Search This Blog

6.6.10

சுடுகாட்டுக்குச் சென்று கொள்ளி வைத்த புரட்சிப் பெண்

நமது மாணவர்கள், இளைஞர்கள், பட்டதாரிகள் ஆகியவர்களுக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய் கல்வி அறிவு மாத்திரம் இருந்தால் போதாது.

பொது அறிவு (Common Knowledge) மிகவும் வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு நமது கல்வி நிறுவனங்களில் பலதரப்பட்ட பொது அறிவுத் தகவல்கள் சொல்லித் தரப்படவேண்டும்.

இவர்கள் நேர்காணலுக்குச் செல்லும்போதுகூட, பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்டால், திரு, திரு என்று விழிப்பதோடு, சற்று தயங்கி, தவறான விடை கூறி தங்களை கேலிப் பொருள்போல் ஆக்கிக் கொள்கின்றனர்.

அண்மையில் ஓர் ஏட்டில் படித்தேன். ஒரு முக்கிய தேர்வு, தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தில் நேர் காணல். அவரிடம் (சென்னையில்) ஓர் எளிய கேள்வி: பக்கிங்காம் கால்வாய் எங்குள்ளது அதுபற்றி தங்களுக்கு ஏதாவது தெரியுமா?

அந்த நபர் அளித்த பதில்:

இங்கிலாந்து இராணியின் பக்கிங்காம் அரண்மனையைச் சுற்றி லண்டனில் ஓடும் ஒரு வாய்க்கால்; எப்படியிருக்கிறது பதில் பார்த்தீர்களா?

சென்னையிலிருந்து மரக்காணம் வரை ஓடும் புராதன கால்வாய், கூவம் ஆறு என்று. அது அழைக்கப்படும் நிலைகூட, சென்னையில் தேர்வு எழுதுவோர்க்குத் தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, கொஞ்சகாலம் முன்பு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு நேர் காணலில் கேட்கப்பட்ட கேள்வி:

நெய்வேலியில் என்ன கிடைக்-கிறது?

சொல்லப்பட்ட விடை: நெய்வேலியில் நெய் கிடைக்கிறது!

என்னே பரிதாபம்! சிரிப்பதா, அழுவதா?

ஒரே ஒரு தனித்திறமை நம் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு எதில் தெரியுமா?

எந்த சினிமாவில் எந்த நடிகை நடித்தார்?

யார் யாருக்கிடையே மணவிலக்கு வழக்கு நடைபெறுகிறது?

தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்றும் போதை பிஞ்சுகளைக்கூட விட்டு வைக்கவில்லை!

அருவருப்பான இரட்டை அர்த்தமுள்ள பாடலை போட்டிக்காக பாடவும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளைவிட பாப்புலரான மூன்று நீதிபதிகள் தினம் தினம் அவர்களுக்கு மார்க் போட்டு பாஸ் செய்ய வைப்பதுமாக இருப்பதால், லேசான ஹம்மிங் வாய்ஸ் கேட்டாலே, அது என்ன பாடல்? யார் பாடிய பாடல்? என்றெல்லாம் முந்திக்கொண்டு சொல்லி விடுவார்கள்!

இது வளர்ச்சியா? அறிவின் தளர்ச்சியா? இந்தியாவின் முதல் பெண் கல்வி பரப்பிய மகளிர் குல மாணிக்கம் யார் என்று ஒரு கேள்வியைக் கேட்டால், பல படித்த மேதைகளேகூட அறியமாட்டார்கள்! அவர்கள்மீது தவறல்ல; அந்தப்படிக்கு நமது நாட்டு வரலாறுகள் அமைந்துள்ளன! சமூகநீதிப் போராட்டங்கள் இடம்பெறுவதில்லையே!

பொருளாதாரம், அரசியல் இவைகளுக்கு முன்னோடியாக சமூகவியல் பாடங்கள் இளந்தளிர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவேண்டும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது 19 ஆவது நூற்றாண்டில், மகராஷ்டிர பகுதியில் பூனாவில் பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஜோதிபாஃபூலே அவரின் வாழ்விணையர் திருமதி சாவித்திரி பாய் ஜோதிராவ் ஃபூலே அவர்கள் ஆவார்கள்!

19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சமூகப் புரட்சியாளர்கள் அவ்விருவரும். இப்படி ஒரு புரட்சி ஜோடியை, அதுவும் அந்த நூற்றாண்டில் கண்டு எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்லவே!

