Search This Blog

5.6.10

ஜாதி, வருணாசிரம வேர்களை இழந்துவிட்டால் ஹிந்து மதம் மிஞ்சுமா?


ஆர்.எஸ்.எஸின் ஜாதி ஒழிப்பு வேடம்

ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆர்.எஸ்.எஸுக்கு ஒரு பார்வையும், பா.ஜ.வுக்கு வேறு ஒரு பார்வையும் இருப்பதாகத் தெரிகிறது.

இதில் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கூறப்படும் பாவுராவ் பட்டேல் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் பொதுச்செயலாளராக இருக்கக் கூடிய பையாஜி ஜோஷி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். ஜாதியற்ற சமூகத்தை உருவாக்கப் பாடுபட்டு வருகிறது, இந்த வகையில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் வழியை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றுகிறது. இந்த நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மக்கள் மத்தியில் ஜாதி உணர்வையும், பிளவையும் ஏற்படுத்தும் என்று உரக்கப் பேசுகிறார்.

மக்களவையில் பா.ஜ.க.வின் துணைத் தலைவராக உள்ள கோபிநாத் முண்டே, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி புள்ளி விவரம் மிகவும் அவசியம் தேவை என்று அழுத்தமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகவும் சரியாகக் குறிப்பிட்டுள்ளதுபோல, இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று கறாராகவே கூறி வருகின்றனர் என்பதை கவனிக்கத் தவறக்கூடாது.

ஆர்.எஸ்.எஸின் பொதுச்செயலாளர் ஜோஷி சொல்வது போல ஆர்.எஸ்.எஸின் கொள்கை ஜாதி ஒழிப்பா? என்று வினா தொடுக்க விரும்புகிறோம்.

இவர்களின் குருநாதர் என்று கூறப்படும் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்?

சிந்தனைக் கொத்துகள் (Bunch of Thoughts) என்ற நூலில் (இந்நூல் ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகமும் கூட!) என்ன கூறப்பட்டுள்ளது?

ஜாதி அமைப்பு முறையை சிலர் நீண்ட காலமாகவே எதிர்த்துக் கொண்டே வருகின்றனர். ஜாதி அமைப்பு முறை இருந்த பழங்காலத்தில்தான் நாம் மிக உச்சியில் வாழ்ந்தோம். ஆனால் சிலர் கூறுகிறார்கள் இந்த ஜாதி அமைப்பு முறையானது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது என்று. இப்படி கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் அடித்துக் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். ஜாதியற்ற சமூகத்துக்காக பாடுபட்டு வருவதாகவும், அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர் வழியைப் பின்பற்றுவதாகவும் இந்த நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமுதாயத்தில் ஜாதி உணர்வையும், பிளவையும் தூண்டுவதாகவும் கூறுவது யாரை ஏமாற்ற? இரட்டை வேடம் என்பது ஆர்.எஸ்.எஸின் இரத்தத்தோடு பிறந்த பிறவிக் குணமாகும். அவர்களைத் திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போன்றதுதான்.

ஜாதி ஒழிப்புக்காக இதுவரை ஆர்.எஸ்.எஸ். ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டதுண்டா? பிரச்சாரம் செய்ததுண்டா? போராடியதுண்டா? அப்படி ஏதாவது செயல்பாடு இருந்தால் வெளியே வந்து நெஞ்சை நிமிர்த்திச் சொல்லட்டுமே.

இப்பொழுதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை. பூணூல் அறுப்பு மாநாடு என்று ஒன்றைக் கூட்டி ஜாதிச் சின்னமான பூணூலை அந்த மாநாட்டில் அறுத்தெறிவோம் என்று கூறி முன்வரட்டுமே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகத் திராவிடர் கழகம் போராடி வருகிறதே தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில் அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனரே இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். குறைந்தபட்சம் கருத்தாவது தெரிவிக்க முன்வருமா?

சங்கர மடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் சங்கராச்சாரியாராக அமரும் காலம் வரவேண்டும் என்று காகாகலேல்கர் கூறினாரே. அதனை ஏற்றுக் கொள்கிறதா ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் வகையறாக்கள்?

ஜாதி, வருணாசிரமம் என்கிற வேர்களை இழந்துவிட்டால் ஹிந்து மதம் என்ற ஒன்று மிஞ்சுமா? ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவவாதிகள் இவற்றிற்குப் பதில் கூறிவிட்டு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வீதிக்கு வரட்டும் பார்க்கலாம்.

------------------ -------------- “விடுதலை” தலையங்கம் 5-6-2010

0 comments: