Search This Blog

3.4.12

சேது சமுத்திரத் திட்டம்-காவிரி நீர்ப் பிரச்சினை - ஈழத் தமிழர் வாழ்வுரிமை தனி ஈழமே தீர்வு

  • சேது சமுத்திரத் திட்டம்

  • ஈழத் தமிழர் வாழ்வுரிமை

  • காவிரி நீர்ப் பிரச்சினைகளை வலியுறுத்தி

ஏப்ரல் 11 அன்று அரசு மாவட்டங்களில் திராவிடர் கழகம் போராட்டம்!

தலைமைச் செயற்குழு தீர்மானம்



தமிழ்நாட்டின் முக்கிய உரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அனைத்து அரசு மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.

இன்று காலை சென்னை - பெரியார் திடல் துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானங்கள்:

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


தீர்மானம் (2) : தொடர் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டோருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் பாராட்டு

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - உரிமைக் காப்புத் தொடர்ப் பிரச்சாரப் பயணத்தில் பங்கு கொண்டு சிறப் பாகப் பேசி தம் கடமையை பாராட்டும் வகையில் ஆற்றிய கழகச் சொற்பொழிவாளர்கள், மந்திரமா, தந்திரமா கலைஞர்கள் ஆகியோருக்கும் - இக்கூட்டங்களை அரும்பாடுபட்டு நேர்த்தியாக ஏற்பாடுகளைச் செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், பேராதரவு காட்டிய பொது மக்களுக்கும் இச்செயற்குழு தமது பாராட்டுதலையும், நன்றியறிதலையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் (3) : தனி ஈழமே தீர்வு

ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் 24 நாடுகள் அளித்த ஆதரவின் அடிப்படையில், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத அரசால் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதற்கு எந்தவித ஒத்துழைப்பையும் அளிக்கப்போவதில்லை என்று இறுமாப்புடன் கருத்துத் தெரிவித்து வருவதோடு உலக நாடுகளை அவமதிக்கும் வகையில் ஆணவமாகப் பேசி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் இலங்கை அரசு அமைப்புக்கும் இச்செயற்குழு தம் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த நிலையில் தனி ஈழம் ஒன்றுதான் நிலையான இறுதித் தீர்வு என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த (24-3-2012) திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் கருத் துகளை வரவேற்று, இப் பிரச்சினையில் அடுத்த கட்ட நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கழகத் தலை வர் அவர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் (4) : சேதுசமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துக

தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டதைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகம் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளது; பல போராட்டங்களையும், தொடர் பிரச்சாரத்தையும் நடத்தியும் உள்ளது.

கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, உரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் திட்டங் களையும், கருத்தினையும், வழிகாட்டுதலையும் ஏற்று நல்வாய்ப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் (தி.மு.க.) கப்பல் துறை அமைச்சராக இருந்த நிலையில், பணிகள் விரைவாக மேற்கொள்ளப் பட்டும், இன்னும் 22 கி.மீட்டர் தூரம் அளவுக்கே மணல் வாரும் பணி முடிக்கப்பட வேண்டிய கால கட்டத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி ஆகியோர் உச்சநீதி மன்றம் சென்று திட்டத்தின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை யினைப் பெற்று, தமிழின விரோதப் பணியில் ஈடுபட் டுள்ளனர்.

ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, பெரும்பாலான அளவு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், வேறு மார்க்கத்தில் இத் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி சிந்திக்குமாறு உச்ச நீதி மன்றம் வழி காட்டுவதும், மத்திய அரசும் அதற்கேற்ற வகையில் செயல்பட முயற்சிப்பதும், சரியான செயல்பாடாக இருக்க முடியாது என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நிலையில், அறிவியல் அடிப்படையிலான தொழில் நுட்ப முறையில் பி.ஜே.பி. ஆட்சியின் போதே முடிவு செய்யப்பட்ட வழித்தடத்தைத் தவிர்த்து, புராண இதிகாச மூடநம்பிக்கைக் காரணங்களின் அடிப்படையில் மக்கள் நலம் சார்ந்த ஒரு திட்டத்தை முடக்குவது, அரசு ஏற்றுக் கொண்டுள்ள மதச்சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும் 51 ஹ- () விரோதமானது என்பதை செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. மேலும் அண்ணாவின் பெயரையும், திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டுள்ள அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள், அண்ணாவின் கொள்கைக்கு எதிராக, ராமன் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் கண்டிக்கப் படத்தக்கதாகும். பெரியார், அண்ணா மற்றும் திராவிடர் இயக்கக் கொள்கைக்கு விரோதமானதும் ஆகும்.

திராவிடர் இயக்க சிந்தனையாளர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும், மதச் சார்பற்ற கொள்கை யில் நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க வேண்டும் என்றும், இத்திசையில் பிரதமருக்குத் தந்திகளை அனுப்ப வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை (28-3-2012) காலத் தால் மேற்கொள்ளப்பட்ட கடமை உணர்வு மிகுந்த ஒன்றாகும்.

மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையிலும் அஇ அதிமுக பொதுச்செயலாளர் மேற்கொண்டுள்ள முடிவு அண்ணா அவர்களின் கொள்கைக்கு எதிராகப் போவதை சுட்டிக் காட்டும் தன்மையிலும், சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டத்தை ஏற்கெனவே நீரி நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் உருவாக்கிக்கொடுத்த அந்த 6 ஆவது நீர்வழித் தடத்திலேயே விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், முதற் கட்டமாக மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கையை கழகப்பொதுக் குழுவைக்கூட்டி முடிவு எடுப்பது என்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது. சேது சமுத்திரத்திட்டம் அமலாக்கம், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் காவிரி நீரில் தமிழர் களுக்குரிய உரிமை மீட்பு (காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை அரசு கெசட்டில் வெளியிடுவது) இவற்றை வலியுறுத்தி 11.4.2012 அன்று அரசு மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் (5) : விலைவாசி உயர்வுக்குக் காரணமான கட்டண உயர்வுகளை ரத்து செய்க!

பேருந்துக்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இவற்றின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மக் களின் அடிப்படைத்தேவையான மின்சாரத்தின் கட்டணத் தையும் உயர்த்தியதன் மூலம் விலைவாசி உயர்வு என்னும் கடும் தாக்குதலுக்குப் பொதுமக்கள் ஆளாகி யுள்ளனர். மின் கட்டண உயர்வால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எல்லாம் மிகக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து பொதுமக்கள் காப்பாற்றப்பட, ஏற்றப்பட்ட கட்டணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அதே போல பெட்ரோல், டீசல் விலைகளை அடிக்கடி உயர்த்துவதன் மூலம், பொது மக்களின் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்கும் வகையில் நிரந்தரத் தீர்வைக் காணுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் (6) : (அ) வேலூர் பெண்கள் மாநாடு

வேலூரில் புத்துலகப் பெண்கள் மாநாட்டினை வரும் மே மாதம் 19 ஆம் தேதி முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் வகையில் எழுச்சியுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

27-4-2012 அன்று நாகர்கோவிலிலும், மே 7ஆம் தேதி சிதம்பரத்திலும் வட்டார மாநாட்டினை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(ஆ) பெரியாரியல் பயிற்சி முகாம்

ஏப்ரல் 7,8 ஆகிய நாட்களில் ஜெயங்கொண்டத்திலும், மே 5,6 ஆகிய நாள்களில் திருமருகலிலும் மே 12,13 ஆகிய நாள் களில் சிவகங்கையிலும், பெரியாரியல் பயிற்சி முகாம்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
--------------------"விடுதலை” 3-4-2012

14 comments:

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


மந்திரியின் மாத சம்பளம்

ஆந்திர மாநில முதல் அமைச்சருக்கு மாதச் சம்பளம் ரூ.2.35 லட்சம்.

ஆந்திர மாநில முதல் அமைச்சராக இருக்கக் கூடிய கிரண்குமார் ரெட்டி முதல் அமைச்சருக்கு மாத சம்பளம் ரூ.41,500-லிருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரம்வரை என்று உயர்த்திக் கொள்ளும் சட்ட திருத்தத்தை நிறை வேற்றிக் கொண்டுள்ளார். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் புசியும் என்ற பழமொழிப்படி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அரசு கொறடாவுக்கும் சம்பளம் எகிறிப் பாய்ந்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு இதனால் அரசுக்கு இழப்பு ரூ.25 கோடிதான்.

நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ள மக்கள் இந்தியாவில் 77 சதவிகிதம் என்கிற நிலையில் முதல் அமைச்சருக்கு மாத சம்பளம் ரூ.2.35 லட்சம் என்றால் இதற்குப் பெயர்தான் மக்க ளாட்சியா? நல்லாட்சியா?

இந்தியாவில் வளம் கொழிக்க வேண்டும் என் றால் அமைச்சராக இருக்க வேண்டும் அல்லது கிரிக் கெட் விளையாட்டுக்காரராக இருக்க வேண்டும். கிரிக் கெட் விளையாட்டிலும் பார்ப் பனராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் புகழும் விளம்பரமும் அதன் மூலம் பணமும் கொட்டும். இலவச திருமணங்கள்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச திருமணங்கள் இனி திருமலையில் மட்டுமே நடை பெறும்.

என்ன காரணமாம்? மாநில அளவில் கோவில் களில் இலவச திருமணங் களை நடத்துவதால் திருப் பதி தேவஸ்தானத்துக்கு அதிக செலவாகிறதாம்.

இந்தியாவில் உள்ள பெரிய முதலாளிகளுள் இந் தத் திருப்பதி கல் முதலாளி யும் முக்கியமானவர். மக் களின் அறியாமை காரண மாக சுரண்டப்படும் பணத்தை அம்மக்களுக்காகச் செல வழித்தால் என்ன? குடியா முழுகிப் போகும்? குத்துக்கல் லாக அடித்து வைக்கப்பட்ட ஏழுமலையானுக்கு என்ன தேவை இருக்கிறது? பார்ப் பன பெருச்சாளிகள் வயிற் றில் அறுத்துக் கட்டப்படு வதைத் தவிர வேறு பயன் தான் என்ன?

மாஞ்சா கயிறு

பட்டம் பறக்க விடுவது என்பது தமிழ் நாட்டில் நீண்ட காலமாக ஒரு வகையான விளை யாட்டுதான். ஆனால் இப்பொழுது அது உயிர்க் கொல்லியாக மாறி விட்டது. காரணம் பட்டத்தைப் பறக்கவிடும் அந்த நூல் கயிறு தயாரிக்கும் முறை யாகும். மயில் துத்தம், கண் ணாடித் தூள்கள், வஜ்ரம், வண்ணப் பொடிகள் உள் ளிட்ட பொருள்களின் கலவை யால் இந்த நூல் தயாரிக் கப்படுவதால் பட்டம் அறுந்து விழும்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கிக் கொள்கிறார்கள்.

காயத்தோடு போய் விடுவதில்லை; உயிரையும் பலி வாங்குவது தான் இதன் சோகம்!

ஆண்டு ஒன் றுக்குச் சென்னை யில் மட்டும் மாஞ்சா கயிறு பட் டத்தால் பாதிப் புக்கு ஆளாவோர் சராசரி யாக 50 என்றும், இதில் மரணம் அடைவோர் இருவர் என்றும் புள்ளி விவரம் கூறுகிறது.

மதுரவாயலில் நேற்று ஓர் இளைஞர் மாஞ்சா கயிறு பட்டத்தின் காரணமாக மரண மடைந்துள்ளார்.

பட்டம் விடக் கூடாது என்று காவல்துறை அவ்வப் போது கூறுகிறது. அத்தோடு சரி, அதனைத் தடுக்கத் தீவிரம் காட்டாததுதான், இந்தப் பலிகளுக்குக் கார ணம். மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவா?

இதற்குப்பிறகாவது எச்சரிக்கை என்பதைக் காற் றோடு பறக்க விடாமல், கண்டிப்பாக இருக்குமா காவல்துறை? பட்டம் விட் டால் என்ன தண்டனை என் பதைப் பட்டாங்கமாக மக்க ளுக்குத் தெரிவிக்க வேண் டும். ஊடகங்களிலும் விளம் பரப்படுத்த வேண்டும் - செய்வார்களா?

கிரிக்கெட்(டு)

நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. சச்சின் டெண் டுல்கர் நூறாவது சதம் அடித் ததுதான் பெரிய மிக பிரச் சினை இந்த ஊடகங்களுக்கு. இந்த நூறு சதம் அடிப்ப தற்கு ஓர் ஆண்டு முழுவதும் வீணடித்துள்ளார். ஆசியா கப் கிரிக்கெட்டில் சுண்டைக் காய்நாடான பங்களாதேசத் திடம் இந்தியா தோற்றுப் போய் விட்டது.

இதற்குக் காரணம் என்ன? சச்சின் டெண்டுல் கரை எப்பொழுதும் ஆகா ஊகா என்று தூக்கிப் பிடிக் கும் திருவாளர் சோ ராம சாமிகூட ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். சதம் அடிப்பதற்காக டெண்டுல்கர் அதிக நேரத்தையும் எடுத் துக் கொண்டார். அதிகப் பந்துகளையும் வீண்டித்தார் என்று குறிப்பிட்டுள்ளாரே.

இவர்தான் நாட்டுக் காக ஆடும் லட்சணமா? - தனக்காக ஆடுவதில்லை என்று வேறு சத்தியம் செய்கிறார்.

நல்ல அளவுக்குப் பண மழை பொழியும் விளை யாட்டாக கிரிக்கெட் ஆகி விட்டது. டெண்டுல்கர் கிரிக்கெட் மூலம் சம் பாதித்த தொகை மட்டும் ரூ.500 கோடியாம்.

விளம்பரங்கள் மூலம் அடிக்கும் கொள்ளைக்கு அளவே கிடையாது. 17 தொழில் நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளார்.

நூறாவது சதம் அடிப் பதற்காக மட்டுமே ரூ.30 கோடி வசூலாம். ஒரு விளம் பரத்திற்காக மட்டும் இவர் விளாசும் பணம் ரூ.9 முதல் 10 கோடியாம். எதி லும் பார்ப்பனர் என்றால் தனி மவுசுதான். 3-4-2012

தமிழ் ஓவியா said...

மோடியின் முகமூடி கிழிந்தது!