சாவித்திரி பாய் ஜோதிராவ் ஃபூலே (1831_97) அவர்களின் வாழ்க்கையில் அவர் தனது சமுதாயத் தொண்டறத்திற்காகவும், மனிதநேயப் பணிகளுக்காகவும் சந்தித்த துன்பங்களும், தொல்லைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

இவரைப்பற்றி எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாத ஒரு நண்பர், டில்லி பெரியார் மய்யத்தில் 3.5.2010 திங்களன்று நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கின்போது, பிரிச் ரஞ்சன் மணி, பாமீலா சர்தார் என்ற இருவரும் இணைந்து தொகுத்த ஓர் அருமையான நூல், ஒரு மறக்கப்பட்ட விடுதலைப் போராளி (A forgotten Liberator) என்ற தலைப்பில் டில்லி பதிப்பகம் ஒன்று வெளியிட்ட சாவித்திரி பாய் ஃபூலேயின் வாழ்க்கை வரலாறுபற்றியும், அவர்கள் சந்தித்த போராட்டங்கள்பற்றியும் மிக அருமையானதொரு ஆங்கில நூலை எனக்கு அளித்துவிட்டுச் சென்றுவிட்டார்!

டில்லி பெரியார் மய்யத்தில், இந்தியாவின் மிகப்பெரிய சமூக, அரசியல், மத எதிர்ப்பு, பொருளாதார சமூகநீதிப் போராளிகள் 42 பேரின் பெயர்கள் இடம்பெற்று பெருமைப்-படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஜோதிபாஃபூலே அக்காலத்தில் காந்தியாருக்கு முன்பே மகாத்மா என்று மராத்திய மக்களால் அழைக்கப்பட்ட மாமேதை அவரது இணையர் திருமதி சாவித்திரி பாய்ஃபூலே அவர்களது பெயரிடப்பட்ட அரங்கமும் உள்ளது!

மிகப்பெரிய எதிர்ப்பை 18 வயதில் சந்தித்தவர் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களை தனது வீட்டிற்கு அழைத்து கல்வி கற்றுக் கொடுத்தமைக்காக பூனாவின் உயர்ஜாதியினரால் தெருவை விட்டு விரட்டப்பட்டவர்கள்.

அவரது மாமனார், ஃபூலேயின் தந்தையை அக்கிரகாரத்திலிருந்து சிலர் மிரட்டினர்; அவர் பயந்து மகனையும், மருமகளையும் அழைத்து, சூத்திர பஞ்சம கீழ்ஜாதியின் பெண்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பது தருமத்திற்கு வருண தருமத்திற்கு விரோதம். ஆகவே, அதனைச் செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள். பாவம், ஃபூலேயின் தந்தையார் எதிர்த்துப் பேச முடியாமல் தனது மகனையும், மருமகளையும் அதை நிறுத்தச் சொன்னார்! அல்லது வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்றார். அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு சிறிய வீட்டில் அப்பணியைத் தொடர்ந்தார்கள்.

விதவைகளுக்கு மறுமணம் செய்து வாழ்விக்கத் துணிந்தனர் இருவரும்!

குழந்தைப் பேறில்லாத நல் வாய்ப்பாக தொண்டை தொய்வின்றித் தொடர்ந்தனர். தற்கொலை செய்து-கொள்ள வந்த ஓர் இளம் விதவைப் பெண் அவர் மேல் ஜாதி _ அக்கிரகாரத்தவர் அவரைத் தடுத்துக் காப்பற்றி, உன் குழந்தையை நாங்கள் தத்தெடுத்து வளர்ப்போம் என்று உறுதியளித்து, அதன்படியே ஆண் குழந்தை பிறந்தவுடன் யஷ்வந்த் என்று பெயரிட்டு வளர்த்து, ஒரே கல்லில் ஜாதி ஒழிப்பு, விதவை மறுவாழ்வு தந்த கருணையாளர்கள் அவர்கள்.

ஜோதிபாஃபூலே இறந்த நிலையில், அவரது சடலத்தை எரியூட்டும்போது, இந்த அம்மையாரே சுடுகாட்டுக்குச் சென்று கொள்ளி வைத்த புரட்சிப் பெண் 28.11.1890 அன்று இந்த அமைதிப் புரட்சி.

இப்படி எத்தனையோ, சத்திய சோதக் சமாஜ் (உண்மை விளக்க இயக்கம்) என்ற ஃபூலே தொடங்கிய சமூகநீதி இயக்கத்திற்குத் தலைமை தாங்கியவர் இந்த அன்னையார்.

இவரது வரலாறு மறைக்கப்படலாமா?

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் “விடுதலை” 8-5-2010

0 comments: