Search This Blog

19.4.12

சாதியொழிந்த சமுதாயத்தை நான் உள்ள போதே காண விழைகிறேன் !ஜாதியொழிந்த சமுதாயத்தை நான் உள்ளபோதே காணவிழைகிறேன்!

இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கு என்று இரண்டு மூன்று கோடி ரூபாய்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அதை யாரிடம் கொடுத்திருக்கிறார்கள்? நம்மைக் கண்டால் தொடாதே 'எட்டி நில்' என்று சொல்லி எவன் தன்னை மேல ஜாதி என்று கூறிக்கொண்டிருக்கிறானோ, அந்தப் பார்ப்பானிடமே எடுத்து வைத்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கு உண்மை அக்கறை இருக்கும் சர்க்காராக (அரசாக) இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிய பாடுபட்டு கொண்டு வரும் என்னிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? அப்படியில்லையென்றால் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரிடம் கொடுத்து தங்கள் இனத்தை முன்னேற்றிக் கொள்ளுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? இப்பொழுதும் சிலர் கூறுகிறார்களே, நம்மாட்களைவிட பிராமணர்கள் பரவாயில்லையென்று! 1956-இலும் கூட இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்களே என்றால் என்ன அர்த்தம்?

ஜாதி ஒழிந்துபோன சமுதாயத்தை நான் என் கண்ணால் பார்க்க வேண்டாமா? உங்களுக்கு வேண்டுமானால் வயது இருக்கிறது; பிறகுகூட பார்த்துக் கொள்ளலாம். நான் இன்றோ, நாளையோ என்று இருக்கிறேனே.

"பார்ப்பானே வெளியேறு என்று சொன்னால், அவர்கள் எங்கே போவது என்றா கேட்பது? இது அறிவுடைமையாகுமா? பார்ப்பான் கேட்கலாம், "எனக்கு இந்த நாட்டில் இருக்க உரிமை இருக்கிறது" என்று. அவன் கேட்பதில் அர்த்தம் உண்டு. நம் திராவிடர்கள் கேட்கலாமா? இப்படி மறைந்து மறைந்து நின்று நீங்கள் என்ன சாதித்துவிட்டீர்கள்?

நான்கைந்து உத்தியோகங்களைக் காமராசர் கொடுத்து விட்டதாலேயே அவரை ஆதரிப்பதா என்று கேட்கிறாயே?

உத்தியோகம் வேண்டுமென்று தானே நீதிக்கட்சியே தோன்றிற்று; வேறு என்ன காரணம்? பார்ப்பானுக்கு எல்லா உத்தியோகங்களும் போனதால்தானே இடஒதுக்கீடு விகிதாசார முறை நம்மவருக்கு வேண்டுமென்று நீதிக்கட்சி பாடுபட்டு வந்தது; உங்களையே நீங்கள் யோக்கியர் என்று நினைத்துக் கொண்டு எங்கள் பெயரை வைத்துக் கொண்டு எங்களையே கேலி செய்வதா? நாம் எதற்காகப் பிரிவினைக் கேட்கிறோம்? நாட்டை நாமே ஆள வேண்டும் என்பது தவிர வேறு என்ன? நீதிக்கட்சி தோன்றியபொழுது பார்ப்பானும் தான் சொன்னான். "உத்தியோகத்திற்கென ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டுமா?" என்று கேட்டான். இப்பொழுது பார்ப்பானுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? உத்தியோகம் வேண்டாமென்றால் நீ பார்ப்பான் தானே?

முன்பு ஒரு தடவை ஆகஸ்டு 15 ஆம் தேதி துக்கநாள் என்று நான் சொன்னேன். அப்பொழுது நீ நமக்குச் சுயராஜ்ஜியம் (விடுதலை) வந்தது என்று எழுதினாய்? சுயராஜ்ஜியம் வந்ததே என்ன கண்டாய்? சர்வம் பார்ப்பன மயம்தானே?

எப்படியோ இப்பொழுது காமராசர் அவர்கள் வந்தார்கள். அவர் வராவிட்டால் பார்ப்பன அடிமைகளான சுப்பிரமணியமோ, பக்தவத்சலமோ தானே முதல் மந்திரியாக வந்திருப்பார்கள்? இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு துரோகிகள், நாடகக்காரன் கண்ணாடி நகைகள் போட்டு ஏமாற்றுவது போல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆகவே நாங்கள் சாதியை எப்படியாவது ஒழிக்கத்தான் போகிறோம். நாங்கள் ஏதாவது கிளர்ச்சி ஆரம்பித்தால் இதுபோன்ற துரோகிகளைப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்டு விடுகிறார்கள்.

நாங்கள் என்ன உங்களுக்கு எதிராகவா சட்டசபைக்கு வருகிறோம் என்று சொல்கிறோம்? நாங்கள் தான் சட்டசபைக்கு வரவில்லை என்று சொல்கிறோமே? ஏன் எங்களைப்பற்றிப் பேச வேண்டும்?

கூத்தாடிக்காரன் என்னதான் மேலே ஆடினாலும், கட்டாயம் காசுவாங்க கீழே வந்துதான் ஆகவேண்டும். அதுபோல எல்லோரும் தேர்தல் அருகில் இருக்கும் பொழுது ஓட்டுப்பிச்சை கேட்க உங்களிடம் வந்தாக வேண்டும். ஆனால் நான் ஒருவன்தான் ஓட்டுப்பிச்சை கேட்க உங்களிடம் வரமாட்டேன். மற்றவர்கள் உங்களை ஏய்க்க வருவார்கள்.

புத்திசாலிகளாக இருந்து அவர்களைக் கேளுங்கள்! சட்டசபையில் இதுவரையில் யாராலே என்ன அசைக்க முடிந்தது? எந்த அளவில் இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்களான நம்மை எப்படி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? 'தமிழ்நாடு' என்று சொல்லக்கூட உரிமையில்லையே? மற்ற நாடுகளில் கலைக்காகவும், மொழிக்காகவும் தம்முடைய மந்திரிப் பதவியையும், சட்டசபை பார்லிமெண்ட் (நாடாளுமன்ற) உறுப்பினர் பதவிகளையும் ராஜிநாமா செய்து கொண்டு வரும் போது இந்த நாடு "செய்த பாவம்" இதுவரை சட்டசபை போகக்கூடாது என்று சொல்லி வந்தவர்களே எல்லோரும் சட்டசபை நுழைய வேண்டுமென்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

மனிதனுக்குச் சோற்றுக்கு வகை இல்லை; இவன் என்னென்னமோ ஆராய்ச்சி நடத்துகிறான் என்று சொல்கிறார்கள். மனிதனுக்குச் சோறு முக்கியமா? மானம் முக்கியமா?

ஜாதி ஒழியவேண்டுமானால் சாஸ்திரங்களைக் கொளுத்த வேண்டும். கடவுள்களை உடைத்துத்தள்ள வேண்டும். அதுபோலவே நமக்குச் சுதந்திரம் (விடுதலை) வேண்டுமென்றால் அரசாங்கக் கொடியைக் கொளுத்த வேண்டும். ஆயிரம், இரண்டாயிரம் பேரைக் கொலை செய்துதானே பாகிஸ்தான் ஏற்பட்டது. ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என்று சொல்லிய பொழுது ஒரு சாயபு எதிர்த்துப் பேசினானா? அப்படி பேசியிருந்தால் அவர்கள் வீட்டு வாழ்வுக்கும் சாவுக்கும் மற்ற முஸ்லிம்கள் போக மாட்டார்களே? அதை உன் கண்ணால் கண்டிருந்தும் இப்படிப்பேசினால் என்ன அர்த்தம்? "கத்தி எடு" என்று நான் சொன்னால் நீ கிண்டல் செய்கிறாய்!

நம்நாடு, சட்டசபை, பார்லிமெண்ட் (நாடாளுமன்றம்) அரசியல் மூலமாக கிடைக்கிறது என்றால் அது பேடித்தனம்;

நான் பல வருடங்களாகப் பிரசாரம் செய்து மக்களைப் பக்குவப்படுத்திக் கிளர்ச்சி செய்கிறேன். மக்களும் இந்தக் கிளர்ச்சியில் நமக்குப் பங்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று பங்கு எடுத்துக் கொள்கிறார்கள். வெற்றி பெறுகிறது. நான் சொன்னால் சரியாக நடக்கிறது.

நீ மாப்பிள்ளை போல் இருந்து திடீர் என்று செய்கிறாய்; உதைபடுகிறாய்; நீ எதில் உதை படாமல் திரும்பி வந்தாய்? நீங்களும்தான் நேருவுக்குக் கருப்புக்கொடி பிடித்தீர்கள்; ரோடு ரோலர் உருளுகிற மாதிரியல்லவா உருண்டீர்கள்! நாங்கள் ஜனாதிபதிக்கே கருப்புக்கொடி பிடித்தோமே! ஏதாவது கலவரம் நடந்ததா? அதிகாரிகள் எங்களிடம் கெஞ்சுகிறார்களே ஏன்? எங்களிடம் நீதி, நேர்மை, கட்டுப்பாடு இருக்கின்றன. உன்னிடத்தில் இல்லை. அதனால் உன்னை எங்கே கண்டாலும் சுடுகிறார்கள். நான் இதுவரை எத்தனை கிளர்ச்சிகள் நடத்தி வந்திருக்கிறேன். ஒன்றுக்காவது கோர்ட்டு (நீதிமன்றம்) வழக்கு நடத்தியிருப்பேனா? நீ கெஞ்சுகிறாயே; குணாளா, குலக்கொழுந்தே என வருணித்தும் வழக்கு வாபஸ் (திரும்ப) வாங்கவில்லை. நீ இருபதினாயிரம் ரூபாய் வசூல் செய்து வழக்கு நடத்தினாய்; அதிலேயே தெரிகிறதே உன் வீரம், தைரியம் எல்லாம்!

முதலில் ஜாதி ஒழிய வேண்டும். பிறகு நம் நாடு சுதந்திரம் பெற்றாக வேண்டும். சின்ன நாடாக இருந்தாலும் சரி; கவலையில்லை. இரண்டு கோடியைவிட இன்னும் என்ன ஒரு நாட்டுக்கு வேண்டும்? இங்கிலாந்து, போர்ச்சுக்கல் நாடுகளில் மக்கள் எண்ணிக்கை எவ்வளவு? நம்நாட்டில் இராசாக்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள்; அந்த நாடுகளில் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? புதுக்கோட்டையில், திருவாங்கூரில் எத்தனை பேர்? கொச்சியில் மக்கள் படித்து முன்னேறவில்லையா? வாழ்க்கை நடத்தவில்லையா? முற்காலத்திலாவது கண்டவன் வருவான். இப்பொழுது எவனும் வரமாட்டான்.

சிறுநாடு பாகிஸ்தானைப் பார்த்து நேரு அவர்கள் நடுங்குகிறாரே! வெட்கமில்லாமல் அய்.நா. சபையில் பிராது கொடுக்கிறாரே!

நான் காமராசர் சொல்லிக் கொடுத்து கிளர்ச்சிகள் நடத்துவதாகச் சொல்கிறார்கள். இன்றைக்குத்தான் இராமனை எரித்தேன். அன்று ஆச்சாரியார் காலத்தில் பிள்ளையாரை உடைத்தேனே? அப்பொழுது யாரைக் கேட்டு உடைத்தேன்? யாரிடத்தில் ராஜி பேசிக் கொண்டு இந்தியை அழித்தோம்? எட்டாத இடத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு அழித்தோமே! அப்பொழுது பிடித்திருந்தால் சட்டசபையல்லவா சிறையாக இருந்திருக்க வேண்டும்?

பல நாள் நடத்த இருந்த கிளர்ச்சியை ஒருநாளிலேயே வாபஸ் (திரும்ப) வாங்கிக் கொண்டேனாம். இது ஒரு பெருங்குற்றமாக எழுதுகிறார்கள் பத்திரிகையில்! கிளர்ச்சிக்கு முன் ஒரு சங்கதியைக் கூட பத்திரிகையில் போடவில்லை. இப்பொழுது மட்டும் என்ன?

சர்க்கார் குறும்புத்தனம் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்த உடனே தொடர்ந்து எரிக்குமாறு, அதுவும் இஷ்டப்பட்டால் செய்யுமாறு சொன்னேன்; கமிஷனர் (காவல்துறை ஆணையர்) கெஞ்சினார்; ஏன் தொடர்ந்து செய்ய உத்தரவு போட்டீர்கள் என்று கேட்டார். திரும்பி நானும் கேட்டேன். நாங்கள் ஒரு நாளைக்குத்தானே நடத்துவதாகச் சொன்னோம்; நீங்கள் ஏன் 15- நாட்களுக்குத் தடையுத்தரவு போட்டீர்கள் என்றேன்; "உங்களுக்காகப் போடவில்லை. சட்டசபையில் யார் யாரோ மறியல் செய்யப்போகிறார்கள். அதற்காகச் சேர்த்துப் பதினைந்து நாளுக்குப் போட்டுவிட்டேன்" என்று கமிஷன் சொன்னார்; "அப்படியானால் கூட்டம் நடத்த அனுமதி கொடுப்பீர்களா என்று ஆசிரியர் கேட்டார். "ஓ! நாளைக்கே வேண்டுமானாலும் கொடுக்கிறேன்" என்று கமிஷனர் சொன்ன உடன்தான் நான் கிளர்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று சொன்னேன். உனக்குத் தைரியம் இருந்தால் நீயும் பேசிக்கொண்டு செய்யேன்! உனக்கு இராமன் இருக்க வேண்டுமென்று எண்ணமிருந்தால் தைரியமாக மக்களிடத்தில் வந்து சொல்லேன்!

---------------------- 24.08.1956-அன்று மடுவங்கரையில் தந்தை பெரியார் சொற்பொழிவு- “விடுதலை” 04.09.1956

1 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அவசரம்

செய்தி: சிறீவில்லிபுத்தூரிலிருந்து சீறீரங்கத் திற்கு ஆண்டாள் சாத்தியபட்டு வஸ்திரங்கள் மற்றும் கிளி கொண்டு செல்லப்பட்டது. சிந்தனை: ஆண்டாளின் கிளி இத்தனை ஆண்டு காலம் உயிரோடு இருந்திருக்கிறதா? வனத்துறை மற்றும் உயிரியல் அறிவியலாளர்கள் உடனடியாகக் கூடி ஆய்வு செய்ய வேண்டிய சமாச்சாரம். அவசரம்! அவசரம்!! 19-4-2012