Search This Blog

29.6.10

கடவுளை மற, மனிதனை நினை


மனிதனை நினை!

கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்னார் தந்தை பெரியார். அது ஏதோ சொல் அலங்காரம் அல்ல நடைமுறை தத்துவம் வாய்ந்தது என்பதற்குப் பெரிய ஆய்வரங்கங்கள் தேவையில்லை. இதோ ஒரு செய்தி டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் வெளிவந்துள்ளது (16.6.2010).

திருவண்ணாமலை நகரத்தில் அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியும், மலை கிரிவலப் பாதையிலும் தங்கியிருக்கும் சாதுக்களும், சாமியார்களும் கலைஞரின் உயிர் காக்கும் உயர் மருத்-துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்கின்றனர். மாநிலத்திலேயே இத்திட்டத்தின்கீழ் சாமியார்களும், சாதுக்களும் பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இவர்களைப் பதிவு செய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் 15 ஆம் தேதியன்று வட்டாட்சியர், அலுவலகத்தில் 180 சாதுக்கள் நிழல் படமெடுக்கப்பட்டனர் என்று கூறினார். அருணாசலேஸ்வரர் கோவில் நிருவாகம் அளித்த அடையாள அட்டையையே அவர்களின் வாழ்விடங்களுக்கான அத்தாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இத்திட்டத்தின்கீழ் அவர்கள் பயன்பெற பதிவு செய்யப்பட்டுள்து. வரும் நாள்களில் மேலும் 100 சாதுக்கள் பதிவு செய்து-கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

மேற்கண்ட செய்தி எதைத் தெரிவிக்கிறது? திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரர் இருக்கிறாரே அவர் என்ன சாதாரணமானவரா? வேதபுரீஸ்வரர் கோவில் இருக்கும் வேதாரண்யம் மண்ணை மிதித்தாலே சகல பாவங்களும் பஸ்பம் ஆகும் என்றால். திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரரை நினைத்தாலேயே எல்லா வகையான பாவங்களும், தொல்லைகளும் நிர்மூலம் ஆகும் என்று சொல்லி வைத்துள்ளனர்.

அப்படிப்பட்ட அருணாசல ஈஸ்வரர் கோவிலைச் சுற்றி வாழும் கிரிவலப் பாதைகளில் டேரா அடித்து வாழும் சாமியார்களும், சாதுக்களும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் உயர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர் என்றால், இதன் பொருள் என்ன?

அருணாசல ஈஸ்வரரை நம்பிப் பயன் இல்லை; மாறாக முதலமைச்சர் கலைஞரைத்தான் நம்பவேண்டும் என்ற முடிவுக்கு இவர்கள் வந்துவிடவில்லையா?

அவர்களுக்கே மிக நன்றாகத் தெரியத்தான் செய்கிறது. கோவில் என்பதில் அதில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது வெறும் கல் என்பது கறாராகவே பக்தர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

ஏதோ சுற்றுச்சூழலை அனுசரித்தும், கோவிலை நம்பிப் பிழைப்பு நடத்தவேண்டியுள்ளதே என்ன செய்வது பக்தியிருப்பதுபோல காட்டிக் கொள்ளத்தானே வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தாலும் அவர்கள் காலத்தைக் கடத்துகிறார்களே தவிர, மற்றபடி கடவுளாவது வெண்டைக்காயாவது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அதனால்தான் கடவுளை மறந்து முதலமைச்சரை நம்புகின்றனர்.

காலம் கடந்தாவது கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துதான் உண்மை, உண்மையிலும் உண்மை என்பதை மற்றவர்களும் உணர்வார்களாக!

----------------- மயிலாடன் அவர்கள் 29-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.6.10

அண்ணா பார்வையில் கலைஞர்

தன்னை வெல்வான்
தரணியை வெல்வான்

தம்பி,

இலைகள் உதிர்ந்த நிலையில் சில மரங்கள், இது முழுவதும் வெட்ட வெளி அல்ல என்பதைக் காட்டுவதற்காக இருந்து கொண்டிருந்தன. மற்றபடி அந்த இடம் இயல்பாகவே, வெப்பத்தை அதிகமாக்கிக் காட்டக்கூடிய இடம்.

முப்பது அறைகளுக்கு மேல் இருக்கும். அதிலே ஒரு அறையில் தம்பி கருணாநிதி.

மற்ற அறைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. மொத்தத்தில் ஒரு விதமான வெறிச்சோடிய நிலை.

ஆள் நடமாட்டம் இல்லை என்பது மட்டும் அல்ல பேச்சுச் சத்தம்கூடக் காதிலே விழ முடியாத இடம். அத்துணை தனிமை.

பாதுகாப்புச் சட்டப்படி சிறை பிடித்து வைத்திருப்பதால் மிக்க பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்பது திட்டம் போலும். அதனால்தான் சிறைக் கட்டடத்தில் பல நூறு பேர் இருக்க கருணாநிதிக்காகவே ஒரு பெரிய தனிச் சிறையை ஒதுக்கி, அதிலேயும் தனியாக வைத்திருக்கிறார்கள்.

சிறையிலே போட்டு அடைத்ததும், வேதனை வென்றுவிடும். உணர்ச்சிகள் மங்கிவிடும். உறுதி தளர்ந்துவிடும் என்று நினைப்பு.

ஆனால் சிறை அவ்விதமான தல்ல. அந்த இடம் உறுதியைக் கெட்டிப்படுத்தி வைக்கும் உலைக் கூடம். சிந்தித்து, சிந்தித்துத் தமது சிந்தனை செல்வத்தைச் செம்மையாக்கிக் கொள்ள வைக்கும் பயிற்சிக் கூடம்.

உடல் களைத்தாலும் உள்ளம் களைத்திடாது என்ற நிலையில் உள்ள கருணாநிதியிடம் ஒரே ஒரு கவலைதான் இருக்கிறது தருமபுரி பற்றி.

வெற்றி நிச்சயம். அந்தச் செயலிலே தனது பங்கினைச் செலுத்த முடியாதபடி பக்தவத்சலனார் செய்துவிட்டாரோ என்ற கவலைதான்.

கருணாநிதியை ஏன் சிறை பிடித்தீர்கள்?

என்ன குற்றம் செய்தான் அந்த பிள்ளை? குற்றமா? இவர்களின் குணத்தை அம்பலப் படுத்தினான் எழுதினான்.

ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பயம், கோபம்...

இவை பற்றி எண்ணிடும்போது, சிறையில் தம்பி அடைக்கப்பட்டிருப்பது குறித்து இயற்கையாக எழும் சோகம் கூட மறைகிறது. கருணாநிதியின் எழுத்துக்கும் பேச்சுக்கும் ஆட்சியாளர் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது. ஒரு வெற்றிப் புன்னகை தன்னாலே மலருகிறது.

கழகத்தின் வளர்ச்சி கண்டு காங்கிரஸ் அரசு கதி கலங்கிப் போய் உள்ளதை எடுத்துக் காட்டி, கழகத் தோழர்களுக்கு மேலும் எழுச்சியைத் தரவல்ல நிகழ்ச்சி, கருணாநிதியைச் சிறைப்படுத்தி இருப்பது என்பது புரியும் போது மகிழ்ச்சி கொள்ள கூட முடிகிறது.

அடக்கு முறையை வீசி அறப்போர் வீரர்கள் அடக்கிவிடவோ, அவர்தம் பாசறையை ஒழித்து விடவோ முடியாது. சிறைக்கோட்டம் தள்ளப்படும் லட்சியவாதிகளோ, உறுதி பன் மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல, தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம் பற்றிய எண்ணம், இவைகளைக் கூட மறந்து விடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப் பற்றிய எண்ணம் எழுப்பி விடும். ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது.

இது பற்றியே ஆன்றோர் சிறைச்சாலையை அறச்சாலை என்றனர்.

பாளையங்கோட்டைச் சிறை வாயிலில் கண்டேன், இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை.

அங்கு பொறிக்கப்பட்டு இருப்பது என்ன? தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!

- அண்ணன் அண்ணாதுரை

(பாளையங்கோட்டை தனிமை சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்தபோது 4.4.1965 இல் அறிஞர் அண்ணா எழுதிய உணர்ச்சி மிகு கடிதத்தின் ஒரு பகுதி).

நடிகர் சிவகுமார் எழுப்பிய கேள்விக்கு என்ன பதில்?


கோவிலும் தீண்டாமையும்

கோவைஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருத்தரங்குகளும், ஆய்வரங்கங்களும், கவியரங்குகளும், பட்டிமன்றங்களும் நடைபெற்றன. பெருந்திரளாகக் கூடிப் பொது மக்கள் அவற்றை ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக நேற்று முற்பகல் (27.6.2010) நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற வித்தாக விளங்கும் தமிழர் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் சிவகுமார் அவர்களின் உரையும் முத்தாய்ப்பாகவே ஒலித்தது.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், கோவிலுக்குச் செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் கட்டிய மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் குடமுழுக்கின்போது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் சாமி சிலையைச் செதுக்கிய சிற்பியும்கூட வெளியி லேயே நிற்கும் நிலைதான்.

இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான்.

ஆனால், எல்லா நடைமுறைகளையும் கடை பிடித்து நடந்துவரும் அப்பாவி பக்தன் 2 நாள் காத்திருந்து சாமி கும்பிடுகிறான். இதன் பெயர் சாமி தரிசனமாம். இதனால்தான் கோவி லுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை.

தந்தை பெரியாரும், கோவிலையும், சாமி யையும் வெறுத்தார். தனது 95 வயதிலும் மூத்திரக் குழாய் வழியும் நிலையில்கூட உழைத் தார். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று நடிகர் சிவகுமார் ஓர் அருமையான கருத்தை சொல்லவேண்டிய இடத்தில் மிக அழுத்தமாகவே பதிவு செய்தார்.

மொழி மனிதனுக்காகத்தான். தமிழ் பேசும் தமிழரின் அவல நிலையைத்தான் நடிகர் சிவகுமார் எடுத்துரைத்தார். அவர் கூறியதில் ஓர் எழுத்தைக்கூட மறுக்க முடியாது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களோ, தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களோ இந்தக் கருத்தைச் சொல்லும்பொழுது அதற்கு வேறு வண்ணம் தீட்டக்கூடும். ஆனால், சொல்லியி ருப்பவரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கோவிலில் வழிபாட்டு மொழி குறித்தும், அர்ச்சகர் பிரச்சினை குறித்தும் பேசலாமா? என்று கேள்வி கேட்கும் சில மேதாவிலாசங்கள் உண்டு.

பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய அதே வினாவை ஆன்மிகவாதியான ஒருவரே எழுப்பியிருக்கிறாரோ, இதற்குப் பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டு இருக்கவில்லையா?

நடுநிலையில் இருந்து தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைச் சிந்திக்கும் எவரும் உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசையான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்தும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம் இயற்றி இருந்தும்கூட, அதன் அடிப்படையில், அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆணை பிறப்பிக்கும் நிலையில், மீண்டும் உயர்ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்றால், இதுபற்றி கடவுள் நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நடிகர் சிவகுமார் அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார் என்றாலும், அதற்குள் புதைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைக்கும் கோவிலுக்கும் மூல விக்கிரத்தின் அருகில் சென்று அர்ச்சனை செய்வதற்கோ, வழிபடுவதற்கோ முட்டுக்கட்டை போடுபவர்கள் பார்ப்பனர்கள் என்பதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லத் தயக்கம் ஏன்?

நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சினையில் மனித உரிமையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு அளிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்? என்பதெல்லாம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள்.

இதில் காலம் மேலும் மேலும் கடத்தப்படுமேயானால், நேரடியாகவே கருவறைக்குள் நுழையும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனை யார்தான் தடுக்க முடியும்?

--------------------”விடுதலை” தலையங்கம் 28-6-2010

கருணாநிதியைப் பத்தி கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான்!

கலைஞரை பற்றி காமராசர் சொன்னது

ஸ்தாபனக் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தி.மு.கழகம் நெருக்கடி நிலையைக் கண்டித்த போதிலும், திமுக அரசு இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது பற்றி மனக் கசப்புடன் பேசினார். கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். அதைக் கேட்டதும் காமராசுக்கு கோபம் வந்து விட்டது.

அட சும்மாக் கெடப்பா ரொம்பத் தெரிஞ்சவன் போல... இந்த நேரத்துலே எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் கருணாநிதி நடத்துக்கிட்டாரு. அது ஒம் மூளைக்கி எப்படி எட்டும்னேன்... சும்மா வீறாப்புக் காட்டினா ஆச்சா... அதுனால என்ன லாபங்கறேன்... அந்தம்மா டி.எம்.கே.கவர்மெண்டை டிஸ்மிஸ் பண்ணும், இப்ப இங்க மிஞ்சியிருக்கிற சுதந்திரமும் இல்லாமல் போகும். வேற என்ன நடக்கும்னேன்? இந்த நேரத்துக்கு இங்க கருணாநிதி தொடர்ந்து பதவியில் நீடிச்சுக்கிட்டு இருக்கறது ரொம்ப அவசியம். அதை மறந்துடாதே. பிரை மினிஸ்டரைப் பத்தி ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு உத்தரவு வருது. அங்கங்க இருக்கற சீப் மினிஸ்டரெல்லாம் அந்த உத்தரவிலேயே தன்னைப் பத்தியும் ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு சேர்த்துக்கறான். பார்க்கப்போனா இப்ப கருணாநிதியைப் பத்தித்தான் கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான். கருணாநிதி நினைச்சா இந்த உத்தரவைப் பயன்படுத்தி அதை தடுக்க முடியும். ஆனா அவரு அப்படிச் செய்யல அதை மறந்துடாதே. கருணாநிதி விரும்பினா ப்ரை மினிஸ்டரோட ஒத்துப் போயி நிம்மதியா இருந்துக்கிட்டிருக்க முடியும். அதையும் அவரு செய்யல. இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிட்டா ஆச்சா என பொரிந்து தள்ளினார் காமராசர். கொஞ்ச நேரத்துக்கு அறையில் ஒரே நிசப்தமாக இருந்தது.

------------------- மதுரைமணி, 2.6.2008

கொள்கையா? பதவியா?

இந்தித் திணிப்பை எதிர்த்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவுக்குத் தீ மூட்டும் போராட்டக் கட்டத்தில் மதுரையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறியது. (1986 டிசம்பர்)

ஒரு கொள்கைக்காக ஒரு கோட்பாட்டிற்காக - இந்த இயக்கத்தைப் பெரியார் உருவாக்கி, அது அரசியல் ரீதியிலும் மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்ற காரணத்தால் அண்ணா அவர்களால் தி.மு.கழகம் உருவாக்கப்பட்டு 18 ஆண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்து, 9 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து, அதற்குப் பிறகு ஆட்சி போய்விட்டதே என்ற ஏக்கப் பெருமூச்சு விடாமல், ஆட்சியில் இருந்தாலும் இதுதான் கொள்கை, இல்லா-விட்டாலும் இதுதான் கொள்கை என்றுதான் நம் இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

சிலரோ, பதவிக்காகக் கொள்கைளை இழப்பார்கள், நாம் கொள்கைகளுக்காகப் பதவியை இழப்பவர்கள்; உயிரைக்கூட இழக்கத் துணிந்தவர்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் பதவிக்காக கொள்கையை இழந்தவர்களுக்கும் கொள்கைக்காகப் பதவியை இழந்தவர்களுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம்.


27.6.10

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்


சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு சேத்திர தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40 வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது. அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜ்யமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபஸ்வாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள். மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது. இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமுகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வதுவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்-களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

வைக்கம் போர்

இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ஆம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜ்யத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடையதாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதற்கேற்றாற்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்தவருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின்போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர். இவர் காலத்தில்தான் தொண்டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற்கெல்லாம் வெளிப்படுத்தினவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

இந்திய மன்னர்கள்

நிற்க, எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றியான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.

தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும். அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக்கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமுக சீர்திருத்தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக்-காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவதுடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

விளையாட்டுப் பேச்சு

இன்றைய தினம் சுசீந்திரத்தில் தெருவில் நடக்கத் தடைப்படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர்களுமான ஈழவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டியார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர் கோவிலிலாவது, திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றிபெற்றவர்களாவோம். இந்த சத்தியாக்கிரகமானது 1925 வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப்பட்டதாகும். அவ்வாக்குறுதி ஏமாற்றப் பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படுகின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாயமிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொதுசத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமதானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.

ஆகையால் சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசியவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

-------------------------- தந்தை பெரியார் -" குடிஅரசு" -தலையங்கம் -01.06.1930

பிட்டத்தில் அடித்தான் பல் விழுந்து போச்சு!

பஞ்சாங்கம் 40+


தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பது சட்டப்படியாகவும் வழக்கப்படியாக வும் வந்துவிட்ட நிலையிலும் கூடச் சில மண்டூகங்கள் சித்திரை மாதத்தில் வருஷம் பிறப்பதாகக் கூறிக் கொண்டு கோயிலுக்குப் போய்ப்பஞ்சாங்கம் படிப்பதைப் பழக்கமாக வைத்துள்ளார்கள். பஞ்சாங்கம் படிப்பதால் நிலத்தில் விளைச்சல் கூடுதல் ஆகுமாம். பிட்டத்தில் அடித்தான் பல் விழுந்து போச்சு என்று புகார் கொடுத்தவனைப் போல இதைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். கிணற்றுக்குள் மூழ்கிக் கிடக்கும் தவளைக்கு அதுவே மிகப் பெரிய கடல் என்ற எண்ணமாம். அதனால்தான் இவர்களை மண்டூகம் (தவளை) என்கிறோம்.

பஞ்சாங்கத்திற்கும் பயிர் செய்வதற்கும் என்ன தொடர்பு? யாரும் விளக்கவில்லை. அப்படித் தொடர்பு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், எந்தப் பஞ்சாங்கத்தைப் படித்தால் பயிர் வளரும்? சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், எண் கணிதப் பஞ்சாங்கம் என்று இரண்டு பஞ்சாங்கங்கள் தமிழ்நாட்டில் விற்கிறார்களே! இவற்றில் எதில் பயிர் வளர்க்கும் உரங்கள் கிடைக்கின்றன? ஒன்றில் இயற்கை உரமும் மற்றொன்றில் இரசாயன உரமும் கொட்டிக்கிடக்கின்றதா? விவரம் சொல்லலாமே!

40க்கும் மேலே

தமிழ்நாட்டில் இப்படிக் குழப்பம் என்றால், பாரதநாடு முழுவதிலும் பெருங்குழப்பமே உள்ளது. ஏறத்தாழ 40 வகையான பஞ்சாங்கங்கள் இந்தப் புண்ணியப் பாரத பூமியில் புழங்கி வருகின்றன. மகாராட்டிரத்தில் மட்டும் எட்டுவிதப் பஞ்சாங்கங்கள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று உடன்பாடானவை அல்ல; எதிரும் புதிருமானவையாகவே உள்ளன.

சூரியனை மய்யமாக வைத்து இந்துமதப் பஞ்சாங்கங்கள் நாள், மாத, வருடக் கணக்குகளைச் செய்து வருகின்றன. இசுலாமிய மார்க்கத்தில் இருப்பது நிலவை மய்யமாக வைத்துக் கணக்கிடும் முறை. இந்து மதத்திலேயும் பகுதிக்குப் பகுதி மாறுபாடுகள் உண்டு. வடஇந்தியப் பகுதிகளில் முழு நிலவு (பவுர்ணமி) நாளை வைத்து மாதங்கள் பிறக்கின்றன. மத்திய இந்தியப் பகுதிகளில் இதுவே மறைநிலவு (அமாவாசை) நாளை வைத்துப் பிறப்பதாகச் சொல்கிறார்கள். தென் இந்தியாவிலோ சூரியன் நுழையும் ராசிகளுக்கு ஏற்ப மாதப் பிறப்பைக் கணக்கிடுகிறார்கள்.

