Search This Blog

3.6.10

இந்த ஆட்சி சூத்திரர்களுக்கான ஆட்சி


கலைஞர்- 87

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் 87 ஆம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறார். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்ததைப்போல தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட அதிக காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

தன்னை மிகமிகப் பிற்படுத்தப்பட்டவன் என்று எத்தனை தடவை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் என்று சட்டப் பேரவையில் அறிவித்ததன் மூலம் தன்னை அடையாளப்படுத்தினார் கலைஞர்.

தன்னை மிகமிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்ததாக அறிவித்துக் கொண்டவர் இந்த ஆட்சி சூத்திரர்களுக்கான ஆட்சிதான் என்று பிரகடனப்படுத்தவும் தவறவில்லை.

திராவிடர் இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கப் புறப்பட்டு இருக்கும்பார்ப்பனீயத்துக்குத் துணை போகும் பேர்வழிகள் இந்த இடத்தைக் கொஞ்சம் அறிவைக் கூர்மைப்படுத்திப் பார்க்கவேண்டும்.

87 அகவையில், அவரது பொது வாழ்க்கையின் அகவை 70. ரோஜாப்பூக்கள் விரிக்கப்பட்ட பாதையில் அவர் ஒன்றும் பயணம் செய்யவில்லை. கள்ளும் முள்ளும் நிறைந்த காட்டாற்றுப் பாதையில் அவரின் வழிகாட்டி தத்துவத் தலைவர் பெரியார் போட்டுத் தந்த பாதையில் பத்தியத்தோடு மேற்கொள்ளப்பட்டதுதான் அவர்தம் பொதுத் தொண்டு.

அய்ந்து முறை கலைஞர் முதல் அமைச்சர் ஆகி விட்டார் என்பது மட்டும்தான் பொதுவாகப் பலருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதைச் சுற்றிச் சுழன்று தான் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. சமுதாயப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்தில் கால் ஊன்றி கடும் பிரச்சாரம் கடும் எதிர்ப்புகளுக்கிடையே பிரச்சாரம்புதுச்சேரி போன்ற இடங்களில் எதிரிகளின் தூண்டுதலால் தாக்கப்பட்ட காயங்கள் கழகம் அறிவித்த போராட்டங்கள் அதன் காரணமாகப் பரிசாகக் கிடைத்த சிறைவாசங்கள் இராப்பகல் பாரா எழுத்துப் பணிகள் இடையே பிரச்சாரக் கூட்டங்கள் (அப்பொழுதெல்லாம் இப்பொழுது உள்ளது போன்ற வசதி வாய்ப்புகள் அறவே கிடையாது.) தனி வாழ்க்கையைக் கடந்து ஒட்டு மொத்தமாக திராவிட இயக்கப் பொதுப்பணியில் முற்றிலுமாக சரணாகதி இவற்றையும் ஒரு பக்கத்துத் தராசில் போட்டு நிறுத்துப் பார்த்தால்தான், கலைஞர் அவர்கள் இன்றைய நிலைக்கு உயர்ந்ததன் அருமை என்ன வென்று புரியும்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வர வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் விரும்பியதற்கே கூட காரணம், அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அவர் சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதனைச் சார்ந்ததாக இருக்கக்கூடிய நிலை எல்லாவற்றையும் கணக்கிட்டுதான் தன் ஆதரவைத் தந்தார்.

அது மிகச்சரியானது என்பதற்கு அடையாளமாக அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செய்த சாதனைகளை நேரில் நிறுத்திப் பார்த்தால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

ஊனமுற்றோர் நல்வாழ்வில் ஆரம்பித்து உயிர் காக்கும் மருத்துவத் திட்டம், கண்ணொளித் திட்டம், குடிசை மாற்று வாரியம், விவசாயிகள் கடன் ரத்து, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, உள்ளிட்ட சமூகநல வளர்ச்சித் திட்டங்கள் ஒரு பக்கம்.

இட ஒதுக்கீடு 41 சதவிகிதமாக இருந்ததை 49 சதவிகிதமாக உயர்த்தியது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, முதன்முதலாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆசனத்தில் அமர்த்தியது. (அந்த ஜஸ்டிஸ் ஏ. வரதராசன்தான் உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியும் கூட).

பட்டதாரி அல்லாத குடும்பங்களில் இருந்து படிக்க முன்வரும் மக்களுக்கான சில சலுகைகள், வருமான வரம்பு ஆணை எதிர்ப்பு, நுழைவுத் தேர்வு ஒழிப்பு, மத்திய அரசுத் துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தேவை என்பதை வற்புறுத்தல், தேசிய உயர்கல்வி ஆணை எதிர்ப்பு உள்ளிட்ட சமூகநீதிக் கண்ணோட்டப் பணிகள் இன்னொரு பக்கம்;

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமைச் சட்டம், பெண்கள் மறுமலர்ச்சித் திட்டங்கள் (சொத்துரிமை உள்பட), தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு, தமிழுக்குச் செம்மொழித் தகுதி அங்கீகாரம் பெற்றமை, தீட்சதர்களின் ஆக்ரமிப்பில் இருந்த சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, வள்ளலார் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையைப் பார்ப்பனர் பிடியிலிருந்து விடுவித்தமை, கோயில்களில், தமிழிலும் வழிபாட்டுரிமை என்பதில் உள்ள "லும்" என்பது நீக்கப்பட்டமை என்ற வரிசையைக் காணும். கண்ணுள்ள எவரும், தந்தை பெரியாரின் கணிப்பு மிகச் சரியானதே என்பதை ஒப்புக் கொள்வர். சூத்திரர்களின் அரசு என்று கலைஞர் அறிவித்தது எத்தனை ஆழமானது என்ற நுட்பத்தையும் புரிந்து கொள்வர்.

பொதுத் தொண்டுக்கு வயது தடையில்லை என்பதை கலைஞரின் ஆசான் அய்யா பெரியார் நிரூபித்துக் காட்டியுள்ளார். அந்த வழியில் அவரது பயணம் மேலும் மேலும் தொடரட்டும்! உடல் நலனும் அதற்கு ஒத்துழைக்கட்டும்! வாழ்க பல்லாண்டு! பல்லாண்டு மானமிகு கலைஞர் பெருந்தகை!


------------------"விடுதலை” தலையங்கம் 3-6-2010

0 comments: