Search This Blog

13.4.12

சித்திரை1தமிழ்ப்புத்தாண்டுஆபாசத்தைஏற்றுக்கொள்கிறீர்களா?


கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லுவதோ ஆச்சரியமான ஒன்றல்ல!

சித்ரா பவுர்ணமிக்கு தீபம் ஏற்றச் சொல்லி கட்சிக்காரர்களுக்கு அறிக்கை கொடுத்தவராயிற்றே! பக்தர்கள் மண் சோறு சாப்பிடுவது கண்டு புளகாங்கிதம் அடையக் கூடியவராயிற்றே!

அதனால்தான் துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கும் திராவிட இயக்கத்துக்கும் எவ்வித ஒட்டும் உறவும் இல்லை; பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக் கொண்டவரல்லர் என்று வெளிப் படையாகக் கருத்துத் தெரிவித்தும்கூட, அதனை இதுவரை மறுக்கவில்லை என்பதிலிருந்தே செல்வி ஜெயலலிதா சோ கூட்டத்தின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற முடிவுக்கு எளிதாகவே வந்துவிடலாம்.


தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் 1921இல் கூடி எடுத்த முடிவல்லவா தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது!

அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களும் சாதாரணமானவர்களா? தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியம் பிள்ளை, சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் இவர்களைவிட முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்ப் புலமையும் - ஆய்வும் கொண்டவரா?

இந்தப் பெரும் புலவர்களின் முடிவைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புலவர்களுக்குச் சிறப்பு செய்யப்படும் என்றால், இதைவிடக் கேலிக் கூத்து வேறு எதுவாக இருக்க முடியும்?

நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் திருச்சியில் கூட்டப்பட்ட மாநாட்டில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டு, தந்தை பெரியார் அவர்கள் அதனை ஏற்று மகிழ்ந்தார் என்பதைவிட வேறு என்ன வேண்டும்?

உண்மையான திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்து அதன் கொள்கைகளை ஏற்று மதிக்கும் மனப்பான்மை இருந்தால், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை (23.1.2008) ரத்து செய்யும் (23.8.2011) எண்ணம் வருமா?

2001இல் (சனவரி 6) மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்று பிரகடனப் படுத்தினார்களே - அந்தத் தமிழ் உணர்வை மதித்திருக்க வேண்டாமா?

சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அம்மையாருக்குத் தாளம் போடுவோரைக் கேட்கிறோம்; நாரதனுக்கும் - கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற ஆபாசத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுகுறித்து கழகம் எழுப்பிய கேள்வியின் பக்கம் எந்தக் கொம்பரும் தலை வைத்து படுக்கவில்லையே ஏன்? ஏன்?

ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும் பெண்களின் சராசரி வயது 71 ஆகவும் வளர்ந்து விட்ட ஒரு கால கட்டத்தில், 60 ஆண்டுகளுக்குள் முடங்கி விட்ட ஒரு சுழற்சியை ஏற்றுக் கொள் வதைவிட அறிவின்மையும், அறிவியல் மனப் பான்மையற்ற தன்மையும் வேறு உண்டா?


21ஆம் நூற்றாண்டிலும் இந்த அவலமா? இதில் குறிப்பிடத்தக்க வெட்கக் கேடு என்னவென்றால் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சூராதி சூரர்கள் (?) வாயே திறக்காத அவலம்தான்! திண்டுக்கல் பூட்டுப் போட்டு கெட்டியாகப் பூட்டி விட்டார்கள் போலும்!

தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!

--------------- "விடுதலை” தலையங்கம் 13-4-2012

7 comments:

தமிழ் ஓவியா said...

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லையா?

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட

வாழ்வியற் களஞ்சியம் என்ன சொல்கிறது?

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கலைஞர் பதில்

சென்னை, ஏப்.15- சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று கூறும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தரும் ஆதார பூர்வமான பதிலடி இதோ!

உடன்பிறப்பே,

அரசியலுக்காகவும் - சுய விளம்பரத் துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் என்னைப் பற்றிய அர்ச்சனையைத் தான் ஜெயலலிதா முழு நேரமும் பாடியிருக்கிறார். தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என் பதைச் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஜெயலலிதா மாற்றியி ருக்கிறார்.
அதற்கு என்ன ஆதாரம் சொல்லி யிருக்கிறார் என்றால், சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத் தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண் டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதீனம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்று ஜெய லலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதீனம் குறிப்பிட்டு விட்டாராம்! எப்படிப்பட்ட ஆதாரம்?

சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு இதுதான் ஆதாரமா?

மேலும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியி ருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு. கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகார பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித் திரைத் திருநாள்தானே தமிழ்ப் புத் தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத் திருக்க முடியும்!

தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று ஜெயலலிதா பேசி யிருக்கிறார்.

ஜெயலலிதாவிடம் கேட்டது யார்?

தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி ஜெயலலிதா வந்ததும் வராததுமாக சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தாரே, அவரிடம் யார் கேட்டது இந்தச் சட்டம் வேண்டும் என்று? அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா?

சென்னைப் பல்கலைக் கழக நூற் றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக் குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சி களுக்குத் தரப்பட மாட்டாது. நடை பெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெய லலிதா என்னென்ன பேசியிருக்கிறார்?

அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள் தான்!

முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெய லலிதா என்றால் எங்கே வேண்டுமானா லும், எது வேண்டுமானாலும் பேசலாமா?

தமிழ் ஓவியா said...

தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத் தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம்! ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

தி.மு. கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழு வதும் பரப்புவதற்காக அல்லவா? கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே?

தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்ச ராக இருந்த போது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா?

அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளி நாட்டுத் தமிழறிஞர்கள், கா. சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவ மானப்படுத்தப்பட்டார்கள்? மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

மத உணர்வை புண்படுத்துவதாம்

23-8-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசும்போதே, ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டைத் தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித் திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங் கள் உள்ளன. கருணாநிதி, தன் சுய விளம் பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப் பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.
பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத் தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரபூர்வமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு, சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப் படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா வின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்! தை மாதத்தில் பௌர்ணமி பூசம் நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத் தில் பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் தான் வருகிறது. ஆனால் அந்த மாதத் திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி உத்திரம் நட்சத்திரத்தில்தான் வரும். அந்த மாதத் திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே; இதற்கெல்லாம் முதலமைச்சர் நாளை சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிக்கை படிப்பார் என்று நம்புவோமாக!

சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1912ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

வாழ்வியற் களஞ்சியம் என்ன சொல்கிறது?

ஆனால் அவரே கூறியபடி அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் - முதலமைச் சர் ஜெயலலிதா புரவலராக இருந்த நேரத்தில் - வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 13 - பக்கம் 43இல் ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்து உழைத்து உணவுப் பொருள்களைத் திரட்டிய மக்கள் உத்தராயணம் தொடக்க முறும் தைத் திங்கள் முதல் நாளன்று நன்றியுணர்வுடன் மழைக்கும் வேளாண் மைப் பெருக்கத்திற்கும் காரணமான சூரியனை வழிபடுகின்றனர். சங்கராந்தி யன்று கடவுளுக்குச் சிறப்பான வழி பாடுகள், விழாக்கள் ஆகியன செய்ய வேண்டுமென்று பிருகுசங்கிதை என்னும் நூல் கூறுகின்றது. ஒரு தேவநாள் என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அத்தேவநாளின் பகற்பொழுதின் தொடக் கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் ஆகமங்களிலிருந்து அறிய முடிகின்றது. என்று கூறப்பட்டி ருக்கிறது என்பதை அம்மையாருக்கு மிகவும் பிடித்த ஆகம உதாரணத் திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.

2004ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து, அவரே அணிந்துரையும் வழங்கியுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - நான்காம் மடலம் - மூன்றாம் பாகம் - 111ஆவது பக்கத்தில் தை என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பேச்சு தயாரித்துக் கொடுத்தவர்கள் அந்த நூலையாவது வாங்கி அம்மையாரிடம் காட்டி யிருக்கலாம் அல்லது அவர்களே படித்துப் பார்த்திருக்கலாம். அந்த நூலில் தை என்பதற்குப் பொருளாக தமிழாண் டின் தொடக்க மாதம்(first month of Tamil era)திருவள்ளுவராண் டின் தொடக்க மாதம் (first month of Tiruvalluvar era) என்றுள்ளது. மேலும் அங்கேயே இச் சுறவ மாதமே தமிழாண்டின் தொடக்கம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

அதுபோலவே செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகரமுதலி - மூன்றாம் மடலம் - இரண்டாம் பாகம் நூலும் அம்மையாரின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அங்கேயும் சித்திரை என்பதற்குப் பொரு ளாக தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் மேழம் என்று கூறிவிட்டு - சுறவமே தமிழாண்டின் தொடக்கம்; மேழத்தைக் கொள்வது பொருத்த மன்று என்று எழுதியுள்ளார்கள். சுறவம் என்றால் தை மாதம்; மேழம் என்றால் சித்திரை மாதமாகும்.

மறைமலை அடிகளாரின் திட்ட வட்டம்

மேலும் ஜெயலலிதா பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசும்போது, 1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூ ரியில் நடைபெற்ற கூட்டத்தில், திருவள்ளு வர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும் என மறைமலை அடிகளார் கூறியதாக அய்ந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க் கினியன் கூறியிருக்கிறார் என்று குறிப்பிட் டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 31 ஆண்டுகளுக்கு முன்புதான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுதான் மறைமலை அடிகளாரின் கருத்து மாகும். அந்தக் கருத்தைத்தான் அரசு ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகின்றது. இதைத்தான் மறைமலை அடிகளாரின் மகனும், மறைமலையடிகள் வரலாற்றினை நமக்குத் தொகுத்து வழங்கியவருமான மறை. திருநாவுக்கரசு அவர்கள், மறைமலை அடிகளின் கருத்துப் படி திருவள்ளுவர், கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் என்று திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்.

(தொடரும்) 15-4-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்பது நிரூபணம் : பெண் சாமியாடி எரித்து கொலை


தென்காசி, ஏப்.15-வீட்டில் தனியாக இருந்த பெண் சாமியாடி கொடூரமாக எரித்து கொல்லப்பட்டார். நெல்லை மாவட்டம், அனந்தாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி முனியாண்டி (52). இவரது மனைவி பொன்னுத் தாய் (48). இவர்களுக்கு துரைச்சி (23), மாரியம்மாள் (21) ஆகிய மகள்கள் உள்ளனர். பொன்னுத்தாய் சாமியாடி குறி சொல்லி வந்தார். இந்நிலையில், முனியாண்டி நேற்று அதிகாலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பொன்னுத்தாய், உணவு சமைத்து கொண்டிருந்தார். அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறு செய்து, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தலையில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பியோடினர். வீட்டிலிருந்து புகை வந்ததை பார்த்த அருகில் உள்ளவர்கள், விரைந்து வந்தனர். பொன்னுத் தாய் உடல் எரிந்து இறந்த நிலையில் கிடந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.15-4-2012

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு தமிழறிஞர்கள் சொன்னது என்ன?


அம்மையார் குறிப்பிட்டுள்ள 1981ஆம் ஆண்டு மதுரையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்திய அய்ந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய மலரினை என் வீட்டிலே உள்ள நூலகத்தி லிருந்து தேடிப்பிடித்து சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய கட்டுரை 407ஆம் பக்கத்தில் வந்ததை முழுவதும் படித்தேன். அதில் அம்மையார் குறிப்பிட்ட பகுதி 408ஆம் பக்கத்தில் இருந்தாலும், 407ஆம் பக்கத்திலே அவரே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள அய்ப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும் பொழுது மக்கள் உள்ளத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன்தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர்.

இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம் என்று அவரே எழுதியிருப்பதை அம்மையாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா? அல்லது பார்த்து விட்டு அம்மையார் மாட்டிக் கொண்டு விழிக்கட்டும் என்று மறைத்து விட்டார்களா?

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறி ஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23-1-2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப் பட்டது. 1-2-2008 அன்று சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

செம்மொழிக்கும் ஆபத்தோ

இதே நிலை தொடருமேயானால் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை எப்படி கொடுக்கலாம்? அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக்கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு அவ்வளவு பாசம்! எட்டிக்காய் தின்றது போல! ஆட் சிக்கு வந்த முதல் நாள் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தையே தூக்கி வெளியிலே போட்டவர் ஜெயலலிதா. இன்றளவும் அந்த நூலகத் திற்கு இடம் கொடுத்தபாடில்லை.

தமிழ் ஓவியா said...

சென்னைத் தீவுத் திடலில் 6.3.2006 அன்று நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திருமதி.சோனியாகாந்தி அவர்கள், மத்தியிலே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருக்கிறோம். அதன்மூலம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழ் மொழிக்கு பாரம்பரியமும் கலாச் சாரப் பெருமையும் தரக்கூடிய மிகப் பெரிய தகுதியினை இந்திய அரசு தந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய அந்த வர லாற்றுச் சாதனையின் முழுப் பெரு மையும், பங்கும் டாக்டர் கலைஞர் அவர்களையே சாரும். தமிழைச் செம்மொழியாக்குவதில் அவரது பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த மேடையிலே நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று பாராட்டினார். இப்படி யெல்லாம் இவனுக்குப் பாராட்டுக் கிடைக்க லாமா என்ற வயிற்றெரிச்சல் காரண மாகத்தான் தேடித் தேடிப் பார்த்து கழக ஆட்சியில் நம்மால் செய்யப் பட்ட சாதனைகளையெல்லாம் மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார். அதிலே ஒன்றுதான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றுகின்ற செயலாகும்.

புரட்சிக் கவிஞர் என்ன சொன்னார்?

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டா? தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? என்ற கேள்வியை எழுப்பி, நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னு டைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை!

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண் டினை என்ன செய்யப் போகிறது? தி.மு.கழக ஆட்சியில்தான் 1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் கழக ஆட்சி நடைபெற்ற போதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதை ஏற்று, அரசு இனிமேல் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங் களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கிறது. ஏன் இன்றளவும் கழக நாளிதழ் முரசொலியின் முகப்பில் திருவள் ளுவர் ஆண்டு 2043 என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே திருவள் ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள்.

தமிழ் ஓவியா said...

டாக்டர் மு.வ. என்ன சொன்னார்?

மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண் டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்த தில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல் லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப் பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள் - என்று விளக்கியிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, தன் பேச்சுக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, சித்திரை மாதம் வான நூலையும், பருவங் களின் சுழற்சியையும் அடிப்படை யாகக் கொண்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அதற்கு விடையளிப்பது போல, சவுதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி அவர்கள் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்ட தொரு கட்டுரையில்,
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக் கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாள் பழையனவும், சோம் பலும் கழியும் போகியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண் டாடியிருக்கிறார்கள். ...... சூரியன் தென்கோடி சென்று நின்று திரும்பி நம்மையெல்லாம் நோக்கும் நாள் தான் உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் ஜனவரி 14. அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14-க்கு அதாவது தை முதல் நாளுக்கு இத் துணை சிறப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரை படிக்கும் விஞ்ஞான ஆர்வலர் கள் மற்றும் மாணவர் களுக்கு ஒரு வேண்டுகோள். இண்டர் நெட் போய் யீநசாநடடி என்று தட்டுங் கள். கட்டாயம் புத்தாண்டுக்கு தைத் திங்களே பொருத்தம் என்பீர்கள் -என்று விளக்கியிருக்கிறார்.

காழ்ப்புணர்ச்சியே காரணம்!

எனவே தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்பதை மாற்றி சித்திரை என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செயல் வழக்கம் போலவே அவரு டைய காழ்ப்புணர்ச்சி, கழக அரசு நடைமுறைப்படுத்திய செயல்களுக் கெல்லாம் ஊறு தேட முற்படுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்றே தவிர வேறல்ல!

தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான், சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா? அல்லது அதை மாற்றி சித்திரைத் திங்கள் என்று தற்போது அறிவிக்கும் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காகச் செய்கிறாரா என்பதை; பல்கலைக் கழக நூற் றாண்டு விழா மண்டபத்தை என்று மில்லாமல் இப்போது புதிதாக தி.மு.க.வினரையும் முன்னாள் முதல மைச்சரையும் ஏசிப் பேசி அரசியலுக் காகப் பயன்படுத்தியுள்ள அநாகரிகச் செயல் குறித்து ஜெயலலிதாவின் கும்பல்தான் விளக்க வேண்டும்!

அன்புள்ள,
மு.க 16-4-2012