Search This Blog

2.4.12

ஆசிரியர் நியமனத்துக்கு இப்படியொரு தேர்வு தேவையா?


ஆசிரியர் பணிக்கு தேர்வு ஏன்?

முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்திட ஆசிரியர்களை நியமனம் செய்வதில் தேர்வு ஒன்று நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு ஆணை ஒன்றினைப் பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை 8ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களையும், பட்டதாரி ஆசிரியர்களையும் தகுதிக்கான தேர்வு நடத்தி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இப்போதைக்கு அவர்களுக்குத் தகுதி தேர்வு நடத்தப்பட மாட்டாது. அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தனித் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 என்றும், குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஆசிரியர் நியமனத்துக்கு இப்படியொரு தேர்வு ஏன் என்று தெரியவில்லை.

ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்ற பிறகு, இன்னொரு தேர்வு எதற்கு? முந்தைய தேர்வு பயன் அற்றதா, தகுதியற்றதா?

ஆசிரியர் பயிற்சி பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள்; அத்தகையவர்களுக்கு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதுதானே நியாயம்?

இத்தகைய முறையால் எந்தவித ஒழுங்கீனங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்பு இல்லை.

பல ஆண்டு காலமாக பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மூத்தவர்களைக் காட்டிலும் அண்மையில் படித்துத் தேர்வு எழுதி பட்டயச் சான்றிதழோ, பட்டம் பெற்றவர்களோதான் இத்தகுத் தேர்வில் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது தான் நடைமுறை உண்மையாகும்.
நீண்ட காலமாக ஆசிரியர் பணிக்குக் காத்திருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா? அவர்களுக்குப் பணி நியமனம் கிடைக்காதது அவர்கள்மீதான குற்றம் இல்லையே! அரசு தானே அந்த வாய்ப்பினைத் தந்திருக்க வேண்டும்?

இந்த நிலையில் அவர்களை அரசே தண்டிப்பது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கும், இவர்கள் நடத்தும் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு கேள்வி கொடுத்து, அதற்கு நான்கு பதில்களைக் கொடுத்து, எது சரி என்று டிக் செய்ய வேண்டும் (Multiple Choice)..

ஒற்றையா இரட்டையா என்ற குருட்டாம் பட்சத் தேர்வே தவிர உண்மையான தகுதியைக் கண்டுபிடிக்கும் அளவுகோல் அல்ல இது.
இத்தகைய தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறியது என்ன?

நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சம நிலை என்பதும் கட்டுக் கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட, கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்களே! (27.4.2007).

நீதிபதிகளில் இந்தத் தீர்ப்புரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தக் கூடியதுதானே?

ஜாதியை வைத்து ஒரு காலத்தில் மனிதர்களைக் கூறு போட்டதுபோல, மதிப்பெண்களை வைத்து ஆசிரியர்களைத் தரப்படுத்துவது ஆசிரியர் படிப்பையே கேவலப்படுத்துவதாகும்.

பத்தாண்டு, பதினைந்து ஆண்டுகள் வரை பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் திருமணமும் செய்து கொண்டவர்கள். இவர்களைப் புறந்தள்ளி, நேற்றுப் பட்டம் வாங்கி வெளியில் வந்தவர்களுக்குக் கதவு திறந்து விடும் போக்கு சமூக அநீதியாகும்.

என்.சி.இ.ஆர்.டி. சொன்னாலும் சரி, தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தாலும் சரி, இந்த முறையைக் கைவிட ஆவன செய்வதே நியாயமானதும், சமூகநீதியும் ஆகும்.

இந்தத் தேர்வு முறையால் சமூகநீதி பாதிக்கப்படு வதற்கும் வாய்ப்புண்டு என்றும் எச்சரிக்கின்றோம்
-----------------------"விடுதலை” தலையங்கம் 25-11-2011

குறிப்பு:- நான்கு மாதத்திற்கு முன் எழுதப்பட்ட ”விடுதலை” தலையங்கம் இது. விண்ணப்பம் பெற ஆசிரியர்கள் பட்ட துயரங்களை கணக்கில் கொண்டால் இத்தலையங்க கட்டுரையின் அருமையும் அவசியமும் புரியும் என்பதால் காலத்தின் அருமை கருதி இக்கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளோம். படியுங்கள்! உண்மையை உணருங்கள்! --நன்றி

0 comments: