ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? (1)
1. ஜனனி அய்யர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: அவன் இவன்
2. அனுஜா அய்யர் (துணை நடிகை) நடித்த திரைப்படம் உன்னைப் போல் ஒருவன்
3. கவுதம வாசுதேவமேனன் (இயக்குநர்) காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கியவர்.
4. சமீராரெட்டி (கதாநாயகி) நடித்த திரைப்படம்; வாரணம் ஆயிரம்.
5. பூமிகா சாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்; ரோஜாக் கூட்டம்.
6. ராணி முகர்ஜி (கதாநாயகி) நடித்த திரைப்பட (ஹேராம்).
7. நவ்யா நாயர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: சிதம்பரத்தில் அப்பாசாமி.
8. கீர்த்திசாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்: நான் அவன் இல்லை.
இவை எல்லாம் சினிமாவில் தலை காட்டும் கதாநாயகி கதாநாயகர்களின் பெயர்கள்.
ஒரு கட்டத்தில் ஜாதி பெயர்களில் சினிமாக்களை எடுக்க ஆரம்பித்தனர். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதோடு அவற்றின் கதை முடிந்து போயிற்று.
இப்பொழுது சினிமா நடிகைகள், நடிகர்கள் வெளி மாநிலக்காரர்கள் ஜாதிப்பட்டங்களோடு அரங்கேறிக் கொண்டு இருக்கின்றனர்.
இதில் ஒரு கடைந்தெடுத்த வெட் கக்கேடு பெண்களாக இருக்கக் கூடிய நடிகைகள்கூட தங்கள் பெயர்களுக்குப் பிறகு அய்யர் என்றும் ரெட்டி என்றும், முகர்ஜி என்றும் ஜாதி வாலை ஒட்ட வைத்துக் கொண்டு இருப்பதுதான்.
பெயர்களுக்குப்பின் பெண்கள் ஜாதிப் பெயர்களை வைத்து கொள்வது கிடையாது. பெண்களைப் பொறுத்த வரை இந்து மதத்தில் அவர்ணஸ் தர்கள்; அதனால் ஜாதி என்ற பேச்சுக்கே இட மில்லை.
பெண்களுக்குப் பூணூல் தரித்துக் கொள்ளும் உரிமையும் கிடையாது. எனவே பார்ப்பனப் பெண்கள்கூட சாஸ்திரப்படி பிராமணர் ஆகமுடியாது என்றாலும் அவ்வாறு சொல்லிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.
சினிமாவில் குதிக்கும் பெண்கள் தங்கள் பெயர்களோடு அய்யர் பட்டத்தை, ஜாதிப் பட்டத்தைப் போட்டே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். சினிமா வட்டாரத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது.
இது உண்மை என்றால், இதுபற்றி தமிழ்நாட்டு வீதிகளில் மேடைகளில் சர்ச்சைப் புயல்கள் வெடித்துக் கிளம்பும் என்பதில் அய்யமில்லை.
தமிழ் மண்ணுக்கென்று சில குணம், மணம் உண்டு. சினிமா தயாரிப்பாளர்க ளும், இயக்குநர்களும் இதனை அறிவார்கள். வீண் பிரச்சினையைத் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டாம். ஜாதிப் பெயர்களை ஒட்டிக் கொண்டு, சினிமா மோகத்தில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களின் அப்பாவி ரசிகர்களின் தொடைகளில் கயிறு திரிக்கலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஜாதியைக் காப்பாற்ற நிலை நாட்ட பார்ப்பனீயம் இப்படி ஒரு யுக்தியை மேற்கொள்கிறதோ என்று சந்தேகிக்கவும் இடம் உண்டு.
ஜாதி ஒழிக்கப்பட்டால் தங்களின் உயர் ஜாதித்தனம் ஒழிந்து போய் விடும் என்பது அவர்களுக்குத் தெரியுமே!\
********************************************************************
தமிழ்ச் சங்கம் - ஓர் எச்சரிக்கை! (2)
தமிழ்ச் சங்கங்கள் நாட்டிற்குத் தேவையானவை. இதன் மூலம் தமிழ் மொழியின் மீது ஓர் ஈர்ப்பு -அயல் ஆதிக்கத் தகர்ப்பு என்பது போன்ற தாக்கங்கள் ஏற்பட வேண்டும். அதை விட்டு விட்டு அயல் ஆதிக்கங்கள் புழக்கடை வழியாகப் புகுந்திட இடம் கொடுத்துவிடக்கூடாது.
குறிப்பாக தினமணியின் ஆசிரியராக திரு. வைத்தியநாதய்யர் என்பவர் வந்திருக்கிறார். இவருக்கு முன் ஆசிரியராக இருந்தவர் தினமணியை உண்மையான தமிழ் ஏடாக நடத்தி சாதனை படைத்தார்; தினமணியில் தமிழர்களும் கணிசமான அளவுக்கு நுழையவும் வழி வகுத்தார்.
இப்பொழுது வந்துள்ளவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவர். துக்ளக் குழுமத்தில் சுத்தமான நெய்யில் பொரிக்கப்பட்ட பண்டம் இவர்.
தமிழ் ஆர்வம் உள்ளவர் போல காட்டிக் கொள்வார். செம்மொழி மாநாட்டுக் குழுவில் இடம் பெறுவதற்குக் கூட அன்றைய முதல் அமைச்சர் கலைஞர், அய்யர்வாளுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுக் கிராக்கிப் பண்ணினார்.
தினமணிக்கு எத்தனையோ பேர் ஆசிரியர்களாக வந்து இருக்கிறார்கள். அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள் என்றோ, அப்படியே கலந்து கொண்டாலும் அவர்களின் நிழற் படங்கள், பேச்சுகள் எவையும் தினமணியில் இடம் பெற்றது என்றோ கூற முடியாது.
இவர் ஆசிரியராக வந்த நாள் முதல் இவர் நிழற்படம் பெரும்பாலும் இடம் பெறும். இவர் சொற்பொழிவும் இடத்தை அடைத்துக் கொள்ளும்.
தினமணி வைத்தியநாதய்யரை நிகழ்ச்சிக்கு அழைத்தால், அந்தச் செய்தி நிழற்படங்களுடன் பிரமாதமாக தினமணியில் வரும் என்று நினைக்கிற தமிழ் அமைப்புகள், சங்கங்கள் தினமணி ஆசிரியரை அத்தகைய விழாக்களுக்கு அழைக்க ஆரம்பித்து ள்ளனர். இது டில்லிவரை நீளுகிறது.
இந்த விளம்பர வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளாகத் தமிழ் அன்பர்கள் விழுந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
சென்னை மாநகரில் வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்று ஓர் இயக்கத்தையே நடத்தினார்- _ அன்றைய மாநகராட்சித் தந்தை மானமிகு மா. சுப்பிரமணியம் அவர்கள்; அதற்கெல்லாம் இந்தத் தினமணிகள் எந்த அளவு கை கொடுக்க முன் வந்தன என்பதை ஒரே ஒரு நிமிடம் நினைத்துப் பார்க் கட்டும்!
அதனை மொழி நக்சலிசம் என்று வருணித்தவர் தினமணி ஆசிரியரின் குருநாதரான திருவாளர் சோ.
பார்ப்பனர்கள் எதைச் செய்ய முன் வந்தாலும் அதில் தமிழர்கள் எச்சரிக் கையாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!
- -------------------- மின்சாரம் அவர்கள் 22-9-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நாடெங்கும் அடக்குமுறை எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டம்
சாந்தமும், சமாதானமும், அமைதியும் ஒழுங்குமான முறையில் சுருக்கமான ஊர்வலம் கொண்ட பொதுக்கூட்டத்தில், வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று திராவிடர் கழக மத்திய நிருவாகக் கமிட்டி தீர்மானித்திருக்கிறது.
அன்று மேற்கண்ட நடவடிக்கைகள் நடத்துவதில் மக்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும், போலிசு அதிகாரிகளுக்கும் சிறிதுகூட அதிருப்தி ஏற்படாமல் ஒழுங்குக்கும், போலிசு அதிகாரிகளுக்கும் கட்டுப்பட்டு நடந்து கொண்டு கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டில் கட்டாய இந்தி ஒழிக தமிழ் வாழ்க திராவிட நாடு திராவிடருக்கே அடக்குமுறை ஒழிக! என்பவைகளை தவிர, வேறு ஒலிகள் கண்டிப்பாக வேண்டாம்.
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
குடிஅரசு - பெட்டிச்செய்தி - 01.01.194
வைக்கத்தில் தண்டோரா!
அன்பர்களே! கனதனவான்களே!
இன்றைய தினம் சாயங்காலம் வைக்கம் போட்ஜெட்டிக்கு (ஜெல்லி) அருகில் ஈரோடு சிறீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்களும், சிறீ ஏ..க.பிள்ளை அவர்களும், சிறீ சி.வி.குஞ்சுராமன் அவர்களும் இன்னும் சிலரும் பேசுவார்கள்.
யாவரும் வாருங்கள்! வாங்கோ! வாங்கோ!
இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து சென்றிருந்த தியாகி முத்துசாமி வைக்கம் போராட்டம் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு வருமாறு பொதுமக்களுக்கு தண்டோரா போட்டு அறிவித்துச் சென்றார்.
முதன்முறையாக அவர் இப்படி தண்டோரா போட்டுச் சென்றபோது போராட்டத்தை எதிர்த்தவர்கள் அவரை அடித்து அவரது தம்புராவை பிய்த்தெறிந்தார்கள்.
மறுமுறை ஒரு தகர டப்பாவை வைத்து அடித்துக் கொண்டு போனார். அதையும் உடைத்து நொறுக்கினார்கள். மறுமுறை ஒரு பாக்கு மர மட்டையை வைத்துக் கொண்டு அதைத் தட்டி ஓசை எழுப்பி செய்தியைச் சொல்லிக் கொண்டு போனார்.
திரு.வல்லுத்தரா கோவிந்தன் எழுதிய வைக்கம் சத்தியாக்கிரகம் மலையாளத்தில் எழுதப்பட்ட நூலிலிருந்து
ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு
ஈரோடு தாலுகா மக்களின் பொது நலனுக் கென எவ்விதக் கட்சிப்பற்றும் இல்லாமல், சென்ற ஒரு வருடமாக நடைபெற்று பெரும் பாலான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஈரோடு வாசி என்னும் வாரப்பத்திரிகை ஆசிரி யரும், பிரசுரிப்பவருமான தோழர் ப.சண்முக வேலா யுதன் மீதும், அச்சிடுபவரான தமிழன் பிரஸ் தோழர் என்.கரிவரதசாமி மீதும் ஈரோடு டாக்டர் ஜே.டி.ராஜா எம்.பி.பி.எஸ் (பி) என்பவர், இ.பி.கோ.500 பிரிவுப்படி ஈரோடு அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வாயிதா 26.02.1949 தேதி போடப்பட்டிருக்கிறது. வழக்குத் தொடர்ந்திருப்பதற்குக் காரணம்.
05.12.1948ஆம் தேதி ஈரோடுவாசியில் போலி டாக்டர் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சேதியேயாகும் எனத் தெரிகிறது.
குடிஅரசு - பெட்டிச் செய்தி - 19.02.19
கும்பகோணம் போராட்டம்
உரிமைப் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென்று, தஞ்சையில் 28.12.1948ஆம் நாள் கூடிய நிருவாகக் கமிட்டி முடிவு செய்தது. அதையொட்டி 29.12.1948இல் தலைவர் பெரியாரவர்கள் கொடுத்த அறிக்கை:-
கும்பகோணத்தில் சர்க்காரால் திராவிடர் கழகப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக அநீதியாகப் போடப்பட்ட 144-அய் எதிர்த்து நடத்திய போராட்டத்தை 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கடுமையான தடியடிப் பிரயோகத்தால்நிறுத்த சர்க்கார் முயற்சி செய்து பார்த்தும், அம்முயற்சி அவர்களுக்குப் பயன்படாமல் மேலும் மேலும் போராட்டம் மக்களுக்குள் வேகத்தையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்துத் தொடர்ந்து நடத்து வந்ததால் 26ஆம் தேதி முதல் சர்க்கார் தடியடியை நிறுத்திக் கொண்டதோடு உத்தரவை எதிர்த்தவர்களையும், எதிர்ப்புக்கு ஏற்பட்ட சட்ட நிபந்தனைப்படி அரஸ்டு செய்யாமலும் விட்டு விட்டதால், இனி அங்கு போராட்டம் தேவை இல்லை என்று கருதிப் போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று 28ஆம் தேதி கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாக கமிட்டி முடிவு செய்திருக்கிறது.
நாளையோடு நிறுத்தப்பட்டு விடும். ஆகவே, கும்பகோணத்துக்கு வெளியூரிலிருந்து வந்த தொண்டர்கள் அருள்கூர்ந்து அவரவர்கள் ஊருக்குச் சென்று விட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
ஈ.வெ.ராமசாமி, குடிஅரசு - பெட்டிச்செய்தி - 01.01.1949
நீதிக்கட்சியின் முன்னாள் பிரதமத் தலைவர்களுள் ஒருவரான தோழர் டி.சுந்தரராவ் நாயுடு, உதகையில் 07.05.1949 அன்று இருதய நோயால் மரணமடைந்தார் எனச் செய்திக் கேட்டு வருந்துகிறோம். அவர் சென்னை நகரசபையில் எழும்பூர் பகுதியின் உறுப்பினராக பலகாலமிருந்தார். அதன் தலைவராகவும் ஆனார்.
அக்காலத்தில் அவர் நகர அபிவிருத்தி நிருவாகத்தில் பெரும்பங்கு கொண்டு உழைத்தார். பழைய சட்டசபையில் உறுப்பினராயிருந்தார். பிரதம மந்திரியின் கவுன்சில் காரியதரிசியாகவும் இருந்தார். சிறிது காலம் 1928இல் கீழ்க்கோர்ட் நீதிபதியாக இருந்து வேலை செய்தார். அவர் பொதுச் சேவையில் பெரிதும் ஆதித்திராவிடர் நலனுக் குழைத்தவர். தம் இறுதி நாள் வரை திராவிட இன முன்னேற்றத்திற்கு பார்ப்பனரல்லாதார் இயக்கந் தொட்டுத் தொண்டாற்றியவர்.
அவர் திடீரென்று இருதய நோயால் தமது 59ஆவது வயதில் மூன்று பையன்களையும், நான்கு பெண்களையும் விட்டுக் காலமானார். அவருடைய குடும்பத்தாருக்கும் அவர் பிரிவுக்கு வருந்தும் நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடிஅரசு - இரங்கல் செய்தி - 14.05.1949
பெரியாரும் ராஜாஜியும்
பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! நூலில் 192ஆம் பக்கத்தில் இருப்பது:-
எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று பயந்து கொண்டு குடும்பக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டு மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி விடாதீர்கள். நிறைய குழந்தைகளைப் பெறுங்கள். இதுவரை கடவுள் எப்படிக் காப்பாற்றினானோ அதுபோல இனியும் காப்பாற்றுவான். வயோதிகர்கள் வியாதியஸ்தர்களுக்குத்தான் இது சாத்தியமாகாமலிருக்கலாம். வாலிபர்களுக்கு சொல்லத்தான் சொல்லுகிறேன். நிறைய குழந்தைகள் இருந்தால்தான் ஏதாவது அவசர காலங்களில் வீட்டுக்கு 4,5 ஆட்கள் அனுப்ப முடியும். இரண்டு, மூன்று குழந்தைகள் என்றிருந்தால் பிறகு அழ வேண்டிய நிலைதான் வரும். நான் அண்ணாத்துரைக்காக சொல்லவில்லை. இது என் சொந்த கருத்து.
பெரியார் சிந்தனைத் திரட்டு - 1 நூலில், பக்கம் 234 இல் இருப்பது:-
இந்த நாட்டுக்கு இப்படிப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் வேண்டுமென்று நீண்ட நாளாகவே மக்களுக்குள் விருப்பம் இருந்தது. அந்தப்படிக்கே நான் இந்த முயற்சி எடுத்துக் கொண்டேன். ஒரு பக்கம் நான் மக்கள் குழந்தை பெருக்கக் கூடாது என்று பிரசாரம் செய்பவன் (சிரிப்பு) இன்னொரு பக்கம் குழந்தைகள் எல்லாம் வளர்க்க வேண்டும் உயிரோடு இருக்க வேண்டும் என்று பிரசாரம் பண்ணுகிறவன் சாதாரண ஜனங்களுக்கு இது கொஞ்சம் ஒரு விடுகதையாகத் தோணலாம். ஏன்னா அங்கே பிள்ளை பெக்க வேணாம்கிறான், இங்கே பிள்ளையெல்லாம் வளர்க்க வேணும்கிறான். (சிரிப்பு) (கைதட்டல்). பிள்ளை பெக்கிறது குறைந்து போகும். ஆனதினாலே சுருக்கமான அளவில் பிள்ளைகள் பிறந்தாகணும். அதை நல்ல வண்ணம் பாதுகாக்க வேணும். பிள்ளையே இல்லை என்கிறகுறை நீங்கும் என்கிற எண்ணத்தினால்தான் இம்மாதிரி சொல்ல வேண்டியிருக்கு.
- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி
தீண்டாமைக்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்ல முடியுமா?
நம் நாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முதல் அமைச்சரையும் முக்கியமான பதவி வகிப்பவர்களும் திருப்பதி கோயிலுக்கு வருகை தந்தால், அவர்களுக்குப் பூர்ண கும்ப மரியாதை கொடுப்பது வழக்கம். திடீரென அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தான அவசரக் கூட்டம் ஒன்றில், தேவதானம் விருப்பப்பட்டால் மட்டுமே நாட்டில் முக்கியப் பதவி வகிப்பவர்களுக்குப் பூர்ண கும்ப மரியாதை செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதில் எங்கே தீண்டாமை இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. அப்போதுதான் தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவர் ஆகியிருந்தார்!
(ஆனந்தவிகடன் 12.9.2012 - பக்கம் -100)
வாழிய வீரமணியாரே!
சாதீயத் தீயைத் தினம்ஊட்டி
சமத்தாய் குளிர் காய்கின்ற
வேதியப் பார்ப்பன சூழ்ச்சிகளை
வீழ்த்திட வந்த வீரமணியாரே!
போதிய வழியில் புவியாண்ட
புகழ்மிகு தமிழர் வாழ்வழித்த
ஆரியப் பார்ப்பனரை நீதியின்
கூண்டில் ஏற்றிய ஏந்தல்
சூரியவழித் தோற்றல் எங்கள்
வீரமணி யவர்வாழிவே!
- மா. செயச்சந்திரன்
ஓணம் பண்டிகை இந்து மதத்தின் மாபெரும் முரண்பாடு!
ஓணம் பண்டிகை மலையாள நாட் டின் தேசியப் பண்டிகை. இப்பண்டிகைக்கு அடிப்படையாக உள்ள கதை ஒன்றுதான். ஆனால், ஓணம் எதற்காகக் கொண் டாடப்படுகிறது என்பதற்கான காரணம் வேறுபட்டதாகும்
அடிப்படைக் கதை: மகாபலி என்ற மன்னர் கேரளத்தை ஆண்டு வந்தார். ஒருமுறை திருமால் வாமனனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடி யால் விண்ணையும் அளந்த திருமா லுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தார் பலி மகாராஜா.
காரணம் 1.
பார்ப்பனர் அல்லாத மக்கள் கூறும் காரணம்
"மகாபலி ஒரு மிகச்சிறந்த மன்னன். மக்களை நேசித்தவன். மகாபலியின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப் போது சாதி இல்லை. எல்லா மக்களும் ஒன்றாகவே இருந்தனர். சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவை களையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந் தனர். மகாபலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.
தேவர்கள் இதைப் பார்த்து அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமனன் எனும் குள்ள பார்ப் பனனாக அவதாரமெடுத்து மாவலியை அழித்தார்.
பாதாளத்தில் புதைக்கப்படும் முன்பு ஆண்டிற்கு ஒருமுறை என்னுடைய மக்கள் இப்போது போல எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதை நான் பார்க்க வேண்டும் என்று மகாபலி கேட்டார். அவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை அந்த மாமன்னன் தன் மக்களைப் பார்க்க வரும் நாளே ஓணம். ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு மகாபலியை வரவேற்கிறார்கள்.
"காரணம் 2.
பார்ப்பனர்கள் கூறும் காரணம்
"மகாபலி ஒரு அசுரன். அவனது அதர்ம ஆட்சியை விஷ்ணு அழித்தார். மகாபலி திரும்பி வருவதற்காக இந்த நாள் கொண்டாடப்படவில்லை. மாறாக, வாமனன் மகாபலியை பாதாளத்தில் புதைத்த நாள் இதுவாகும்.
ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு அதன் நடுவில் விஷ்ணுவை வைப்பார்கள். அப்போது வரும் மகாபலி தன்னுடைய மக்கள் விஷ்ணுவை வழிபடுவதையும், நாட்டில் தர்மம் நிலைநாட்டப் பட்டிருப்பதையும் பார்த்து ஏமாற்றத்துடன் மீண்டும் பாதாளத்திற்கு போய்விடுவார்."
