Search This Blog

18.6.10

ஆரியர்-திராவிடர் யுத்தம்தான்!



இராமாயணக் காலத்தில் தொடங்கப்பட்ட ஆரியர் _ திராவிடர் யுத்தம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்று முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சொன்னது எவ்வளவுத் துல்லியமானது என்பதற்கு எங்கேயோ போய் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை அங்கீகரிக்கச் செய்த காலம் முதல், கோவையில் நடக்க இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்புக் காலந்தொட்டு இந்தப் பார்ப்பன சக்திகள் பேசும் எழுதும் கக்கும் நச்சுக் குண்டுகளைப் படிக்க கேட்கச் சகிக்கவே இல்லை.

தமிழ் செம்மொழியாக ஆகிவிட்டால், கத்தரிக்காய் விலை குறையுமா? ஏழை நெசவாளர் வீட்டுத் தறி தடங்கல் இல்லாமல் ஓடுமா? வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா? என்று கேட்டது தினமலர் கூட்டம்.

திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறந்துவிட்டதால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுமா என்றும் அதே கும்பல் கேட்டது.

கோவை செம்மொழி மாநாடு குறித்து மய்யப்பாடலை முதல்வர் கலைஞர் எழுதினார் என்றவுடன், வேறு வழியில்லாமல் திரிபுவாதத்தில் குதித்துவிட்டது துக்ளக் திரிநூல் வகையறா.

இந்து மதத் தத்துவத்தை உள்ளடக்கிய பாடல் அது என்று தன் முதுகைச் சொரிந்து கொண்டு தன் ஆற்றாமையைப் பரிதாபமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வருணாசிரமத் தர்மத்தின் ஆணிவேரை வெட்டி எறியும் குறளைக்கூட தன் கேடுகெட்ட புத்திக்கு ஏற்றாற்போல திரிபுவாதத்தில் இறங்கிவிட்டது.

கீதைக்கு வேட்டு வைத்த நூலாயிற்றே திருக்குறள் நூலோர் கூட்டத்துக்குப் பொறுக்குமா?

பார்ப்பனப் பெண்ணுக்கும், ஆதிதிராவிடர்க்கும் பிறந்தவர்தான் திருவள்ளுவர் என்று எழுதவில்லையா இந்த இழிகுணத்தார்கள்.

கோவை செம்மொழி மாநாட்டைக் கொச்சைப்படுத்தும் தனிக் கட்டுரைகள் கேள்வி பதில் என்ற பெயரால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் கோணங்கித்தனம் அப்பப்பா பொறுக்க முடியாது.

கோவை செம்மொழி மாநாட்டுக்காகக் கல்விக் கூடங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துவிட்டதாம். அனலில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடிக்கிறது துக்ளக். மாணவர்களின் படிப்பு என்னாவது என்று கசிந்துருகிறது. தீபாவளி வாணவேடிக்கை என்கிறது. (அப்பாடியாவது தீபாவளி வாணவேடிக்கை தேவையில்லாதது வீண் செலவு என்று ஒப்புக்கொள்கிறதே அதுவரைக்கும் அதன் புத்தி தெளிவடைந்திருந்தால் வரவேற்கலாம்தான்).

செம்மொழி மாநாட்டுக்காகக் கல்விக் கூடங்களுக்கு விடுப்பு விட்டால் கன கோபம் வருகிறது. ஊரில் கும்பாபிசேகம், கோயில் திருவிழா என்ற பெயரால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறதே கேவலம் கிரிக்கெட் போட்டிக்குக்கூட விடுமுறை அளிக்கப்படுகிறதேஅப்பொழுது எங்கே போனது இந்த துர்வாசர்களின் துர்நாற்றம் பிடித்த எழுதுகோல்கள்!

மூத்திரைக் குட்டையில் குளிக்கும் கும்பமேளாவுக்கும், கும்பகோணம் மகாமகத்துக்கும் விடுமுறை அளிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. ஓரினத்துக்கான உயர் செம்மொழிக்காக மாநாடு நடத்தும்போது மட்டும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஏன்?

செத்த மொழியான சமஸ்கிருதத்திற்காக ஓர் ஆண்டையே அறிவித்து கோடிக்கணக்கான ரூபாயை பாரதீய ஜனதா ஆட்சி கொட்டி அழுததே அப்பொழுது இந்தக் கூட்டம் எதிர்த்து எழுதியதுண்டா?

தமிழில் எழுதிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழர்களின் காசுகளைக் கல்லாப் பெட்டியில் நிரப்பிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழையும், தமிழர்களின் தனிப் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தும் இந்தக் கும்பலைத் தமிழர்கள் அடையாளம் காணவேண்டாமா?

தமிழா இனவுணர்வு கொள்!, தமிழா, தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் உணர்வூட்டும் முழக்கங்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டாமா?

தமிழை நீஷப் பாஷை என்று சொன்ன சங்கராச்சாரியார் கும்பலை அவரின் அடியாள்களை தமிழர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டாமா? அந்த இன எதிரிகளின் ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் இக்காலகட்டத்திலாவது தமிழர்கள் சூளுரை எடுப்பார்களாக!


-------------------- "விடுதலை” 18-6-2010

4 comments:

Thamizhan said...

இந்தப் போராட்டம் இன்னும் தொடர்வது இணையத்தில் நன்கு தெரிகிறது.
திராவிடத் தோழர்களின் பகைமையில் குளிர் காயும் உஞ்சவிருத்திக் கும்பல் போடும் ஆட்டம் மற்றவர்களுக்குப் புரிந்தால் சரி.
பெற்ற தாயையே வாடி,போடி என்றழைக்கும் கூட்டத்திற்குப் பெண்ணுரிமைக்காகப் போராடி, படித்த பெண் அறிஞர்களால்,பெண்கள் மாநாட்டிலே கொடுத்த பட்டம் "பெரியார்" என்பது கூடப் புரியவில்லை.
தொடரட்டும் ஆரிய திராவிடப் போராட்டம்.வெல்வது மனித நேயம்,தோற்பது உஞ்ச விருத்தி என்பது தெளிவாகட்டும்.
ஆடைகளைத் தான் மாற்றியிருக்கிறார்களே தவிர அறிவை மாற்றவில்லை என்பது "படித்த சூத்திரர்"களுக்கு நன்கு புரியட்டும்.

Unknown said...

இங்கு விடுமுறைகள் வரவேற்கப்படுகின்றன!

கை.க.சோழன் said...

மிகச்சரியான வாதம் அதேநேரம் தாங்களும் 'மய்யப்பாடலை' என்ற வார்த்தைக்கு பதிலாக "மையப்பாடலை' உபயோகித்தால் நன்றாக இருக்கும். இங்கே சில 'ஐயாக்கள்' 'அய்யா' என்றே வார்த்தை உபயோகம் செய்கிறார்கள். 'ஐ' என்ற எழுத்தே மறைந்துவிடும் போலிருக்கிறது. உலகத்தமிழ் மாநாடு நமது மொழிப்பாதுகாப்பு மற்றும் எழுத்து உபயோகங்கள் பற்றிய விழிப்புனைவையும் ஏற்படுத்தவேண்டும். நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி