Search This Blog

4.3.13

இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்க மறுப்பது ஏன்?

கலைஞரின் பேட்டி

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானவை.

மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சினையில் தி.மு. கழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே என்கிற கேள்விக்குக் கலைஞர் அவர்கள் அளித்த பதில் வருமாறு:

அதை நாங்கள் பல முறை வற்புறுத்திச் சுட்டிக் காட்டுகிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து அவர்கள் செயல் படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரம் அல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இதன் மூலம் கலைஞர் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியுள்ளார். இதற்கு மாறாக இந்தியா நடந்து கொள்ளுமேயானால் அது உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களின் உணர்வுக்கு எதிரானது என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியும் உள்ளார்.

கடந்த முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை கடைசி நேரத்தில் இந்திய அரசு ஆதரித்தது என்றாலும் அந்தத் தீர்மானத்தின் வாசகங்களை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவுக்குப் பங்கு இருந்தது என்பது கசப்பான உண்மையாகும். குற்றவாளியே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவதற்கு வசதி செய்து கொடுத்த கதையாயிற்று. இலங்கையில் நடைபெற்ற படு கொலைகள், விதி மீறல்கள் குறித்து இலங்கையின் அரசே விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து!

இலங்கைத் தீவில் தமிழன் என்ற ஓர் இனமே இருக்கக் கூடாது என்ற தீய எண்ணத்தில் திட்ட மிட்டு அரச பயங்கரவாதமாகச் செயல்பட்டுக் கொண் டிருக்கும் ஓர் அரசிடம் நியாயமான, நேர்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா?

இலங்கை அரசு  எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டே போது மானது. ஜெனிவாவில் 2012 மார்ச் மாதத்தில் நடைபெற்ற மனித உரிமைக் கழகக் கூட்டத்தின் போது என்ன நடந்தது?
மக்கள் உரிமைக் கண்காணிப்பு இயக்குநர் ஹென்றி டிஃபேன் கூறிய தகவல் முக்கியமானது.

இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையிலிருந்து வந்திருந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னான்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள். அமர்வுக்கு நேரில் வர முடியாத  சரவண முத்து என்பவர் ஸ்கைப் மூலமாகப் பேசினார்.

அதே சமயம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி அய்ரோப்பாவைச் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 5000 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இலங்கை அரசும் அங்கே தனியாக ஒரு கூட் டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக இலங்கையி லிருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள் தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழர் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனிவா தூதர் தலையிட்டதற்குப் பிறகே தாக்குதல் நிறுத்தப்பட்டது. அய்.நா.வுக்கான மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் நேற்று நடந்த சம்பவங்கள் அய்.நா. மன்றத்தையே அவமதிக்கக் கூடியவை. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்று சொல்லவில்லையா?

ஜெனிவாவுக்கே இலங்கையிலிருந்து அடியாட் களை ஏற்பாடு செய்து மனித உரிமைக் கவுன்சில் கட்டடத்தின் வெளியிலேயே இப்படி ஒரு வன்முறையைக் கட்ட விழ்த்தவர்கள், ஈழத்திலே தமிழர்களை பெண்களை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியுமே!

இந்த நிலையில் இந்தியாவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமே!

அப்படி இந்தியா செயல்பட்டால் அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தும் என்று கலைஞர் அவர்கள் சொன்னது எவ்வளவு ஆழமானது. அதுபோல உலகத் தமிழர்களின் உள்ள உணர்வை எதிரொலிப்பதாகும் என்ற நல்ல வழி காட்டி வெளிச்சத்தையும் செய்தியாளர்கள் கூட் டத்தில் டெசோ தலைவர் கலைஞர் கூறி இருக் கிறார்.

இந்த அனுபவ வார்த்தைகளைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் அது இந்திய அரசின் புத்திசாலித் தனத்தையும், மனித உரிமைகளில் இந்தியாவுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அக்கறையையும்  காட்டும் என்பதில் அய்யமில்லை.

   -------------------”விடுதலை” தலையங்கம் 4-3-2013

23 comments:

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

பெரியார் -(விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் 30 நாடுகள் ஆதரவு!


ஜெனிவா, மார்ச்.4 அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத் தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இன்று தாக்கல் செய்யும் தீர்மானத் துக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரி வித்து உள்ளன. இலங்கை இறுதிப் போரில் சரண டைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொது மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது இலங்கை அரசு. இலங்கை அரசின் இந்த போர்க்குற்ற நட வடிக்கை களுக்கு உலக நாடுகள் பலவும் கண் டனம் தெரி வித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வருகின்றன. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தது.

இந்தியா உள்பட பெரும்பான்மையான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக் களித்தன. இந்த தீர்மானம் இலங்கைக்கு ஒரு நெருக் கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் கூட்டம் தற்போது நடை பெற்று வருகிறது. இந்த ஆண்டுக் கூட்டத் திலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண் டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இன்று தாக்கல் ஆகும் இத் தீர் மானத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந் துரைகளை நிறைவேற்ற வேண்டும், கடமையை நிறைவேற்று வதில் தனக் குள்ள பொறுப்பை உணர்ந்து செயல் பட வேண்டும் என்று இலங்கை அரசை வலி யுறுத்தப்பட இருக்கிறது.

அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்கா வின் தீர்மானத்தை ஆதரிக்கின்றன. இந்திய அரசு இன்னமும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

தமிழ் ஓவியா said...


முற்றுகைப் போருக்குத் தயாராகி விட்டாயா? (கலைஞர் கடிதம்)


சென்னை, மார்ச் 5- இலங்கைத் தூதுவரகத்திற்கு முன்னால் டெசோ சார்பில் நாம் நடத்தவிருக்கும் முற்று கைப் போராட்டம்! ஆம், இந்த நாளில்தான் அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் தாக்கல் செய்யப்படவிருப் பதாகவும், ஓட்டெடுப் பின்றியே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருப்ப தாகவும் இன்று செய்தி வந்துள்ளது. கண்ணீரைக் கவசமாக்கும் நாள் - மார்ச் 5 என்ற தலைப்பில் 27-2-2013 அன்று நான் விரி வாக எழுதிய உடன் பிறப்பு மடலை நீ படித்து, அதற்கான முன்னேற்பாடு முயற்சிகளில் ஈடுபட் டிருப்பாய் என்பதை நான் நன்கறி வேன். அதற்கு முன்பே 20-2-2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் பிரபாக ரனின் இளைய செல்வன், 12 வயதே நிறைந்த பாலகன் பாலச்சந்திரனை சிங்களக் காடையர் கொன்று குவித்த சோகச் சம்பவம் பற்றியும் குறிப்பிட் டிருந்தேன்.

ஆனால் சிங்கள அதிபர் ராஜ பக்ஷே இந்து நாளிதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், பாலச்சந்திரன் படுகொலையைச் சிங்கள ராணுவம் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். பாலகன் பாலச்சந்திரன் இலங்கையில் தான் கொல்லப்பட்டிருக்கிறான்.

அவனை சிங்கள ராணுவம் கொலை செய்ய வில்லை என்றால் வேறு யார் கொன் றிருக்க முடியும் என்று கூட எண்ணிப் பாராமல் கொடூரமாகக் கொலையை யும் செய்து விட்டு, தற்போது அதனை மறுத்துச் சர்வதேச அரங்கில் நல்ல வராக நடிக்கப் பார்க்கிறார் ராஜ பக்ஷே! ஏன், பிரபாகரனையும், ஆயி ரமாயிரம் ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்ததையும், தமிழச்சி களின் கற்பினைச் சூறையாடியதையும் கூட இல்லையென்று ராஜபக்ஷே மறுத்தாலும் மறுக்கக் கூடும்.

ராஜபக்ஷே இந்த அளவிற்கு பொய்களைக் கூறக் கூடும் என்பதால் தான் நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் உலக நாடுகளுக்கு நிரூ பிக்கத்தக்க வகையில் வீடியோ ஆவ ணங்கள் வெளியிடப்பட்டு வருகின் றன. இலண்டன் மாநகரத்திலுள்ள சேனல்-4 நிறுவனம் இலங்கைக்கு எதிராக ஆவணப் படம் எடுத்து உலகத்திற்கு உண்மையைக் காட்டி உணர்த்திட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இலங்கையில் நடைபெற்ற நிகழ் வுகளைக் காட்டும் ஆவணப்படம் அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்குத் திரையிடப் பட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. டில்லியில் செய்தியாளர்களுக்கும், தொலைக் காட்சி நிறுவனத்தாருக்கும் திரை யிடப்பட்டுள்ளது.

எந்தவிதமான காழ்ப்புணர்வும் இன்றி நடுநிலை யோடு கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அப்போது அந்தத் தீர்மான வாசகம் நீர்த்துப் போக வைக்கப்பட்டது. எனவே தான் இந்த ஆண்டும் அமெரிக்கா சார்பில் அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவை முந்திக் கொண்டு, இலங் கையைக் கண்டிக்கும் தீர் மானத்தை இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டு மென்பதுதான் தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும். ஆனால் அமெரிக்கா வின் தீர்மானம் இந்த மாதம் 21ஆம் தேதி வாக்கெடுப் புக்கு விடப்படும் என்று பேசப்படு கின்றது. இதுவரை இந்தியா தனது முடிவினை அறிவிக்காமல் இருப்பது தமிழகத்திலே உள்ள நம்மை ஆச்சரி யமடைய வைக்கிறது. அமெரிக்கா வின் தீர்மானத்தை முறியடிக்க ராஜ பக்ஷே தன்னால் இயன்ற முயற்சி களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்ற நிகழ்வுகள் பற்றிய ஆவணப் படத்தினைப் பார்த்த பல்வேறு நாடு களின் பிரதிநிதிகளும், ராஜபக்ஷே வுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த நாடுகளின் பட்டியலில் நமது இந்தியாவும் இருப் பதாக இதுவரை அறிவிக்கவில்லையே என்பது தான் உலகத் தமிழர்களின் இதய வேதனை!

நேற்று மாலையில் இதைப்பற்றி செய்தியாளர் களுக்கு, நம்முடைய இணை அமைச்சர், நாராயணசாமி அவர்கள் அளித்த பேட்டியில், இலங் கைப் பிரச்சினையை மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் கவனித்து வரு கிறது. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை. இதனால் மத்திய அரசு முடிவு செய்யவில்லை. அதுபற்றிய முழு விவரமும் தெரிய வந்த பின்னர் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கும். இந்திய அரசு, கடந்த முறை எந்த நிலைப் பாட்டைக் (தீர்மானத்திற்கு ஆதரவு) கொண்டிருந்ததோ, அதையே இந்த முறையும் பின்பற்றும் என்று சொல்லி யிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலையை அறிய மாநிலங்களவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தினை தி.மு.க. தாக்கல் செய்தது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வ தேச விசாரணை நடத்த அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர் மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டு மென்று நாடாளு மன்ற மாநிலங்கள் அவையில் 27-2-2013 அன்று அனைத் துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத் திப் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக கழகத்தின் சார்பில் பேசிய தம்பி திருச்சி சிவா, கண்ணீர் பெருகும் கண்களுடன், இதயத்தில் வழியும் ரத்தத் துடன் இந்த அவையில் பேசுகிறேன்.

நாம் வாழும் காலத்தில், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் மனிதப் பேரழிவு களால் மனம் நொந்து போன உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து, அதற் குப் பரிகாரம் தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் தாய் நாடு மட்டும் ஒதுங்கி நிற்கிறது.

உங்களுக்கு இலங்கையின் நட்பு வேண்டுமா? அல்லது இதே நாட்டில் தென்பகுதியில் வாழும் மக்களின் உறவு வேண்டுமா என்பதை அறிவியுங் கள் என்று கேட்டிருக்கிறார். மேலும் இந்தப் பிரச்சினையில் மாநிலங்கள வையில் அதிமுக சார்பில் டாக்டர் வா. மைத்ரேயன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா, பா.ஜ.க. சார்பில் வெங்கய்ய நாயுடு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரெங்கராஜன் ஆகியோரும், மற்றும் சிவசேனை, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜவாதி கட்சி, லோக் ஜனசக்தி, அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பிரதி நிதிகளும் இலங்கைக் கொடுமை களைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் கழகத்தின் சார்பில் தர்மபுரி தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் இரா. தாமரைச் செல்வன் இந்தியா தனித் தீர்மானமே கொண்டு வரவேண்டுமென்று பேசியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அரசின் சார்பில் இந்த விவாதத் திற்குப் பதிலளித்த மத்திய வெளியுற வுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள், அய்.நா. கூட்டத்தில் இலங் கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானத்துக்கு வாக்களிக்க வேண் டும் என்ற கோரிக்கை குறித்து எல் லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தீர்வு காணப்படும் என்று சொல்லியிருக்கிறார் எனினும், இலங் கையின் உள் விவகாரங்களில் மத்திய அரசால் தலையிட முடியாது, இலங் கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத் தைக் கொண்டு வருகிறது என்பதற் காக இந்தியாவும் அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது என்றெல்லாம் கூறியிருப்பது மிகுந்த மன வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. அமைச்சரின் இந்தப் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர் கள் அவையிலிருந்தே வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். மனித உரிமை ஆர்வலரும், பாகுபாட் டுக்கு எதிரான சர்வ தேச மக்கள் இயக்கத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, இலங்கை யில் மனித உரிமை மீறலுக்கும், போர்க் குற்றத்திற்கும் எதிராக ஜெனிவா மாநாட்டில் கொண்டு வரப் படும் தீர்மானம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்றே கூறியுள் ளார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்வு செய்வ தற்காக இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக நிதி உதவி அளித்து வருகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா 500 கோடி ரூபாயை இல வசமாக வழங்குகிறது. கடந்த நிதி யாண்டில் இந்தியா 290 கோடி ரூபாயை இலங்கைக்கு வழங்கியது. அதற்கு முந்தைய ஆண்டில் 180 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி இலங்கை யில் தமிழர்களின் நல்வாழ்வுக்காக செலவழிக் கப்படும் என்ற நம்பிக்கையில் தான் வழங்கப் படுகிறது. ஆனால் இலங்கை இந்த நிதியை தமிழர் களுக்காகப் பயன் படுத்துவதில்லை என்றும், சிங்கள வர்கள் பயன்பெறும் வகையிலே தான் இந்த நிதி திருப்பி விடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிதி உதவியைக் கொண்டு கட்டப்படும் வீடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர் களை குடியமர்த்துவதற்குப் பதிலாக, ஆக்கிரமிக்கும் சிங்களவர்களைத் தான் குடியேற்றுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த வேதனை களையெல்லாம் எதிரொலிப் பதற் காகத்தான் இலங்கை இனவாத அதிபர் ராஜபக்ஷே ஒரு சர்வ தேசப் போர்க் குற்றவாளி என்று உலகம் உணரச் செய்வதற்காகத் தான்; நாளை மார்ச் 5ஆம் தேதியன்று சென்னையில் இலங்கைத் தூதர கத்தை டெசோ இயக்கத்தின் சார்பில் முற்றுகையிடுகின்ற அறப் போராட் டமும், அதே நாளில் இந்தியத் தலை நகரான டில்லியில் நாடாளுமன்றத் திற்கு முன்னால் ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவ தென்று 25-2-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் முடி வெடுத்து அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது - நம் முடைய தமிழ் இனத்தவர் இலங்கை யிலே இன்னமும் நாதியற்றவர்களாகச் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! அதற்கு நீ தயாராகி விட்டாயா? தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்று இன்னமும் நிமிர்ந்து நின்று பேட்டி கொடுத் துள்ள ராஜபக்ஷேக்கு, தமிழினம் முற்றாக அழிந்து விட வில்லை என்பதை மெய்ப்பித்துக் காட்டுவதற்காக நடைபெறும் முற் றுகைப் போராட்டம் தான் இது!

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 4.3.2013)

தமிழ் ஓவியா said...


இந்திய அரசு யாருடன் நட்பாக இருக்க விரும்புகிறது?


இலங்கை அரசுடனா அல்லது இந்தியாவின் தென்பகுதியில் உள்ள உங்கள் சகோதரர்களுடனா?

மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம்

புதுடில்லி, மார்ச் 4- நீங்கள் யாருடன் நட்பாக இருக்க விரும்புகிறீர்கள்? இலங்கையுடனா? அல்லது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள உங்கள் சகோதரர்களான தமிழர்களுடனா? என்ற வினாவை எழுப்பினார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. மாநிலங்களவையில் அவர் பேசியதாவது:-

இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து மாநிலங்களவையில் நடை பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா பேசியதாவது:-

இந்தப் பிரச்சினை தமிழர்கள் மட்டும் சம்பந்தப் பட்டது என்ற நினைப்பில் மற்றவர்கள் எவரும் இந்த விவாதத்தில் பங்கெடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் கண்ணீருடன் முறையிட்டுவரும் நாங்கள் இப்பிரச் சனையில் இந்திய அரசு மீது நம்பிக்கை இழந்து வருகிறோம்.

இந்திய அரசே அய்.நா மனித உரிமைகள் கவுன் சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும், ஆனால் இன்னொரு நாடு கொண்டுவரும் தீர்மானத்தையாவது ஆதரிக் கும்படி கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

சமீபத்தில் எங்களது தலைவர் கலைஞர் சென் னையில் கூட்டிய டெசோ மாநாட்டில் உலகெங்கும் உள்ள பல நாடுகளிலிருந்து பலர் கலந்து கொண் டனர். இலங்கை மீது சர்வதேச நிர்ப்பந்தம்தான் இப்பிரச்சனை யைத் தீர்க்கும் என்று தீர்மானங்களை நிறைவேற்றி னோம். எங்கள் தலைவர் கட்டளை இட்டபடி எங்க ளது நாடாளுமன்ற உறுப் பினர்கள் பல்வேறு நாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று தீர்மானங்களுக்கு ஆதரவு கோரியபோது அவர்கள் இப்பிரச்சினையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர். வெளியிலும் கூட பலர், மற்ற நாடுகள் இத் தீர்மானத்தை முன் மொழிந்து ஆதரிக்கும் போது உங்கள் நாடு என்ன செய்கிறது என்று கேட்கிறார்கள்.

90 வயதிலும் தலைவர் கலைஞர் போராட்டம்

குடியரசுத் தலைவர் உரை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை ஆகிய இரண்டிலும் இலங்கையுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அது ஒரு மனிதாபிமான மற்ற, 1948ஆம் ஆண்டு முதல் அங்குள்ள நமது மக்களை அழித்து வருகிற நாடாகும். இப் பிரச்சினையை நாங்கள் பலமுறை இந்த அவையில் எழுப்பியுள்ளோம். கலைஞர் தலைமையிலான எங்களது கட்சி ஏராளமான போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி பல தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த 90 வயதில் கூட அவர் இலங்கை அதிபர் ராஜ பக்சே வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் வரவிருக்கின்ற 22ஆவது கூட்டத்தின்போது கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக பல நாடுகள் எழுந்துள்ள நிலையில் இந்தியா மவுனமாக உள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் சம் பவங்களைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லப் படவில்லை. ஆதாரங்கள் எராளமாக வெளியாகி வருகின்றன. அனைவரும் பொறுமை இழந்து வரு கின்றனர். உங்களது அறிக்கை யில் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் சுதந்திர தின விழா உரையில் ராஜபக்சே 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் கிடையாது என்று அறிவித்துள்ளார். எனவே 13ஆவது திருத்தத்தை நடை முறைப்படுத்த வலியுறுத்துவோம் என்று நீங்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இலங்கையை நம்பக் கூடாது!

அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் 19வது கூட்டத்தில் சர்வதேச நிர்ப்பந்தத்தை அடுத்து இலங்கையில் அமைக் கப்பட்ட விசாரணைக் கமிஷன் பற்றி அய்.நா.மன்றம் நியமித்த வல்லுநர் குழு நம்பிக்கையின்மையைத் தெரிவித்துள்ளது. சர்வ தேச மனித உரிமை அமைப்புகளும் அந்தக் கமிஷனின் உறுப்பினர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அது பாரபட்சமானது, அதிகாரம் அற்றது என்றெல்லம் கூறியுள்ளன. சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணைக் கான சர்வதேசத் தரங்கள் இல்லாததுடன், தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமைமீறல்களைத் தடுக்கத் தவறிய இலங்கை அரசின் பின்னணியில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் அந்த விசாரணை ஆணையத் தின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்தும் என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறீர்கள். கடந்த ஜனவரி 2, 2012 அன்று போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க இலங்கை இராணுவத் தளபதி விசா ரணை நீதிமன்றம் அமைத்தார். லண்டன் நகரில் உள்ள சேனல்-4 தொலைக் காட்சி காட்டிய ஆதாரங்கள் உட்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அந்த நீதிமன்றம் இராணுவம் எந்தக் குற்றமும் இழைக் கவில்லை என்று 2013 பிப்ரவரி 15, அன்று அளித்த அறிக்கையில் கூறியுள் ளது. ஆனால் நீங்கள் இலங்கை அரசை நம்புவதாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறீர்கள். நான் நமது நாட்டிலுள்ள பத்திரி கையாளர்கள் விழித்துக் கொள்ள சில தகவல்களைக் கூறு கிறேன்.

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இலங்கையில் போர்முனைக்குக் கூட செஞ்சிலுவைச் சங்கம் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மற்றும் அய்.நா. பிரதிநிதிகள் நுழைய அனுமதிக்கப் படுவதில்லை. இலங்கையில் 44 பத்திரிகையாளர்கள் கொலை மேலும், அதிர்ச்சி தரும் செய்தி என்ன வென்றால், சமீப ஆண்டுகளில் அங்கு 44 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், தமிழர்களுக்கு ஆதரவாக அரசை விமர்சித்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது, 54 பத்திரிகையாளர்கள் நாடு கடத் தப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த தால் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். ஆனால் இலங்கையில் ஜனநாயகம் இருப்பதாக நீங்கள் கூறிவருகிறீர்கள். நீங்கள் அவர் களோடு ஒருங்கிணைந்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் கூறு கிறீர்கள். அது நட்பு நாடு என்கிறீர்கள். இனம், வரலாறு, புவியியல் என்று அனைத்து விதத்திலும் தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிமக்களாவர். சுதந்திரம் கிடைத்த பின்னர், பெரும் பான்மை சிங்களர்கள் தமிழர்களை துடைத்தெறிய இயக்கம் நடத்துகின்றனர். பூர்வ குடி மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடத் தொடங்கியபோது அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களின் மறுவாழ்வுக்காக நீங்கள் கொடுத்த 500 கோடி ரூபாய் அவர்களது நல்வாழ்வுக்காகச் செலவழிக்கப்பட்டதா? தமிழர்களுக் காகக் கட்டப்பட்ட வீடுகளை சிங்களர்கள் ஆக்கிர மித்துள்ளனர். ஒவ்வொரு 11 தமிழர்களுக்கும் ஒரு இராணுவ வீரன் நிறுத்தப்பட்டுள்ளான். தமிழ்ப் பெண்கள் கைம் பெண்கள் என்றால் இரா ணுவத்தினர் கற்பழிக்கின்றனர். அவர்களுக்காகக் குரல் எழுப்ப எவரும் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் ஐ.நா. மன்றத்தில் இந்தியாவின் குரல் ஒலித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இராமேஸ் வரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலங்கையில் இந்தியா வின் குரல் எதிரொலிக்க வில்லை. உங்களால் அங்கு நடக்கும் கொடுமைகளைத் தடுத்துநிறுத்த முடியவில்லை.

அது ஒரு வெளிநாடு, சுயாதிபத்தியம் கொண்ட நாடு என்றெல்லாம் கூறு வீர்களானால், நான் அமைச்சரிடம் ஒரு விளக்கம் கேட்க விரும்புகிறேன்: அங்கு அமைதியை நிலைநாட்ட நமது இராணு வத்தை எப்படி அனுப்பி னீர்கள்? அந்த வெளி நாட்டுக்கு எப்படி இரா ணுவ உதவிகளைச் செய்தீர்கள்? நமது மக்களைப் படுகொலை செய்துவரும் அந்த அரசுக்கு எப்படி இராணுவ உதவி அளிக்கிறீர்கள்?
கிழக்கு பாகிஸ்தானில் வங்காளிகள் கொல்லப் பட்டபோது, காங்கிரஸ் முதலமைச்சரான சித் தார்த்த சங்கர் ரே கூறியதை நினைவுபடுத்துகிறேன். அங்கு இராணுவத்தை அனுப்பி வங்காளிகளைக் காப்பாற்றுங் கள் அல்லது எங்களது காவல் துறை செல்லும் என்று கூறினார்.

நாங்கள் ஆண்ட போது அவ்வளவு தூரம் போகவில்லை. இப் போதும் நாங்கள் கட்டுப் பாட்டில் இருக்கிறோம். நாங்கள் மக்களைத் திரட் டிப் போராடுகிறோம். மாநாடுகள் நடத்தி தீர்மா னங்களை நிறைவேற்றுகிறோம். எங்கள் தலைவர் மீண்டும் மீண்டும் கடிதங்களை எழுதுகிறார். 12 வயது பாலகன்; பிரபாகரனின் மகன் என்பதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இப்படிப் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், உறுப்புகளை இழந்துள்ள னர். நடைபெறவுள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தி யாவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தற்போது அமெ ரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தையாவது ஆதரிக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இப்பிரச்சினை தீர்க்கப் படும்வரை ராஜபக்சேவுக்கு இங்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் சார் பில் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் முன்னால் இரண்டு தேர்வுகள் உள்ளன. நமது சொந்த மக்களைக் கொன்று குவிக்கும் மனிதாபிமானமற்ற நட்பு பாராட்டாத நாட்டுடன் நட்பாக இருக்க விரும்பு கிறீர்களா அல்லது நாட் டின் தெற்கிலுள்ள உங் களது சகோதரர்களுடன் நட்பாக இருக்க விரும்பு கிறீர்களா என்று நீங்களே முடிவு செய்துகொள் ளுங்கள். இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்ட தீர்மானங்கள் :


காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஊட்டப்படுவதற்காக கழகத்தின் சார்பில் துண்டறிக்கை வினியோகம்

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்பட வைக்க
நாகர்கோயில் முதல் மதுரை வரை தொடர் பிரச்சாரப் பயணம்

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்

நீடாமங்கலத்தில் பகுத்தறிவு பிரச்சாரம்

சென்னை, மார்ச் 4- சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வைக்க வற்புறுத்தும் வகையில் நாகர்கோயில் முதல் மதுரை வரை தொடர் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

4.3.2013 திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமை செயற் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம்: 1

திராவிடர் மாணவர் கழகப் பிரச்சார காலந்தொட்டு இயக்கத் தொடர்புடைய ஈரோடு புலவர் ஆறுமுகனார் (மறைவு 13.2.2013) உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் டாக்டர் இரா. ஜனார்த்தனம், *(மறைவு 20.2.2013) முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க. முன்னணி வீரருமான திண்டிவனம் டி.ஜி. வெங்கட்ராமன் (வயது 82 - மறைவு 21.2.2013).

பெரியார் பெருந்தொண்டர் குடந்தை ஏ.எஸ். இராசசேகரன் (வயது 76 - மறைவு 23.2.2013) தி.மு.க. மகளிரணி முன்னாள் தலைவர் குளித்தலை பொற்செல்வி இளமுருகு (மறைவு 6.2.2013), மும்பை புறநகர் திமுக மாவட்ட செயலாளர் அலிஷேக் மீரான் அவர்களின் தந்தையும் முதுபெரும் திராவிட இயக்க முன்னோடியுமான அலிஷேக் மன்சூர் (வயது 85 - மறைவு 3.3.2013) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 2

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் தொடர்ந்து இருந்து வந்துள்ளன. இதற்காக திராவிடர் கழகம் தொடர்ந்து போராடியும் வந்திருக்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்பு காலங் கடந்து அரசிதழில் (ழுயணநவவந) இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் இன்னும் எஞ்சி இருக்கின்றன. மத்திய அரசு அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

இந்த நிலையில் இது குறித்து விவசாயப் பெருங்குடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் துண்டறிக்கை விவசாய மாவட்டப் பகுதியில் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வரும் மார்ச்சு, 10,11,12 ஆகிய தேதிகளில் முதல் இந்தப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3

நமது மதிப்புக்குரிய கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று, சிறப்பாக 50 ஆண்டு காலம் பணியாற்றியதன் மகிழ்வாக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் சேர்த்து ஆசிரியர் அவர்களிடம் அளித்து மகிழ்ந் தோம்.

அந்தச் சந்தாக்களின் கால அளவு முடிந்து விட்டதால் அவற்றைப் புதுப்பிக்க வும், புது சந்தாக்களைச் சேர்க்கவும் கழகம் எடுத்த முடிவின்படி, பல்லாயிரக்கணக்கில் சந்தாக்களைச் சேர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதி கோவையில் நடக்க உள்ள புரட்சிப் பெண்கள் மாநாட்டில் அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

குறிப்பு: 25 ஆயிரம் சந்தாக்களை அளிப்பது என்று தோழர்களின் கருத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 4

கழகம், கழகப் பணிகள் கட்டுப்பாட்டு டன் நடந்தேற தலைமைக் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்துவது என்றும் அதில் கீழ்க் கண்டவர்கள் இடம் பெறுவார்கள் என்றும் இக்கூட்டம் முடிவு செய்து அறிவிக்கிறது. இவர்கள் துவக்க நடவடிக்கைகள், முடிவு களை தலைமைக்குப் பரிந்துரை செய்வார் கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தலைவர்: மானமிகு ராஜகிரி கோ.தங்கராசு

உறுப்பினர்கள்: மானமிகு பொத்தனூர் க.சண்முகம்

மானமிகு மதுரை வே.செல்வம்

தீர்மானம் 5

வரும் ஏப்ரல் 4ஆம் தேதி சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6

தமிழர்களின் நீண்ட கால எதிர்ப் பார்ப்புத் திட்டமான, தென் மாவட்டங்களில் பொருளாதார நிலையிலும், வேலை வாய்ப்பிலும் பெரும் அளவுக்குப் பலன் களை விளைவிக்கக்கூடிய சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தவும், பொது மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தவும் நாகர்கோயில் தொடங்கி மதுரை வரை தொடர் பிரச்சாரப் பயணத்தை வாகனங்கள் மூலம் மேற் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7

வரும் மே 4ஆம் தேதி இராச பாளையத்தில் இளைஞரணி மாநாட்டை - கருத்தரங்கம், பேரணி உள்ளிட்ட அனைத்துச் சிறப்பான அம்சங்களையும் உள்ளடக்கி, எழுச்சியுடன் நடத்துவது என்றும், அதற்கான ஆயுத்தப் பணிகளில், இளைஞரணி, மாணவரணி மற்றும் மதுரை, நெல்லை மண்டல கழகத் தோழர் கள் ஈடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திங்கள், 04 மார்ச் 2013 16:57
E-mail Print

போர் குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்து
டெசோ அமைப்பின் சார்பில் நாளை
இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது

சென்னை, மார்ச் 4 இலங்கையில் நடந்த போரின் போது, அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளி என்று உலகம் உணரச் செய்யும் வகையில் டெசோ இயக்கம் சார்பில் நாளை (5.3.2013) சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடை பெறுகிறது. இது குறித்து டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

சர்வதேச போர்க் குற்றவாளி இலங்கை இனவாத அதிபர் ராஜபக்சேவை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த முற்றுகை அறப்போருக்கு தி.மு.க.பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்பு லட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் முன்னிலை வகிக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே இலங்கைத் தூதரகத்தின் முன் நாளை முற்றுகைப் போராட்டம் - அலைகடலெனத் திரள்க!

அருமைக் கழகத் தோழர்களே!

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த - பாலகன் பாலச்சந்திரனை ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த - இலங்கை அரசின் இனப் படுகொலையைக் கண்டித்து - சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் முற்றுகைப் போராட்டம் டெசோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (5.3.2013) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. வந்து சேர வேண்டிய இடம் - வள்ளுவர் கோட்டம். கழகத் தோழர்களே, அணி அணியாக வாரீர்! வாரீர்! என அழைக்கிறோம்.

- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!




மகளிர் மாண்பு

பெங்களூருவில் ஓர் அதிசயம்; ஆனால் உண்மை. வெங்கடலட்சுமி என்ற அந்தப் பெண் தன் குடும்ப வறுமையை ஓட்டுவதற்காக ஆட்டோ ஓட்டினார். ஒரு வருடம் அல்ல; இரு வருடம் அல்ல; 13 வருடம் ஒட்டினார். ஓட்டினார் ஓட்டிக் கொண்டே இருந்தார். 40 வயதுக்கு மேல் அவரின் ஆசை நிறைவேறியது. அந்த ஆசை வேறு ஒன்றும் அல்ல; வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான் அந்த ஆசை!

கனவு காணுங்கள் இளைஞர் களே என்றார் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.

இந்த பெண்ணைப் பொறுத்த வரை வெறும் ஆசை மட்டுமல்ல; கனவு மட்டுமல்ல; ஊக்கம், விடா முயற்சி - அதில் வெறி அந்த வெறியில் ஒரு ற்அய் சேர்த்தால் வெற்றிதானே! லட்சுமி கடாட்சம் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. உழைப்புதான் வெங்கடலட்சுமியை வெற்றி மேடைக்கு உயர்த்தியது என்பதே மெய்.

தமிழ் ஓவியா said...

7000 பேர் கலப்புத் திருமணம் செய்து கொண்ட மெகா திருமணம்!

தென் கொரியாவில் ஒருங் கிணைப்பு சபை தேவாலயம் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட திருமண விழாவில் 7000 பேர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

தென் கொரியாவைச் சேர்ந்த சன் மியுங் மூன் என்பவர் ஒருங் கிணைப்பு சபை தேவாலயத்தில் கடந்த 1960ஆம் ஆண்டு முதல் ஜாதி, மத, பேதங்களைக் கடந்த கலப்புத் திருமணங்களை ஊக்கு வித்து வந்தார்.

ஆரம்ப கட்டத்தில் சில இணை யர்கள் இந்த தேவாலயத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். நாளடைவில், இந்த கலப்புத் திருமண விழாக்களில் ஆயிரக் கணக்கான இணையர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று திருமணம் செய்து கொள்ள துவங்கினர்.

காதல் திருமணம், பெரியோர் களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், ஒரே மத திருமணம், மதம் மாறிய திருமணம், மதங்களைக் கடந்த திருமணம் என ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இணையர்கள் மாலை மாற்றி தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தனர்.

இந்நிலையில், தென் கொரியா தலைநகர் சியோல் அருகே உள்ள தேவாலயத்தில் கடந்த 17.2.2013 அன்று நடைபெற்ற பிரம்மாண்ட திருமண விழாவில் 3,500 இணை யர்கள் திருமணம் செய்துக்கொண் டனர். இந்த திருமண விழாவில் மணமுடித்த மணமக்களை வாழ்த்த 20,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அங்கெல்லாம் தேவாலயத்தில் ஜாதி மத பேதங்களைக் கடந்து திருமணம் எளிமையாக நடக்கிறது. இங்கு அப்படியெல்லாம் நடக்க முடியுமா? ஒரு முசுலிமுக்கும், ஒரு கிறித்தவருக்கும் திருப்பதி கோயி லில் திருமணம் நடத்த முடியுமா? ஒரே இடத்தில் 7000 திருமணம் என்றால் அவரவர்களுக்கு செலவும் மிச்சம் தானே! நம் நாட்டில் என்னவென்றால் கடன் வாங்கிக் கல்யாணம் செய்வது. அந்தக் கடனை அடைக்க வாழ்வது என்ற நிலைதானே! எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தமிழ் ஓவியா said...

இது சோவின் நியாயம்?

கே: 2002ஆம் ஆண்டு குஜராத் தில் நடைபெற்ற கலவரங்கள் துரதிருஷ்டவசமானது என்று ஜெர் மன் நாட்டுத் தூதரிடம் நரேந்திர மோடி கூறியுள்ளாரே?

ப: இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? எப்போதாவது நரேந்திர மோடி 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவ ரங்கள் அதிர்ஷ்டவசமானவை என்று கூறினாரா? அப்படிக் கூறியிருந்தால், இப்போது அவை துரதிருஷ்டவசமானவை என்று அவர் கூறுவதை நினைத்து வியப் படையலாம். அவர் என்றுமே அப்படி கூறாத போது, இதை ஏதோ பெரிய செய்தியைப் போல சித்திரிப்பது துரதிர்ஷடவமானதோ, அதிர்ஷ்டவச மானதோ அல்ல; நகைப்புக்குரியது. (துக்ளக் 27.2.2013 பக்கம் 17)

இதற்குப் பெயர்தான் சோவின் நியாயம் என்பது. மோடி முதல் அமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் 2002இல் சிறுபான்மை மக்களான முஸ்லீம் கள்மீது அரசு துணையுடன் ஏவப்பட்ட வன்முறையில் 2000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1,70,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 203 தர்காக்கள், 205 மசூதிகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் எரிக்கப் பட்டன. காவல் துறையினர் 10 ஆயிரம் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.

61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளைத் துறந்து ஓடினர். 70 ஆயிரம் முசுலிம் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதி முகாம்களில் சரணடைந்தனர்.

பொடா சட்டத்தின்கீழ் 287 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முசுலிம்கள், ஒரே ஒருவர் சீக்கியர்.

இவ்வளவு நடந்திருந்தும் அம்மாநில முதல் அமைச்சருக்கு மட்டும் பொறுப்பில் லையாம். இந்த சம்பவங்கள் அதிர்ஷ்ட வசமானவை என்று அவர் சொல்ல வில்லையாம். (அதனாலே அவர் யோக்கியர் - அப்படித்தானே!) அதுவும் அவராக பொறுப்பேற்றுச் சொல்லவில்லை. ஜெர்மனி நாட்டுத் தூதரிடம் துரதிர்ஷ்டவசமானது என்று அந்த உத்தமப் புத்திரர் கூறி விட்டாராம் - அது போதுமானதாம்.

மோடி ஆட்சியிலே யாரும் யாரையும் கொலை செய்து விட்டு, துரதிர்ஷடவச மானது என்று சொன்னாலே போதும். கொலையாளி குற்றவாளியில்லை என்று அறிவிக்கப்பட்டு விடுவார். இந்த நியாயம் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

சோ போன்ற பார்ப்பன நச்சுக் கொடுக் களுக்குத்தான் வரும் என்க!

தமிழ் ஓவியா said...


எங்கு நோக்கினும் தலைகள்! தலைகள்!!


சுனாமியாக எழுந்தது தமிழினம்!
தளபதி மு.க. ஸ்டாலினின் எச்சரிக்கையும் காவல்துறை நடவடிக்கையும்


முற்றுகைப் போராட் டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். வள்ளுவர் கோட்டம் வட்டாரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

தி.மு.க., தி.க., விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக் கத் தமிழர் பேர வையைச் சேர்ந்தவர் களும், பொது மக் களும் தமிழின உணர் வாளர்களும் சுனாமி போல பொங்கி எழுந் தனர். மாவட்ட வாரி யாக அறிவிக்கப்பட்டு தோழர்கள் கைதாக அணி வகுத்து நின்ற னர். பல்லாயிரக் கணக் கான இம்மக்களை எப்படி கைது செய் வது? எத்தனை வாகனங்களில் ஏற்றிச் செல்லுவது? எங்கு கொண்டு போய் வைப் பது என்பதறியாமல் காவல்துறையினரே திகைத்தனர்.

அந்த நேரத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கைது செய் யும் பொறுப்பு காவல் துறையைச் சேர்ந்தது. காவல்துறைக்கு எல்லா வகையிலும் ஒத் துழைப்புக் கொடுக்க நாங்கள் தயார். வாகனங்களை ஏற்பாடு செய்யாவிட்டால் எங் களைக் கைது செய்ய முன் வராவிட்டால் இலங்கைத் தூதரகத் திற்கு நாங்கள் நடந்து செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தார்.

அதன் பிறகு வள்ளு வர் கோட்டத்திற்கு அனைவரும் செல்லு மாறு கேட்டுக் கொண் டதற்கிணைங்க, ஆயிரக் கணக்கான போராட்ட வீரர்களும் அமைதி யாக வள்ளுவர் கோட்டத் திற்கு நடந்து சென் றனர். இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. தமி ழீழம் தமிழர் தாகம்!

தமிழ் ஓவியா said...

இந்திராகாந்தி கடைபிடித்ததை
இந்திய அரசு கடைபிடிக்க வேண்டும்

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் கைதான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த போராட்டம் காவல்துறையினரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தின் நோக்கங்களை ஆசிரியர் வீரமணி விரிவாக குறிப்பிட்டுள்ளார். அய்.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும் சில நாடுகளில் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 1971-இல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும். - கைதான தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் இலங்கைத் தூதரகம் முன் முற்றுகை! பல்லாயிரம் தமிழர்கள் கைது!

இலங்கை தூதரகத்தைக் முற்றுகையிட, சென்ற டெசோ அமைப்பினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். (சென்னை -5.3.2013)

சென்னை, மார்ச் 5- கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப்பு கூடி, எடுத்த முடிவுக்கேற்ப, இன்று (5.3.2013) காலை, டெசோவின் சார்பில், இலங்கைக் கொடுங்கோலன் இராஜபக்சே நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மீறல், போர் நெறிகளுக்கெதிராக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தும், பிரபாகரனின் 12 வயது பச்சிளம் பாலகனின் மார்பில் அய்ந்து குண்டுகளால் துளைத்து அந்தப் பழியைக்கூட பிறர்மீது போட முயற்சிக்கும் பொல்லாத ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பதோடு, அவரது அரசின் துணைத் தூதரகம் தமிழ்நாட்டுத் தலைநகரில் இருக்க அனுமதிப்பது மிகப் பெரிய தேசிய அவமானம்; எனவே இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மூட வைக்கும் போராட்டம், இன்று காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின், ஆசிரியர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். காவல்துறை கைது செய்யவே திணறிய நிலை இருந்தது என்றாலும் வள்ளு வர் கோட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வந்து, கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டம் மார்ச் 7இல் டில்லியில் தேசிய தலைவர்கள், மனித உரிமை ஆணையம், உலக பொது மன்னிப்பு சபை அனைத்தும் கலந்து கொண்டு மாபெரும் மாநாடு நடத்தவிருப்பதில் மேலும் தனி சுதந்திர உரிமைகள், பொருளாதாரத் தடை இவற்றை வற்புறுத்து வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினர். பிறகு கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியம் கொண்டு சென்றனர். 49 ஆவது முறையாக தமிழர் தலைவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


தமிழர்களே, தி(இ)னமலரைப் புரிந்துகொள்வீர்!


நேற்று சென் னையில் ஈழத் தமி ழர்களின் மீள் வாழ்வுக்காக நடைபெற்ற இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம்பற்றி செய்தி வெளி யிட்ட பார்ப்பன இனமலர் ஏடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பெயரை மட்டும் மிகவும் விழிப்பாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளியிட்டது.

தினமலர் என்பது இனமலர்தான், பார்ப்பன மலர்தான் என்பதைத் தமிழர்களே, புரிந்துகொள்வீர்!

தமிழ் ஓவியா said...


பார்ப்பான்


பார்ப்பான் தன் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் எவனோ, அவனை எல்லாம் மகான், மகாத்மா, ஆழ்வார், நாயன்மார்களாக ஆக்கி விடுகின்றான். பார்ப்பனர்கள் தம் காலைக் கழுவ மறுப்பவனை ஒழித்தே கட்டி இருக்கின்றார்கள்.
(விடுதலை, 2.9.1960)