-ஆக, ஒரே பண்டிகைக்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன. ஓணம் பண்டிகையின் வரலாற்றில் "தர்மம்" மற்றும் "நீதி" என்கிற வார்த்தைகள் எதிர்எதிர் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் சாதியற்ற, தீமையற்ற பழைய பொற்காலத்தை நினைத்து - இந்த ஒரு நாளாவது அந்த நாளாக இருக்கட்டும் என்று ஏக்கத்தில் கொண்டாடுகிறார்கள். பெரும் பான்மை நம்பிக்கையின் படி - மகாபலி மன் னனின் காலமே பொற்காலம். "நீதி" தவறாத அந்த மன்னனை "தர்மம்" காப்பதற்காக வாமனன் அழித்தான்.
ஆனால், மற்றொரு கூட்டத்தினர் - தர்மம் நிலை நாட்டப்பட்ட நாளே நல்ல நாள். இந்த அநீதியான காலம் நீடிக்க வேண் டும் என்று அதே நாளைக் கொண்டாடு கின்றனர். வாசலில் போடப்படும் ஒரே அத்தப் பூக்கோலம் - மகாபலியை வரவேற் கிறது என்று ஒருசாரார் கூறுகின்றனர். அதுவே அவரை விரட்டவே போடப்பட் டுள்ளதாக மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
ஓணம் பண்டிகையின் மய்யமாகக் கருதப்படும் திரிக்ககரா ஆலயம் வாமனனின் கோவிலாக இருக்கிறது. அந்த கோவிலுக்கு அடியில் மகாபலியின் அரண்மனை இருப்பதாக நம்பப்படுகிறது. மகாபலியின் அரண்மனையை இடித்து அதன் மீது வாமனனுக்கு கோவில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர்.
எது தர்மம்?
பிரதான இந்துமதம் - "வாமன அவதாரம் என்பது விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம். இதன் நோக்கம் தரு மத்தை நிலைநாட்டலாகும். இந்த அவ தாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார்." என்கிறது. ஆனால், "மகாபலி மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழ ஒவ்வொரு திருவோண திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக" கேரள மக்கள் நம்பு கிறார்கள். ஓணம் பண்டிகையின் போது பாடப்படும் மலையாளப் பாடலின்
ஆங்கில வடிவம்:
When Maveli ruled the land,
All the people were equal.
And people were joyful and merry;
They were all free from harm.
There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
There were no lies,
There was neither theft nor deceit,
And no one was false in speech either.
Measures and weights were right;
No one cheated or wronged his neighbor.
When Maveli ruled the land,
All the people formed one
casteless races
கேரள மக்கள் நீதியைப் பேசுகிறார் கள். சாதியற்ற சமூகத்தை கனவு காண் கிறார்கள். ஆனால், இந்து மதம் தர்மத்தை நிலை நாட்ட விரும்புகிறது. மொத்தத்தில் - இந்து மதத்தில் "தர்மம்" என்றால் அது சாதியைக் காப்பாற்றுதல், அநீதியை நிலை நாட்டுதல் என்று பொரு ளாகும். அதற்கு ஓணமே சாட்சி. 22-9-2012
தந்தை பெரியார்பற்றி மலையாளக் கவிஞர்
அண்மையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர் (மலையாளக் கவிஞர் வயலார்) கேட்டு மகிழ்ந்த செய்தி என்ன தெரியுமா? கடவுளர்களின் சிலைகளை உடைத்தெறிவேன் என்று பெரியார் அறிவித்ததாகும். வைக்கம் வீரரை அவர் வாயாரப் போற்றுகிறார் என்றால் மக்கள் மத்தியில் _ மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை அவர் எந்த வேகத்தில் சாடக்கூடியவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மதம் மனிதனுக்கு அபின் என்றவர் காட்டிய கொள்கை வழி நடப்பவருக்கு பெரியாரின் நாத்திகப் போக்கு பிடித்ததில் ஆச்சரியம் என்ன?
(நவமணி 1.5.1971)
நல்ல பெயர் வைக்க ஒரு ரூபாய்
1956இல் தந்தை பெரியாரின் வாழ்க்கை ஏட்டில் நடைபெற்ற சுவையான செய்தி இது.
தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா 17.9.56இல் கொண்டாடப் படடது.
பெரியார் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் ஆண் குழந்தை ஒன்றுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்று அக்குழந்தையின் தந்தை விழாக் கூட்டத்தில் பெரியார் அய்யாவிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்காகத் திராவிடர் கழக நிதிக்காக ஒரு ரூபாய் கொடுத்தார் இன்றும் ஒரு ரூபாய் கொடுப்பதானால் நல்ல பெயராக வைப்பேன் என்று பெரியார் அவர்கள் கூறினார்கள்.
அப்படியே கொடுக்கிறேன் என்று குழந்தையின் தந்தை கூறினார்.
பெரியார் வைத்த நல்ல பெயர் என்ன தெரியுமா? காமராசர் காமராசர் என்று பெரியார் குழந்தைக்குப் பெயர் வைத்தார். கூட்டத்தினர் இடி முழக்கம்போல் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்குக் கடிதம்
அய்க்கிய நாடுகள் அவை மனித உரிமைக் குழுக் கூட்டத் தீர்மானத்தின்மீது இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்குக் கடிதம்
வாஷிங்டன், செப்.22: கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதிஜெனீவாவில் கூடிய அய்க்கிய நாடுகளின் அனைத்துலக மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் நிவாரணம் அளிப்பது, அவர்களை மீண்டும் குடியேற்றுவது, அரசியல் அதிகாரப் பகிர்வு ஆகியவை பற்றி இலங்கை அரசு விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.
ஹிலாரி கிளிண்டனுக்கு ஒரு கடிதம்!
ஆனால் இந்தத் தீர்மானத்தின்படி இலங்கை அரசு எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. எனவே தக்க விரைந்த நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு அமெரிக்க நாட்டின் நாடாளு மன்றத்தைச் சேர்ந்த இரு கட்சி உறுப்பினர்கள் 31 பேர் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள் ளனர்.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஒரு வார காலத்திற்குள் இவ்வாறு 31 நாடாளுமன்ற உறுப்பி னர்களின் ஆதரவினைத் திரட்டி சாதனை படைத் துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்தின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.
26 ஆண்டு கால உள்நாட்டுப் போர்!
இலங்கையில் கடந்த 26 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து சமாதானம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதிலும், 2009 ஆம் ஆண்டின் இறுதிப் போரின்போது இரு தரப்பினரும் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக் குப் பொறுப்பேற்று நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஏற்படும் காலதாமதத்தை பற்றிய எங்களது கவலையை வெளிப்படுத்தவே இக் கடிதத்தை எழுதுகிறோம்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் சகஜ நிலை திரும்பவும், அங்கு வாழும் தமிழ் மக்களிடையே ஒரு சுமுகமான சூழ்நிலை திரும்பவும் அனைத்துலக சமூகமும் அமெரிக்க வெளியுறவுத் துறையும் நடவடிக்கைகளைக் கடந்த காலத்தில் மேற்கொண்டு வந்துள்ளன.
பாடங்கள் கற்றுக் கொள்வதற்கும் சமாதானம் மற்றும் பரிகாரத்துக்குமான கமிட்டி Lessons (Learned and Reconciliation Committee - LLRC) அளித்த அறிக் கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைபிடிக்க இலங்கை அரசு முதலில் தவறியதைப் பற்றி தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதிஜெனீவாவில் கூடிய அய்க்கிய நாடுகளின் அனைத்துலக மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர் களுக்கு மறுவாழ்வு மற்றும் நிவாரணம் அளிப்பது, அவர்களை மீண்டும் குடியேற்றுவது, அரசியல் அதிகாரப் பகிர்வு ஆகியவை பற்றி இலங்கை அரசு விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 19/எல்-2 எண்ணிட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இந்த LLRC குழுவின் அறிக்கையே அடிப்படையாக இருந்தது.
மீறப்பட்ட அனைத்துலக சட்டங்கள்
LLRC அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த ஆக்க பூர்வமான பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக் கையைத் தெரியப்படுத்துவதாக இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. அது மட்டுமன்றி, அனைத்துலக சட்டங்கள் மீறப்பட்டுள்ளன என்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் பற்றி இந்த அறிக்கை எதுவும் தெரிவிக்காமல் விட்டதைப் பற்றியும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தகைய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருந்த போதிலும், அய்க்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் தீர்மானம் மற்றும் LLRC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நல்ல எண்ணத்துடன் மேற்கொள்ள இலங்கை அரசு மறுக்கும் என்ற கவலை கொண்டவர்களாக நாங்கள் இருக்கிறோம். LLRC கமிட்டி தனது அதிகார வரம்பினை மீறி இத்தகைய அறிக்கை அளித்துள்ளது என்று இலங்கை அரசின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
அக்கமிட்டியின் அறிக்கையின் ஒரு பகுதியின் மீதுமட்டுமே அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கூறி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக அளவு ராணுவம் குவிக்கப் பட்டுள்ளது என்று LLRC கமிட்டி அறிக்கை குறை கூறியுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், வடக்கு மாகாண நுழைவாயிலில் ஒரு சோதனைச் சாவடியும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் ஆங்காங்கே எண்ணற்ற சோதனைச் சாவடிகளும் உள்ளன.
காலக் கெடு இல்லை
கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை அரசு வெளி யிட்டுள்ள டுடுசுஊ கமிட்டி அறிக்கையின் பரிந்துரை களை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan to Implement the Recommendations of the LLRC) ” என்பது LLRC பரிந் துரைகளைப் பரிசீலனை செய்வதற்காக மேலும் மேலும் கமிட்டிகளையும், அமைப்புகளையும் உருவாக்கும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை எங்களது கவலைகளை அதிகப்படுத்துகிறது.
எளிதாக நிறைவேற்றப்பட இயன்ற பரிந்துரைகள் மீது குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்கும் ஆணைகள் எதுவும் இந்த செயல் திட்டத்தில் இடம் பெற்றிருக்கவில்லை என்பதோடு, செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான உறுதியான காலக்கெடு எதனையும் கூட நிர்ணயிக்கவில்லை. அமெரிக்க நாடு தொடர்ந்து இதில் அழுத்தம் கொடுக்காமல் போனால், இத்தகைய தாமதப்படுத்தும் தந்திரத்தை இலங்கை அரசு தொடரவே செய்யும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
அய்க்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட அமெரிக்க நாட்டு அயல் விவகாரத் துறை காட்டிய தலைமைப் பண்புக்கும், ஆர்வத்துக்கும் நாங்கள் மிகுந்த நன்றி உணர்வு படைத்தவர்களாக இருக்கிறோம். LLRC அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவது பற்றி இலங்கை அயல்துறை அமைச்சருடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்.
எங்களது கவலை!
என்றாலும், இந்த விஷயத்தில் மேற்கொண்டு செயல்படுவது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை வெளிப்படுத்தியுள்ள கொள்கை பற்றி நாங்கள் சில கவலைகளைக் கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் நாங்கள் விசாரித்த பொழுதெல்லாம் இலங்கையில் சமாதானம் மற்றும் நிவாரணம் பற்றிய தீர்வுகள் மற்றும் தங்களின் செயல்பாடுகளுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்று செயல்படுவது ஆகியவை பற்றி உறுதியான குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தன. ஆனால் இப்போது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவ்வாறு குறிப்பாகவோ, உறுதியாகவோ தெரிவிக்கும் தகவல்கள் எதுவும் கிடைப்பதில்லை.
இலங்கை அரசுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இடையேயான ஆக்கபூர்வமான தீர்வுகள் பற்றிய பேச்சு வார்த்தைகளை ஊக்குவிக்கும் அமெரிக்க அயல் துறையின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்.
என்றாலும், ஒரு சிறப்பு தூதரை நியமனம் செய்வது, தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கான கால அட்டவணை உள்ளிட்ட, எங்களது பாராளுமன்ற சக உறுப்பினர்களின் முந்தைய கோரிக்கைகள் எதற்கும் முன்னுரிமை அளிக்கப் படவில்லை என்பது எங்களுக்கு கவலை அளிப்பதாகவே உள்ளது.
2011 மார்ச் 1 ஆம் தேதியன்று செனட் அவை ஏகமனதாக நிறைவேற்றிய 84 ஆவது எண் தீர்மானம் பற்றி காங்கிரஸ் அவை இந்த விவகாரம் பற்றிய தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கை உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பிறகும் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரிக்க சுதந்திரமான ஓர் அமைப்பு நியமிக்கப்படவேண்டும் என்ற இந்த சட்டம் செனட் அவையில் நிறைவேற்றப்பட்டதைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஜெனீவா தீர்மானம் - எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!
என்றாலும், இலங்கையில் இந்த நிவாரண நடவடிக்கைகள் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படத் தவறினால், அது போன்ற விசாரணையின் கண்டு பிடிப்புகளும், பரிந்துரைகளும் வெறும் கூச்சலிலும், வெற்று உறுதிமொழிகளிலும் பொருள் அற்றவைகளாக, பயன் அற்றவைகளாக முடிந்து விடும்.
இந்தப் பிரச்சினையில் அய்க்கிய நாடுகள் மனித உரிமைக் குழுக் கூட்டத்தின் தீர்மானம் இலங்கை அரசின் மீது எந்த குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காட்ட எந்த அறிகுறியும் இதுவரை தோன்றவில்லை. இலங்கை அரசு இந்த விவகாரத்தில் முறையாக நடந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் அமெரிக்க அயல்துறையின் ராஜரீக முயற்சிகள் பயன் நிறைந்த, பொருள் நிறைந்த விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதி செய்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அய்க்கிய நாடுகள் மனித உரிமைக்குழுவின் தீர்மானம் பற்றி இலங்கை அரசு மேற்கொண்ட நட வடிக்கைகள் பற்றி 2013 மார்ச் மாதத்தில் மேற் கொள்ளப் பட உள்ள மதிப்பீட்டுடன், இந்தக் கோரிக்கைக்கு ஒரு அவசரமான கூடுதல் தேவையும் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஒரு பலமான மேற்பார்வை இல்லாத நிலையில், அடுத்த மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் தங்களது கடமைகளைச் செய்யத் தவறியதற்காக மன்னிப்பு கேட்பது ராஜபக்சேவின் நிர்வாகத்திற்கு மிகவும் எளிதாகவும் இருக்கக்கூடும் - மேற்கொள்ள வேண்டியது.
எனவே, சமாதானம் மற்றும் நிவாரண நடவடிக் கைகளை மேற்கொள்ளவும், தங்களுடைய செயல் களுக்குப் பொறுப்பேற்று பிரச்சினைகளுக்குத் தீவு காணவும், நாட்டில் சகஜநிலையும், உறுதித் தன்மையும் திரும்பவும் இலங்கை அரசு செய்ய வேண்டிய செயல்கள் பற்றிய ஒரு பயன் நிறைந்த உறுதியான பேச்சுவார்த்தை களை தாங்களும், தங்களது சகதோழர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த விஷயத்தை உரிய நேரத்தில் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட்டமைக்காக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்க் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
Bill Johnson (OH), William R.Keating, Michael G.Grimm, Walter B.Jones, SteveChabot, Jean Schmidt, Michael Honda, Albio Sires, John F. Tierney, Brad Miller (NC), Steve Austria, John W. Olver, Danny K. Davis, Jan Schakowsky, Elijah Cummings, Zoe Lofgren, Donald Manzullo, Stephen F. Lynch, Michael E.Capuano, Judy Biggert, Rush Holt, David Cicilline, Tammy Baldwin, Ron Kind, G. K. Butterfield, Barney Frank, Howard Coble, David Price, Pat Tiberi, Steve Stivers, TimRyan.
இத்தகவலை வாஷிங்டன் நகரில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன் தெரிவித்துள்ளார். 22-9-2012
செப்டம்பர் -17 சிறப்புகள்
17.9.1879 - பெரியார் பிறந்தநாள்
17.9.1889 - அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.பிறப்பு
17.9.1948 - Liberation of Hyderabad State 17.9.1949 - அண்ணாவால் பெயரிடப்பட்ட தி.மு.க. தோற்றம்
17.9.1953 - திரு.வி.க. மறைவு
17.9.1974 - அண்ணா சாலையில் (சென்னை) பெரியார் சிலை திறப்பு (தி.மு.க.)
17.9.1975 - ஈரோடு பெரியார் இல்லத்தை, அரசு பெரியார் - அண்ணா நினைவகம் என திறந்தநாள் 17.9.1976 - பெரியாரின் ராமாயணம் நூலுக்கு, உ.பி. அரசு விதித்த தடை செல்லாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த நாள்.
17.9.1977 - சென்னை - அண்ணா மேம்பாலத்தையொட்டி பெரியார் சிலை எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட நாள்.
17.9.1979 - நடிகவேள் எம்.ஆர்.ராதா மறைவு
17.9.2003 - மய்ய அரசு பெரியார் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்ட நாள்
17.9.2004 - தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை மய்ய அரசு அளித்த நாள்
- மாணிக்க.சண்முகன், (17.9.2010)
ஆவணி அவிட்டம் பூணூல் புதுப்பித்தலாம்!
ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழா குறிப்பிடத்தக்கவொன்று பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச்சரியத்திற்குத் தொடர்புடையது இது.
திருமணமாகாத மாணவர் பருவத்தில் பார்ப்பன இளைஞன் வேதங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன்.
அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திரு மணம் பண்ணிக் கொள்ளும் வரை யிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட 12 தூய்மைப்படுத்தும் சடங்குகள் வற்புறுத்தப்படுகின்றன.
கர்ப்பதானம், புண்சவனம், சீமந்தோநயனம், ஜாத கர்மம், நாமகரணம், நிஷ்க்கரணம், அன்னப்ராசனம், சுத கர்மம், உபநயனம், சமாவர்த்தனம், கேசந்தம், விவாஹம்.
இவற்றுள் சட்டக் கட்டாயமாகக் கருதப்படும் முகாமையான இரண்டு சடங்குகள் சுதகர்மமும் உபநயனமும் ஆகும். இவ்விரண்டிலும் ஒரு சிறு குடுமியை விட்டு வைத்து, தலையில் நடுவட்ட மழிப்பு நிகழ்த்தும் சுதகர்மத்திற்கும் மேலாக உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கு மதிக்கப்படுகிறது. பூணூல் அணியும் முன்பு வரை அவன் சூத்திரத் தன்மையுடன் இருப்பதாயும், அணிந்தவுடன் அவன் இரண்டாம் முறையாகப் புதிய பிறப்பு எடுப்பதாயும் தத்துவம் கற் பிக்கப்படுகின்றது. இதை அச் சிறுவ னின் எட்டாம் அகவையிலேயே நடத்தி விடலாம்.
பருத்தி நூல்கள் மூன்றினை ஒன்றாகச் சுருள் செய்து மாலை வடிவ மாக்கிப் பார்ப்பனச் சிறு வனின் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரையிலும் குறுக்கே அணிவிக்கப் படும் முப்புரி நூலுக்கு யக்ஞோப விதா எனப் பெயர்.
இச்சடங்கின் தொடக்கத்தில் பார்ப்பனச் சிறுவன் சூரியனுக்கு எதிரே நின்று மும்முறை தீ வலம் வரவேண்டும். பிறகு குரு காயத்ரி மந்திரத்தைப் பத்து முறை ஓதி யக்ஞோபவிதா முப்புரிக்குத் தெய்வத் தன்மை ஏற்றிவிட்டு, அதனைப் பையனை மாட்டிக் கொள்ளச் செய்வார். பூணூலணிந்த புதிய பிறவி, தனக்கும் தன் ஆசானுக்கும் தேவையான உணவுக்கென்று விழா வில் வந்து குழுமியுள்ள கூட்டத்தினரிடம் பிச்சை கேட்டுக் கையேந்து வான்.
பின்னர் சாவித்ரி ஜெபம் பண்ணுமாறு குரு அவனைப் பயிற்றுவித்து, வேதமோதி சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தகுதியை அவனுக்கு உண்டாக்குவார். இறுதியாக அவனுடைய இடையில் மூஞ்சைப் புல்லாகிய அரைஞாண் கட்டப்பட்டு பூணூலணியும் உபநயனச் சடங்கு முடிக்கப் பெறுகிறது.
காலப் போக்கில் க்ஷத்திரியரும், வைசியரும் தங்களை முப்புரிநூல் அணியும் சடங்கிற்கு உட்படுத்திக் கொண்டு இரு பிறப்பாளர் பட்டியலில் இணைந்து கொண்டாலும், இன்று நடைமுறையில் இவ்விரு வர்ணத்தாரும் சூத்திரராகவே பாவிக் கப்படுகின்றனர். எனவே இவர்களின் பூணூல் மாட்டும் செயலுக்குச் சிறப்பேதும் கிடையாது.
பார்ப்பனர்களைப் பார்த்து ஆசாரியாரும், பத்தரும், செட்டியாரும் கூடப் பூணூல் போட்டுக் கொள்வதுண்டு. விசுவ பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் சாத்திரத்தில் இதற்கு இடம் உண்டா என்றால் அதுதான் இல்லை.
இந்த மாதம் 24 ஆம் தேதி (ஆவணி 8) பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறார்களாம். இட ஒதுக்கீட்டில் இன்னும் ஜாதி ஏன்? ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்கிற பார்ப்பனர்கள்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். 20-8-2010
Post a Comment