இரவில் திருமணம்

வட இந்தியாவில் விக்ரம சகாப்தம் என்று கூறி, தீபாவளிப் பண்டிகை அன்று புத்தாண்டு பிறப்பதாகக் கூறுகிறார்கள். மற்றப் பகுதிகளில் சாலிவாகன சகாப்தம் எனக் கூறி வசந்த காலத்தில் வருடம் பிறப்பதாகக் கூறுகிறார்கள். குஜராத்தி, மார்வாடி-கள் போன்ற வணிக ஜாதிகள் நிறைந்துள்ள பகுதிகளில் திருமணங்கள் எல்லாமே இரவு நேரங்களிலேயே நடக்கின்றன.

இரவு நேரத் திருமணம் என்பதைத் தென் இந்தியாவிலோ மகாராட்டிரத்திலோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பகல் முழுவதும் வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்துப் பிறகு ஓய்வாகக் குடும்பச் சடங்குகளைச் செய்வது அங்கு வியாபாரிகளின் வாடிக்கை. அதில் குறைகாண முடியாதே!

ஒரே இந்து நாடாக இருந்த நேபாளத்தில் வாரத்தின் ஏழு நாள்களிலும் திருமணங்கள் நடக்கும். மாலை தொடங்கி இரவில் முடியும். யாருக்கும் சிரமம் இல்லாமல், அனைவரும் கலந்து கொள்ளும் காலமாக இருப்பதால் சிறந்த நடைமுறை. ஆனாலும், தென்னாட்டில் கடைப்பிடிப்பது கிடையாது. பின் என்ன பாரதம் ஒரு நாடு? பின் என்ன இந்து மதம்? ஒரே மாதிரியான நடைமுறை இல்லையே! பிறகு எப்படி, இந்து என்று பெருமைப்படுவது? பஞ்சாங்கத்தின்படி நாள் ஒன்றுக்கான 24 மணிநேரம், 60 நாழி-கைகளாகப் பிரிக்கப்படுகிறது. பகல் 12 மணி நேரத்திற்கான 30 நாழிகைகளுக்கு மட்டுமே, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை, மேல்நோக்கு, கீழ்நோக்கு எல்லாம்? சூரியன் மறைந்த பிறகு உள்ள 12 மணி நேரத்திற்கான 30 நாழிகைக்கு எதுவுமே கிடையாது. ஆகவே இந்த நேரத்தில் சுப காரியங்கள் செய்வதற்குத் தடை ஏதும் கிடையாது. இது வட நாட்டாருக்கு வசதி என்றால், தென் நாட்டாருக்கு வசதி இல்லை என்றால் பின் எப்படி பாரதம் ஒரு நாடு நாம் அதன் புதல்வர் அந்த நினைப்பை நாம் அகற்றக் கூடாது என்றால், என்ன நியாயம்? கேட்க மாட்டோமா?

எல்லா மாதமும் திருமணம்

இந்த நிலையில் மாராட்டியத்தில் புதிய பிரச்சினை. திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்ட முகூர்த்த நாள்கள் பஞ்சாங்கப்படி மிகவும் குறைவு. அதிலும் மழைக்கால மாதங்களில் (சாதுர் மாதம்) அறவே முகூர்த்த நாள்கள் கிடையாது கூடாது. வேலை செய்யாமல் பிச்சை எடுத்துச் சாப்பிடவேண்டிய சாமியார்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள் போன்ற ஆள்கள் மழைக்காலத்தில் ஊர், ஊராகப் போய்த் தெருத்தெருவாகத் திரிந்து பிச்சை எடுப்பது சிரமம் என்ற காரணத்தால் _ இந்தத் தெண்டச்-சோற்று மனிதர்களை ஓரிடத்தில் தங்கவைத்து வடித்துப் போடுவது என்ற பழக்கத்தினால் வந்தது இந்த ஏற்பாடு. மழைக்காலத்திற்கு எறும்பு தன் தீனியைச் சேகரித்து வைத்துச் சாப்பிடுவது போன்ற வகையிலான ஏற்பாடு. ஆகவே, இவை கெட்ட மாதங்களாம். சுப காரியங்கள் நடக்கக் கூடாதாம்.

பஞ்சாங்கத்தை மாற்று

இதை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை மாராட்டியத்தில் எழுந்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட கோல்காபூர் (சமஸ்தானம்) மாவட்டத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அந்த ஊரில் உள்ள கர்வீர் பீட சங்கரமடத்தின் அதிபதி கிறீவித்யா நிருசிங் பாரதி என்ற பெயர் கொண்ட சங்கராச்சாரி இதற்கு முன் முயற்சி எடுத்துள்ளார். மாராட்டியத்தில் பஞ்சாங்கம் போடும் எட்டுப் பேரில் அய்ந்து பேரைக் கூட்டிப் பேசியிருக்கிறார். இவர்களின்முடிவு சில நாள்களில் அனைத்து சங்கராச்சாரிகளின் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்படுமாம்.

சாதுர்மாதகாலமாகிய நான்கு மாதங்களிலும் திருமணங்கள் நடக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்பது வெளிநாடுகளில் உள்ள மராட்டிய மக்களின் வேண்டுகோளாம். அதற்-கான முயற்சிகளை எடுப்பவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நாளில் பெரும்பகுதியை வீணாக்குவது வாரத்தில் செவ்வாய், சனி இரண்டு நாள்களை ஒதுக்குவது, மாதத்தில் நான்கைந்து நாள்களை மட்டும் நல்ல நாள் என்பது, ஆண்டில் நான்கு மாதங்களைப் புறக்கணிப்பது என்று மதத்தைக் காரணங்காட்டிக் கூறுவது என்பது மா-றுமா? இந்து மக்களும் ஏனைய மக்களைப் போலவே மூளையைப் பயன்படுத்தும் மாற்றம் ஏற்படுமா? சட்டப்படி நாமும் இந்து என்பதால் இந்தக் கவலை நமக்கும் ஏற்படுவது சரிதானே!

இடிபாடும் தங்கத்தகடும் மிஞ்சிப்போன சந்தனத்தை எங்கெல்லாமோ பூசிக் கொள்வது என்று கொச்சையான சொலவடை ஒன்றுள்ளது. அதைப்போல, திருப்-பதிக் கோயிலின் தங்கத்தை என்ன செய்வது என்று புரியாமல், சுவரில் அடிக்கப் போகிறார்களாம். ஏற்கெனவே கோபுரத்தில் அடித்திருக்-கிறார்கள். அமிர்தசரஸிலுள்ள சீக்கியர்களின் தங்கக் குருத்வாரா போலத் திருப்பதி பெயர் வாங்க வேண்டு-மாம்!

பக்கத்தில் உள்ள சிலந்தி பாம்பு யானை க் கோயில் (சீகாளத்தி) இடிந்து விழுந்துவிட்ட நிலையில் வைணவர்களுக்கு இது தேவையா? சிவன் கோயிலில் இருந்து சிறு சுண்ணாம்புக் கல் கீழே விழுந்ததற்குக் காரணமான காக்கையை வீர வைணவக்காக்கை ஆக்கிய நாமதாரிகள், மறைவாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து போனார்கள் என்பது ஏடுகள் எழுதாத சேதி. திருப்பதியில் கோடி கோடியாகக் கொட்டப்படுவதற்கும், சீகாளத்தியில் ஈ ஓட்டும்நிலை உள்ளதற்கும் வாஸ்துவைக் காரணம் காட்டி வயிறு வளர்த்தவர்கள் காட்டில் கனமழை! இப்போது கோபுரமே இடிந்து விழுந்துவிட்டதில், வாஸ்து வியாபாரிகளுக்கும் வருமானம்!

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் என்பது பொய்யாகிவிட்டது. சர்வேஸ்வரன், பரமேசுவரன் என்பதெல்லாம் பொசுங்கிவிட்டது. கைலாசபதியின் குளிர்கால வாசஸ்தலம் இடிந்து நொறுங்கிப் போனதில் கடவுள் ஸ்தானம் கனவாகிப் போய்விட்டதில் வைணவர்களுக்கு வெகு சந்தோஷம்!

சிவன் கோயில் இடிந்ததற்குக் கொஞ்சங்கூட வருந்தாமல், சுவருக்குத் தங்கத் தகடாம். 10 ஆயிரம் சதுர அடிப் பரப்புள்ள கருவறைச் சுவர்களில் தங்கத் தகடாம். 200 கிலோ தங்கமாம். 100 கோடி ரூபாய் செலவாம். 125 கிலோ தங்கம் வசூலாகி விட்டதாம். முகேஷ் அம்பானி, அவர் தம்பி அனில் அம்-பானி, விஜய் மல்லய்யா போன்ற நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சம்பாதிக்கும் தொழில் முதலாளிகள் நன்கொடையாளர்களில் சிலர். முகேஷ் கொடுத்தது 5 கோடியாம், கருவறைக் கதவுகளுக்குத் தங்கம் பதிக்க 6 கோடி ரூபாய் தருகிறாராம் மல்லய்யா.

கொள்ளையோ கொள்ளை

இந்தக் கணக்கு வழக்குகளில் சுத்தம் இல்லை சுரண்டல் நிறைய கொள்ளை ஏராளம் என்னும் புகார் வந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானக் குழு உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி புகார்தாரர்.

10ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் முழுமையாக மூடப்பட்டுவிடும் என்பதால் இதனை எதிர்க்கிறார் பேராசிரியர் கிரண்காந்த் சவுத்ரி. வெங்கடேசுவரா பல்கலைக் கழகப்பேராசிரியர் இவர். சுவரிலிருந்து சில அங்குல இடைவெளியில் தங்கத் தகடுகள் பதிக்கப்படுவதால், ஒளி, காற்று இல்லாமல் சுவரே பாதிக்கப்படும் என்கிறார். இதே கருத்தைத் திருப்பதி தேவஸ்தானத் தலைமைப் பொறியாளர் ஆஞ்சனேயலு நாயுடுவும் தெரிவித்திருக்கிறார். தங்கத் தகடுகளைத் திருடிக் கொண்டு போகாமல் தடுப்பதற்காகத் தனியாக வேலி அமைக்கப்பட வேண்டும் (ஏன் என்றால் ஏழுமலையான் எதுவும் செய்திட இயலாத, கையாலாகாத கடவுள்தானே) அப்படி அமைத்தால் கருவறை அளவு வெறும் 5 அடியாகக் குறைந்துவிடும் என்கிறார்.

(அப்படியானால் பக்தர்கள் எங்கே நிற்பது? ஜருகண்டி, ஜருகண்டி என்று விரட்டும் ஆள் எங்கே நிற்பது? பெருமாள் எங்கே நிற்பது?)

திருப்பதி கோயிலுக்குள் 640 கல்வெட்டுகள் உள்ளன. பழைமையான இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறும் கல்வெட்டுக்கூட உண்டு. இவற்றைச் சேதப்படுத்துவது ஆயிரம் பார்ப்பனர்களைக் கொன்றதற்கும், ஆயிரம் பசுக்களைக் கொன்றதற்கும் சமம் எனக்கூறிப் பயமுறுத்தும் கல்வெட்டும் உண்டு. ஆயினும், இதை மறைத்து அழிக்கும் செயலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகரன் ஈடுபட்டார். (இவர் கிறித்துவர்)

பரமேஸ்வர சேவா சமிதி எனும் அமைப்பின் சார்பாக வழக்குப் போட்டுள்ள சிரேயஸ் ரெட்டி, ஆந்திர அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளைத் திருப்பதி கோயில் மீறி இருக்கிறது என்று வாதிடுகிறார். இந்தக்கோயிலை உலகப் புராதனச் சின்னமாக 1977 இல் அறிவித்துள்ள யுனெஸ்கோ அமைப்புடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி அரசு நடக்கவேண்டும் என்று வழக்குப் போட்டவர் கூறுகிறார்.

ஏழுமலையான் கையில் எதிர்காலம் என்கிறார்கள். ஏழுமலையானின் எதிர்காலமே நீதிமன்றத்தின் கையில் என்றாகி-விட்டது. கொடுமைதான்!

--------------------- சு. அறிவுக்கரசு -“ விடுதலை” ஞாயிறுமலர் 26-6-2010

26.6.10

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?

சமூகநீதியின் விளைச்சல்


திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று திமிரோடு பேசும் நாக்குகள் அறுந்து வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

1916-இல் சர்.பிட்டி தியாகராயர் அவர்களால் அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை நன்றியுள்ள பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சில் பசுமையாக நிலை நிறுத்திக் கொள்ளப்பட வேண்டிய மகத்தான ஒன்றாகும்.

வரலாற்று ரீதியாகவும் பல உண்மைகள் அதில் வெளிப்படுத்தப்-பட்டு இருந்தன. பிரத்தியட்சமாக கல்வி வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலை என்ன என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுவதாகவும் அது அமைந்திருந்தது.

அந்த அறிக்கையைக் கண்ட இந்து கூட்டம் எரிச்சல் அடைந்தது. தங்களுக்கு இடையூறு ஏற்படப் போகிறது என்பதை உணரவும் செய்தது.

இந்து ஏடு எழுதியது. It is with much pain and surprise that we perused the document மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்-துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்தோம் என்று இந்து எழுதியது என்றால் அந்த ஆவணத்தின் வீரியத்தை விவரிக்கவும் வேண்டுமோ!

1928-இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக வந்த எஸ். முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பார்ப்பனர் அல்லாதோர் வயிற்றில் பால் வார்த்தது சமூகநீதி பயிர் தமிழ் மண்ணிலே செழித்தோங்க நடவு மேற்கொள்ளப்பட்டது. இடையிடையே எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் முதுகில் குத்துகள்!

இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற வாளுக்குக் கிடைத்த முதல் பிரயோகம் தமிழ்நாட்டின் வகுப்புவாரி உரிமை மீதுதான். தந்தை பெரியார் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரும்படி நிர்பந்தித்தார் வெற்றியும் பெற்றார்.

ஆச்சாரியார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்; வழக்கம் போல தமது குருநாதரான மனுவின் நூல் பிடித்து, சென்னை மாநிலத்தில் இருந்து வந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். குலக்கல்வித் திட்டம் என்ற நவீன வருணா சிரமத்தைத் திணித்தார்.

வாபஸ் வாங்குகிறாயா? அக்ரகாரம் பற்றி எரிய வேண்டுமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் எரிமலைக் குரலின் காரணமாகத்தான் ஆச்சாரியார் பதவியைத் துறந்து ஓடினார். அன்று விரட்டப்பட்டவர் (1954) கடைசி வரை அரசியலில் தலையெடுக்க முடியாத நிலையைத் தந்தை பெரியார் உருவாக்கினார்.

பச்சைத் தமிழர் காமராசர் தந்தை பெரியாரால் கண்டு எடுக்கப்பட்ட வயிரமாகும். கல்வி சகாப்தம் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டது. கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று உச்சி மோந்தார் தந்தை பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிட இயக்க ஆட்சியும் கல்விப் பயிரை வளர்த்தது.

அவ்வப்பொழுது இடையில் ஏற்படும் தடைகளைத் தவிடு பொடியாக்கிய தடந்தோள் திராவிடர் கழகத்திற்கு இருந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்து வந்த இடஒதுக்கீடு அகில இந்திய அளவில் அமலுக்கு வர தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் போராடியது.

42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் அது நடத்தியது. ஒரு சமூகநீதிக்காவலரை வி.பி.சிங் அவர்களை அடையாளம் கண்ட பெருமையும் கழகத்திற்கே உரியது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் அனுபவித்து வருகின்றனர். முதல் தலைமுறையாக பட்டதாரியா? இதோ சலுகைகள்என்று வாரியிறைக்கும் வள்ளலாக மானமிகு முதல்வராக கலைஞர் அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

தகுதி, திறமை எங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டியவர்கள் இன்று மலைத்து நிற்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இமயத்தின் உச்சிக்கே சென்று சாதனைக் கொடியைப் பறக்க விடக் கூடிய வர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கைபற்றிய புள்ளி விவரம் இதோ:

திறந்த போட்டிக்குள்ள இடங்கள் 460

இதில் பிற்படுத்தப்பட்டோர் 300

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72

தாழ்த்தப்பட்டோர் 18

முசுலிம்கள் 16

முன்னேறியோர் 54

இதில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் வாங்கியோர் 8 பேர்கள். இதில் பிற்படுத்தப்பட்டோர் 7 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1..

இவ்வாண்டு (2010) பொறியியல் கல்லூரி சேர்க்கையில் முதல் 10 இடங்களைப் பெற்றோர் (200-க்கு 200) பத்து பேர்.

அதில் பிற்படுத்தப்பட்டோர் 7

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3

(இதில் பெண்கள் இருவர்)

எவ்வளவு பெரிய மாற்றம் மகத்தான மாற்றம்! அன்று நாற்று நடவு _ இன்று மனங்குளிரும் மகசூல்!

இடஒதுக்கீடு என்பது ஜாதியை வளர்க்கும் ஏற்பாடு என்று கத்திப் பார்த்தனர். தகுதி போய்விடும், திறமை தீய்ந்து போய் விடும் என்று தீக்குழியில் விழுந்ததுபோல குதித்தார்கள்.

இடஒதுக்கீடு வந்ததால் கல்வி வளர்ந்தது; ஒரு பக்கம் காதலும் மலர்ந்தது -; அதன் மூலம் இன்னொரு பக்கம் ஜாதிக்கும் சவக்குழி வெட்டப்பட்டுக் கொண்டு வருகிறது.

தகுதி போய்விடும் திறமை போய்விடும் என்பதெல்லாம் மாய்மாலக் கூச்சல்! வாய்ப்புக் கொடுங்கள் சாதித்துக் காட்டுகிறோம் என்றனர் ஒடுக்கப்பட்ட மக்கள். இதோ சாதித்தும் காட்டி விட்டனர். என்றாலும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு உகந்த இடங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கிராமப் பகுதிகளில் இன்னும் ஏமாற்றம் தான். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றாலும் அது நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அதனு டைய அடையாளங்கள்தான் இந்த சாதனைகள்!

இலக்கை அடைவோம்!

அதுவரை சமரசங்களுக்கு

இடம் இல்லை,

இல்லவேயில்லை.

வாழ்க பெரியார்!

வெல்க சமூகநீதி!

-----------------------மின்சாரம் அவர்கள் 26-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

மொழி காலத்திற்கேற்ப மாற வேண்டும்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்!
தமிழர்கள் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குங்கள்!!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றுகிறார் (25.6.2010).

தமிழை பாதுகாத்து வளர்த்தெடுப்பதோடு, உலகத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்குங்கள். அது செம்மொழி மாநாட்டின் மகுடமாக இருக்கும் என்று கூறி விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நேற்று (25.6.2010) எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நெருக்கடியான காலம்

நெருக்கடி காலத்தைச் சந்தித்திருக்கின்றோம். ஆனால் இப்பொழுது காலத்தின் நெருக்கடியைச் சந்திக்கின்ற வேளையில் நான் உங்கள் முன்னாலே நிற்கின்றேன்.

மக்கள் கடல்

இவ்வளவு பெரிய மக்கள் கடலைக் கூட்டி தமிழர்களின் உணர்வு எப்படிப்பட்டது என்பதற்கு அடையாளமாக ஈரோட்டுக் குருகுலப் பயிற்சியையும், காஞ்சிக் கருவூலத்தினுடைய சிறப்பான பாடங்களையும் உள்ளடக்கி இது வருமா? வராதா? என்று பல பேர் நினைத்த அந்த எண்ணங்களை எல்லாம் மாற்றி மிகப்பெரிய அளவிலே தமிழ் செம்மொழி என்பது கனவல்ல அது பெரும் திட்டம், இதோ வந்துவிட்டது என்பதைக் காட்டி, செம்-மொழியால் உயர்வு பெற்ற தமிழர்கள் நன்றி உணர்ச்சிக்காகக் குழுமியிருக்கின்ற மாநாடு இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகும். முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

அத்தகைய பெருமைக்குரிய முதல்வர் கலைஞர் அவர்களே! இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு பல அறிவார்ந்த கருத்துகளை எடுத்து வைத்திருக்கின்ற அருமைத் தலைவர் பெருமக்களே!

தமிழ் இனத்தின் மீட்சிக்கான மாநாடு எதிரே இருக்கக் கூடிய ஆற்றல்மிகு இந்த மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளமாக அமர்ந்திருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களே! பல பேரை உருவகப்படுத்துவதற்குப் பதிலாக ஒருவரைச் சொன்னால் போதும் என்கிற வகையிலே_ஆற்றல் வாய்ந்த துணை முதலமைச்சர் அவர்களே!

நம்முடைய இனமானப் பேராசிரியர் உள்பட அனைத்து அமைச்சர் பெருமக்களே! வெளிநாடுகளிலிருந்து வந்து கூடியிருக்கின்ற உலகத்தின் தமிழ் உறவுகளே! தாய்மார்களே! பெரியோர்களே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

காலத்தால், கருத்தால், வளத்தால் மூத்தமொழியான முத்தமிழ் என்ற முத்திரை பதித்த எம்மொழி செம்மொழி என்று பிரகடனப்படுத்தக் காரணமான, அத்துணை அறிஞர் பெருமக்களுக்கும், அதேபோல அந்த அறிஞர் பெருமக்களுடைய சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக்கி இப்பொழுது நடைமுறையிலே சட்டபூர்வமாக அதனை அறிவிக்க முயற்சி எடுத்ததோடு இல்லாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல தலைப்பில் இங்கே சிறப்புக் கருத்தரங்கத்தை உருவாக்கி, இந்த மாநாடு கூடிக் கலைகின்ற மாநாடு அல்ல; அல்லது காட்சிக்காக இருக்கின்ற மாநாடு அல்ல. தமிழ் இனத்தின் மீட்சிக்காக இருக்கின்ற மாநாடு என்பதை உறுதி செய்யக் கூடிய அளவிலே_நல்ல திட்டத்தை உருவாக்கி_தமிழ் மொழியைப் பொறுத்த வரையிலே எப்படி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கும் தமிழ்_எதிலும் தமிழ் என்ற அடுத்த கொள்கைத் திட்டத்தை_அடுத்த இலக்கை நாம் எப்படி அடைவது என்பதை ஆய்வு செய்வதற்காக இங்கே அருமையாக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்ற எண்ணத்தோடு கூடியிருக்கின்றோம்.

திராவிடர்களுடைய அடையாளம்

திராவிடர்களுடைய அடையாளம்_திராவிடம் என்பது எவ்வளவு பெரிய எழுச்சியை உருவாக்கியிருக்கிறது என்பதைக் காட்டுகின்ற வகையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்து அதிலே எப்படி ஓர் எழுச்சியை உருவாக்கினார்களோ, அதே போலத்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்ற சிறப்பினை மிகத் தெளிவாக இங்கே உருவாக்கியிருக்கின்றார்கள்.

நிச்சயமாக எங்களைப் பொறுத்தவரையிலே இது வெறும் செம்மொழி மாநாடு என்றால் மொழியி-னுடைய சிறப்புகள், ஆற்றல்கள், திறமைகள் இவற்றை எல்லாம் மட்டும் எடுத்துச் சொல்லுகின்ற மாநாடு அல்ல. இது மீட்சிக்குரிய மாநாடு.

நூறு ஆண்டுக்கு முன்னால் என்ன நிலை?

அருமை நண்பர்களே! ஒரு நூறாண்டுகளுக்கு முன்னாலே நீதிக்கட்சி, அதே போல திராவிடர் இயக்கம்_சுயமரியாதை இயக்கம் இந்த நாட்டிலே பிறப்பதற்கு முன்னால் அதனுடைய பணிகள் தந்தை பெரியார் அவர்களாலே, பேரறிஞர் அண்ணா அவர்களாலே, இன்றைய முதல்வர் அவர்கள் தன்னுடைய இளமைக் காலத்திலே தமிழ்க்கொடியை ஏந்தினார்களே, அந்தக் காலகட்டத்திலே எல்லாம் இருந்த சூழ்நிலை என்ன?

இன்றைக்கு செம்மொழி என்று பாராட்டக் கூடிய அளவிற்கு உலகம் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஏற்கெனவே அதற்கு அந்தத் தகுதி இருந்தாலும் கூட, இன்றைக்கு பெருமையாக அது அதிகார பூர்வமான தகுதியைப் பெறக்கூடிய அளவிலே இருக்கக் கூடிய எம்மொழி_தமிழ் மொழி_மூத்த மொழி. காலத்தால் மூத்தது; கருத்தால் மூத்தது; வளத்தால் மூத்தது என்ற பெருமை எல்லாம் இருந்தாலும் இந்த மொழிக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலே என்ன பெயர்?

நீச்ச பாஷை

நீச்ச பாஷை கோயிலுக்குள்ளே அனுமதிக்கப்-படாத ஒரு மொழி. சாதாரணமாக கீழ் ஜாதிக்காரர்கள் பேசக் கூடிய ஒரு மொழி. அதுமட்டுமல்ல; இது சூத்திர மக்களுடைய மொழி என்றெல்லாம் ஜாதியை அடையாளப்படுத்தி அந்த வகையிலே கீழ்மைப்படுத்தப்பட்ட மொழி இன்றைக்கு எல்லோராலும் பாராட்டக் கூடிய அளவிற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும், எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மொழியை நீச்ச மொழி என்று சொல்ல முடியாது; சூத்திர மொழி என்று சொல்ல முடியாது. செம்மொழி என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும் என்ற அடித்தளத்தை உருவாக்கிய கலைஞர் அவர்களே! உங்களுக்குத் தமிழ் இனத்தின் சார்பாக எங்கள் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்-கொள்கின்றோம்.

மொழி காலத்திற்கேற்ப மாற வேண்டும்

இது வரையிலே இனத்தின் மரியாதை குறைந்திருந்தது. ஒரு மொழி என்று சொல்லும்பொழுது அந்த மொழிக்கு இருக்கின்ற சிறப்பு என்னவென்று சொன்னால், அதனுடைய ஆற்றல் மட்டுமல்ல. தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி ஒன்றைச் சொல்லுவார்கள்: மொழி என்பது ஒரு போராட்டக்கருவி. அந்தப் போராட்டக் கருவி என்பது காலத்திற்குக் காலம் மாற வேண்டும். உங்களுடைய அற்புதமான கருத்துகளை ஆய்வரங்கத்திலே மிகத் தெளிவாகச் சொன்னீர்கள். அதைத்தான் இந்த மாநாட்டின் முத்தாய்ப்பாக எங்களைப் போன்றவர்கள் எடுத்துக்கொள்கிறோம். என்ன?

தமிழை 21ஆம் நூற்றாண்டிற்கு தயார் செய்யுங்கள்!

இருபத்தோராம் நூற்றாண்டிற்குத் தமிழை தயார் செய்யுங்கள். இதுதான் முக்கியமானது. அந்த ஆய்வரங்கத்திலே சொன்ன கருத்துகளோடு உலக அறிஞர்கள் சொன்ன கருத்துகள். தமிழ் நாட்டு அறிஞர்கள் சொன்ன கருத்துகள்_ எடுத்து வைத்த சிந்தனைகள்_இவைகளை எல்லாம் மய்யப்படுத்தி நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, ஒன்றை துணிந்தே சொன்னீர்கள். நீங்கள் முதலமைச்சராக இருந்தாலும் கூட நீங்கள் இந்த மாநாட்டை நடத்தக் கூடியவராக இருந்தாலும்கூட, நீங்கள் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தாலும்கூட, என்ன சொன்னீர்கள்?

எங்களுக்கு ஆணையிடுங்கள்

ஆய்வரங்கத்திலே நீங்கள் சொன்னீர்கள், புலவர் பெருமக்களே, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெரு-மக்களே, ஆணையிடுங்கள்! எங்களுக்கு ஆணையிட்டுக் கருத்துகளைச் சொல்லுங்கள்! என்று சொன்னீர்கள். அதைச் செய்வதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்று சொன்னீர்கள்.எனவே அப்படிப்பட்ட கருத்துகளை ஆணைகளாக எடுத்துக்கொண்டு மிகப்பெரிய அளவிலே எடுத்துக்கொண்டு செய்ய வேண்டிய காலகட்டம் இன்றைக்கு நம்முடைய நாட்டிலே இருக்கின்றது.

பெருமைப்படுவதா? துன்பப்படுவதா?

இது ஒரு வேதனையான அம்சம்தான். நாம் தமிழ்நாட்டிலே வாழுகின்றோம். தமிழ் மக்கள் வாழுகின்றோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உத்தரவு போடுங்கள், ஆணையிடுங்கள் என்றெல்லாம் நாம் சொல்ல வேண்டிய நிலையிலே இருக்கின்-றோமே, அதை நினைத்துப் பெருமைப்படுவதா? அல்லது துன்பப்படுவதா? துயரப்படுவதா? இதைத் தான் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவேதான் செம்மொழி மாநாடு என்று சொன்னால் அது வெறும் மொழிப்பெருமையைச் சொல்லுவது அல்ல. மீட்சி வரவேண்டும் என்று சொல்லுவதுதான் முக்கியம்.

மணக்க வரும் தென்றலிலே

குளிரா இல்லை?

தோப்பிலே நிழலா இல்லை?

தனிப்பெரிதாந் துன்பமிது

தமிழ்நாட்டின் தெருக்களிலே

தமிழ்தான் இல்லை

இதுதான் மிக முக்கியம்.

தமிழர்களை அடையாளம் காண வேண்டுமா?

நான் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கும்பொழுது பார்த்திருக்கின்றேன். தமிழ்நாட்டிலே இருந்து, வங்காளத்திலே இருந்து, ஆந்திராவிலே இருந்து, கேரளத்திலே இருந்து, கன்னடத்திலே இருந்து, ஏனென்றால் ஒருவர் இன்னொருவரிடம் பேசும்-பொழுது அந்த மொழியிலேதான் பேசுவார்கள்.

ஆனால் உலகத்திலே தமிழர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும் என்று சொன்னால், ரொம்ப சுருக்கமான வழி ஒன்று உண்டு என்ன-வென்று சொன்னால் இரண்டு பேர் ஆங்கிலத்திலேயே பேசினால் அவர்கள் தமிழர்கள், அவர்கள் தமிழ்-நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது வெட்கப்பட வேண்டியதா? அல்லது மகிழ்ச்சியூட்டக் கூடியதா? அருள் கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே ஆழமாகச் சிந்திக்கின்ற நேரத்திலே மிக வேகமான சிந்தனை நமக்கு வரவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு

எதற்கும் நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்ல வேண்டிய அளவிற்கு வந்தது? அருள் கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு அந்தப் படையெடுப்பின் காரணமாகத்-தான் தமிழ் வீழ்ந்தது. ஏனென்றால் சோழன் காலத்தில் தமிழ் இல்லையா? சேரன் காலத்திலே தமிழ் இல்லையா? பாண்டியன் காலத்தில் தமிழ் இல்லையா? அவர்கள் காலத்தில் தமிழ் இருந்தது. பண்பாட்டுப் படையெடுப்பு உள்ளே நுழைந்த காரணத்தால், நுழையக் கூடாதது., நுழைந்தால் நடக்கக் கூடாதது நடந்தது.

முட்டுக்கட்டைகள்

எனவேதான் செம்மொழி எம்மொழி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்கமிட்டால் போதாது. தமிழ் இருக்கின்றது. அந்தத் தமிழுக்கு எங்கெல்லாம் முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் நீக்கினாலொழிய வேறு வழி கிடையாது. வரலாறுகள் திரிபுவாதத்திற்கு ஆளாகக் கூடாது. நம்முடைய கருவிகள் அற்புதமான இசைக்கருவிகள்தான். ஆனால் வரலாறு என்ன?

தீட்டாயிடுத்து என்று எழுதியவர்தான்

தமிழ் பாடிய மேடை தீட்டாயிடுத்து என்று சொல்லும்பொழுது தீட்டாயிடுத்து என்று எழுதிய கலைஞர் அவர்கள்தான் இன்றைக்கு செம்மொழியைக் கொண்டு வந்திருக்கின்றார். அதுதான் இந்த இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி. அதுதான் இந்தக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. அதுதான் இந்த லட்சியத்தின் வெற்றி. இப்படி வெற்றிகளுக்கு மேல் வெற்றி வந்தால் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் வரும். ஏனென்றால் தடையாக உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும். இன்னமும் கூட என்ன சொல்லுகிறார்கள்? கருநாடக சங்கீதம்_அதுதான் சங்கீதம் என்று தமிழ் இசைக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் யார் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? படித்தவர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? பேராசிரியர் பெருமக்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? பொதுவாகச் சொல்லுவார்கள்.

தமிழிசை வளர்த்த மும்மூர்த்திகள்

தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் இவர்கள் தான் ஆதி மும்மூர்த்திகள் என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்தது. முத்துத்-தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய தமிழிசை முன்னோடிகளின் வரலாறு வந்திருக்கிறதா? வரலாறு மறைந்தி-ருக்கிறதா? செம்மொழிச் சிறப்பு என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தப் புதை பொருள்களை மீண்டும் நாம் மீட்டெடுத்துப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

தமிழன் உள்ளே புக வேண்டும்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று ஆக்கினீர்கள். தமிழ் உள்ளே புகுந்தது. ஆனால் தமிழன் இன்னும் உள்ளே புகவில்லை. என்னுடைய அருமை நண்பர் பேசும்பொழுது சொன்னார். தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று சொன்னார். லும் போட்டுச் சொல்லக் கூடிய நிலை இருந்தது. கலைஞர் முதல்வராக வந்த பிற்பாடுதான் அந்த லும் என்பதை எடுத்துவிட்டார். தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று ஆணையிட்டார். ஏனென்றால் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொன்னால் போதுமா? நேரத்தின் நெருக்கடி கருதி சில கருத்துகளை மாத்திரம் சொல்லி முடிக்கின்றேன்.

இது கணினி யுகம். நம்முடைய பழம் பெருமை-களை மட்டும் பேசினால் போதாது. நம்முடைய வலிமை எங்கேயிருக்கிறதென்று சொன்னால் இந்தக் கால ஓட்டத்திலே நாம் சந்திக்க வேண்டியவைகளை சந்திக்க வேண்டும். பழம்பெருமை ஓர் இனத்திற்கு_-ஒரு மொழிக்குத் தேவை. அதை அறவே நாம் ஒதுக்கிவிட முடியாது. அதைத் தாண்டித்தான் நாம் செம்மொழியைப் பெற்றிருக்கின்றோம். இதுதான் செம்மொழிக்கு அடித்தளம். ஒப்புக்கொள்கின்றோம்.

உரத்தை உணவாகக் கொள்ளக் கூடாது

ஆனால் அந்தப் பழம்பெருமை எப்படியிருக்க வேண்டும்? வயலுக்கு உரமாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பழம் பெருமையே இன்றைக்குத் தமிழனிடத்திலே பல நேரங்களிலே உணவாக இருக்கிறது. எனவே உரத்தை உணவாகக் கொள்ளா-தீர்கள். உரத்தை உரமாக வைத்துக்கொள்ளுங்கள். அதை, உணவை உருவாக்குவதற்குரிய உரமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழை நவீன உலகத்திற்கேற்ப.....

எனவே தமிழை நவீன உலகத்திற்கு_21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துப் போக வேண்டும் என்று சொன்னார்களே, அது தான் மிக முக்கியம்.

கணினியில் தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சி மொழியாகத் தமிழ், பயிற்று மொழியாகத் தமிழ், நீதி மன்ற மொழியாகத் தமிழ். பல மாதங்களுக்கு முன்னாலே முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திலே, தீர்மானம் நிறைவேற்றி யிருக்கின்றார்கள். குடியரசுத் தலைவரிடம் பேசியிருக்கின்றார்கள். இந்த முறை அல்ல; அதற்கு முன்னாலேயே பேசியிருக்கின்றார்கள். மத்திய சட்ட அமைச்சரிடம் நீதிமன்றங்களிலே தமிழ் வாதாடக் கூடிய மொழியாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

சட்ட விரோதமல்ல

இது சட்டப்படி விரோதமல்ல. அரசியல் சட்டப்படி நமக்கு யாரும் காட்ட வேண்டிய சலுகை அல்ல. பிச்சை அல்ல. இது நமது உரிமை. தமிழனுக்கு இருக்கின்ற பல்வேறு கோளாறுகளில் ஒன்று எது? சலுகை. எது உரிமை என்பதைப் பற்றி புரிந்துகொள்ளாத வேதனையான நிலையில் இருக்கின்றோம்.

அரசியல் சட்டத்தில் உள்ள உரிமை

அரசியல் சட்டம் 348ஆவது பிரிவின்படி மாநில ஆட்சி மொழி அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பீகார் மாநிலத்திலே, ராஜஸ்தான் மாநிலத்திலே, மத்திய பிரதேசத்திலே, உத்தரப்பிரதேசத்திலே அதே போல பல மாநிலங்களிலே இந்தி வழக்காடு மொழியாக இன்றும் இருக்கிறது.

எனவே இது ஒன்றும் பெரிய பெருமை அல்ல. வேறு எதுவும் கிடைக்காதவர்கள் கலைஞர் ஆட்சிக்கு எதிராக இதையாவது பிடிக்கலாமா? என்று கருதுகின்றார்கள்.

மரக்கிளையில் பழம்!

அவர்களுக்குத் தெரியும், பழம் விழப்போகின்றது என்று. காக்கை மரக்கிளையில் உட்கார்ந்தால் எங்களால்தான் இந்தப் பழம் விழுந்தது என்று. ஆகவே அவரால் முடியாதது ஒன்றுமில்லை. காரணம் தமிழால் முடியாதது என்பதல்ல. சுயமரியாதை உணர்வோடு அவர்கள் எதையும் சிந்திக்கக் கூடியவர்கள். ஆகவே வழக்கறிஞர்கள் தெளிவாக இருக்கலாம். தமிழிலே பெயர்கள் வரவேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக மக்கள் படித்தவர்களாக வாழுகிறார்களோ, அவர்கள்தான் ஆங்கிலத்திலும், தமிழிலும் கலந்து பேசுகிறார்கள்.

ஊடங்களில் தமிழ் தொலைக்காட்சிகளில், தமிழ் தொலைந்த காட்சியை இன்றைக்குப் பார்க்கின்றோம். வேதனையாக இருக்கிறது. நுனிநாக்கு ஆங்கிலம் என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். தமிழைக் கூட நுனி நாக்குத் தமிழ் என்று சொல்லக் கூடிய அளவிற்கு சிலர் இருக்கிறார்கள். யாருக்காகவும் அல்ல. எதை எப்பொழுது செய்ய வேண்டுமோ, அதை அப்பொழுதே செய்யக் கூடியவர்தான் இங்கே அமர்ந்திருக்கக் கூடிய தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

தொலைக்காட்சியினர் மாற வேண்டும்

தொலைக்காட்சிகளில் ஷோ டைம், டாப்டக்கர், ஸ்டார்ஸ் ஸ்டைல், சூப்பர் ஹிட் படம், கிளைமாக்ஸ், சூப்பர் டூப்பர், சூப்பர் காமெடி, சூப்பர் டாப்டென், என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. தொலைக்-காட்சிகளில் எல்லாம் தமிழ் முழுக்க வரவேண்டும். அதற்கு தொலைக்காட்சி நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு காலத்தில் அக்கிராசனர் என்று சொல்லப்பட்டவர் தலைவர் என்று தமிழால் அழைக்கப்பட்டார். நமஸ்காரம் வணக்கம் ஆயிற்று. அபேட்சகர் வேட்பாளர் ஆனார். இப்படி எல்லாம் இந்த இயக்கம் வளர்ந்த காரணத்தால் வடமொழியில் அழைக்கப்பட்டது. தமிழாக மாறியது. அந்த சுயமரியாதை, உணர்வு உள்ள காரணத்தால் இத்தனையும் நடந்திருக்கிறது. எனவேதான் நாம் தெளிவான வாய்ப்பை உருவாக்க வேண்டும். சொன்னார்கள் நண்பர்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். அறிவுக்காகப் படிப்பது என்பது வேறு. வேலைக்காகப் படிப்பது என்பதும் அதுவும் முக்கியம்தான். எனவே அதற்குரிய தீர்மானங்களை முதல்வர் கலைஞர் நிச்சயமாக எடுப்பார்கள். தமிழ் படித்தே தீர வேண்டும் என்பது கட்டாயம் மட்டுமல்ல.

அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று ஆக்கினால் பயன்தரும். செய்வார்கள். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற மத்திய பொது தேர்வு ஆணையம், அதிலே இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் தாய் மொழியில் எழுதிவெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது தமிழால் முடியாதது ஒன்று மில்லை. பயிற்று மொழி தமிழ், முடியுமா? என்று கேட்கிறார்கள். ஜப்பானை விட தொழில் வளர்ச்சி நிறைந்த நாடு வேறில்லை. தமிழ்மொழி அதுபோல் ஆட்சித் தமிழ், ஆய்வுத் தமிழ், அறிவியல் தமிழ், அதற்கெல்லாம் மேலாக தன்மான உணர்வைத் தர வேண்டிய தமிழ். ஆய்வாளர்கள் கூனிக் குறுகியிருப்பவர்களாக இருக்கக் கூடாது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அதை இப்பொழுது நாம் பெற்றிருக்கின்றோம். எனவே இந்த செம்மொழி மாநாடு என்பது ஒரு அடித்தளம். அதிலேயிருந்து நாம் மேலே வர-வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்குரிய திட்டங்களை நீங்கள் சிறப்பாகச் செய்யுங்கள். அதே நேரத்திலே தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒரு வேண்டுகோள்!

தமிழர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களுக்கு நீங்கள்தான் பாதுகாவலர். இங்கே நடைபெறுவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. உலகத்தின் பற்பல நாட்டு நண்பர்கள் உறவுகளாக இங்கே வந்திருக்கின்றார்கள்.

எனவே தமிழ்நாட்டிலே மட்டும் தமிழ் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதே போல இந்தியாவிலே மட்டும் தமிழ் என்று நினைக்காதீர்கள். உலகம் முழுவதும் தமிழ் வெற்றிகரமாக நடைபோட வேண்டுமானால் தமிழ் எழுத்து சீர்திருத்தமடைய வேண்டும். இணையத்திற்குரிய வாய்ப்பைப் பெற வேண்டும். சிலருக்கு இன்னமும் பழமையில் ஆர்வம். அய்யோ, எழுத்தை எல்லாம் மாற்றினால் என்ன ஆகும்? பெரியார் எழுத்தைக் குறைத்தார். அதனால் எந்தச் சங்கடமும் இல்லை. எழுத்துச் சீர்திருத்தம் வராமல் இணையத்தில் தமிழ் எளிதாக ஆகாது. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் சொன்னார்: ஒலித் தகடுகளில் வரிகள் வருகின்றன. கே.பி.சுந்தராம்பாள் பாட்டு அய்யோ, காணாமல் போய்விட்டதே என்று யாரும் கவலைப் படத்தேவையில்லை. காசு போட்டால் வரும். சங்க காலத்திலிருந்து கல்வெட்டுகள் காலத்திலிருந்து ஒரே மாதிரியாக இருந்ததில்லை.

எதிர்ப்பு இருக்கும்

எனவேதான் அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். எந்த மாற்றத்தைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு இருக்கும். நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னீர்கள். இன்றைக்கு அது மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அது போலத்தான் இணையம் முக்கியமானது. இணையத்திற்கு தமிழ் முக்கியமானது. ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியதற்குக் காணரம் எழுத்துகள் குறைவு.

எழுத்துகளை குறைப்பதால் தமிழ் கெட்டுவிடாது. இறுதியாக ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். கிராமத்திலே இருக்கிற தமிழைப் பார்த்து நகரத்துக்காரன் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை நம்முடைய நாட்டிலே. கிராமத்திலே இருக்கின்ற என்னுடைய தமிழச்சி அருமையாகச் சொல்லிக்-கொடுக்கிறார். சோறு சாப்பிட்டாயா? சாறு கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். ஆனால் படித்தவன், நாகரிகமானவன் சாதம் சாப்பிட்டாயா? என்று கேட்கின்றான்.

சோறு என்று கேட்டால் அது ஏதோ கீழ் ஜாதி என்று சொல்லுவதைப் போல, என்ன சோறு என்று சொல்லுகிறாயே என்று கேட்க ஆள் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வேகமாக நாகரிகமாக நளினமாக இருந்தால் ரைஸ் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். வெந்ததா? வேகவில்லையா? என்பது தெரியாது. ஆகவேதான் சோறு, சோறாக இருக்க வேண்டும். செம்மொழி வெற்றி பெற வேண்டுமானால் சோறு சாதமாக ஆக்கக் கூடாது. ரைஸ் ஆகவும் ஆகக் கூடாது. சோறு சோறாக இருக்க வேண்டும். அதுதான் தமிழனின் அடித்தளம் சரியாக இருக்கிறது. பண்பாட்டுப் படை யெடுப்பிலிருந்து தமிழனைக் காப்பாற்றுகிறோம் என்று பொருள்.

எனவே நீதிமன்றமாக இருந்தாலும் சரி, நீதிமன்றமாக இருந்தாலும் தமிழ் வளர வேண்டும். அதற்கு வேண்டிய அடித்தளத்தை நீங்கள் இடுங்கள்.

இந்த மாநாட்டிலே அதற்குரிய முடிவுகளை எடுங்கள். எல்லாவற்றையும் விட, செம்மொழியைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதற்கு அடித்தளம் உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்குப் பாதுகாப்புத் தேடுங்கள். தமிழர்கள் எந்த நாட்டிலும் இலங்கை உள்பட முள்வேலிக்குள்ளே இருக்கக் கூடாது. தமிழனுக்கு உரிமை கிடைக்க வேண்டும். தமிழனின் உரிமை பாதுகாக்க வேண்டும்

தமிழன், தனித்தன்மையோடு வாழ வேண்டும். தமிழனுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்கெல்லாம் ஒரு பாதுகாப்பு அமைப்பாக இந்த செம்மொழி மாநாட்டிலே ஒன்றை அறிவியுங்கள்.

உலகத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு

உலகத்தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்பதை உருவாக்குங்கள். மொழிப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அது போன்றது. மொழியை எப்பொழுது பாதுகாக்க முடியும்? மொழி மக்களை வைத்துத்தான் பாதுகாக்க முடியும் என்ற கருத்திலே வருகிற பொழுது ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையாக இருந்தாலும் சரி, இன்னொரு நாடுகளில் தமிழர்கள் சந்திக்கின்ற கொடுமையாக இருந்தாலும் சரி, அதைத் தட்டிக்கேட்கக் கூடிய உரிமை இந்தத் தாய் மண்ணுக்கு உண்டு. அதற்கொரு அமைப்பை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.

தலைசிறந்த மகுடம்

செம்மொழி மாநாட்டின் வரலாற்றிலேயே அதுதான். தலைசிறந்த மகுடமாக இருக்கும் என்று கூறி உங்களுக்கு காலமெல்லாம் நன்றி செலுத்த தமிழ் மக்கள் சுயமரியாதை உள்ள மக்கள் எல்லாம் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

எனவே பண்பாட்டுப் படையெடுப்பை அடையாளம் காணுங்கள் என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.


---------------"விடுதலை” 26-6-2010

25.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை - 3


சென்னை மாகாண 3 ஆவது தமிழர் மகாநாடு திறப்பு விழா பேருரை
கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்கம்

நேற்றையத் தொடர்ச்சி...

பண்டைத் தமிழர்கள் வாழ்க்கை சிறப்பும் ஆடல் பாடல் கூடல் வனப்பும் இன்பம் வீரம் முதல் எண்வகைச் சுவையும் நாடக மேடையிலும், பேசும்-படச்சாலைகளிலும் பொங்கி ததும்பிப் பூரணமாதல் வேண்டும். ஓவியமும் சிற்பமும் ஒன்டமிழ் முறையில் அமை-தல் வேண்டும். அவற்றை விளக்கும் நூல்கள் தமிழின் கண்ணே மிகுதல் வேண்டும் . தமிழ் கல்லாத தமிழரும் தமிழ் நூலில்லா வீடும் தமிழகத்திருத்-தல் கூடாது. சுருங்கக் கூறின் தமிழ் தமிழ் என்ற முழக்கம் நாடெங்கும் செழித்தல் வேண்டும்.

மொழிப்பற்றில்லாதார் அதிகாரிகளாதல் கூடாது

தமிழ்மொழி பேணாத் தகுதியில்-லார்க்கு அரசியல் அதிகாரம் கிட்-டிடுதலாகாது. பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு ஆதிக்கம் இருத்தல் கூடாது. எவ்வகைப் பொது நிலை-யங்-களிலும் அவர்களுக்கு மதிப்பு ஏற்-படுதல் கூடாது. இது பாமரர் மனத்-திலும் பண்டிதர் உள்ளத்திலும் பசு-மரத்தாணிபோற் பதிதல் வேண்டும். தாய் மொழிப் பகைவர்க்கு உரிமைச்சீட்டு உதவி உயர்வு கொடுத்தல் தமிழன்-னைக்கு செய்யும் நன்றியில் பெருங் கேடாகும். தமிழ் நலம் நாடும் தமக்-கென வாழா பிறர்க்குரியாளர்க்கே மதிப்பும் மாண்பும் அரசியலாற்றலும் கல்லுரித் தலைமையும் திண்ணமாக அமைதல் வேண்டும். தமிழ்ப் பொதுமக்கள் கண்ணுங் கருத்துமாகத் தமிழ்த் தொண்டர்க்கே எவ்வகை உரிமைச் சீட்டையும் உதவுதல் வேண்-டும். அங்ஙனம் உதவத் தவறுதல் மன்-னிக்காத பெருங் குற்றமாகும். இக்-கருத்தினை தமிழர் என்பார் யாவருள்-ளத்தும் நிலைபெற்றுப் பயனுறச் செய்தல் தமிழர் மகாநாட்டின் தலைக்-கடமையாகும்.

தமிழ்ப் பெரியார்கள் திருநாள்

தமிழுக்குழைத்து உயிரை அளித்த தமிழ்ப் பெரியார் திருநாள் எங்கும் கொண்டாடப்படுதல் வேண்டும். தமிழர் வீடுதோறும் தமிழ்ப் பெரியார் திரு-வுருவப்படங்கள் திகழ்தல் வேண்டும். அவர் திருநாள் கொண்டாடாது பிற-நாட்டு தலைவர் திருநாள் மாத்திரமே கொண்டாடுதல் தமிழரின் உணர்ச்சி-யின்-மையைக் காட்டும் இழிச் செயலாகும். எந்நாட்டுப் பெரியாரினும் நம்நாட்டுப் பெரியார் கழிபெருஞ்-சிறப்புடையாரென்பதைக் கருதுதல் வேண்டும். அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர், நாயன்-மார்கள், ஆழ்வார்கள், சங்கப்புலவர்கள், பிற்கால பெரும்புலவர்கள், அருள்-வள்ளல்கள் முதலியோர்க்கு ஈடாக பிறநாட்டு பெரியாரைக் கூறுதல் ஒண்-ணுமோ! தமிழ்ப் பெரியார்க்கு தனிச்-சிறப்புச் செய்து பிற பெரியாரையும் பேணுதல் நன்றே.

தமிழரது மொழிமாண்புடனே பிற மாண்பினையும் தமிழர் மகாநாடு நாடுதல் வேண்டும். தமிழரின் சமுதாய ஒற்றுமைப் பொருட்டு, நாகரிகத்திற்கு மாறில்லாமல், பல இனத்தாரும் உடன் உண்ணுதல் வேண்டும். மகற் கோடல் என்பனவற்றை யாரும் மறுத்துரைத்-தல் கூடாது. அவ்வாறே ஒரு கட-வு-ளுண்மை, உயிர்க்கிரங்குதல், மறு-பிறப்பு, உருவழிபாடு, ஒழுங்கரசியல் என்பவற்றையும் பொதுக்கூட்டங்களில் மறுத்தலின்மை ஒற்றுமைக்கு உரஞ் செய்யும் தமிழரின் பொருள் வசதியின் பொருட்டு பாங்கு முதலியன நடத்தல், தங்கிடம், உணவு, வசதியின் பொருட்டு மாணவர்கள் விடுதி, பொதுவிடுதிகள் அமைத்தல், சமய முன்னேற்றத்திற்காகத் திருத்தப் பிரசாரம் பயிற்றுதல், தொழில் வளர்ச்-சிக்காக கல்லுரிகள், கழகங்கள் நிறுவுதல், வேறெவ்வகை வளர்ச்சிக்கும் உரிய திட்டங்கள் வகுத்தல், முதலியன படிப்படியாக, ஆட்சிக்கு வருதல் வேண்டும். கல்வித்துறை, செல்வத்-துறை, தொழிற்த்துறை, அரசியற்றுறை, சமயத்துறை முதலியன எல்லாத்-துறைகளிலும் தமிழர் ஒற்றுமையுற்றுப் பெரு நலம் பெறுதற்கு ஆவனயாவும் ஆற்றுதல் கடனே. தனித் தமிழ் மாகாணம் தோன்ற வேண்டும்

.தமிழர்க்கு மாகாணம் தனியே அமைதல் நன்மைகள் பலவற்றிற்கும் அடிப்படையாகும். யாவற்றிற்கும் அடிப்படை மொழி பேணுதலே, ஆதலின் அதனை விரித்திங்குரைத்தாம். உலகம் முழுவதும் ஒரு குடைக் கீழாண்ட உயர் தமிழ் மொழிக்கே இந்திய நாடு முற்றிலும் உரியது. நேற்று தோன்றிய வரம்பிலா மொழிகள் தமிழ்க்கு முன்னர்த் தலையெடுக்காமல் அடங்கிச் செல்லப் பணித்தல் வேண்டும். அன்னையை மீறும் அகந்தை மொழி-களை அகற்றி ஒழித்தலே அறிஞர் கடமை. போலிப்பற்றை ஒழித்து நடு-நிலை நின்று பொது நலம் நாடின் இந்தி மொழியினும் எங்கும் பரவிய ஆரிய மொழியாம் ஆங்கில மொழியே பொது-மொழியாக அவைதற்பாலது, ஆயி-ரத்திலொரு தமிழன் வடநாடு சென்றால் செல்லுங்காலை வேண்டுமாயின் இந்தி கற்க. அதற்காகத் தாய் கொலை செய்தல் சால் புடைத்தன்று. இந்த கருத்தை எல்லா தமிழரும் கடைபிடித்தல் ஆகிய ஒரு பெருங்கடமை முற்றிலும் நிறைவேறின், இடையூறு யாவையும் எளிதில் விலக்கி அழியாப் பேரறிவும் அந்தமில் இன்பமும் எந்தநாளும் தமிழர் பெறுவர். ஆதலின் இப்-பெருங்கடமையும் பிற எப்பெருங் கடமையும் இறைவன் அருள்கொண்டு செவ்விதின் இயற்றுவான் தமிழர் இபக்கம் தழைத்தல் வேண்டும். தமிழர் இயக்கம் நீடுழி நிலவ, இத்தமிழர் மகாநாடு திறப்புற்றுச் சிறப்புற்றோங்குக.

நிறைவு ------(குடிஅரசு, 2.1.1938)

24.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை - 2



சென்னை மாகாண 3 ஆவது தமிழர் மகாநாடு திறப்பு விழா பேருரை
கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்கம்

நேற்றையத் தொடர்ச்சி...

ஹிந்தி என்னும் குளிர் செந்தீயை அவள் இனிய உடம்பில் சிறது சிறிதாக நுழைத்து விடலாமென்று கருதுகின்றார்கள். ஹிந்தி வளர இடம் பெறுமாயின், இன்னுஞ்சில ஆண்டுகளில் உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் தமிழ் மணம் அறவேயொழிந்து பள்ளிப்புத்தகம், பத்திரிகையுலகம், சினிமாக்கதை, சிறந்த நுல்கள், செவ்விய பாடல்கள், அரசியல் நிகழ்ச்சி, ஆலயப் பூசனை, அகத்திற் பேசும் உறவினர் மொழி ஆய்வெல்லாம், ஹிந்தி மயமாய்த் தமிழர் நாடும் ஹிந்திய நாடாகவே இந்திய நாடும் நடுவெழுத்தாய் உயிரினை இழக்கும். உலக சரித்திரம் ஊனம் எய்தும். தமிழர் நாகரிகமே இந்திய நாகரிக உயிரெனும் நுட்பம் ஒழிந்திடலாகும். தமிழர்க்கு இகழ்ச்சியும் கேடும் இதனின் வேறேது?

செய்கடன் ஆற்றத் தருணம் இதுவே

இப்பேரிடையூற்றை நீக்குதற்குத் தமிழ் மக்கள் கண் விழித்துக் கடமையாற்றுஞ் சமயமிதுவே. கடமையை நிறைவேற்றுதற்கு உண்மைத் தமிழர் உடல் பொருள் ஆவி மூன்றும் அர்ப்பணம் செய்தற்குப் பிற்படலாகாது. மிகுதியால் மிக்கவை செய்வாரைத் தகுதியால் தாக்கித் தலைகுனியச் செய்யாவிடில் தமிழர் என்னும் பெயர்க்கு தமிழ் நாட்டினர் தகுதியிலார் என்பதே முடியும். தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாய பாடமாக ஆக்குவதை எதிர்த்தவர்கள் பலர், இப்போது இந்தியை வற்புறுத்தக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இனி எவரும் எவ்வகைத் தேர்தல்களிலும் அத்தகை-யார்க்கு முன்னேற்றங் கிட்டுமாயின் அறிவிலி என்ற சொல் தமிழர்க்கே வாய்ப்புடைத்தாகும்.

நமது குறைபாடு

தமிழரின் பெருங்குறை யாதெனின், தயவினால் தலைக் கேடு தேடிக் கொளல், அவர்கள் தம் உரிமையைப் போற்றுதலைத் தந்நலந்தேடும் தாழ்வென்று நினைத்து தாழ்வடைபவர். வீரமாய் எதனையும் தொடங்கி விடாமுயற்சியின்மையாக மோசம் போவார். தந்நூல் பேணாது பிறநூல் கற்பவர் உலகம் புகழும் தலை சான்ற கல்வி கற்பார் சிலர். அவர் சொல் கேளார் பலர். சுற்றத்துட் குற்றம் காண்பார். இனத்தார் பசித்திருப்ப அயலார்க்கு வயிறார அமுதிடுவர். தமிழ்ச் செல்வர் பலர் எதிரியின் முகமன் வலையில் அகப்பட்டு பெருமை பிதற்றி உரிமை இழப்பர்.

இத்தகைய குறைகளை எதிரிகள் நன்கறிவர். அன்னோர் சொல் நலங்-காட்டி பொருட் பழம் பறிப்பர். மாணவராக நின்று ஆணவராய் ஆசிரியராய் ஆட்சி புரிவார். தமிழரை பிரித்தாளும் பெற்றியில் இணையற்ற திறமைசான்றவர். எதிர்த்தாற் பதுங்கி அற்றம் பார்த்து தங்கருத்தை மெல்லென நுழைத்து இடைவிடா முயற்சியில் நாளடைவில் தமது வெற்றி நாட்டுவர். இந்நுட்பங்களைத் தமிழ் மகாநாட்டுத் தலை அறிஞர் தங்கடமை நிவேற்றுமிடத்து மனதில் பதிவித்துக் கொள்ளல் வேண்டும்.

நாம் செய்ய வேண்டுவதென்ன?

இனி செய்யற்பாலன சில தொகுத்துரைப்பாம். தமிழன்னையின் பெருமையைத் தமிழ் மக்கள் யாவரும் தெள்ளத் தெளிய உணரும் படி பத்திரிகையும் பிரசாரமும் ஓய்வில்லாமல் நடைபெற வேண்டும். தமிழின் ஏற்றத்தை உண்மையாக கருதும் எவரையும் நம்மவராகவே தழுவிக் கொள்ளுதல் வேண்டும். தமிழுக்கு உழைக்கும் அறிஞர்க்கு நேரும் இன்னல்களை முற்பட்டு அகற்றல் வேண்டும். தமிழுக்கு நேராகவோ மறைவாகவோ ஊறு செய்யும் பத்திரிகைகளை ஆதரியா தொழிதல் வேண்டும். போதுமான மொழிப்பற்று இல்லாத தமிழ்ச் செல்வர்களின் ஆதரவை கொண்டு பகைப் பத்திரிகைகள் பெருமிதமுற்று பெருநடை நடந்து பெருந்-தீங்கு விளைக்கின்றன. அவர்கள் சூழ்ச்சியினின்று நம்மை விடுதலை செய்யும் வீரப்பத்திரிகைகளை வேரூன்றச் செய்தல் வேண்டும்.

சிறந்த தமிழ் நூல்களுக்குத் தமிழ் மாண்பு விளக்கும் ஆராய்ச்சி முறையில் உரைகண்டு வெளிப்படுவதற்கு பெருந்துணை புரிதல் வேண்டும். தமிழ் நாகரிகத்திற்கு கண்ணாடியாய் அமைந்த தொல்காப்பியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உரைகள் அது தோன்றிச் சில்லாயிரம் ஆண்டுகள் கழிந்தபின் வடநூல் ஒளியினில் வகுக்கப்பட்டனவாகும். உரைக்கேற்ப நூற்பாக்கள் புகுத்தப்பட்டும் திருத்-தப்பட்டும் வைக்கும் முறை மாற்றப்பட்டும் இருப்பதை ஆராய்ச்சியாளர் அறிவர். அவ்வுரைக் கொண்டு நுல் கற்பவர் கலப்பற்ற உண்மையைக் காண இயலாதாவரே யாவர். அவ்வாறே திருவள்ளுவர் நூலுக்கும் தமிழ் நலங்காட்டும் புத்துரை இனியே அமைய வேண்டும். பரிமேலழகர் உரையில் கொள்ளத் தக்கன பல உள. எனினும் அதன் நிறம் தமிழ் நிறமன்று. வள்ளுவர் கூறிய பொது அறத்தை ஒரு குலத்துக்கொரு நீதிகூறும் மனு முதலிய நூல்களிற் காண்கவென்று அது கற்பிக்கின்றது.

பெண்கல்வி வேண்டாமென்று பேசுகின்றது. அரசியற் கொள்கைகக்கு ஆரிய நூலில் ஆதாரம் தேடுகின்றது. காமத்துப்பாலும் வடவாவழித் தென்கின்றது. அதனால் தமிழரது பண்டை பொது நெறி மறைவுற்று வருணக் கொள்கை மதிப்புறுவதாயிற்று. சங்க நூல்களுக்கும் தமிழர் மனப்பான்மையைத் தெள்ளிதின் உரைக்கும் தெளிவுரைகள் ஏற்படல் வேண்டும்.

புது நுல்கள் தோன்ற வேண்டும்

தண்டமிழ்க் காப்பிய நலங்களைக் கவினுற விளக்கும் நற்றமிழ் வாசக நுல்கள் நவநவமாக நனி பரவுதல் வேண்டும். புராணப் பனுவல்கள் ஆராய்ச்சியில் புடைக்கப்படுதல் வேண்டும். மெய்யாராய்ச்சியில் நிலை பெறுவனவே தழுவத்தக்கன. ஏனைய தள்ளத்தக்கன. சரித்திரம் செம்மை பெறுதல் வேண்டும். தமிழின் விழுமிய கருத்தும் நூலும் ஆங்கில முதலிய பிறமொழி தம்மினும் பிறங்குதல் வேண்டும். சித்தர், நூலாராய்ச்சி செவ்விதிற்றிகழ்ந்து மருத்துவ சோதிட மந்திர யோக நூல் முறைகளைத் தெற்றென விலக்குந்தெளிவு நூல்கள் பலப்பல ஆதல் வேண்டும். மேனாட்டு அறிவியல் நூல்கள் பலவும் தமிழர் பாங்குற அமைத்தல். ஆங்கிலங்கற்றவர் முதற்கடமையாகும். நயமிக்க வடநுல் பிறநூல்கள் தமிழிற் கொணர்தல் அவ்வம்மொழியில் வல்லுநர் கடமை செந்தமிழிசைகளே தமிழ் நன்மக்களால் போற்றத்தக்கன. இசைவல்ல தமிழர் இன்றமிழ்ப் பாட்டே பாடுதல் வேண்டும். இசைத் தமிழ் முழக்கம் தமிழ் மக்கள் யாவர் வீட்டிலும் நிறைதல் வேண்டும். நாடக கலைகள் தமிழர்சீரை நாடுதல் வேண்டும்.

-------------------தொடரும் - "குடிஅரசு", 2.1.1938

கதரின் மீதுள்ள மூடப்பக்தி பற்றி பெரியார்

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படாதென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை. வீதம்தான் கூலிகிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப்பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணிகளுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்று சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங்கொள்ளத் தொடங்கினார்கள்.

சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு இதை ஓர் ஆயுதமாக உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின்வாங்காது உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு இப்போதுதான் திரு.காந்தி அவர்கள் கண்விழித்து இதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார். அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும்படியான புதிய கை யந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்குச் சன்மானங்கள் செய்வதற்கு ஆக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார். இது பயன்பட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர் நிலை இப்படியே தான் இருக்க வேண்டும் என்றும், இதனாலேயே தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனமக்கள் கவனிப்பார்களே ஒழிய மகாத்மா சொல்லுகின்றார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில் கண் மூடி நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத்தனத்திற்குச் சற்று உதவி செய்வார்களாக.

---------------தந்தைபெரியார் - “குடிஅரசு”. கட்டுரை. 11.08.1929

23.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை - 1

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை
சென்னை மாகாண 3 ஆவது தமிழர் மகாநாடு திறப்பு விழா பேருரை
கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்கம்

தமிழன்பர்களே!

தமிழர் என்பார் தமிழைத் தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். தமிழ்நாட்டிற் பிறந்தும் தமிழைத் தாய்மொழியெனக் கருதாதவர் தமிழராகார். தமிழ் நாட்டிற் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போற்போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்ததெனக் கருதுபவருந் தமிழரே. தமிழ்நாட்டிலே தமிழிலேயே இறைவனை வாழ்த்தி வழிபடல் வேண்டும்; தமிழிலேயே சமயச் சடங்குகள் யாவும் நடைபெறல் வேண்டும்; தமிழிலேயே அரசியல் நிகழ்ச்சிகள் எழுதப்பெறல் வேண்டும்; தமிழிலேயே எக் கலைகளையும் கற்பித்தல் வேண்டும்; தமிழிலுள்ள அறிவுக்களஞ்சியங்களைப் பாதுகாத்தல் வேண்டும்; தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயமொழிப் பாடமாக இருத்தல் வேண்டும் என்ற கொள்கைகளை மேற்கொண்டு ஒழுகுபவரே உண்மைத் தமிழராவர். உண்மைத் தமிழர் ஒருங்கு வீற்றிருந்து தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் நாடும் பேரவை தமிழர் மகாநாடு எனப்பெயர் பெறும். இத்தமிழ்ப் பேரவையிற் புகுவோர் நினைவில் வைத்தற்குரிய சிலவற்றை இங்கே குறிப்பிடக் கருதுகின்றேன். தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வதில் உண்மையாக உழைப்பவர்களுள் சாதி சமயம் பற்றிய பிளவுகள் கருதப்பட மாட்டா. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், கிறிஸ்தவர், மகமதியர், அய்ரோப்பியர் முதலிய யாவரும் தமிழன்னைக்குத் தொண்டு செய்வதில் ஒன்று சேரலாம். பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்குந் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்துதற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப்பற்று ஒன்றேயாகும். தாய்மொழிப் பற்றில்லாத தாய்நாட்டுப் பற்று உயிரில்லாத உடம்புபோல்வதாகும்.

தமிழர் சமத்துவ உணர்ச்சி

தமிழ் அறநூல் பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் எனவும் தமிழ்ச் சமயநூல் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனவும், பழந் தமிழ்பனுவல் யாதும் ஊரே யாவருங் கேளிர் எனவும் முழங்குங்காலை தமிழ் மக்களைச் சாதியால் வேறு செய்து, சமயத்தால் மாறு செய்து, மொழியினாற் கூறு செய்து அவர்களுக்குள் ஒற்றுமைக் கேடுண்டாக்கியது யாது? மரத்தின் அடியில் யாவருங் கலந்து முதல்வனைத் தொழுத தமிழர்பால் வருணம்பற்றிக் கோயில் புகுதல் கூடாது என்ற கோட்பாடு எப்படி நுழைந்தது? தொடுக்குங் கடவுட் பழம் பாடற்றொடையின் பயனாம் பரமற்கு மிடுக்குமிகுந்த உரை கொண்டு நிகழ்த்தும் பூசனை எவ்வாறு உவப்பாயிற்று? நிறைமொழிமாந்தர் மறைமொழி நடுவிற் பிறமொழி மந்திரப் பெருமை புகுந்ததேன்? மலையிலும் கடலிலும் காட்டிலும் நாட்டிலும் பாலைவனத்திலும், பாமர மக்களும் பண்பாய் ஒலித்த யாழும் குழலும் செய்தியறைந்த பறையும் எங்கே போயின? இசைக்குரியது ஏனையர் மொழியெனும் வசைக்கருத்து யாங்ஙனம் வந்தது? பன்னிரு முறையிலும், நாலாயிரப் பனுவலிலும் பயின்ற இன்னிசைப் பண்ணும் திறனும் பரந்து நிலவாமைக்குக் காரணம் யாது? ஓவியக் கலைக்கும், உயரிய சிற்பத்திற்கும் உரிய தமிழ் நூல்கள் எங்கே ஒளிந்தன? சித்தர் மருத்துவம், சிறந்த வாத நூல், வானூல், கற்பநூல், யோகத் தமிழ்நூல், அறிவர் ஞான நூல் என்பன மாசுபடிந்து மங்கிக் கிடத்தற்கு மந்திரம் செய்தார் யார்? தமிழர் தம் சமய நிலையங்களிலும், அற நிலை-யங்-களிலும் மூட பத்தி தலையெடுப்ப முதன்மையான அறிவைக் கொன்றது யாது? என்பவை போன்ற வினாக்கட்குத் தக்க விடை தேட வேண்டும்.

தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம்

தேடுமிடுத்து கல்லாமையாலும், நூல் காவாமையாலும், கற்றாரைப் பேணாமை-யாலும் தமிழினத்தார் தாழ் நிலையடைந்து எதிரிகளின் சொல்லம்பிற்கு இரையாகிப் பொய்ச் சொற்பொழிவென்னும் சரட்டினாற் பிணிக்கப்பட்டு மெய்யுடை யொருவன் சொல்மாட்டாமையால் பொய் போலும்மே! பொய் போலும்மே! பொய்யுடையொருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே! மெய்போலும்மே! என்ற முதுமொழிக்குத் தக்க எடுத்துக்காட்டாக இலங்குதலே தெளிவாகத் தெரியவரும். ஆரியருக்கு நாகரிகத்தைக் கொடுத்து அவரது ஆடம்பர மொழிகளைத் தாங்-கள் பெற்று அம்மொழியைத் தாமும் அவரும் பொதுமொழியாகக் கருதி, தம்-முடைய கருத்துகளை அது வாயிலாக... விளக்கவே மொழியுங் கருத்தும் ஆரியருடையனவே என்ற தப்புக் கொள்கை தலையெடுக்கலாயிற்று. இந்நுட்பத்தை ஆய்ந்தறிந்த டாக்டர் கில்பெர்ட் சிலேட்டர் ‘‘While the Aryans were dravidised in culture, the dravidians were aryanised in language” என்று சுருக்கமாகவும் அழகாகவுங் கூறினார்.

சகம் முழுவதும் பரவிய தமிழ்

ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் எனச் சேக்கிழார் பெருமான் அருளிய வண்ணமும்; சதுர் மறை ஆரியம் வருமுன் சக முழுதும் நினதாயின் முதுமொழி நீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே என்று காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் மொழிந்த வண்ணமும் ஒரு காலத்தில் உலகமெங்கும் தமிழ் மொழியானது பரவியிருந்த போது மதியிற்களங்கம் போல அதன் பகுதி ஒன்றில் ஆரியங்கிளைப்பதாயிற்று. அதை மொழி நூலாராய்வார் நன்கறிவார். அதனை இங்கு விரிப்பின் பெருகும். நம்மளவில் பார்க்கும்பொழுது இந்திய நாடு முழுவதிலும் குமரி முனைக்குத் தெற்கேயும் தமிழானது பதினாயிரம் ஆண்டுகட்கு முன் பரவிச் செழித்தோங்கிற்று. வடமேற்கு இந்தியாவில் ஆரியம் தோன்று முன்பே செந்தமிழ் நாகரிகமும் செம்பொருள் வழிபாடும் நாடெங்கும் சிறப்புற்று விளங்கின. அவற்றின் பழமைமையக் குறித்து 51 ஆண்டுகட்கு முன்னேயே காலஞ்சென்ற சென்னைக் கவர்னர் கனம் கிராண்ட் டப் ஆய்ந்துரைத்த அமுதமொழி தமிழ்நாடெங்குந் தங்க எழுத்தில் பொறிக்கத் தக்கது. Their institutions..... go back to a period as compared with which the hoariest indo-aryan, antiquity is as the news in Reuters latest telegram.

பண்டைத் தமிழர் சிறப்பு

இறந்தாரை எழுப்பும் மந்திரம் வல்லராய்த் தண்டமிழர் இலங்கினார் என்பது இருக்கு வேதத்தால் குறிக்கப்பட்ட தொன்றாகும். நெருப்புக் கடவுளை வழிபட்ட ஆரியக் குருக்கள் சிலர் முதன் முதல் வடநாட்டில் வாழ்ந்த தமிழ் மன்னன் ஒருவன்பால் உயர்ஞானம் கற்றனர் என்பது உபநிடத ஆராய்ச்சியால் புலனாகும். எல்லை கடந்த செல்வச் செருக்கில் திளைத்த தமிழர் அறம், பொருள், இன்பம் வீடு கூறும் மறைநூல் மறந்தனர். அகத்தியர் முதலிய அய்ம்முனிவர் உணர்த்திய அருள் நுல் என்னும் ஆகமம் இழந்தனர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாம் என்பது போல, ஆரியர் வேதமும் தந்திரமும், தலை நூல்களாயின. தம் வரலாற்றினை அறவே மறந்த ஆதித் தமிழர் ஆரியர் சூழ்ச்சியால் சொல் வலைக்குள் அகப்பட்டனர். ஆரியச் சொல்லம்பால் தாக்கப்பட்டுத் தாய்மொழி பேசும் நாடு குறுகப் பெற்றுக் கிளை-மொழியாகிய கன்னடம், தெலுங்கு, முதலியவற்றை இழந்து, வடவேங்கடம் குமரிக்குள் ஒடுங்கிக் கோயிலிலும் வீதி-யிலும், வீட்டிலும் ஆற்றிலும் எவ்விடத்தும் ஆரிய மொழிக்கும் அம்மொழி தலைவருக்கும் அடிமையாயினர். பண்டைத் தமிழ்ப் பனுவல்களும் பாங்கிற் சிறந்த வரலாறுகளும் பதுங்கிக் கிடப்ப ஆரியக் கலைகளும் காவியங்களும் ஆடல்களும் பாடல்களும் யாண்டும் பரவித் தாண்டவமாடலாயின.

ஹிந்திப் புரட்டு

இங்ஙனம் விளைந்த குறைகள் பலப்பல... அவையாவற்றாலும் ஊனம் பெறாது தனது உண்மையியல்பின் செம்மையினால், பழையவற்றுள் பழையதாயும் புதியவற்றுள் புதியதாயும் மூவாது சாவாது என்றும் உயிர் வாழும் தண்டமிழ் அன்னை இன்னும் உயிரோடு வாழ்ந்து வீறுற்றிருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட பகைச் சொல்லினர் ஆரியம் முதலிய மொழி போற்றமிழ் மொழியையும் இறந்த மொழியாக்குங் கருத்துடன் அவள் மக்களின் அறியாமையைக் கருவியாகக்கொண்டு, அவள் இன்னுயிரைச் செகுத்து விடலாமென்று துணிந்து கொண்டு இற்றைக் காலத்தில் முன் வந்திருக்கின்றனர்.

------------------ தொடரும்”விடுதலை” 23-6-2010

கிராமப் பிரசாரம் செய்யுங்கள்! குடிஅரசை பரவச் செய்யுங்கள்!


பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

சர்க்கார் ஊழியம் சம்பந்தமான விசாரணைச் சபை


இந்தியாவில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் சம்பந்தமான விஷயத்தைப் பற்றி விசாரித்து அறிந்து தக்கபடி செய்வது என்ற பெயரை வைத்துக்கொண்டு அதற்காக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று ஒரு கமிட்டியை அரசாங்கத்தார் நியமித்து இருக்கிறார்கள். அக்கமிட்டிக்கு இந்தியர்களின் சார்பாய் இந்துக்களின் சார்பாய் நியமிக்கப்பட்டிருக்கும் அங்கத்தினர் ஒரு தமிழ்நாட்டுப் பிராமணர். இந்தியாவிலிருக்கும் 33 கோடி ஜனங்களில் முக்கால் கோடி ஜனங்கள் கொண்ட வகுப்பார்களான ஒரு சிறு சமூகமான பிராமண கோஷ்டியில் இருந்து ஒருவரைப் பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர் இந்தியாவிலுள்ள மனித வர்க்கத்திற்கே உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் ஜாதியைச் சேர்ந்தவர். அதிலும் அய்யங்கார் ஜாதியைச் சேர்ந்தவர்.

இந்தியர்களின் சர்க்கார் உத்தியோக சம்பந்தமான விஷயங்கள் இப்போது இவர் கையில்தான் அடங்கியிருக்கிறது. இனி இந்தியர்களின் தலையெழுத்தையும் ஜாதகத்தையும் கணிப்பவர் இந்த பிராமணர்தான். சர்க்காராரும் எந்த ஆசாமியைப் பிடித்தால் தங்கள் சொல்-லுபடி ஆடுவாரோ, தாங்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப் போடுவாரோ அந்த ஆசாமிகளைப் பார்த்துதான் நியமிப்பார்கள். இந்த பிராமணரே இதே சர்க்கார் உத்தியோகத்தில் 250 ரூபாய் சம்பளத்திலிருந்து சர்க்காரின் தாளத்திற்கு தகுந்தபடி ஆடி, சர்க்காரின் நம்பிக்கையைப் பெற்று சர் பட்டம் பெற்று இப்போது 3500 ரூபாய் சம்பளத்துடன் இந்தப் பொறுப்புள்ள உத்தியோகத்திற்கு வந்து இருக்கிறார் சர்க்காரும் பொறுப்புள்ள உத்தியோகம் ஏதானாலும் இந்தியர்களுக்குக் கொடுப்பதாயிருந்தால் அவைகளை பிராமணர்களுக்கே தான் கொடுத்து வருகிறார்கள். சர்க்காராருக்கு எப்பொழுதும் பிராமணரல்லாதாரிடம் நம்பிக்கையே கிடையாது. சர்க்காரார் இந்தியர்கள் தலையில் கைவைக்க உத்தேசித்து ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமென்றால் அவைகளுக்கு பிராமணர்களைத்தான் நம்புவார்கள். உதாரணமாக, மக்களை மிருகங்களிலும் கேவலமாய் அடக்கி ஆளுவதற்கென்று ரவுலட் ஆக்ட் ஏற்படுத்த நியமித்த ரவுலட் கமிட்டிக்கு இந்தியர்கள் சார்பாய் ஒரு பிராமணரைத்தான் நியமித்தார்கள். (மகாகனம் சாஸ்திரியார்)

இந்தியர்களுக்கு அவர்களின் ஜீவனத்திற்கு மாதம் என்ன செலவு பிடிக்கும் என்று தெரிந்துகொள்ளுவதற்கு அய்யங்கார் பிராமணர் அபிப்பிராயத்தைத்தான் எடுத்துக் கொண்டார்கள். அதாவது இந்துப் பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த ஸ்ரீமான் கஸ்தூரி ரெங்கய்யங்காரின் தமையனாரும் இப்போது இந்துப் பத்திரிகைக்கு ஆசிரியராய் இருக்கும் ஸ்ரீமான் எஸ்.ரெங்கசாமி அய்யங்காருக்கு தகப்பனாருமான ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் என்கிற அய்யங்கார்தான் யோசனை சொன்னார். என்ன யோசனை? ஒரு இந்துவின் ஜீவனத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 2_8_0 (இரண்டரை ரூபாய்) இருந்தால் போதுமென்று சொன்னார். இன்னமும் இப்படியே நமது தலையில் கையை வைக்க நியமித்த ஒவ்வொரு கமிஷனுக்கும் பிராமணர்களைத்தான் பிடிக்கிற வழக்கம். இதுமாத்திரமல்ல ஒத்துழையாமையை ஒடுக்க சட்டமறுப்புக் கமிட்டி என்று ஒரு கமிட்டி ஏற்பட்டது. அதிலும் சென்னை மாகாணச் சார்பாய் இரண்டு அய்யங்கார் பிராமணர்கள் தான் நியமிக்கப்பட்டார்கள். மகாத்மா காந்தியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமென்கிற அவசியம் நமது சர்க்காருக்கு வந்தபோது அதற்காகவும் மகாகனம் வி.சீனிவாச சாஸ்திரியார் என்கிற ஒரு பிராமணரைக் கொண்டு அபிப்பிராயம் சொல்லச் செய்து மகாத்மாவை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

இது மாத்திரமல்ல, இந்துமதப் புராணக் காலங்களிலேயே ஏதாவது பாட்டுக்கோ, வஞ்சகத்திற்கோ, கொடுமைக்கோ, கொலைக்கோ ஒருவர் அவசியமிருந்தால் அதற்கும் பிராமணர்களாகவே இருந்திருப்பதாகவும் கடவுளே மனிதராய் வந்து மேற்படி காரியங்களை செய்யவேண்டியிருந்ததாயும் பிராமணர் அவதாரம் எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இப்போது மாத்திரம் அது எப்படி பொய்த்துப் போகும்? வாயில் மாத்திரம் ஒத்துழையாமை என்பார்கள்; முட்டுக்கட்டை என்-பார்கள்; சுயராஜ்யம் என்பார்கள்; சர்க்காரை ஸ்தம்பிக்கச் செய்வது என்பார்கள்; உத்தியோகம் ஒப்புக்கொள்வதில்லை என்பார்கள்; காரியத்திலுள்ள உத்தியோகங்களை அவர்களே ஆவாகனப்படுத்திக் கொள்வார்கள்.

மந்திரிகள் உத்தியோக ஆசைபிடித்தவர்கள் என்று சொல்லி ஆள் வைத்து பிரசாரம் செய்து பாமர ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மந்திரிகள் சர்க்கார் தயவில் ஒரு உத்தியோகமும் பெறவேயில்லை. அவர்கள் கட்சியார் சட்டசபைக்கு பொதுஜனங்காளல் பெரும்பான்மையாய்த் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அதன் பலனாய் அவர்களுக்கு அந்தப் பதவி சீர்திருத்த சட்டப்படி கிடைத்தது. ஆனால் பிராமணர்களுக்கு எந்தச் சட்டப்படி கிடைத்தது? சர்க்கார் தயவென்கிற சட்டப்படி கிடைத்தது. சர்க்கார் சொன்னபடியெல்லாம் ஆடி, குடிகள் தலையில் கையை வைத்து சர்க்காருக்கு அனுகூலம் செய்து கொடுத்ததன் பலனாய் அவர்களுக்குக் கிடைத்தது. இது சமயம் உயர்ந்த உத்தியோகமெல்லாம் யாரிடமிருக்கிறது? வெள்ளைக்காரர்களுக்கு அடுத்தாற்போல் பிராமணர்களிடம்தான் இருக்கிறது. பொறுப்புள்ள உத்தியோகமெல்லாம் பெரும்பான்மையாய் அனுபவித்து வருகிறார்கள். நிருவாக சபை மெம்பர் பிராமணர் ரூபாய் 5333-_5_-4, ரிவனியு போர்டு மெம்பர் பிராமணர் ரூபாய் 3500.

ஜில்லா ஜட்ஜிகள் பிராமணர்கள்; சப்ஜட்ஜிகள் பிராமணர்கள்; ஜில்லா முனிசிப்புகள் பிராமணர்கள்; கலெக்டர்கள் பிராமணர்கள்; டிப்டி கலெக்டர்கள் பிராமணர்கள்; அட்வகேட் ஜெனரல் பிராமணர்; அரசாங்கக் காரியதரிசிகள் பிராமணர்கள்; கைத்-தொழில் இலாகா டைரக்டர் பிராமணர். இன்னமும் 1000, 2000, 3000 சம்பளம் உள்ள எந்த இலாகாவை எடுத்துக் கொண்டாலும் பிராமணர்களே பெரும்பான்மையாய் நிறைந்துகொண்டு பனகால் ராஜா அப்படிச் செய்தார், பாத்ரோ இப்படிச் செய்தார், சிவஞானம் பிள்ளை ஒன்றும் செய்யவில்லை என்பதாக கூலியார் வைத்து தூற்றிக் கொண்டு பொது ஜனங்களையும் ஏமாற்றி இவர்களைச் சர்க்காருக்கு காட்டிக்கொடுத்து அங்கும் உத்தியோகம் பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இதை அறியாமல் சில பிராமணரல்லாதார் இந்த பிராமணர்கள் தின்று கழித்த எச்சிலையை தங்களுக்குப் போடமாட்டார்களா என்று அவர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே நடந்து கொண்டிருந்தால் பிராமணரல்லாதார் கதிதான் என்னாவது? இதை ஒருவரும் கவனிப்பாரில்லையே. நம்மைச் சிலர் உத்தியோக ஆசை பிடித்தவர் என்று சொன்னாலும் சரி, ஒத்துழைப்பவன் என்று சொன்-னாலும் சரி, ஜஸ்டிஸ் கட்சிக்காரன் என்று சொன்னாலும் சரி. இவ்விதம் ஒரு வகுப்பு நம்மைத் தீண்டாதார், வேசி மக்கள் என்று சொல்லிக் காலில் வைத்து அழுத்திக் கொண்டு அதி-காரங்களையும் பதவிகளையும் பெற்றுக் கொண்டு போக, மற்றவர்கள் கீழே போய்க் கொண்டிருப்பதென்றால், இது பிராமணரல்லாத சமூகத்திற்கே அவமானகரமான காரியம் என்றே சொல்லுவோம். அதிலும் நமது சர்க்காருக்கும் பிராமணரல்லாதார் என்றால் மிகவும் அலட்சியமாய் மதிக்கும்படியாகி விட்டது. இதற்கு பிராமணரல்லாதாரிலேயே பிராமணர்களுடன் சுற்றித் திரியும் சில சமூகத் துரோகிகள் காரணமாயிருந்தாலும் பிராமணரல்லாதாருக்குள்ளும் சில கட்டுப்பாடுகளும் ஒற்றுமையும் தேவையிருக்கிறது. கடுகளவு தியாக புத்தியோடு பிராமணரல்லதார் கலந்து வேலை செய்வார்களானால் இந்த சர்க்காரை ஆட்டி வைக்கலாம். ஆனாலும் நமது பிராமணர்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். என்றாலும் இது முடியாத காரியமல்ல. நமது பாமர ஜனங்களுக்கு நாம் செய்யவேண்டிய பிரசாரம் எவ்வளவோ பாக்கியிருக்கிறது. பிராமணரல்லாதார்களுக்கு இனி ஒவ்வொரு வினாடியும் மிகுந்த விலை உயர்ந்ததாகும். ஒவ்வொரு பிராமணரல்-லாதாரும் இனி உறங்கக் கூடாது. மகாத்மாவின் நிர்மாணத் திட்டமாகிய கதர். தீண்டாமை விலக்கு ஆகிய இரண்டுமே பிராமணரல்லாதாரின் ஜீவ நாடியாகும். இதன் மூலமாய்த்தான் கடைத்தேற முடியும். உத்தியோக வேட்டையில் பிராமணரைப் பின்பற்றும் பிராமணரல்லாதாருக்கு இதன் மகிமை தெரியாது. ஆதலால் உண்மை பிராமணரல்லாதாரே! எழுங்கள்!! கிராமப் பிரசாரம் செய்யுங்கள்! கிராமமெங்கும் திராவிடனையும், குடிஅரசையும் பரவச் செய்யுங்கள்.

----------தந்தை பெரியார் "குடிஅரசு", தலையங்கம் - 23.05.1926

நீதிமன்றத்திலும் தமிழ் - 1956-லேயே விடுதலையில் தலையங்கம்


1956-லேயே விடுதலையில் தலையங்கம்: நீதிமன்றத்திலும் தமிழ்

தலமைச்சர் திரு. காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதிமன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது; இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும், சட்டத் துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றையப் பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதாடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில் மொழி பெயர்த்துவிட்டால் நீதியின் விலை இவ்வளவு அதிகமாயிருக்காது.

மற்ற விஞ்ஞான நூல்களைப் போன்ற மொழி பெயர்ப்புத் தொல்லை சட்டப் புத்தகங்களின் மொழி பெயர்ப்பில் இல்லை. சிறப்பான ஒரு சில சொற்களை இங்கிலீஷிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு தனி மொழி நாடாகப் போகிறது. அதுமுதலே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்களிலாவது தமிழில் நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் இருக்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பிறகு 1957 ஜனவரி முதல் உயர்நீதிமன்றத்திலும் தமிழில் நடக்கவேண்டுமென்று உத்தரவிடலாம்.

தன்னைப்பற்றி நீதிமன்றத்தில் என்ன பேசப்படுகிறது என்பதைக் குற்றவாளி உணர்ந்துகொள்ளவேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கூறுகிறார்.

ஆம்! இதுதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். இன்று நீதிமன்றமும் கோவிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒன்றில் இங்கிலீஷில் பேசும் வக்கீல்! இன்னொன்றில் சமஸ்கிருதத்தில் பேசும் அர்ச்சக வக்கீல்! வக்கீல் கூட்டமும் அர்ச்சகக் கூட்டமும் வயிற்றுப் பிழைப்பு நடத்துவது, மற்றவர்களின் மடமையை மூலதனமாக வைத்துத்தான்.

ஆகவே, நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். இதற்கு முன்னணி வேலையாக, ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பொறுப்பையும், செலவையும் ஆட்சியாளரே ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழ்ப் புலவர்களாயுள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம்.

இதேபோல் ஆட்சி நிருவாகத் துறையிலும், இங்கிலீஷ் இன்றுள்ளது போலவே, தமிழும் இயங்கவேண்டுமானால், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளில் ஏராளமாக நியமிக்கவேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதியிடங்களைத்தான் மற்றப் பட்டதாரிகளுக்குக் கொடுக்கவேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்தவேண்டும்.

இதுமட்டுமல்ல, தமிழில் சுருக்கெழுத்தும், டைப்ரைட்டிங்கும் கற்றுத் தேர்ச்சி பெறக்கூடியவர்கள் ஏராளமாகத் தேவை. இத்தேர்வுகளுக்குச் செல்வோரில் 100 க்கு ஒருவர் இருவருக்குத்தான் இன்று வெற்றி கிடைக்கிறது. இந்தக் கடுமையைத் தளர்த்தவேண்டும்.

அச்சுப் பொறியிலும் அவசர மாற்றம் ஏற்பட வேண்டும். தானே உருக்கி வார்க்கும் தமிழ் மானோடைப் (monotype) இயந்திரங்கள் பெருக வேண்டும். இம்முயற்சியில் கோவை நவ இந்தியா உரிமையாளர் தீவிரமாக ஈடுபட்டு வெற்றி கண்டிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். இத்தொழிற்சாலையில் உருவாக்கப்படுகின்ற ரோட்டரி அச்சு இயந்திரத்தையும் நாமே நேரிற் கண்டு வியப்படைந்தோம்.

இவைகள் மட்டுமல்ல, விஞ்ஞான நூல்களை யெல்லாம் தமிழில் ஆக்கி மலை மலையாகக் குவிக்கவேண்டும்.

கல்லூரிகளிலும் தமிழிலேயே பாடங் கற்பிக்கப்பட வேண்டும். என்ற கல்வியமைச்சரின் ஆசை உண்மையாயிருக்குமானால் தமிழ் மொழி பெயர்ப்புப் படை (Translation Army) ஒன்று தயாராக வேண்டாமா? இந்தப் பொறுப்பு யாருடையது? இதற்காக இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் பெருந்தொகை ஒதுக்கினால்தான் முடியும்.

இவற்றையெல்லாம் செய்யாவிடில் சில தமிழ்ப் புலவர்கள் தமிழ், தமிழ் என்று கூறுவது போல், மந்திரிகளும் பேச்சளவில் கூறி வருகிறார்கள் என்றுதான் கருதவேண்டியிருக்கும்.

தமிழ் வளரவேண்டுமானால், இவ்வளவு துறைகளிலும் ஆக்க வேலைகள் நடக்கவேண்டும். இவைகளுக்கெல்லாம் இடுக்கண்ணாக உள்ள இன்றையத் தமிழ் நெடுங்கணக்கு சுருங்கவேண்டும். தேவையற்ற எழுத்துக்களை நீக்கிவிடவேண்டும். குறைந்தபட்சம் விடுதலையின் எழுத்து மாற்றங்களையாவது ஏற்றுக்கொள்ளவேண்டும். திரு. ஓமந்தூர் ரெட்டியார் அவர்களின் ஆட்சியில், திரு. அவிநாசிலிங்கம் அவர்களது முயற்சியினால் முடிவு செய்யப்பட்ட தமிழ் எழுத்து மாற்ற உத்தரவைக் குப்பைத் தொட்டியில் போட்டார், திரு. ஆச்சாரியார் அவர்கள். இல்லையேல், இன்று எல்லாப் பாடப் புத்தகங்களும் அறிவுக்கேற்ற முறையில் திருந்திய எழுத்துக்களுடன் அச்சிடப்பட்டவைகளாயிருக்கும்.

தமிழில் ஆட்சி நடப்பதென்றால் சுளுவல்ல. பல அவசர மாற்றங்கள் திருத்தங்கள் ஆக்க வேலைகள் செய்யவேண்டும். ஆட்சியாளரிடம் அகம்பாவ உணர்ச்சி இருக்கக்கூடாது. மாற்றார் கூற்றிலும் உண்மையிருக்கும் என்ற பரந்த உணர்ச்சி வேண்டும்.

"விடுதலை" தலையங்கம் , 1.9.1956

குற்றவாளிக் கூண்டில் மருத்துவர் கேதன் தேசாய்

குற்றவாளிக் கூண்டில் மருத்துவர் கேதன் தேசாய்

- ராமச்சந்திரன் -

(இந்திய மருத்துவக் கல்வித் துறை தொடர்பான விவகாரங்களில் 20 ஆண்டு காலமாக ஒரு தனிநபரான கேதவ் தேசாய் அதிகாரம் செலுத்தி வர அனுமதிக்கப்பட்டுள்ளது விந்தையே. குஜராத் மாநிலம் அகமதாபாத் அரசினர் மருத்துவக் கல்லுரி மற்றும் மருத்துவ மனையில் சிறுநீரகத் துறைத் தலைவராக இருந்தவர் இவர். 2000 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த இவர் மீது லஞ்ச ஊழல் வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கிய உயர்நீதிமன்றம் கவுன்சிலை நிருவகிக்க ஒரு தற்காலிகக் குழுவை நியமித்தது.

ஆனால், கவுன்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தேசாய் மீதான லஞ்ச ஊழல் வழக்கையே நீர்த்துப் போகச்செய்தது. தேசாயின் பினாமியான கேசவன்குட்டிநாயர் என்பவர் கவுன்சிலின் தற்காலிகத் தலைவராக ஏழு ஆண்டு காலம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஏழு ஆண்டு காலமும் கவுன்சிலின் செயல்பாடுகள் அனைத்துமே தேசாயின் கட்டுப்பாட்டில்தான் நிகழ்ந்துள்ளன.

அண்மையில் தேசாய் வீட்டில் இருந்து 1500 கோடி ரூபாயும், 1500 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதில் வியப்பேதும் இருக்கமுடியாது. இந்தியாவில் ஒரு முக்கியமான துறையான மருத்துவக் கல்வித் துறையையே வளைத்துப்போட்டு ஒரு தனிநபர் இவ்வாறு கொள்ளை அடித்துள்ளதைத் தடுக்கவோ, கண்காணிக்கவோ அரசு தரப்பில் இந்த 20 ஆண்டு காலத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வியப்பைத் தருகிறது.

(ஃப்ரண்ட் லைன் இதழில் இராமச்சந்திரன் இது பற்றி எழுதியுள்ள மிக விரிவான கட்டுரையின் மொழியாக்கம் இங்கே தரப்படுகிறது.)

லஞ்சக் குற்றச்சாற்றுகளின் பேரில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாயைக் கைது செய்தது விரைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் அல்ல. பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் வாங்கியபோது, மத்தியப் புலனாய்வுத் துறையினர் தேசாயை ஏப்ரல் 22 அன்று கைது செய்தனர். இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஜே.பி.சிங் மற்றும் கன்வல்ஜித் சிங் என்ற இருவரும் உடன் கைது செய்யப்பட்டனர். முன்னவர் இந்த லஞ்சவிவகாரத்தில் நடுமனிதராக நின்ற தரகர். பின்னவர் பாட்டியாலாவில் உள்ள ஜியான் சாகர் மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர் ஆவார். இக்கல்லூரியுடன் தொடர்புடைய மற்றொரு நபரான சுக்வந்திர்சிங் பின்னர் கைது செய்யப்பட்டார். குற்றம்சாற்றப்பட்டவர்களிடையே நடைபெற்ற தொலை பேசி உரையாடல்களை தெற்கு டில்லி-யில் உள்ள தரகரின் வீட்டுத் தொலைபேசியை புலனாய்புத் துறையினர் ஒட்டுக் கேட்டதன் மூலம் ஜே.பி.சிங்கும், கன்வல்ஜித்சிங்கும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நால்வரையும் 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மே 1 ஆம் தேதியன்று டில்லி நீதிமன்றம் உத்தர-விட்டது. மே 3 ஆம் தேதி தேசாயின் ஜாமீன் மனுவை அந்நீதிமன்றம் நிராகரித்தது. தேசாயின் ஜாமீன் மனுவைப் பற்றி கேள்வி கேட்ட டில்லி உயர்நீதிமன்றம் அது பற்றி மத்தியப் புலனாய்வுத் துறை தனது பதிலை அளிக்கும்படி உத்தரவிட்டது. அகமதாபாத் அரசினர் பி.ஜே.மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகத் துறைத் தலைவராக இருந்த பதவியில் இருந்து குஜராத் அரசு தேசாயைப் பணிநீக்கம் செய்தது.

