Search This Blog

2.6.10

தந்தை பெரியார் வயதினையும் தாண்டி வாழ்க!


நமது மானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் அவர்கள், நாளை (3.6.2010) தனது 87ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்! நம் நெஞ்சங்கள் பூரிக்கின்றன!

87 வயது, மற்றவர்களைப் பொறுத்தவரை முதுமையின் தள்ளாட்டமும், மறதியின் விளையாட்டும் நிறைந்த ஒரு பருவம்; ஆனால், இயற்கையின் புதல்வரான நமது முதிய இளைஞரான கலைஞர் அவர்களோ அதற்கு ஒரு விசித்திர விதிவிலக்கு!

தந்தை பெரியார்தம் குருகுலத்தின் மாணவரான காலம் முதற்கொண்டு, அவர் உழைப்பின் உருவமாக, கொள்கையின் வடிவமாக, உயர்ந்துகொண்டே வந்து இன்று உச்சத்தில் அமர்ந்தும் ஓய்வறியா உழைப்புக்கு ஏகபோக சொந்தக்காரராகத் திகழுகிறார்!

வரலாற்றில் ஒரு பொற்காலம்

அறிஞர் அண்ணாவின் பண்பும், பாச உணர்வும் அப்படியே இவரிடம் பதிந்துவிட்டது!

பகுத்தறிவுச் சிந்தனையோ அவரது குருதியின் குருகுலப் பாடமாகவே எங்கும் என்றும் திகழ்கிறது!

அய்ந்தாம் முறை அவரது ஆட்சி, தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் ஒரு பொற்காலம்!

சமூகத்தின் அடித்தளத்தில் உழன்று வதிந்த மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிடும் வள்ளலின் ஆட்சியாகவே பீடுநடை போடுகிறது!

சாதனை சரித்திரங்களால்...

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப்பற்றி சிந்திக்கிறார்கள்;

அரசியல் ஞானிகளோ அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறார்கள் என்ற முதுமொழி ஒன்று உண்டு.

முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞரோ, அடுத்த தலைமுறையின் புதுவாழ்வுக்கு முன்னுரிமை தந்து, தேர்தல் வெற்றி அதற்கு ஒரு களமாக அமையட்டும் என்ற இலக்கில், தனது ஆட்சியை நாளும் சாதனை சரித்திரங்களால் நிரப்புகிறார்கள்!

எங்கெங்கு காணினும், எப்பக்கம் திரும்பினாலும் அவரது ஆட்சித்திறன்அதனால் பயன்பெறும் அடித்தள மக்களின் மகிழ்ச்சி தொடங்கி, அரசு ஊழியர்கள்வரை அன்பால், ஆதரவுக் குடைக்குள் வந்து நின்று மகிழ்ந்து நன்றிக்கரம் குவிக்கிறார்கள்!

நாடெங்கும் ஜாதி ஒழிக்கப்பட்ட பெரியார் சமத்துவபுரங்கள்!

ஏறுநடை ஆட்சி...

நாட்டையே சமத்துவபுரமாக மாற்றிட, நாளும் ஏழைஎளிய அடித்தள அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடு. குலத்தொழில் செய்யச் சொன்ன குல்லூகபட்டர்கள் ஆண்ட நிலத்தில், அருந்ததியர்களைப் பொறியாளர்களாக்க, மருத்துவர்களாக்க, சட்ட மேதைகளாக்க சமதர்ம வாய்ப்பு வழங்கி, குலதர்மத்தின் குலை-யைப் பிடுங்கி எறிந்திட்ட ஏறுநடை ஆட்சி கலைஞரின் ஆட்சி!

108 சகஸ்ரநாமங்கள், விளக்குகள், அர்ச்சனைகளை மட்டுமே கேட்ட, பார்த்த மண்ணில், கிராமங்களிலும் உள்ள எளிய விவசாயிகள் படித்தறியாத பாமரர்கள் மத்தியிலும் 108 க்கு போன் செய்யுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, உயிர்காக்கும் சமுதாய மருத்துவர் இதோ என்று நன்றிப் பெருக்குடன் அந்த நாயகரைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கக் கூறும் அமைதிப் புரட்சி!

சாதனைகளின் சிகரம்!

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி இவை அனைவருக்கும், அனைத்தும் என்ற தத்துவ அடிப்படையில் தமிழக மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் கலைஞர் ஆட்சி சாதனைகளின் சிகரம் சமதர்மத்தின் வடிவம் ஆகும்!

குடிசை இல்லாத தமிழகம் என்ற குறிக்கோளுடன் 3 ஆண்டுகளில், 21 லட்சம் குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றிட, இப்போதிருந்தே உழைத்திடும் உத்தமரின் ஆட்சி என்று எளிய மக்கள் வாழ்த்துகிறார்கள்!

தனக்கென வாழாத பிறர்க்குரிய பெம்மான்!

கலைஞர்தம் மேடைகளில் முத்தமிழ் மட்டுமே முழங்காது; சுயமரியாதையும், பகுத்தறிவும், பெரியாரும், அண்ணாவும் வந்து வந்து செல்வார்கள். இன்றைய தலைமுறைக்கு அவர் எடுக்கும் வகுப்புகள் அவை. வரலாற்றின் சுவடுகளை சுவையுடன் அவர் சொல்லும்போது, அவரது நினைவாற்றலின் பிரமிப்பு பலரை கிறுகிறுக்கச் செய்கிறது!

தொண்டறத்தின் தூய உருவம் அவர். தனக்கென வாழாத பிறர்க்குரிய பெம்மான்.

எம்மொழி செம்மொழியாக ஏன் தடை என்று கேட்டு, போராடி வெற்றி பெற்று, தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றதோடு, அதை உலகுக்கு அறிவிக்க, அர்ப்பணிக்கவே கோவையில் இத்திங்கள் இறுதியில் (23.6.2010 முதல் 27.6.2010 வரை) உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!

பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட இனம் மீள அந்தக் களம் ஒரு வரலாற்றுத் தேவை.

எதை, எப்போது, எப்படிச் செய்து, வெற்றி வாகை சூடுவது என்பதற்கு இலக்கணம் அவர்!

வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர கம்பீரச் சிலை, இவற்றை மிஞ்சுமாறு, தலைநகர் சென்னையில் தமிழக சட்டமன்ற தலைமைச் செயலக பன்மாடி கட்டடங்கள் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் எழில் கொஞ்சும் ஏற்றமிகு சாதனைகள்.

இப்படி நாளும் தாழ்ந்த தமிழகத்தை உயர்த்துகிறார் அவர்!

வீழ்ந்த தமிழனை வீறுகொண்டு எழும்படி உணர்ச்சிக் காவியங்களை கலை உலகத்தையும் கருவியாக்கிச் செய்து மகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்கிறார்கள்!

இராஜதந்திரத்திலோ இவரை மிஞ்சுபவர் எவருமிலர் என்று இன எதிரிகள் கூடாரத்திலிருந்து கேட்கும் குரல், அதிசயத்தின் வெளிப்பாடா அச்சத்தின் அறிவிப்பா எனத் தெரியா-விட்டாலும், அப்பட்டமான உண்மை அது என்பது அனைவருக்கும் விளங்குகிறது!

தந்தை பெரியார்தம் வயதினையும் தாண்டி வாழ...

அத்தகைய மாமனிதர் மனிதநேயத்தின் மாற்றுப் பெயரான அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு தந்தை பெரியார்தம் வயதினையும் தாண்டி வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

அவர் வாழ்வின் நீட்டம், நமது இனத்தின் வளர்ச்சிப் பாதையின் ஓட்டம்!

வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்!!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
2.6.2010

----------------"விடுதலை” 2-6-2010

1 comments:

அஹோரி said...

இம்ச,
அது எப்படி சரியாய் 10 கண்டிப்பா எல்ல பதிவுக்கும் விழுது? நாமலே பத்து ஐடி ச்றேஅடே பண்ணிட்டோமா என்ன ?

- சோறு , சப்பாத்தி , ரசம், சாம்பார், பொரியல் திங்கும்
அஹோரி