Search This Blog

1.6.10

பெரியார் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!


சமூகத்தை மாற்றிய பெரியாரும்,
திராவிடர் இயக்கமும் என்றைக்கும் தேவை!

கோவை: ‘‘குடிஅரசு’’ வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஆ.இராசா பேச்சு

சமூகத்தை மாற்றிய பெரியாரும், திராவிடர் இயக்கமும் என்றைக்கும் தேவைப்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறி விளக்கவுரையாற்றினார்.

கோவையில் 8.5.2010 அன்று குடிஅரசு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய உரை வருமாறு:

குடிஅரசு தொகுதிகள் வெளியீட்டு விழாவினையும் கோவையில் நடைபெறவுள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டினை விளக்கியும் நடைபெறுகின்ற இந்த மகத்தான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்.

டில்லியில் பெரியார் மய்யம்

கடந்த மாதத்தில் புதுடில்லியில், பல்வேறு சோதனைகளுக்கிடையில், சில ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருந்த பல்வேறு தடைகள், போராட்டங்களை தாண்டி நமது ஆசிரியர் பெருந்தகை அவர்கள் நமது அன்புத் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து டில்லியிலே பெரியார் மய்யத்தை திறந்து வைத்திருக்கிறார்கள்.

தென்னகத்திலே மிகச் சிறந்த பகுத்தறிவுவாதியாக மட்டுமல்ல. அரசியல் தளத்திலேயும், பொருளியல் தளத்திலேயும் ஒரு புரட்சியாளராய்த் திகழ்ந்த, திகழ்ந்துகொண்டிருக்கின்ற அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் பெயரால் அமைந்த மய்யத்தை அமைத்துவிட்டு, அந்த வெற்றி வாகையோடு கோவையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

உலகத்தமிழ் மாநாடுபற்றி தி.க., திமுக., சிந்திப்பு

பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தென்னகத்திற்கு மட்டுமல்ல. டில்லி பட்டினத்திற்கு மட்டுமல்ல. டில்லி பட்டினத்தின் வாயிலாக, தலைநகரின் வாயிலாக, எங்கெங்கல்லாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களோ, அங்கெங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார் என்ற செய்தியை சென்ற வாரம் அறிவித்துவிட்டு, இன்று உலகத் தமிழ் மாநாடு குறித்து திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து இங்கே சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்படி சிந்திக்கின்ற ஆற்றலும், பொறுப்பும், தமிழ்நாட்டில் இந்திய துணைக்கண்டத்தில் இன்னொரு சமூக இயக்கத்திற்கு இருக்கிறதா? இன்னொரு அரசியல் கட்சிக்கு இருக்கிறதா? என்றால் இல்லவே இல்லை. இந்த இரண்டு தகுதிகளும் உள்ள ஒரே இயக்கம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான் என்பதற்கு இந்த மேடையில் இருக்கும் தலைவர்கள்தான் சாட்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நம்முடைய கோவை மு.இராமநாதன் அவர்கள் இங்கு உரையாற்றினார்கள். உரையாற்றும்பொழுது வரலாற்றை எல்லாம் தொகுத்துச் சொன்னார்கள்.

கலைஞர் என்னை உருவாக்கியிருக்கிறார்

நான் கூட இந்த மேடைக்கு வரும்பொழுது என்னையும் அறியாமல் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்வது, ஏதோ பேச்சாளர்கள் வழக்கமாகப் பயன்படுத்துகின்ற வார்த்தையாக அல்ல.

என்னை அழைத்திருக்கிறீர்கள், நான் மகிழ்ச்சி அடைகிறேன். பேருவகை அடைகிறேன் என்பது பல நேரங்களில் பேச்சாளர்கள் பேசுகின்ற பொழுது வழங்கப்படுகின்ற வாய்ப்புக்கான வார்த்தை, என்கின்ற அர்த்தத்திலே அல்ல.

தலைவர் கலைஞர் அவர்கள் இந்த இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் இருக்கிற தொலைதொடர்புத்துறை அமைச்சராக என்னை இரண்டாவது முறையாக ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரு 20பேர், 25 பேர் கேபினட்டிலே அமைச்சராக பங்குபெற்று இந்தியாவை ஆளலாம் என்று சொன்னால் அதிலே ஒருவனை என்னை உருவாக்கியிருக்கிறார் என்றாலும் நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்னுடைய துறையிலே வெளிவருகின்ற விஞ்ஞானத்தைப் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

மூன்றாம் அலைவரிசை

முகத்தோடு முகம் பார்க்கின்ற, குரலோடு குரல் பார்க்கின்ற 3 ஜி என்ற அந்த மூன்றாம் அலைவரிசை தொழில்நுட்பத்தை நோக்கி நாம் நகர்ந்து-கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பிரதமரோடு பேசுகின்ற அந்த நிகழ்ச்சியிலே பேசுகின்ற போது ஏற்படாத உவகை, ஏற்படாத பெருமிதம், இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொள்கிற போது எங்களுக்கு வருகிறது என்று சொன்னால் இது ஏதோ வந்திருக்கின்ற பத்திரிகையாளர்கள் என்ன எண்ணக்கூடும்?

ஆகா, பார்த்தீர்களா? ராஜா இப்படி பேசிவிட்டார். 3 ஜி தொழில்நுட்பத்தைக் காட்டிலும், அறிவியல் நிகழ்ச்சிகளை காட்டிலும், தகவல் தொழில் நுட்பத்திலே ஏற்பட்டிருக்கின்ற நுட்பத்தைக் காட்டிலும் பெரியார் தான் இவருக்கு பெரிதாகப் போய்விட்டார் என்று யாராவது எண்ணுவார்களானால், கேள்வி கேட்பார்களேயானால் நான் அவர்களுக்கெல்லாம் சொல்கின்ற பதில்,

இந்த 3 ஜி உள்பட அறிவியல் உலகம் எப்படி வரப்போகிறது என்பதை 70ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிவிட்ட பெரியார் அவர்களின் மேடையில் பெருமிதம் கொள்ளாமல், வேறு எந்த மேடையில் பேருவகை கொள்ள முடியும்? என்ற அந்த அர்த்தத்தில்தான் பேசுகிறேனே ஒழிய, ஏதோ சம்பிராதயத்திற்காக, வழக்கத்திற்காக அல்ல. அதைத்தான் இங்கு கோவை தென்றல் அவர்கள் பேசுகிற பொழுது சொன்னார்.

1925இல், குடிஅரசு இதழ் துவக்கப்பட்ட நேரத்தில், அவர் உட்கார்ந்து இரண்டு மணி நேரம் பேசுவார். இளைஞர்கள் எல்லாம் வழிமாறி போய்க்கொண்-டிருக்கிறார்களே என்ற கவலை அவருக்கு உண்டு.

எங்களைப் போன்ற இளைஞர்கள், என்னை ஒத்த சகோதரர்கள், சரியான பாதையில் இல்லையே என்ற வருத்தமும் எங்களுக்கு உண்டு.

இளைஞர்கள் எப்படியிருக்க வேண்டும்?

அவர்களோடு சமராடிக்கொண்டிருக்கிறோம். அவர் வருத்தத்தில் இருக்கிறார். எனவேதான் வருகின்ற இளைஞர்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக பெரியார் தேவைப்படுகிறார் என்று இங்கே சொன்னார்.

நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு அது தாழ்த்தப்ட்ட சமூகத்திலே பிறந்த மாணவனாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட சமூகத்திலே பிறந்த மாணவனாக இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் பெரியாரை அறிமுகப்படுத்தி அவர்களோடு உறவாடி கருத்துகளை பதிய வைக்கின்ற பணியை திராவிடர் கழகம், செய்துகொண்டு வருகிறது என்பதில் நமக்கு அய்யமில்லை.

சோ-எழுதுகிறார்

ஆனால் இன்னமும் பெரியார் தேவைப்படுகிறாரா? என்ற கேள்வியை, இந்த இரு சமூகங்களிலே படிக்கின்ற மாணவர்கள் கூட கேட்கின்ற நிலை இருக்கிறது என்பதைத்தான் இங்கே பேசிய கோவைத் தென்றல் மு.ராமநாதன் சுட்டிக்காட்டினார்.

‘துக்ளக்’ சோ முதல் அட்டைப்படத்திலே எழுதுகின்றார். செம்மொழி என்று அறிவித்து விட்டார்கள், இனிமேல் ரேஷன் அரிசி நன்றாக கிடைக்கும்; குடிதண்ணீர் பைப்பில் குடிநீர் நன்றாக வரும்; வறுமை இருக்காது; பஞ்சம் இருக்காது என்று கேலிச்சித்திரம் வரைகிறார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தால் இனிமேல் குழாயில் தண்ணீரில் வரும். இனிமேல் பாலும், தேனும் ஓடும் என்று கிண்டல் அடிக்கின்ற சோவுக்கும், சோவுக்கு பின்னால் இருக்கிற அந்தக் கூட்டத்திற்கும் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

எனக்கு மனிதப்பற்று ஒன்றுதான்

தமிழ் செம்மொழி என்று சொல்வது ஏதோ மொழிக்காக மட்டுமல்ல. பெரியார் சொன்னார். சிவபெருமன் பாடினார் என்றபதற்காகவோ, அகத்தியர் அருளினார் என்பதற்காகவோ, எனக்கு தமிழ் மீது பற்று கிடையாது, பாசம் கிடையாது. நான் எல்லா பற்றுகளையும், துறந்தவன். நாட்டுப்பற்று என்பது எனக்கு கிடையாது. மொழிப்பற்று எனக்கு கிடையாது. கடவுள் பற்று எனக்குக் கிடையாது. மதப்பற்று எனக்கு கிடையாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் மனிதப்பற்று ஒன்றுதான் என்று கூறினார்.

சீனப் படை எடுப்பைப் பற்றி பெரியார் சொன்னார்

அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கிற அறிஞர் அண்ணா அவர்கள் கூட, வீடு இருந்தால்தான் ஓட்டை சரிபடுத்த முடியும். சீன படையெடுப்பை ஆதரித்தபொழுது கூட, அந்த படையெடுப்பை ஆதரிக்காமல் பெரியார் அவர்கள் சொன்னார்,

‘சூத்திரபட்டத்தை ஒழிக்கிறதாக இருந்தால் சீனக்காரனைக் கூட வரவேற்கத் தயாராக இருக்கிறேன் என்று சொன்ன பெருமை, துணிச்சல் இந்த மண்ணில் தந்தை பெரியாருக்குத்தான் உண்டு. அது வரலாறு. அந்த விவாதத்திற்குள் நான் போகவிரும்பவில்லை. ஆனால் எந்தப் பற்றும் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் தமிழ் இந்த சமூகத்திற்கு உயர்வு அளிக்கும் என்ற நம்பிக்கையில் அது பரப்பப்பட வேண்டும் என்று விரும்பினார் என்றால் என்ன காரணம்?

மொழி என்பது, ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் பரிவர்த்தனைக்காக வழங்கப்படுகின்ற பாஷை. அவ்வளவுதான். மொழி என்று சொன்னால், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தேவையில்லை. நான் இன்னொரு சமூகத்தோடு, உறவாடுவதற்கு மட்டும்தான் ஓர் ஊடகம் தேவைப்படுகிறது என்றால், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தேவையில்லை. ஆனால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, ஏன் கொண்டு வருகிறோம் என்று சொன்னால், அதிலேயும் கூட திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம், உலகத்தமிழ் மாநாடு கொண்டாடுகிற போது, அந்த தமிழ்நாடு நகரத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது.

உலகத்தமிழ் மாநாடு-அண்ணா நடத்தினார்

ஏன் என்று கேட்டால், அண்ணா உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். அந்த உலகத்தமிழ் மாநாட்டில் அண்ணா, முன் வைத்த முழக்கம்.

‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’

சொன்னது யார்? நம்முடைய பாட்டன். மொழிப் பற்று கிடையாது. இனப்பற்று கிடையாது. எந்தப் பற்றும் கிடையாது. மனிதப்பற்று மட்டும்தான் உண்டு என்று சொன்னாரே பெரியார். அந்த மனிதப்பற்று ஒன்றின் அடிப்படையில்தான் நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்தாலும், தமிழ் எங்களுடைய தாய் மொழி என்பதாக இருந்தாலும் உலகத்திலே இருக்கிற எல்லா சமூகத்தையும் நேசிக்கின்ற தந்தை பெரியாரின் தம்பிகள், பிள்ளைகள் என்பதை அண்ணா, வேறு விதத்தில் அவர்கள் சொன்னார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’.

ஜெயலலிதாவின் அதிகப் பிரசங்கித்தனம்

அதற்கு பிறகு எம்ஜிஆர் நடத்தினார். முழக்கங்கள் கிடையாது. வெறும் மொழி உணர்வுதான். அதற்கு பிறகு ஜெயலலிதா கூட நடத்தினார். நடத்தியிருக்கக் கூடாது. தமிழுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு அதிகப்பிரசங்கித்தானமாக நடத்தினார். அதிலே கூட சமூகக் குறியீடு கிடையாது.

ஆனால் அதற்குப் பிறகு கலைஞர் நடத்துகிறார். இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நான் இன்னும் கூட சொல்ல விரும்புகிறேன், தமிழை நேசிக்கிற திராவிடர் இயக்கத்திற்கும், சைவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மறைமலை அடிகளோ, கா.சு.பிள்ளையோ தமிழை வளர்த்தார்கள், நான் மறுக்கவில்லை.

சமூகத்தை நேசித்த தமிழ் அல்ல

வைணவம், தமிழை நேசித்திருக்கிறது. சைவம் தமிழை நேசித்திருக்கிறது. இவையெல்லாம் கடவுளை நேசித்த தமிழ். சமூகத்தை நேசித்த தமிழ் அல்ல. இன்னொரு பிறவியில் சொர்க்கம் வேண்டும்-வேண்டும் என்கிற சுயநலத்தின் அடிப்படையில் வந்த தமிழ். ஆனால், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழை அப்படி பார்க்கிறதென்றால், ஒரே வாத்தையில் சொல்லியிருக்கின்றார். இந்த உலகத்தமிழ் மாநாட்டில் குறியீடு எதுவென்று கேட்டால்

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’

அங்கே தான் கலைஞர் நிற்கிறார். பெரியார் நிற்கிறார். அண்ணா நிற்கிறார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லுகின்ற மொழி இன்னொரு மொழி கிடையாது. அதைதான் நான் முன் சொன்னேன். ஒரு மொழி ஒருத்தரோடு, இன்னொருவர் பேசுவதற்கு பயன்படும் என்றால், அந்தப் பயன்பாட்டின் எச்சமும், சொச்சமும் ஒரு கட்டத்திற்குள் நின்றுவிடும். ஆனால் எங்கள் தமிழ் மொழிஅப்படி அல்ல.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உலகத்தில் உள்ள எல்லா மனித ஜாதிகளையெல்லாம் கூட்டி சொன்ன மொழி இந்த மொழி என்கிற காரணத்தால்தான். பெரியார் சொன்னார்: ‘‘சிவபெருமான் பேசினார் என்பதற்காகாவோ, அகத்தியன் பாடினான் என்பதற்காகவோ நான் ஆதரித்துப்பேசவில்லை. தமிழ் இந்த நாட்டு மக்களுக்கு, இந்த சமூக மக்களுக்கு எல்லா உயர்வையும், தருவதற்கான வழிகோள், வழிகாட்டுவதற்கான வழிகோள் என்கிற காரணத்-தினால்தான் நான் ஆதரிக்கிறேன் என்று தந்தைபெரியார் சொன்னார். இது மொழி பற்றி தந்தை பெரியார் கொண்டிருந்த கொள்கை.

நாடாளுமன்றத்திலே அண்ணா சொன்னார்

அந்தக் கொள்கையிலிருந்து இன்றைக்கு என்ன மாறுபாடு. இந்தச் சமூகத்திற்கு வழங்க எங்களிடத்தில் எத்தனையோ இருக்கிறது என்று நாடாளுமன்றத்திலே அண்ணா சொன்னார். நைல் நதிக்கரையில் நாகரிகம் அரும்புவதற்கு முன்னால், சுமேரியாவின் நாகரிகம் தொடங்குவதற்கு முன்னால் பாபிலோனியாவில் தொங்கும் தோட்டம் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்னால் எங்களுக்கு என்று ஒரு நாகரிகம் இருந்தது. அந்த நாகரிகம் மொழியின் அடிப்படையில் அமைந்திருந்தது.

அது சொல்லிகொடுத்த பாடங்கள் இந்த உலகத்திற்கு எத்தனையோ என்பதற்காகத்தான். நாடாளுமன்றத்திலே அண்ணா சொன்னார்.

நான் ஒரு திராவிட இனத்தைச் சேர்ந்தவன். ஏதோ நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிற காரணத்தினால், ஒரு வங்காளத்துக்கோ, ஒரு குஜராத்திக்கோ, வடக்கத்தியனுக்கோ எதிரானவன் அல்ல. நான் ஏன் திராவிடன் என்று சொல்லிக் கொள்கிறேன் என்று சொன்னால், திராவிடன் என்று சொல்லிகொள்ளுகிற எங்கள் இடத்தில், உலகத்தில் வழங்குவதற்கு எத்தனையோ, தனித்தன்மைகளும், பெருமைகளும், காணக்கிடக்கின்றன என்று நாடாளுமன்றத்திலே பதிவு செய்தார்.

ஆக திராவிடர் இயக்கம் ஏற்படுத்தி இருக்கிற மாற்றம் மொழியிலே அல்ல. மொழி சார்ந்த ஊடகத்திலே மட்டுமல்ல. சமூகத்திலேயும், பொருளாதாரத் துறையிலும் இன்னும் பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.

உலகம் சுருங்கி ஒரு பந்தாக

நான் அடிக்கடி சொல்லுகின்ற ஓர் உதாரணம். அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஊடகம் பெருகி இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நாகரிகம் பெருகி இருக்கிறது.

உலகம் சுருங்கி ஒரு பந்தாக வந்திருக்கிறது. அண்டை நாடு கூட எனது வீட்டிற்கு வெப்சைட் என்ற பெயரில் வந்துவிட்டது. எனவே உலகம் சுருங்கி இருக்கிற காலத்தில், அறிவியல் வளர்ந்து இருக்கிற காலத்தில்,

இப்படி ஒரு கேள்வி

பெரியார் தேவைப்படுகிறாரா? மத எதிர்ப்புணர்வு தேவைப்படுகிறதா? ஜாதி எதிர்ப்புணர்வு தேவைப்படுகிறதா? என்று நடுநிலையாளர்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், கேள்வி கேட்கிறார்கள்.

நான் அடிக்கடி ஒன்றை சொல்வேன் ஒன்றும் பெரியதாக மாறிவிடவில்லை. சட்டை போட்டிருக்கிறோம். நல்ல உணவு சாப்பிடுகிறோம். நல்ல குடிநீர் அருந்துகிறோம். பார்ப்பதற்கு ஏதோ வெள்ளையும் சொள்ளையுமாக போகிறோம், அவ்வளவு தான்.

ஆனால் எதிலும் இந்த சமூகத்தில் எதுவும் முழுமையாக மாறிவிடவில்லை என்பதற்கு ஓர் அரசியல் உதாரணம்.

வெள்ளைக்காரப் பெண்மணி

1918களில், 1920களில் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தலைவராக வந்தவர் அன்னிபெசண்ட் அம்மையார் என்கிற ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர், அயல் நாட்டிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர். அவருடைய தலைமையிலே அன்றிருந்த எல்லாப் பிராமணர்களும், எல்லா உயர்ந்த ஜாதிக்காரர்களும் காங்கிரசு கட்சிக்கு கீழ் சேர்ந்து பணியாற்றினார்கள்.

என்ன காரணம், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிக்கு கீழ் காங்கிரஸ் இயக்கம் மிக பத்திரமாக பீடு நடைபோட்டது. என்ன காரணம் என்றால், கிறித்துவத்தை கைவிட்டு விட்டு, அன்னிபெசண்ட் அம்மையார் சமஸ்கிருதத்தை படித்தார். இந்து மதத்தை படித்தார். பகவத்கீதை தன் வழிகாட்டி என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார்.

ஊர் முழுக்கப் பிரச்சாரம்

இந்துமதம்தான். உலகத்திலே இருக்கிற பெரிய மதம். நல்ல மதம் என்று ஊர் முழுக்கப் பிரச்சாரம் செய்தார். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. கிறித்துவத்தை விட்டுவிட்டு இந்து மதத்திற்கு வந்து இந்து மதம்தான் பெரியது. உங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும், சமஸ்கிருதம் வேண்டும், இந்து மதம் வேண்டும், ஜாதி வேண்டும் என்று சொன்னால் அன்னிபெசண்ட் அம்மையாரை தலைவராக ஏற்றுக்கொண்டுபத்தாண்டு காலம், இருபது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஏற்று கொண்டது. இது பழைய வரலாறு.

அதற்குப் பிறகு 1996இல், 2004இல் இத்தாலியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. இந்தியாவிலே இருக்கிற ஒருவரை கணவராகப் பெற்று, அந்தக் கணவர் படுகொலைக்குப் பிறகு, இந்தியாவினுடைய மரபுகளைக் கையாண்டு, இந்தியர்களை நான் நேசிக்கிறேன். எங்கோ பிறந்தேன் இத்தாலியில், ஆனால் என் கணவன் இந்த தேசத்துக்காரர். இந்த மண்ணிலே உயிரை விட்டார். அவர் சார்ந்த இயக்கத்திற்கு நான் தலைமை தாங்குகிறேன். ஒரு மதச்சார்பற்ற அரசை தருகிறேன் என்று சொன்னார்.

‘யார் அந்நியன்?’ - தலையங்கம்

60, 70 ஆண்டுகளுக்கு முன், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். திடீரென்று எந்த ஜாதி ஏற்றுக்கொண்டதோ, அதே ஜாதி இல்லை இல்லை, சோனியாகாந்தி வெள்ளைக்காரி. இந்த நாட்டிற்கு ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொன்னார்கள், பெரியார் எழுதினார் 1942இல் தலையங்கம் எழுதினார் குடிஅரசில்.

யார் அந்நியன்? பெரியார் மீது என்ன குற்றச்சாற்று? அம்பேத்கர் மீது என்ன குற்றச்சாற்று. இவர்கள் சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள். இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடிக்கிறார்கள். இவர்கள் தேசத்துரோகிகள் இந்த மூன்று குற்றச்சாற்றுகளையும், பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் கொண்டு வந்தபோது பெரியார் எழுதினார்.

யார் அந்நியன்? பயப்படவில்லை. என்னைத் தொடாதே; என்னோடு உடன்படாத என் தெரு விற்குள் நுழையாதே, பார்த்தால் தீட்டு, பேசினால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றானே இங்கே இருக்கின்றவன். அவன் எனக்கு அந்நியனா? எங்கோ ஒரு தேசத்திலிருந்து வந்து என்னை தொட்டு, தூக்கி எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, மருத்துவம் பார்த்து, நீ படி என்று சொல்கிறானே, அவன் அந்நியனா என்று கேட்டார். வெளிப்படையாகவும், பட்டவர்த்ததனமாகவும், பகிரங்கமாகவும், சொன்னார். எனக்கு இங்கே இருக்கிறவன்தான் அந்நியன் என்று தந்தை பெரியார் சொன்னார்.

நண்பர்களே, நான் கேட்கிறேன்? 1942 இல் பெரியார் ‘‘யார் அந்நியன்’’ என்று கேள்வி கேட்டாரே.

அன்னிபெசண்ட் அம்மையார் இவர்களுக்கு உடன்பாடு உண்டு என்றால், ஏற்றுக் கொள்வார்கள், தலைவராக. அன்னை சோனியா காந்தி வந்து சேதுசமுத்திரத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னால், இராமன் பெயரால், சோனியாகாந்தி வெள்ளைக்கார பெண்மணி என்று சொல்வார்கள்.

இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

யார் அந்நியன்? என்று 1942இல் எழுதப்பட்ட கட்டுரை இன்றைக்கும் உயிரோடு இருக்கிறதே, என்றால், அந்தக் கேள்வி இன்றைக்கும் தொக்கி நிற்கிறதே என்றால், அந்தக் கேள்வி மட்டுமல்ல, பெரியார் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற பொருளைமட்டும்தான் அது காட்டுகிறது.

எனவே பெரியார் தேவைப்படுகிறார். செம்மொழி மாநாடு நடத்தினால் கேலி வரும். கிண்டல் வரும், சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தால், கேலி வரும், கிண்டல் வரும்.

எனவே பெரியார் தேவைப்படுகிறார் என்பதை கட்சி மனமாச்சரியங்களைத் தாண்டி, அர்த்தமுள்ள இந்து மதம் என்று ஆறு, ஏழு புத்தகங்களை எழுதி குவித்த கண்ணதாசன் பாடினார் பெரியாரை பற்றி. எழுதினார் பெரியார் மறைந்த பொழுது:

“சரித்திரம் மறைந்த செய்தி

தலைவனின் மரணச் செய்தி

விரித்ததோர் புத்தகத்தின் வீழ்ச்சியை கூறும் செய்தி

நரித்தனம் கலங்கச் செய்த நாயகனின் மரண செய்தி

மரித்தது பெரியார் அல்ல; மாபெரும் தமிழர் வாழ்க்கை’’

என்று முடித்தார் கண்ணதாசன். இந்து மதத்தைத் தோண்டி, தோண்டி ஆராய்ந்த கண்ணதாசனுக்கே தெரியும் மரித்தது பெரியார் அல்ல. மாபெரும் தமிழர் வாழ்க்கை என்று!

பெரியாரைத் தாங்கிப் பிடிப்போம்

எனவே யாரெல்லாம் தமிழர்களோ அவர்களுக்கு வாழ்க்கை வேண்டுமானால், பெரியாரைத் தூக்கிப் பிடிப்போம். பெரியார் இல்லாமல் ஒரு வாழ்க்கை வெறுமை. அதுதான் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை. அந்த பெரியார் கொள்கையின் அடையாளமாக இருக்கின்ற ஆட்சியினுடைய தலைவர் கலைஞரைப் பின்பற்றுவோம்; இயக்கத்தினுடைய தலைவராக இருக்கின்ற ஆசிரியர் அவர்களைப் பின்பற்றுவோம் என்று கூறி வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு ஆ.இராசா பேசினார்.

------------------- “விடுதலை” 24-5-2010

2 comments:

smart said...

இல்லவே இல்லை பெரியார் இறந்து விட்டார். மனிதனாக பிறந்தவர் அனைவரும் ஒருநாள் இறக்க வேண்டும். தலைப்பை மாற்றுங்கள். அப்புறம் பைபிள் உள்ள வரை கர்த்தர் வாழ்கிறார் என்று யாராவது சொல்லக்கூடும்

தமிழ் ஓவியா said...

உடலால் மறைவது வேறு கொள்கையால், தொண்டால் வாழ்வது என்பது வேறு .இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் smart