தேசாய் மீது 2001-லேயே டில்லி உயர்நீதிமன்றத்தில்
லஞ்ச ஊழல் வழக்கு நடந்தது

தேசாயின் லஞ்ச விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்திருப்பது இதுவே முதன் முறையல்ல. இந்திய மருத்துவக் கவுன்சிலில் அதிக அளவு லஞ்சம் நிலவுகிறது என்று 2001 நவம்பர் 23 அன்று டில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது கவுன்சிலின் தலைவராக இருந்த தேசாயின்மீது குற்றவியல் வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இருப்ப-தாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த உயர்நீதிமன்றம் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. இதுபோன்ற-தொரு நபர் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் போன்ற பெரிய பொதுப் பதவியில் இருப்பதற்கு தகுதி படைத்தவர் அல்ல என்று நீதிபதிகள் அருண் குமாரும், ஆர்.சி. சோப்-ராவும் கூறியுள்ளனர். வெளிச்சத்திற்கு வந்துள்ள குற்றச்-சாற்றுகளின் அடிப்படையில் குற்றவியல் வழக்கு தொடுக்க மத்தியப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனிஅதிகாரம் கொண்ட தனது பதவியைத் தவறாகப் தேசாய் பயன்படுத்தியதை உறுதிபட நிலைநாட்டியதுடன், இந்திய மருத்துவக் கவுன்சில் செயல்படும் முறையையும் நுணுகி பரிசீலித்த உயர்நீதிமன்றம் பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. கவுன்சிலின் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களாக உள்ள நிருவாகக் குழுவின் 1998,1999 மற்றும் 2000 ஆண்டுகளுக்கான கூட்ட நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குதல் போன்ற விஷயங்களை கவுன்சிலின் தலைவரின் முழுமையான அதிகாரத்துக்கு விட்டுவிடுவது என்ற தீர்மானங்களே இந்த நிருவாகக் குழுக் கூட்டத்தின் நடவடிக்கைகளில் நிறைந்துள்ளன என்று கூறியுள்ளது. மிகக் குறுகிய ஒரு காலத்திற்குள் 40 முதல் 50 வழக்குகள் வரை கையாளப்பட்டுள்ளன. கவுன்சிலின் அனைத்துச் செயல்பாடுகளும் தலைவரின் கட்டுப்பாட்டில், நிருவாகத்தில் இருந்துள்ளன என்பதையே இந்தத் தீர்-மானங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கவுன்சிலின் விவகாரங்கள் அனைத்தையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் கவுன்சிலின் விவகாரங்களை தலைவர் வழி-நடத்திச் சென்றுள்ளார். அவரது செயல்களை நியாயப்-படுத்தவே நிருவாகக் குழு பயன்படுத்தப்பட்டுள்ளது. தலை-வரோ தவறான முறைகளில் தனக்குப் பொருள் ஆதாயம் கிடைக்குமாறு செய்து கொண்டார். இதில் மத்திய அரசாங்-கத்தின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.

மருத்துவக் கல்லூரி தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்வு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

1956 இந்தியன் மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் 10ஏ பிரிவின்படி ஒரு புதிய மருத்துவக் கல்லூரியோ, ஒரு புதிய மருத்துவப் பாடமோ துவங்க கவுன்சிலின் அனுமதி தேவை. மருத்துவ பாடத்திலோ அல்லது பயிற்சியிலோ மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்வுக்கு அரசின் அனுமதி சட்டப்படி தேவை என்பதை இந்தப் பிரிவு கூறுகிறது. கல்லூரி தனது விண்ணப்பத்தை அரசுக்கு அளிக்கிறது; அந்த விண்ணப்பத்தை அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து, பரிந்துரைக்க அரசு அதனை மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்புகிறது. தனது பரிந்துரைகளை அளிக்கும் முன் தணிக்கையாளர் குழு ஒன்றை கல்லூரியைப் பார்வையிட்டு தகவல்களை நேரடியாகப் பெற கவுன்சில் அனுப்பி வைக்கிறது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கவுன்சிலின் பரிந்துரைகள் இருக்கும் என்பதால், தணிக்கையாளர்களின் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நடைமுறையில் சுதந்திரமான எந்த வித தணிக்கையோ சரிபார்த்தலோ இடம் பெற்றிருக்கவில்லை. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு இடத்திற்கும் 25 லட்ச ரூபாய் நிருவாகத்திற்கு கிடைக்கிறது என்பதால், நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மேலான எண்ணிக்கை கொண்ட இடங்களை அனுமதிப்-பதற்கு லஞ்சம் போன்ற காரணங்கள் இருக்கக் கூடும். அயல்-நாட்டில் வாழும் இந்தியருக்கான ஒதுக்கீடு என்றால், இன்னும் கூடுதலான பணம் கிடைக்கும். படியாலா கல்லூரி வழக்கிலிருந்து அங்கீகாரத்திற்கான இது போன்ற லஞ்சம் பல கோடிக் கணக்கில் இருக்கக்கூடும் என்பது நமக்கு தெரிய வருகிறது. கல்லூரிகளுக்குச் செல்லும் தணிக்கை-யாளர் குழுவில் யார் யாரை அனுப்புவது என்பதை முடிவு செய்வது தேசாயின் கையில் இருப்பதால், தனது கட்டளைக்கு ஏற்ப, அக்கல்லூரியில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திக்-காட்டவோ, அல்லது மறைத்துக் காட்டவோ கூடிய அறிக்கைகளை தணிக்கைக் குழுவிடமிருந்து பெறுவதற்கு தேசாயால் இயலும்.

சில கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளதை தேசிய மருத்துவக் கவுன்சிலும் தேசாயும் மறுக்கவில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அது போலவே, தணிக்கை களைத் தொடர்ந்து அங்கீகாரம் அளிப்-பதற்கான மறு தணிக்கைகளும் நடந்துள்ளன. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் வாங்கப்படுகிறது என்று நன்கு அறியப்பட்ட உண்மையி-லிருந்து, இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்துபவர்கள் பெரும் அளவிலான பணத்தை லஞ்சமாகப் பெறுகின்றனர் என்பது மெய்ப்பிக்கப் படுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால், சட்டதிட்டங்களிலேயே இல்லாத தீடீர் தணிக்கைகள் நடைபெற்றுள்ளன என்பதுதான் என்று தேசிய தேர்வுக் கழகத்தின் முன்னால் துணைத் தலைவரும், மேகாலயா மார்டின் லூதர்கிங் பல்கலைக் கழகத்தின் தற்போதைய வேந்தருமான கே.எம். சியாம் பிரசாத் கூறுகிறார். மருத்துவத் துறைப் பின்னணி இல்லாத மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஜிங்கான் என்ற ஒருவரை, இந்திய மருத்துவக் கவுன்-சிலின் தலைவரின் பணிகள் அனைத்தையும் ஆற்றவும், அதன் நிருவாகக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தவும் டில்லி உயர் நீதிமன்றம் நியமித்தது. ஆலோசனை தேவைப்படும் போது மருத்துவத் தொழிலில் உள்ள ஒருவருடன் இணைந்து செயல் படவும் அவருக்கு நீதிமன்றம் அதிகாரம் அளித்தது. தேசாய் மீதான வழக்கை உச்சநீதிமன்றம் நீர்த்துப்போகச் செய்தது

ஆனால், இந்த தீர்ப்பினை எதிர்த்து தேசிய மருத்துவ கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தேசா-யால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிருவாகக் குழு ஜிங்காலைச் செயல்பட அனுமதிக்கவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கவுன்சிலின் செயல்பாடுகளை நேர்மையானவையாகவும், எவரும் எளிதில் காணத் தக்க-வையாகவும் ஆக்க ஜிங்கால் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்துள்ளன. இறுதியில் உச்சநீதிமன்றத்தில் அவர் மீது இட்டுக் கட்டி உரைக்கப்பட்ட குற்றச்சாற்றுகளுக்குப் பின் அவர் பதவி விலகவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார். தேசிய மருத்துவக் கவுன்சி-லின் துணைத் தலைவர் கேசவன் குட்டியை ஜிங்கானிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட ஒரு அட்ஹாக் குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.

உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட பருவ அறிக்கைகளில் இந்தக் குழு தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளுக்கு நற்சான்று அளித்து வந்தது. தற்போது வெளிப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் அனைத்துத் தவறுகளையும் பொதுமக்கள் மற்றும் நீதிமன்றப் பார்வையில் இருந்து இந்தக்குழு பாதுகாத்திருக்கிறது என்று சியாம்பிரசாத் சுட்டிக்காட்டுகிறார். தேசிய மருத்துவக் கழகத்தில் லஞ்ச ஊழல் நிலவுகிறது என்பது: நன்கு அறியப்-பட்ட ஒரு செய்தி என்றாலும், அதன் செயல்பாடுகளில் இந்தக் குழு எந்த முறை கேட்டையோ, தவறையோ காணவில்லை. இதற்காக இந்தக் குழு சரியான விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும். இக் குழுவின் இத்தகைய நடவடிக்கை, தேசிய மருத்துவக் கவுன்சிலில் மறுபடியும் காலடி எடுத்து வைத்து, கடந்த ஆண்டு மறுபடியும் அதன் தலைவராக வருவதற்கு தேசாயை அனுமதித்துள்ளது.

இடைப்பட்ட ஏழாண்டு காலமும் கவுன்சிலின் செயல்பாடுகளை தேசாய்தான் தீர்மானித்தார் இந்த ஏழு ஆண்டு இடைக் காலத்திலும் கூட, தனது பினாமி மூலம் தேசாய் தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்-பாடுகளை வழி நடத்திக் கொண்டிருந்தார். கல்லூரி தணிக்கை-கள் குறித்த ஆவணங்கள், மாற்றி அமைக்கப்பட்ட தணிக்கை அறிக்கைகள், அங்கீகாரம் கேட்ட கல்லூரிகள் தேசாய்க்கு அனுப்பிய கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களும், நிருவாகக் குழு தேசாய்க்கு அனுப்பிய ஈ-மெயில் கடிதங்களும், இந்த இடைக் காலத்திலும் தேசாய்தான் தேசிய மருத்துவக் கவுன்-சிலினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதற்கான ஆதா-ரங்களாக விளங்குகின்றன. இந்த இடைக்காலத்தில் பாடத்-திட்ட மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும் ஆக்கப்பட்-டுள்ளார். அவரை ஏதோ ஒரு பதவியில் தேசிய மருத்துவக் கவுன்சிலில் நியமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பணி உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தேசாய் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதிப் படுத்துவதற்கு, 2000 ஆம் ஆண்டு ஜூலை 18 மற்றும் 20 தேதி-களில் தேசாயின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிவு பற்றி நீதிமன்றத்-திற்கு மனுதாரர் ஹரீஷ் பல்லா அளித்த ஆவண நகல்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. டில்லியில் உள்ள ஒரு வியாபார நிறுவனத்திடமிருந்து தேசாயும் அவரது குடும்-பத்தினரும் 65 லட்ச ரூபாய் பரிசு என்ற பெயரில் பெற்றிருந்-தனர் என்பதை இந்த சோதனை வெளிப்படுத்தியிருந்தது. தவறான வழியில் லஞ்சமாகப் பெற்ற கணக்கில் வராத பணத்தை முறைப்படுத்தி கணக்கில் கொண்டு வருவதற்காக இவ்வாறு பரிசு பெறப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. பிம்ப்ரி டி.ஒய்.படீல் மருத்துவக் கல்லூரி மற்றும் காஜியாபாத் சந்தோஷ் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் தணிக்கை அறிக்கைகளில் காணப்பட்ட கடுமையான முறைகேடுகள் இருப்பதைக் கவனித்த உயர்நீதிமன்றம், இந்த நிறுவனங்களுக்கு ஆதரவு காட்ட அளிக்கப்பட்ட லஞ்சப் பணம்தான் இது என்று மனுதாரர் கூறுவதை நம்புவதற்குப் போதிய காரணம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டது.

மத்திய புலனாய்வுத் துறை முழுமையான விசாரணையை நடத்தவில்லை

இத்தகைய கடுமையான கண்டனங்களுக்குப் பிறகும், மத்தியப் புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை முறைப்படி இறுதிவரை விசாரணை செய்யாமல் போனதால், தேசாய் எந்த வித தண்டனையும் இன்றி இந்த வழக்கிலிருந்து சுலபமாக விடுவித்துக் கொண்டார். வருமான வரித்துறையினர் சுட்டிக்-காட்டிய முக்கியமான ஒரு சான்று என்னவென்றால், மேற்படி இருவரும் பரிசு கொடுத்ததாகக் கூறப்படும் தேதிகளை அடுத்து வந்தசில நாள்களில் இந்தப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்-பட்டுள்ளது என்பதாகும். இந்தப் பணங்கள் எப்படி வந்தது என்பது பற்றி விசாரணை செய்யாமல், தேசாயின் வருமானவரி அறிக்கையில் இந்த பணங்கள் காட்டப்பட்டுள்ளன என்பதால், இந்த பிரச்சினையை அப்படியே முடித்துவிட்டனர். தேசிய மருத்துவ கவுன்சில் தணிக்கை செய்த கல்லூரிகள் லஞ்சம் கொடுத்-தனவா என்ற விவகாரத்தைப் பற்றியும் அவர்கள் விசாரணை செய்யவில்லை.

தேசாய் மீதான வழக்கே முடித்துக் கொள்ளப்பட்டது

இந்தப் பணப்பரிமாற்றங்கள் எல்லாம் நன்கொடையாளர் நல்ல எண்ணத்தில் தேசாய்க்கு வீட்டு வசதிக்காகக் கொடுத்த பணம்தான் என்று கூறி, பணத்தைப் பரிசாகக் கொடுத்த நன்கொடையாளர்களுக்கு தேசாய் எந்த வித சலுகையையாவது காட்டினார் என்று காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், மத்தியப் புலனாய்வுத் துறை இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் அக்டோர் 2003 இல் பதிவு செய்துள்ளது. மத்தியப் புலனாய்வு நீதிமன்றம் ஆரம்பத்தில் மத்திய புலனாய்வுத் துறையின் இந்த கருத்தை நிராகரித்திருந்த போதும், வேறொரு நீதிபதி அக்டோபர் 2005 இல் வழக்கின் தகுதிகள் பற்றி விரிவாகப் பரிசீலிக்காமல், வழக்கை முடிக்கும் மத்தியப் புலனாய்வுத் துறையினரின் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

வழக்கை முடிப்பதற்கு அரசோ, மனுதாரரோ ஆட்சேபணை தெரிவிக்கவில்லை

தேசிய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக தேசாய் நியமிக்கப் பட்டதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த மருத்துவர் ஹரீஷ் பல்லா இந்த வழக்கை முடிக்கும் அறிக்கை பற்றி எந்த ஆட்சேபணையும் தெரிவிக்க-வில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது கவனிக்-கத்தக்கது. எந்த அளவுக்குத் தனது செல்வாக்கைப் பயன்படுத்த தேசாயால் இயலும் என்பதையே இது காட்டுகிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்காத அளவுக்கு மத்தியப் புல-னாய்வுத் துறைக்கு அழுத்தம் கொடுக்க அவரால் முடிந்திருக்-கிறது. இந்த வழக்கை முடித்துக் கொள்ளும் அறிக்கையை ஆட்சேபிக்காமல், மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளச் செய்யவும் தேசாயால் இயன்றுள்ளது. இந்த மனுவின் வாதிகளில் ஒருவராக அரசும் தேசாய் மீதான இந்த வழக்கை முடிப்பதை எதிர்க்கவே இல்லை. மத்தியப் புலனாய்வுத் துறை தனது விசாரணையை முடித்துக் கொண்ட பிறகு, இந்த வழக்கை முழுமையாக முடிக்க டில்லி உயர்நீதிமன்றத்துக்கு மேலும் சில ஆண்டுகள் பிடித்தன. இதில் ஏற்பட்ட பெரும் கேடு என்னவென்றால், பெஞ்சில் ஏற்பட்ட மாற்றத்தின் ஆதர-வால், இறுதித் தீர்ப்பில் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் தேசாய் விடுவிக்கப்பட்டார் என்பதுதான்.

தேசாய் மறுபடியும் மருத்துவ கவுன்சில் உறுப்பினரானார்

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தேசிய மருத்துவக் கவுன்சிலின் திறமையான செயல்பாட்டுக்கு முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அமைப்பு தேவை என்பதால், தேர்தலை நடத்த அனுமதிக்கும்படி உச்சநீதிமன்ற அமிகஸ் குரியாவுக்கு தற்காலிக நிருவாகக் கமிட்டியின் உறுப்பினர்கள் நால்வரும், ஒரே மாதிரியான கடிதங்களைத் தனித்தனியே எழுதினர். இறுதியாக 2009 பிப்ரவரி 5 அன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தேசிய மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்க்கும் வேறு எந்த மனுதாரரும் இல்லை என்பது ஒரு பேரிழப்பாகும். 2001 தீர்ப்பின் படி மருத்துவக் கவுன்சிலில் தேசாயின் உறுப்பினர் தகுதி திரும்பப் பெறப்பட்டது. மத்தியப் புலனாய்வுத் துறை வழக்கை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து கவுன்சிலில் தனது உறுப்பினர் பதவிக்கு அனுமதி அளிக்கும்படி தேசாய் உச்சநீதிமன்றத்தை அணுகினார். தேசாய் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்தை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மருத்துவக் கவுன்சிலில் தேசாயை உறுப்பினராக அறிவிக்கும்படி 2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக பிரதிநிதி ஒரு தவறான அறிவிக்கையை நீதிமன்றத்தில் அளித்து உண்மை-களைத் தவறாக எடுத்துக் கூறினார். 2005 டிசம்பர் 12 அன்று மத்தியப் புலனாய்வுத் துறை நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை முடித்துக் கொள்ளும் அறிக்கையை ஏற்றுக் கொண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு ஒன்று இன்னமும் நிலுவையில் இருந்தது. தேசாயை மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினராக அறிவிக்க அரசுக்கு உத்தரவு பிறப்-பித்ததற்குப் பின்னர்தான், மார்ச் 2008 இல் டில்லி உயர் நீதி-மன்றம் இந்த மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர்-நீதிமன்ற கணினி தளத்தில் இந்த குறிப்பிட்ட உத்தரவு இப்போது காணப்படவில்லை என்பது ஆர்வம் அளிக்கும் ஒரு செய்தியாகும்.

தேசாய் மறுபடியும் கவுன்சில் தலைவரானார்

தேசிய மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்தல்கள் நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து,2009 மார்ச் 1 அன்று கவுன்சிலின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு கவுன்சில் தேர்தலை நடத்தியது. போட்டியின்றி தேசாய் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை கேசவன்குட்டி நாயரின் மனைவியும், திருவனந்தபுரம் டாக்டர் சோமர்வேல் நினைவு சிஎஸ்அய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனையின் மருத்துவருமான ராணி பாஸ்கரன் மற்றும் நாக்பூர் டட்டா மேகே மருத்துவ அறிவியல் நிறுவன மருத்து-வரான வேதபிரகாஷ் மிஸ்ராவும் முன்மொழிந்ததில் வியப்-பேதுமில்லை. மிஸ்ரா முன்பு முதுகலைப் பட்ட கமிட்டியின் தலைவராகவும் அதன் பின் நிதிக் கமிட்டியின் தலைவராகவும் இருந்தவர். இவர் மறுபடியும் தேசிய மருத்துவக் கழகத்தின் உறுப்பினராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறை நாக்பூர் பல்கலைக் கழகத்தின் மூலம் இவர் நியமனம் பெறவில்லை; இம்முறை மத்திய சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தினால் அரசு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

கவுன்சிலின் தற்காலிக தலைவர் ஏழு ஆண்டுகள் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டதேன்?

இதில் ஆர்வம் தரும் செய்தி என்னவென்றால், நீதிமன்றமும் அரசும் தேசிய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவிக் காலத்தை விட அதிக காலமான ஏழு ஆண்டு காலம்வரை தற்காலிகத் தலைவராக கேசவன்குட்டி நாயரைச் செயல்பட அனுமதித்ததுதான். தலைவராக வருவதற்கு மருத்துவத் தொழிலில் வேறு எவர் ஒருவருமே தகுதி பெற்றிருக்கவில்லை என்பது போலவும், தேசாய் திரும்ப வருவதை எல்லோரும் எதிர்பார்த்து இருந்தது போலவும் இருந்தது இச் செயல்பாடுகள். தேசிய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவியில் தேசாய் 20 ஆண்டு காலம் இருந்து ஒரு சாதனை படைத்துவிட்டார்.

ஆலோசனை அமைப்பான மருத்துவக் கவுன்சில் அதிகார அமைப்பாக ஆனது எப்படி?