குஜராத் முதல் அமைச்சர் தாமோதரதாஸ் நரேந்திர மோடி மகா மகா உத்தமப்புத்திரர் - அசல் பசு நெய்யில் உருக்கி வார்க்கப்பட்ட அக்மார்க் சரக்கு என்று இங்குள்ள சோ ராமசாமிகள் தூக்கிப் பிடிப்பார்கள்.

உண்மையான புலியைவிட புலி வேடம் போட்ட மனிதன்தான் அதிகமாகக் குதிப்பான் அதுபோல பார்ப்பனர்களைவிட மோடி போன்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் வேடம் போட்ட இந்துத்துவா புலி என்பதால் கொஞ்சம் - அதிகமாகவே துள்ளுவார்கள். இப்படிப்பட்ட பேர்வழிகள் பார்ப்பனர் அல்லாதாரில் கிடைத்தால் அல்வாதுண்டு கிடைத்த மாதிரி பார்ப்பனர்களுக்கு! ஆகா ஊகா என்று உச்சியில் மகுடம் சூட்டி, காதில் பூ சுற்றிக் களேபரம் செய்து விடுவார்கள்.

தூய்மையான நிர்வாகம் அப்பழுக்கற்ற செயல்பாடு மோடியின் ஆட்சியில் என்று சொல்லுகிறவர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளது தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கை (CAG).

விதிமுறைகள், வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 22 நிறுவ னங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு நிறுவனங் களின் கணக்குகள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

அரசின் நிதி நிலையறிக்கையில் (பட்ஜெட்டில்) 19 இனங்களில் ரூ.1444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.2045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான செயல் சரியில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

முறையான விளையாட்டுக் கொள்கை வகுக் கப்படவில்லை, பயிற்சியாளர்கள் அனைவரும் நிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான விளையாட்டு விடுதிகள் செயல்படவேயில்லை. குடிநீர் கொள்கையும் சரியாக செயல்பாட்டில் இல்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம் எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. ஆற்றுநீர் தூய்மைப் படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்க வில்லை.

நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்கள் தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை.

நிருவாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங் கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட 71.8 கோடியை வருவாய்த் துறை பயன்படுத்தவேயில்லை என்கிறது தணிக்கை அறிக்கை இதற்குமேல் மோடி ஆட்சி மக்கள் நல ஆட்சியல்ல என்பதற்கு என்ன சாட்சியமும் - ஆவணங்களும் வேண்டும்?

பெரிய பெரிய தொழிற்சாலைகள் குஜராத்திற்கு வந்து குவிகின்றன என்பதில் என்ன பெருமை வாழ்கிறது? திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத தன்மைக்குப் பெயர் கையாலாகாத அரசு என்பது தான்.

கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையைப் பார்க்கும் பொழுது குஜராத் மாநிலத்தில் நிருவாகம் என்ற ஒன்று இருப்பதாகவோ, அரசு பணியாளர்கள் அங்கு தம் கடமையைச் செய்வதாகவோ தெரிய வில்லையே.

2009ஆம் ஆண்டு முதல் பெட்ரோலியம் நிறுவனம் தவறான முறையில் செயல்பட்டதால் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் தலைமைத் தணிக்கை அறிக்கை கூறுகிறது.

தலைமைத் தணிக்கை அறிக்கை என்றால் 2ஜி அலைவரிசை மட்டும்தான் நினைவுக்கு வருமா? அதாவது நட்டம் என்று சொல்லப்படும் யூகத் தொகை மக்கள் நலனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஆனால் மோடி நிருவாகம் வேறு வகையில் அல்லவா நட்டப் பட்டுள்ளது?

இந்த யோக்யதையில் உள்ள இந்த நிருவாகிதான் பிரதமர் நாற்காலியில் அமர வேண்டுமாம்.

குஜராத்தைப் போல இந்தியா முழுமையும் சிறு பான்மையினர் நசுக்கப்பட வேண்டும் என்ற நச்சு எண்ணம்தான் இதன் பின்னணியில் குடி கொண் டுள்ளது. 3-4-2012

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் கனவை அழிக்கத் துடிக்கும் ஆரியமாயை! (கலைஞர் கடிதம் 3.4.2012)

உடன்பிறப்பே,

தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு தி.மு.கழகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முயற்சி செய்து, 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி யன்று அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி மற்றும் என்னுடைய முன்னிலையிலே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மதுரைக்கே வருகை தந்து, அந்தத் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, திட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வந்த நேரத்தில், அந்தத் திட்டம் நிறை வுற்றுவிட்டால் தி.மு.கழகத்திற்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் மிக முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்திய சாதனையின் காரண மாகச் சிறப்பான பெயர் வந்துவிடும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு கூட்டம் அதனைக் கெடுக்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு, நீதிமன்றம்வரை சென்று அந்தச் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைபோடும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டது.

அவர்களின் அந்த முயற்சிக்கு அந்தக் கூட்டம் ராமர் பாலம் வழியிலே உள்ளது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் பாலத்திற்கு குந்தகம் ஏற்படும் என்று காரணம் கூறியது. அவர்களின் அந்த முயற்சிக்கு மேலும் துணை புரியும் வகையில்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் வகையில் உச்சநீதி மன்றத் தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் முயற்சி!

சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 23.7.1967 அன்று முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட் டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எழுச்சி நாள் கூட்டங்கள் நடத்த முடிவு செய்தார். அதனையொட்டி, தமிழக சட்டப் பேரவையில் அனைவருடைய ஆதர வையும் கோரினார். அப்பொழுது அண்ணா அவர்கள்,

சேது கால்வாய் திட்டம் - தூத்துக் குடி துறைமுகத் திட்டம் இரண்டும் ஒருங்கிணைந்தால் அதைத் தமிழகத்தின் `சூயஸ் கால்வாய் என்று கருதலாம். இப்போது சிலோனைச் சுற்றி கொழும்பு துறைமுகத்திற்குப்போய் கிட்டத்தட்ட 600 மைல்கள் சுற்றிக்கொண்டு வருகின்ற வெளிநாட்டுக் கப்பல்கள், இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் அந்நிலை மையை தவிர்த்துவிட இயலும்.

வெளிநாட்டுக் கப்பல்கள் - பிரமாண்ட மான கப்பல்கள் இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிற்க முடியாது. ஆழ்கடல் துறைமுகமாக இருக்குமானால் பெரிய கப்பல்கள் வர பல நாட்டுக் கப்பல்கள் வரத்தக்க பெரிய அனைத்து நாட்டுத் துறைமுகமாக மாறும். அப்படி மாறும் போது பல்வேறு வகையான தொழில்கள் கிடைக்கும். அப்படி கிடைக்குமானால் பொருளாதார வளர்ச்சி நிரம்ப ஏற்படும் என்று கூறி தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தினார்.

இந்தச் சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடைபெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,

தமிழ் ஓவியா said...

தேசிய நலனுக்காக கொண்டு வரப் படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதி மன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திர திட்டம் நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றா கும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச்சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப் பட ஏது வாகும். இந்தக் கால்வாய் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழா வுக்கு தடை கிடையாது என்று கூறி தீர்ப் பளித்தது. சேது சமுத்திரத் திட்டம் வந்துவிடக் கூடாது என்று தற்போது உள்மனதில் கெட்ட நோக்கோடு திட்டமிட்டு செய லாற்றும் அ.தி.மு.க.வினர் 2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே சேது சமுத்திரத் திட்டம் பற்றி என்ன குறிப்பிட்டார்கள் தெரியுமா?

அன்னிய முதலீடு அதிகரிக்கும்

சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக் கும். கப்பலின் பயணத் தூரம் பெரு மளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரி வடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத்தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை முக்கியத்து வத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக்கொண்டிருக்கா மல், உலக வங்கிபோன்ற சர்வதேச நிறு வனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்

தமிழ் ஓவியா said...

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை என்ன சொல்லுகிறது?

மீண்டும் 10.5.2004 அன்று வெளி யிடப்பட்ட அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக் கையில்,

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத்திட்டத்தினை நிறை வேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத் திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். என்று கூறியிருந்தார்கள். இதற்குப் பிறகுதான் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு வேக மாக நடந்து வந்த நேரத்தில், அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்ட நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் 2009ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில்-

தமிழர்களின் நீண்டகால கோரிக்கை யான சேதுக்கால்வாய் திட்டம் தமிழக முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத் தியதின் காரணமாக 2.7.2005 அன்று தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நேரத்தில் மத காரணங்களைக் காட்டி தடை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு விரைந்து முடித்து, இத் திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடித்து தமிழ்நாட்டின் தென்மாவட்ட பொருளா தார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் வழிகோல வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் 16-4-2009 அன்று, அ.தி.மு.க. சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி இறுதியாகக் கூறப் பட்டிருப்பது என்ன? அதிக வேகமும் மிக அதிக எடைகொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறனும் கொண்ட கப்பல்கள் பயணிக்கும் இன்றைய நவீன யுகத்தில், இது தற்காலத் திற்கு ஒவ்வாத திட்டம் என்ற உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. இப்போது திட்ட மிட்டுள்ளபடி இந்தக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுவ தால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அள வுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

மேலும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக் கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்றெல்லாம் அ.தி.மு.க. கூறி, இந்தத் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றார்கள். சேதுத் திட்டம் வேண்டுமென்று நாமெல்லாம் குரல் கொடுக்கின்ற நேரத்தில் - மதத்தைக் காட்டி சிலர் எதிர்க்கிறார்கள், புராணத்தைக் காட்டி எதிர்க்கிறார்கள்; கடவுளின் பெயரைச் சொல்லி, அந்தப் பாலத்தை இடித்தால் நாட்டிற்கே ஆபத்து, இந்தியாவிற்கே ஆபத்து என்றெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்; நீதி மன்றம் செல்கிறார்கள்; இன்னும் சிலர் இவர் களுக்கு ராமனைப் பிடிக்காது, ராம னுக்கு விரோதிகள், ஆகவேதான் ராமர் பாலத்தை இடிக்கத் தொடங்குகிறார்கள் என்று நம்மைப் பார்த்துச் சொல் கிறார்கள். அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

தமிழ் ஓவியா said...

வாஜ்பேயி காலத்தில்...

ராமர் பெயரால் உள்ள எதுவும் இருக் கக் கூடாது என்பதற்காகவா அந்தப் பாலம் வேண்டாமென் கிறோம். இல்லாத பாலத்தை இடிப்பதாக ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றுதான் கேட்கிறோம். இன்னும் சொல்லவேண்டுமேயானால், வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்திலேயே எங்களின் வலியுறுத் தலின் பேரில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய அரசின் சார்பாக தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சுற்றுச் சூழல் ஆய்வுப் பணியை வழங் கியது. அக்டோபர் 2002இல், அந்த நீரி நிறுவனத்தின் பரிந்துரையான ஆடம்ஸ் பிரிட்ஜ் எனப்படும் (இதைத்தான் ராமர் பாலம் என்கிறார்கள்) ஆதாம் பாலத்தை வெட்டிச் செல்லும் வழித் தடம்தான் சிறப்பானது என்று முடிவு செய்யப் பட்டது.

அ.தி.மு.க. தனது 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே பக்கம் 83-84இல், இந்திய தீப கற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக் குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேதுசமுத்திரத் திட்டம். இரட்டை வேடம் ஏன்?

இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற் கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றும் மணல் மேடுகள், பாறைகள் என் றெல்லாம் வர்ணித்து விட்டு, இப்போது திடீரென பிரதமருக்கு, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறி விக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார் என்றால் ஏன் இந்த இரட்டைவேடம் - முன்னுக்குப் பின் முரண்பாடு என்று தமிழகமக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

கூடங்குளம் அணுமின் நிலை யத்தைத் தொடங்கும்போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு, பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, அத்திட்டம் முடிவடைகின்ற நேரத்தில் அந்தத் திட்டம் கூடாது என்று எதிர்ப்பது எப்படியோ, அப்படித்தான் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டபோது வாயை மூடி மௌனமாக இருந்துவிட்டு, தற்போது பல கோடி ரூபாய்களைச் செலவழித்து முடித்து விட்ட நிலையில் ராமர் பாலம் என்ற பெயரைப் பயன்படுத்தி முட்டுக் கட்டைபோட நினைப்பது சரிதானா - தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்றது தானா - அறிவியல் ரீதியாக ஏற்புடையது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால்தான் நமது கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி சோனியா காந்தி அவர்களையும், பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் அவர்களையும் நேரில் சந்தித்து சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் முடித்திட உதவிட வேண்டு மென்று கோரிக்கை வைத்துள்ளார்கள். கழகத்தின் சார்பில் நானும் அந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆரிய மாயை

அதேநேரத்தில் ஏதாவதொரு கற் பனைக் காரணத்தை முன்வைத்து, இத்திட்டத்திற்கு ஊறுவிளைவிக்க நினைப்போர் யார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் கொள்கைக் குழப்பவாதிகளா? தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குழி தோண்டும் குதர்க்க வாதிகளா? என் செய்வது? ஆரிய மாயை - எழுதிய அண்ணாவின் கனவையே அழிக்கத் துடிக்குதே ஆரியமாயை!

அன்புள்ள,
மு.க.
நன்றி: முரசொலி 3.4.2012

தமிழ் ஓவியா said...

தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டம்!


தி.க. தலைவர் வீரமணி: சேது சமுத்திரத் திட்ட அமலாக்கம், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம், காவிரி நீரில் தமிழருக்குரிய உரிமை மீட்பு ஆகியவற்றை வலியுறுத்தி, 11ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

டவுட் தனபாலு: மற்ற கட்சிகள் எல்லாம், மின் கட்டண உயர்வு மாதிரி, சீசன் பிரச்னை களுக்காக போராட்டம் நடத்தி, மாட்டிக்கிறாங்க... நீங்கதான், சேது சமுத்திரம், தனி ஈழம், காவிரி மாதிரியா நிரந்தர பிரச்னைகளை கையிலெடுக் கறீங்க.... இந்த சாமர்த்தியம், மற்றவங்களுக்கு இல்லையே...! - தினமலர், 4.4.2012

தினமலர் திராவிடர் கழகத்தின் செயல் பாட்டைப் பாராட்டுகிறதா? கேலி செய்கிறதா?

தினமலர் சொல்கிறபடி பார்த்தாலும் சீசன் போராட்டங்களைவிட நிரந்தரப் பிரச்சினை களுக்காகப் போராடுவது முக்கியமானதும், அவசியமானதும்தானே?

நிரந்தர பிரச்சினைகளைக் கையில் எடுப்பது சாமர்த்தியம் என்று எழுதுகிறதே, இதன் பொருள் என்ன?

காலையில் வரும் ஆசிரியர் கடிதங்களைப் பெயர் மாற்றி மாலையில் தான் நடத்தும் இன்னொரு பத்திரிகையில் வெளியிடும் சாமர்த்தியம் தினமலர் மடிசஞ்சி கூட்டத்துக்கு மட்டுமே உரித்தான ஏகபோகம்!

இது மற்றவர்களுக்கு வருமா என்ன?

சேது சமுத்திரத் திட்டம், ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை என்னும் தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினைகளுக்காகப் போராடினால், பார்ப்பான் வீட்டில் எழவு விழுந்தது மாதிரிதான் - அந்த அளவுக்குத் தமிழின வெறுப்பு.

ஆனாலும், தமிழர்களிடம் ஏடுகளை விற்று மட்டும் பிழைப்பு நடத்திடவேண்டும். நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?

தமிழர்கள் பார்ப்பான் நடத்தும் பத்திரிகைகளை வாங்கு மட்டும் - இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் பார்ப்பனர்கள் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழன் தொடையிலேயே கயிறு திரித்துக் கொண்டும் இருப்பார்கள்.

தமிழர்களே, எச்சரிக்கை! 4-4-2012

தமிழ் ஓவியா said...

ஏப்ரல் 11 ஆர்ப்பாட்டம்!


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (3.4.2012) நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தின்படி தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மூன்று முக்கிய காரணங் களை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்.

1. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமாகும். நூற் றாண்டைக் கடந்துவிட்டது. அவ்வப்பொழுது இத் திட்டத்தை நிறைவேற்றுவதுபற்றிப் பேசப்பட்டுள்ளதே தவிர, செயல்பாட்டுக்கு வந்தது கிடையாது.

திராவிடர் கழகமும், தி.மு.க.வும் பல காலக் கட்டங்களில் தீர்மானங்களை வடித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றதுண்டு.
கழகம் நடத்திய பேரணிகளில் எல்லாம் இதுகுறித்த முழக்கங்களை ஒலித்ததுண்டு. கழகத்திற்கே உரித் தான சுவர் எழுத்துக்களில் சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டம் முக்கிய இடத்தைப் பெற்று வந் திருக்கிறது.

இதற்காக குமரி முதல் சென்னை வரை தொடர் பிரச்சாரப் பயணத்தையும் திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது.

கடைசியாக 2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சிக்கு வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தத் திட்டம் உண்மையிலேயே செயல்பாட்டுக்கு வருவதான முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கு முந்தைய பி.ஜே.பி. ஆட்சியிலும் இதற் கென ஒரு திட்டம் கூட வகுக்கப்பட்டது. எந்தப் பாதை யில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது என்பதற் கான ஆய்வுகளும் அப்பொழுது மேற்கொள்ளப்பட்டது. 6 ஆவது நீர்வழித் தடத்தில் இத்திட்டத்தை நிறை வேற்றலாம் என்று அப்பொழுது முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், ஏட்டளவிலேயே இத்திட்டம் முடங்கியது.

டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அமைச்சரவை யில் தி.மு.க. இருந்த நிலையில் - அதுவும் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் நல்ல வாய்ப்பால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2008 இல் அதன் வழியே உலகின் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் பயணிக்கும்; தென் மாவட்டங்கள் புத்தம் புதிய செழிப்போடு குலுங்கும் என்று ஆசையோடு இருந்த நிலையில், திடீர் ஞானோதயம் ஏற்பட்டதுபோல பி.ஜே.பி. சங் பரிவார்க் கும்பல் - ராமன் பாலத்தை உடைத்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று பொய்யான அழுக்கு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினார்கள்.

உங்கள் ஆட்சியிலே தானே அந்த வழித்தடம் இறுதி செய்யப்பட்டது! இப்பொழுது எதற்காக வேறு குரலில் பேசுகிறீர்கள்? என்ற நியாயமான கேள்விக்கு அறிவு நாணயத்தோடு பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் தரப்பிலிருந்து பதிலே இல்லை.

இதற்கிடையே சுப்பிரமணியசாமி என்னும் அக்மார்க் முத்திரைப் பார்ப்பனரும், அண்ணாவின் பெயரையும், திராவிட என்ற இனப் பண்பாட்டுச் சொல்லையும் கட்சியில் வைத்துக்கொண்டு இருக்கக் கூடிய செல்வி ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று திட்டத்தின் செயல்பாட்டை முடக்கியுள்ளனர்.

இதன்மூலம் பார்ப்பனர்கள் தமிழர்களின் முன் னேற்றத்திற்கு எப்பொழுதுமே முட்டுக்கட்டை யானவர்கள் என்பதை இன்னொரு முறை வரலாற்றில் நூறு விழுக்காடு மெய்ப்பித்துக் காட்டி விட்டனர்.

நியாயமாக இதற்கு இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கக் கூடாது. மத்திய அரசும் வலுவாக நின்று தொழில்நுட்ப ரீதியாக உறுதி செய்யப்பட்ட அந்த ஆறாவது நீர்வழித் தடத்தில் திட்டத்தை நிறைவேற்றிட முயன்றிருக்கவேண்டும்.
தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிபோல வேறு மாநிலங்களுக்கு இழைக்கப்பட்டு இருந்தால் நாடே தீப்பற்றி எரிந்திருக்கும்.

ஆனால், தமிழர்களோ எதிலும் அரசியல் எனும் தொற்றுநோய்க்கு ஆளாகி எல்லோரும் இங்கே தனித்தனிதான் என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவூட்டி நடந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் திராவிடர் கழகம் தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை நடத்தும் நிலையில் வரும் 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டங் களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்திட உள்ளது.

கழகத் தோழர்களே, தமிழ் உணர்வாளர்களை இணைத்துக்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்வீர்!
உரிமைக்குக் குரல் கொடுப்போம்; அடுத்து உரிய விலையையும் கொடுப்போம்! 4-4-2012

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம்-தேசநலத் திட்டமே!

- இரா.திலீபன் -
கண்ணந்தங்குடி கீழையூர், ஒரத்தநாடு.


வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம், இந்திய தீபகற்பம் உலகின் பெரிய நாடுகளில் ஏழாவது நாடு. வளம் நிறைந்த நாடு. கடற்பகுதி மட்டுமே 7517கி.மீ. தூரப் பரப்பளவு இருக்கிறது நம்மிடம். இந்த பரப்பளவில் மொத்தம் 13 துறைமுகங்களே இருக்கின்றன. இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும், துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்கள், அரபி கடலிலிருந்து வந்தாலும் சரி, இந்திய பெருங்கடலில் இருந்து சென் றாலும் சரி எல்லா கப்பல்களும் சிலோ னைத் தலைநகரமாகக் கொண்ட சிறீ லங்கா என்னும் தீவு நாட்டின் கட லோரத்தை சுற்றியே செல்கிறது.

உலகில் மூன்று பெரிய துறைமுகம் சீனாவின் சாங்காய் நகரத்துறைமுகம், இரண்டாவது சிங்கப்பூர், மூன்றாவது நெதர்லாந்து ரோட்டர்டாம் துறைமுகம். இதில் சிங்கப்பூர் நகரம், அதன் துறை முகத்தை கொண்டே வளர்ச்சியடைந்தது, வளர்ச்சியடைகிறது என்று கூறலாம் . கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா, ஜப்பான், தைவான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் சிங்கப்பூர் துறை முகத்தை தாண்டித் தான் செல்லுதல் வேண்டும். பூகோள ரீதியாக சிங்கப்பூர் கடல் பரப்பு அதிகம் கொண்டு மேற் கொண்ட அனைத்து நாடுகளுக்கும் இயற்கையான கடல் வழிப்பாதை அமைந்துவிட்டது. அதன் காரணமே சிங்கப்பூரை மய்ய மாகக் கொண்டு பன்னாட்டு சரக்குகள், கப்பல்கள் மூலம் மற்ற கிழக்கு நாடு களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வணிகம் புரிந்து, அதில் வரும் வரு மானத்தைக் கொண்டு ஒரு நாடே வளம் பொருந்திய நாடாக நல்ல அடித்தளம் கொண்ட கட்டுமானமாக உலக நாடு களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறது. சிங்கப்பூரின் கடற்கரைப்பரப்பு நம் இந்தியாவைவிட மிகக் குறைவே. இது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தமிழ் ஓவியா said...

ஆனால் கடல் பரப்பளவும், கடற்கரை பரப்பளவும் அதிகம் கொண்ட இந்தியாவிலோ சிங்கப்பூர், ரோட்டர்டாம் போன்ற துறைமுகங்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அய்ரோப்பா நாடு களிலிருந்தும், வளைகுடா நாடுகளிலி ருந்தும் வரும் கப்பல்கள் இந்தியாவைத் தாண்டித்தான் செல்கின்றன. அவ்வாறு செல்லும் கப்பல் யாவும் இலங்கை கடற் பரப்பை சுற்றியே இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கோ அல்லது கிழக்காசிய நாடு களுக்கோ செல்கிறது. அதுபோல் இலங் கையை சுற்றி செல்லும் கப்பல்களுக்கு 400 முதல் 470 நாட்டிக்கல் மைல் என்று சொல் லக்கூடிய கடல் மைல்கள் தொலைவு அதிகம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். ஏன் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பயணித்து செல்லலாமே? கடல்தான் இருக்கிறதே? என்று கேள்வி கள் எழ வேண்டும். ஆம், செல்லலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட தொலைவு வடக்கே இருந்து தென்கிழக்கு பகுதிக்கு இந்தியாவுக்கு இலங்கைக்கு இடையில் ஆழம் குறைவான கடல் பரப்பு இருக்கிறது. அதோடு அதே திசையில் மணல் மேடுகளும் இருக்கிறது. இந்த நிலையில் சிறிய படகுகள் செல்லலாமே தவிர, பெரிய வணிக கப்பல்கள் பயணிக்க முடியாது.

பள்ளமான பகுதியில் மண் நிரப்பி வீடு கட்டுவதுபோல மேடான பகுதில் சரிசம மாக்கி பயன்படுத்துவது மனித இயல்பு களில் ஒன்று. அதுபோல் மன்னார் வளை குடாவிலிருந்து பாக். நீரிணைப்பைத் தாண்டி வங்காள விரிகுடாவிற்கு கப்பல் கள் போக்குவரத்தை உண்டாக்க பாக் கடலில்(Palk Bay) உள்ள மணல் மேடு களை வெறும் 20 கி.மீ தொலைவு தேவையான அளவு ஆழமாக்க வேண்டும். அந்த மணல் திட்டுகளே ஆதாம் பாலம் (Adam’s Bridge). இதுவே சேது சமுத்திர கால்வாய். இந்தக் கால்வாயை உண் டாக்கி நிறைவேற்றும் வேலையே சேது சமுத்திரக் கால்வாய் திட்டம். கன்னியா குமரி வழியே தூத்துக்குடி தாண்டி தனுஷ்கோடிக்கும் மேற்கே இருக்கும் மணல் திட்டுகளை கடந்து பாக் கடல் வழியே வங்காள விரிகுடாவை அடையும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றித் திரியத் தேவை இல்லை. நேரம், பணம் ஆகிய வற்றை சேமிக்கலாம். இந்தியக் கிழக்குக் கடற்கரை துறை முகங்களில் சரக்கு போக்குவரத்து உண்டாக்கலாம். பன்னாட்டு வணிகம் பெருகும், வேலை வாய்ப்பும் பெருகும், இறக்குமதி செலவு குறைவால் விலைவாசி ஏற்றத்தை குறைக்க ஏற்பாடு செய்யலாம். தூத்துக்குடிமுதல் விசாகப்பட்டினம் வரையில் உள்ள துறைமுகங்களில் சரக்கு போக்குவரவு பெருகும், மேலும் சிறிய, பெரிய துறைமுகங்கள் கூடும்.

மீனவ நண்பர்களுக்கு வாய்ப்பாக மீன்பிடி துறைமுகங்கள் பெருகும். நேரடி வர்த்தகத்தால் அனைத்துத் துறையும் வளர்ச்சியடையும். தூத்துக்குடியில் இயங் கும் அனல்மின் நிலையத்திற்கு தேவை யான நிலக்கரியை சென்னைத் துறை முகத்திலிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்ல வருடத்திற்கு 24 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் கப்பல் நேரடியாக தூத்துகுடி துறைமுகத்திற்கு வருவதால் நிலக்கரியை கடத்தும் செலவு மிச்சம். இதுபோன்று இன்னும் பல துறைகளில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணி வரவைப் பெருக்கலாம். கால்வாய்த் திட்டத்தால் சென்னையிலிருந்து கொச்சி வரை இந்திய கடற்படையின் பெரிய கப்பல்கள் ரோந்து செல்வது தொடங்கும். இதனால் தமிழகக் கடலோர பாதுகாப்பு பெருகும். கால்வாய் இந்திய கடல் எல்லை வழியே செல்வதால், அங்கு மிதவை ஒளி கம்பங்கள் நிறுத்தப்படும். இதனால் மீனவர்களும் எல்லை தாண்டி தவறுதலாக செல்ல வாய்ப்பில்லை, பாதுகாப்பும் அதிகம் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

மேற்கண்ட பல நன்மைகளை உள்ளடக்கிய திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முதன்முதலில் 1860இல் பிரிட்டிஷ் இந்தியாவின் கடற்படை காமாண்டரான ஆல்ப்ரெட் டூண்டஸ் டெய்லர் என்பவர் முன் மொழிந்தார். அடுத்த ஆண்டே ஆய்வு செய்து முதல்வழித்தடத்தை வகுத்தளித்தனர். இந்த வழித்தடம் பாம்பனுக்கு கிழக்கில் உள்ள மண்டபம் என்ற இடத்து வழியே செல்வதாக அமைந்தது. ஆனால், அந்நேரத்தில் சாத்தியப்படாமல் வருடாவருடம் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறாக 1955இல் சேது சமுத்திர குழு ஒன்று டாக்டர். ராமசாமி முதலியார் அவர்களில் தலைமையில் போடப்பட்டது.

இந்தக் குழுவின் படிப்படியான வழித்தடங்களின் இறுதி வழித்தடம் 2005இல் வகுக்கப்பட்டு வேலைகளும் ஆரம்பமானது. இந்தத் திட்டத்தின் வழியே இருக்கும் 152 கி.மீல், ஆதாம் பாலத்தில் 20 கி.மீட்டரும், பாக் நீரிணைப்பில் 39 கி.மீட்டரிலும் 300 மீ. அகலத்திற்கு 11 முதல் 12 மீ. வரை ஆழம் உண்டாக்கப்படுகிறது. சூயஸ் கால்வாய் போல், பனாமா கால்வாய் திட்டத்தை போல் பல நன்மைகளையும், பயன்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சேது சமுத்திரத் திட்டம் ஏன்? இத்துணை காலம் தொடங்கியும் முடிவுறாமல் இருக்கிறது என்றால், காரணங்கள் பல இருக்கிறது. தடைகள் அதிகம் இருக்கிறது, தடுப்பான்கள் இருக்கிறது. அந்தத் தடுப்புகள், தடைகள் அனைத்தும் ஒன்றே ஒன்று. பொய்யான, பித்தலாட்டம் நிறைந்த, பகுத்தறிவுக்குப் புறம்பான, அறிவியலுக்கு அநீதியான, வெறும் மதப் புண்ணிய நம்பிக்கை என்னும் சேற்றில் நிற்கும் இராமன் பாலம் என்னும் ஆதாம் பாலமான மணல்திட்டுகள். தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை இருக்கும் மணல்திட்டுகள்தான் மதவாதிகளின் இராமன் பாலம்.
வால்மீகி எழுதிய ராமாயணம் என்னும் புனைவு கற்பனையில் கடலில் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சீதையைக் காப்பாற்ற இலங்கைக்கு செல்ல ராமன் பாலம் கட்டினான் என்ற கதையால் இன்று உலகம் போற்றும் 150 ஆண்டுகால கனவான ஒரு திட்டம் தடுக்கப்படுகிறது. இன்று கடைகளில் கிடைக்கும் எதுவுமே வால்மீகி எழுதிய இராமாயணம் இல்லை. கி.மு. 400 தொகுக்கப்பட்டது முதல் இன்று வரை இடைச்செருகலால் காலத்திற்கு ஏற்ப மாற்றபடுகிறது.

பழங்குடியினர் கதை போல் யார் வேண்டுமென்றாலும் கூறலாம் என்பதால் விளைந்தவையே இந்த இடைச்செருகலால்கள். அவற்றை பவுலா ரிச்சமேன் எழுதிய பல இராமாயணங்கள் (Many Ramayanas) என்ற புத்தகத்தில் காணலாம்.

தமிழ் ஓவியா said...

ஆதாம் பாலமான மணல் திட்டுகள், இராமன் பாலம் என்று செயற்கையாக மனிதர்களால் கட்டப்படவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முதலில் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றால், அப்பொழுது மனித இனமே இல்லை, பின் எவ்வாறு கட்டப்பட்டது? என்ற கேள்வி ஒரு காரணம். உலகில் ஆவணபடி கிமு. 2650 இல் தான் முதல் பாலம் எகிப்து நைல் நதியில் கட்டப்பட்டது. அதற்கு முன் பாலம் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வந்த பாலம் என்பதற்கு கரிம படிவம் இருக்கிறது என்ற இந்துத்துவா அமைப்பினரின் பொய்யுரைக்குப் பதிலாக, விண்வெளியில் எடுத்த ஒளிப்படத்தால் பாக். நீரிணைப்பில் உள்ள கடல் படுகை ஒரு காலத்தையோ, பூலோக உருவத்தையோ, மனித உருவத்தையோ, உறுதி செய்ய இயலாது மற்றும் கரிம படிவத்தை நான் இதுவரை கண்டதும் அறிந்ததும் இல்லை, என்று நாசாவின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ப்ராக்கஸ் கூறியுள்ளார் என்பது மற்றுமொரு ஆதாரம். 1940 இல் வெளிவந்த த.பரமசிவர் அய்யர் என்றவர் எழுதிய ராமாயணம் மற்றும் லங்கையும் (சுயஅயலயயே யனே டுயமேய) என்ற புத்தகமே ஒரு மிகப் பெரிய சான்று என்று கூறலாம்.

சோழர்கள் வாழ்ந்த 10 ஆம் நூற்றாண்டில்தான் இராமாயண லங்காவும் இன்றைய சிலோனும் ஒன்றாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் அவர். அதன் வழியே பார்த்தால் இராமாவதாரம் எழுதிய கம்பனும் சோழ சாம்ராஜியத்திலே வாழ்ந்ததாகவும் வரலாறு இருக்கிறது. ஆறுகளுக்கு இடையே இருக்கும் மணல் திட்டுகளை லங்கா என்றழைக்கும் போக்கு அக்காலங்களில் இருந்திருக்கிறது எனவும், அதன் காரணமாகவே கோதாவரி லங்கா, சோனா லங்கா போன்ற பெயர்கள் இருந்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

கி.பி. 1000 முதல் கி.பி. 1100 வரையிலான காலத்தில் ராமேஸ்வரத்தில் கோவில் ஒன்று நிறுவப்பட்ட நாளிலிருந்து ராமன் பாலம் என்று மாற்றப்பட்டதா என்று வினாவும் இருக்கிறது. ஏனென்றால் நர்மதை ஆற்றை தாண்டி ராமன் வந்ததிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றே கூறவேண்டும் என்கிறார் பரமசிவர் அய்யர். அக்காலகட்ட ஆரியப் படையெடுப்பே, ராமாயணம் என்றும்; மகேந்திர மலைகளிடையே வாழ்ந்த மகேந்திர மன்னர்களை ராவணர்களாகவும்; கோண்டுகள் என்ற பழங்குடியினரை ராட்சதராகவும்; கோர்கர்கள் என்ற மக்களை வானரங்கள் (குரங்குகள்) ஆகவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையே வால்மீகி ராமாயணம். இமயமலைக்கு முன் அங்கிருந்த டெத்தீஸ் கடலுக்கு வடக்கு பகுதி லவுரீசியா எனவும், மேற்கு கோண்டுவானா எனவும் அழைக்கப்பட்டன என்று புவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்தக் கூற்று முன்பு கூறிய விடயத்துடன் ஒத்துபோகின்றது. கோண்டுவானா- கோண்டுகள் வாழ்ந்த பகுதியாகவும், லவுரீசியா இன்றைய ரசியாவாகவும் என்று விடை காணலாம். இந்த கோண்டுகள், கோர்கர்கள் அனைவரும் கோண்டி மற்றும் முண்டா திராவிட மொழி பேசியவர்கள். ஆனால் ராமனாக சித்தரிக்கபட்டவர்கள் (தேவ மொழி?!) சமஸ்க்ருதத்தைப் பேசியதாகவும் தெரிகிறது. மற்றும் ராமன் கடந்து சென்றது ஒரு ஆற்று நீரைத்தான் எனவும் லண்காவுக்கும் அசோகன் காலத்து கல்வெட்டில் இருக்கும் தம்ரபரணி என்ற இலங்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனவும் இவற்றால் புலப்படுகிறது. இது போன்ற கற்பனைகளும் பொய்யுரைகளும், புனைவுகளும், கடைந்தெடுத்த முட்டாள்தனங்களும் கதைக்கு வேண்டுமென்றால் சுவாரசியமாக இருக்குமே தவிர, கருத்துக்கும், நடைமுறைக்கும் சாத்தியக்கூறு இல்லை. இந்த மணல் திட்டுகள் போல், அந்தமான் நிகோபர் தீவுகள் நேரே கிழக்கில் இந்தோனேசியா தீவுகளில் சேருவது போலும், நியூசிலாந்து முதல் நியூகினியா வரை ஆஸ்திரேலியா பகுதியில் இருக்கும் கடல் மணல் படுகைகளை எல்லாம் இந்த ராமன் தான், சீதையை கைப்பற்ற கட்டிய பாலமா? வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடலும் என மூன்றும் அவ்விடத்தே ஒன்று சேருகிறது.

கடல் நீரோட்டங்கள் அவ்விடத்தே எதிர் எதிர் திசைகளில் ஓடுகிறது. அவற்றால் மணல் ஒன்று சேர்ந்து மேடுகள் ஆகின்றன, இதுவே ஆதாம் பாலம் என்றழைக்கப்படுகிறது. இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தால் பவளப் பாறைக்கோ, மீன்கள் இனத்திற்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என்று பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் தமிழ்நாடும், தமிழ் மக்களும் பெருத்த பலனடைவார்கள். வாழ்வாதாரத்திற்கு ஆபத்து என்று மீனவ நண்பர்களை பொய்யுரைகள் மூலம் மயக்கி கிளர்ச்சியை உண்டாக்கும் அரசியல் ஆசாமிகளை முளையிலே கண்டு கிள்ளி எறியுங்கள். இல்லையேல் ஆபத்து! நமக்குத்தான். நாட்டினுடைய, மக்களுடைய நன்மைகளை அறிந்தும், நாளொரு அரசியல் நடத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களை கண்டுபிடியுங்கள். மதவாத முட்டுக்கட்டைப் போடும் மதவெறியர்களை கண்டுகொள்ளுங்கள். மக்களே! சரியான நேரத்தில் புறந்தள்ளுங்கள். தமிழ்நாடு பல வழிகளிலும் வஞ்சிக்கப்படுகிறது, தமிழன் என்றும் ஒடுக்கப்படுகிறான். அந்தப் பல தடைகளை உடைத்தெறிய, பல தலைகளை உடைத்தெறிய வாருங்கள் தமிழர்களே!! தமிழின உணர்வாளர்களே! நாளைய தலைமுறையினரே! வாருங்கள்!!

சேதுவை கடந்து கப்பல் விடுவோம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! 4-4-2012

தமிழ் ஓவியா said...

தமிழர்களே, எழுக!


ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் அரசு மாவட்டத் தலை நகரங்களில் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூன்று முக்கிய பிரச்சினைகள் பற்றியது.

1. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து நேற்று குறிப்பிட்டு இருந்தோம்.

2. இரண்டாவது நோக்கம் ஈழத் தமிழர்களுக் கான வாழ்வுரிமைபற்றிய உத்தரவாதம்; தனி ஈழம்தான் தேர்ந்த முடிவு என்பது ஒரு பக்கம். அது ஒரு நீண்டகால நோக்காகவும் இருக்கலாம். அதுவரை தமிழர்கள் அங்கு தன்மானத்தோடும், வாழ்வாதார உரிமையோடும் வாழவேண்டுமே - அதற்கான உத்தரவாதம் கண்டிப்பாகத் தேவை.

இலங்கை அரசைப் பொருத்தவரை அசல் சிங்கள இனவாத அரசாக இருந்து வருகிறது என்பதற்குப் பெரிய பெரிய ஆதாரங்கள் தேவைப் படாது. அன்றாடம் அவ்வரசு நடந்துகொண்டுவரும் போக்குகளே போதுமானவை.

ஜெனீவா தீர்மானத்திற்குப் பிறகுகூட அதன் போக்கில் மாற்றமில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

இந்த நிலையில், ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு உலக நாடுகளின் கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. அப்படிக் கருதினால் அத்தீர்மானம் எந்திர ரீதியாக, சடங்காச்சாரமாக நிறைவேற்றப்பட்டது என்று பொருள்பட்டுவிடும்.

180 நாள்களுக்குள்ளாகவே முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களில், சொந்த வீடுகளில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்ற இலங்கை அதிபரின் வாக்குறுதிபற்றி இந்திய அரசு குறைந்தபட்சம் கேள்வி எழுப்பியதுண்டா?

இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற அதி காரிகள், ஆலோசகர்களாவது சம்பந்தப்பட்ட ஆட்சி யாளர்களிடம் கமுக்கமாகவாவது கேட்டதுண்டா?

பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்வியில் மிக ஆர்வம் கொண்டவர்கள். சிங்களவர்களைவிட கல்வியில் தேர்ந்தவர்கள். அந்தத் தமிழினப் பிள்ளைகளின் கல்வி நிலை எந்தத் தன்மையில் இப்பொழுது இருக்கிறது?

இந்தியா இலங்கைக்கு அளித்த 500 கோடி ரூபாய்க்கான நடவடிக்கைகள்பற்றியாவது தெரிந்து கொள்ள இந்தியா வாய் திறந்ததுண்டா?

அதேபோல தமிழின மீனவர்கள் பற்றிய பிரச்சினை. ஜெனீவா தீர்மானத்திற்குப் பிறகு இந்தியாமீது இலங்கை அரசு கொண்டிருக்கும் சினத்தினை தமிழக மீனவர்கள்மீது காட்டுவதாகத் தெரிகிறதே; வலிய போய் இந்தியா இலங்கைக்குச் சமாதானப்படுத்தும் வகையில் கடிதம் எழுதியதை - இந்தியாவின் பெருந்தன்மையாக இலங்கை எடுத்துக்கொள்ளவில்லையே; இதற்குப் பிறகும் இந்தியா இதுகுறித்துச் சிந்திக்கவில்லையென்றால், இந்தியாவின் சுயமரியாதைக்குப் பேரிழுக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஈழத் தமிழர்கள் எங்களுக்கு எதிரியல்ல - விடுதலைப்புலிகள்தான் - பயங்கரவாதிகள் - அவர்கள்தான் எங்களுக்கு உண்மையான எதிரிகள் என்று சாமர்த்தியமாகச் சொன்னார்களே - விடுதலைப்புலிகளைத்தான் பூண்டோடு ஒழித்துவிட்டதாகக் கூறுகிறார்களே - அப்படி இருக்கும்போது தங்களுக்கு எதிரிகளாக இல்லாத அந்த ஈழத் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு உரியவை செய்யப்படவேண்டாமா? இலங்கை அரசின்மீது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசின் போக்குகள் அமையவேண்டாமா?

ஜெனீவா தீர்மானத்தோடு எல்லாம் முடிந்து விட்டது போன்ற மயான அமைதி தமிழ்நாட்டில் நிலவுகிறது. உண்மையில் இப்பொழுதுதான் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இந்தியாவையும், உலக நாடுகளையும் நகர்த்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் - அந்தக் கடமைதான் ஏப்ரல் 11 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களே, எழுக!

உணர்வுகளை வெளிப்படுத்துக!! 5-4-2012