Search This Blog

11.6.10

போபால் பலியும், தீர்ப்பும்மத்திய பிரதேசம் போபால் நச்சு வாயு அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், ஊனமுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்றிய நினைவு அனேகமாக மக்கள் மத்தியில் மறந்தே போயிருக்கும்.

ஆளும் வர்க்கம், முதலாளித்துவக் கூட்டம் காலம் கடத்துவதன் நுட்பமான இரகசியம் இதுதான்.

1984 டிசம்பர் 2 நள்ளிரவு இந்த விபத்து நடந்தது. தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டவர்களின் எண்ணிக்கை அரசு கணக்குப்படி 3787 பேர். உண்மையில் 25 ஆயிரம் பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்.

26 ஆண்டுகளுக்குப்பின் இந்த விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர்களுக்கு தலா இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இன்னொருவர் மரணம் அடைந்துவிட்டார்.

இதில் வேதனையும், விபரீதமும் என்னவென்றால் துயரம் நடந்த மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று வாயளவில் சொல்லும்போது அழகாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் மறுக்கப்பட்ட நீதியாகவே இருப்பதை அறிய முடிகிறது.

இந்தியக் குற்றப் பிரிவு சட்டம் 304 (ஏ) 336, 337 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 304 ஆவது பிரிவின்படி 10 ஆண்டுகள்வரை தண்டனை விதிக்க இடம் உண்டாம். ஆனால் இதுவரை இந்தப் பிரிவின் கீழ் ஈராண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டது கிடையாது என்று சொல்லுவது முடக்குச் சமாதானமே! இந்தத் தண்டனை போதுமானதல்ல என்று பாதிக்கப்பட்ட மக்கள் குரல் கொடுப்பதில் மிகுந்த நியாயம் இருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ஒழுங்காக நட்ட ஈடு அளிக்கப்பட வில்லை.

1989 பிப்ரவரி திங்கள் அந்த நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பலியான 3,787 குடும்பத்தினருக்கு 470 மில்லியன் டாலர் அளிப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆனால் அதனை முறையாகப் பெற்றுக் கொடுக்கவேண்டிய மாநில, மத்திய அரசாங்கங்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கின என்பது வெட்கப்படத்தக்கதே!

மாநிலத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி. என்று மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் கொடிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வாங்கிக் கொடுப்பதில் அக்கறை செலுத்தவில்லை.

ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களுமே யாவர்.

இந்துத்தனம் பரவியிருக்கும் இந்தியாவில் எந்த பிரச்சினையைப் பிளந்து பார்த்தாலும், இந்த வருண பேதம் என்பது ஆழமாக இருக்கவே செய்யும்.

பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய பிரதேசத்திலிருந்து டில்லி வரை நடந்து வந்து பிரதமரை சந்தித்த-போதிலும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்பது எத்தகைய கொடுமை!

மேலும் குறிப்பிடத்தக்க தகவல் ஒன்று இதில் இருக்கிறது. இந்திய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நச்சு வாயு விபத்தின் காரணமாக அதனுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்திய அரசின் நிறுவனமான யூனியன் கார்பைடு இந்திய நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது. இதன் காரணமாக ஒன்பதாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வீதிக்கு வந்த அவலம் ஏற்பட்டது.

இதுபோல் எத்தனை எத்தனையோ தீராப் பின்விளைவு காயங்கள் உண்டு.

ஓர் அமெரிக்க நிறுவனத்தை உள்ளே விட்டே இவ்வளவு பெரிய துயரம் என்றால், இன்னும் எத்தனை எத்தனையோ அபாயத்தை விளைவிக்க வாய்ப்புள்ள தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து படை எடுக்கவும் ஆரம்பித்துவிட்டன. இவை எதில் போய் முடியுமோ என்ற திகிலும் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.

இத்தகு நிறுவனங்களால் ஏற்படும் நச்சுக்கழிவுகள் பெரும் பிரச்சினையாகும்.

அமெரிக்க முதலாளிகளுக்கு மனித உயிர்கள் என்பவை அவர்களின் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் ஏற்படும் வீணான பொருள்களாக (Waste materials) இருக்கக்கூடும்.

ஆனால் இந்நாட்டு மக்கள் இந்திய அரசின்கீழ் பாதுகாப்பாக இருக்கவேண்டாமா-?

இந்த அடிப்படை உத்தரவாதத்தைக் கூட தர முடியாவிட்டால் அரசு என்ற பெயர் எதற்கு?

------------------- " விடுதலை” தலையங்கம் 8-6-2010

1 comments:

Anonymous said...

ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களுமே யாவர்.

பகுத்தறிவோட தான் எழுதி இருக்கீங்க.