மயிலை கபாலீசுவரர் கோவில் பங்குனித் திருவிழாவின் இறுதி நாளில் கூத்தப் பெருமான் திருக்காட்சி நடக்கும். சிவபிரானின் தொன்மையான திருக்கோலங்களில் ஒன்றான கூத்தப் பெருமான் திருவடிவத்தில், வலது பின் கையில் ஏந்தியுள்ள உடுக்கை படைப்புத் தொழிலைக் குறிக்கும்.
அபயகரம், காத்தல் தொழிலைக் குறிக்கும். இடது பின்னணியில் உள்ள நெருப்பு அழித்தலைக் குறிப்பிடுகிறது. ஊன்றிய திருவடி அல்லது குஞ்சிதபாதம் அருளைக் குறிக்கும். ஆக அய்ந்தொழிலையும் இறைவன் இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கிறார் என்று ஒரு பார்ப்பன ஏடு சிலாகிக்கிறது.
பொதுவாக ஊடகக்காரர்கள் அரசியல் பிரச்சினை என்றால் முடி பிளந்து, அணுவை உடைத்து ஆராய்ச்சி சக்ராயுதத்தை ஏவுவார்கள்.
அதே நேரத்தில் இது போன்றவற்றில் எறும்பின் கால் முனையளவுக்குக் கூட அறிவைப் பயன்படுத்தாது அப்பட்டமான முட்டாள்தனக் கடலில் மூழ்கி எழுந்து முத்து முத்தாக எழுதுகிறார்களே, வெளியிடுகிறார்களே -இதை என்ன சொல்வது?
இவர்கள் முட்டாள்களா? அல்ல.. அல்ல.. இப்படிப் பரப்புகிறவர்களை அயோக்கியர்கள் என்று தந்தை பெரியார் கணித்தது கடல் போன்ற உண்மையல்லவா!
இந்த அய்ந்தையும் செய்வது திருக்கூத்தர் பெருமான் என்றால் - நாட்டில் நிலவும் அத்தனை தாழ்வுக்கும், வறுமைக்கும், கொள்ளைக்கும் சுரண்டலுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் அவன்தானே பொறுப் பாளி?
காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றால் கருநாடகத்தோடு ஏன் மோத வேண்டும்?
எல்லையில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற திகிலில் பனிக் கட்டிக்காட்டில் நமது சிப்பாய்கள் ஏன் இரவும், பகலுமாக, துப்பாக்கியும் கையுமாக நிற்க வேண்டும்?
அரசு ஏன்? அய்ந் தாண்டுத் திட்டங்கள் ஏன்? மருத்துவமனைகள் ஏன்? மக்கள் நலத் திட்டங்களும்தான் ஏன்? ஏன்? ஏன்?
நாணயமாகப் பதில் சொல்லியாக வேண்டும். பெங்களூருவில், திருவள்ளுவர் சிலையைத் திறந்தால், காவிரியில் கரை புரண்டு தண்ணீர் வருமா என்று பேனா வைத் தூக்கிக் கொண்டு புறப்படும் இந்த எழுத்துச் சண்டியர்கள், இந்த அய்ந்து தொழிலையும் சரிவர செய்யாத கடமை தவறிய கூத்தனை நோக்கி கடப்பாறைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்ப வேண்டாமா? குறைந்தபட்சம் கிளம்பும்படி பக்தர்களுக்குத் தான் வழிகாட்ட வேண் டாமா?
----------------- மயிலாடன் அவர்கள் 6-5-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
6 comments:
கடைசி மூடநம்பிக்கைவாதியும், சுரண்டல்காரனும் இருக்கும்வரை நம் இயக்கத்தின் பணி தேவை,தேவை
பாராட்டும் வகையில் நடைபெற்ற அய்ந்து முனை கழக தொடர் பிரச்சாரக் கூட்டங்கள்
கடைசி மூடநம்பிக்கைவாதியும், சுரண்டல்காரனும்
இருக்கும்வரை நம் இயக்கத்தின் பணி தேவை,தேவை
பணி செய்து கிடப்பதே நம் அரும்பணி - தொடருவோம்!
கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
கடைசி மூடநம்பிக்கைக்காரனும், சுரண்டல் வாதியும் இருக்கும் வரை - சமத்துவத்துக்காக நமது கழகப் பணிகள் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கழகக் குடும்பத்தினர்களே, பகுத்தறிவாளர்களே, இன உணர்வாளர்களே,
நமது அறிவு ஆசான் துவக்கிய அறிவுப்புரட்சி அவர்கள் போட்டுத் தந்த பாதையில் தொய்வில்லாமல் நடைபெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உற்சாகத்தைப் பெருக்குகிறது.
நமது இயக்கம் - எப்போதும் இமை மூடாமல் இயங்கும் - இதயம் போன்றது திராவிடர் சமுதாயத்திற்கு; இல்லை இல்லை மனித குலத்திற்கே!
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - அனைவருக் கும் அனைத்தும் என்ற மனிதநேய அடிப்படையில் தொண்டாற்றும் தூயதோர் பகுத்தறிவு - அறிவியல் இயக்கம் நமது இயக்கம்.
புதுஉலகுக்கு மக்களை அழைத்துச் செல்ல பீடு நடைபோடும், பெருமிதத்திற்குரிய இயக்கம் நம் இயக்கம்!
உள்ளொன்று வைத்து, புறமொன்று பேச வேண்டிய அவசியமில்லாத அறிவு இயக்கம் இவ்வியக்கம்!
கழகத்தின் பணிகள்
இதன் பணிகள்: (1) பிரச்சாரம் - அடைமழை போல, இடையறாத பிரச்சாரம்.
2) அறப்போராட்டம் - தேவைப்படும்போது விளம்பரத் திற்கோ, புகழ் பெருமை வேட்டைக்கோ அல்ல; சமுதாய முன்னேற்றம் - வளர்ச்சிக்காகவே!
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை வாழ வைக்க; இழந்து வரும் நம் உரிமைகளை மீட்டெடுக்க, நாட்டு எல்லை தாண்டியும்கூட, மனித உரிமைப் பறிப்புகளும், மனிதாபிமானத்திற்கு எதிரான கொடுமைகளும் கண்டு வாளா இராமல் கொதித்தெழுந்து குரல் கொடுக்கும் இயக்கம் நமது இயக்கம்.
கழக ஆணைப்படி, 5 பிரச்சாரக் குழுக்கள்
1) உதகையில் மானமிகு சு. அறிவுக்கரசு தலைமையிலும்.
2) குமரியில் மானமிகு இரா. பெரியார்செல்வன் தலைமையிலும்
3) திருத்தணியில் மானமிகு அதிரடி அன்பழகன் தலைமையிலும்
4) இராமேசுவரத்தில் மானமிகு இராம. அன்பழகன் தலைமையிலும்
5) சேலத்தில் மானமிகு துரை. சந்திரசேகரன் தலைமை யிலும் பிரச்சாரங்களை பல ஊர்களில் கழகத் தோழர் களின் ஒத்துழைப்பு, உற்சாகத்துடன் பிரச்சாரப் பெருமழை கொட்டியுள்ளது.
மதுரை, கரூர், திருச்சி, ஆகிய முக்கிய நகரங்களில் மூன்று குழுவினர் தொடர் பிரச்சாரப் பயணம் நிறை வடைந்த கூட்டங்களில் எனக்கும், மக்களுக்கும், கழக ஏற்பாட்டாளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் கலந்து கொண்டு நன்றி கூறி விளக்கவுரையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது!
பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது! கழகப் பேச்சாளர் களின் ஆணித்தரமான அடுக்கடுக்கான வாதங்கள் மிகச் சிறப்பாக இருந்தன.
தேவை கண்ணியம் மிகுந்த உரை வீச்சுகள்
மதுரையில் (29-3-2012) நமது சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் மதுரை மகேந்திரன் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் பிரதமர் பற்றி ஒரு சொல்லை அதீதமாகப் பயன்படுத்தியதைக் கேட்ட நான், எனது உரையில் கழகப் பேச்சாளர் எவரும் கண்ணியம் சிறிதும் குறையாத சொற்களையே பேச்சில் கையாள வேண்டும் என்று கூறினேன். நல்ல பண்பட்ட கருத்தாளர் - எழுத்தாளர் - வழக்குரைஞர் சட்ட நிபுணர் அவர் - அவரே ஏதோ திடீரென்று ஈழத் தமிழர் இன்னல் கண்ட எரிச்சலில் இப்படி ஒரே ஒரு வார்த்தை சொன்னதை சுட்டிக் காட்டினேன். உடனே, அடுத்த நாள் மிகப் பெரிய வருத்தம் தெரி வித்த கடிதத்தையே தமக்கு எழுதி, தனது நற்பண்பையும், இராணுவக் கட்டுப்பாட்டையும் காட்டி, மிகவும் உயர்ந்து விட்டார்! இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு மற்ற பேச்சாளர்களுக்கும் கழகச் செயல்வீரர்களுக்கும்.
எத்தகைய இயக்கம் எது?
பெரியார்தந்த புத்தி நமக்கெல்லாம் தேவை, சிந்திக்க வேண்டியது தலைமை; செயலாற்றி வெற்றியைக் குவிப்பது கூட்டுத் தோழர்களின் கடமை. இந்த அய்யா தந்த அருமையான கட்டுப்பாட்டுக் கவசத்தை நாம் அணிந்துள்ளவரை, பதவி நாடா, நன்றி எதிர்பார்க்கா, மானம் பாராத, புகழ் வேட்டை தெரியாத நம் இயக்கத்தை வெல்ல எவராலும் முடியாது!
எங்காவது கோளாறு துரோகச் சிந்தனை என்ற நோய் வந்தால், வந்தவருக்குதான் அது ஆபத்தே தவிர, அவர் தொண்டாற்றிய மருத்துவமனைக்கு அல்ல. இதை நாம் அனைவரும் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அறிவு ஆசான் நமக்கு ஒருவரே! அவர் கொள்கையைப் பரப்பவே நாம் இந்த இயக்கத்தின் தொண்டர்களானோம். பொறுப்புக்கள் இங்கே உண்டு. பதவிகள் அல்ல! அவையும் மாறி மாறி வருவதால் எவருக்கும் உயர்வு - தாழ்வு - ஏற்றம் இறக்கம் கிடையாது. தன்மான இயக்கம் - இனமானத்திற்கு அதனையும் இழக்க எப்போதும் தயாராக இருக்கும் இந்த இயக்கம் அதனையும் தியாகம் செய்யக்கூடிய இனமானம் காக்கும் இயக்கம். எனவே தன் முனைப்பு (நுபடி) தனித்த சிந்தனைக்கே இங்கே இட மில்லை. அய்யா சொன்னபடி இரண்டு வாசல்களும் எப்போதும் திறந்தே வைக்கப்பட்டுள்ள இயக்கம் இது!
உறவு என்பது லட்சியத்தால் மட்டுமே!
இங்கே படித்தவர் - படிக்காதவர் என்ற பேதத்திற்கு இடமில்லை - (பெரியார் கொள்கையைச் சரியாகப் படித்தவர், சரியாக படிக்காதவர் என்று வேண்டுமானால் தங்களைக் காட்டிக் கொள்ளக் கூடும்) பணம், பதவி என்பது பொறுப்புக்கு வந்து உழைக்க முன் வருவோர் எவருக்கும் கூடுதலான தனித் தகுதியாகி விடாது.
இங்கே முக்கியத்துவம் உறவுகள் இரத்த பந்தத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை.
லட்சியப் பாசத்தால் உறைந்து நிற்கக் கூடியவை.
இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும் கடைசி மூடநம்பிக்கையாளர்களும், சுரண்டல்காரர்களும், மனித உரிமை சமத்துவத்தை மதிக்காமல், மிதிக்கிறவர் களை அடக்கி, உண்மை மனிதர்களாக்கும் வரை ஓய்வறியாமல் தொண்டாற்ற வேண்டிய இயக்கம் இது! நம் பணி செய்து கிடப்பதே! நம் அரும்பணி தொடருவோம்.
தர்மபுரி மாவட்டங்களில் பேய் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரப் போரில் ஈடுபட்டுள்ள தோழர்களுக்கும் நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.
வாழ்க பெரியார்!
வருக அவர்கள் விரும்பிய புத்துலகம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 6-4-2012
தேசியக் கட்சிகளின் பரிதாப நிலை!
ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமை பற்றியதாகும்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் கூட நதி நீர்ப் பிரச்சினைகள் உண்டு என்றாலும், இந்த அளவுக்குக் குழப்பமும், முரண்பாடுகளும், கால விரயமும் கிடையவே கிடையாது.
அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கங்கை நதிநீர்ப் பிரச்சினையில் இந்தியா வுக்கும் வங்கதேசத்துக்குமிடையிலான சிக்கல் சில மணி நேரங்களில் தீர்வு காணப்பட்டதே! அதே போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நதிநீர்ப் பிரச்சினையுண்டு. அவை எல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்படும்பொழுது, இங்கு ஏன் இயலவில்லை என்ற வினாவை? எழுப்பினார். பாரத புண்ணிய பூமி என்றும், இந்திய தேசியம் என்றும் கண்ணில் ஒத்திக் கொண்டு பேசிக் கொண்டு இருக்கும் நாட்டில், உள்நாட்டு நதி நீர்ப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால், இந்திய தேசியம் என்பதன் பொருள்தான் என்ன?
ஒப்பந்தங்கள் என்று எதற்காகப் போடப் படுகின்றன? சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அறிவு நாணயத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்கான நாகரிக ஏற்பாடுதானே அது? அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது அடாவடித்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?
தனி மனிதன் தவறு செய்தாலே குற்றம், தண்டனை என்கிறபோது, ஓர் அரசே தவறு செய்யும் போது, தண்டனை என்ன?
காவிரி நீர்ப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையானாலும் சரி, முறையே கருநாடக, கேரள அரசுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உதாசீனப் படுத்தியுள்ளனவே.
நீதிமன்றத் தீர்ப்புகளைத் தனிமனிதன் மீறினால்தான் தண்டனையா? அரசுகள் மீறினால் கண்டுகொள்ளமாட்டார்களா? இந்தப் போக்கால் நாளடைவில் தனி மனிதனே நீதி மன்றத்தை மதிக்கும் போக்கில் மாற்றம் வந்துவிடுமே!
இதில் மத்திய அரசு நடந்து கொள்ளும் போக்கு பொறுப்பானதாக இல்லை. மத்திய அரசு என்ற சொல் லுக்கு என்னதான் பொருள்? பொது நிலையிலிருந்து பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு இல்லையா? அதனைச் செய்யாத பட்சத்தில் அது எப்படி மத்திய அரசாகும்?
சம்பந்தப்பட்ட மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது? குறிப்பிட்ட கால கட்டத்தில் தேர்தல் வர இருக்கிறதா என்று அக்கம் பக்கம் பார்த்து, தந்திரமாக மத்திய அரசு நடந்து கொண்டால், அந்த நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின் நிலை என்னவாகும்?
இதில் இன்னொரு நகைச்சுவை - வேடிக்கை -தேசிய கட்சிகளின் சிந்தனையும் செயல்பாடுகளும்; காங்கிரசாகட்டும், பி.ஜே.பி.யாகட்டும், இடதுசாரிகளா கட்டும் இவை எல்லாம் அகில இந்திய தேசியக் கட்சிகள்தானே! இவர்களுக்கு அகில இந்திய பொதுப் பார்வையும், கண்ணோட்டமும் தானே இருக்க வேண்டும்? அப்படி இருக்கிறதா?
