Search This Blog

6.4.12

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா? - பெரியார்

திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கைகளை விளக்கத் தவறும்.

இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக்களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக்குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட்டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங்களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமையாததாக இருக்கின்றது.

--------------------01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசாரக் குழு பயிற்சிப் பாசறையில் நடத்திய வகுப்பின் உரைத் தொகுப்பு. - ”குடிஅரசு” - சொற்பொழிவு - 03.05.1947

****************************

திராவிடம் - திராவிடர் என்பது...

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டி ருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும்.

எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4ஆம், 5ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டு மிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர் களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப் படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறி யாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால் தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

----------------09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு -குடிஅரசு” - சொற்பொழிவு - 14.07.1945

10 comments:

தமிழ் ஓவியா said...

தேவை பெரியார் கொள்கை இந்தியாவுக்கு உலகில் குழந்தைத் திருமணங்கள் 40 விழுக்காடு பாரத புண்ணிய பூமியான இந்தியாவில்தான்!


புதுடில்லி, ஏப்.6: டில்லியில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்குத் திருமணம் செய்யப்படும் வாய்ப்பே இல்லை. ஆனால் ஜார்கண்ட் மாநிலத் தில் இது சர்வசாதாரணமாக நடை பெறுகிறது. குழந்தைத் திருமணங்கள் பெருமளவில் இந்தியாவில் குறைந்திருப் பது, தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வெற்றி பெற்றதையே காட் டுகிறது. பெண் குழந்தைகளின் திருமண வயதை உயர்த்தவேண்டும் என்று, பார்ப் பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே யும், அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார் என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

டில்லியின் சாதனை

டில்லியில் 2010 ஆம் ஆண்டில் 18 வயதுக்கு உள்பட்ட பெண்கள் திரு மணங்கள் 0.5 விழுக்காடு மட்டுமே நடந்துள்ளன. அரியானாவில் 0.7 விழுக்காடும், ஜம்மு காஷ்மீரில் 0.09 விழுக்காடும் நடந்துள்ளன. மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு மாதிரி பதிவு நடைமுறை பொதுப் பதிவாளர் அனுப்பியுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதிக அளவில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணங்கள் ஜார்கண்டிலும் (13%) ராஜஸ்தானிலும் (10.1%), மேற்கு வங்கத்திலும் (8.2%) 2010இல் நடந்துள்ளன.

இந்தியப் பெண்களின் சராசரி திருமண வயது 21. 18 வயதுக்கும் குறை வான வயதில் திருமணமாகும் பெண்கள் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக (6%) உள்ளனர். நகர்ப்புறங் களில் இது 2.4% ஆக உள்ளது. 2001 முதல் 2010 முடிய 18 வயதுக்குள் திருமணம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 61ரூ குறைந்துள்ளது.

(12.7% லிருந்து 5% ). 2001 இல் 10ரூ க்கும் மேலாக 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணங்கள் 8 மாநிலங் களில் பதிவாகியுள்ளன. ஆனால் 2010 இல் ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் என்ற இரு மாநிலங்களில் மட்டும் இவ்வாறான 18 வயதுக்குட்பட்ட பெண் களின் திருமணம் பதிவாகியுள்ளது.

2001-இல் நடந்த 18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணங்கள் பல மாநிலங்களில் 2010 இல் பெரும் அளவு குறைந்துள்ளது. ஆந்திரா 12.7ரூ லிருந்து 4% அசாம் 11.7 லிருந்து 3.4.%, கர்நாடகா 15.8% லிருந்து 3.6ரூ மத்திய பிரதேசம் 25.3% லிருந்து 4% மற்றும் கேரளா 3.5ரூ லிருந்து 2.2ரூ என்ற அளவில் குறைந்துள்ளன.

ராஜஸ்தானும் காஷ்மீரும்

21 வயதுக்கு மேல் பெண்களுக்கு திருமணம் செய்வது தேசிய அளவில் 48.8ரூ ஆக உள்ளது. குறைந்த அள வாக 36.7ரூ ராஜஸ்தானிலும், அதிக அளவாக ஜம்மு காஷ்மீரிலும் 81.7ரூ உள்ளது கிராமப் பகுதிகளில் 18 முதல் 20 வயதுக்குள் பாதி அளவு பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுகின் றனர். நகர்ப்புறங்களில் இது மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது.

குறைந்த வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வதில் உள்ள மிகப் பெரிய பிரச்சினை அவர்கள் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வதுதான். 2012 ஆண்டுக்கான யுனிசிப் வெளியிட்ட உலக குழந்தைகள் நிலை பற்றிய அறிக்கை, இந்தியாவில் உள்ள 20- 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 22ரூ 18 வயதுக்கு முன் குழந்தை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கிறது.

40 விழுக்காடு இந்தியாவில்

உலகத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் 40ரூ இன்னமும் இந்தியாவில்தான் நடப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலகம் முழுமையிலும் 20-24 வயதுப்பிரிவில் உள்ள 6 கோடி பெண்கள் 18 வயதுக்கும் முன்பு திருமணம் செய்து வைக்கப் பட்டவர்கள் . குழந்தை மணப்பெண்கள் அவர்களின் உடல்நிலை முதிர்ச்சி அடையும் முன்னரே குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. 6-4-2012

தமிழ் ஓவியா said...

தேசியக் கட்சிகளின் பரிதாப நிலை!


ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமை பற்றியதாகும்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் கூட நதி நீர்ப் பிரச்சினைகள் உண்டு என்றாலும், இந்த அளவுக்குக் குழப்பமும், முரண்பாடுகளும், கால விரயமும் கிடையவே கிடையாது.

அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கங்கை நதிநீர்ப் பிரச்சினையில் இந்தியா வுக்கும் வங்கதேசத்துக்குமிடையிலான சிக்கல் சில மணி நேரங்களில் தீர்வு காணப்பட்டதே! அதே போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நதிநீர்ப் பிரச்சினையுண்டு. அவை எல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்படும்பொழுது, இங்கு ஏன் இயலவில்லை என்ற வினாவை? எழுப்பினார். பாரத புண்ணிய பூமி என்றும், இந்திய தேசியம் என்றும் கண்ணில் ஒத்திக் கொண்டு பேசிக் கொண்டு இருக்கும் நாட்டில், உள்நாட்டு நதி நீர்ப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால், இந்திய தேசியம் என்பதன் பொருள்தான் என்ன?

ஒப்பந்தங்கள் என்று எதற்காகப் போடப் படுகின்றன? சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அறிவு நாணயத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்கான நாகரிக ஏற்பாடுதானே அது? அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது அடாவடித்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

தனி மனிதன் தவறு செய்தாலே குற்றம், தண்டனை என்கிறபோது, ஓர் அரசே தவறு செய்யும் போது, தண்டனை என்ன?

காவிரி நீர்ப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையானாலும் சரி, முறையே கருநாடக, கேரள அரசுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உதாசீனப் படுத்தியுள்ளனவே.

நீதிமன்றத் தீர்ப்புகளைத் தனிமனிதன் மீறினால்தான் தண்டனையா? அரசுகள் மீறினால் கண்டுகொள்ளமாட்டார்களா? இந்தப் போக்கால் நாளடைவில் தனி மனிதனே நீதி மன்றத்தை மதிக்கும் போக்கில் மாற்றம் வந்துவிடுமே!

இதில் மத்திய அரசு நடந்து கொள்ளும் போக்கு பொறுப்பானதாக இல்லை. மத்திய அரசு என்ற சொல் லுக்கு என்னதான் பொருள்? பொது நிலையிலிருந்து பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு இல்லையா? அதனைச் செய்யாத பட்சத்தில் அது எப்படி மத்திய அரசாகும்?

சம்பந்தப்பட்ட மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது? குறிப்பிட்ட கால கட்டத்தில் தேர்தல் வர இருக்கிறதா என்று அக்கம் பக்கம் பார்த்து, தந்திரமாக மத்திய அரசு நடந்து கொண்டால், அந்த நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின் நிலை என்னவாகும்?

இதில் இன்னொரு நகைச்சுவை - வேடிக்கை -தேசிய கட்சிகளின் சிந்தனையும் செயல்பாடுகளும்; காங்கிரசாகட்டும், பி.ஜே.பி.யாகட்டும், இடதுசாரிகளா கட்டும் இவை எல்லாம் அகில இந்திய தேசியக் கட்சிகள்தானே! இவர்களுக்கு அகில இந்திய பொதுப் பார்வையும், கண்ணோட்டமும் தானே இருக்க வேண்டும்? அப்படி இருக்கிறதா?

காவிரி நதிநீர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, இக் கட்சிகளுக்கு அகில இந்திய கண்ணோட்டம் - தேசியக் கண்ணோட்டம் இருப்பதில்லை. மாநிலக் கண்ணோட்டத்துடன்தான் வெறித்தனமாக நடந்து கொள்கின்றன.

காவிரி நீர்ப் பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பிரச்சினை யானாலும் சரி, வேறு வேறாக - எதிர் மறையாக, இந்த அகில இந்தியக் கட்சிகள் முடிவு எடுப்பது ஏன்?

நாடாளுமன்றத்தில் கூட இந்தத் தேசிய கட்சிகள் தங்கள் தங்கள் மாநிலத்திற்காகத்தானே குரல் கொடுக்கின்றன! அந்த நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரிந்துதானே போர்க்குரல் கொடுக் கின்றன. இது மட்டும் பிரிவினை இல்லையா?

பிரிவினை என்பதற்கு இந்தத் தேசியக் கட்சிகள் வைத்திருக்கும் அளவுகோல்தான் என்ன?
திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் அகில இந்திய கட்சியல்ல - அரசியல் கட்சியும் அல்ல. அதே நேரத்தில் நாணயமான முறையில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் போராடுகிறது.

அதன் வீச்சுதான் வரும் 11-ஆம் தேதி நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டம்?
அணி திரள்வீர்!

ஆர்ப்பாட்டம் செய்வீர்! 6-4-2012

தமிழ் ஓவியா said...

தருமபுரி, கிருட்டினகிரி, மாவட்ட கிராமங்களில் ரத்தக் காட்டேரியா?


உண்மைநிலை கண்டறியும் பெரியார் இயக்கத்தின் களப்பணி மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி!

-வீ.குமரேசன் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.

தருமபுரி மாவட்டத்தில் ரத்தக் காட்டேரியா? வெடித்துக் கிளம்புகிறது கிராமங்கள் தோறும் திராவிடர் கழகப் பிரச்சாரப் பணி எனும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் (4.4.2012) விடுத்த அறிக்கையினை அடுத்து முன் னோட்ட பிரச்சாரப் பணியாக, கிராமங்களில் நிலவும் உண்மை நிலையினைக் கண்டறியும் பணியினை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் 5.4.2012 அன்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் மேற்கொண்டது.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவரின் அறிவுறுத்தலக்கிணங்க பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் மற்றும் வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஆ.வெங்க டேசன், தருமபுரிக்கு காலை வந்தடைந்தனர். பகுத்தறி வாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர்கள் தகடூர் தமிழ்ச்செல்வி, அண்ணாசரவணன், தருமபுரி மாவட்ட தலைவர் ஊமைஜெயராமன், செயலாளர் இர.கிருட்டிண மூர்த்தி மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் குழுவாக சந்தித்து சுற்றுப்புற கிராமங்களில் நிலவும் ரத்தக்காட்டேரி புரளி பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அறிவியலுக்கு புறம்பாக பாமர மக்களிடம் பரவியுள்ள ரத்தக் காட்டேரிபற்றிய மூடநம்பிக்கை முறியடிப்புப் பிரச்சாரப் பணியாக தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக உடனடி பரிசு ரூ.1லட்சம்! தருமபுரி, கிருட்டிணகிரி, திருப்பத் தூர், வேலூர் மாவட்டங்களில் உலா வருவதாக சொல்லப்படும். ரத்தக் காட்டேரியை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு உடனடியாக பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனும் துண்டுப்பிரசுரத்தினை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரின் முகவரி மற்றும் கைப்பேசி எண்ணுடன் அச்சடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு எனும் முழக்கத் துடன் தந்தை பெரியார், தமிழர் தலைவரின் படங்க ளோடு தயாராகின.

தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் அரசமைப்புச்சட்டம் வலியுறுத்தும் பகுத்தறிவு பிரச்சாரம் பற்றிய தெரிவிப்பு

தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கும் பணியினை தொடங்கும் பிரச்சாரத்தினை அரசினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவரின் இல்ல அலுவலகத்திற்கு (விடுமுறை நாள் என்பதால்) உண்மை கண்டறியும் குழுவினர், சென் றனர். சென்னையிலிருந்து வருகை தந்திருந்த வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்ந்திடும் உயர்மட்டக் குழுவினருடன், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆர்.லில்லி, அய்.ஏ.எஸ்., அவர்கள் அண்டைய கிராமங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் பா.அருண் அவர்களிடம், பெரியார் இயக்க பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியினை கழகப் பொறுப்பாளர்கள் விளக்கினர். அறிவியல் விளக்கத் துடன் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சார அறிக்கை வெளி வந்த விடுதலை நாளிதழ் (4.4.2012) மற்றும் இயக்க வெளியீடுகளான பேய், பில்லி, சூனியம், ஆவி, சோதிட, மோசடிகள், ஆர்.ஜி. இங்கர்சாலின் பேய், பூதம் பிசாசு அல்லது ஆவிகள் மற்றும் இதர புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவரின் பார்வைக்கு வழங்கினர். ரத்தக்காட்டேரி எனும் மூடநம்பிக்கையினை எதிர்த்து, அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திடும் பணியினை சமுதாயப் பொறுப்புடன் ஆற்றிடும் பெரியார் இயக்கத்தின் உடனடி தொடர் பிரச்சாரம் தொடர்ந்து மூன்று நாள்கள், (ஏப்ரல் 6,7 மற்றும் 8) மூடநம்பிக்கை உலவிவரும் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் செய்தியினை மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரிவித்துப் பணியினைத் துவக்கினார்.

தருமபுரி பேருந்து நிலையத்தில் பம்பரமாய் சுழலும் கருஞ்சட்டை பிரச்சாரப் படையினர்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து நேராக தருமபுரி பி.ஆர்.இராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் உண்மை நிலை கண்டறியும் குழுவினர் வந்திறங்கினர். கருப்புச் சட்டை யினர் களம் இறங்கிய சில நிமிடங்களிலேயே பேருந்து நிலைய பயணிகள் அனைவரின் கவனத்தையும் பகுத் தறிவுப் பிரச்சாரப் படை ஈர்த்தது. நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தோர், சுற்றுப்புற கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் அமர்ந்திருந்த மக்கள், பேருந்து களிலிருந்து வந்திறங்கும் நிலையில் இருந்த பயணியர்கள், குறிப்பாக மகளிரிடம் ரத்தக் காட்டேரியை பிடித்துத் தருபவர்களுக்கு உடனடி பரிசு ரூ.1 லட்சம்! எனும் பிரசுரம் வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்திலும் பிரசுரம் வழங்கப்பட்டது. பிரசுரம் வழங்கப்பட்ட நிலையில், பயணிகளிடம் ரத்தக்காட்டேரி பற்றிய செய்தியினை பொது மக்களிடம் பிரச்சாரப் படை யினர் கேட்டதற்கு அவர்கள் கூறிய நறுக்குத் தெரிந்தாற் போன்ற பதில்கள்இதோ:

கே.சரவணன் எனும் பயணி இது டுபாக்கூர்கள் பன்னும் புரளி; அதை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்றார். ரத்தக்காட்டேரி இருந்தால்தானே பிடிக்கி றதுக்கு எனும் வெளிப்பாடுடன் ஒரு பெண்மணி. வருவான் வடிவேலன் பொறியில் கல்லூரிப் பேருந்தி லிருந்து இறங்கிய சீருடையணிந்த மாணவியரிடம் பகுத்தறிவு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்த கடத்தூர் கிராம மாதையன் துண்டுப் பிரச்சாரத்தினை பெற்றுக்கொண்டு, நான் கடவுள் பக்தி உள்ளவன்தான். ஆனால் ரத்தக் காட்டேரி உலா என்று சொல்வதெல்லாம் டூப் என பளிச்சென்று குறிப்பிட்டார்.
பேருந்து நிலையத்தில் பிரச்சாரப் படையினர் இருந்ததோ பதினைந்து நிமிடங்கள்தான். மொத்த பேருந்து நிலையமே பகுத்தறிவுப் பிரச்சாரத்தாக்கு தலுக்கு ஆளானது.

தமிழ் ஓவியா said...

பெரியார் இயக்கத்தினர் பெருமை கொள்ளும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி. பொதுவாக துண்டுப்பிரசுரம் பொது இடங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொழுது, அதை படித்துவிட்டு, அல்லது படிக்காமலே கீழே போட்டுவிடும் வழக்கம் அனைவரும் கவனித்ததே. ஆனால் பெரியார் இயக்கப் பிரசுரத்தை பெற்ற ஒருவர் கூட அதை படித்த பின்னர் கீழே போடவே இல்லை. செய்தியினை படித்துவிட்டு உடன் இருப்பவர் களிடம் உரையாடிய காட்சிகள்தான் கண்களில் தென் பட்டன. மாற்றுக் கருத்து கொண்டவர்களும், மதிக்கத் தக்க அளவில் பெரியார் இயக்கப் பிரச்சாரத்தின் வெளிப்பாடாய் இருந்தது பேருந்து நிலையத்தில் பதினைந்து நிமிட பகுத்தறிவுப் பிரச்சாரப் படையினரின் பணி.

பேருந்து நிலையத்தை அடுத்து தருமபுரி பெரியார் மன்றத்தில், தந்தை பெரியாரின் சிலைக்கு முன்பாக இருந்த சுற்றுப்புற கடையினருக்கும், அந்தப் பகுதியில் சாலையில் வந்து செல்பவர்களுக்கும் பிரச்சாரத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. ஆட்டோவில் சென்று கொண் டிருந்த தமிழ்நாடு ஆதி திராவிடர் சங்க நிறுவனர் கவிஞர். அன்புதீபன் உடனே இறங்கி பிரச்சாரப் படை யினைப் பாராட்டியதோடு, தானும் தொடர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிட உறுதியளித்தார். பெரியார் சிலை அமைந்துள்ள இடம் போக்குவரத்து வளைவு உள்ள மக்கள் நெரிசல் உள்ள பகுதியாகும். அந்த வழியாக வந்த பேருந்துகளை ஒரு நிமிடம் நிற்கவேண்டி கருஞ்சட்டைப் படையினர் வேண்டிக் கொண்டதும், ஓட்டுநர், நடத்துனர் மகிழ்ச்சியுடன் பேருந்தை நிறுத்தி, பேருந்தில் உள்ள பயணியர் அனைவரிடமும் துண்டு பிரசுரத்தை முழுவதும் அளிக்கும் வரை பொறுமையாக இருந்தது வியப்பும், மகிழ்ச்சியும் அளித்தது. நின்று கொண்டிருக்கும் பேருந் தில் பிரசுரம் கொடுக்க தடுத்திடும் நிலையில், பேருந்தை நிறுத்தி பிரசுரம் கொடுக்க மகிழ்ச்சியுடன் ஒத்துழைத்து, பெரியார் இயக்கம் என்பது கருப்புச் சட்டை அணிந்தவர் களுடன் முடிவதில்லை. அதற்கு அப்பாலும் பரந்துபட்டது என தமிழர் தலைவர் அடிக்கடி, கண்ணுக்குத் தெரியாத கருப்புச் சட்டை அணியாத பெரியாரின் கொள்கை யாளர்கள் எனக் குறிப்பிடுவதை நினைவுபடுத்தியது.

ரத்தக்காட்டேரி பற்றிய மறுப்பு உணர்வு இருந்தும் எதிர்ப்பு உணர்வு இல்லாத அளே தருமபுரி கிராமத் தில்....

பெரியார் மன்றப் பகுதியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு, இரத்தக் காட்டேரி வருகிறது என வீட்டுக் கதவுகளில் நாமம் போடப்பட்டு, இன்று போய் நாளை வா என எழுதப்பட்ட வீடுகள் நிறைந்திருந்த, அளே தருமபுரி (பழைய தருமபுரி) கிராமத்திற்குள் சென்றனர். வாக னங்கள் கிராமத்துக்குள் வருவதை ஒருவித எதிர்ப் பார்ப்புடன் கிராம மக்கள் நோக்கினர். உடனே பிரச்சாரப் பணி ஆரம்பமாகியது. கிராம நிலையிலும், மக்களின் மூடநம்பிக்கை செயல் பற்றிய உண்மை கண்டறியப்பட்டது. அங்கு சந்தித்த மக்களின் கருத்துகள் இதோ.

தமிழ் ஓவியா said...

எம்.சமரசம் தேனீர் விடுதி உரிமையாளர், எங்கள் வீட்டில் நாமம் போடவில்லை. சின்னப் பிள்ளைகள் செய்த வேலை இது. நாங்கள் இது போன்ற பொய்களை நம்புவதில்லை. மந்திரவாதிகளிடம் நாங்கள் எப்பொழுதும் சென்றதில்லை என்றார். ரேவதி எனும் பெண்மணி, எல்லோரது வீடுகளிலும் நாமம் போட்டார்கள், எங்கள் வீட்டிலும் போட்டோம் என எதார்த்தமாகக் கூறினர்.

புளி வியாபரம் செய்யும் பட்டதாரி மாதையன் கூறு கையில், ரத்தக் காட்டேரி உலா எனும் வேலை நீண்ட நாட்களுக்கு விலை போகாது. சாயம் வெளுத்து விடும் என்றார். விமலன் எனும் அளே தருமபுரி வாசி, பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகி பயந்த நிலையில் உள்ளனர். இத்தகைய மூடதனத்தை இலகுவாக நம்பிவிடுகின்றனர். உண்மையில் ரத்தக்காட்டேரி எப்படி இருக்க முடியும்? என கருத்துத் தெரிவித்தார். புளியிலிருந்து கொட்டை களை பிரித்தெடுக்கும் வேலை செய்துகொண்டிருந்த 63 வயதான வேடியம்மாளின் வெடிக் கருத்து:
ரத்தக் காட்டேரி என்று எதுவுமில்லை.

எந்த வீடேறியும் அது வரவுமில்லை

என அடைமொழியுடன் குறிப்பிட்டார். பகுத்தறிவுக் கருத்துகள் பாமர மக்களிடமும் இலக்கிய நயத்துடன் இலங்கும் நிலைமை தெரிந்தது. பின் ஏன் இந்த ரத்தக் காட்டேரி பீதி. பெரும்பாலான வீடுகளில் உள்ள நாமம், ஒரே நபரால் போடப்பட்டது என்பது அதில் உள்ள வண்ணங்கள், நாமம் ஒரே மாதிரி உள்ள நிலைமைகள் மூலம் தெரிய வந்தது. ரத்தக்காட்டேரி பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களும், ஊரோடு ஒத்தப்போக நினைத்து தங்கள் வீட்டுக் கதவுகளிலும் நாமம் போட அனுமதித்து உள்ளனர்.

மேலும் சில விபரங்கள் கூடுதலாக நினைத்துப் பார்க்க வைத்தன. கிளப்பிவிடப்பட்ட ரத்தக் காட்டேரி செய்தி யால் மக்கள் இரவு நேரங்களில் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வருவதில்லை. இது வெளியிடத்தில் சமூக இழிவுச்செயல் மற்றும் ஒழுக்கக் கேடு செய் வோருக்கு சாதகமாக உள்ள நிலைமைகள் தெரிய வந்தன. திருட்டுச் செயலுக்கும் வழி வகுத்திடும் நிலைமைகள் இருப்பது தெரிய வந்தது. உள்ள உறுதிப்பாடு இருந்தாலும், எதிர்த்துப் பேசிட துணிவு இல்லாமலே ரத்தக் காட்டேரி பற்றிய மூடநம்பிக்கைக்கு பெரும்பாலானோர் இருந்தனர். அவர்களுக்குப் பெரியார் இயக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரப் படையின் பணி புதிய தெம்பையும், உண்மையில் மகிழ்ச்சியையும் அளித்தது என்றே சொல்ல வேண்டும். அளே தருமபுரி கிராமத்தினைச் சார்ந்த விடுதலை வாசகர் ஆசிரியர் தி.செல்வக்குமாரும் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டனர்.

அடுத்து கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டி ணத்தை நோக்கிக் கிளம்பியது பகுத்தறிவுப் பிரச்சார மற்றும் உண்மைநிலை கண்டறியும் படை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழ் நாளிதழ் செய்தி ஊடகங்கள் பல, கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப் பட்டிணம் அருகில் கால்வாஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சோலையன் கொட்டாய் கிராமத்தில் ரத்தக் காட்டேரியால் ஆடு மாடுகள் பலி எனும் செய்தியினை வெளியிட்டிருந்தன.

ரத்தக்காட்டேரியால் கால்நடைகள் இறந்தாக பீதி கிளப்பப்பட்ட சோலையன் கொட்டாய் கிராமத்தில்....

உண்மை நிலையினைக் கண்டறியும் விதமாக சோலையன் கொட்டாய் கிராமத்திற்கு பகுத்தறிவுப் பிரச்சாரப் படையினர் சென்றனர். காவேரி பட்டிணத்தி லிருந்து 7 கி.மீ., தொலைவில் முறையான பாதை வசதி கள் இல்லாத மலையடி கிராமமே சோலையன் கொட் டாய் கிராமம். குழுவினர் கிராமத்திற்கு சென்ற பொழுது இரவு 7 மணி, மின்வெட்டு காரணமாக மின் வெளிச்சம் இல்லாத நிலையில் கிராமத்தில் மொத்தம் 25 குடும் பத்தைச் சார்ந்த, ஆண், பெண் குழந்தைகள் உள்பட மிகுந்த பாதிப்பும், பயமும் கொண்டு இருளில் குழுமி ருந்தனர்.

தமிழ் ஓவியா said...

சமுதாய விழிப்புணர்வு இன்றி கிருட்டிணகிரி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கிராம மக்களை மின்வெட்டு காரணமாக இருட்டிலேயே சந்தித்ததனர். பகுத்தறிவுப் பரச்சாரக் குழுவினர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் உள்ள பெரியார் இயக்கத்தினை சார்ந்தவர்கள் நாங்கள் எனும் முன்னுரையோடு உண்மை அறியும் குழுவினர் அவர்களுடன் கலந்துறவாடினர். கிராமத் தின் சார்பாக கால்நடைகளை இழந்து பாதிப்பிற்கு உள்ளான சீனிவாசன், சிவாஜி, சிவலிங்கம், கோவிந் தன், சின்னையன், வேட்ராயன் ஆகியோர் நடந்தவற்றை எடுத்துச் சொன்னார்கள்.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 4ஆம் நாள் வரை 13 பால் மாடுகள், 3 வெள்ளாடுகள், காரணம் தெரியாமல் திடீரென்று இறந்துவிட்டன. 2 ஆடுகளைக் காண வில்லை. குழிதண்ணீர் தொட்டியில் குடித்த சில நிமிடங்களில் மாடுகள் இறந்தன. கால்நடை மருத்து வர்கள் மருத்துவம் பார்த்தும் காப்பாற்ற முடியவில்லை. சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இறந்த மாடுகளின் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் வந்தும் சரியான விளக்கம் தெரியவில்லை. நிவாரணமும் வழங்கப்பட வில்லை எனத் தெரிவித்தனர். உண்மை நிலை என்ன வென்றால், காரணம் தெரியாமல் , கால்நடை இறப்பு, அதனால் மனச்சோர்வு, பயம் கடந்த நிலையில் கிராம மக்களிடம், இந்த நிகழ்வுகளுக்கு ரத்தக் காட்டேரிதான் காரணம் எனும் செய்தி கசியவிடப்பட்டுள்ளது. வீடுகளில் பட்டை நாமம், இன்றுபோய் நாளை வா எனும் சொற்றொடர் பதிப்பு நடைபெற்றுள்ளது.

விசாரித்ததில், மனிதர் குடிக்கத் தண்ணீர் கிடைப்பது கஷ்டமாக உள்ள நிலையில் குழிதண்ணீர் தொட்டியை அன்றாடம் கழுவாமல், பழைய தண்ணீரிலேயே புதிய உணவையும் சேர்ந்து பசுமாட்டை குடிக்க வைத்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

விளக்கம் சொல்லப்பட முடியாத வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு பசு மாடுகள், ஆடுகள் இறந்துள்ளன எனும் செய்தியும் உள்ளது. அறிவியல் அடிப்படையில் பரிசோதனை உண்மைகள் வரும் வரை கால்நடை இறப்புக்கான காரணம் பற்றி முடிவுக்கு வரவேண்டாம் என விளக்கமாக உண்மை அறியும் குழுவினர் எடுத்துச் சொன்னார்கள். நிவாரணம் கிடைப்பதற்கு உரிய அதிகாரிகளை கிராம மக்கள் முறையாக ஒட்டுமொத்தமாக சந்திக்க அறிவுறுத்தினர். பாதிப்பிற்கு உள்ளான அவர்களை மூடநம்பிக்கையான ரத்தக் காட்டேரி எனும் பெயரால் எப்படி கபளீகரம் செய்கின்றனர் என்பதற்கு சோலையன் கொட்டாய் கிராமம் சரியான சாட்சியாக இருக்கிறது. பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு இரவு ஒன்பது மணிக்கு கிராமத்தை விட்டு வெளியேறும் வேளையில் மின் இணைப்பு கிடைத்து விளக்குகள் எரிந்தன.

ரத்த காட்டேரி பீதிக்கு மக்களின் அறியாமை, செய்தி ஊடகங்களின் செயல்பாடுகளுமே காரணம்!

மூடநம்பிக்கை இருளில் கிராம மக்களுக்கு பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. ஊடகங்களில் பெரிது படுத்தப்பட்ட ரத்தக் காட்டேரி பற்றி செய்தி மக்களது உள்ளங்களில் உறுதிப்படாத, பற்றற்ற நிலையி லேயே நிலவிய உண்மை விளங்கியது. அடுத்தவர் செய்கின்றார்; நாம் செய்யாவிட்டால் எப்படி? எனும் பயம் கடந்த மனோநிலை, உள்ளத்தில் உறுதி இருந்தாலும் வெளிப்படையாக எதிர்ப்புக் காட்ட இயலாத மக்களின் நிலை,இப்படி நிலவிய கிராம மக்களது சமூகச் சூழ்நிலையில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை அறிவியல் மனப்பான்மையுடன் மேற்க்கொண்டதில் மக்கள் கருத்துத் தெளிவு பெற்றனர். இன்று முதல் மூன்று நாள்களுக்கு (ஏப்ரல் 6, 7, 8) இந்த கிராமங்களில் நடக்கும் ரத்தக்காட்டேரி பற்றிய திராவிடர் கழகம் மேற்கொள்ளும் மூடநம்பிக்கை ஒழிப்பு தொடர்பிரச்சாரம் மூலம் மக்கள் மேலும் தெளிவடைவார்கள்.

இந்த உண்மைநிலை புரியாமல் பெரியார் இயக்கத் தினை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்களைக் கொச்சைப்படுத்தி, தமிழர்களை கலக்கும் ரத்தக்காட்டேரி என செய்திகளை வெளியிடும் தமிழ் இன எதிர்ப்பு செய்தி ஊடகங்கள் மற்றும் தமிழர் இன துரோக செய்தி ஊடகங்களின் நிலைமை தோலுரித்துக் காட்டப்பட்டது. தமிழர் தலைவரின் விடுதலை இதழ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊடகங்களின் வெட்கங் கெட்டதனம் பாமர மக்களை பகடைக் காய்களாக பயன் படுத்திக் கொண்டு இருக்கிறது அவர்களிடம் பகுத்தறிவு சுடர் ஏந்தும் பணியினை பெரியார் இயக்கம் தான் தொடர்ந்து செய்தது; செய்கிறது. இனிவரும் காலங்களில் செய்திடும்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ள வெடித்துக் கிளம்புகின்ற கிராமங்கள்தோறும் திராவிடர் கழகப் பிரச்சாரப் பணி சுழன்றடிக்கிறது.

வளரட்டும் பகுத்தறிவுச் சிந்தனை மக்களிடம்! வெல்லெட்டும் பெரியார்தம் கொள்கைகள்!
தொடர்ந்திடுக பெரியார் இயக்கப் தொடர் பிரச்சாரப்பணிகள்!

கிருஷ்ணகிரி மாவட்ட கால்வாஹள்ளி ஊராட்சி சோலையன் கொட்டாய் கிராமத்தில் உண்மை நிலை கண்டறியும் குழுவினர்

தருமபுரி பேருந்துநிலையத்தில் கல்லூரி மாணவியர் களிடம் சுழன்றடிக்கும் பகுத்தறிவுப் பிரச்சாரம்
6-4-2012

தமிழ் ஓவியா said...

நெஞ்சை நிமிர வைக்கும் ஒரு கருஞ்சட்டை வீரரின் மரண சாசனம்!


என் மரண சாசனம் (இறுதி முறி)

நான் மறைவுற்ற பின்னர் என் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் இயக்கத்தவர்கள் நடத்த வேண்டிய நடைமுறைகள்.

1. உடலைக் குளிப்பாட்டக் கூடாது. நெற்றிக்குறி இட்டு அவமானப்படுத்தக்கூடாது.

2. உடலுக்கு மாலை இடலாம். உடல் அருகில் அமர்ந்து அழக்கூடாது.

3. இறுதிச் சடங்கு என்று எந்தச் சடங்கையும் செய்யக்கூடாது.

4. என் துணைவியாருக்கும், என் மறைவைத் தொடர்ந்து எந்தச் சடங்கும் செய்யக் கூடாது. அவர்களிடம் அமர்ந்து அழக்கூடாது.

5. என் உடலை எரிக்கலாம். என் மகன்கள் மூவர், மகள் ஒருவர் ஆகியோர் சேர்ந்து எரியூட்டுக. கொள்ளிச் சட்டி தூக்கக் கூடாது. பால் வைக்கக் கூடாது. கருமாதி, திதி ஆகியவை செய்யக் கூடாது.

6. பறை (அ) மேளம் அடித்தல் கூடாது.

7. உடலை குரோம்பேட்டையிலேயே எரிக்கவும். திராவிடர் கழகத் தோழர்கள் இதை மேற்பார்வையிடவும்.

8. உறவினர், நண்பர்கள், இயக்கத்தவர்களுக்கு, உரிய நேரத்தில் என் மறைவைத் தெரிவிக்கவும்.

9. ஏதேனும் ஒரு நாளில் என் படத்தை திறக்கலாம். உரியவர்களை அழைத்துப் படத் திறப்பை செய்திடுக.

10. வீடு, என் துணைவியார் வாழ்நாளுக்குப் பிறகு நான்கு மக்களுக்கும் உரியது.

11. நிலம் மூன்று மருமகள்களுக்கும் உரியது.

12. வங்கி, திராவிடன் நலநிதி இவைகளில் இருக்கும் தொகை என் துணைவியார் கட்டுப்பாட்டில் இருக்கும். பின்னர் அவர் விரும்பிய வண்ணம் என் மக்களுக்கே கொடுக்கலாம்.

13. நான் திடீரென மறைந்தால் செங்காட்டில் என் தந்தையார் புலவர் நீலகண்டனார் நினைவு பெரியார் படிப்பகத்தை கட்டி முடித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் என் மக்கள் சேர்ப்பிக்க வேண்டும்.

14. இதில் கண்ட செயல்பாடுகளைச் சிறிதளவும் பிசகாது என்னுடைய நான்கு மக்கள் 1. திரு.இராசேந்திரன், 2. திரு.ஆறுமுகம், 3. திரு.பாண்டியன், 4. திருமதி. மீனாட்சி ஆகியோரும் 5. என் துணைவியார் திருமதி. திலகவதியும் செய்யக் கடமைப் பட்டவர்கள் ஆவர்.

15. இந்த இறுதி முறி (உயில்)யின் நோக்கம் நான் இறந்தபின் அவமானப்படுத்தப்படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்கேயாகும்.

சாட்சிகள்:

1. சி.திலகவதி 2. சி.இராசேந்திரன்
3. சி.ஆறுமுகம்
4. சி.பாண்டியன்
5. சி.மீனாட்சி


இங்ஙனம்
மு.நீ.சிவராசன் 6-4-2012

Seeni said...

nalla pakirvu!