Search This Blog

21.4.12

தி.மு.க. தலைமைக்கு மிக முக்கிய வேண்டுகோள்! -கி.வீரமணி


தி.மு.க. தலைவருக்கும், தோழர்களுக்கும், தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திராவிடர் இயக்க நூறாவது ஆண்டு நடக்கும் இந்த முக்கியமான கால கட்டத்தில், தி.மு.க.வின் பொறுப் பாளர்களாக உள்ள பலரின் நடவடிக்கைகளைப்பற்றி ஏடுகளில், ஊடகங்களில் வரும் பல்வேறு செய்திகள் நம்மைப் போன்ற தாய்க் கழகத்திற்கும், உண்மையான திராவிடர் இயக்கப் பற்றாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அளவற்ற, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்தையும், மனவேதனையையும் தருகிறது!
ஏற்கெனவே தி.மு.க.வை அழிப்பதே தமது பிறவிப் பயன் என்ற ஆரிய ஊடகங்களுக்கு அவல் பாயசம் சாப்பிட்டதுபோல சில நிகழ்வுகள் கிடைப்பதோடு விரிசல் என்று ஏகமாக விளம்பரப்படுத்தி, கட்டடத்தையே, கட்டுமானத்தையே காணாமற் போகச் செய்ய இத் தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது என்று கருதி, பரபரப்புப் பசியைத் தீர்த்துக் கொள் ளுகின்றன.

கல்லில் செதுக்கிய அய்யாவின் அறிவுரை

அய்யா அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் கூறிய அறிவுரை கல்லில் செதுக்கியதாகும்.

தி.மு.க.வை எதிரிகளால் அழிக்க முடியாது; இவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டால் தான் முடியும். தி.மு.க. கெட்டியான பூட்டு; அதற்குக் கள்ளச் சாவி போட்டுவிட யாரையும் அனுமதிக்கக் கூடாது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் முன்னிரண்டும் கூட முக்கியமில்லை. கட்டுப்பாடுதான் முக்கியம்; மிகவும் முக்கியம். எனவே இயக்கத்தை - கட்சியைக் காப்பாற்ற   கட்டுப்பாட்டையே தலைமை காப்பாற்றிட தயவு தாட்சண்யம் காட்டாமல் கட்டுப் பாட்டிற்காக தேவையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்றார்கள்.
 
இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்போது தலைமையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்துக்காக அவர்மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அவரை கண்டித்து அறிக்கைவிடத் தயங்கவில்லை தந்தை பெரியார் அவர்கள்.
அப்போது அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். எனக்கு  திரு. அன்பழகன் அவர்கள்மீது கோபமோ, வெறுப்போ இல்லை; கழகக் கட்டுப்பாட்டிற்காகத்தான் இப்படி எழுதிட வேண்டியுள்ளது. தலைமை இடத்தில் திரு. அன்பழகன் அவர்கள் இருந்து திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்படிக் கூறியிருந்தால் இதே போல அவர்மீதும் கட்டுப்பாட்டை மீறிக் கருத்துக் கூறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருப்பேன் என்று விளக்கமாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். தி.மு.க. என்ற இயக்கம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அன்று 1969-இல் தந்தை பெரியார் அவர்கள் விளக்கியதை, இப்போது அவர் தம் தொண்டன் என்ற முறையில் அதேபோல் தி.மு.க. என்ற மகத்தான திராவிடர் இயக்கத்தை அதற்கு சோதனை ஏற்படும் கட்டத்தில் அதனை நினைவூட்டும் கடமையும், பொறுப்பும் உண்டு நமக்கு என்பதால் இதனை எழுத நேரிட்டு விட்டது.

ஆளும் கட்சியின்மீது பலவகைகளிலும், அதிருப்திகள் தலை எடுக்கும் இக்கால கட்டத்தில், அவற்றை மடை மாற்றம் செய்யும் வகையில் தி.மு.க.வில் உள்கட்சிப் பிரச்சினை என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதை அரசியலில் அனைத்தும் அறிந்த கலைஞர் அவர்களுக்குத் தெரியாததல்ல. மேலும் அந்த அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்: கலைஞர் அவர்களின் தலைமையை நான் ஏற்க மாட்டேன் என்று கூட்டத்திற்குத் தலைமை வகித்த க.அன்பழகன் என்று சொல்லியிருப்பதாகப் பத்திரிகைகளில் படித்தேன்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, இதற்கு ஒழுங்கு நடவடிக்கையை தி.மு.க. கட்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுதவேண்டும் என்பது போல கட்சியின் மரியாதை குறையுமானால், தலைக்குத் தலை தன் தன் இஷ்டப்படிப் பேச, நடக்க இடம் கொடுத்து வந்தால், பொதுத் தொண்டுக்குக் கண்டிப்பாய் அதில் இடம் இருக்காது.

கட்சித் தலைவரின் முதற் கடமை கட்சியின் கவுரவத்தைக் காப்பதுதான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கட்சி சாதாரண கட்சியானாலும், நான் உப தலைவரை நீக்கினேன், காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ, கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டுவிடவில்லை.
பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லுகிறேன். தி.மு..கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அறிஞர் அண்ணாதான். இதற்கு நீர் பாய்ச்சி நல்ல விளைச்சலை உண்டாக்கியவர் கலைஞர்தான். கட்சிக்குக் கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியைக் கட்டிக் காக்க கட்சி அங்கத்தினர்களில் பத்து பேர் ஆதரவை உடைய அங்கத் தினர் யாருமில்லை என்பதுதான் என் கருத்து. இதை நான் தி.மு.க. அங்கத்தினர்களுக்கே சொல்லுகிறேன்.
எனவே, இன்று தி.மு.க.விற்கு வேண்டிய கட்டுப் பாடு, ஒழுங்கு முறை நடவடிக்கைதான்.
தி.மு.க.வினால் மக்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஏராளம் இருப்பதால், இதை நானாக எனது சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன்.
அங்கத்தினர்கள் மன்னிப்பார்களாக!

                   -------------14.3.1969 அன்றைய விடுதலையில் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அவர்களின் அறிக்கையில் காணப்படும் ஒரு சிறு பகுதி இது.

மறுநாளும் இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அய்யா.

தி.மு.க. என்பது வெறும் கண்ணீரால் மட்டுமே வளர்ந்த இயக்கம் அல்ல. செந்நீர் விட்டும், பல்லாயிரம் தொண் டர்கள், தோழர்கள் தியாகத்தால் வளர்ந்தோங்கிய மகத் தான ஆலமரம் ஆகும். விழுதுகள் அதனைக் காப்பாற்றிட மட்டுமே பயன்பட வேண்டும். அதன் வேரினை அசைக்க என்றும் வீணர்களுக்குத் விழுதுகளே துணை போகக் கூடாது. தெரிந்தோ, தெரி யாமலோ!
நோயாளியைக் காப்பாற்றிட அறுவை சிகிச்சை அவசியம்
சில நேரங்களில் இயக்கக் கட்டுப்பாட்டைக் காப் பாற்றிட, கடும் சிகிச்சை - அது அறுவை சிகிச்சை யானாலும் செய்துதானே தீர வேண்டும் - நோயாளியை நோயிலிருந்து காப்பாற்றிட.
இயக்கமே எப்போதும் பிரதானமானது என்பதை அறியாதவர் அல்ல அதன் தலைவர் கலைஞர் அவர்கள். இயக்கம் இருந்தால் தான் எவருக்கும் மதிப்பும், மரியாதையும்; இந்த எண்ணம் எல்லோருக்கும் புரியும். எனவே கட்டுபாட்டைக் காப்பாற்ற இயக்க பாசம் - கொள்கைப் பாசத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மற்ற பாசங்கள் குறுக்கிட இடந் தராமல் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, பல் குழுவும், பாழ்  செய்யும் உட்பகையும் இயக்கத்தைத் தின்று விடாமல் காப்பாற்றிட முன்வர வேண்டுமென உரிமை யுடன், உண்மை உணர்வுடன், தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வழிபட்ட நிலையில் கேட்டுக் கொள் ளுகிறோம். தி.மு.க. வரலாற்றில் அண்ணாவுக்குப் பிறகு அவரது உழைப்பு பல சோதனைகளை வென்று அவ்வியக் கத்தைக் காப்பாற்றி இருக்கிறது!

இப்போதும் விரைந்த விவேகமான முடியும் நடவடிக்கையும் தான் இன எதிரிகளை வாயடைக்கச் செய்யும் நிலை ஏற்படும்.

                ------------------------கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 21-4-2012

1 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகளா? கலைஞர் பதில்


சென்னை, ஏப்.21- தமிழ் ஈழத்தை ஆதரிப் பவர்கள் பயங்கரவாதி கள் என்று ராஜபக் சேயின் தம்பி கோத் தபயே ராஜபக்சே கூறிய குற்றச்சாற்றுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் கள் செய்தியாளர்களி டம் நேற்று அளித்த பதில் வருமாறு:

செய்தியாளர் :- நீங்கள் தனித் தமிழ் ஈழம் பற்றி சொல்லிய கருத் துக்களுக்கு மாறாக இலங்கை அதிபர் ராஜ பக்சேயின் தம்பி கோத் தபய ராஜபக்சே தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப் பவர்கள் பயங்கரவாதி கள் என்று சொல்லி யிருக்கிறாரே? கலைஞர் :- தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில் பயங் கரவாதமோ, தீவிர வாதமோ தலையிடக் கூடாது என்கிற கருத்து உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும் அதே கருத்தைத்தான் கொண்டது. நாங்கள் பயங்கர வாதத்திற்கு தயாராக இல்லை.

செய்தியாளர் :- தனித் தமிழ் ஈழம் கேட் பது என்பது இலங்கை யின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்கள வர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர் காலத்தில் நடத்தப்படு மென்று எதிர்பார்க் கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.

செய்தியாளர்:- தமிழ்நாட்டில்தான் தமி ழர்கள் அதிகமாக இருக் கிறார்கள். எனவே இலங்கை விவகாரத்தில் தலையிடாமல், இந்தியா வில் தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேளுங் கள் என்று கோத்தபய சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்:- இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங் கையில் இருக்கின்ற அரசைப் போல தமிழர் களைக் கொடுமைப் படுத்தவில்லை. தமிழர் கள் இங்கே நிம்மதி யாகத்தான் இருக்கிறார் கள். ஆகவே எங்களுக்கு இந்திய அரசை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை. சட்டமன்றத் தில் ஜனநாயகம்?

25-ந் தேதி கூட்டத் தில் அறியலாம்!

செய்தியாளர்:- ``சட்டமன்றத்தில் ஜனநா யகம் படும் பாடு என்ற தலைப்பில் தி.மு. கழகம் கூட்டங்களை நடத்து கிறதே, என்ன பேசப் போகிறீர்கள்?

கலைஞர்:- சென் னையில் 25ஆம் தேதி யன்று கூட்டம் நடை பெறவுள்ளது. அந்தக் கூட்டத்திற்கு 25ஆம் தேதி வருக! கருத்துக் களைப் பெறுக!
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார். 21-4-2012