காவிரி நதிநீர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, இக் கட்சிகளுக்கு அகில இந்திய கண்ணோட்டம் - தேசியக் கண்ணோட்டம் இருப்பதில்லை. மாநிலக் கண்ணோட்டத்துடன்தான் வெறித்தனமாக நடந்து கொள்கின்றன.
காவிரி நீர்ப் பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பிரச்சினை யானாலும் சரி, வேறு வேறாக - எதிர் மறையாக, இந்த அகில இந்தியக் கட்சிகள் முடிவு எடுப்பது ஏன்?
நாடாளுமன்றத்தில் கூட இந்தத் தேசிய கட்சிகள் தங்கள் தங்கள் மாநிலத்திற்காகத்தானே குரல் கொடுக்கின்றன! அந்த நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரிந்துதானே போர்க்குரல் கொடுக் கின்றன. இது மட்டும் பிரிவினை இல்லையா?
பிரிவினை என்பதற்கு இந்தத் தேசியக் கட்சிகள் வைத்திருக்கும் அளவுகோல்தான் என்ன?
திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் அகில இந்திய கட்சியல்ல - அரசியல் கட்சியும் அல்ல. அதே நேரத்தில் நாணயமான முறையில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் போராடுகிறது.
அதன் வீச்சுதான் வரும் 11-ஆம் தேதி நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டம்?
அணி திரள்வீர்!
ஆர்ப்பாட்டம் செய்வீர்! 6-4-2012
நெஞ்சை நிமிர வைக்கும் ஒரு கருஞ்சட்டை வீரரின் மரண சாசனம்!
என் மரண சாசனம் (இறுதி முறி)
நான் மறைவுற்ற பின்னர் என் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் இயக்கத்தவர்கள் நடத்த வேண்டிய நடைமுறைகள்.
1. உடலைக் குளிப்பாட்டக் கூடாது. நெற்றிக்குறி இட்டு அவமானப்படுத்தக்கூடாது.
2. உடலுக்கு மாலை இடலாம். உடல் அருகில் அமர்ந்து அழக்கூடாது.
3. இறுதிச் சடங்கு என்று எந்தச் சடங்கையும் செய்யக்கூடாது.
4. என் துணைவியாருக்கும், என் மறைவைத் தொடர்ந்து எந்தச் சடங்கும் செய்யக் கூடாது. அவர்களிடம் அமர்ந்து அழக்கூடாது.
5. என் உடலை எரிக்கலாம். என் மகன்கள் மூவர், மகள் ஒருவர் ஆகியோர் சேர்ந்து எரியூட்டுக. கொள்ளிச் சட்டி தூக்கக் கூடாது. பால் வைக்கக் கூடாது. கருமாதி, திதி ஆகியவை செய்யக் கூடாது.
6. பறை (அ) மேளம் அடித்தல் கூடாது.
7. உடலை குரோம்பேட்டையிலேயே எரிக்கவும். திராவிடர் கழகத் தோழர்கள் இதை மேற்பார்வையிடவும்.
8. உறவினர், நண்பர்கள், இயக்கத்தவர்களுக்கு, உரிய நேரத்தில் என் மறைவைத் தெரிவிக்கவும்.
9. ஏதேனும் ஒரு நாளில் என் படத்தை திறக்கலாம். உரியவர்களை அழைத்துப் படத் திறப்பை செய்திடுக.
10. வீடு, என் துணைவியார் வாழ்நாளுக்குப் பிறகு நான்கு மக்களுக்கும் உரியது.
11. நிலம் மூன்று மருமகள்களுக்கும் உரியது.
12. வங்கி, திராவிடன் நலநிதி இவைகளில் இருக்கும் தொகை என் துணைவியார் கட்டுப்பாட்டில் இருக்கும். பின்னர் அவர் விரும்பிய வண்ணம் என் மக்களுக்கே கொடுக்கலாம்.
13. நான் திடீரென மறைந்தால் செங்காட்டில் என் தந்தையார் புலவர் நீலகண்டனார் நினைவு பெரியார் படிப்பகத்தை கட்டி முடித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் என் மக்கள் சேர்ப்பிக்க வேண்டும்.
14. இதில் கண்ட செயல்பாடுகளைச் சிறிதளவும் பிசகாது என்னுடைய நான்கு மக்கள் 1. திரு.இராசேந்திரன், 2. திரு.ஆறுமுகம், 3. திரு.பாண்டியன், 4. திருமதி. மீனாட்சி ஆகியோரும் 5. என் துணைவியார் திருமதி. திலகவதியும் செய்யக் கடமைப் பட்டவர்கள் ஆவர்.
15. இந்த இறுதி முறி (உயில்)யின் நோக்கம் நான் இறந்தபின் அவமானப்படுத்தப்படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்கேயாகும்.
சாட்சிகள்:
1. சி.திலகவதி 2. சி.இராசேந்திரன்
3. சி.ஆறுமுகம்
4. சி.பாண்டியன்
5. சி.மீனாட்சி
இங்ஙனம்
மு.நீ.சிவராசன் 6-4-2012
உடுமலையாரின் பாடல்!
ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு.
பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்
எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சென்னான்னு கேட்டு
ஏமாந்து போகாதீங்க!
ஆண்:
ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால்
அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாகப் பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே
ஆளையே மாத்துறாங்க.
பெண்:
அது... ஆயிரங் காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம்
ஆறு கோயில் அரசமரந்தானுங்க!
ஆண்:
கோழி யில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!
பெண்:
அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச
கோளாறுக்காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - பார்ப்போம்?
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க!
ஆண்:
எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங்கூட செயற்கையில்.... ஆகும்
முயற்சியும் பண்ணுறாங்க!
-சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது. 6-4-2012
பார்ப்பனப் புத்தி தானே!
தி.க. தலைவர் வீரமணி: மூடத்தனங்கள் கிளப்பி விடப்படும் போதெல்லாம், களத்தில் குதித்து, மக்கள் மத்தியில் மூடத்தனங்களை எடுத்துக்காட்டி, பகுத்தறிவு பிரசாரம் செய்வதை ஒரு முக்கிய கடமையாக, கழகம் செய்து வந்துள்ளது.
டவுட் தனபாலு: அப்படியே, உங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களும், கழக அபிமானிகளும் பயன்படுத்துற கார்களின் எண்களைக் கொஞ்சம் பார்த்தீங்கன்னா, உங்க பகுத்தறிவு பிரசாரத்துக்கு என்ன கதி நேர்ந்திருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்...!
- தினமலர் 5.4.2012
ஒட்டு மொத்தமாகக் கிறுக்குவது அறிவு நாணயம் ஆகாது. யாருடைய கார்? எந்த எண்? என்று ஆதாரத்தோடு கூற வேண்டாமா? திருப்பதியில் மொட்டைத் தலையனைக் கண்டாயா? என்று எழுதுவது கயிறு திரிக்கும் திரிநூலார்க்கே கைவந்த கலைபோலும்!
பட்டப் பகலிலேயே என் எதிரிலேயே ஒரு பெண்ணோடு ஜெயேந்திர சரஸ்வதி அசிங்கமாக நடந்து கொண்டார் என்று அக்கிரகாரத்து எழுத்தாளர் அனுராதா ரமணன் சொன்னாரே - அதுபற்றி எல்லாம் தினமலர் கண்டு கொள்வதில்லை; அதே நேரத்தில் அக்கப் போராக அடுத்தவர்கள்மீது புழுதி வாரித் தூற்றுவதில் முண்டாசு கட்டி நிற்பதுதான் முப்புரிகளின் வேலையா?
6-4-2012
Post a Comment