Search This Blog

23.4.12

பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்!

தந்தை பெரியார் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் முறையில் குறிப்பிட்டதாவது:-

பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே!
நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும் நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாணவர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன்.

நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது. தண்டவாளத்தில் திருப்பி விட்ட ரயில் எப்படி ஒழுங்காகப் போகின்றதோ, அதே போல ஏதோ ஒரே பாதையில் போகின்றதே ஒழிய, அறிவை வளர்க்கவோ, மக்களுக்கு இன்றியமையாத கருத்துக்கு ஆவன செய்வதாகவோ இல்லை.
நமது நாட்டு மக்களை பொதுவாக பெரிது, சிறிதாகப் பிரிக்கலாம். ஒரு சாராரை அறிவுவாதிகள் என்றும் மற்றொரு சாராரை நம்பிக்கைவாதிகள் என்றும் பிரிக்கலாம். நம்பிக்கைவாதிகள் நம்ப வேண்டியவை என்று மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி நம்பச் செய்வார்கள். அறிவுவாதி அப்படி அல்ல. எதுவாக இருந்தாலும் அறிவு கொண்டு அலசிப் பார்ப்பவன் அறிவுவாதிகளின் செயலால்தான், ஆராய்ச்சியால் தான், நாட்டுக்குப் பயன் உள்ளவை நடைபெறும். இந்த நாட்டில் அரசாங்கம் நம்பிக்கைவாதிகளின் கையில் சிக்கி 1,000, 2,000 ஆண்டுகளாக மாற்றமே அடையவில்லை.

மனிதன் ஓட்டுகின்ற பக்கம் நடக்கின்ற மிருகம் அல்ல. மற்ற எல்லா ஜீவன்களுக்கும் இல்லாத பகுத்தறிவு உடையவன் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளக் கூடியதும், தவறு காணப்பட்டால் திருத்திக் கொள்ளக் கூடியதும் ஆன அறிவு பெற்றவன். மிருகங்களுக்கு இப்படி இல்லை.
நம் நாட்டின் அறிவு மற்ற நாட்டார்கள் அறிவைவிட மோசமானது. ஒரு கூட்டத்தார் உழைப்பிலேயே மற்ற ஒரு கூட்டத்தார் வாழ ஏற்றபடி அமைக்கப்பட்டு விட்டது.

மற்ற நாட்டில் நம்பிக்கைவாதிகள் இருந்தாலும் ஓரளவுக்குத்தான் நம்பிக்கையைப் பயன்படுத்து வார்களாக அதுவும் சிலர்தான் இருப்பார்கள். நம் நாட்டிலே நேர்மாறாக உள்ளது.

நம் நாட்டுமுறை நமது முன்னோர்கள் முறை, நமது பழக்க வழக்கங்கள் என்ற முறையில் தான் நமது அறிவு சென்று கொண்டு இருக்கின்றதே ஒழிய, வளர்ச்சிப் பற்றிய சிந்தனையோ, முயற்சியோ இல்லை. இதன் காரணமாகவே 1,000, 2,000 ஆண்டுகளாக காட்டு மிராண்டிகளாக இருக்கின்றோம்.

நம் நாட்டார் கடவுள் மீது நம்பிக்கை வைத்து கண்மூடித் தனமாக பின்பற்றி வந்தார்களே ஒழிய, கடவுள் என்றால் என்ன? என்று சிந்திக்கவே இல்லை. கடவுள் செயல் அதிகாரம் என்ன? நம்முடைய செயல் அதிகாரம் உரிமை என்ன? என்று எண்ணி ஒருவன் கூட பிரித்துப் பார்ப்பதே இல்லை.

மனிதனுடைய வாழ்க்கைக்கு அவனுடைய முயற்சி முக்கியம். அவன் வளரத் தகுந்தவன் அவனில் வெகு பேருக்கு அறிவின் சக்தி பற்றி தெரியவே தெரியாது. இப்படிப்பட்ட மனிதனை அறிவாளி மிருகத்தைவிட உயர்ந்தவன் என்று சொல்ல முடியுமா?

அடுத்து தங்களுக்கு மதம் இருக்கின்றது என்று கூறுகின்றான். தூங்குவது, உண்ணுவது, உடை உடுத்துவது முதல் அத்தனையும் மதப்படி, ஆனால், மதம் என்றால் என்ன என்று நமக்குத் தெரிய வேண்டாமா? மதம் என்றால் என்ன? எப்போது உண்டானது? யாரால் உண்டாக்கப்பட்டது? அது இன்றைக்குப் பயன்படுமா?என்று சிந்திக்க வேண்டாமா? ஆறு மாதத்துக்கு முன் வாங்கிய ரயில்வே கைடை எடுத்துப் பார்த்துவிட்டு ரயிலுக்குப் போனால், ரயில் தப்பி விடுகின்றது. ஆனால், 2,000 ஆண்டுகளுக்கு முன் உண்டானது எங்கள் மதம் என்று கட்டிக் கொண்டு அழுகின் றார்களே ஒழிய, இது இந்தக் காலத்துக்குப் பொருந் துமா என்பதை சிந்திக்கின்றார்களா? கிடையாது.

அதுபோலவே மனிதன் ஒவ்வொருவனுக்கும் ஜாதி இருக்கின்றது. அந்த ஜாதியால் மனித சமுதாயம் என்ன பலன் அடைந்தது என்று எவன் எண்ணிப் பார்க்கின்றான். ஆனால், கூறுகின்றான் படிப்பு எதுக்கு என்றால், அறிவுக்கு என்கின்றான். படித்தவன் எவன் இவற்றைப் பற்றி சிந்திக்கின்றான்?
உதாரணமாக, நீங்கள் பள்ளிக்கூடத்தில் வானசாஸ்திரம், பூகோள சாஸ்திரத்தை கற்பிக்கப் போகிறீர்கள். இப்படி பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கிரகணம் எப்படி உண்டாகின்றது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்குவான். ஆனால், வீட்டில் போய் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாமல் இருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பான்.
ஆசிரியர்கள் விளக்கு ஏற்றி வைப்பது இருளைப் போக்க என்று கூற வேண்டுமே ஒழிய விழுந்து கும்பிட அல்ல என்று கற்பிக்க வேண்டும்.

இன்றைய நடப்பு அனுபவங்களை வைத்துக் கொண்டு பார்த்தால், 1,000, 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நமது முன்னோர்கள் அறிவு எவ்வளவு மோசமானது என்பது நமது அறிவு அவர்களை விடப் பன்மடங்கு உயர்ந்தது என்று விளங்கும்.
அறிவு வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்தாமல் 1,000, 2,000 ஆண்டுகளாக இருந்து வந்ததின் காரணமாகவே இன்றைய விஞ்ஞான உலகில் நாம் மட்டுமே காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றோம்.

தோழர்களே, பையனுக்கு 5-ம் 5-ம் எவ்வளவு என்பதை விளக்க இரண்டு கைவிரல்களையும் எண்ணச் செய்து ஒரு கையில் 5 இன்னொரு கையில் 5ஆக இருகையிலும், 10 விரல் இருப்பதால் 10 என்று விளக்கலாம். பத்தும் பத்தும் என்ன என்பதை விளக்க காலில் உள்ள 10 விரலையும், கையில் உள்ள பத்து விரலையும் எண்ணச் செய்து இருபது என்று விளக்கலாம்.

இன்னும் 20-ம் 20-ம் என்ன? என்பதை விளக்க இன்னொரு ஆளையும் கூட்டிக் கொண்டு வந்தால் அவன் விரலையும் எண்ணி விளக்குவது? 100-ம் 100-ம் என்ன என்க? எத்தனை பேரை கூட்டி வருவது?

எனவே, 5-ம் 5-ம் என்பதை விளக்க இரண்டு கை விரல்களையும் எண்ணிக் காட்டி விளக்குவது 10-ம் 10-ம் 20 என்க கால் விரல்களையும், கை விரல்களையும் எண்ணிக் காட்டி விளக்குவது மாணவனை சிந்தனை செய்து விளக்கிக் கொள்ள செய்யப் பயன்படும். அதிலிருந்து மற்றவர்களுக்கும் கண்டு பிடிக்க சிந்தனை செய்யத் தூண்டி 2ஓ50-100, 10ஓ100-1000 என்று தானாகவே கண்டுபிடிக்கப் பழகுவதுதான் அறிவைத் தூண்டுவதாகும் என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில், மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

----------------25.10.1961 அன்று பரமக்குடி பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 4.11.1961

குறிப்பு:-இன்று உலக புத்தகதினம். வாசிப்போம்,மற்றவர்களையும் வாசிக்க வைப்போம். அறிவு பெறுவோம். அனைவருக்கும் இனிய புத்தக தின வாழ்த்துக்கள் ---தமிழ் ஓவியா

1 comments:

Udhay said...

எவ்வளவு தான் எடுத்துச்சொன்னாலும் இன்னும் பல திராவிட மாணவர்கள் (விஞ்ஞானம், பொறியியல் படிப்பவரும் அடக்கம்) தேர்வுக்கு முன்னர் 'பிள்ளையார்' கோவிலுக்கு சென்று 'தோப்புகரணம்' போட்ட பிறகு தான் தேர்வறைக்கே செல்லுகிறார்கள்....!

இந்த 'அறிவாளிகளுக்கு' எடுத்து சொல்ல எவ்வளவு முயற்சித்தாலும் தோல்வியிலேயே முடிகிறது! :(