,
மீண்டும் ஒரு குப்தர் காலம் போல, மீண்டும் தாங்கள் வந்துவிட்டோம்;
அசோகன் ஆட்சியை வீழ்த்தி விட்டோம்.
அதற்குப் பதிலாக நாம் ஆரிய ஆட்சியை நிலை நாட்டி இருக்கிறோம் என்று
கருதுகிறவர்களுக்காக சொல் கிறேன், சிந்திக்கவேண்டும்.
சூரியன் பயோடேட்டா!
சூரியனுக்கே பயோடேட்டா - தந்தை காஷ்யப
முனிவர்; இவர் யாருக்குப் பிறந்தவர் என்று தெரியவேண்டுமானால், தந்தை
பெரியார் அவர்கள் எழுதிய மனுகுலத்துக்கு ஒரு நீதி என்ற ஒரு சிறிய
புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!
எந்தெந்த ரிஷி, யார் யாருக்குப்
பிறந்தான்? எப்படிப் பிறந்தான்? என்ற பட்டியலைப் போட்டு, ஒருவன்கூட
மனிதனுக்குப் பிறக்கவில்லை. மிருகத்திற்கு, குடத்திற்கு, குவளைக்கு என்ற
விவரங்கள் எல்லாம் தெரியும்.
தந்தை - காஷ்யப முனிவர்
தாய் - அதிதி
மனைவியர் - உஷா, பிரத்யுஷா
திசை - கிழக்கு
பிடித்த நிறம் - சிவப்பு
பூஜிக்கும் தெய்வம் - சிவன்
பிடித்த இலை - எருக்கு
விரும்பும் தானியம் - கோதுமை
பிடித்த மொழி - சமஸ்கிருதம், தெலுங்கு
நண்பர்கள் - குரு, புதன்
பிடிக்காதவர்கள் -சுக்கிரன், ராகு, கேது அடடா,
உங்கள் யாருக்காவது துளியளவாவது துணிவுண்டா? தெம்பு உண்டா?
மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்!
திராவிடர் திருநாள் என்று ஏன் பெரியார் திடல் கொண்டாடுகிறது என்பதற்கு இதைவிட தெளிவான எதிரியின் விளக்கம் வேண்டுமா?
தலையில்லா முண்டங்களே, தமிழ்த் தேசியம்
என்று ஆடுகிறீர்களே, இதைப் பொறுத்து! உங்கள் நிலை என்ன? இதை மறுக்க
எங்களைப் போல், உங்கள் யாருக்காவது துளியளவாவது துணிவுண்டா? தெம்பு உண்டா?
திராணி யுண்டா? திராவிடர் என்று சொல்லுகின்ற நேரத்தில்தான், அதுவும்
பெரியாருடைய மாணவராக நாங்கள் இருந்து சொல்கின்ற போதுதான் இந்த உணர்வு
இருக்கிறது.
அடுத்த அந்த தினமலரில் வந்து இன்னொரு
செய்தியையும் பாருங்கள்! மகர சங்கராந்தி என்றால் என்ன? அதைப்பற்றி ஒரு
விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தையே
தை என் கிறோம். இது பேச்சு வழக்கில் சங்க ராந்தி என இருந்தாலும்,
சங்கிராந்தி என்பதே சரியானது. கிராந்தி என்றால், மாறுதல். இது சம் என்ற
அடைமொழி இணையும்பொழுது, நல்ல மாறுதல் என்று பொருள்படும். சூரியன்
இல்லாவிட்டால், உலகம் இல்லை. அவரே உலக உயிர்களுக்கு உணவு தருகிறார்.
விளைச்சலுக்குக் காரணமாகிறார். ஒவ்வொரு
விவசாயியின் வீட்டிலும் நல்ல மாறுதலை உருவாக்குகிறார். விவசாயிகள்
மட்டுமல்ல, அவர்களிடமிருந்து பொருளைப் பெறும் எல்லா மக்களுமே தங்களுக்கு
உணவளித்த சூரியனுக்கு நன்றி சொல்லும் நன்னாளாக, மகர சங்கராந்தி அமைகிறது.
அன்பை வெளிப்படுத்தும் நாளும் இதுவே! சம்பந்திகள் இந்நாளில் தங்களுக்குள்
பொருள்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
அடுத்த இன்னொரு செய்தியையும் அந்த தினமலர் வெளியிட்டுள்ளது.
நெற்றிக்கண் அறிவியல் பார்வை!
சிவனுக்கு நெற்றிக்கண் உள்ளதாகச்
சொல்கிறோம். இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்துள்ளனர். சூரியன் ஒரு எரிகோளம்.
அதை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். நடுவில் உள்ளது ஒளிக்கோளம்.
இதிலிருந்துதான் வெப்பமும் ஒளியும் உண்டாகின்றன.
இதைச் சுற்றி ஹைட்ரஜன் வாயு அடங்கிய
வண்ணக் கோளம் உள்ளது. இதற்கு வெளியே உள்ள பாகத்தை ஒளிர் மகுடம் என்பர்.
இந்தப் பகுதிகள் அனைத்தும் வட்டமாக இருக்கும்.
சூரியனை சிவன் என வைத்துக் கொண்டால்,
அதன் மூன்று சக்திகளான ஒளித்திறன், வெப்பத் திறன், ஈர்ப்புத் திறன்
ஆகியவற்றை அவரது மூன்று கண்களாகக் கொள்வர். இதில் வெளிப்பகுதியான ஒளிர்
மகுடமே நெற்றிக்கண். சூரியன், ஆறு நட்சத்திரங்கள் அடங்கிய கார்த்திகை
நட்சத்திர கூட்டத்தைக் கடப்பதையே, ஆறு பொறிகள் நெற்றியில் இருந்து
வருவதாகக் குறிப்பிடுவர்.
சூரியனால் உருவாகும் இளவேனில்,
முதுவேனில், முன்பனி, பின்பனி, குளிர், மழை ஆகிய ஆறு பருவங்களே முருகனின்
ஆறு முகங்களாக குறிக்கப்பட்டது.
பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கு வாய்ப்பே தருவதில்லை
எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறோம்
என்றால் நண்பர்களே, இந்தக் காலத்தில்கூட மகரசங்கராந்தியைக்
கொண்டாடுகிறார்களே தவிர, அதைத்தான் அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்களே
தவிர, பொங்கல், அது தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கு வாய்ப்பே
தருவதில்லை அவர்கள்.
ஆரியம் ஆட்சியைப் பிடித்தால் என்னாகும்?
நாங்கள் இடைவிடாது கேட்டுக்கொண்டதன் விளைவாக, கலைஞர் ஆட்சிக்கு வந்ததால்,
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததின் காரணமாக, அரிய பண்பாட்டு
புரட்சிகளில் ஒன்று, எப்படி அண்ணா அவர்கள், சென்னை ராஜதானியை, தமிழ்நாடு
என்று மாற்றினார்களோ, அதுபோல, காலங்காலமாக 60 வருஷப் பிறப்பு. அது ஒன்றும்
ஆண்டு பிறப்பல்ல. ஆண்டு பிறப்பு என்பது தை முதல் நாள்தான்.
பெரியார் ஊட்டிய உணர்வை, அசைத்து விடலாம் என்று நீங்கள் யாரும் நினைக்காதீர்கள்!
60
ஆண்டுகள் என்று சொல்லும்பொழுது, திராவிடர் தமிழர் என்று சொல்லுங்கள்
என்றெல்லாம் சில வித்தைகளை ஆரிய வில்லுக்கு அம்பாகி வரக்கூடியவர்கள் யாராக
இருந்தாலும், ஏனென்றால், எதிரிகள் சிலர் விளம்பரத்திற்கு வருவார்கள்; சில
பேர் ஆரியம் தரக்கூடிய கூலியைப் பெற்றுக்கொண்டு வருவார்கள்.
யார் வந்தாலும், இந்த உணர்வை, இன்னும்
ஆயிரம் காலத்துப் பயிராக இருக்கக் கூடிய பெரியார் ஊட்டிய உணர்வை,
அசைத்துவிடலாம் என்று நீங்கள் யாரும் நினைக்காதீர்கள். அதை நீங்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
மிக முக்கியாக ஒரு சிறப்பான ஒரு கேள்வியை பெரியார் அய்யா அவர்கள் கேட்டார்.
தமிழ்ப்
புத்தாண்டு என்று சொல்கிறபொழுது நாங்கள் பிரபவ, சுக்கில, விபவ என்று
சொல்கின்றவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? இங்கே பேசுகின்றபொழுது மதிமாறன்
அவர்கள் மிகவும் அற்புதமாகக் கேட்டாரே, நம் முடைய பேரசிரியர் சுப.வீ.
அவர்கள் சொன்னார்களே, இதனை யாராவது மறுத்து, எதிர்ப்பைக் காட்டியிருக்
கிறார்களா? எங்களைத் தவிர!
இங்கே பேராசிரியர் மங்கள முருகேசன்
அவர்கள் பேசும்பொழுதும் சொன்னாரே, மற்ற ஆண்டுகளில் அந்த விழாவினை எளிமையாக
நடத்தினோம். ஆனால், எந்த ஆண்டு அது மறுக்கப்பட்டதோ, அப்பொழுதுதான் அடிக்க
அடிக்க எழும்பும் பந்துபோல, பெரியார் திடலில் கடந்த சில ஆண்டுகளாகவே
தனித்தன்மையோடு அந்த விழாவினை நடத்துகின்றோம். மற்றவர்கள் அதை
செய்கிறார்களா, இல்லையா என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்கிற
உணர்வோடு!
இங்கே வந்திருக்கின்ற ஏராளமான புது
முகங்களை நாங்கள் வரவேற்கிறோம். வழக்கமாக பெரியார் திடலுக்கு
வருபவர்கள்தான் வந்திருக்கிறார்கள் என்பதல்ல, தமிழர்கள், திராவிடர்களுக்கு
அந்த உணர்வு இருக்கிறது.
திராவிடர்கள் என்று சொல்லும்பொழுது, அதில் திராவிடர்கள், தமிழர்கள் என்பதில் என்ன பெரிய வேறுபாடு?
பெரியார் மிகச் சாதாரணமாக விளக்கம்
சொன்னார். தமிழன் என்று சொன்னால், பார்ப்பானும் தமிழனாகி விடுகிறானே?
பார்ப்பானும் தமிழ் பேசுகிறானே! அவனும், தமிழன் ஆகிவிடுகிறானே! ஆகவே,
திராவிடன் என்று சொல்லுங்கள், பார்ப்பான் உள்ளே நுழைய முடிகிறதா என்பதைப்
பாருங்கள் என்று சொன்னார். திராவிடன் என்பது வெறும் ரத்தப் பரிசோதனை அல்ல.
இன்னமும், பொங்கல் விழாவைக்கூட, திராவிட
திருநாளாக, திராவிடர் விழாவாகக் கொண்டாடாமல், அதற்கு சூரியனுக்கு எத்தகைய
ஆராய்ச்சி செய்கிறான்; மகர சங்கராந்திக்குச் செல்கிறான். அந்த 60
வருடங்களைச் சொல்கிறோம், புதிதாக வந்திருக்கின்ற தோழர்களுக்குச்
சொல்கிறோம்.
வருஷம் என்பதே முதலில் தமிழா? தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்கிறார்கள்.
60 வருஷங்களின் பெயர்கள்!
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத,
பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய,
பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய,
சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத,
துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது,
சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண,
விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி,
சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி,
குரோதன, அட்சய.
ஒரு சொல்லாவது தமிழ்ச் சொல் இருக்கிறதா?
இதற்குத் தமிழ்ப் பேசக்கூடியவர்கள், நாங்கள் தமிழ்த் தேசியத்தில்
விழுந்திருக்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் யாராவது, தமிழ்ப் புத்தாண்டு
என்று சொல்கின்ற நேரத்தில், தமிழனுக்கு ஆண்டு என்று சொல்கின்ற நேரத்தில்,
ஒரு சொல்லாவது தமிழ்ச் சொல்லாக இருக்கவேண்டாமா? ஒரு பண்பாட்டு
படையெடுப்பினுடைய ஆதிக்கம்தானே அது.
இதைக் கண்டிக்கத் தந்தை பெரியார்
போன்றவர்கள் இருந்த காரணத்தினால்தான், இன்றைக்குத் தமிழ்ப் புத்தாண்டு,
திராவிடர் திருநாளாக உருவாகி இருக்கிறது. அதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப்
பார்க்கவேண்டும்.
இங்கே இவ்வளவு தாய்மார்கள், சகோதரிகள்
மற்றவர்கள் இருக்கின்ற இடத்தில், வெளிநாட்டுக்காரர்கள் யாரிடமாவது இந்த 60
வருஷக் கதையைச் சொன்னால் என்னாகும்? 60 வருஷத்திற்குமேல் வாழ்ந்தால்
என்னாகும்? இப்பொழுது பேராசிரியருக்கு இப்பொழுது வயது 93. அவர் தமிழ்
வருஷத் தில் பிறந்திருந்தால் என்னாகும் கணக்கு. நன்றாக நீங்கள் நினைத்துப்
பாருங்கள்.
திராவிடத்தால் அறிவு பெற்றோம்!
திராவிடத்தால் மானம் பெற்றோம்!
திராவிடத்தால் உரிமை பெற்றோம்!
60-க்கு மேலே இவனுடைய சிந்தனையே
வாழவில்லை, அந்தக் காலத்தில். அதனால்தான், 60 வயதை சஷ்டியப்த பூர்த்தி
என்று சொன்னான். இதனை மிகப்பெரிய அளவில் மாற்றியது திராவிடர் இயக்கம்தான்.
முத்து விழா, பவழ விழா, மணிவிழா என்று மாற்றியது திராவிடர் இயக்கம்தான்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லாதீர்கள் நண்பர் களே, திராவிடத்தால்
அறிவு பெற்றோம்! திராவிடத்தால் மானம் பெற்றோம்! திராவிடத்தால் உரிமை
பெற்றோம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வை பெறுங்கள்!
60 வருஷங்கள் எப்படி பிறந்தார்கள் என்று
கேட்டால், நாரதனும், கிருஷ்ணன் இணைந்து பெற்றார்களாம். இந்த 60 வருஷமும்
கீதை பிறந்த பிறகுதான் வந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மனுதர்மத்தினுடைய கடைசி பாகத்தில்தான் கிருஷ்ணன் என்கிற சொல்
பயன்படுத்தப்படுகிறது.
ஆகவே, திட்டமிட்டு ஒரு பண்பாட்டுப்
படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. யாருக்காவது சந்தேகம் இருந்தால், அபிதான
சிந்தாமணி புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். அதில் 60 வருஷக் கதைகள்
இருக்கும்.
அந்தக் கதைகள் மிகவும் ஆபாசமாக இருக்கும்.
கிருஷ்ணனிடம் நாரதன் சென்று கேட்கிறாராம், கிருஷ்ணா உனக்கு 16 ஆயிரம்
கோபிகாஸ்திரீகள் இருக்கிறார்களே, எனக்கு ஒரு பெண்ணாவது கொடுக்கவேண்டாமா?
என்று.
தேவர்கள் எவ்வளவு முக்கியமான வேலையைப் பார்த்திருக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் எல்லாம் அவதாரங்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் கோபிகாஸ்திரீகளை, கிருஷ்ணன் கொஞ்சிக்கொண்டிருக்கிறானாம்!
உடனே கிருஷ்ணன் சொல்கிறானாம், நீ ஒவ்வொரு
வீட்டிற்கும் சென்று கதவைத் தட்டு; நான் இல்லாத இடமாக இருந்தால், நீ அந்த
வீட்டிற்குத் தாராளமாகச் செல்லலாம் என்று சொல்கிறான். 16 ஆயிரம்
கோபிகாஸ்திரீகளின் வீட்டிற்கும் சென்று நாரதன் கதவைத் தட்டுகிறானாம்.
எங்கே பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டிலும்
கோபிகா ஸ்திரீகளை, கிருஷ்ணன் கொஞ்சிக் கொண்டிருக்கிறானாம். உடனே, நாரதன்
எனக்கு ஒன்றும் புரியவில்லையே, எனக்கு ரொம்ப போதை வந்துவிட்டதே என்று
கிருஷ்ண னிடம் சொல்கிறானாம்.
கிருஷ்ணன் சொல்கிறான், அப்படியென்றால்,
நீயும், நானும் கூடி குழந்தைகளைப் பெறலாம் என்றானாம். நாரதன், கிருஷ்ணன்
ஆகிய இருவருக்கும் பிறந்த குழந்தைகள்தான் 60 ஆண்டுகளாம் என்று எழுதி வைத்
திருக்கிறார்கள்.
இதைவிட ஆபாசமான, இதைவிட அறிவுக்குப்
பொருந்தாத கற்பனை வேறு இருக்க முடியுமா? இதுதான் நம்முடைய தமிழ் புத்தாண்டு
என்று சொன்னால், இதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? நாகரிக உலகத்திலிருந்து
மறுபடியும் காட்டு விலங்காண் டித்தனம் என்று சொன்னார்களே, அந்தக்
காட்டுமிராண்டித் தனத்திற்கு நாம், நம்மை நோக்கியே பிற்படுத்திக் கொள்
கிறோம் என்று பொருள்.
எனவேதான், திராவிடர் திருநாள் என்பது, ஒரு
பண் பாட்டு புரட்சியினுடைய அடையாளம். எழுச்சியினுடைய தொடக்கம். அதனுடைய
சிறப்பான கருத்து, கவிஞர் அவர்கள் சொல்லியதுபோல், ஒரு மீட்டுருவாக்கம்.
எனவே, இந்தக் கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தவேண்டிய அவசியம், அவசரம் இப்பொழுது ஏராளம் உண்டு.
ஏனென்றால், எதிரிகள் தங்களுக்கு
ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டோர்
புலி வேஷம் போட்டு ஆடுகிறான்
பொதுமக்களுக்கு புல்லளவேனும்
மதிப்பேதும் தருகின்றானா?
இருட்டறையில் உள்ளதடா உலகம்
என்று புரட்சிக்கவிஞர் அவர்கள்
சொன்னதைப்போல, அந்த இருட்டறையில், ஒரு வெளிச்சத்தை உண்டாக்கக்கூடிய ஒரு
சக்தி, தந்தை பெரியார் என்கிற தத்துவத்திற்குத்தான் உண்டு என்கிற முறையில்,
பெரியாரைப் பேசாத நாளெல் லாம், பிறவாத நாட்களாகக் கருதும் பேராசிரியருடைய
உரைக்காக, என்னுடைய உரையை நான் முடிக்கின்றேன்.
வணக்கம்! நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
------------------------ இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். --"விடுதலை” 28-01-2015