Search This Blog

1.6.10

பெரியாரின் போர்வாள்


76 ஆம் ஆண்டில் விடுதலை

"ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக்களுக்குச் சமு தாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறை யிலும் கேடுஅளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி அக்கேடுகளைப் போக்குவதற்காகவே பாடுபடும் பத்திரிகை விடுதலை. விடுதலைப் பத்திரிகை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியில்லாமல் போயிருக்கும்".

(விடுதலை,16.6.1964)

_என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

இதைவிட விடுதலையின் பணியை வேறு எப்படி கூறமுடியும்? விடுதலை தனது 75 ஆம் ஆண்டு பயணத்தில் எத்தனையோ எதிர்ப்புச் சூறாவளிகளையும், கீழறுப்புச் சுனாமிகளையும் சந்தித்து எதிர்ப்புகளை எருவாக்கி, கீழறுப்புகளை மிதித்துத் தள்ளிதான் வீரப் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளது. தந்தை பெரியாரின் போர்வாளாகச் சுழன்று அநீதிகளின் மூலக் குகைகளுக்கே சென்று மோதி அழித்திருக்கிறது.

விடுதலையின் தலையங்கம் மட்டுமல்ல, பெட்டிச் செய்திகள்கூட, பல ஆதிக்கச் சக்திகளை பெட்டியும் படுக்கையுமாக நடைகட்டச் செய்திருக்கிறது.

ஆட்சிகளைப் புரட்டித் தள்ளியதுண்டு; ஆட்சியின் சட்டங்களை தன் பல்சக்கரங்களில் அரைத்துச் சக்கையாக வெளியே தள்ளிய தீரச் செயல்களும் உண்டு.

மக்களின் மூடநம்பிக்கைகளை மூலதனமாக்கி சுரண்டல் தொழில் நடத்தி வந்த எத்தனையோ சாமியார்கள் மூட்டை கட்டி ஓடியிருக்கின்றனர் விடுதலையின் பாய்ச்சலால்.

புதுவை மாநிலம் அம்பகரத்தூரில் எருமைக் கிடா வெட்டு என்ற அதி பயங்கரமான மூடச் செயலுக்கு முடிவு கட்டிய பெருமையும் விடுதலைக்கு உண்டு!

இதுபோல் எத்தனை, எத்தனையோ!

காஞ்சி மடத்துக்கு வருகை தருவதாக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை உள்ளே நுழைய விடாமல் விரட்டியதுண்டு!

சமூகநீதிக்காக அது தூக்கிய போர்க்கொடிகள் சாதாரணமானவை யன்று. கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக தம் தோளினைக் கொடுத்துக் கொடுத்துக் காய்ப்பேறியதுண்டு.

அடுப்பூதிக் கிடந்த பெண்களை படிப்புச் சாலைக்குக் கைபிடித்து அழைத்துச் சென்ற கடமையையும் விடுதலைதான் செய்தது.

பார்ப்பனீயச் சடங்குகளை எல்லாம் கோணிப் பைக்குள் கட்டி இந்து மகா சமுத்திரத்தில் தள்ளி, தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்னும் தளத்தில் விடுதலை ஊன்றிய வீரிய விதைகள், அதனால் ஏற்பட்ட விளைச்சல் வரலாறு முழுவதும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

எத்தனை எத்தனை பார்ப்பனர் அல்லாத அதிகாரிகள், பார்ப்பன ஊடகங்களாலும், பார்ப்பன அதிகாரிகளாலும் பழிவாங்கப்பட்டார்கள்; அவர்கள் அழைக்காமலேயே முகவரி தேடி ஓடிச் சென்று தாய்ப் பறவையாக இருந்து, தமிழர்களை அடைகாத்த அந்தத் தாயுள்ளத்திற்கு நிகரானது வேறு ஒன்றும் உண்டா?

தமிழன் வீடு என்பதற்கு அறிவிப்புப் பலகை விடுதலை என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் குறள் போன்ற வாக்கு குன்றின்மீது ஒளிரும் விளக்காகும்.

விடுதலையின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் வரலாறுகளைப் படைத்தவர்கள். 75 ஆண்டுகள் நிறைந்த விடுதலையில் 48 ஆண்டுகள் அதன் குருதியோடு கலந்து பணியாற்றி வரும் பெருமை நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு மட்டுமே உரித்தாகும்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் அது விடுதலை ஆசிரியரைத்தான் குறிக்கும் என்றால், அடடே, விடுதலையின் மானமிகு மாட்சிமைதான் என்னே! என்னே!!

விடுதலைக்கு ஜாமீன் கேட்கப்பட்ட பொழுதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் வெள்ளித் தோட்டாக்களை அள்ளித் தந்தார்கள். விடுதலை இல்லை என்றால் நமக்கு விடுதலை இல்லை என்ற நன்றி உணர்வுதான் அதற்குக் காரணம்.

விடுதலையின் வனப்பும், வலிமையும் பல வகைகளில் வளர்க்கப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ற இந்த மாற்றத்தை நமது தமிழர் தலைவர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். அத்தனை நவீன தொழில் நுட்பமும் இன்றைக்கு விடுதலையின் பாடி வீட்டில்.

பலருக்கு நாளேடுகளையும், மாத, வார இதழ்களையும் பல வண்ணங்களில் அச்சிட்டுக் கொடுக்கும் அளவுக்கு விடுதலை பரிணாமம் பெற்றிருக்கிறது.

அடிகளார் கூறிய அந்த நிலையை எட்டவேண்டும். தமிழர் வீடெல்லாம் விடுதலை வருவது என்பது வழமையாக வேண்டும்.

நமது பிரச்சாரப் பணியில் முதல் போர்வீரன் விடுதலைதான் என்பதை மனதிற்கொண்டு கழகப் பொறுப்பாளர்கள், ஆர்வலர்கள், விடுதலை சந்தாக்களின் எண்ணிக்கையை வளர்க்கவேண்டும் என்பதே 76 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலையின் வேட்கையும் விருப்பமுமாகும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


-------------------- "விடுதலை” தலையங்கம் 1-6-2010

0 comments: