Search This Blog

2.4.12

கூடங்குளம் மின் உற்பத்தி அனைத்தும் தமிழ்நாட்டுக்கே எனும் முதல்வரின் கோரிக்கை நியாயமானது - கி.வீரமணி

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை தீரும் வரை கூடங்குளம் அணுமின் உற்பத்தி முழுவதும் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் நியாயமானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் மின்வெட்டுக் காலத்தின் அளவு கோடை நெருங்கும் இக்கால கட்டத்தில், நாளுக்கு நாள் பல மணி நேரங்களுக்கு மேலும் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல தொழிற்சாலைகள், சிறு குறு தொழில் நிலையங்கள் உட்பட வெகுவாக பாதிக்கப்பட்டு, மாணவர்கள் தங்களது தேர்வுக் காலங்களில்கூட, மிகப் பெரும் அவதிக்கு ஆளாகும் வேதனை தொடர்ந்த வண்ணம் உள்ளது!

37 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவதா?

வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோல, கடும் மின்வெட்டு தொடரும் நிலையில் மின்கட்டணத்தை தமிழ்நாட்டில் ஒரே அடியாக லாங்ஜம்ப்போல 37 சதவிகிதம் உயர்வு!

எளிய மக்கள் வீடுகளில் பயன்படும் குறைந்தபட்ச அளவு என்பதேகூட, நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாததால், அவர்களும் பல மடங்கு கூடுதலாக மின் கட்டணம் (உயர்வு) செலுத்த வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படும்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வு, மத்திய அரசின் மறைமுக வரிகள், சேவை வரிகள், கூடுதல் ரயில் கட்டண உயர்வு - மாநில அரசினால் பால் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, மேலும் சுமார் ரூ.1500 கோடி வரிகள் அதனுடைய தாக்கம் பயனாளிகளான மக்கள்மீதுதான் என்ற நிலை!

பெட்ரோல், டீசல், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் கட்டணம் எல்லாம் உயரும் நிலை!!

ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் மிகப் பெரிய கேள்விக்குறி. வறுமைக்கோட்டின் அளவு ரூ.22 என்று கூறும் மத்திய திட்டக் குழுவின் தலைவரின் விசித்திர மதிப்பீடு இத்தியாதி! இத்தியாதி!!!

இந்நிலையில், மின்சாரத் திருட்டைச் சரிவரக் கண்காணித்து, தடுத்தல் மிகவும் அவசர - அவசியமாகும்!
மின் திருட்டு ஒருபுறம்!
பிரபல அரசியல் கட்சிகள் கூட்டங்கள், அடர்த்தியாக குழல் விளக்குகள், மின்சாரம் வெளிப்படையாக மின் கம்பங்களுக்கு அக்கட்சிகளால் (ஆளுங்கட்சி உட்பட) எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. விசித்திரமான முரண்பாடு இவை!

மின் உற்பத்தி என்பது ஆறு வழிகளில்தான் செய்ய முடியும்.

(1) புனல் (நீர்) (Hydro) மின்சாரம் (2) அனல் (Thermal) (3) காற்றாலை (4) சூரிய வெப்பம் (5) கடல் அலைகள் (6) அணுசக்தி மின்சாரம்.

இவைகளில் மற்றவைகள் பற்பல காரணங்களால் எளிதில் நமக்குக் கிடைக்காதவைகளாக உள்ளன; சில மிகவும் விலை கூடுதலாக ஒரு யூனிட் தயாரிப்புக்கு ஆவதாக - சாத்தியமற்றதாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் அணுமின்சக்திதான் நம் தேவைக்கேற்ப பூர்த்தி செய்யப் பயன்படும் நிலை.

கூடங்குளம் அணுமின்நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம் போதிய பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்று அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளான பொது மனிதர்கள் - நிபுணர்கள் கூறியும் - மலிவான விளம்பரம் தேடும் அரசியல் கூத்துகளால் தேவையின்றி, நமது மின் நெருக்கடி தொடரும் அவலம் ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசும், முதல்வரும் முன்பே இதுபற்றி இந்த முடிவை காலத்தே எடுத்திருந்தால் தமிழ்நாட்டுத் தேவை பெரும் அளவு சரி செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். நடந்த போராட்டங்கள் நம்மை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் அழைப்புகளாயின!


