Search This Blog

7.6.10

ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?


ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்கு இலங்கை அரசு வழி செய்ய வலியுறுத்த வேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை

நவீன சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ கூறுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
சிங்களர்களும், தமிழர்களும் சேர்ந்து வாழவே முடியாது!
இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசின் சிவப்புக் கம்பள வரவேற்பா?


முதலமைச்சர் கலைஞர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் மிக முக்கியமானது - அவசியமானது

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இன வெறியர் ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமைக்கு வழி செய்ய ராஜபக்சேயை இந்தியப் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தம் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

இலங்கையில் தமிழினப் படுகொலையைக் கூச்ச நாச்சமின்றி செய்த இலங்கை அதிபர் சிங்கள ராஜபக்சே டில்லி வருகிறாராம்!

2009 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அவரவர் இடத்திற்கு அனுப்பப்பட்டு, குடி அமர்த்தப்படுவார்கள் என்று அவர் கொடுத்த வாக்குறுதி காற்றில் பஞ்சாய்ப் பறந்துவிட்டது!

ஈழத் தமிழர்கள் வாழ்வு நாயினும் கேடாய் நலிவுற்ற நிலையில் உள்ளதை அறிந்து, இங்குள்ள உணர்ச்சியுள்ள தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வகையறியாது தவிக்கும் நிலை!

பாழாய்ப் போன தமிழ்நாட்டு அரசியல்!

பாழாய்ப் போன தமிழ்நாட்டுப் பதவி அரசியல், அனைவரும் ஒன்றுபட்டுஇப்பிரச்சினையில் ஒரே அணியில் நின்று குரல் கொடுப்பதைத் தடுத்து வருவதோடு, இன எதிரிகளுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது!

ராஜபக்சே நடத்திய இலங்கைப் போர் உண்மையில் விடுதலைப்புலிகளுக்கோ, தீவிரவாதத்திற்கோ எதிரானதாக நடத்தப்படவில்லை. அது ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதற்காகவே என்பதை, இப்பிரச்சினையை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு, எவ்வித ஆசாபாசமும், மன ஒதுக்கீடும் இல்லாது பார்க்கும் மிகப்பெரிய உலக நிருவாகிகளும், எழுத்தாளர்களும் எப்படி பார்க்கின்றனர் என்பதற்கு முக்கியமாக இரண்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் சிற்பி லீ குவான் யூவின் கணிப்பு

அ. சிங்கப்பூர் நாட்டினை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலம் வாய்ந்ததொரு நாடாக ஆக்கியுள்ள சிங்கப்பூரின் நவீன சிற்பி என்றழைக்கப்படும் லீ குவான் யூ அவர்கள் அவர் இன்றும் அந்நாட்டின் மக்கள் செயல் கட்சித் தலைவர்; அத்துடன் அந்த அரசில் இடம்பெற்றுள்ள மூத்த மதியுரை அமைச்சர் (Senior Mentor Minister) வயதில் மூத்தவர் முதிர்ச்சியடைந்த ராஜதந்திரியும்கூட!

அவர் ‘‘Citizen Singapore: How to Build A Nation Conversations with’’ என்ற நூலில்,

1. சிங்கள அதிபர் ராஜபக்சே திருத்தப்படவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி இலங்கையில்!

2. சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ, அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கிறார்கள்.

3. தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாகவே இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக அது இருக்கவே முடியாது!

தமிழர்கள் அடங்கிக் கிடக்கமாட்டார்கள்

4. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்! ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்கமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள்.

5. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுகளை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவர் மனதை மாற்றவோ, திருத்தவோ முடியாது.

இதைவிட மிகவும் துல்லியமாக சிங்கள வெறியரான இராஜபக்சேபற்றியும், அவர்தம் செயல், எண்ண ஓட்டம், இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் உள்ள நியாயங்களையும் எவரும் சொல்லிவிட முடியாது!

இவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளரோ, இனவெறி, மதவெறியை ஆதரிப்பவரோ அல்ல. தேர்ந்த அரசியல் ஞானி. அவர் கூற்று 100 க்கு 100 உண்மை!

ஓநாய் ஒருபோதும் சைவமாகிவிடாது என்பதை மிகவும் ஆணித்தரமாக இதன்மூலம் உணர்த்தவேண்டியவர்களுக்கு அவர் லீ உணர்த்தியுள்ளார்!

பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறுகிறார்

ஆ. அதுபோலவே, பிரபல எழுத்தாளரும், முற்போக்குச் சிந்தனையாளருமான அருந்ததிராய் அவர்கள், ஒரு பேட்டியில், இலங்கையில் திட்டமிட்டே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். இலங்கைக்கு ஆதரவாக கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்க சக்திகள் பெரும் முதலாளித்துவ நாடுகள் சக்திகள்தான் இத்தமிழர் அழிப்புப் போரையே நடத்தின; காரணம், அவர்களை அங்கு அழித்துவிட்டால், நமது இச்சைபோல அவர்களது நிலத்தை இவர்களது உடைமையாக்கி இந்த முதலாளித் திமிங்கிலங்கள் கொழுக்கலாம் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு என்ற ஒரு கருத்தை இதுவரை யாரும் சிந்திக்காத ஒரு தனிக் கோணத்தில் பார்த்துக் கூறியுள்ளார் அருந்ததிராய்!

இ. ஏற்கெனவே ராஜபக்சேவை யுத்தக் குற்றவாளியாக இனப் படுகொலைக்காக விசாரணை செய்யவேண்டும் என்றார் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன்.

இந்தியாவின் நிலைப்பாடு வெட்கப்படத்தக்கது

இவ்வளவு பொதுவான பேர்கள் சொன்னாலும், தொப்புள்கொடி உறவுள்ள தமிழர்களது வாக்குகளைப் பெற்று, தமிழர்களின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள இந்திய மத்திய அரசு, இப்பிரச்சினையில் ராஜபக்சே சிங்களவர்களுக்கு இதமாக நடந்துகொள்வது கண்டு வெட்கம், வேதனை அடைவதோடு எரிமலை சீறும் உள்ளத்தோடு உலகத் தமிழினம் உள்ளது.

மிகுந்த கவலையைத் தெரிவிக்கிறோம் (We express our grave concern) என்று அடிக்கடி மத்திய அரசு நாமாவளி பாடினால் போதுமா?

கடப்பாரையை விழுங்கிவிட்டு, சுக்குக் கஷாயம் குடித்தவர் கதை போன்றதல்லவா அதன் தற்போதைய அணுகுமுறை?

இனவெறியருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?

இனப்படுகொலை செய்து, கொடுத்த வாக்குறுதிப்படி நடக்காது, முள்வேலிக்குள் ஆடு, மாடுகளைவிடக் கேவலமாக எம் தமிழ்ச் சகோதர சகோதரிகளை அடைத்து வைத்துள்ள இதயமற்ற ராஜபக்சேவுக்கு இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பா?

தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் பிரதமருக்கு ராஜபக்சேவை நிர்ப்பந்தப்படுத்தி, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு வழி செய்யச் சொல்லுங்கள் என்று எழுதியுள்ளார்கள்!

ஒரு மாநில அரசு அது மத்தியில் அங்கம் வகிக்கும் அரசானாலும்கூட, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளைக் கருதியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த நிலையையும் எடுத்துவிட முடியாது!

அப்படி எடுத்தால், இங்குள்ள ராஜபக்சேவின் உறவுக் கூட்டமான ஆரியக் கூட்டத்திற்குத்தான் அது அனுகூலமாக முடியும். இதை வெறும் உணர்ச்சிவயப்பட்டு அணுகக்கூடிய பிரச்சினை அல்ல.

தி.மு.க. தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்

ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 30.5.2010 அன்று நடைபெற்றபோதே, ஈழத் தமிழர்கள் மறு குடியேற்றம் முள்வேலி அகற்றல் அவர்களுக்கு நியாயமான அத்தனை அடிப்படை உரிமைகளும் தரப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி, மன்மோகன்சிங் தலைமையில் உள்ள அரசு இதனை இலங்கை அதிபரிடம் வற்புறுத்திடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

நேற்று பிரதமர் அவர்களுக்கு நமது முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு முக்கிய கடிதம் வாயிலாக டில்லிக்கு வரும் ராஜபக்சேயிடம் இதுபற்றிப் பேசி ஆக்க ரீதியான ஒரு தீர்வை உருவாக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதோடு நிற்காமல், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களது தலைமையில், பிரதமரைச் சந்தித்து இதனை ஒரு தீர்வு காண ஈழத் தமிழர் வாழ்வுரிமையை அவர்கள் பெற்று, சகல மனித உரிமைகளோடு வாழ்ந்திட வகை செய்ய வலியுறுத்திட ஆணையிட்டுள்ளார்.

ஒரு மாநில அரசு அது மத்தியில், இடம்பெற்றுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, எதையும் பாக்கி வைக்காமல் செய்திருப்பது அதற்குள்ள அக்கறை, கவலை, பொறுப்பு இவற்றைத் தெளிவாகக் காட்டுகிறது!

மத்திய அரசின் முன்னுரிமை எது?

கொக்கொக்க கூம்பும் பருவத்து என்ற குறள் மொழி அரசியலுக்கு அடிப்படையானதாகும். எனவே, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்துள்ள முயற்சியை வெற்றிகரமாக்கவேண்டியது இந்திய மத்திய அரசின் மாபெரும் முன்னுரிமையாகும். தமிழர்களின் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கவேண்டாம்.


தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
7.6.2010

---------------- “விடுதலை” 7-6-2010

1 comments:

Jey said...

//முதலமைச்சர் கலைஞர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் மிக முக்கியமானது - அவசியமானது//

அட போங்கயா, கலைஞர் எதுக்கு கடிதம் எழுதுவார், எதுக்கு வீல் சேர்ல உக்காந்து கிட்டேயாவது விமானத்துல டெல்லிக்கு நேரடியா வருவார்னு பிரதமருக்கும்/சோனியாவுக்கும் தெரியாதாக்கும். உண்மையிலேயே நீங்க நலலவங்களா? கெட்டவங்களா?.