டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4, 5 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார்.
அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் பதவிகளில் இருந்தால் எப்படி பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய் பேசுவார்களோ அதுபோலவே பச்சையாய் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாரட்டத்தக்கதுமான காரியமாகும்.
நம் எதிரிகள் அவரை சர்க்கார்தாசர் என்று சொல்லக்கூடும். அதைப் பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை. பதவிக்கு அவர் வந்த உடன் இந்தப் பதவிக்கு நான் வந்ததின் பயனாய் என் இன மக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் - என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இதில் இருப்பேன் இல்லாவிட்டால் நான் வெளிவந்துவிடுவேன் என்று சொன்னார். அதுபோலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார்.
அவருக்கு அவருடைய வகுப்பாருடைய ஆதரவு இருக்கிறதா என்றால் அது பூஜ்ஜி யம் என்பதோடு இனத்தார் அத்தனை பேரும் தனக்கு ஆதரவளிக்கும்படியான வலிமை பொருந்திய ஸ்தாபனமும் இல்லை. இனத்தின் தக்க செல்வமோ செல்வாக்கோ துணிந்து வெளிவந்து ஆதரவளிக்கக் கூடிய ஆளுகளும் மிகக்குறைவு. 100 க்கு 99 பேர் ஏழை, கூலி தரித்திர மக்கள். இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர், உத்தியோகம் தனக்கு கிடைக்கத்தக்க விதமாக தனது வாழ்வில் பல அவதாரம் எடுக்காமலும் எதிரிகளிடம் நல்ல பேர் வாங்க - அவர்கள் மெச்சும் படி நடக்காமலும், இந்துக்களையும் இந்து மதத்தையும், இராமாயணம், மனுஸ்மிருதி முதலியவை களையும் பார்ப்பனர்களையும் பச்சையாய் வைது கண்டித்து சிலவற்றைக் கொளுத்த வேண்டும் என்றும், சிலவற்றை தீயில் கொளுத்தியும் நான் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடுகிறேன் என்றும், தேசியம் என்பது புரட்டு, தேசிய சர்க்கார் என்பது பார்ப்பன ஆட்சி, தேசிய சர்க்காரை விட இன்றுள்ள சர்க்காரே மேல் என்றும், பேசி வருகிறார். மற்றும் தேசிய சர்க்கார் ஏன் கெடுதி என்றால், எந்த சுதந்திர தேசிய சர்க்கார் வந்தாலும் அது பார்ப்பன, வர்ணாசிரம, சர்க்காராகத்தான் இருக்கும் என்றும் வெடி வெடிக்கும் மாதிரியில் பேசி, தன் இன மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டு சட்டதிட்டங்களை லட்சியம் செய்யாமல் பேசி வருகிறார்.
இவரைப் பார்ப்பனர் சபிக்கலாம், காங்கிரசுக்காரர்கள் வையலாம், தேசியம் பத்திரிகைகள் யோக்கியப் பொறுப்பில் லாமல் எழுதலாம்; மற்றும் வகுப்புப் பேரால் பதவி பெற்று பதவிக்கு போய் வகுப்பை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலத்திற்கு ஆக பதவி அனுபவிப்பவர்கள் பொறாமைப் பட்டு இந்தச் சனியன் பிடித்த டாக்டர் அம்பேத்கர் நம்ம யோக்கியதை வெளியாகும் படி நடக்கிறாரே என்று பொறாமையும் ஆத்திரமும் கொள்ளலாம். ஆனால், தோழர் அம்பேத்கர் மேற்கண்டபடி பேசுவதும் நடப்பதும் இந்த நாசமாய்ப் போன சுய மரியாதை அற்ற பார்ப்பனரல்லாத சமு தாயத்தைத் தவிர, மற்ற சமுதாயக்காரர் களின் பதவி பெற்ற எவ்வளவு தாழ்ந்த மனிதனும் செய்கிற காரியமே தவிர அம்பேத்கருக்கு மாத்திரம் புதிதல்ல. ஆனால் மற்றவர்களை விட இவர் சற்று வெளிப் படையாய் பேசுகிறார், எழுதுகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம். உதாரணமாக டாக்டர் அம்பேத்கர் சென்னை நகரசபை வரவேற்புக்கு பதில் சொல்லும்போது பேசியதை கவனிப்போம்.
ஒரு கூட்டத்தார் எனக்கு வரவேற்புக் கொடுக்க சம்மதிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஆகவே இந்த வரவேற்பைப் பெற நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் எனில் இந்த வரவேற்பு சடங்குமுறை வரவேற்பல்ல என்பதும் எனக்கு வரவேற்பு கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பவர்கள் பிடிவாதமாய் இருந்து மெஜாரிட்டியாய் இருந்து வெற்றி பெற்று எனக்குக்காட்டிய அன்பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.
அடுத்தாற்போல் தேசியப்பித்தலாட் டத்தை பட்டவர்த்தனமாக்கினார். என்ன வெனில், தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பன சர்க்கார்தானே! 1937 இல் தேசியம் வெற்றி பெற்ற 7 மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக் களுக்கும் ஓட்டு கொடுத்து அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள் தானே ஆட்சி செலுத்து வார்கள்? இது மாத்திரமா, பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப் பனத்திகளே மெஜாரிட்டியாய் வருகிறார்கள்; தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகிறார்கள். இதுமாத்திரமா தீண்டாத வகுப்பாருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்துவைக்கிற ஆள்கள் தான் வருகிறார்களே தவிர வேறு யார் வருகிறார்கள்? ஆகவே தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத்திற்கும் இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கும் இந்த உதாரணம் போதாதா என்று பேசுகிறார். இதற்குப் பார்ப்பனர்கள் தானாகட்டும் தேசியர்கள் தானாகட்டும் என்ன பதில் சொல்லக் கூடும்? நான் சென்ஸ், ரப்பிஷ் என்று குரைத்து தங்கள் அயோக்கியத் தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? சுயமரியாதை இயக்கம இல்லா விட்டால் இதெல்லாம் (இப்படி பார்ப்பனர் வெற்றிபெற்றது) கடவுள் செயல், அந்த ராத்மா கட்டளை என்று சொல்ல முடியும். இப்போது தலையைக் கவிழ்ந்துகொள்ள வேண்டியதைத் தவிர இதற்கு வேறு பதில் இல்லை.
தேசியர்களின் தன்மை இப்படி என்றால் பார்ப்பனரல்லாத கட்சியார் என்று தங்களை சொல்லிக் கொண்டு ஒரு நல்ல கொள் கையையும், பொறுப்பையும் பாழ் அடையும்படி தங்கள் சுயநலத்தையும், வயிறு வளர்ப்பையும், பட்டம் , பதவி, உத்தியோகம் முதலியவை களை மாத்திரம் வேட்டை ஆடுவதில் மூழ்கிக்கொண்டு மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவ லையற்ற அதிதீவிர சுயநலக்காரர்களுக்கும் சரியான சவுக்கடி கொடுத்து சிறிதாவது உறைக்கும்படி செய்திருக்கிறார். அதற்கு உதாரணமாக கன்னிமாரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கரின் ஆசிபெற விருந்துகொடுத்து ஏமாற்ற நினைத்த சென்னைத் தோழர் களுக்கு டாக்டர் உறுத்திய அறிவுரையை கவனித்தால் விளக்கும்.
அவர் பேசியதின் தத்துவமாவது,
பார்ப்பனரல்லாத தோழர்களே! உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே! அதில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங் கள் என்ன? அதற்கு உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன? எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கு மாறான கட்சி என்று சொல்லிக்கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பன புரோகிதம், நடவடிக்கையில் பார்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும் 2வது வகுப்பு பார்ப்பனர் மாதிரி ஆக்கிக்கொண்டு, முதலாவது வகுப்பு பார்ப்பனராக ஆக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்துகொண்டு வருவீர் களானால் நீங்கள் எந்த தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ள அருகர்கள் ஆவீர்கள்?
பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு முதலா வதும் கடைசியானதுமான கொள்கை உத்தியோகம் தானா? அல்லது உத்தி யோகத்தில் சரி பங்கு என்பது மாத்திரம் தானா? இதைத் தவிர வேறு என்ன கொள் கையை இதுவரை பின்பற்றி வந்தீர்கள்? என்பது ஆகக் கேட்டிருக்கிறார்.
மேலும் அப்படியாவது உத்தியோகம் பதவி பட்டம் ஆகியவை அக்கட்சியின் மூலம் பெற்று வாழ்ந்தீர்களே அதற்கு ஆக அக் கட்சிக்கு நீங்கள் காட்டிய நன்றி அறிதல் விஸ்வாசம் என்ன? என்பது ஆகவும் கேட்டிருக்கிறார். மேலும் மந்திரி வேலை பார்த்தவர்கள் எங்கே? சேலம் கூட்டத் திற்குப் போனீர்களா? அல்லது நிர்வாகசபை கூட்டங்களில் ஏதாவது ஒன்றுக்கு போனீர் களா? மந்திரிகளின் காரியதரிசிகளாய் இருந்து மாதம் 500, 1000 மூட்டை கட்டியவர்கள் எங்கே? இவர்கள் தேர்தலுக்கு நிற்பது, தேர்தலுக்கு பேசுவது தவிர வேறு ஏதாவது பொதுக் கூட்டம் கூட்டி இருப் பீர்களா அல்லது பொதுக் கூட்டத்தில் பேசி இருப்பார்களா? இந்த மந்திரிகளும், அவர்களது காரியதரிசிகளும் சம்பளம் பெற்றது தவிர பார்ப்பனியத்தில் ஏதாவது ஒன்றை விட்டிருப்பீர்களா? விட்டிருக்கா விட்டாலும் பார்ப்பனியத்தை வளர்க்காம லாவது இருந்திருப்பீர்களா? இவை எல்லாம் நாசமாகப் போகட்டும் கட்சியின் பேரால் உத்தியோகம் பெற்ற பெரியவர்கள் யோக்கியதைதான் இப்படி என்றால், கட்சி பேரால் உத்தியோகம் பெற்ற வாலிபர்களிலாவது எவனாவது கட்சிக்கோ கட்சியில் உள்ள மற்ற மக்களுக்கோ ஏதாவது நன்மை செய்தானா என்பதும் விளங்கும்படி பேசினார்.
கட்சித் தலைவர்கள் பார்ப்பனரல்லாத கிராமத்தார்களைப் பற்றி நினைத்தார்களா? எந்தக் கிராமத்திற்காவது எந்தத் தாலுக் காவுக்காவது போய் அங்குள்ள மக்களிடம் கலந்தார்களா? கூட்டங்களுக்கு போய் பேச்சாளர்களாகப் பேசினார்களா? என் றும் தைக்கும்படி பேசினார்.
மற்றும் கட்சி வீழ்ச்சி அடைந்த பின் மந் திரிகளும் பட்டம் பெற்றவர்களும் பிள்ளை குட்டிகளுக்குப் பதவியும், உத்தி யோகமும் பெற்றவர்களும், மந்திரிகளுக்குக் காரிய தரிசியாய் இருந்து பயன் பெற்றவர்களுமான தமிழர் ஆந்திராவுக்குப் போனார்களா? இப்படிப்பட்ட ஆந்திரக்காரர் யாராவது தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய் தார்களா? அல்லது ஆந்திரர்கள் யாராவது ஆந்திராவில் ஒரு கூட்டத்தில் பேசி இருப் பார்களா? தமிழர்கள் யாராவது தமிழ் நாட்டிலோ, மலையாளத்திலோ ஒரு பேச்சு பேசி இருப்பார்களா? என்றும் பொருள்பட அறைந்தார். பதவி அடைந்து பட்டம் பெற்று பணம் சம்பாதித்துக் கொண்டு மேலும் மேலே போக ஆசைப்பட்டு வலை வீசிக்கொண்டு அலையும் நீங்கள், உங்கள் நன்றிமறந்த தன்மைக்கும், கவலையற்ற தன்மைக்கும் வெட்கப்படாமல் வருத்தப்படாமல், ஓய்வொ ழிச்சல் இல்லாமல் ஏதோ ஒரு சிறிதாவது வேலை செய்து கொண்டு இருக்கிறவர் களையும், அதுபோன்ற கட்சித் தலை வனையும் குற்றம் கூறி வீரம் பேசுவதை கட்சி வேலை என்று கருதுகிறீர்களே இது ஒழுங்கா?
மற்றக் கட்சிகளைப் பாருங்கள், அக் கட்சித் தலைவர்களின் தன்மையைப் பாருங்கள். கட்சியின் மக்களை, பின்பற்று வோரைப் பாருங்கள். உங்களைப் போன்று குறைகூறித் திரியும் ஆள்கள் அங்கு எதிலாவது யாராவது இருக்கிறார்களா? என்றும் விளாசி இருக்கிறார். உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டி பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள் அதனாலேயே உங்களுக்கு செல்வாக்கில்லை இப்படியே இருந்தால் இனியும் நீங்கள் என்றென்றும் உருப்படமாட்டீர்கள் என்றும் எச்சரிக்கையான அறிவுரை பகர்ந் திருக்கிறார்.
விருந்து நடத்தியவர்கள் இவ்வளவு அடியையும், இடியையும் பெற்றுக்கொண்டு டாக்டர் அம்பேத்கருக்கு நன்றி செலுத்தி விட்டு, நாங்கள் தலைவரிடம் முழு நம்பிக் கையுடனும் பக்தி விசுவாசத்துடனும் தலைவர் கட்டளைக்கு மறுமொழி கூறா மலும்தான் நடந்து கொள்ளுகிறோம் அதுதான் எங்கள் கட்சி சம்பிரதாயம் ஆனால் ஜனநாயகம் வேண்டும் என்று தான் சொல் லுகிறோம் என்று பதில் சொன்னார்களாம். அதுவும் யார் சொன்னார்கள் என்றால் சேலம் மாநாட்டுக்கு வந்து பெரியாரைத் தவிர உலகம் முழுவதும் தேடியும் வேறு தலைவர் கிடைக்கவில்லை. நான் ஒரு காலத்தில் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்த சர். சண்முகம் செட்டியார் முதலியவர்கள் கட்சிக்கு துரோகிகளாகவும், வஞ்சகர் களாகவும் ஆகிவிட்டார்கள். ஆதலால் பெரியாரே எங்கள் நிரந்தரத் தலைவர். அவரை நாங்கள் என்றும் பின்பற்றுவோம். அவரே லெனின்; அவரே மார்க்ஸ்; அவரே திராவிட நாட்டுக்கு பிரசிடெண்டு என்று கூறி மக்கள் கைதட்டுதலைப் பெற்றுக் கொண்டு பிழைத்தேன் என்று சொல்லிக் கொண்டு ஓடினவர்களும் ஊருக்கு இரண்டு மைல் தூரத்தில் போலிஸ் பந்தோபஸ்தை வைத்து தங்கள் ஆளுகளைத் தவிர, வேறு யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வேலைக்காரர்கள் உட்பட 20, 30 பேர்கள் இருந்து கொண்டு ஏதோ பேசி எதையோ எழுதிக் கொண்டு நாங்கள் தலைவரை நீக்கிவிட்டோம்; வேறு தலைவரை நியமித்து விட்டோம் என்று வெளிப்படுத்தின மூன்றே முக்கால் பேர்வழிகள் தான் இந்த ஜனநாயகம் பேசியிருக்கிறார்கள்.
அது ஒருபுறமிருக்கட்டும். இவைகளி லிருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு தைரியசாலி என்பதும் மனதில் உள்ளதை தைரியமாய்ப் பேசுகிறவர் என்பதும், அவரது பொது வாழ்வு பட்டத்திற்கோ பதவிக்கோ பண சேகரிப்புக்கோ, விளம்பரத்திற்கோ அல்லாமல் ஒரு பொது இலட்சியத்திற்கு என்பதும் நன்றாய் விளங்கும்படி நடந்து வந்திருப்பதோடு சென்னைக்கு வந்ததிலும் அப்படியே நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் நன்றாய் விளங்கும்.
இதே சந்தர்ப்பத்தில் நம் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத தலைவர்கள் பிரமுகர்கள் மந்திரிகள், மந்திரிகளின் காரியதரிசிகள், மந்திரிகளுடன் சுற்றித் திரிந்து கொண்டு பயன்பெற்றும், பதவி பெற்றும், வயிற்றுப் பிழைப்பும் வாழ்க்கை நடத்திக்கொண்டும் இருந்த மக்களின் யோக்கியதையையும் நினைத்துப் பாருங்கள்.
------------------ "குடிஅரசு" தலையங்கம் - 30.09.1944
1 comments:
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில்...
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1891) இந்நாளில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும், கூட்டங்கள் நடத்தப்படும் - இவை நடந்தப்பட வேண்டியவைதான் - மக்கள் தலைவர் இந்த மாமேதை என்ற எண்ணம் இளைஞர்களும் பரவலாகத் தெரிந்து கொள்ள இவை ஒரு வகையில் தேவைப்படுபவையே!
அதே நேரத்தில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இருபெரும் தலைவர்கள் இந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் தேவைப்படுகிறார்கள்? ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் சவால்களைச் சந்திக்க இவர்களின் வழிகாட்டுதல்கள் எப்படி எல்லாம் தேவைப்படுகின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும். இவற்றின் அடிப்படையில் செயல்படவுமான உணர்வுகள் தேவைப்படும் தருணம் இது.
மண்ணுக்குச் சுதந்திரம் கிடைத்தால் போதுமா? மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டாமா என்று கேட்டவர் தந்தை பெரியார். பிறவியின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஜாதியை பாதுகாக்கும் ஓர் அரசமைப்புச் சட்டத்தை வைத்துக் கொண்டு, சுதந்திரம் பேசுவது சிறுபிள்ளைத்தனம் அல்லவா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் - சமத்துவம் இருக்குமா? சமத்துவம், சுதந்திரம் நிலவ வேண்டுமானால் ஜாதி இருக்கலாமா? ஜாதியை ஒழிக்காத அரசியல் சட்டம் நமக்கு எதற்கு? ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி பல்லாயிரக்கணக் கான தொண் டர்கள் சிறை போகும் ஒரு நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார். அரசமைப்புச் சட்டத்தை நான் தான் உருவாக்கினேன் என்றாலும் அதனைக் கொளுத்துவதில் நானே முதல் ஆளாக இருப்பவன் என்று நாடாளு மன்றத்திலேயே பகிரங்கரமாக அறிவித்தவர் அண்ணல் அம்பேத்கர்.
பெரியாரியல்வாதிகளும், அம்பேத்கரியல்வாதிகளும் இந்தத் திசையிலே இணைந்து போராட கடமைப் பட்டுள்ளனர்.
ஒரு பக்கத்தில் அரசியல் முகமூடி அணிந்து கொண்டு இந்துத்துவா ஆட்சியைக் கொண்டுவர உயர்ஜாதி பார்ப்பனர் கூட்டம் திட்டமிட்டு வேலை செய்கிறது.
பி.ஜே.பி.யையோ அதன் பரிவாரங்களையோ எதிர்ப்பது முறியடிப்பது என்பது அரசியல் நோக்கத்தால் அல்ல.
அவர்கள் கட்டிக் காக்க விரும்பும் இந்துமதம் என்பது சமத்துவத்துக்கு எதிரானது; பிறவியின் அடிப்படையி லான பேதங்களை நிலை நிறுத்துவது; பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதுதான்.
புத்த நெறியை, அம்பேத்கர் தழுவினாலும் அதனை இந்துமதப் பட்டியலின் கீழ்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ளது.
தந்தை பெரியார் நாத்திகம் பேசினாலும் அவரையும் இந்து மதத்தின் பட்டியலில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ளது என்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கண்ணி வெடிகளைத் தெரிந்து கொள்ளலாம்.
ராமன் பாலம் என்று சொல்லி புராதனச் சின்னத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற போர்வையில் ராமன் வருணாசிரமத் தன்மையை அமைப்பை இன்னொரு வகையில் நிலை நிறுத்தப் பார்க்கிறது ஒரு கூட்டம். இதில் சரியான பார்வை நம் மக்களுக்குத் தேவை.
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களில் உள்ஒதுக்கீடு தேவை என்றால் அதனை எதிர்க்கிறது ஒரு கூட்டம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் சமூக நிலையும், பிரச்சினையும் உயர்தட்டுப் பெண்களின் வாழ்க்கை நிலையும், பிரச்சினையும் ஒன்றுதானா?
தனித் தொகுதி முறை வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதற்கான காரணம் இந்தப் பிரச்சினையிலும் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகத்துக்கு இருந்து வரும்பார்வையும், பொறுப்பும்; ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பைச் சார்ந்தவர்களுக்கேகூட இல்லாதது வருந்தத்தக்கது.
இடஒதுக்கீடு என்பதுசட்ட ரீதியாக உண்டு என்றா லும் அதில்கூட நம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்று கிறார்கள்?
இந்தியாவில் 8120 கல்லூரிகளும் 1239 பல்கலைக் கழகங்களும் உள்ளன. மூன்று லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றும் இந்நிறுவனங்களில் சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கிடைத்திருக்க வேண்டிய இடங்கள் (22.5ரூ) 67,500; ஆனால் கிடைத் திருப்பதோ வெறும் 17 ஆயிரம் இடங்கள். மீதி 50 ஆயிரம் இடங்கள் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் விழிப்புணர்வு ஓகோ என்று உயர்ந்து நிற்கிறது என்று பேசிக் கொள்கிறோம்.
ஆனால், நமக்குள்ள உரிமைகளை நாம் பெற்றுக் கொள்ளக்கூட முடியாத நிலையில்தான் இருக்கிறோம் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்று சேரும்போதுதான் நமது உரிமையை மீட்கும் பலம் நமக்குக் கிடைக்க முடியும். இதுதான் பெரியார் அம்பேத்கர் நமக்கு காட்டிச் சென்ற வழிகூட!
அண்ணல் பிறந்த நாளில் சிந்திப்போமாக, செயல் படுவோமாக! 15-4-2012
Post a Comment