வெடித்துக் கிளம்புகிறது கிராமங்கள்தோறும் திராவிடர் கழகப் பிரச்சாரப் பணி!
தமிழர் தலைவர் அறிவிப்பு
தருமபுரி மாவட்டத்தில் ரத்தக் காட்டேரி என்னும் பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த மூட நம்பிக்கையை முறியடிக்கும் வகையில் திராவிடர் கழகப் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிகள் தருமபுரி மாவட்டத்தில் முடுக்கி விடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
தருமபுரி மாவட்டத்தில்....
தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் ரத்தக் காட்டேரி புகுந்துவிட்டது என்றும், வீட்டுச் சாமான்கள் எல்லாம் தூக்கி எறியப்படுகின்றன என்றும், கதவுகள் படார் படார் என்று அடிக்கின்றன என்றும் திட்டமிட்ட வகையில் ஒரு மூடத்தனத்தைக் கிளப்பி விட்டுள்ளனர்.
வழக்கம்போல ஊடகங்களும் இதற்குத் தீனி போட்டு தெம்பூட்டி பாமர மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி விடுகின்றன.
ஊடகங்களின் வெட்கங் கெட்டத்தனம்!
மக்கள் மத்தியில் எந்த வகையிலும் பகுத்தறிவு வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இந்த ஊடகங்களுக்கு அளவுக்கு அதிகமான ஆர்வமும், அக்கறையும் உண்டு.
பிள்ளையார் பால் குடித்தார் என்பார்கள்; தலையில்லா முண்டம் டீ குடித்தது என்று அவிழ்த்து விடுவார்கள். திருப்பதி தாயாரம்மாவின் தாலி அறுந்து விழுந்தது - கணவர் களுக்கு ஆபத்தோ ஆபத்து என்று கூச்சல் போடுவார்கள்; காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்குள் எருமை மாடு நுழைந்துவிட்டது - ஏதோ கெட்ட சகுனம் என்பார்கள்.
ஊர் கோடி புளிய மரத்தில் பேய் என்று புரளியைக் கிளப்புவார்கள்.
ஒரே ஊரில் குழந்தைகள் அடுத்தடுத்து சாவு - பில்லி சூன்யம் வைத்துவிட்டனர் என்பர்.
இந்த ஆண்டு பிறப்பு துரதிர்ஷ்டமானது; சகோதரி களுக்குப் பச்சைப் புடவை எடுத்துக் கொடுக்கவேண்டும் என்பார்கள்.
மானங்கெட்ட வயிற்றுப் பிழைப்பு!
இப்படியெல்லாம் பீதியைக் கிளப்பிவிட்டு இவற்றிலிருந்து விடுபெற பிராயச்சித்தங்கள் செய்யவேண்டும் என்பார்கள்.
கோவிலுக்குச் செல்லுவார்கள்; நேர்த்திக் கடன் கழிப்பார்கள்; ஜோதிடர்களையும், மந்திரவாதிகளையும் தேடி ஓடுவார்கள்.
பணத்தைக் கொட்டுவார்கள் - பயத்தின் காரணமாக!
மக்களிடத்தில் மூடத்தனம் கொடிகட்டிப் பறக்கும்வரை பார்ப்பனர்களுக்கும், ஜோதிடர்களுக்கும், மந்திர வாதிகளுக்கும் கொழுத்த கொள்ளைவரும்படிதானே!
கழகத்தின் களப்பணி!
இதுபோன்ற மூடத்தனங்கள் கிளப்பி விடப்படும் பொழுதெல்லாம் களத்தில் குதித்து, மக்கள் மத்தியில் மூடத்தனங்களை எடுத்துக் காட்டி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதை ஒரு முக்கிய கடமையாகவே கழகம் செய்து வந்துள்ளது. அதன் காரணமாக, மக்கள் தெளிவு பெறுகிறார்கள். கட்டிவிடப்பட்ட மூடத்தன சமாச்சாரங்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைகின்றன.
பிரச்சாரம் சுழன்றடிக்கும்!
அதே முறையில் இப்பொழுது தருமபுரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் (மந்திரமா? தந்திரமா? உள்பட) மேற்கொள்ளப்படுகிறது.
இம்மாதம் 6, 7, 8 ஆகிய நாள்களில் இந்தப் பிரச்சாரம் புயல் வேகத்தில் முடுக்கிவிடப்படும். (ஊர்கள், பேச்சாளர் களின் விவரம் 8 ஆம் பக்கம் காண்க).
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர்கள் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளார்கள். பக்கத்து மாவட்ட மான கிருட்டினகிரி மாவட்டப் பொறுப்பாளர்களும் தேவையான ஒத்துழைப்பைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.
தொடர்பு கொள்க!
இதுபோல் வேறு எங்கு மூட நம்பிக்கை கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டாலும் உடனே தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்குமாறும் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
------------------------------- கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை” 4-4-2012
****************************************
பிரச்சாரம் நடைபெறும் நாள்கள் ஏப்ரல் 6, 7, 8
மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை
ரத்தக்காட்டேரி மூடத்தனத்தை முறி யடித்து தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் அதிரடி பிரச்சாரம்
கழகப் பேச்சாளர்கள்
1. அண்ணா சரவணன்
2. தகடூர் தமிழ்ச்செல்வி
3. ஊமை. செயராமன்
4. கிருஷ்ணன்
5. சுடர்வேந்தன் (மந்திரமா? தந்திரமா?)
பிரச்சாரம் செய்யப்படும் கிராமங்கள்
1. எட்டிமரத்துப்பட்டி
2. ஆலிவாயன் கொட்டாய்
3. ராகதோப்பு
4. பெட்டிகரை
5. மூலஅல்லி
6. அன்னசகாரம்
7. மதேமங்களம்
8. ஊங்கரஅல்லி
9. ஏமகுட்டியூர்
10. பழைய தருமபுரி
11. குண்டலப்பட்டி
12. காரிமங்கலம் பகுதி
ஒரு லட்சம் பரிசு
ரத்தக்காட்டேரியைப் பிடித்துத் தருபவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், செயலாளர் சிவாஜி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
----------------"விடுதலை” 4-4-2012
4 comments:
நெஞ்சை நிமிர வைக்கும் ஒரு கருஞ்சட்டை வீரரின் மரண சாசனம்!
என் மரண சாசனம் (இறுதி முறி)
நான் மறைவுற்ற பின்னர் என் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் இயக்கத்தவர்கள் நடத்த வேண்டிய நடைமுறைகள்.
1. உடலைக் குளிப்பாட்டக் கூடாது. நெற்றிக்குறி இட்டு அவமானப்படுத்தக்கூடாது.
2. உடலுக்கு மாலை இடலாம். உடல் அருகில் அமர்ந்து அழக்கூடாது.
3. இறுதிச் சடங்கு என்று எந்தச் சடங்கையும் செய்யக்கூடாது.
4. என் துணைவியாருக்கும், என் மறைவைத் தொடர்ந்து எந்தச் சடங்கும் செய்யக் கூடாது. அவர்களிடம் அமர்ந்து அழக்கூடாது.
5. என் உடலை எரிக்கலாம். என் மகன்கள் மூவர், மகள் ஒருவர் ஆகியோர் சேர்ந்து எரியூட்டுக. கொள்ளிச் சட்டி தூக்கக் கூடாது. பால் வைக்கக் கூடாது. கருமாதி, திதி ஆகியவை செய்யக் கூடாது.
6. பறை (அ) மேளம் அடித்தல் கூடாது.
7. உடலை குரோம்பேட்டையிலேயே எரிக்கவும். திராவிடர் கழகத் தோழர்கள் இதை மேற்பார்வையிடவும்.
8. உறவினர், நண்பர்கள், இயக்கத்தவர்களுக்கு, உரிய நேரத்தில் என் மறைவைத் தெரிவிக்கவும்.
9. ஏதேனும் ஒரு நாளில் என் படத்தை திறக்கலாம். உரியவர்களை அழைத்துப் படத் திறப்பை செய்திடுக.
10. வீடு, என் துணைவியார் வாழ்நாளுக்குப் பிறகு நான்கு மக்களுக்கும் உரியது.
11. நிலம் மூன்று மருமகள்களுக்கும் உரியது.
12. வங்கி, திராவிடன் நலநிதி இவைகளில் இருக்கும் தொகை என் துணைவியார் கட்டுப்பாட்டில் இருக்கும். பின்னர் அவர் விரும்பிய வண்ணம் என் மக்களுக்கே கொடுக்கலாம்.
13. நான் திடீரென மறைந்தால் செங்காட்டில் என் தந்தையார் புலவர் நீலகண்டனார் நினைவு பெரியார் படிப்பகத்தை கட்டி முடித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் என் மக்கள் சேர்ப்பிக்க வேண்டும்.
14. இதில் கண்ட செயல்பாடுகளைச் சிறிதளவும் பிசகாது என்னுடைய நான்கு மக்கள் 1. திரு.இராசேந்திரன், 2. திரு.ஆறுமுகம், 3. திரு.பாண்டியன், 4. திருமதி. மீனாட்சி ஆகியோரும் 5. என் துணைவியார் திருமதி. திலகவதியும் செய்யக் கடமைப் பட்டவர்கள் ஆவர்.
15. இந்த இறுதி முறி (உயில்)யின் நோக்கம் நான் இறந்தபின் அவமானப்படுத்தப்படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்கேயாகும்.
சாட்சிகள்:
1. சி.திலகவதி 2. சி.இராசேந்திரன்
3. சி.ஆறுமுகம்
4. சி.பாண்டியன்
5. சி.மீனாட்சி
இங்ஙனம்
மு.நீ.சிவராசன் 6-4-2012
இன்று போய்...
தமிழ்நாட்டில் சோலார்ப்பேட்டை, ஆம்பூர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் ஒரு வதந் தியை வழக்கம் போல மூடநம்பிக்கை வியாபாரி கள் கிளப்பி விட்டுள் ளனர்.
குறிப்பிட்ட காலத்திற் கொரு முறை இப்படியெல் லாம் கிளப்பிவிட்டு, மக்களிடத்தில் படிந்துள்ள மூடநம்பிக்கை என்னும் கோழைத்தன நெருப்பு அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஓர் ஊரில் பரவும் இந்தப் பன்றிக் காய்ச்சல் நோய் மற்ற மற்ற பகுதி களுக்கும் பரவ வேண்டும் என்பதில் மிகுந்த அக் கறையோடு இதுபோன்ற அறிவுக் கொல்லி சமாச் சாரங்களை சன்னமாகப் பரப்பி விடுவார்கள். இரண்டொரு நாளில் அந்தப் பீதி இருந்த இடம் தெரியாமல் அமுங்கிப் போய்விடும்.
வைரஸ் காய்ச்சல் மூன்று நாள் இருக்கும் என்பதுபோலத்தான் இதுவும் உண்மையிலே ரத்தக் காட்டேரி புளிய மரத்துப் பேய், தலை யில்லா முண்டம் இருப்ப தனால் தொடர்ந்து அவை நடமாடிக் கொண்டுதானே இருக்க வேண்டும்; ஏன் இரண் டொரு நாளில் கதையை முடித்துக் கொள்ள வேண்டும்?
காரணம் வேறு ஒன் றும் இல்லை. கெட்டிக் காரன் புளுகே எட்டு நாள் என்று வரம்பு வைத் துள்ளார்கள். இந்தப் புளுகு எத்தனை நாள் தாங்கும்? அதனால்தான் இப்படி.
இந்த ரத்தக் காட்டேரி தமிழ்மொழி புலவர் போல் இருக்கிறது இன்று போய் நாளைவா! என் றால் இந்த ரத்தக் காட் டேரி அதைப் படித்து விட்டு அடுத்த வீட்டுக் குப் போய்விடுமாம்.
அட முட்டாளே. இன்று போ என்பது சரி, நாளை வா என்றால் அதன் பொருள் என்ன? நாளைக்கு வந்து தொந் தரவு கொடு என்று தானே பொருள்?
பக்தி வந்தால் இப்படி எல்லாம் சிந்திக்க முடி யுமா? அதுதான் புத்தி போய் விடுகிறதே!
ரத்தக் காட்டேரிக்கு தமிழ் தான் தெரியுமா? ஆங்கிலம் எல்லாம் தெரி யாதா? யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா?
மாட்டு மூத்திரத்தை யும், சாணியையும் கலந்து தட்சணை கொடுத்துக் குடிக்கும் புத்திசாலிகள் இருக்கும் வரை ரத்தக் காட்டேரி என்ன இரு தயக் காட்டேரி, கிட்னி காட்டேரி என்று கிளப்பி விடப்பட்டுக் கொண்டு தானிருக்கும் கருஞ் சட்டைகாரர்களுக்கு இன்னும் கூடுதல் வேலை - அவ்வளவுதான்.
- மயிலாடன் 7-4-2012
.
ரத்தக்காட்டேரி : திராவிடர் கழகப் பிரச்சாரம் டெக்கான் கிரானிக்கில் படப்பிடிப்பு
தருமபுரி, ஏப்.9- கடந்த சில மாதங்களாக தருமபுரியைச் சுற்றியுள்ள குண்டலப்பட்டி, மோட்டாங்குறிச்சி மற்றும் இதர கிராமங்கள் மாலை 6 மணிக்குப் பிறகு வெறிச்சோடிக் காணப் படுகின்றன. சூரியன் மறைந்த, பிறகு வெளியே சென்றால் ரத்தக் காட்டேரி தாக்கிக் கொன்று விடும் என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
வேடிக்கையாகவும், முட்டாள் தனமாகவும் தோன்றினாலும், ரத்தத்தைக் குடிக்கும் ரத்தக் காட்டேரிகள் தங்கள் கால் நடைகளைத் தாக்குவதாக நம்பும், கிராம மக்கள் அது தங்களையும் தாக்கக்கூடும் என்று நம்புகின் றனர். விநோதமான முறையில், காரணம் என்னவென்று தெரியா மலேயே அவர்களது கால்நடைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து வந்தன. மக்கள் தங்கள் வீட்டின் முன்புறத்தில் நாமம் வரைந்து வைத்து, தங்கள் வீட்டைத் தாக்க வேண்டாம் என்ற கோரிக்கையை ரத்தக் காட்டேரிக்கு எழுதி, தங்கள் வீட்டின் கதவில் ஒட்டி வைத்துள் ளனர்.
கிராமங்களில் எவரேனும் ஒரு ரத்தக்காட்டேரியைப் பிடித்துக் காட்டினால் ஒரு லட்ச ரூபாய் பரிசளிப்பதாக திராவிடர் கழக உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இது ஆர்வத்தை அளிப்பதாக உள்ளது.
இது ஒரு பெரிய ஏமாற்று வேலை. சாராயம் காய்ச்சுதல், சாராயம் கடத்தல், சாராயம் விற்றல் போன்ற சமூக விரோதச் செயல் களில் ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கால்நடைகளைக் கொன்று விட்டு, இது போன்ற வதந்தி களைப் பரப்பி வருகின்றனர் என்று பரிசு அறிவித்த ஊமை. ஜெயராமன் என்பவர் கூறுகிறார்.
நாங்கள் கூறுவதை மக்கள் நம்ப விரும்பா விட்டால் இந்தப் பரிசை அறிவித்து நாங்கள் சவால் விட்டுள்ளோம் என்று அவர் கூறி னார். (டெக்கான் கிரானிக்கல் - 9.4.2012).
குறிப்பு: கடந்த நான்கு நாட்களாக ரத்தக் காட்டேரி என்று வதந்தி பரப்பப்பட்ட தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டு, மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. 9-4-2012
மூடநம்பிக்கை வியாபாரிகள்மீது தேவை நடவடிக்கை
தருமபுரி, கிருட்டினகிரி மாவட்டங்களில் உள் கிராமப் பகுதியில் ரத்தக் காட்டேரி புகுந்ததாகப் புரளி கிளப்பப்பட்டது.
அப்பாவி மக்கள் வீட்டுக் கதவுகளில் நாமம் வரைந்தும் இன்று போய் நாளைவா! என்று தமிழில் எழுதியும் ரத்தக் காட்டேரியின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழி செய்தார்கள் என்றெல்லாம் வெட்கம் கெட்ட ஊடகங்கள் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பின.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தல்படி, அவ்விரு மாவட் டங்களிலும் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது.
பேய், பிசாசு, பூதம், மாந்திரிகம் முதலியவைபற்றிய மூடநம்பிக்கைகள் பற்றி கழகப் பிரச்சாரப் படை அக்கக்காக, ஆணி வேர் வரை சென்று பிய்த்து உதறியது. மூட நம்பிக்கையின் முதுகுத் தோலை உரித்துத் தோரணமாகத் தொங்க விட்டனர் எமது தோழர்கள். இளைஞர்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரம் பெரும் ஈர்ப்பைப் பெற்றது. பொது மக்கள்கூட சிந்திக்க ஆரம்பித்தனர். இந்தப் புயல் வேகப் பிரச்சாரத்தின் காரணமாக ரத்தக் காட்டேரி பீதி இருந்தஇடம் தெரியாமல் புஷ்வாணம் ஆயிற்று.
வழக்கத்துக்கு மாறாக டெக்கான் கிரானிக்கல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடுகள்கூட கழகப் பிரச்சாரத்தின் வலிமையை முக்கிய இடம் கொடுத்து படங்களுடன் வெளியிட்டன.
அதோடு அடங்கி விடுவார்களா விஷமிகளான - மூடநம்பிக்கையாளர்கள்? இப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிளப்பி விட்டுள்ளனர்.
வெள்ள குளம், புத்தேரி பகுதிகளில் இது கிளப்பி விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று.
இந்த மூடநம்பிக்கை விஷம விதையைத் தூவுவோர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வதந்திகளைப் பரப்பி மக்களை பீதி அடையச் செய்வது குற்றமான செயலே.
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறுகிறது (51ஹ () அதனைச் செயல்படுத்த வேண்டியது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.
பிள்ளையார் பால் குடித்தார் என்று வதந்தியைக் கிளப்பவில்லையா? அதன் முடிவு என்னவாயிற்று? தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆர்.எஸ்.எஸ். தான் அதனைக் கிளப்பி விட்டது என்பது வெளிச்சத்துக்கு வந்ததே. அதன் பின்னணியில் சந்திரா சாமியார்கள் இருந்தது அம்பலமாகி விடவில்லையா?
தமிழ்நாடு அரசில் சமூகச் சீர்திருத்தத்துறை என்ற ஒன்று உள்ளது. இந்த ஆட்சியில் அதன் நிலைப்பாடு என்ன என்பது மர்மமாகவே உள்ளது.
அந்தத் துறையைச் சார்ந்தவர்களின் குழு ஒன்று இதுபோன்ற இடங்களில் அனுப்பி வைக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அந்தக் குழுவின் சமூக ஆர்வலர்கள், மனநல மருத்துவர் (அவர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருப்பது அவசியம்) இடம் பெற வழி செய்ய வேண்டும்.
காவல்துறை உளவுப் பிரிவின் மூலமும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கான மூலம் எங்கிருந்து கிளப்பப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மக்களின் அறிவையும் பொருள்களையும், பொழு தையும் நாசப்படுத்தி, பீதியை உருவாக்குபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
மதுரை - பேரையூரில் குழி மாற்றுத் திருவிழா என்ற பேரில் குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் கொடுமை, மாவட்ட ஆட்சியர் தலையீட்டால் தடுக்கப் படவில்லையா?
கழகம் தன் பிரச்சாரத்தை ஒரு முனையில் செய்து கொண்டுதானிருக்கும்; அதே நேரத்தில் அரசின் செயல்பாடு என்பதும் முக்கியமானதே! அறிவியல் சாதனங்களான ஊடகங்கள் சற்றும் சமூகப் பொறுப் பின்றிப் பீதியைக் கிளப்பலாமா? காசுக்காக கண்டதையும் செய்யலாமோ!
பசிக்காக எதையும் சாப்பிடுவார்களா? கடைசியாக ஒன்று - ரத்தக் காட்டேரி ஒரு ஊருக்குள் புகுந்தால் வைரஸ் ஜுரம் மாதிரி மூன்று நாள்களில் கலைந்து ஓடி விடுமோ!
கழகத் தோழர்களே, எங்கெங்கெல்லாம் மூட நம்பிக்கை, தன் கொடுக்கை நீட்ட முற்படுகிறதோ, அங்கங்கெல்லாம் அதனை முளையிலேயே கிள்ளி எறிவதில் முனைப்பைக் காட்டுங்கள்!16-4-2012
Post a Comment