முன்பு மத்திய நிபுணர் குழுக்கள் கருத்தை ஏற்கவில்லை போராட்டக் குழுவினர்; பிறகும்கூட மாநில அரசு நியமித்த குழுவினர் அறிக்கையும் அணுஉலை பாதுகாப்பை உறுதிப்படுத்தின!

இப்போது விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத்துவங்கிய நிலையில், சட்டமன்றத்தில் அந்தக் குழுவின் அறிக்கையை முதல் அமைச்சர் வெளியிடுவது அவசியமாகும்.

அதனால் சுற்று வட்டார மக்களின் அச்சம் அகற்றப்படும்; சுனாமிகள் வந்தால்கூட பாதுகாப்புடன் இயங்கும் என்று சொல்லப்படும் நிபுணர்களின் கருத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

கூடங்குளம் மின்சாரம், தமிழ்நாட்டுக்கே!

முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு விடுத்த வேண்டுகோள்: கூடங்குளத்தில் தயாராகும் முழு மின் கொள்ளவும் நமது தமிழ்நாட்டிற்கு (சுமார் 2000 மெகாவாட் மின்சாரம்) மின் வெட்டு சரியாகும் வரை முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது; அதை நாம் ஆதரித்து வலியுறுத்துகிறோம்.

மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களும் இதனை ஆதரித்து பரிந்துரைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த வாழ்வாதாரப் பிரச்சினை இன்றைய மின்வெட்டு அகற்றல் - தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பதால் அனைவரும் இதனை ஒரு குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

நெய்வேலி மின்சாரத்திலும் கணிசமான பங்கு நமக்கு அதிகம் கிடைக்க வழி செய்தல் அவசரம்.

தேவையற்ற விமர்சனங்களால், காலம் வீணாக்கப்படத் தேவையில்லை; பரஸ்பரக் குற்றச்சாட்டுகளால் மின்சாரம் வராது; ஓங்கி ஒலிக்கும் ஒற்றுமைதான், மின்சாரம் முதல் காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படாமல் தடுக்கப்பட உதவக் கூடும்!

தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ப்பீர்!

எனவே, ஊடகங்களும் தேவையற்ற விமர்சனங்களையும் விவாதங்களையும் தவிர்த்து தமிழ்நாட்டின் வளர்ச்சி, பொது முன்னேற்றம் ஆகியவைகளையே மனதில் வைத்து, ஆரோக்கியமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசரம். அவசியம் என்பது திராவிடர் கழகத்தின் வேண்டுகோளாகும்.

--------------கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை”2-4-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் முத்தெடுக்கும் முனைவர்


து. அழகிய பாண்டியன்
இணை ஆசிரியர் தமிழ்முரசு சிங்கப்பூர்

சுயமரியாதை இயக்கத்தின் மூலம் சமூக அவலங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தீர்க்கதரிசி பெரியார் - முனைவர் ஏ.ஆர். வெங்கடாசலபதி.

ஈரோடு முதல் வால்கா வரை என்ற தலைப்பில் பெரியாரின் வெளியூர் பயணங்கள் குறித்து தேசிய நூலகத்தில் உரையாற்றுகிறார் முனைவர் ஏ.ஆர். வெங்கடாசலபதி.

பதினான்கு வயது!

தம் வயதையொத்த சிறுவர்கள் பட்டம் விடுவது, பம்பரம் சுழற்றுவது, பந்தாட்டம் ஆடுவது என தங்கள் பதின்ம வயதை அனுபவித்துக் கொண்டிருக்க முக்குளிப்பில் இறங்கத் தொடங்கினார் ஏ.ஆர்.வெங்கடா சலபதி. வரலாறு என்ற பெருங்கடலில் மூழ்கி, இதுவரை அறியப்படாத வரலாற்று முத்துக்களைச் சேகரிப்பதில் அந்த இளம் வயதிலேயே அவர் இன்பம் காணத் தொடங்கினார்.

தமிழ் ஓவியா said...

அவரது ஆர்வத்தைத் தூண்டிய முதல் வரலாற்று நாயகரும் கடலோடு சம்பந்தப்பட்டவர்தான். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பனாரைப் பற்றி அந்தப் பிஞ்சு வயதிலேயே அவர் ஆராயத் தொடங்கினார்.

விளைவு- அடுத்த முப்பது ஆண்டு களில் சுமார் 20 வரலாற்று நூல்களை எழுதி முடித்து, முனைவர் பட்டமும் பெற்று, இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் தெற்காசியக் கல்வித் திட்டத்தில் கவுரவ இருக்கை பேராசிரியராக வலம் வருகிறார் 44 வயது பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடா சலபதி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற ஊரில் 1967இல் பிறந்த வெங்கடாசலபதிக்கு சிறுவயதிலேயே, வரலாறு வசப்பட்டது.

வ.உ.சிதம்பரனாரைப் பற்றித் தான் முதலில் ஆராயத் தொடங்கினேன். அப்போது அவரைப் பற்றிய போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறும் திரு சலபதி, தமது 17 ஆவது வயதில் வ.உ.சியின் கடிதங்கள் என்ற முதல் நூலை எழுதி வெளியிட்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, தமிழ்ப் புத்தக வரலாறு என்ற ஆய்வுக்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் தில் 1995ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று வ.உ.சியைப் பற்றிய ஆவணங் களைத் தேடித் தேடிச் சேகரித்தார்.
வ.உ.சியைப் பற்றி ஆராய்ந்த கால கட்டத்தில் அவரது நண்பராக விளங்கிய ஈ.வெ.ராமசாமி என்றழைக்கப்பட்ட தந்தை பெரியாரின் வரலாறு குறித்தும் திரு சலபதிக்கு ஆர்வம் ஏற்பட்டது.

திராவிட இயக்க வரலாறு பற்றி இரண்டு நூல்களை எழுதிய அவர் இப் போது பெரியாரைப் பற்றி இதுவரை வெளி யிடப்படாத, அறியப்படாத உண்மைகளைக் கொண்டு ஒரு புத்தகம் எழுதி வருகிறார்.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்து தமிழர்களிடையே சமூக அவலங் கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தீர்க்கதரிசி என்று பெரியாரை வர்ணிக்கும் திரு சலபதி, பெரியார் மேற்கொண்ட இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், அந்தப் பயணங்கள் அவரது சுயமரியாதை இயக்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் கடந்த செவ்வாய்கிழமை தேசிய நூலகத்தில் ஈரோடு முதல் வால்கா வரை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். (அதைப் பற்றிய சுருக்கம் வலப்பக்கம்)

இந்த இருவரைத் தவிர்த்து பாரதியார், புதுமைப்பித்தன், ஏ.கே.செட்டியார் போன்றவர்களின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் ஆராய்ச்சி செய்திருக்கிறார் அவர். சமூக அறிவியல் ஆராய்ச்சியில் அவரின் அரிய பங்களிப்புக்காக 2007ஆம் ஆண்டில் முனைவர் சலபதிக்கு பிரசித்தி பெற்ற விகேஆர்வி ராவ் பரிசு வழங் கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

சிகாகோ, ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் பல்லைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகப் பொறுப்பு வகித்திருக்கும் முனைவர் சலபதி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை கவுரவ இருக்கைப் பேராசிரியராகப் பணியாற்றுவார்.

இளங்கலை, முதுகலை மாணவர் களுக்குக் கற்பிக்கும் பேராசிரியர் சலபதி, மாணவர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறார், என்று கூறுகிறார் தெற் காசியக் கல்வித் திட்டத்தின் தலைவர் இணைப்பேராசிரியர் யோங், மன் சியோங்.

இவ்வாண்டின் பிற்பகுதியில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத் தில் தாம் வகித்து வந்த பேராசிரியர் பணிக்குத் திரும்புவார் முனைவர் சலபதி.பெரியாரின் இருவேறு முகங்கள்

நீண்ட தாடியுடன் தோன்றும் பெரியாரைத்தான் நம்மில் பலருக்குத் தெரியும் (இடப்படம்). ஆனால் தாடியற்ற பெரியாரின் புகைப்படத்தைக் காட்டி (வலப்படம்) செவ்வாய்கிழமை தமது உரையைக் கேட்க வந்திருந் தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் முனைவர் ஏ.ஆர்.வெங்க டாசலபதி.

பெரியார் முதல் முறையாக டிசம்பர் 1929 இல் மலேயாவுக்கும் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொண்டர். அந்தப் பயணங்களின் போது அவருக்கு முகத்தின் முடியை மழிக்க நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். தமிழ்நாட்டுக்கு திரும்பிய பின்னர் ஏன் மழிக்க வேண்டும் என்று அவர் அதை அப்படியே விட்டிருக்கலாம் என்று ஊகித்தார் முனைவர் சலபதி. பெரியார் வெளியூர் பயணங்கள் உடலளவில் மட்டும் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

உண்மையில் அதுவரை ஒரு சமூக இயக்கமாக மட்டுமே இருந்த சுயமரியாதை இயக்கத்தில் அவரது மலேய, சிங்கப்பூர், இங்கிலாந்துப் பயணங்களுக்குப் பிறகு பொருளியலும், காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எண்ணங்களும் சேர்ந்து கொண்டன என்று விளக்கினார் முனைவர் சலபதி.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்று முழங்கிய பெரியார் 1973ஆம் ஆண்டு 94ஆம் வயதில் காலமானார்.

அவருக்கு 1970ஆம் ஆண்டு UNESCO அமைப்பு வழங்கிய விருதில் இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. புதிய யுகத்திற்கான தூதுவர். தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ், சமுதாயச் சீர்திருத்தத்தின் தந்தை. அறியாமை, மூடபழக்கங்கள் ஆகியவற்றின் எதிரி.

பெரியாரின் வாழ்க்கை குறித்து தாம் எழுதிக் கொண்டிருக்கும் சுவையான ஆராய்ச்சி நூல் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என்று கூறினார் முனைவர் சலபதி. 2-4-2012

தமிழ் ஓவியா said...

தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்?


கதைகதையாய்க் கட்டிவைத்த காவியத்தில் ராமன்
கடல்கடந்து செல்லஒரு பாலம் அமைத்தானாம் எதையெதையோ சொல்லிச் சொல்லியேமாற்றினர் வடவர் அதையெல்லாம் நம்பிக்கெட்டார் நம்தமிழக மக்கள்!
மயக்க மருந்து கொடுத்தது போல் இராமனின் பின்னே
மடத்தமிழர் இன்றுமுள்ளார் மயங்கிய நிலையில்!
வியக்கும்படி விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட பின்னும்
விளங்கிடாத மாக்களைப்போல் தொடருகிறார் கதையை!
ஆண்டாண்டு முன்பே ஆழிகொண்ட நிலம்மேல்
பாங்காக வளர்கிறது பவளப்பாறை என்றே
அறிவியலார் அறுதியிட்டுக் கூறிவிட்ட பின்பும்;
அறிவற்றோர் கூறுகிறார் ராமர்பால மென்று!
அரசாங்கம் போட்டதொரு சேதுசமுத்திரத் திட்டமதை
அரங்கேற்றும் வேளையிலே முளைத்தது சதித்திட்டம்
மூடத்தனம் மலிந்துவிட்ட காரணத்தினால் இன்று
முடக்குகின்றார் தமிழகத்தை மேம்படுத்தும் திட்டம்
கட்டிய மனைவியைக் காக்கமுடி யாராமன்
கட்டிய தாய்ச்சொல்லும் பாலமுண்டாம் இன்றும்
அப்படியே அவர்கூறும் கூற்றுப்படி சென்றால்;
அப்பட்டமாய் எழுகிறதே ஆயிரந்தான் கேள்வி
மிதக்கும் கல்லில் பாலமென்று இராமகாதை கூற
மூழ்கும்நிலை வந்தது ஏன் விளங்கும்படி கூறும்?
உடைந்த பொருள் மூழ்குவதே உலகறிந்த கூற்று
உடையும்படி கட்டினானோ ராமபிரான் வீணே!
நன்றாக யோசித்தால் எளிதாய் விளங்குமிரு
நாடுகளை இணைக்கின்ற பாலமிது வென்று
இந்தியா இலங்கையை இணைத்திடுது என்றாலிரு
நாடுகட்கும் சொந்தமன்றோ இவர்கூறும் பாலம்?
எல்லையில் இருந்து கடல்பரப்பின் அளவில்
பன்னிரெண்டு மைல்கள்தான் நம்நாட்டின் உரிமை
இருநாட்டின் சொந்தமான கடல்பரப்பை விட்டு
இடைப்பட்ட கடற்பரப்பு உலகப்பொதுவே!
இப்படி இருக்கையிலே முழுதாய்ப் பாலம்
எப்படித்தான் இந்தியர்க்குச் சொந்தம் ஆகும்?
இந்நிலையில் பாலத்தை இந்தியாவின் -தேசியச்
சின்னமாக்க வேண்டுமென்று வடவோர் அலறி
அறிவற்றோர் வடநாட்டில் ஆர்ப்பரிக் கையிலே
முறையற்ற கோரிக்கை யிதுவெனக்கூ றாதுநமது
முதல்வர் கூட கடித மொன்றையனுப் பியதேனோ?
மூடர்களாய்த் தமிழர்களை நினைப்பத னாலோ ?
முழுஉரிமை உள்ளஒரு பொருளைத்தானே நாட்டின்
முறையான சின்னமாக்க முடியும் என்றும்
அறியாது போனாரோ நமையாள்பவர் என்று
தெரியாது போனோமோ மறத்தமிழர்கள் நாமும்?
இராமபாலம் உடைபடாமல் காக்கவேண்டு மென்னும்
இராமதாசர் உளறலைநாம் தடுத்து வெல்வோம்!
மூழ்கிவிட்ட பாலமென்ற கற்பனை உடைத்தே
மூடத்தனத்தில் மூழ்கிவிட்ட மக்களைக் காப்போம்!
கற்பனைக் கதையில் வரும்பாலம் விடுத்து
கற்பாறை சீராக்கிக் கால்வாய் அமைப்போம்
பிற்போக்கு எண்ணமெல்லாம் வீசியெறிந்து நாட்டை
முற்போக்குப் பாதையிலே கூட்டிச் செல்வோம்!

-லதாராணி பூங்காவனம், செயலாளர்,
தந்தை பெரியார் பன்னாட்டு மய்யம், குவைத்

Seeni said...

அய்யா வீரமணி அவர்களே!

உங்களுடைய பணி மற்றும்-
சாதீய ஒழிப்பு இன்னும் இன்னும்
எத்தனையோ பணிகளை
பலகால நான் பார்த்தும்-
படித்தும் உள்ளேன்!
உங்களது வாழ்ஜ்வியல் சிந்தனையும்-
படித்து இருக்கிறேன்!

உங்களது பணி சிறப்புற வேண்டும்!

மேலும் கூடங்குளம் அணு மின்
நிலையம் தான் தமிழ் நாட்டுக்கு
விடிவை தரலாம்!
ஆனால் மக்களுக்கு அழிவை தர அன்ய்மதிக்கலாமோ?

52 அணு உலை இருந்த ஜப்பானில்-
ஐம்பது மூடப்பட்டு விட்டது!

எவ்வளவு பாதுகாப்பு
சொன்னாலும் -ஜப்பானில்
நடந்ததை நீங்கள்
அறிந்ததுதான்!

நாடு இருளில் அழியட்டும் என்பதல்ல
என் நோக்கம்--மக்கள் நலனே என்
நோக்கம்!

உங்களிடம் இருந்து -
இந்த வாதத்தை நான் எதிர்பார்கல!