கடவுள் இல்லை என்பதை நடை முறையில் நிரூபித்துக் காட்டியவர்கள் கோவில் பூசாரிகள்தான்.
என்ன! கோவில்களில் பூசைகளைச் செய்யும் கோவில் பூசாரி குருக்களா?
ஆம். அனுதினமும் கோவில்களில் பூசைகளைச் செய்து கொண்டே இருக்கும் குருக்கள் கூட்டம் தான், கடவுள் இல்லை என்பதை நடை முறையில் தெளிவாகக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையாகவா?
ஆம். உண்மையாகத்தான்.
எப்படி! எப்படி!!
கடவுளை வழிபட பக்தர்கள் கோவிலுக்குச் செல்லுகிறார்கள் அல்லவா?
ஆம். இன்றைக்கு வாழ்க்கையில், மக்கள் நம்பியவர்களில் பெரும் பாலோர் மக்களை மோசம் செய்து விட்டதால், மக்கள் கடவுளே கதி என்று கோவில் கோவிலாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
கோவிலுக்குள் சென்றுவிட்ட மக்கள் பூசாரி குருக்களிடம் என்ன கேட்கிறார்கள்?
மூலஸ்தானத்தில் இருக்கும் குருக்கள் பூசாரிகளிடம் தங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் போக்க கடவுளுக்கு அர்ச்சனை செய்யச் சொல்லி குருக்களிடம் கேட்கிறார்கள்.
குருக்கள் என்ன செய்கிறார்?
வேண்டுகிற மக்களின் வேண்டு கோளை நிறைவேற்றும்படி, கடவுளுக் குப் புரிந்த சமஸ்கிருத மொழியிலேயே அர்ச்சனை செய்கிறார்.
பணக்கஷ்டத்தில் இருந்து மற்ற எல்லா கஷ்டங்களும் தீர்ந்து விடுமா சாமி என்று மக்கள் குருக்களைக் கேட்கிறார்கள்.
பணக் கஷ்டத்தில் இருந்து மற்ற எல்லா கஷ்டங்களும் பஞ்சுபோல பறந்து ஓடிப் போகும் என்று குருக்கள் சொல்லிக் கொண்டே பூசைத் தட்டை மக்களிடம் நீட்டுகிறார்.
குருக்கள் எதற்காகப் பூசைத் தட்டை நீட்டுகிறார்?
மக்களைக் காசு பணம் போடச் சொல்லித்தான் தட்டை நீட்டுகிறார்.
காசு பணத்திலிருந்து, மக்களுக்கு எல்லாம் தரச் சொல்லி கடவுளிடம் சிபாரிசு செய்கிற குருக்கள் வரும் தனக்கு வேண்டிய காசு பணத்தை கடவுளிடமே வாங்கிக் கொள்ளலாமே! மக்களிடம் எதற்காகத் தட்டை நீட்ட வேண்டும்!!
இதிலிருந்து என்ன தெரிகிறது?
மக்கள் பூசைத் தட்டில் பணம் போடவில்லை என்றால், பூசாரி குருக்கள் உயிர் வாழ முடியாது என்று தெரிகிறது.
இந்த பூசாரிக்கே எதையும் கொடுக்க முடியாத கடவுள் இவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு நமக்கு வேண்டியதை எல்லாம் தருவாரா? என்று நம் தமிழ் மக்கள் இன்று வரைக்கும் நினைத்துப் பார்த்தார்களா?
நம் தமிழ் மக்கள் நினைத்துப் பார்த்திருந்தால்!?
மலம் அள்ளும் தொழில்கூட கேவலம் இல்லை என்று குருக்கள் மந்திரம் ஓத ஆரம்பித்து விடுவார்.
அந்தக் காலம் வருமா?
வரும். இன்றைக்கு நம் தமிழ் மக்கள் நம் தமிழ்நாட்டின் வளர்ச் சியைப் புரிந்து கொண்டால்.
இன்றைக்கு நம் தமிழ் நாட்டின் வளர்ச்சி என்ன?
உணவு - உடை வீடு ஆகிய இவை இன்றைக்குத் தமிழகத்தில் போதுமான அளவிற்கு இருக்கின் றனவா, பற்றாக் குறையாக இருக்கின் றனவா?
இன்றைக்கு இவை பல மடங்கு மீதியாக இருப்பது நடைமுறை உண்மை. அதுவும் மக்களின் உழைப்பால் உண்டானவை.
அப்படியானால் இன்றைக்குத் தமிழகத்தில் அரைப் பட்டினி அரை நிர்வாணம் தெருவில் குடிஇருப்பு ஏன்? எதனால்?
இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. அதனால்.
இவற்றை எல்லாம் தமிழகத்தை விட்டே அடியோடு போக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? ஆயுதப் புரட்சியா? அறிவுப் புரட்சியா?
தமிழகத்தில் ஆயுதப் புரட்சிக்கு அவசியமே இல்லை என்பதைவிட நடைமுறைக்கும் சாத்தியமே இல்லை. அறிவுப் புரட்சிதான் உழைக்கிற மக்களுக்கும் தேவை. சிறுசிறு உடைமையாளர்களையும் திருத்த உதவும். உழைக்கிற மக்களுக்குத் திருக்குறள் வழியில் நல்ல அறிவை உண்டாக்கினால் தான் மக்களுக்கே உழைக்கிறவர்களை மக்கள் தேர்ந் தெடுப்பார்கள்.
தேடுகிற -சேருகிற அனைவரும் கூடி, தமிழகத்தில் இன்றைக்கு உணவு _ உடை _ வீடு எல்லோருக்கும் போதுமானவை இருக்கின்றன என்பதை எல்லாரும் புரியும்படி தெரிய வைத்து விட்டால்?
அமைதியான வழியிலேயே தமிழர்கள் எல்லாரும் உண்ணலாம் _ உடுத்தலாம் _ வீடுகளில் குடி இருக்க லாம். மேலும் நாம் ஒவ்வொன்றையும் நன்றாகப் புரிந்து கொண்டு நன்றாக உழைத்து, உற்பத்தியைப் பெருக்கினால்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கண்ட கனவும், நம் திருவள்ளுவரின் நோக்கமும் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து விடும்.
அறிவுடையார் ஆவது அறிவார் (குறள் 427) அறிந்தால்? அறிவுடையார் எல்லாம் உடையார் (குறள் -430)
தமிழகத்தில் உள்ள ஆணும், பெண்ணும், பகுத்தறிவைக் கொண்டு திருக்குறளில் திருவள்ளுவரின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால்?!?
குருக்களுடைய வயிறும் வாழ்க் கையும் வீங்கும். தமிழர்களுடைய மடி _ முடி, வாழ்க்கை எல்லாம் மேலும் மொட்டையாகும்.
குறிப்பு: தந்தை பெரியார் அறிவுரை காரணம்...?
நீங்கள் எந்த சமயத்தார் என்று கேட்டால் வள்ளுவர் சமயம் என்று சொல்லுங்கள். உங்கள் நெறி என்னவென்றால், குறள் நெறி என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்த பிற்போக்குவாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரரும் எதிர் நிற்க மாட்டான். யாரும் குறளை மறுக்க முடியாததே இதற்குக் காரணம்.
(விடுதலை 18.4.1950)
-------------------திருக்குறள் தொண்டன் , மா. அர்த்தனாரி சேலம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை
2 comments:
watch and comment this video
http://youtu.be/JwyY8fIVTqY
நல்ல செய்திகளை தெரிந்துக்கொண்டேன். படித்ததைப்போன்று என்னை நான் தயார்படுத்திக்கொண்டேன்.
Post a Comment