பாவேந்தர் செய்த பாவம் என்ன ?
மு. பழனி இராகுலதாசன்
ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்
பெங்குயின் வெளியீட்டகம் உலகளாவிய அளவிலும், இந்திய அளவிலும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகிறது. அறிவார்ந்த வாசகர் உலகம் அதற்கு உரிய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. 2009 என்று ஆண்டு குறிப்பிட்டு பெங்குயின் வைக்கிங் வெளியீட்டகம் The Rapids of a Great River என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளி யிட்டுள்ளது. இந்தத் தலைப்பை ஒரு மகாநதியின் பிரவாகம் என்று நாம் தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்.
இந்நூலில் சங்க இலக்கியக் கவிதை கள் தொடங்கி 1974 ல் பிறந்தவரான கவிஞர் குட்டி ரேவதியின் கவிதைகள் வரை தமிழ்க் கவிதைகள் தொகுக்கப் பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன.
தொகுப்பு நூல் என்பது (Anthology) முழுநூல் அல்ல. இது எல்லாருக்கும் தெரிந்த விசயமே; எல்லாரும் உடன் படுகிற விசயமும் ஆகும். தொகுப்பாசிரியர் எல்லாரும் இது பற்றிக் கருத்து தெரிவித்துப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான குறிப்பு ஏறத்தாழ தொகுப்பு நூல்கள் எல்லாவற்றிலும் இடம் பெறத்தான் செய்கின்றன.
இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, எல்லாரும் குறிப்பிடுவது போலவே இவர்களும், ‘An anthology such as this, however representative it needs to be must, in the end, The subjective. We are aware that readers familiar with Tamil poetry may find a few of their favourite poems missing’ என்று பாதுகாப்பாக, எச்சரிக்கையாகக் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு தொகுப்பு நூல் என்பது முழுமையானதாக இருக்க முடியாது என்பதும், சில கவிதைகள் அல்லது சில கவிஞர்கள் விடுபட்டுப் போவது என் பதும் நமக்கும் புரியத்தான் செய்கிறது.
இந்தத் தொகுப்பு நூலின் அடிப் படையான நோக்கம் குறித்து தொகுப் பாளர்கள் தெளிவுபடுத்தும் இடத்தில், தமிழ்க் கவிதை என்பது மிக நீண்ட வளமான மரபை உடையது. இதில் பழைமையும் உண்டு; புதுமையும் உண்டு. பழைமைக்கும் புதுமைக்குமான தொடர்பை, இணைப்பைத் தெளிவு படுத்தும் நோக்கத்துடனேதான் நாங்கள் இந்தத் தொகுப்பைத் தொகுத்தளித்திருக்கிறோம் என்று குறிப்பிட் டிருக்கிறார்கள்.
தொகுப்பாளர்களின் ஆர்வத்தை, உழைப்பை, நோக்கத்தைப் பாராட்டத் தான் வேண்டும். இது ஓர் அரிய முயற்சி என்பதில் எந்தவித அய்யப்பாடும் கொள்வதற்கில்லை.
நூலின் முதலாவது பாகத்தில் கவிதைகள் சங்க இலக்கியத்தில் தொடங்கி கோபால கிருஷ்ண பாரதி யுடன் முடிகிறது. நூலின் இரண்டாம் அத்தியாயம் மகாகவி பாரதியில் தொடங்கி, குட்டி ரேவதியுடன் நிறைவு பெறுகிறது.
நாம் கேட்கும் கேள்வி இவ்வளவு பெரிய, அரிய முயற்சியில், நல்ல முயற்சியில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு இடம் இல்லையே, ஏன்? என்பதுதான். பாவேந்தர் ஏன் சேர்க் கப்படவில்லை? காரணம் என்னவாக இருக்கக்கூடும்? என்று எப்படி யோசித்துப் பார்த்தாலும் சரியான காரணம் நமக்குப் புலப்படவில்லை.
முதலாம் அத்தியாயத்தை கோபாலகிருஷ்ண பாரதியுடன் நிறைவு செய்து கொண்டது சரியே; அதே போல, இரண்டாம் அத்தியாயத்தை மகாகவி பாரதியுடன் தொடங்கிக் கொண்டதும் சரியே. இரண்டாவது அத்தியாயத்தில், பாரதியிலிருந்து குட்டி ரேவதி வரை புதுமைத் தமிழ் பிரவாகம் எடுத்து வருகிறது என்று கணித்து, தொகுப்பு முயற்சியில் இறங்கியதும் சரியே!
ஆனால், புதுமைத் தமிழ் என்று வரும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே! பாவேந்தரின் அரசியலை விட்டு விடுவோம். அவரது ஆரிய எதிர்ப்பு, திராவிட ஆதரவு என்ற நிலைப்பாடுகளையும் விட்டுவிடுவோம். அரசியல், இனப் பாகுபாடுகளை யெல்லாம் தாண்டி, விலக்கிச் சிந்திக்கும்போது பாவேந்தரின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, அமைதி (நாடகம்) ஆகிய மூன்றும் ஒருபுதிய அணுகுமுறைப் படைப்புகள் என்பதில் என்ன சந்தேகம்? இயற்கையைப் பாடிய ஏந்தல் என்றும் உலகம் முழுவதிலும் பாராட் டப்படுகிறது ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொர்த் என்பவரையும் தாண்டி, ஏன் வென்று நிற்கிற கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மகாகவி பாரதியாரைத் தேர்வு செய்துவிட்டு,, அடுத்து, தொகுப்பாளர்கள், பாரதி தாசன், கவிமணி, நாமக்கல்லார் எல் லாரையும் விட்டு விட்டு, ஒரே பாய்ச் சலாக நா. பிச்சமூர்த்திக்கு வந்து விடுகிறார்கள்.
பாரதிக்கு அடுத்ததாக பிச்ச மூர்த்தியைத் தேர்ந்து எடுப்பதற்குக் காரணமாக தொகுப்பாளர்கள் சொல் லும் போது He broke free of traditional forms while introducing new themes என்று குறிப்பிட்டுக் கொள் கிறார்கள். பிச்சமூர்த்தி தொடங்கி குட்டி ரேவதி வரையிலான புதுக் கவிதைக்காரர்கள் செய்துள்ள யாப்புப் புரட்சி ஒரு வகையான ஆசிரிய யாப்பு மாற்று வடிவமே என்ற கருத்தை தொகுப்பாசிரியர்கள் அறியமாட்டார் கள் போலும்.
கம்பன் நமக்களித்த விருத்தப்பா வகைகளையும், பாவேந்தர் பாண்டியன் பரிசு நூல் முலமும், குடும்ப விளக்கு மூலமும், அழகின் சிரிப்பு மூலமும் அளித்துள்ள விருத்தப்பா வகைகளை யும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், பாவேந்தர் எத்தனை எத்தனை விருத் தப்பா புதுமைகளையும் எளிமை களையும் படைத்துத் தந்துள்ளார் என்று தெரிய வரும்!
மகாகவி பாரதியை எடுத்துத் தொகுத்துவிட்டு, அடுத்து, ஒரே பாய்ச்சலாக பிச்சமூர்த்திக்கு வருகி றோமே. இடையில் சுப்புரத்தினம் என்ற பெயரை விடுத்து, பாரதி தாசன் என்ற பெயர் புனைந்து, தமிழ்க் கவிதை உலகில் ஈடும் இணையும் சொல்லிக் காட்டமுடியாத அளவில் அரசோச்சினாரே ஒருவர், அவரை விட்டுவிட்டு வருகிறோமே என்ற சிந்தனையே, இந்தத் தொகுப்பாளர்களுக்குப் பெயரளவில் கூட இல்லாமல் போனது தான் வெகு ஆச்சரியம்!
மகாகவி பாரதியின் மறு அச்சுத் தான். மகாகவியை எடுத்துக் கொண் டால், அது பாரதிதாசனையும் எடுத்துக் கொண்டது மாதிரிதானே என்றாவது சமத்காரமாக முன்னுரையிலாவது விவாதித்திருக்கலாம்.
மகாகவி பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, நூலின் பிற்பகுதியில் எழுதும்போது, மகாகவி பாரதி தனது பாண்டிச்சேரி வாசத்தின் போது அவர் அரவிந்தரைச் சந்தித்தார். வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் பாரதியாரும், பாரதிதாசனும் புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டார்கள் என்று எழுதவில்லை. இந்த இடத்தில் கூட ஒரு சிறு குறிப்பாகவாவது தொகுப்பாளர்கள் புரட்சிக்கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.
நூலின் முன்னுரையிலும் பாவேந்தரின் பெயர் இல்லை. பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுக்கு இடையிலும் இல்லை; கவிதைகள் வரிசையிலும் இல்லை.
ஆம், நூலின் எந்த இடத்திலும் பாவேந்தர் குறிப்பிடப்படவில்லை. ஆமாம், அந்த அளவுக்கு புரட்சிக் கவிஞர் செய்த பாவம் என்ன?
- ---------------- நன்றி: ஜனசக்தி 11-2-2010
குறிப்பு:- இன்று புரட்சிக்கவிஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது------ தமிழ் ஓவியா
0 comments:
Post a Comment