Search This Blog

5.4.12

பன்றிக்காய்ச்சல் கிரிக்கெட்நோய் நேரக்கொல்லியே!இந்தியா ஏழை நாடாம்? அய்.பி.எல். 20-20 கிரிக்கெட் இந்தியாவில் நேற்று முதல் தொடங்கி விட்டது. பெரிய பெரிய பண முதலாளிகள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களை அடிமைச் சந்தையில் வாங்கும் பொருள்களாக்கி விட்டனர். சாதாரண அடிமைகள் அல்ல விலை உயர்ந்த அடிமைகள் இவர்கள். பணம் என்று வந்து விட்டால் மானம்! வெட்கம்! ஏது?

நிமிடம் ஒன்றுக்கு விளையாட ரூ.1200 மட்டும் தானாம். வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து விளையாடுபவர்கள், கிரிக்கெட் டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்கும் தாராள உள்ளம் - இந்திய முதலாளி மார்களுக்கு.

இந்தப் போட்டிகளை ஒளிபரப்பிட ஸ்டார் தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம்; இந்தவகையில் எவ்வளவு தொகை இந்தி யக் கிரிக்கெட் குழுமத் துக்குக் கிடைக்கப் போகிறது தெரியுமா? கொஞ்சம் கொஞ்சம்தான் 3851 கோடி ரூபாய் தானாம். (மக்கள் தொகையில் 77 சதவிகிதத்தினர் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே ஈட்டும் நாடு இது!).

இந்தச் சோம்பேறி விளையாட்டைப் பார்ப்பதற்கு அனுமதிச் சீட்டை வாங்கிட நாள் முழுவதும் வரிசையில் நிற்கும் நம் நாட்டு வீரதீர இளைஞர்களை எதைக் கொண்டு சாற்ற?

நமது கழகத் தோழர்கள் சித்தார்த்தன், பெரியார் நேசன் குழுவினர் நடத்தும் வீதி நாடகத்தில் இந்தக் கிரிக்கெட் பற்றி நடத்தும் காட்சியை வீதிக்கு வீதி நடத்தினால்கூட நல்லது.

இந்தக் பன்றிக் காய்ச்சல் கிரிக்கெட் நோய், நேரக் கொல்லி மட்டுமல்ல; முட்டாள் தனத்தை வட்டி போட்டு குட்டிப் போட்டு வளர்த்து வருகிறது. கையில் கயிறு, கழுத்தில் உருத்திராட்ச மாலைகள் கத்தை கத்தையாக! இவர்கள் விளை யாட்டு வீரர்களா? சாமியார் மடத்து எடுபிடிகளா?

குறிப்பிட்ட குழுவினர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக யாகங்கள் கூட நடத்துகின்றனர் - இந்தப் பாரத புண்ணிய பூமி புத்திரர்கள்.

இந்தத் தொற்று வியாதி, பாமர மக்கள் மத் தியில்கூட பரவி விட்டது. கிராமத்து வயல்வெளி களில்கூட கிரிக்கெட் விளையாட்டு!

இந்தக் கேடுகெட்ட நிலையை உற்பத்தி செய்த தில் நம் நாட்டுத் தொலைக் காட்சிகள்தான் புண்ணியம் கட்டிக் கொள்ள வேண்டும்.

கால் பந்தாட்டத்திலோ, சடுகுடு விளையாட்டிலோ கலந்து கொள்ளும் ஒரே ஒரு பார்ப்பானைக் காட் டுங்கள் பார்க்கலாம். 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலகக் கால் பந்தாட்டத்தில் உலகத் தகுதி நாடுகளின் பட்டிய லில்கூட இடம் பெற முடியாத நிலை!

பார்ப்பனீயத்தால் நாடு பாழ்பட்டது ஒரு துறையா, இரு துறைகளா! எல்லாத் துறைகளும்தான்.

-------------------- மயிலாடன் அவர்கள் 5-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


9 comments:

தமிழ் ஓவியா said...

ஓ, அந்த ஆண்டாளுக்கு இன்று கல்யாணமா!


திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்குத் திருக் கல்யாணமாம். அதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலிலிருந்து பச்சை நிறப் பட்டுச் சேலை வந்து சேர்ந்து விட்டது.

பிள்ளை விளையாட்டு என்று பக்தரான வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னது வீண் போகக் கூடாதல்லவா?

யார் இந்த ஆண்டாள்? ரெங்கநாதரின் பக்தர். இப்படியும் சொல்லலாமே கடவுளுக்கும் பக்தர் களுக்கும் உள்ள உறவு தந்தை மகள் என்கிற அளவில் தானே இருக்க முடியும்?
ஆனால் ஆண்டாளுக்கு அந்தச் சம்பிர தாயங்கள் பொருட்டல்லவே! அதெல்லாம் பழைய ஓல்டுமாடல்! நான் இந்தக் கடவுளைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறேன். அவரோடு அந்தரங்க சல்லாபத்தில் துய்க்கப் போகிறேன்.

ரெங்கநாதனோடு புணர என் உடல் என்ன பாடுபடுகிறது தெரியுமா? என்று கொந்தளிக்கிறார் மூச்சுமுட்ட விரகதாபமெடுத்துத் துடிக்கிறார்.

இதோ ஆண்டாள் அம்மையார்.

முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்!

புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்குவட்டில் துளி
சோரச்சோர் வேனை
காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்லுதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
வைஷ்ணவ ஆழ்வாரான ஆண்டாள் அம்மை யாரின் நாச்சியார் திருமொழி என்ற நூலில் காணப்படும் பாடல்தான் இது.

ரெங்கநாதனோடு உடல் உறவு கொள்ள ஆசையாம். கொங்கை கிளர்ந்து எழுகிறதாம். இதற்குமேல் விளக்கமாக எழுதுதல் நம் ஏட்டுக் குத் தகுதியன்று.

ஆண்டாள் தகுதியை மட்டுமல்ல - ஆண்டாள் திருக்கல்யாணத் திருவிழாவில் கூடும் பக்தர் களின் தகுதியையும்கூட அல்லவா இது காட்டு கிறது! 5-4-2012

தமிழ் ஓவியா said...

தமிழர்களே, எழுக!


ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் அரசு மாவட்டத் தலை நகரங்களில் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூன்று முக்கிய பிரச்சினைகள் பற்றியது.

1. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து நேற்று குறிப்பிட்டு இருந்தோம்.

2. இரண்டாவது நோக்கம் ஈழத் தமிழர்களுக் கான வாழ்வுரிமைபற்றிய உத்தரவாதம்; தனி ஈழம்தான் தேர்ந்த முடிவு என்பது ஒரு பக்கம். அது ஒரு நீண்டகால நோக்காகவும் இருக்கலாம். அதுவரை தமிழர்கள் அங்கு தன்மானத்தோடும், வாழ்வாதார உரிமையோடும் வாழவேண்டுமே - அதற்கான உத்தரவாதம் கண்டிப்பாகத் தேவை.

இலங்கை அரசைப் பொருத்தவரை அசல் சிங்கள இனவாத அரசாக இருந்து வருகிறது என்பதற்குப் பெரிய பெரிய ஆதாரங்கள் தேவைப் படாது. அன்றாடம் அவ்வரசு நடந்துகொண்டுவரும் போக்குகளே போதுமானவை.

ஜெனீவா தீர்மானத்திற்குப் பிறகுகூட அதன் போக்கில் மாற்றமில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

இந்த நிலையில், ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு உலக நாடுகளின் கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. அப்படிக் கருதினால் அத்தீர்மானம் எந்திர ரீதியாக, சடங்காச்சாரமாக நிறைவேற்றப்பட்டது என்று பொருள்பட்டுவிடும்.

180 நாள்களுக்குள்ளாகவே முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களில், சொந்த வீடுகளில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்ற இலங்கை அதிபரின் வாக்குறுதிபற்றி இந்திய அரசு குறைந்தபட்சம் கேள்வி எழுப்பியதுண்டா?

இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற அதி காரிகள், ஆலோசகர்களாவது சம்பந்தப்பட்ட ஆட்சி யாளர்களிடம் கமுக்கமாகவாவது கேட்டதுண்டா?

பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்வியில் மிக ஆர்வம் கொண்டவர்கள். சிங்களவர்களைவிட கல்வியில் தேர்ந்தவர்கள். அந்தத் தமிழினப் பிள்ளைகளின் கல்வி நிலை எந்தத் தன்மையில் இப்பொழுது இருக்கிறது?

இந்தியா இலங்கைக்கு அளித்த 500 கோடி ரூபாய்க்கான நடவடிக்கைகள்பற்றியாவது தெரிந்து கொள்ள இந்தியா வாய் திறந்ததுண்டா?

அதேபோல தமிழின மீனவர்கள் பற்றிய பிரச்சினை. ஜெனீவா தீர்மானத்திற்குப் பிறகு இந்தியாமீது இலங்கை அரசு கொண்டிருக்கும் சினத்தினை தமிழக மீனவர்கள்மீது காட்டுவதாகத் தெரிகிறதே; வலிய போய் இந்தியா இலங்கைக்குச் சமாதானப்படுத்தும் வகையில் கடிதம் எழுதியதை - இந்தியாவின் பெருந்தன்மையாக இலங்கை எடுத்துக்கொள்ளவில்லையே; இதற்குப் பிறகும் இந்தியா இதுகுறித்துச் சிந்திக்கவில்லையென்றால், இந்தியாவின் சுயமரியாதைக்குப் பேரிழுக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஈழத் தமிழர்கள் எங்களுக்கு எதிரியல்ல - விடுதலைப்புலிகள்தான் - பயங்கரவாதிகள் - அவர்கள்தான் எங்களுக்கு உண்மையான எதிரிகள் என்று சாமர்த்தியமாகச் சொன்னார்களே - விடுதலைப்புலிகளைத்தான் பூண்டோடு ஒழித்துவிட்டதாகக் கூறுகிறார்களே - அப்படி இருக்கும்போது தங்களுக்கு எதிரிகளாக இல்லாத அந்த ஈழத் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு உரியவை செய்யப்படவேண்டாமா? இலங்கை அரசின்மீது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசின் போக்குகள் அமையவேண்டாமா?

ஜெனீவா தீர்மானத்தோடு எல்லாம் முடிந்து விட்டது போன்ற மயான அமைதி தமிழ்நாட்டில் நிலவுகிறது. உண்மையில் இப்பொழுதுதான் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இந்தியாவையும், உலக நாடுகளையும் நகர்த்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் - அந்தக் கடமைதான் ஏப்ரல் 11 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களே, எழுக!

உணர்வுகளை வெளிப்படுத்துக!! 5-4-2012

தமிழ் ஓவியா said...

அண்ணா பெயரில் கட்சி நடத்துகிற அதிமுகவிற்கு அண்ணா வழியும் தெரியவில்லை - எம்.ஜி.ஆர். வழியும் புரியவில்லை


திருச்சி பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை


திருச்சியில் நடைபெற்ற வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு மூன்றாம் பிரச்சார பயணத்தில் தலைமை கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் தலைமையில் பங்கேற்ற குழுவினருக்கு தமிழர்தலைவர் சிறப்பு செய்தார். (4.4.2012)

திருச்சி, ஏப்.5- அண்ணா பெயரில் கட்சி நடத்துகிறவர்கள் அண்ணா வழியிலும் போகவில்லை! எம்.ஜி.ஆர். வழியிலும் போகவில்லை. காவிரி முதல் சேது சமுத்திர கால்வாய் திட்டம் வரை தமிழ்நாடு வஞ்சிக்கப் படுகிறது என்று திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கூறி விளக்க வுரையாற்றினார். அவர் தம் உரையில், காவிரி நீர் பிரச்சினை முதல் சேது கால்வாய் திட்டம் வரை எல்லா நிலைகளிலும் தமிழ் நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச் சாரத்தின் நோக்கம் மக்கள் மத்தியில் விழிப் புணர்வு ஏற்படுத்தவே இந்த பிரச்சாரம் பய ணம் திருத்தணியில் தொடங்கி திருச்சியில் இன்று நிறைவடைகிறது.

தமிழ் ஓவியா said...

காவிரி நீர் பிரச்சினை

காவிரி நீர் பிரச்சி னையில் மறைந்த சமூக நீதிகாவலர் வி.பி.சிங் அவர்கள் தான் இதற் கான நடுவர் மன்றத்தை அமைத்தார். நடுவர் மன்றம் விசாரித்து தீர்ப்பு கொடுத்து தமிழ் நாடுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கொடுக்க வேண்டுமென்று கூறி யது. ஆனால் இன்னமும் கருநாடக அரசு நமக்கு தண்ணீர் தரவேண்டி பாக்கி இருக்கிறது. முல்லை பெரியார் பிரச் சினை ஒருபுறம், காவிரி நீர் பிரச்சினை ஒருபுறம், சேது கால்வாய் திட்டம் முடங்கி போய் கிடக்கும் ஒருபுறம். இப்படி எல்லா நிலைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப் பட்டிருக்கிறது.

ஒருமைப்பாடு! ஒருமைப்பாடு! என்று கூறுகிறார்கள் இதில் என்ன ஒருமைப்பாடு இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். எங்கே போனது உங்கள் ஒருமைப்பாடு? மத்திய அரசு வேடிக்கை பார்த் துக் கொண்டிருக்கிறது. நதிநீர் பிரச்சினையில் மக்கள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். இதில் அரசி யல் கண்ணோட்டம் கூடாது. ஒரே குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். அதுதான் வெற்றியை தரும். இதற்கு ஒரு விடிவு வரவேண்டும்.

சேதுகால்வாய் திட்டம்

சேதுகால்வாய் திட் டம் கலைஞர் அவர் களே, நானோ இல்லை மற்றவர்களோ கொண்டு வந்தது அல்ல. பா.ஜ.க. அரசு இருக்கும் போது, அவர்கள் பல்வேறு ஆய் வுகள் செய்து, கொண்டு வரப்பட்ட திட்டம். நல்ல வாய்ப்பாக டி.ஆர். பாலு இத்துறையிலே இருந்ததினால் அத் திட்டம் மீண்டும் விரை வாக செயல்படுத்தப் பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் வந்த பிறகு அந்த திட்டத்தை கிடப் பில் போட நினைக் கிறார்கள். அதிமுக அரசு 2001 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ராமன் பாலம் என்று சொல்லக் கூடிய அந்த இடம் மணல் மேடுதான் என்று சொல்லியிருக் கிறது அந்த தேர்தல் அறிக்கையில்.

மணல் மேடு என்று கூறியவர்கள்தான் இன் றைக்கு ராமர் பாலம் என்று சொல்லி நீதி மன்றத்தை நாடியிருக் கிறார்கள். அண்ணா வின் பெயரில் கட்சி வைத்து கொண்டு அண் ணாவின் கனவுகளுக்கும், திட்டங்களுக்கும் எதிராக செயல்படுவதுதான் அண்ணா நாமமா? அண்ணா வழியிலும் போகவில்லை! எம்.ஜி.ஆர் வழியிலும் போகவில்லை! அண்ணா நாமம் வாழ்க எனக் கூறும் இவர்கள், அண்ணாவிற்கு மட்டும் நாமம் போடவில்லை.

எம்.ஜி.ஆருக்கும் நாமம் போட்டு விட்டார்கள்!

தமிழர்களின் வாழ்வாதார திட்டமான சேதுகால்வாய் திட்டம், இத்திட்டம் நிச்சயம் கொண்டு வரப்பட வேண்டும். தேர்தலை பற்றிய கவலைப்படாத இயக்கம் திராவிடர் கழகம்,

ஆனால் அதே நேரத்தில் மக்கள் பிரச் சினையில் கவலை எடுத்துக் கொள்ளும் இயக்கம் தான் பெரியார் இயக்கம்! திராவிடர் கழகம்! இவ்வாறு அவர் பேசி னார்.

தமிழ் ஓவியா said...

ஆதாரம் இல்லையாமே!


இன்றைய தினமலரின் கடைசி பக்கத்தில் ஒரு அரை பக்கம் ஓவியம் தீட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் - 63வர் விழா பற்றி சாங்கோபாங்கமாக வெளியிட்டுள்ளது.

அதே தினமலரில் இன்றைக்கு வேறு ஒரு பக்கத்தில் வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா?
மயிலை (சென்னை) அறுபத்துமூவர் விழாவுக்கு கிடைத்துள்ள பிரபலம் குறித்து தொன்மையான இலக்கிய குறிப்போ கல்வெட்டு தகவலோ இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை - தினமலர், 5.4.2012

ஓ, இந்த அறுபத்துமூவர் விழா இடைச் செருகலோ! இதற்குத் தான் இவ்வளவுப் பெரிய தடபுடலோ?

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பொன்மொழிகள்ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.


நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

கடவுள்தான் உலகத்தை உண்டாக்கினார்; மனிதனை உண்டாக்கினார் என்று சொன்னால், எல்லாம் அவன் செயல் என்று சொன்னால், அப்புறம் மனிதனுக்கு என்ன வேலை?

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?
1956 அக்டோபர் 15 ல் நாக்பூரில் 8 லட்சம் பேருடன் பௌத்த மார்க்கத்தைத் தழுவியபோது, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்; ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்க மாட்டேன்; கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்; கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன் என்பன உள்ளிட்ட, இந்து மதத்துக்கு எதிரான 22 உறுதிமொழிகளை ஏற்றவர் அண்ணல் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத்தெரியுமா?

Seeni said...

cricketukku sariyaana mattai adi!

தமிழ் ஓவியா said...

நெஞ்சை நிமிர வைக்கும் ஒரு கருஞ்சட்டை வீரரின் மரண சாசனம்!


என் மரண சாசனம் (இறுதி முறி)

நான் மறைவுற்ற பின்னர் என் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் இயக்கத்தவர்கள் நடத்த வேண்டிய நடைமுறைகள்.

1. உடலைக் குளிப்பாட்டக் கூடாது. நெற்றிக்குறி இட்டு அவமானப்படுத்தக்கூடாது.

2. உடலுக்கு மாலை இடலாம். உடல் அருகில் அமர்ந்து அழக்கூடாது.

3. இறுதிச் சடங்கு என்று எந்தச் சடங்கையும் செய்யக்கூடாது.

4. என் துணைவியாருக்கும், என் மறைவைத் தொடர்ந்து எந்தச் சடங்கும் செய்யக் கூடாது. அவர்களிடம் அமர்ந்து அழக்கூடாது.

5. என் உடலை எரிக்கலாம். என் மகன்கள் மூவர், மகள் ஒருவர் ஆகியோர் சேர்ந்து எரியூட்டுக. கொள்ளிச் சட்டி தூக்கக் கூடாது. பால் வைக்கக் கூடாது. கருமாதி, திதி ஆகியவை செய்யக் கூடாது.

6. பறை (அ) மேளம் அடித்தல் கூடாது.

7. உடலை குரோம்பேட்டையிலேயே எரிக்கவும். திராவிடர் கழகத் தோழர்கள் இதை மேற்பார்வையிடவும்.

8. உறவினர், நண்பர்கள், இயக்கத்தவர்களுக்கு, உரிய நேரத்தில் என் மறைவைத் தெரிவிக்கவும்.

9. ஏதேனும் ஒரு நாளில் என் படத்தை திறக்கலாம். உரியவர்களை அழைத்துப் படத் திறப்பை செய்திடுக.

10. வீடு, என் துணைவியார் வாழ்நாளுக்குப் பிறகு நான்கு மக்களுக்கும் உரியது.

11. நிலம் மூன்று மருமகள்களுக்கும் உரியது.

12. வங்கி, திராவிடன் நலநிதி இவைகளில் இருக்கும் தொகை என் துணைவியார் கட்டுப்பாட்டில் இருக்கும். பின்னர் அவர் விரும்பிய வண்ணம் என் மக்களுக்கே கொடுக்கலாம்.

13. நான் திடீரென மறைந்தால் செங்காட்டில் என் தந்தையார் புலவர் நீலகண்டனார் நினைவு பெரியார் படிப்பகத்தை கட்டி முடித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் என் மக்கள் சேர்ப்பிக்க வேண்டும்.

14. இதில் கண்ட செயல்பாடுகளைச் சிறிதளவும் பிசகாது என்னுடைய நான்கு மக்கள் 1. திரு.இராசேந்திரன், 2. திரு.ஆறுமுகம், 3. திரு.பாண்டியன், 4. திருமதி. மீனாட்சி ஆகியோரும் 5. என் துணைவியார் திருமதி. திலகவதியும் செய்யக் கடமைப் பட்டவர்கள் ஆவர்.

15. இந்த இறுதி முறி (உயில்)யின் நோக்கம் நான் இறந்தபின் அவமானப்படுத்தப்படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்கேயாகும்.

சாட்சிகள்:

1. சி.திலகவதி 2. சி.இராசேந்திரன்
3. சி.ஆறுமுகம்
4. சி.பாண்டியன்
5. சி.மீனாட்சி


இங்ஙனம்
மு.நீ.சிவராசன் 6-4-2012