Search This Blog

10.4.12

வாழ்வியலும்புரட்சிக்கவிஞரின்குறளும்! -கி.வீரமணி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வள்ளுவர் குறளுக்குப் புத்துரை வழங்கினார்; ஆனால், ஏனோ முழுமை பெறவில்லை. எழுதியவை கவிஞர் நடத்திய குயில் வார ஏட்டில் வந்து கொண்டிருந்தன.

கிடைத்தவரை அவற்றைத் தொகுத்து இரு நூல்கள் வந்துள்ளன.

1. சீரிய பகுத்தறிவாளர், தமிழறிஞர், இராமர் என்ற டாக்டர் சு.சு. இளங்கோ அவர்கள் பாரதிதாசன் திருக்குறள் உரை - ஆய்வும் பதிப்பும் என்று 1992 இல் சுமார் 20 ஆண்டுகளுக்குமுன்பு நாவலர் அணிந்துரையுடன் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

2. மற்றொன்று அதே குயில் வார இதழில் வந்த திருக்குறள் - புரட்சிக்கவிஞரின் புத்துரையைத் தொகுத்து பேராசிரியை நா. செங்கமலத்தாயார் வெளியிட்டுள்ளார். புரட்சிக்கவிஞரின் திருமகனார் கலைமாமணி சு. மன்னர் மன்னன் அவர்கள் அறிமுகத்துடன் 1994 இல் வெளிவந்துள்ளது.

புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக அப்போது இருந்த பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் அணிந்துரையும் இடம்பெற்றுள்ளது!

பேராசிரியர் டாக்டர் சு.சு. இளங்கோ நூலில் பாரதிதாசன் ஆத்திச்சூடி போல, பாரதிதாசன் திருக்குறள் சிலவும்கூட இடம்பெற்றுள்ளது என்பது வாசகர்களுக்குப் புதிய செய்தியாக இருக்கக் கூடும்!

பேராசிரியர் சு.சு. இளங்கோ தன் நூலில் (பாரதிதாசன் திருக்குறள் உரை என்ற நூலில்) குறிப்பிடுகிறார்:

திருக்குறளில் ஈடுபாடு கொண்ட பாரதிதாசன் திருக்குறளைப் போன்று தானும் ஒரு நூலைப் படைக்கவேண்டும் என்று எண்ணினார். அதற்குப் பாரதிதாசன் திருக்குறள் என்று பெயரிட்டார்.

அவர் பாடிய குறள்கள் வருமாறு:

பாட்டு 1:
எந்நற் பொருள்கட்கும் ஏங்கா தொருவயின்
மன்னலே ஆகும் மனம்.
(குயில் 12.7.60)
பாட்டு 2:
ஒருவன் புகழ்வான் ஒருவன் இகழ்வான்
இரண்டுக்கும் அப்பால் இரு.
(குயில் 10.6.60)
பாட்டு 3:
இடைச்செருகல் வள்ளுவரில் இல்லை படைத்தமிழ்
யாவினும் உண்டென்பன் நான்.
(குயில் 28.6.60)
பாட்டு 4:
இருந்தாள் இருக்கின்றாள் என்றும் இருப்பாள்
வருந்தாள் மறத்தமிழ்த் தாய்.
(குயில் 9.8.60)
பாட்டு 5:
அவன்செய லாலவன் செல்வம் அடைந்தான்
எவன் செயலால்ஏந்துகின்றான் கை.
(குயில் 16.8.60)
என்னே அற்புத வரிகள்!
செய்யுள் என்பது செவ்விய உள்ளம் என்றார் புரட்சிக்கவிஞர்.

அந்த செவ்விய உள்ளம் ஒரு புரட்சி உள்ளம் - செம்மை - சிகப்பு - புரட்சியின் சின்னம். ஈற்றடிகளில் எத்தனை சம்மட்டியடி அப்பப்பா! அதனால் அன்றோ அவர் என்றும் புரட்சிக்கவிஞர்!
எத்தனையோ பாவேந்தர்கள் வரலாம்! ஆனால், ஒரே ஒரு புரட்சிக்கவிஞர்தான் உண்டு.

எரிமலைபோல் எப்போது வெடிக்கும் என்று தெரியாமல் கம்பீரத்துடன் மேலோங்கி நிற்கும்! இல்லையா? அத்தனையும் அறிவின் வீச்சு! அழகின் மாட்சி!! அவரின் புரட்சிக்கவிதைகள் கருத்து வெடிகுண்டுகள்!

---------------- 24-3-2012 --"விடுதலை” இதழில் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: