Search This Blog

1.6.10

இதுதான் பார்ப்பானின் ஹிந்து மத சூட்சமம்!


சூட்சமம்!

பார்ப்பனர்களின் அதிகாரப்பீடமான இந்து மதத்தின் ஒவ்வொரு அம்சமும் பார்ப்பனர்களுக்கு இலாபம் கொழிக்கும் ஏற்பாடுதான்.

தேவாதீனம் ஜெகத் சர்வம்

மந்த்ராதீனம் துதேவதா

தன்மந்த்ரம் பிரமணாதீனம் பிராமணா மமதேவதா

(இருக்குவேதம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)

இந்தவுலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே, நமது கடவுள்; அவர்களைத் தான் நாம் வணங்க வேண்டும் என்பதுதான் இந்த வேத சுலோகத்தின் பொருள்.

இதன் அடித்தளத்தில் கட்டப்பட்டவைதான் இந்து மதத்தின் எல்லா சமாச்சாரங்களும். எது நடந்தாலும் அவாளின் கஜானாவை நிரப்புவதாகத்தான் இருக்கும்.

காளஹஸ்தி சிவன் கோயிலின் ராஜகோபுரம் தலைகுப்புற வீழ்ந்து சுக்கல் நூறாகி விட்டது.

மக்கள் மத்தியில் என்ன எண்ணம் ஏற்படும்? என்னடா! சர்வசக்தி கடவுள் என்கிறான். அவன் குடியிருக்கும் கோயிலே குப்புற வீழ்ந்து விட்டதே - கடவுள் கல்லு என்று கறுப்புச் சட்டைக்காரர்கள் சொல்லுவது சரிதானோ? என்ற சிந்தனை கிளம்பிவிடும் அல்லவா! அது ஆரியத்தின் ஆதிக்கத்துக்கு ஆபத்தாக முடிந்து விடுமே!

உடனே என்ன செய்ய ஆரம்பித்து விட்டார்கள்? காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரம் இடிந்து வீழ்ந்ததால் ராகு, கேது தோஷம் உடையவர்களுக்குத் திருமணத் தடை நீடிக்கும். குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் குழந்தை இருந்தால் அக் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று கிளப்பி விட்டனர். அதற்கு என்ன செய்ய வேண்டுமாம்?

தோஷ நிவர்த்திக்காக பவுர்ணமி நாளில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டுமாம். இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான வீடுகளில் மாலை 6 மணிக்கு நெய் விளக்கேற்றி ஓம் நமசிவாய துதியுடன் சிறப்புப் பூஜை நடந்தது. (தினமலர் 29.5.2010) சிறப்புப் பூஜை என்றால் என்ன அர்த்தம்? கோயில் அர்ச்சகனுக்கு கொழுத்த வருமானம் என்க!

காளஹஸ்தியைச் சேர்ந்த ஜோதிடர் சிங்கராஜ் பிரகாசம் என்ன கூறுகிறார்? தோஷ பரிகாரத்துக்கு சாந்தி ஹோமம் நடத்த வேண்டும் என்கிறார். ஹோமம் என்றாலே பார்ப்பன ஹோமுக்கு (அதாவது அவாள் ஆத்துக்கு) கொள்ளை வருவாய் என்க!

பிரச்சினையே சிவன்தான் அவன் சக்திக்குத்தான் சோதனை. அப்படியிருக்கும்போது அவனை ஏன் வழிபட வேண்டும்? அங்கு போய் யாகம் ஏன் நடத்த வேண்டும்? ஸ்ரீரங்கத்தில் ஒரு புரோகிதக் கல்யாணத்தில் பந்தல் தீ பற்றி மணமகன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பரிதாபகரமாக மாண்டனர். புரோகிதக் கல்யாணத்துக்கு மவுசு குறைந்து விடக் கூடாதே என்பதற்காக சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்? வீட்டுக்கு வீடு விளக்கேற்றுங்கள் என்றாரே!

காந்தியார் கோட்சே என்னும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அன்றைய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறினார்? காந்தி மரணத்துக்கு ஒரு ஹிந்துவே காரணமாகயிருப்பது ஹிந்து சமூகத்திற்கே ஏற்பட்ட பேரவமானம்! இந்தப் பாவத்தைப் போக்கிட அனைவரும் ஸ்நானம் பண்ணுங்கோ என்றாரே! எவ்வளவு சாமர்த்தியம்!

எந்த எழவாக இருந்தாலும் பார்ப்பான் தப்பிக்கவும், அவன் வயிற்றில் அறுத்துக் கட்டவுமான லாபமாக ஆக வேண்டும். இதுதான் பார்ப்பானின் ஹிந்து மத சூட்சமம்! என்ன, புரிகிறதோ!

-------------------- மயிலாடன் அவர்கள் 1-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: