இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு!
திராவிடர் கழகம் இல்லை யென்றால் வரலாற்றையே மாற்றியிருப்பார்கள்
இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு!
புத்தக வெளியீட்டு விழாவில் புலவர் மா.நன்னன் அவர்களின் ஆய்வுரை
சென்னை, ஏப். 25- தந்தை பெரியார்
அவர்களின் கொள்கை வளம், திராவிடர் கழகத்தின் வரலாற்றுச் சிறப்பு, அன்னை
மணியம்மையாரின் பேருள்ளம் தமிழர் தலைவர் கி.வீரமணி இயக்கத்திற்குக்
கிடைத்தபேறு இவற்றையெல்லாம் தொகுத்து ஓர் ஆய்வுரை போல பெரியார் பேருரையாளர்
பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் வழங்கினார்.
28.3.2014 அன்று சென்னை பெரியார் திடல்
எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் பெரியார்
பேருரையாளர் பேராசிரியர் நன்னன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
அன்பார்ந்த தலைவர் அவர்களே, தமிழர்
தலைவர், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களே, பூ.பழனியப்பன்
அவர்களின் நூல்களை வெளியிட்ட மருத்துவர் ராஜசேகரன் அவர்களே, வழக்குரைஞர்
அருள் மொழி அவர்களே, டாக்டர் பழனியப்பன் அவர்களுடைய குடும்பத்தினைச்
சேர்ந்த நண்பர்களே, தோழர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தினை
தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவன்
இந்த நிகழ்ச்சியில், படத்திறப்பு என்ற ஒரு
நிகழ்ச்சி என்பது - மற்ற படத்திறப்பு நிகழ்ச்சிகளைவிட தனித்தன்மை
வாய்ந்ததாக எனக்குத் தெரிகிறது. ஒரு சுயமரியாதைக் குடும்பம் - மூன்றாவது
தலைமுறையினர் இவர்கள் - பூவராகன் - கணேசன் - சோலையப்பன் - பழனியப்பன் -
அதற்கடுத்து இவர்கள் எல்லாம் தொடர்ந்து வருகிறார்கள். நான் இவர்களோடு
எல்லாம் தொடர்பு கொண்டவன்.
பூவராகன் அவர்கள் பதிவாளராக சிதம்பரத்தில்
பணி யாற்றியது முதல் நான் அவர்களை அறிவேன். திரு.கணேசன் அவர்களும்,
திரு.சோலையப்பன் அவர்களும், நான் புலவர் வகுப்புப் படித்தபொழுது, அவர்கள்
அங்கே படித்தவர்கள். கொஞ்சம் பேர்தான் நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
இருப்பார்கள். அதனால் நான் அவர்களுடன் நெருக்க மாகவே பழகியிருக்கிறேன்.
ஒரு சுயமரியாதைக் குடும்பத்தில், ஒரு
நிகழ்ச்சி நடைபெறுகின்றபொழுது, எப்படிப்பட்ட மன உறுதியோடு இருக்கவேண்டும்
என்பதற்கு, இந்தத் திருமகன் சேரலாதன் அவர்கள் எடுத்துக்காட்டாக
இருக்கிறார்கள்.
அவர்கள் உரையாற்றியபொழுது, நான் ஒரு
நிலையில் இல்லை. அன்றைக்கும் அங்கே நான் சென்றிருந்தேன். அய்யா காலத்தில்
போடப்பட்ட நட்ட நடவு - பயிர்!
திராவிடர் கழகம் எப்படி உறுதியாக,
எத்தனையோ சூழ்நிலைகளுக்கிடையில் நின்று வளர்ந்துகொண்டு, வாழ்ந்துகொண்டு
செம்மையாக இருக்கிறதோ, அதுபோல் அந்தக் குடும்பமும் இருக்கிறது.
சுயமரியாதைக் குடும்பங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் குடும்பம் இருக்கிறது.
இவையெல்லாம் அய்யா காலத்தில் போடப்பட்ட நட்ட நடவு - பயிர்!
அமெரிக்காவில் இருந்து விதை நெல் வாங்கிப் போடுகின்ற பயிர் அல்ல!
நல்ல பொறுக்குமணி விதைகளைக் கொண்டு பயிரிடு வதைப்போல - பயிரிட்ட குடும்பம் அது.
அந்தக் குடும்பத்தை முழுமையாக நாமெல்லாம் - நான் அந்த உறுதியை ஏற்றேன்.
நான் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று நினைத்து முயற்சி செய்பவன்தான் என்றாலும்கூட, அந்தக் குடும்பத்தை நான் மதித்துப் பாராட்டுகிறேன்.
டாக்டர் பழனியப்பன் அவர்கள் மருத்துவராக
இங்கே அவர் பணியாற்றியபொழுது சென்றேன்; பிறகு அவர்கள் வீட்டுத் திருமணத்தை
நடத்தி வைக்கச் சென்றேனே தவிர, அந்தக் காலத்தில் இவரோடு எனக்குப்
பழக்கமில்லை.
டோக்கியோவிற்குச் சென்றுவிட்டு வந்ததுபோன்ற உணர்வு எங்களுக்கு...
டோக்கியோவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு
(International Seminar - Tokkiyo)உலக மாநாட்டிற்கு அவர் தலைவராகச் சென்று,
பிறகு இதே திடலுக்கு வந்து அவர் உரையாற்றினார். நானும் அந்தக்
கூட்டத்திற்கு வந்திருந் தேன். அவர் உரையாற்றும்பொழுது, நாங்கள் டோக்கி
யோவிற்குச் சென்றுவிட்டு வந்ததுபோன்ற உணர்வு எங்களுக்கு அன்றைக்கு வந்தது.
அதில் ஒரு செய்தியைச் சொல்கிறேன்:
அந்த ஊர் கழிப்பறையை நீங்கள் என்ன பாடுபட்டாலும் அசிங்கப்படுத்த முடியாது என்றார்.
டோக்கியோவிலுள்ள
ஒரு சுரங்கப் பாதைக்குச் செல்லும் வழி மறந்துவிட்டதால், எந்தப் பாதையில்
செல்வது என்று தெரியாமல் இருந்தாராம்; தவறான பாதையில் சென்றால், அது வேறு
எங்கோ கொண்டு போய்விடுமாம்; இவர் வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்ததைப்
பார்த்த ஒரு ஜப்பான்காரர், அவர் கைகளில் வைத்திருந்த மூட்டைகளை ஓரிடத்தில்
வைத்துவிட்டு, இவர் செல்லவேண்டிய இடத் திற்கு இவரைக் கொண்டு போய்
விட்டாராம். ஜப்பான்காரர் களுடைய மனப்பான்மையை அவ்வளவு அழகாக அந்தக்
கூட்டத்தில் அருமையாக விவரித்தார்.
பொறுக்குமணிகள் போல, அந்த நாட்டினுடைய பண்பாட்டை, அறிவு நுட்பத்தை, உழைப்பை அந்தக் கூட்டத்தில் எடுத்தியம்பினார்.
அவரிடம் மருத்துவத்திற்காக இரண்டு, மூன்று முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்பே மிக அருமையாக இருக்கிறது!
திராவிடர் கழகக் குடும்பத்தில்,
பெரியாரியல் குடும்பத் தில், சுயமரியாதைக் குடும்பத்தில் பட்டொளிவீசி
நெடுங் காலமாக வாழையடி வாழையாக வாழவேண்டும் அந்தக் குடும்பம் என்று நான்
வாழ்த்துகிறேன்.
இந்த நூல் வெளியீட்டு விழாவினைப்பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்பே
மிக அருமையாக இருக்கிறது. அதற்கு முன், முன்னுரைக்கு முன்பாக ஒன்றைச்
சொல்லிவிடவேண்டும் என்று நினைக் கிறேன்.
ஆசிரியர் அவர்களே, நீங்கள் தொடங்கியிருக்கின்ற இந்தப் பணி, மற்ற பணிகளையெல்லாம்விட இன்றியமை யாத பணி என்று நான் கருதுகிறேன்.
இந்த நாடு, நாசக்காரர்கள் வாழுகின்ற நாடு;
எல்லா வற்றையும் பிரித்து நைத்து விடுவார்கள்; ஒரு வழக்கு நடக்கிறது
என்றால், அதுவும் முக்கியமான வழக்கின் தீர்ப்பு என்றால், அந்தத் தீர்ப்பை
அப்படியே மறைத்துவிடுகின்ற ஊடகம் இங்கே மட்டும்தான் இருக்கிறது; வேறு
எங்கும் இருக்காது. இவர்களுக்கு மட்டுமல்ல, பாட்டன், முப் பாட்டன்,
நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த இவர்களுடைய
பரம்பரையினரின் குணமே அதுதான்.
பாண்டவர்கள் செய்தது தவறு
ராமாயணத்தைப்பற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு நூலை எழுதியிருக்கிறார் -
முதலில் கட்டுரைதான் எழுதினார் - பிறகு அது நூலாக வந்தது.
தசரதன் குறையும் - கைகேயியின் நிறையும்!
தசரதன் செய்தது அயோக்கியத்தனம்; கைகேயி செய்ததுதான் சரி என்று சொல்கிறார்.
அதை விளக்கி நான் இங்கே உரையாற்ற முடியாது.
அதேபோல, பாரதத்தில், திருதராஷ்டிரர்,
அவருடைய மகன் துரியோதனன் ஆகியோர் செய்ததுதான் சரி; பாண்ட வர்கள் செய்தது
தவறு என்று சொல்லியிருக்கிறார். அது நூலாக வரவில்லை. அது ஒரு அருமையான
கட்டுரையாகும்.
அது மிராசுதாரர் வீட்டுக் குடும்பம் அல்ல;
நான்கு பிள்ளை இருந்தால், நால்வரும் பங்கு போட்டு பிரித்துக் கொள்வதற்கு;
அது அரச குடும்பம், யார் ஆட்சியில் இருக்கிறாரோ, அவருடைய மகன்களில்
மூத்தவர்தான் பட்டத்திற்கு வரவேண்டும். அதன்படி, பாண்டு ஒரு நோயாளி;
திருதராஷ்டிரன்தான் ஆண்டான். அவனுக்குப் பிறகு, அவனுடைய மகன்
துரியோதனுக்குத்தானே பட்டம் கட்டவேண்டும். அதை ஒரு காப்பியமாக எழுதிக்
கொண்டு வந்தார்.
சேரன் செங்குட்டுவன் - சிலப்பதிகாரம் - ஒரு குப்பை குப்பையிலே இவ்வளவு செய்திருக்கிறவன் - இதை விடுவானா?
மாவீரன் - ஆரியர்களை எதிர்த்தவர்;
கரிகாலற் சோழர்கூட புலிக்கொடியை இமயமலையில் நிறுவினார் என்று
சொல்கிறார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதியதைத் தான் நான் இங்கே
உரையாற்றுகிறேன், துறவியாகிய இளங்கோவடிகளின் மனதை மாற்றி, யாகம் செய்து,
நாசமாகப் போவதுபோல் சிலப்பதிகாரத்தை முடித்து விட்டார்கள்.
எப்படிப்பட்ட காவியத்தை இப்படி முடித்துவிட்டார் கள். வள்ளலார் ஜோதியில் கலந்துவிட்டார் என்ற சொன்னார்கள் - கொன்றுவிட்டு!
நந்தனார் அந்தக் காலத்தில் முதல் ஆளாகப்
புரட்சியை செய்தவர். இப்படித்தான் நண்பர்களே, எல்லாவற்றையும்
திரித்துவிட்டார்கள்.
திருக்குறளா - பார்ப்பான் எழுதியது என்கிறார்கள்.
தொல்காப்பியமா - அறிவுள்ளவன் எவனாவது
எதையா வது செய்திருந்தால், அவன் பார்ப்பானாகத்தான் இருக்க வேண்டும். அல்லது
பார்ப்பானுக்கோ, பார்ப்பனத்திக்கோ பிறந்திருக்கவேண்டும் என்று
சொல்கிறார்கள். மாற்ற வேண்டும் அவ்வளவையும்!
திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால், வரலாற்றை மாற்றியிருப்பார்கள்
திராவிடர் கழகம் இல்லாமல்
இருந்திருந்தால், பெரியாருக்குப் பிறகு அந்த இயக்கம் - திராவிடர் கழகம்
தளர்ந்து போயிருந்தால், சோர்ந்து போயிருந்தால், வர லாற்றை
மாற்றியிருப்பார்கள்.
வள்ளலாருக்கு நேர்ந்த கதி - பெரியாருக்கு ஏன் நேரவில்லை?
நந்தனாருக்கு நேர்ந்த கதி ஏன் திராவிடர் கழகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படவில்லை? அதுதான் திராவிடர் கழகத்தின் தனிப்பெரும் சிறப்பு!
ஒரு பயலாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை;
இப்ப வும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான். நம்முடைய எதிரி
என்றைக்கும் இருக்கக்கூடிய எதிரி. அவர்களை ஒழிக்க முடியவில்லை, இதுவரையில்.
எமர்ஜென்சி காலத்தில் இரண்டு பேர்
வந்தார்கள் - தவே, ஆரிய சுப்பிரமணியன் என்பவர்கள். இரண்டே வருடத்தில்
அத்தனையையும் மாற்றினார்கள். நடக்குமா?
தேர்தல் ஆணையம் ஆகட்டும்; மற்றவை ஆகட்டும்
- அவர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கிருந்தெல் லாம் நமக்குக்
கெடுதலைத்தான் செய்துகொண்டிருக் கிறார்கள்.
நாம் விழிப்போடு இருக்கவேண்டும்!
ஆகவே, இந்த இயக்கத்தையே மாற்றி, இயக்கத்தி
னுடைய நோக்கம் போன்றவைகளை மாற்றி, கொண்டு போய் கவிழ்த்திருப்பார்கள்;
அல்லது கவிழ்ப்பார்கள். இது வரையில் கவிழ்க்கவில்லை; நாம் விழிப்போடு
இருக்க வேண்டும்.
அதற்காகத்தான் நான் சொல்கிறேன், இந்த வரலாற்று நூல் வரிசை - அந்தப் பணியை தடுத்து நிறுத்துகிறது.
குடியரசுப் பதிப்பகம் இருக்கிறது, அது
தொடர்பான ஏடுகள் எல்லாம் இருக்கின்றன என்றாலும்கூட, இப்படி ஒரு வரலாற்று
முறையில், அதனோடு இரண்டறக் கலந்தவர் எழுதுகிறார் - யாரோ ஒருத்தர்
எழுதவில்லை.
திராவிடர் கழகமாகவே, பெரியாரியலாகவே
பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆசிரியர் அவர்கள் - அந்தப் பணியை - அய்யா
சொல்வதுபோல, எத்தனையோ பணிகள் - அதற்கிடையில் இதனையும் தம் தலைமீது போட்டுக்
கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் படித்துப் பார்த்தேன். டாக்டர் இராசசேகரன் அய்யாகூட, எப்படி அய்யா ஆசிரியர் இப்படி எழுதுகிறார் என்று கேட்டார்.
நமக்கு இதுதான் முக்கியம் என்றில்லாமல்,
நம் ஆசிரியர் அய்யா அவர்கள், தேர்தல் சுற்றுப் பயணம் - இவரே தேர்தலில்
நிற்பதுபோன்று - அந்தச் சுற்றுப் பயணத்தின் நடுவில் ஒரு நாள் தான் இடைவெளி
இருக்கிறது. எங்காவது மூச்சுவிடு வதற்கு இடம் வைத்திருக்கிறாரா என்று
பார்த்தேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளையாவது விடுகிறாரா? அதுவும் இல்லை.
அப்படிப்பட்டவராக அவர்கள் விளங்குகிறார்கள். அவர்கள்தான் இந்த நூலினை
எழுதியிருக்கிறார்கள்.
காந்தி சென்ற பாதைதான் இருக்கிறதே தவிர, வேறு யாரும் பின்னால் சென்றதாக இல்லை
அதனால்தான் நான் சொன்னேன் என் இனிய தோழர்
களே, இந்த நூல் வரிசையில், சரியான காலத்தில், சரியானவ ரால், சரியான
நோக்கத்தோடு உருவாக்கப்படுகிறது. இது தேவையான, சரியான, இன்றியமையாத விளைவை
இந்த நாட்டிலே விளைவிக்கும் என்ற அளவில் அதை நான் நிறுத்திக் கொள்ள
விரும்புகிறேன். நூல் அமைப்பைப் பற்றியெல்லாம்கூட சொல்லவேண்டும் என்று
நினைத்தேன். ஆனால், உள்ளே போகவேண்டும் என்கிற ஆர்வத்தினால் அதனைப்பற்றி
நான் அதிகமாக சொல்லவில்லை. இந்த நூலின் தலைப்பைத்தான் நான் சொல்லத்
தொடங்கினேன், அய்யாவின் அடிச்சுவட்டில்...
இதைப் பார்த்ததும் எனக்கு ஒரு
நினைவு வந்தது; ஒரு காலத்தில் காந்தியினுடைய படத்தைப் போட்டு ரயில்வே
நிலையத்தில் எல்லாம் வைத்திருப்பார்கள். அதற்கு மேலே “he showed as the
way” என்று எழுதி வைத்திருப்பார்கள். அவர் நடந்து போவதுபோல, மைல்கல்
எல்லாம் வளைந்து வளைந்து அந்தப் பாதையை வரைந்திருப்பார் அந்த ஓவியர்
தன்னுடைய திறமையெல்லாவற்றையும் காட்டியிருப்பார். அதில் காந்தி சென்ற
பாதைதான் இருக்கிறதே தவிர, வேறு யாரும் பின்னால் சென்றதாக இல்லை. அவர்
தெரிந்து விட்டாரோ, தெரியாமல் விட்டாரோ தெரியவில்லை. அது ஏனென்றால், அந்தப்
பாதையில் செல்ல முடியாது. இப்படி வளைந்து வளைந்து போனால், எந்தக்
காலத்தில் போய்ச் சேருவது? நேரான பாதையாக இல்லை; மணல் பாதையாக இருக்கிறது;
அப்பாதை பயணத்திற்குத் தக்கதாக இல்லை என்று நினைத்து, இந்தியப்
பெருநாட்டினுடைய மக்கள் எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டார்கள்.
எல்லோருமே வழிவிட்டார்களே ஒழிய, அந்தப்
பாதையில் சென்றவர்கள் யாரும் இல்லை. அந்த நினைவுதான் எனக்கு வந்தது.
இன்றைக்கும் காந்தி நெறி என்று எங்கே இருக்கிறது? அவருடைய காலத்திலேயே
இல்லையே! ஆனால், நம் அய்யா பெரியாருடைய நெறி இருக்கிறதே - உங்களுக்கு இந்த
அரசை காணிக்கையாக்குகிறேன் என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அரசியலே
தேவையில்லை என்று சொன்னவருக்கு, ஒரு அரசை காணிக்கையாக்குகிறேன் என்று
சொல்கின்ற நிலை.
---------------------”விடுதலை” 25-04-2014
புத்தக வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் மா.நன்னனின் ஆய்வுரை
தமிழர் தலைவருக்கு மகிழ்ச்சியை, நிம்மதியை, ஊக்கத்தை, உண்டாக்க வேண்டும்
சிறிய கவலையோ, பதற்றமோ இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை
புத்தக வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் மா.நன்னனின் ஆய்வுரை
சென்னை, ஏப். 26- தலைவருக்கு மகிழ்ச்சியை,
நிம்ம தியை ஊக்கத்தை உண்டாக்க வேண்டும். சிறிய கவ லையோ, பதற்றமோ இல்லாது
பார்த்துக் கொள்ள வேண் டியது நமது கடமை என்றார் பெரியார் பேருரையாளர்
பேராசிரியர் மா.நன்னன் அவர்கள்
.
28.3.2014 அன்று சென்னை பெரியார் திடல்
எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் பெரியார்
பேருரையாளர் பேராசிரியர் நன்னன் அவர்கள் உரையாற்றினார். அவரது நேற்றைய
உரையின் தொடர்ச்சி வருமாறு:
இயற்கையை யாராவது அழிக்க முடியுமா?
இந்த இயக்கத்தினுடைய தனித்தன்மையை நான்
சொல்லிவிடுகிறேன். பெரியாருடைய இயக்கம் உண்டாக்கப் பட்டது,
உருவாக்கப்பட்டது என்பதுபோல சொல்லக்கூடிய இயக்கமன்று. பெரியார் என்ன
திட்டம் போட்டு தன்னைச் சேர்ந்த நான்கு பேரை அழைத்துப் பேசி, சுயமரியாதைக்
கட்சி ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதாக எனக்குத் தோன்ற வில்லை. திடீரென்று
அவர் பேச ஆரம்பித்துவிட்டார்; எழுத ஆரம்பித்துவிட்டார், இயல்பாக -
இயற்கையாக - ஒரு நோக்கத்திற்காக என்றெல்லாம்கூட இந்த இயக்கம் உருவாக
வில்லை. இந்த இயக்கத்தை உருவாக்கியது பெரியார் என்றால், இடையிலிருந்து,
செடியோ, கொடியோ, நாற்றோ முளைத்து வருவதுபோல, அவரிடத்திலிருந்து அது
வெளிப்படுகிறது. வெறும் தரையாக இருக்கிறது; மழை பெய்தவுடன் அங்கிருந்து ஒரு
மரக்கன்று முளைக்கிறது அதுபோல; சூரியன் எப்படி உண்டாயிற்று என்று
அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்; இந்த நில உருண்டை எப்படி உருவாயிற்று
என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதுபோல உண்டான இயக்கம்தான் திராவிடர்
இயக்கம் - திராவிடர் கழகம் - சுயமரியாதை இயக்கம் எல்லாம். ஆகவே, இது
அழியாது. இயற்கையை யாராவது அழிக்க முடியுமா? அதற்குமேல் நான் போக
விரும்பவில்லை. இயற்கையாக முகிழ்த்த ஒரு இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்
பாரதிதாசன் அவர்கள் திருச்சி வானொலி நிலையத்தில், பாரதியாரைப்பற்றி ஒரு
கவியரங்கத்தில் பாடினார். அங்கே இந்த இயல்பு இருக்கிறது என்று எனக்கு
நினைவிற்கு வருகிறது. சரியான நேரத்தில், சரியானவனை இயற்கை தானே
தோற்றுவிக்கும் என்ற பொருள்பட பாவேந்தர் அவர்கள் அக்கவியரங்கத்தில்
பாடியிருக்கிறார். அப்படித்தான் பாரதி புலவன் வந்தான் என்று சொல்கிறார்.
இயற்கையாக முகிழ்த்த (தோன்றிய என்ற சொல் சரியில்லை) ஒரு இயக்கம்தான் - அது
பெரியார் மூலமாக - மழை பெய்தவுடன் முளை விடுகின்ற செடி, கொடிகளைப்போல,
சரியான முறையில் வெளிவந்தது.
நாம் எல்லாம் தோற்றுப் போனாலும்கூட,
எவனாவது ஒருவன் வந்து கையில் எடுப்பான். அப்படித் தோற்றுப் போகும்படியாக,
விட்டுவிட்டுப் போகும்டியாக இந்த அமைப்பு இல்லை. ஆகையால், இந்த நெறி
இயல்பாக, தானே தோன்றியது.
இந்த நூலாசிரியர் வீரமணி அவர்களைப் பற்றி ஒரே ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
இவர் இந்த இயக்கத்திலிருந்தே தோன்றி, இந்த
இயக்கத்திலேயே வளர்ந்தவர். இவருக்கென்று தனியே ஒன்றும் கிடையாது. அவருடைய
நினைப்பெல்லாம் - நான் ஒவ்வொரு சமயமும் அவர் உரையாற்றும்பொழுது நான்
கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பேன். உங்களைப்போல அதிகமாக அவர்களிடத்தில்
நான் நெருங்கிப் பழக முடிய வில்லையே தவிர, ஓரளவுக்குக் கிடைத்திருக்கின்ற
வாய்ப் பைப் பார்த்து சொல்கிறபொழுது, பெரியாரியல் என்பது எப்படி ஒரு
இயக்கமாக ஆகி, அந்த இயக்கத்திற்குள்ளே சேர்ந்து, அதுவும் வளர்கிறது,
இயக்கமும் வளர்கிறது!
சிறுவனாக இருக்கும்பொழுது கூட்டத்தில் உரையாற்றுவார்; உரையாற்றி முடிந்தவுடன் தூங்கிவிடுவார்
நான் இங்கே முன்பு உரையாற்றும்பொழுது
சொன்ன ஒரு செய்தியை சொல்கிறேன்: ஆசிரியர் அவர்கள் சிறுவனாக இருக்கும்பொழுது
கூட்டத்தில் உரையாற்றுவார். உரை யாற்றி முடிந்தவுடன் தூங்கிவிடுவார்,
கூட்டம் முடிவதற்குள். யாராவது ஒருவர் தூக்கிக்கொண்டுதான் போவார்கள்.
அந்தக் காலகட்டத்தில் மாணவப்
பருவத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். நான் அறிந்த வரையில், இந்த
இயக்கத்திற்குக் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு, பேறு ஆசிரியர்
அவர்கள் - தமிழர் தலைவர் அவர்கள்.
கைதட்டுகின்ற நீங்களும், இந்தச் செய்தியை
விடுதலை யில் படிக்கின்ற மற்ற ஊர் தோழர்களும், ஆசிரியர் அவர் களுக்கு
எவ்வளவு நிம்மதியை, மகிழ்ச்சியை, ஊக்கத்தை உண்டாக்க முடியுமோ அவ்வளவையும்
செய்யவேண்டும் என்று நான் இந்த மேடையில் இருந்து வேண்டுகோள் விடுக்கிறேன்.
சின்ன கவலையோ, பதற்றமோகூட வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமை.
அப்படிப்பட்ட ஒருவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். இந்த இயக்கம்
இப்படிப்பட்டது என்று சொன்னேன். இந்த நூலை எழுதியிருக்கின்ற ஆசிரியர்
அவர்கள் இப்படிப்பட்டவர் என்று சொன்னேன்.
யார் போனால் என்ன?
நான் பார்த்துக்கொண்டு வருகிற வரையில், வீழ்ச்சி, தளர்ச்சி, தேக்கம் இவையெல்லாம் ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.
இந்த இயக்கத்திலிருந்து அண்ணா அவர்கள்,
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிரித்துக் கொண்டு சென்றதற்கே, எதுவும்
ஆகவில்லை. அப்புறம் யார் போனால் என்ன?
இங்கிருந்து பிரிந்து சென்றவர்கள் நடத்திய
கூட்டத்தில் என்ன பேசினார்கள்? நாம் தான் திராவிடர் கழகம்; அந்தக்
கட்டடத்தைப் பூட்டி சீல் வைக்கவேண்டும்; இதுதான் திராவிடர் கழகம், அது
இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் உண்டு.
பெரியார் செத்துவிட்டார்; இப்பொழுது
இருக்கிறவர் வெங்கட நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கர்தான்; அவரைப் பற்றி
இங்கே எவரும் பேசாதீங்க என்று சொல்லப்பட்ட துண்டு. நான் அந்தக் கூட்டத்தில்
இருந்தேன்.
அன்னையாரைப் பற்றியது அன்னையார் காலத்தில் தொடங்குகிறது
நம் வக்கீல் வேதாச்சலம், குத்தூசி
குருசாமி அய்யா அவர்கள் எல்லாம் தொடக்கவிழா நடத்தினார்கள் அல்லவா, கோகலே
ஹாலில். இப்பொழுதுகூட யாரோ சிலர் கூட்டத்தைக் கூட்டினார்கள், அதிலேயும்
நான் கலந்து கொண்டிருக்கிறேன். அத்தனையையும் பார்த்த நான் சொல் கிறேன்,
இவர்களுக்கெல்லாம், இந்த மாதிரி ஏதோ சில்லூண் டித்தனமாக சில காரியங்களைச்
செய்கின்ற அளவிற்குத்தான் அறிவும், திறமையும் இருக்குமே தவிர, அண்ணா
ஒருவரைத் தவிர மற்ற யாருக்கும் வேறு எந்த சிறப்புத் தகுதியும்,
உருப்படியாகச் செய்யக்கூடிய யோக்கியதையும் யாருக்கும் கிடையாது.
அப்படிப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். இதனுடைய வீழ்ச்சி இல்லை என்று
சொன்னேன்; வீழ்ச்சி வேறு; தளர்ச்சி வேறு. இது இரண்டும் அல்லாமல் வேறு ஒன்று
உண்டு. அதுதான் தேக்கம். தேக்க நிலைக்குக்கூட அவர்கள் விடு வதில்லை.
நீங்கள் அவர்களுடைய திட்டங்கள், போராட் டங்கள், நடைமுறைகள் மற்ற இயக்க
நடவடிக்கை களைப்பற்றி தனியே ஒரு பட்டியல் போட்டு, எப்படி அவர் கள்
கொண்டுபோகிறார்கள் என்று நோக்குவீர்களேயானால், நான் சொன்ன இந்த முடிவிற்கு
நீங்களும் வர முடியும். அப்படிப்பட்ட ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்த
அய்யாவின் அடிச்சுவட்டில் என்கிற நூலின் நான்காம் பாகம்,
அன்னையாரைப்பற்றியது. அன்னையார் காலத்தில் தொடங்குகிறது.
பெரியார் - அண்ணா நினைவகம்
ஈரோட்டிலுள்ள அய்யாவின் வீட்டிற்குப்
பின்புறம் ஒரு சின்ன பகுதி உண்டு. குடியரசு அலுவலகத்திலிருந்து
சாப்பாட்டுக்கு அங்கேதான் செல்லவேண்டும். அங்கேதான் அண்ணா அவர்கள்
குடியிருந்திருக்கிறார். அந்த வீட்டை பெரியார் நினைவகமாக ஆக்கவேண்டும்
என்று அரசு சொல்லி, அந்த இடத்திற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று
சொல்லுங்கள்; அதனை அரசு கொடுத்துவிடும் என்று ஆசிரியரிடத்தில் முதல்வர்
கலைஞர் சொல்கிறார்கள். அம்மா அவர்கள் உடனே, பணம் ஒன்றும் வேண்டாம்; நன்கொடை
யாக இந்த இடத்தினை அரசாங்கத்திற்குக் கொடுத்துவிடு கிறோம் என்று
சொன்னார்கள். பெயர் வைக்கிறபொழுது அம்மா சொன்னார்கள், அண்ணா பெயரும் அதில்
இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். பெரியார் - அண்ணா நினைவகம். இந்த ஒரு
மனப்பான்மை போதும், அம்மா அவர்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு.
ஒளிக்காமல், மறைக்காமல், திரிக்காமல், விடுபடாமல்...
மாற்றுக் கட்சிக்காரர்கள் எல்லாம் என்ன
சொன்னார்கள்? இதில் எப்படி அண்ணாதுரை பெயர் வரலாம்? பெரியார் பெயரில்தான்
இருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார் கள்.
கொஞ்சம்கூட மாற்று இல்லாமல்,
ஒளிக்காமல், மறைக்காமல், திரிக்காமல், விடுபடாமல் ஆசிரியர் அய்யா அவர்கள்
அதனைத் தொகுத்து இந்த நூலில் கொடுத்திருக் கிறார்.
அம்மாவினுடைய அந்தப் பேருள்ளம்போல, அதனை
எழுதும்பொழுது, இவருடைய உள்ளமும் அமைந்திருக்கக் காண்கிறேன். திராவிடப்
பாரம்பரியம் நண்பர்களே, எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது பார்த்தீர்களா?
எல்லாம் ஒரே உள்ளம்!
ஒரு அரசாங்கத்தையே பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்ன அந்த அண்ணாவினுடைய உள்ளம்.
நீங்கள் எனக்கு செய்கிற சொல்கிற பிறந்த
நாள் வாழ்த்து, தி.மு.க.வினரை வாழ வைக்கிறது என்று கழகத்தினருக்கு உத்தரவு
போட்ட அய்யாவினுடைய உள்ளம்,
அண்ணாவினுடைய பெயரும் இதில் இருக்கவேண்டும்
என்று சொன்ன அம்மாவினுடைய உள்ளம்; இதை விடுபடாமல், சரியாக, தக்கவாறு,
அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கின்ற நம்முடைய ஆசிரியர் அவர்களுடைய உள்ளம்
எல்லாம் ஒரே உள்ளம்.
இவர்களுக்குள் சண்டை வருவதும்; கூடிக்கொள்வதும் ஒரு வியத்தகு உண்மை. மற்ற இடத்தில் பகை பகையாகவே இருக்கும்.
தன் சொந்தக் கட்சியில் தேர்தலில்
நிற்பதற்கு வாய்ப்புக் கொடுக்காததால், அந்தக் கட்சியை எதிர்த்தவர்களின்
வரலாறு நிறைய உண்டு. இந்த வரலாறு வேறு எங்கேயும் கிடையாது. இதுதான், நம்
இயக்கத்தினுடைய நாடித்துடிப்பு - உயிர் மூச்சு - ரத்த நாளங்களுக்குள்ளே
இருக்கின்ற உயிர்த்தன்மை இதுதான். அப்படிப்பட்ட ஒரு பெரிய நிகழ்ச்சியை இந்த
நூலில் ஆசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அதைத்தான் நான் சொன்னேன்; ஒரு நூல் எழுத
வேண்டும்; அப்படியே ஒன்றைக்கூட மாற்றாமல் - மாற்ற வேண்டிய தேவையும் இல்லை.
என்ன நடைபெற்றதோ அப்படியே அதனை எழுதவேண்டும். இந்த முரண் அல்லது இந்தப் பகை
எப்படியெல்லாம் மாறி இருக்கிறது.
அந்த வெளிச்சம் - பகுத்தறிவு வெளிச்சம்!
தாய் - தன் மக்கள் செய்கின்ற
தீங்குகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மறந்துவிட்டு, அந்தக் குழந்தையோடு
உறவாடுவதுபோல, அதேபோல, இங்கே உரையாற்றிய அருள்மொழி அவர்கள் நன்றாக
உரையாற்றினார்கள். என்னை நயம் சொல்லச் சொன்னீர்களேயானால், அவர்களை விட நான்
நன்றாகச் சொல்வேன். ஏனென்றால், நம் கையில் பெரிய டார்ச் லைட் இருக்கிறது;
இது போகாத இடத்திற் கெல்லாம் போகும்; அந்த வெளிச்சம் - பகுத்தறிவு
வெளிச்சம். அருமையாக எடுத்துக்காட்ட முடியும் என்னால். நான் அதைப்பற்றி
சொல்வதும் உண்டுதான் சில இடங்களில்.
ஆழ்வார்களைப்பற்றியும்,
நாயன்மார்களைப்பற்றியும் பாடமாகக் கொடுத்தார் ஒரு முதல்வர், என்னைப்
பழிவாங்குவதற்காகவே. இவன் எதாவது சொல்வான், மாணவர்களிடத்தில் எதிர்ப்பு
வரும்; இவனை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று நினைத்துத் திட்டம் போட்டு
கொடுத்தார். நான் வகுப்பு எடுத்து முடித்தவுடன், நான்கு மாணவர்களாவது
அழுதுவிடும் அளவிற்கு வந்துவிடு வார்கள்.
நீ என்ன பார்ப்பானா? என்றார்கள்!
பக்தி இயக்கத்தில் காணப்படுகின்ற சில
உண்மைகள், நம் இயக்கத்தில் எவ்வளவு சாதாரணமாக இருந்திருக் கின்றன என்பதை
அது எடுத்துக்காட்டும்.
எனக்கு இன்றைக்குப் பேச பேச, அதைக் கண்டு
நானே வியக்கின்றேன். இந்த இயல்தான், குடும்பம், குடும்பம் என்று சொல்கிறோமோ
அது எவ்வளவு சரியானது. திராவிடர் கழகக் குடும்பம் என்று விருந்து
நடத்துகின்றோம். நான் சைவம்; புலால் சாப்பிடுவது இல்லை. திராவிடர்
கழகத்தில் இருந்துகொண்டு, புலால் சாப்பிடமாட்டேன் என்கிறாயே, நீ என்ன
பார்ப்பானா? என்றார்கள். இங்கே ஒருமுறை கோரா அவர்களுடன் மாட்டுக்கறியைச்
சாப்பிட்டேன்.
இது சிறைச்சாலை; நாம் கைதி, அதனை மறந்துவிடாதீர்கள்!
நான் உங்களைப்போல இந்த இயக்கத்திற்காக
கஷ்ட நஷ்டம் பட்டவன் அல்ல; போராட்டத்திற்குச் சென்றவன் இல்லை. ஒரே ஒருமுறை
ஆசிரியர் தயவில், இந்தி எழுத்தை அழிப்பதற்காகச் சென்றேன். விருந்தாளிபோல
கொண்டு சென்றார்கள்; ஆடாமல், அசையாமல் சிறைக்குச் சென்றேன். அப்படி
சிறையில் இருக்கும்பொழுது ஒரு நாள் ராத்திரி நான் சிறை அதிகாரியிடம்,
ஏம்ப்பா, சாப்பாடு வருமா? இல்லை யென்றால் படுத்துக்கொள்ளலாமா? என்று
கேட்டேன். உடனே ஆசிரியர் அவர்கள், இது சிறைச்சாலை; நாம் கைதி, அதனை
மறந்துவிடாதீர்கள். இப்படி ஏன் சத்தம் போடுகிறீர்கள் என்று சொன்னதெல்லாம்
நினைவில் இருக்கிறது. அது ஒன்றுதான் நான் செய்த தியாகம். மற்ற எதிலும் நான்
ஈடுபட்டது கிடையாது. ஆனால், எனக்கே இவ்வளவு உணர்வு இருக்கிறது. என்னுடைய
வாழ்க்கையில் யாரும் அப்பழுக்கு சொல்ல முடியாது. என்னுடைய தந்தையார்
அவர்கள் இறந்தபொழுது, சடங்கு எல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேன்.
என்னுடைய சகோதரர்கள் எல்லாம், தம்பி அப்படி சொல்கிறான்; அப்புறம் என்ன
என்று சொல்லிவிட்டார்கள்.
என்னுடைய அம்மா, மாமியார், என்னுடைய மகன்
இறந்தபொழுதெல்லாம்கூட சடங்கு ஏதுமின்றிதான் இறுதி மரியாதையை செய்தேன்.
மின்சார சுடுகாட்டில்தான் எரியூட்டினோம். இதுபோன்ற நிகழ்வுகளில் ஒழுங்காக
இருப்பேன். மற்றபடி கஷ்ட நஷ்டங்களை ஏற்கின்ற அளவிற்கு நான் இந்த
இயக்கத்திற்கு ஏதும் செய்யவில்லை. அதனை நினைத்தால் எனக்கு வருத்தம்தான்
ஏற்படுகிறது. ஏனென்றால், அது ஒரு சுயநலம் என்று வைத்துக் கொள் ளலாம். நாம்
வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் குடும்பத்தினைக் காப்பாற்ற முடியும்
என்கிற உணர்வுதான். அதற்கு வேறு காரணம் கிடையாது.
அம்மாவினுடைய வீர செயல்கள்!
டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள்
எல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், உளுந்து போல உருண்டு கொண்டே
இருப்பார். அதுபோல் எத்தனையோ பேர்! நான் என் சொந்த வாழ்க்கையை அதிகம்
பார்த்துக் கொண்டாலும் எஞ்சிய நேரங்களில் என்னால் ஆன பணிகளை செய்து
கொண்டுதான் இருக்கிறேன். எத்தனையோ மாணவர் களை நான் உருவாக்கியிருக்கிறேன்.
ராவண லீலாவைப்பற்றிச் சொல்லி நான் என்
உரையை முடிக்கிறேன். அம்மாவினுடைய வீர மறச் செயல்கள்; துணிச்சல். நான்
அன்றைக்குத் திடலில் இருந்தேன். ராவண லீலா நடைபெற்ற அன்றைக்குத் திடலில்
நான் இருந்தேன். பரண் மேல் வைத்திருந்தார்கள் அந்த பொம்மைகளை யெல்லாம்.
காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் தேடினார்கள்.
நான் அப்பொழுது அரசுப் பணியாளன். அந்த நிகழ்வுகளையெல்லாம் இந்த நூலில்
அருமையாகக் கொடுத்திருக்கிறார்கள்.
நம் கொள்கை என்னவென்று தெளிவாக தெரியவேண்டும்
கட்டாயமாக நம்முடைய இயக்கத் தோழர்கள்
முக்கியமாக இந்த வரிசையைப் படிக்கவேண்டும். பல பேர் சொல்லலாம், நான்
கருப்புச் சட்டைதான் போடுகிறேன்; பெரியார் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறேன்
என்று சொல்லலாம். அதெல்லாம் போதாது. எங்கேயாவது நம் முடைய எதிரிகள் கையில்
சிக்கிக் கொண்டீர்களேயானால், அந்தப் பயல்கள் சில முரட்டுத்தனமான,
முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்பார்கள். அப்பொழுது நாம் அதிலிருந்து
மீளவேண்டுமானால், நமக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால்தான்
இதுபோன்ற நூல்களைப் படிக்கவேண்டும். நம் கொள்கை என்னவென்று தெளிவாகத்
தெரியவேண்டும்.
ஆனாலும் போய்விடுவான்; ஆகாது என்றாலும்
போய் விடுவான் சில பேர் நம் இயக்கத்திலிருந்து சென்றிருப் பார்கள்.
தியாகம் எல்லாம் செய்திருப்பார்கள். திடீரென்று விபூதி பூசிக்கொண்டு,
கோவிந்தா கோஷம் போட்டுக் கொண்டு செல்வார்கள்.
அய்யாவிடம் ஒரு கேள்வியை, ஆசிரியர் அவர்கள் கேட்டார்கள்:
அய்யா, எனக்கு ஒரு சந்தேகம்.
என்னவென்று அய்யா கேட்டார்.
சில பேர் நம் இயக்கத்திலிருந்து
சென்றுவிடுகிறார்களே, நமக்குப் பிடிக்காத கொள்கைகளுக்குச் சென்று
விடுகிறார் களே, அது எதனால் அய்யா என்று ஆசிரியர் கேட்டார்.
அய்யா அவர்கள் பதில் சொல்கிறார், ஒன்னு,
இங்கே இருக்கும்பொழுது வேசம் போட்டிருப்பான்; நம் கொள்கை இருக்காது. ஏதாவது
காரியம் ஆகவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருப்பான். ஆனவுடன்
போய்விடுவான்; ஆகாது என்று தெரிஞ்சாலும் போய்விடுவான் என்று சொன்னாராம்.
இன்னொரு நிகழ்வை சொல்கிறேன்:
ஒருமுறை அய்யாவிடம், அய்யா டெபுடி கலெக்டர் வந்தாரே, அவர் சொன்னது ஆயிற்றா என்று கேட்டார்களாம்.
அய்யா உடனே,
அந்த ஆள் வந்தாரா? என்று கேட்டாராம்.
இல்லை என்று பதில் சொன்னார்களாம்.
உடனே அய்யா அவர்கள், அப்போ ஆயிருக்கும்; இல்லை என்றால் வந்திருப்பான் என்று சொன்னாராம்.
முதல் சொன்ன கேள்விக்கு வருகிறேன்,
அவன் நம் கொள்கை உடையவன்போல நடித்தானே தவிர, உண்மை இல்லை என்றார் அய்யா.
இல்லை, இல்லை அய்யா, அதெல்லாம் உண்மைதான். அவன் நெருப்பிலே போட்டெடுத்தவன் என்று சொன்னார்.
அப்படியானால், இப்பொழுது அவன் அங்கே வேசம்
போட்டுக்கொண்டிருக்கிறான். அவனுக்கு பக்தியாவது, மண்ணாங்கட்டியாவது என்று
அய்யா அவர்கள் சொன்னார்.
இந்த இரண்டு கூற்றுகளும் நம்முடைய மனதிலே நன்றாக இருக்கவேண்டியவை.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒரு கட்டத்தில்
எனக்கு வலை பின்னினார்கள். அது சாதாரணமானதல்ல; நான் பேசுகின்ற
கூட்டத்திற்கெல்லாம் வந்து குறிப்பெடுத்துக் கொண்டு, அய்யா நீங்கள் அங்கே
பேசினீர்களே, இங்கே பேசினீர்களே, மிக அருமை; யாராலும் அப்படிப் பேச
முடியாது என்று சொல்லி, வாழைப்பழத்தை வாங்கிக்கொடுத்துவிட்டு செல்வார்கள்.
குரங்குப் பிடிப்பவர்கள் வாழைப்பழத்தை வைத்துத்தான் பிடிப்பார்கள்
எனக்கு சந்தேகம்; பாப்பான் வாழைப்பழம்
வாங்கிக் கொண்டு வருகிறான் என்றால் எதற்காக? ஒன்று அதில் விஷம் வைத்து
நம்மைக் கொல்லவேண்டும்; இல்லையென்றால், அதனைக் காட்டி நம்மைக் கூண்டில்
அடைக்கவேண்டும். குரங்கு பிடிப்பவர்கள் வாழைப்பழத்தை வைத்துத்தான்
பிடிப்பார்கள்.
ஒருமுறை ராமகோபாலனையும், என்னையும் மோத
விட்டார்கள்; பேசினோம். கலாட்டாவெல்லாம் நடை பெற்றது. பிறகு என் வீட்டிற்கு
வந்தார்கள், நீங்கள் ஏன் பஸ்சில் போகிறீர்கள்? நாங்கள் ஒரு வீட்டை
வாங்கித் தருகிறோம்; கார் ஒன்றை வாங்கித் தருகிறோம் என்றார்கள்.
நான் கேட்டேன், பஸ்சில் செல்கிறவர்கள் எல்லாம் கீழ்த்தரமானவர்கள் என்று முடிவு செய்திருக்கிறீர்களா என்று.
இல்லை இல்லை, உங்கள் விலை மதிப்பில்லாத
காலம் வீணாகப் போகிறதே, கார் இருந்தால் நீங்கள் பத்து காரியங் களை
முடிப்பீர்கள் அல்லவா என்று சொன்னார்கள்.
அவர்கள் ஒருமுறை குருதிக்கொடை முகாம் ஒன்றைத் தொடங்கி வைப்பதற்காக அழைக்க வந்தார்கள்.
நான் சொன்னேன், நான் யார் என்று தெரியாமல் நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொன்னேன்.
இல்லை, இல்லை உங்களைப்பற்றி எங்களுக்கு நன்றா கத் தெரியும். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பேசியிருக் கிறீர்கள் என்று சொன்னார்கள்.
நீங்கள் செய்வதெல்லாம் எனக்கு ஒத்து வராது!
நாங்கள் எந்தப் பகுதியில் விழா
நடத்தினாலும், அந்தப் பகுதியில் செல்வாக்குள்ளவர்கள் யார் என்று
பார்த்தோம்; சைதாப்பேட்டையில் உங்களைத்தான் எல்லோரும் சொல் கிறார்கள்
என்று.
அவர்கள் சொன்னது பச்சைப் பொய். விஜிபி
இருக்கிறார்; நடிகர்கள் இருக்கிறார்கள். நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால்,
என்னைத்தான் எல்லோரும் சொன்னார்கள் என்று சொன்னார்கள்.
பிறகு என்னால் மறுக்கமுடியாமல், நான்
சொன்னேன் நான் அந்த நிகழ்விற்கு வரவேண்டும் என்றால், நீங்கள் செய்வதெல்லாம்
எனக்கு ஒத்து வராது என்று சொன்னேன்.
என்ன ஒத்து வராது என்று கேட்டார்கள்.
நீங்கள் சாமி கும்பிடுவீர்கள்; குத்துவிளக்கு ஏற்றுவீர்கள் என்று சொன்னேன்.
உடனே அவர்கள், ரிப்பன் கட் செய்வதற்கு உங்களுக்கு ஆட்சேபனை இல்லை அல்லவா என்று சொன்னார்கள்.
அதுமட்டும்தான் இருக்கும்; வேறு எதுவும்
நாங்கள் செய்யவில்லை. சாமி படமே இருக்காது; தேங்காய் மற்றவை எதுவும்
இருக்காது என்று சொன்னவுடன், என்னால் மறுக்க முடியவில்லை.
அப்பொழுதெல்லாம் அவ்வளவு கார்கள் கிடையாது
என்னை அழைத்துச் செல்வதற்கு கார் ஒன்று
வந்தது; காருக்கு முன்பு இரண்டு பேர்; காருக்குப் பின்பு இரண்டு பேர் என்று
மோட்டார் சைக்கிள்களில் பைலட் வருகிறார்கள்.
அந்த நிகழ்விற்குச் சென்றேன். ஊரிலுள்ள
பெரிய மனிதர்களின் கார்கள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றன. நான் சொல்வது
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு. அப்பொழுதெல்லாம் அவ்வளவு
கார்கள் கிடை யாது; இப்பொழுதுதான் கார் வைத்திருப்பது ஒன்றும் பெரிதல்ல.
நான் சென்றதும், என்னை வரவேற்றனர். ஒரு சடங்கு மின்றி நிகழ்வு ஆரம்பித்தது.
வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் நான்
என்னவெல்லாம் சொல்வேனோ, அதையெல்லாம் அவரே சொன்னார். நான் அதற்கு மேலே
சொன்னேன். கடைசியில், வாலண்டரி ஹெல்த் சென்டர் வைத்திருப்பவர் நன்றியுரை
ஆற்றுகிறார். பேராசிரியருடைய பேச்சை நான் இன்னும் இரண்டுமுறை கேட்டேன்
என்றால், நான் நாத்திகனாகவே மாறிவிடுவேன் என்று பேசினார்.
இப்பொழுதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறு
கின்றன. அதற்கு என்ன காரணம் என்றால், நான் கொஞ்சம் பக்குவமாக, கொஞ்சம்
இணக்கமாக உரையாற்றுவதால், ஓகோ, இவன் நம்முடைய ஆள், இவனை இழுத்துவிடலாம்
என்று அவன் நினைப்பதால்தான், இப்பொழுதுதான் திட்ட ஆரம்பித்திருக்கிறேன்.
இந்த நூலுக்குத் தலைமையிடம் கொடுக்கவேண்டும்
ஆகவே, நண்பர்களே, திராவிடர் கழகம் இந்த
நாட்டிலே என்றைக்கும் இருக்கும்; இருக்கவேண்டிய ஒரு அமைப்பு. அதற்கு
இத்தகைய பணி - இந்த நூலாசிரியர் அவர்கள் எத்தனையோ நூல்களை
எழுதியிருக்கிறார்கள். இந்த நூலுக்குத் தலைமையிடம் கொடுக்கவேண்டும்.
அப்படிப் பட்ட ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். இந்த நூலினை வெளியிடுகின்ற
பெரும்பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியடைகிறேன்,
பெருமையடைகிறேன். நான் எதற்கு உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நீங்கள்
சொல்கின்ற வேலையைச் செய்யக்கூடியவன். அதனால், அந்த மன நிறைவோடு என்னுடைய
உரையை முடித்துக் கொள் கிறேன்.
- இவ்வாறு பெரியார் பேருரையாளர் முனைவர் மா.நன்னன் அவர்கள் உரையாற்றினார்.
திராவிடர் இயக்கத்தில் இணக்கம் - பிணக்கம்
என்கிற நூல் வெளிவரவேண்டும்
அன்னையார் வரவைப்பற்றி, அண்ணாவும்,
கலைஞரும், மற்றவர்களும் பேசியவை, எழுதியவை - அவர்களே பிறகு
அன்னையாரைப்பற்றிப் பேசியவை, எழுதியவை, பாராட்டியது என்றெல்லாம் உண்டு.
இங்கே நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். திராவிடர் இயக்கத்தில் இணக்கம் -
பிணக்கம் என்கிற நூல் வெளிவரவேண்டும். இங்கே உள்ள இணக்கத்திற்கும்,
பிணக்கத்திற்கும்; மற்றவர்களுடைய இணக்குப் பிணக்குகளுக்கும் மிகப்பெரிய
வேறுபாடு உண்டு. - புலவர் மா.நன்னன்
---------------------------------”விடுதலை” 26-4-2014