Search This Blog

14.6.10

விழுப்புரம் தண்டவாளத்தைத் தகர்த்தது குரூரமானது!


பாமர மக்களைப் படுகொலை செய்யாதீர்!

என்னதான் உயர்ந்த கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், நோக்கம் மிக உயர்ந்ததாகவே உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அரசின் கவனத்தைக் கவர்வது என்ற பெயராலோ, மக்களின் கவனத்தை ஈர்ப்பது என்ற பெயராலோ அப்பாவிப் பொது மக்களைப் பலி வாங்கும் எந்த வன்முறையும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

அப்படி செய்பவர்கள் பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்ளலாம். நக்சலைட்டுகள் என்று சொல்லிக் கொண்டாலும் சரி, சுதந்திரப் போராளிகள் என்று வைத்துக் கொண்டாலும் சரி, அவர்களின் எதிரிகள் அப்பாவிப் பொதுமக்கள் அல்லவே.

கொடுமைகளுக்கு மூலகாரணமான சக்திகளை நோக்கிக் குறி வைப்பதை விட்டு விட்டு அப்பாவி மக்களைப் படுகொலை செய்வது என்றால், அதுவும் ஒரு வகையான வன்முறையே!

ரயிலைக் கவிழ்ப்பதன் மூலம் எந்தக் காரியத்தைச் சாதிக்கப் போகிறார்கள்?அவர்கள் வைத்திருக்கும் குற்றச்சாற்றுகளுக்குக் கிஞ்சிற்றும் சம்பந்தமில்லாத பொது மக்களைப் படுகொலை செய்வதால், அவர்கள் சமுதாயத்தின் நன்மதிப்பைப் பெறமுடியுமா? வெறுப்பைத்தான் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுவதல்லாமல் அவர்கள் சாதிக்கப் போவது என்ன?

குறிப்பிட்ட எண்ணிக்கையில் இளைஞர்களைத் திரட்டி, அவர்களுக்குப் பயிற்சிகளையும் அளித்து ரயிலைக் கவிழ்க்கச் செய்வது ஒரு வகையான மனநோயே தவிர, நாட்டுக்கு நன்மை செய்துவிடாது.

மேற்கு வங்கத்தில் நக்சலைட்டுகள் ரயிலைக் கவிழ்த்தது; அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியில் தண்டவாளத்தைத் தகர்த்தது எல்லாம் எந்த வகையில் நியாயப் படுத்தப்படக்கூடியது?

இதன் மூலம் யாரைக் குற்றவாளிகள் என்று நினைத்து இந்தக் காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் மிகவும் சவுகரியமாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

குண்டு வைத்தவர்கள், ரயிலைக் கவிழ்த்தவர்கள் மக்கள் மத்தியில் வெறுக்கப்படக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படுகிறதே, அப்பொழுதே கூட ரயில் கவிழ்ப்பு, தந்திக்கம்பி அறுப்பு, அஞ்சலகங்களுக்குத் தீ வைப்பது என்பதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கண்டித்து வந்திருக்கிறார்.

நாம் செய்யும் எந்த ஒரு செயலிலும் பொதுமக்களுக்குச் சிறிய அளவில் கூட தொல்லை இருக்கக்கூடாது, பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது, பொது அமைதிக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதிலே தந்தை பெரியார் அவர்கள் மிகவும் கவனமாகவே இருந்திருக்கிறார்.

அந்த அணுகுமுறை இருந்ததால்தான் தந்தை பெரியார் அவர்கள் தாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெற்றவராக வலம் வந்திருக்கிறார்.

1948 ஜனவரி 30 ஆம் தேதியன்று காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மும்பை போன்ற இடங்களில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டதுண்டு. தந்தை பெரியார் நினைத்திருந்தால், கொஞ்சம் கண் ஜாடை காட்டியிருந்தால், அக்கிரகாரத்தில் ஒரு குஞ்சு கூளான் கூட எஞ்சியிருந்திருக்காது.

பொறுப்பான தலைவராகவும், நாட்டு மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய கடமை தமக்கு இருக்கிறது என்று உணர்ந்திருந்ததாலும்தான், மக்களிடத்தில் அமைதியை வலியுறுத்தினாரே தவிர, வன்முறை பற்றி ஜாடையாகக் கூடக் கூறவில்லையே.

அதேபோல எதையும் ரகசியமாகச் செய்யக்கூடாது என்பதிலும் தந்தை பெரியார் கண்டிப்பாகவே இருந்திருக்கிறார்.

இதில் இன்னொன்றும் கவனிக்கத் தக்கதாகும். தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒன்றோடு ஒன்று குழப்பப்படுகிறது.

ஒரு காரியத்தைத் தீவிரமாகச் செய்வது என்பது குற்றமானதன்று! வரவேற்கத்தக்கதே. ஆனால் நம் நாட்டு ஊடகங்கள் பயங்கரவாதிகளைத் தீவிரவாதிகள் என்று சொல்லி, தீவிரமாகச் செயல்படவேண்டிய காரியங்களைக் கொச்சைப்படுத்துகின்றன.

நம்மைப் பார்த்து தீவிரவாதிகள் என்று கூறி எதிரிகள் நடுங்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுவது இந்தப் பொருளில்தான்.

விழுப்புரத்தில் தகர்க்கப்பட்ட தண்டவாளத்தின் வழியாக ரயில் வந்திருந்தால்... அப்பப்பா! இந்நேரம் தமிழ்நாடே துக்க வீடாக மாறி அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தால், இந்த வன்முறையின் கோர முகம் எவ்வளவு குரூரமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

--------------------- “விடுதலை” தலையங்கம் 14-6-2010

0 comments: