பகுத்தறிவே நல்வழிகாட்டி
இறுதியாக தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இந்த சீரங்கம் நகருக்குப் பல தடவைகள் வந்திருக்கிறேன். சென்ற ஆண்டு இங்கு நடைபெற்ற கழக மாநாட்டிற்கு கடைசியாக வந்திருக்கின்றேன். அதற்குப் பிறகு இன்று வந்திருக்கின்றேன். அதற்கு முன்னும் நான் காங்கிரசில் இருக்கும்போது பல தடவைகள் வந்து கூட்டம் போட்டும் பேசியும் இருக்கிறேன்.
எங்கள் வீடு ஒருகாலத்தில் பெரிய வைணவ பக்தர் குடும்பமாக இருந்தது. எங்கள் குடும்பத்திற்கு இந்த கோவில் ஓர் முக்கியஸ்தலமாக இருந்து வந்தது. நான் எங்கள் குடும்பத்துடன் சிறு வயதில் பல தடவைகள் வந்திருக்கின்றேன்.
தோழர்களே! எனக்கு முன் பேசிய தலைவர் அவர்களும், நடிகவேள் அவர்களும், நண்பர் வீரப்பா அவர்களும் நமது கடவுள் சங்கதி, நம்மத சங்கதிகளைப்பற்றி விளக்கினார்கள்.
தோழர்களே, இந்த இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடிக்கக்கூடிய இந்தக் காலத்தில் நாம் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். நம்முடைய கடவுளும், மதமும், நமது பழக்க வழக்கங்களும் வெளிநாட்டுக்காரன் கண்டு எள்ளி நகையாடக் கூடிய நிலையில்தானே நாம் இன்று இருக்கின்றோம்.
3,000, 4,000 ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டி காலத்தில் கல்லு, ஈட்டி ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்ட மனிதன் மூளையில் உதித்த காட்டுமிராண்டி கடவுளை இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நாம் கட்டிக்கொண்டு அழுகின்றோம் என்றால் நம்மை விட காட்டுமிராண்டி உலகில் யார் இருக்கின்றார்கள்?
நம்முடைய ராஜாக்கள் எல்லாம் பார்ப்பானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி மடமையினை வளர்க்கும்படியான இதுபோன்ற கோவில் களை எல்லாம் கட்டி வைத்து விட்டுப் போய்விட்டார்கள்.
அதைக் கொண்டு நம்மை இன்று மடையர்களாக இந்த 20ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்கள் ஆக்கி தாங்கள் மட்டும் சுக வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். நமது அரசாங் கமும், அயோக்கியத்தனமாக நாம் இழிமக்களாகவும், காட்டுமிராண்டியாகவும் ஆக்கி வைத்து இருக்கும் கடவுளையும், மதங்களையும், சாஸ்திரங் களையும், பழக்க வழக்கங்களையும் அழிந்துவிடாமல் கட்டிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அரசாங்கத்தின் சின்னம் மடமையினை வளர்க்கும் மதுரை(ஸ்ரீ வில்லிபுத்தூர்) கோவிலின் கோபுரம் பொரிக்கப்பட்டு இருக்கின்றது எதற்காக? மதசார்பற்ற ஆட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒரு மதசம்பந்தமான ஓர் கோவில் கோபுரத்தையா போட வேண்டும்? ஏன் பயனுள்ள ஆற்றையோ, அணையையோ, மரத்தையோ, இன்னும் மற்றவற்றை யோ போடக் கூடாது?
நம் யோக்கியதை, பழக்க வழக்கங்கள், நம் கடவுள், மத சம்பந்தமான செயல்கள் எல்லாவற்றையும் வெளிநாட்டான் கண்டு கேலி செய்யும் நிலையில்தானே இன்று நாம் இருக்கின்றோம்.
மற்ற நாட்டுக்காரன்கள் எல்லாம் கால மாறுதலுக்கு ஏற்றவாறு வந்து அவன் அவன் கடவுட் கொள்கை, மதம், மற்ற மற்றவைகளை எல்லாம் மாற்றிக் கொண்டு விட்டான்.
நாமோ 3,000, 4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காட்டுமிராண்டி மனிதன் கடைபிடித்து ஒழுகிய கடவுளை யும், மதத்தையும், சாஸ்திரங்களையும் தானே இன்றும் கட்டிக் கொண்டு அழுகின்றோம். 3,000, 4,000 வருஷங்களுக்கு முற்பட்ட மனிதனுக்கு எவ்வளவு மூளை அறிவு இருக்க முடியும்? அன்று மனிதனுக்கு இன்றைய துப்பாக்கி போன்ற சாதனம் செய்ய தெரியாது. அவன் உபயோகப்படுத்தியதெல்லாம் கல்லு, ஈட்டி தூரத்தில் இருந்து கொண்டு விலங்குகள் மீது எறிய ஈட்டியைக் கண்டுபிடித்தான். அதற்கு அடுத்தகாலத்தில் கண்டுபிடிக் கப்பட்ட கடவுளுக்கு ஈட்டியை கையில் கொடுத்தான். அதற்கு அடுத்த காலத்தில் வேலையும் கண்டுபிடித்தான். ஈட்டி ஒரே இடத்தில்தான் குத்தும் வேலாயுதமோ மூன்று இடத்தில் குத்தும். அந்தக்காலத்தில் உண்டாக்கப்பட்ட கந்தன் அதாவது முருகன் கையில் அதைக் கொடுத்தான்.
அடுத்து இராமாயண காலம். மனிதன் சிறிது அறிவு வளர்ச்சி அடைந்தான். தூரத்தில் இருந்து வேகமாக அடிக்கக்கூடிய வில் அவனுடைய மூளையில் தோன்றியது. அதனையே அந்தக் காலத்தில் கடவுளின் அவதாரமாக கதை எழுதியவன், இராமன் கையில் கொடுத்தான். மற்றும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் ஆயுதம் இல்லாத கடவுள் இன்னது என்று விரல் விட முடி யுமா? இந்தக் காட்டுமிராண்டிக் காலத்துக் கடவுளை இந்தியன் வணங்குகின்றான். இவர்கள் அநாகரிகர்கள் என்று தானே கேலி பேசுவான்.
நம் புராணங்கள் தான் ஆகட்டும். அதைக் கேட்டால் அவன் என்ன நினைப் பான்? இராமனுடைய தகப்பன் தசரதனுக்கு 60,000 மனைவிகள் என்று எழுதி வைத் திருக்கின்றான்! தசரதன் ஒவ்வொரு பெண்டாட்டியையும் ஒவ்வொரு நாள் சந்திப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு ரவுண்டு வர 160 வருஷம் அல்லவா ஆகும்? நாரதன் சொல்லுகின்றான், கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா உனது அரைஞாண் கயிறுபடாத பெண் உலகத்தில் ஒருவர்கூட இல்லையே என்று!
இவைகளை எல்லாம் கடவுளாகவும், புராணங் களாகவும் பக்தி செலுத்தும் நம்மை அவன் என்ன நினைப்பான்?
நாம் முட்டாள்தனமாக கடவுள் சக்தியை நம்பிக் கொண்டு இருப்பவர்கள்! வெள்ளைக்காரன் விஞ்ஞான சக்தியை நம்புவான்! எதையும் விஞ்ஞான உரைகல்லில் வைத்து உரசிப் பார்ப்பவன்! நெருப்பு என்றால் அது சுட்டால்தான் அதை நெருப்பு என்று ஒத்துக்கொள்ளு வான். சுடவில்லை என்றால் அது நெருப்புத் தன்மை உள்ளது அல்ல என்று ஒத்துக் கொள்ள மாட்டான். பனிக்கட்டியின் குணம் தொட்டால் ஜில் என்று இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது அய்ஸ் ஆகாது என்று எண்ணுவான். நாமோ அப்படி அல்ல, எதையும் சிந்திக்காமல் என்ன சொன்னாலும் அப்படியே நம்புகின்ற வர்கள். இன்று உலகத்தில் உண்டான விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் அனுபவித்தும் பல துறைகளில் மாற்றம் அடைந்து வருகின்றோம். ஆனால், கடவுள், மதம் ஆகிய துறைகளில் மட்டும் பழைய கட்டை வண்டிக் காலத் தில் தானே நாம் இருக்கிறோம். கொஞ்சங்கூட வளர்ச்சி அடையவே இல்லையே! கடவுள், மதம் ஆகியவற்றைப்பற்றி சிந்தித்தாலே, ஆராய்ந்தாலே பாவம் என்கின்றானே!
நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த வெள்ளைக் காரர்களும், முஸ்லிம்களும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் நாட்டை அவர்கள் ஆளுகின் றார்கள் என்றால் காரணம் அவர்கள் மதம் அவர்களை சீர்திருத்தியது. அறிவாளியாக ஆக்கியது. ஆனால், நீ இழிமகனாக, காட்டுமிராண்டியாக கல்வி அறிவு அற்ற வனாக இருக்கின்றாய் என்றால் உன்னுடைய இந்து மதமும், கடவுள்களும் தானே என்று எடுத்துரைத்தார்.
மேலும் பேசுகையில், இன்றைய நம் மாநில ஆட்சியில் காமராசர் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் ஆட்சியில் தமிழ் மக்கள் அடைந்துள்ள நன்மைகள் பற்றியும், இவைகளைக் கண்டு மனம் பொறாத ஆச்சாரியார் ஆரம்பித்து உள்ள சுதந்திரா கட்சி பற்றியும் தெளிவு படுத்திப் பேசினார். கூட்டத்தில் நீங்கள் காமராசரிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு தானே காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சுடச்சுட பதில் அளித்தார்.
அந்த பதில் வருமாறு: நான் காமராசரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றேனா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவரை ஆதரிக்க வேண்டியது தமிழனுக்காகப் பாடுபடும் எனது கடமை யாகும். நேற்று தூத்துக்குடியில் உபதேர்தல் நடைபெற்றது. நானாக வலிய 120 ரூபாய் செலவு செய்து கொண்டுபோய் அங்கு மக்களுக்கு காமராசரைப் பலப்படுத்த காங்கிரஸ் அபேட்சகர் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு வந்தேன். அதை எல்லாம் உங்களிடம் நான் கூற வரவில்லை.
தமிழன் - தமிழனுக்குப் பிறந்த தமிழன்தான் நான் - என்று சொல்லிக் கொள்பவனுடைய கடமை, தமிழனுக்காகப் பாடுபடும் காமராசரை ஆதரிப்பது அவர் ஆட்சியை நிலை பெறச்செய்து அவரை ஒழிக்கப் பாடுபடும் ஆச்சாரியாரை முறியடிக்க வேண்டியதுதானே கடமை.
அதுபோலவே பார்ப்பானுக்குப் பிறந்தவன் பார்ப்பான் என்று கூறிக் கொள்பவனுடைய கடமை தமிழருக்காகப் பாடுபடும் காமராசரை முறியடித்து தங்கள் நலனுக்காகப் பாடுபடும் ஆச்சாரியாரை ஆதரிப்பதுதானே அவர்கள் தர்மம்?
காமராசரை ஒழிக்க நானும் உன்னோடு வருகின்றேன் என்று ஆச்சாரியாரின் திருவடியை சரணம் என்று போய்ச் சேருகின்ற நமது முண்டங்களை நாம் எப்படி அழைப்பது என்று எடுத்துரைத்தார்.
1 comments:
varalaatru thakaval!
Post a Comment