மதிப்பிற்குரிய நீதிமன்றங்களும், மருத்துவத் தொழிலில் உள்ள சம்பந்தப்பட்டவர்களும் மேற்கொண்டதை விட மிகப் பெரிய அளவில் தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்-பாடுகளைப் பற்றிய முழுமையான ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அதன் கட்டமைப்பு முற்றிலுமாக மாற்றி அமைக்கப் படவேண்டும். 1933 இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கீழ் 1934 இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. இந்த சட்டம் போதுமானதாக இல்லை என்பதால், 1956 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் புதிதாக இயற்றப்-பட்டது. மருத்துவராகப் பதிவு செய்து கொள்வதற்கான தகுதிகள் பற்றிய விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை கூறும் ஓர் அமைப்பாகவே அது உருவாக்கப்பட்டது. ஆண்டு-கள் செல்லச் செல்ல, சட்டத்தில் வரையறைக்கு அப்பாற்-பட்ட பல அதிகாரங்களை இந்த கவுன்சில் தானா-கவே கைப்பற்றிக் கொண்டது. சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலமும், அரசின் பின்னேற்பு தேவைப்படும் சட்டதிட்டங்களை உருவாக்கியதன் மூலமும் இது சாத்தியமாயிற்று.

முதுகலை மருத்துவப் படிப்பு பற்றிய சட்டதிட்டங்கள் இயற்றப் படுவதற்கு எதிராக சட்டத்தின் பிரிவு 19கி இருந்த போதிலும், 2000 ஆம் ஆண்டில் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பு சட்ட திட்டங்கள் இயற்றப்பட்டன. இன்று முதுகலை மருத்துவ பட்டப் படிப்பில்தான் அதிக அளவு பணம் விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஓர் இடத்திற்கு 76 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. சில வழக்குகளில் மருத்துவக் கவுன்சிலின் அதிகாரங்களைப் பலப்படுத்திக் கொள்ள நீதிமன்றத் தீர்ப்புகளும் பெறப்பட்டுள்ளன. தேசிய மருத்துவக் கவுன்சிலை நீதிமன்றத்தில் எதிர்க்க இயன்ற ஒரே அமைப்பு அரசு மட்டுமே. ஆனால் பல வழக்குகளிலும், 2001 இல் இருந்தது போலவே, கவுன்சிலை அரசு எதிர்க்காமல் இருந்தது அல்லது தெரிவித்த எதிர்ப்பும் பலமுள்ளதாக இல்லை.

மிகவும் தீங்கு பயக்கும் திருத்தம் ஒன்று 1993 இல் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் 10கி என்ற புதிய பிரிவு அறிமுகப் படுத்தப்பட்டது. புதிய மருத்துவக் கல்லூரி துவங்குவது மற்றும் புதிய மருத்துவ பாடங்களை அறிமுகப்-படுத்துவதற்கு அனுமதி வழங்குவது பற்றிய பிரிவாகும் இது. இந்தத் திருத்தத்தின் மூலம், ஒரு மருத்துவக் கல்-லூரியை புதிதாக அமைப்பது அல்லது புதிய பாடத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றின் அனைத்து நடை-முறைகளின் மீது முழுமையாக கட்டுப்பாட்டை மருத்துவக் கவுன்சில் ஏற்படுத்திக் கொண்டது. அதுவரை இந்த நடை-முறையை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் பங்காற்றி வந்திருந்தன. இந்த புதிய திருத்தத்திற்குப் பின்னர் இந்த நடைமுறையில் ஒரு மாநில அரசின் பங்கு ஆட்சேபணை இல்லை என்ற ஒரு சான்றிதழை அளிப்பதுடன் முடிந்து போகிறது. பாடதிட்டம், ஆசிரியர் தகுதி நிர்ணயம், நியமனம், மருத்துவக் கல்லூரிகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் போன்ற பல பிரச்சினைகளில் இந்தத் திருத்தத்தின் அடிப்-படையில் தொடர்ந்த பல சட்டதிட்டங்கள் உருவாக்கப்-பட்டன.

பணபலமே மருத்துவக் கல்வி நடைமுறையில் மய்யமாக ஆகிவிட்டது

இதன் விளைவாக, தலைவர் மற்றும் பொறுப்பாளர்களின் நேர்மையே கேள்விக்குறியாக இருக்கும் ஓர் அமைப்-பினால், அவர்களின் சுயநலத்துக்காக தவறாக உருவாக்-கப்பட்ட ஒரு நடைமுறை கொண்ட மருத்துவக் கல்வியை இன்று நாம் பெற்றிருக்கிறோம். மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ற அளவு எண்-ணிக்கையிலான இடங்கள் இல்லாத நிலையில், மருத்துவக் கல்வியை ஒரு வியாபாரமாக ஆக்கி லாபம் ஈட்டும் முயற்சி-யில் தவறான நடத்தைப் பின்னணி கொண்ட தனிப்பட்ட-வர்கள் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கத் தொடங்கியதால், பணபலமே இந்த மருத்துவக் கல்வி நடைமுறையின் மய்யமாக ஆகிவிட்டது. ஒவ்வொரு தடை-யைக் கடக்கவும், புகழ்பெற்ற நிறுவனங்களை சீரழிக்கவும் அனைத்து நிலைகளிலும் பணம் பயன்படுத்தப் பட்டதால், லஞ்ச லாவண்யம் தேசிய மருத்துவக் கவுன்சிலில் ஊடுருவி நீக்கமற நிலைபெற்றது.

பல மாநில மருத்துவக் கவுன்சில்களில் பதிவு செய்துள்ள 6,33,108 மருத்துவர்கள் இன்று நமது நாட்டில் பரவியுள்ளனர். பெரும் அளவிலான பொருளாதார-_சுகாதார தேசிய ஆணை-யம் 2004 இல் அளித்த தனது அறிக்கையில், நன்கு நிர்வகிக்கப்படாத மாநிலங்களில் 1000 மக்களுக்கு எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்களோ, அதனைப் போன்ற மூன்று மடங்கு மருத்தவர்கள் நன்கு நிருவகிக்கப்படும் மாநிலங்களில் இருப்பதாகக் கூறியுள்ளது. 1000 மக்களுக்கு 2.25 மருத்-துவர்கள் இருக்கவேண்டும் என்ற தேசிய அளவு-கோலுக்-கும் குறைவான அளவு மருத்துவர்கள் அசாம், பிகார், ஜார்-கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், அரியானா, மகாராஷ்ரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்-ளனர். மருத்துவக் கல்லூரிகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று பார்த்தாலும், மருத்துவ வசதிகள் மக்களுக்கு அதிக அளவில் மறுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மருத்துவக் கல்-லூரிகள் அதிக அளவில் இல்லை. இந்தியா முழுமையிலும் உள்ள மருத்துவக் கல்வி மாணவர் இடங்களில் 70 விழுக்-காடு இடங்கள் தென் இந்தியாவின் அய்ந்து மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே உள்ளன. அதனால் அதிக அளவு பணம் சம்பாதிப்பதும் இங்கேயே நடக்கிறது. மருத்துவக் கல்வி பற்றி மத்திய அரசுக்கு அறிவுரை வழங்-குவதற்கு எவரும் இல்லாத வெற்றிடத்தில் நுழைந்த தேசிய மருத்துவக் கவுன்சில் இதுபற்றி எடுத்துக் கூறி, அதனை சரி செய்வதற்கான யோசனைகளை அரசுக்கு அளிக்கத் தவறி விட்டது. தேசிய மருத்துவக் கவுன்சில் செயல்பட்டு-வரும் முறையினால் குடிமக்களின் நலன்களுக்காக பெரும் அளவிலான விலை கொடுக்க வேண்டி நேர்ந்துள்ளது என்று ஒரு மூத்த அரசு அதிகாரி கூறினார்.

தேசாய் கைது செய்யப்பட்ட பின், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பி.ராஜிவ் மே 4 அன்று மாநிலங்களவையில் தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளில் காணப்-படும் முறைகேடுகள் பற்றி விவாதிக்க ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

(தொடரும்)

நன்றி: ஃப்ரன்ட் லைன், ஜூன் 4
தமிழில்: த.க. பாலகிருட்டிணன் "விடுதலை” 20-6-2010


குற்றவாளிக் கூண்டில் மருத்துவர் கேதன் தேசாய்

- ராமச்சந்திரன் -

தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாட்டில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அமைச்சர் குலாம் நபி ஆசாத் பதிலளித்தார். கவுன்சிலின் செயல்பாடு-களில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் அளித்துக் கொள்ளும் நோக்கத்துடன்தான் அரசு தேசிய மருத்துவக் கவுன்சில் திருத்த சட்ட(2005)த்தை அறிமுகப் படுத்தியது.

தேசிய மருத்துவக் கவுன்சில் தலைவர் பதவியை தேசாய் வகிப்பது இப்போது முதல் முடிவுக்கு வருகிறது. தேசிய மருத்துவக் கவுன்சில் அலுவ-லகப் பொறுப்பு வகிக்கும் ஒருவரை தகுதி இழக்கச் செய்வ-தற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். ஆனால், அதே போல அவரது பதவிக் காலம் முடியும் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்-பாளர் ஒருவரை நீக்குவதற்கு எதிராகவும் சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் 2001 நவம்பர் 23 அன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சட்டத்தில் எதுவும் கூறப்-படாமல் (வெற்றிடமாக) உள்ள நிலையில், நீதிமன்றத்தால் தலையிட்டு செயல்பட முடிகிறது என்னும்போது, அரசி-னால் ஏன் அவ்வாறு செய்ய முடியாது?

குறிப்பாக, கவுன்சிலின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பதவிக்-காலத்தை வரம்புக்குட்படுத்தவும், தலைவரையோ, துணைத் தலைவரையோ, உறுப்பினரையோ தவறான நடத்தை அல்லது திறமையின்மை காரணங்-களுக்காக பதவிக்காலம் நிறைவடையும் முன்னரேயே நீக்குவதற்கான அதிகாரங்-களை அரசுக்கு அளிக்க வகைசெய்வதே இந்தத் திருத்தங்களின் நோக்கமாகும்.

இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள்பற்றி அறிவிக்கை கூறுவதாவது:

கவுன்சிலின் செயல்பாட்டை மறுபரி-சீலனை செய்தபின்... பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்ததன் காரணமாக, கொள்கை அளவிலும், பொதுநலன்களின் முக்கியத்துவத்தை உத்தேசித்தும் தேவைப்படும் அளவில், முறையில் கவுன்-சிலுக்கு உத்தரவு இடுவதற்கும், அதனிடம் ஒப்படைக்கப்பட்ட கடமை-களை நிறைவேற்றுவது பற்றி சரியான பதில் அளிக்கும் கடமையை அது சரியாக செய்கிறதா என்பதை உறுதிப்-படுத்திக் கொள்வதற்கும், மத்திய அரசுக்கு அதிகாரம் தேவை என்று உணர்ந்துள்ள காரணத்தால், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், கவுன்சிலின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்-பினர்களை நீக்கவும், நிருவாகக் குழு-வையோ வேறு எந்த ஒரு குழுவையோ கலைக்கவும் அரசு தனக்குத்தானே அதிகாரம் அளித்துக் கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது. மேலே தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப் பட்டுள்ளது 2001 நவம்பரில் டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பற்றி குறிப்பிடுவதாகும்.

சட்டதிருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு

இந்த சட்டதிருத்தமசோதா 2005-_07 இல் அமர்சிங் தலைமையிலான சுகா-தாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிசீல-னைக்கு அனுப்பப்பட்டது. மசோதாவில் அரசுக்கு அளிக்கப்பட உத்தேசித்திருந்த அனைத்து அதிகாரங்களும் தேவை-யற்றவை என்று நிலைக்குழு பரிந்துரை செய்தது; கவுன்சிலுக்கு ஒரு வரை-யறைக்குட்பட்ட அளவில் அரசு உத்தரவு பிறப்பிக்க அனுமதிக்கலாம் என்ற ஒரு பிரிவு மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கவுன்சிலின் ஜனநாயகச் செயல்பாடு இந்தத் திருத்தங்களால் பாதிக்கப்படும் என்று அவற்றை நிராகரிக்க நிலைக் குழு காரணம் கூறியது.

அண்மையில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அமைச்-சர் இந்தப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு நாம் பார்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை மதிப்-பிற்குரிய உறுப்பினர்களுக்கு நான் தெரி-வித்துக் கொள்கிறேன் என்று கூறினார். தனது கடமைகளைப் பாராட்டும் வகையில் செய்து முடிப்பதற்கு, கவுன்சில் போன்ற எந்த கட்டுப்பாட்டு அமைப்புக்-கும் சுயஅதிகாரமும், தனித் தன்மையும் தேவை என்ற நிலைக் குழுவின் கண்ணோட்டத்தை மறுப்பதற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது. கட்டுப்-பாட்டுடன் தன்னைத் தானே நிருவகித்-துக் கொள்ளும் கவுன்சிலின் ஆற்றலில் வைத்துள்ள நம்பிக்கையைத்தான் 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்-சில் சட்டம் எதிரொலிக்கிறது. நாட்டில் மருத்துவக் கல்வியை நிருவகிக்கும் கட்ட-மைப்புகளின் அனைத்து அம்சங்களையும் மேலும் சீர்திருத்தம் செய்யவேண்டிய தேவை உள்ளது என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. விவாதத்தின் போது அமைச்சரின் இக்கருத்தை மற்ற சில உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

தனது செயல்களுக்கு பதில் சொல்லும் கடமையே தன்னாட்சியை விட முக்கியமானது இப்பிரச்சினையில் தன்னாட்சி என்று கூறப்படுவது முக்கியமானதே அல்ல. தனது செயல்பாடுகளுக்கு பதில் சொல்ல-வேண்டிய கவுன்சிலின் கடமை பற்றியதுதான் முக்கியமான பிரச்சினை-யாகும். இதைச் சரியாகச் சொல்ல வேண்டு-மானால், தன்னாட்சிக்கும் செயல்பாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைக்கும் இடையில் நடக்கும் மோதல் என்று கூறலாம். கவுன்சில் தனது செயல்பாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கோட்-பாடு அரசினால் காற்றில் பறக்கவிடப்-பட்டது. திறமையற்ற முறையிலும், சில நேரங்களில் கவுன்சிலுடன் கூட்டு சேர்ந்தும் அரசு செயல்பட்டிருக்கிறது. சிலரிடமிருந்து, குறிப்பாக தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்களால் முன் வைக்கப்படும் தன்னாட்சி வாதம் என்னும் புகைத் திரையின் ஊடே அதன் தவறான செயல்பாடுகளைக் காண முடியாமல் நிலைக் குழு இருப்பது பெரிய இழப்புதான். உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மட்டுமே கவுன்சிலை சீர்திருத்திவிடுமா என்பது சிந்தனைக்குரிய ஒரு கேள்வி-தான். கவுன்சில் அலுவலரின் செயல்-பாடு உள்ளிட்ட கவுன்சிலின் எந்த விஷயத்தையும் விசாரிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு இந்தச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் நியமிக்கப் படலாம். வெளிச்சத்துக்கு வந்துள்ள முறைகேடுகளை சரி செய்யவும், கவுன்சிலை தனது செயல்-களுக்கு பதில் கூறச் செய்வதற்கும் இந்த விதியை அரசு எப்போதாவது பயன்-படுத்தி இருக்கிறதா என்பது தெரிய-வில்லை.

பதிவு செய்த மருத்துவர் பட்டியலே 1993-க்குப் பின்னர் பேணப்படவில்லை நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பதிவேட்டை 1993_க்குப் பின் பராமரிக்க கவுன்சில் தவறி விட்டது என்று 2005 இல் மதிப்-பீட்டுக் குழு குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

ஆனால் மிக முக்கியமாக, முன்பு சுட்டிக்-காட்டியது போல, கவுன்சிலில் நிலவும் இந்த லஞ்ச லாவண்யத்துக்கு மூல காரணமே புதிய மருத்துவக் கல்லூரிகளை துவக்கவும், புதிய பாடப் பிரிவுகளைத் துவக்கவும் பரிந்துரைக்கும் அதிகாரங்களை கவுன்சிலுக்கு அளிக்கும் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரிவு 10கி. பற்றிய சட்டதிருத்தம்தான்.

கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரங்கள் பறிக்கப்பட-வேண்டும் என்றும், மருத்துவத் தொழிலில் நன்னெறியை உறுதிப்படுத்திக் கொள்ளத் தேவையான ஆலோசனை-களை அரசுக்குத் தெரிவிக்கும் தனது அசல் பணிக்கு கவுன்சில் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்றும் மருத்துவத் தொழிலில் உள்ள பலரும், அரசு அதிகாரிகளும் கூட கூறுகின்றனர். மருத்துவக் கல்வி மற்றும் மனித வளம் பற்றிய விவகாரங்கள் புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை-யில் மனித வளம் பற்றிய தேசிய கவுன்-சிலின் செயல்பாட்டுக்கே விடப்படலாம். கடந்த ஆண்டு தனது நாடாளுமன்ற உரையில் இதற்கு தனது ஒப்புதலை மேதகு குடியரசுத் தலைவர் அளித்-துள்ளார். இந்த மசோதா மிகவும் மோச-மாக வரையப்பட்டிருப்பதே பெரிய இழப்-பாகும்; பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்-பட்டுள்ள பிரச்சினைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த மசோதா திருத்தி எழுதப்பட வேண்டும்.

அமைச்சரின் முரண்பட்ட நிலைப்பாடுகள் இந்த விஷயத்தில் அமைச்சரின் அறிக்கைகள் முரண்பாடு கொண்டவை-யாகவே தோன்றுகின்றன. மருத்துவக் கல்வித் துறையில் கவுன்சில் இழந்து-விட்ட பெருமையை மீட்கவேண்டும் என்று ஒரு பக்கம் அவர் விரும்புகிறார்; மற்றொரு பக்கத்தில் சுகாதாரத்துறையில் மனித வளம் பற்றிய தேசிய கவுன்சில் மசோதாவை விரைவில் அவையில் தாக்கல் செய்வதாக உறுதி அளித்து உள்ளார். மருத்துவக் கவுன்சில் பற்றிய அமைச்சரின் இத்-தகைய சந்தேகத்திற்கிடமான நிலை, அண்மையில் ஏற்-பட்ட கருத்து வேறு-பாடிலிருந்தும், உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமப்புற சுகாதாரசேவைக்கான குறுகிய கால மருத்துவப் படிப்பு பற்றிய நீதிமன்ற வழக்கிலிருந்தும் தெரிய வருகிறது. (ஃப்ரண்ட் லை பிப்ரவரி 26 மற்றும் ஏப்ரல்9).

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்-துக்கான சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுவதற்கு மாறாக, தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த மூன்றரை ஆண்டு கிராமப்புற மருத்-துவ_அறுவைசிகிச்சைப் படிப்பை அமைச்சர் ஆதரித்துள்ளார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்-கும்போது, நன்னெறி உள்ளிட்ட மருத்-துவத் தொழில் பற்றிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை அளிக்கும் அமைப்பு என்ற அள-விலேயே தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்-பாடுகளைக் வரையறைப்படுத்துவதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு ஒரு புதிய திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்-படவேண்டியது இன்றியமையாதது.

ஆறு லட்சம் மருத்துவர்கள் கவுன்சிலின் பொறுப்பாளர்களை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் நாட்டில் சேவையாற்றும் ஆறு லட்சம் மருத்துவர்களை பாதிக்கும் முடிவுகளைச் மேற்கொள்ளும் பணியை தங்-களுக்குள்ளாகவே ஏற்பாடு செய்து கொண்டு தேர்ந்-தெடுத்-துக் கொண்ட ஒரு சில உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும் ஒரு நடைமுறையை நிருணயித்துள்ள சட்டம் உடன-டி-யாகத் திருத்தப்பட-வேண்டும்.. இதற்கான தேர்தலில் மருத்-துவராகப் பதிவு செய்திருக்கும் ஒவ்-வொரு மருத்து-வருக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கவேண்டும்.

இந்த கணினி யுகத்தில், ஆறு லட்சம் உறுப்பினர்களில் ஒவ்வொருவரும், மின்னணு இயந்திரம் மூலம் வாக்களித்து தங்களின் செயல்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு சரியான ஒரு தலைவரைத் தேர்ந்து எடுப்பது என்பது மிகவும் எளி-தானதே என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். புதிதாக அறிமுகப்-படுத்தப்பட உள்ள தேசிய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதாவிலும் இதற்கான பிரிவு சேர்க்கப்படவேண்டும்.

(நன்றி: ஃப்ரன்ட் லைன், ஜூன் 4
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்).”விடுதலை” 21-6-2010