Search This Blog

22.3.13

2009 ஆம் ஆண்டிலேயே விலகி இருக்கக் கூடாதா?திரிக்கும் திருவாளர்கள்!!


ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான பிரச்சினையில் தமிழ்நாடு கொந்தளிக்கும் எரிமலையாக இருந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தீப்பந்தங்களாகக் காட்சி அளிக் கின்றன.

மனித உரிமையாளர்கள் மத்தியில், உலகம் தழுவிய அளவில் இப்பிரச்சினை முக்கியமான இடத்தை வகிக்கிறது.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை என்பது தமிழ்நாட்டை அதிகம் பாதித்துள்ளதற்கு நியாயமான காரணங்கள் உண்டு.

அங்குக் கடும் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர் - இதனையும் தாண்டி மனித உரிமை, மனிதநேயம் என்பதும் தமிழ்நாட்டில் இருப்பதற்குக் காரணம்  -அவை தன்மான இயக்கம் - திராவிடர் இயக்கத்தால் தமிழ்நாட்டில் விதைக்கப் பட்டு வளர்த்து எடுக்கப்பட்டதாகும்.

ஆனால், பாழாய்ப் போன இந்த அரசியல் இதன் வீரியத்தை காயடிக்கிறது என்பதுதான் வெட்கக் கேடு!

மத்திய கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையி லிருந்தும் தி.மு.க. விலகியது குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளப்பப்பட்டுள்ளன. தி.மு.க. தன் சக்திக்குரியதை செய்யத் தவறவில்லை என்பது தான் உண்மை.

2009 ஆம் ஆண்டிலேயே விலகி இருக்கக் கூடாதா? அப்படி விலகியிருந்தால் பேரிழப்பு ஏற்பட்டு இருக்காதே என்று சில ஏடுகள் தினமணி உள்படத் தலையங்கம் தீட்டுகின்றன.

இதில் என்ன கொடுமை என்றால், ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்த ஆரியப் பார்ப்பன ஏடுகள் எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே எப்பொழுதும் இருந்து வந்ததுதான்.

தி.மு.க.வை குறைகூறவேண்டும் என்கிற ஒரே திட்டம் மட்டுமே (One Point Programme) அவர் களிடத்தில் இருப்பதால் எரிச்சலின் அடிப்படை யிலேயே எழுதி வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டிலேயே பதவி விலகி இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பும் இந்த பட்சாதாபப் பேர்வழிகள்(?) அந்தக் காலகட்டத்தில் எதிர்க் கட்சியாக இருந்து இன்றைக்கு ஆளும் கட்சியாக இருப்பவர்களின் திசை நோக்கி எந்த விமர்சனமும் முன்வைப்பதில்லை.

அ.தி.மு.க. ஆட்சி சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பெரிதாகப் பேசக் கூடியவர்கள். 2009இல் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது, இதே அ.இ.அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர் அந்தப் போரை - படுகொலையை நியாயப்படுத்திப் பேசியவர்தான் - போர் நடை பெற்றால் பொதுமக்கள் சாவது சகஜம்தான் என்று சொன்னதை மறந்தும்கூட சுட்டிக்காட்டுவது கிடையாது.

அந்தப் பிரச்சினையில் இந்தியா தலையிடக் கூடாது என்று  சொன்னவர்தான் ஜெயலலிதா.

இந்த அம்மையார் சொன்ன மிக மோசமான விமர்சனத்தைப் போல, அதில் ஆயிரத்தில் ஒரு பங்காக தி.மு.க.வோ, அதன் தலைவரோ சொன்ன தாக மருந்துக்காவது ஒன்றை எடுத்துக்காட்ட முடியுமா?

கலைஞர் என்றால் அன்று அவரின் நிலைப்பாடு வேறு - இன்றைய நிலைப்பாடு வேறு - இது மொத்தமான முரண்பாடு என்று மூச்சு முட்ட எழுதுபவர்கள், அதே கண்ணோட்டத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் அன்றைய நிலைப்பாடு என்ன? இன்றைய நிலைப்பாடு என்ன என்று எழுதமாட்டார்கள்.
இதை நாம் சுட்டிக்காட்டினால் இனத் துவேஷம் என்று முத்திரை குத்துவார்கள். குத்தினால் குத்தி விட்டுப் போகட்டும்; உண்மையைச் சொன்னால் வலிக்கத்தான் செய்யும்.

இதில் இன்னொரு மோசமான நிலைப்பாடு என்னவென்றால், தி.மு.க. தலைவர் சொல்லாததை எல்லாம்,  அறிக்கையில் இல்லாததையெல்லாம், சொன்னதாக, எழுதியதாகக் கற்பித்து காற்றோடு சிலம்பம் ஆட முயற்சிக்கும் கேவலத்தை எதைக்கொண்டு சாற்றுவது!

கலைஞர் அவர்கள் இந்தப் போக்கினை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழப் பிரச்சினை என்றாலும், சமூகநீதிப் பிரச்சினையானா லும் ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள் தாங்க முடியவில்லை. இதனைத் திராவிடர் உணர்வோடு தமிழர்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மையின் முழுவடிவமும் பளிச்செனப் புரிந்துவிடுமே!

                    ---------------------------"விடுதலை” தலையங்கம் 21-3-2013

77 comments:

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 21- ஸ்டாலினை மய்யப்படுத்தி இந்து ஏடு செய்தி வெளி யிட்டதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் - அறிக்கை வருமாறு:

தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக் காகவோ எடுப்பதில்லை. குறைந்த பட்சம் கழகத்தின் தலைமையிலே உள்ள முன்னோடிகள் கூடிக் கலந்து பேசி பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தான் முடிவெடுப் பது வழக்கம். செய்தியாளர்கள் பல முறை சில அதிமுக்கியமான பிரச் சினைகள் குறித்து கேள்வி கேட்கும் போது கூட, கழகத்தின் செயற் குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகு தான் முடிவெடுத்து அறிவிக்குமென்று நான் பல முறை கூறியிருக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் தொடர்ச்சி யாக; நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச் செய லாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கழகத்தின் மூத்த செய லாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத் தான் 19-3-2013 அன்று காலை செய்தியாளர்களுக்கு அறி வித்தேன். உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகா விட்டால், ஸ்டாலின் விலகி விடுவ தாகப் பயமுறுத்தியது தான் கார ணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை யெல்லாம், அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகா தர்மத்தைப் பாழடிக்கின்றன. ஆனால் இந்து நாளிதழும் இப்படி உண் மைக்குப் புறம்பான செய்தியினை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் புதிய அறிவிப்புபுதுடில்லி, மார்ச் 21- இந்திய அரசுப் பணியாளர் ஆணையம் (ருஞளுஊ) புதிதாக அறிவித்த மாநில மொழி பேசு வோர்க்குப் பாதகம் விளைவித்த தேர்வுத் திட் டத்தை கைவிட்டது. பழைய முறையே தொட ரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசும், நடு வண் பணியாளர் தேர்வு ஆணையமும் (ருஞளுஊ) மொழிகள் தொடர் பான சர்ச்சைக்குண் டான எல்லா மாற்றங் களையும் திரும்பப் பெற் றுக் கொள்ள முடிவு செய்துள்ளன. ஆனால் பொதுப் படிப்பிற்கான பாடங்கள் இரண்டுக் குப் பதிலாக நான்காக உயர்த்த முடிவு செய் துள்ளன.

சென்ற புதன்கிழமை யன்று, பணியாளர்களுக் கான இணை அமைச்சர் வி. நாராயணசாமியுடன் நடுவண் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக அரசு தரப்பிலி ருந்து கூறப்படுகிறது.
வட்டார மொழிகளில் எழுதலாம்
இந்த திட்டத்தின் படி, தேர்வுகளை வட் டார மொழியில் எழுது வதற்கான தடைகள் திரும்பப் பெறப்படுகின் றன. தவிர, தகுதித் தரம் கணிப்பதற்கான 100 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலத் தாள் நீக்கப்படுகிறது.

சென்ற வாரம், சீறிச் சினம் கொண்டு நின்ற நாடாளுமன்ற உறுப் பினர்களுடன், அவர்கள் அறிவித்திருந்த அறி விக்கையை செயல்படா மல் நிறுத்தி வைப்ப தாகவும், முன்பிருந்த நிலைமையே தொடரும் என்றும் சொல்லியிருந் தார். ஆனால், நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வுகளுக் குச் சற்று முன்பான நேரத்தில், காலத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொள்ளாது, புதிய மாற்றங்களை வேக மாகத் திணித்தது. அத் துடன், அதன் மாற்றங் கள் முழுவதுமாக நிரா கரிக்க வேண்டாம் என் றும் கேட்டுக் கொண் டது. கடைசி சில நாட் களில் ஒரு பலமான கண்ணோட்டம் வெளிப்பட்டுள்ளதாகவும், எல்லா மாற்றங்களை யும் திரும்பப் பெற வேண்டாம் என்ற கருத்து பரவலாக வெளிப்பட் டது.
ஆனாலும் மொழி கள் பற்றிய விவரங் களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருப் திக்கேற்ப, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களது குறைகள் களையப்பட்டுள்ளன என்று ஒரு அரசு உயர் அலுவலர் குறிப்பிட்டுள் ளார். ஆனால், கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட் டுள்ள ஆணை விளக்கங் களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
அரசு, நாடாளுமன்ற மக்கள் சபையில், உறுப் பினர்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒரு முடிவை அறிவிக்கலாம் என்று அந்த அலுவலர் குறிப்பிட்டார்.
ஆனாலும், அது அர சியல் நிலைமையையும், தலைமை வகிக்கும் அலு வலரையும் பொறுத்தது என்றார்.
நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம் முத லில் மொழிகள் பற்றிய மாற்றங்களைக் கொண்டு வந்தபோது, பணியாளர் துறையும், அமைச்சர் நாராயண சாமியும் மொழிகள் பற்றி மாற்றங்களின் உள்ளடக்கங்களை எதிர்த்துள்ளனர்.
சிவில்துறை அதி காரிகளும் நாடாளுமன் றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய அதே கருத்துகளைத் தான் கூறியுள்ளனர். அதன்படி அந்த மாற்றங்கள் இந்தி பேசும் மக்களுக்கு ஆதர வாகவும் நகர மக்கள் ஓரடி முன்னே போக சாதகமாக இருக்கவும் அமைந்துள்ளது என்று கூறினர்.

தமிழ் ஓவியா said...


தேவை அனைத்துலக விசாரணை நவநீதம்பிள்ளை உறுதிசிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அய்.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் வலியுறுத் தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இந்த அறிக்கையை, அய்.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் குயங் வா கங் பேரவையில் நேற்று சமர்ப்பித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் செயற்படவில்லை.

சில தெரிவு செய்யப் பட்ட பரிந்துரைகளை மட்டுமே சிறிலங்கா அர சாங்கம் நடைமுறைப் படுத்தி வருகிறது.

குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயங் களில் இன்னமும் பல் வேறு படிநிலைகளை சிறிலங்கா தாண்ட வேண் டிய நிலை உள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதன் மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

உண்மையைக் கண் டறியும் நெறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

சாட்சிகளையும் மற் றும் பாதிக்கப்பட்டோ ரையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கடத்தல்கள், காணா மல் போதல்கள் தொடர் பாக அனைத்துலக சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

தேசிய நிறுவனங் களின் சுயாதீனத் தன்மையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசா ரணைகள் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப இடம்பெறுவதை உறுதிப்படுத்த, சுதந்திர ஆணைக்குழுவொன்று அதைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். என்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.
(விடுதலை,18.1.1951)

தமிழ் ஓவியா said...

சுற்றுச் சூழல் சிந்தனை


காட்டு வளமே நாட்டு வளம்!

- இரா.இரத்தினகிரி

உலக வனவள நாள் - மார்ச் 21 மனிதன் இல்லாமல் மரங்கள் இருக் கும். ஆனால் மரம் இல்லாமல் மனிதன் இருக்க முடியாது - அவன் உயிர் வாழ உயிர்க்காற்றான ஆக்சி ஜனை மரங்களே தந்து மனிதர்களை உயிர் வாழ வைக்கின்றன. அப்படி யிருந்தும் மரங்களின் முதல் விரோதி மனிதன்தான். அந்த எண்ணத்தை அகற்றி ஒவ்வொருவர் மனதிலும் வனம் வளர்க்கும் மனம் - மனப்பாங்கு வளர வேண்டும் என்பதற்காகவே உலக வனவளக்காப்பு நாள் அனு சரிக்கப்படுகிறது.

வெள்ளைக்காரர் கள் நம்முடைய நாட்டை விட்டு வெளியேறும் போது இந்த நாட்டின் பரப்பளவில் 63 விழுக்காடு வனவளம் நம்மிடம் இருந்தது. அரசாங்கம் வனத்துறை என்ற ஒரு துறையை உருவாக்கி - அதற்கென இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் என்ற அதிகாரி களுக்கான பணி நிலையை உருவாக்கி நாடெங்கும் வனக்காப்பு அலுவலர் களை உருவாக்கி அவர்களுக்கு சீருடை முதல் துப்பாக்கிகள் வரை வழங்கிய பின்னர் இப்போது இந் தியாவில் 23 விழுக்காடு தான் வன வளம் உள்ளது. அதிலும் தமிழ் நாட்டில் 20 விழுக்காட்டுக்கும் குறைவே என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இயற்கைச் சூழல் பாதுகாக்கப்பட உலகப்பந்தில் மூன்றில் ஒரு பங்கு பூமி (நிலம்) இருப்பது போலவே நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அப் போதுதான் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் மழையும், பனியும் கிடைக்கும். அந்த மழையாலும், பனியாலும், கதிரவன் ஒளியாலும், காற்றாலும் இயற்கையான காடுகள் வளர்ந்து கரியமில வாயுவை பெற்றுக் கொண்டு உலகத்துக்கு உயிர்க்காற்றை வழங்கிச் சூழலைப் பாதுகாக்கின்றன.

தமிழ் ஓவியா said...

ஒரு மரம் ரூ. 32 இலட்சம், பொரு ளாதார மதிப்புடையது. அறிவியலார் கணக்கின்படி, அய்ம்பது ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் தன்னுடைய வாழ் நாளில் ரூ. 15 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமானமுள்ள உயிர்க்காற்றை - ஆக்சிஜனை உற்பத்தி செய்திருக் கிறது; ரூ. 11 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமான வேலையுள்ள மண் அரிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. மேலும், ரூ. 10 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமானமுள்ள காற்று மாசு பாட்டைத் தடுத்து நிறுத்தியிருப்ப தோடு ரூ. 10 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்புப் பெறும் விலங்கினங் களுக்கும், பறவைகளுக்குமான பாதுகாப்பை நல்கியிருக்கிறது.

மொத்தத்தில் அய்ம்பது ஆண்டு மரம் வீழ்த்தப்பட்டால் ரூ. 52 இலட்சம் பெறுமானமுள்ள நட் டத்தை நாம் ஏற்றுக்கொள்வதோடு அந்த மரம் தரும் உயர்தர பயன்தரும் மூலிகைகளையும், நறுமணமுள்ள அழகிய மலர்களின் எழிலையும், சத்துமிகுந்த பழங்களையும் நம்மையறியாமலேயே இழக்கிறோம்.

ஒரு வீடு உருவாவதற்கு சுமார் ஓர் லட்சம் செங்கற்கள், ஒட்டுக்கற்கள் தேவைப்படுகின்றன என்றால் அந்த செங்கற்களைத் தயாரிக்க சூளையில் 20 முதல் 25 டன் வரை விறகு பயன் படுத்தப்படுகிறது. அந்த விறகுக்கு 20 முதல் 25 மரங்கள் வரை வெட்டிக் காய வைத்தால் தான் செங்கல் சூளைக்கேற்ற எரிவிறகைக் கொடுக்க இயலும். அந்த வீட்டிற்கு தேவை யான வாயில் நிலைகள், தூண்கள், ஜன்னல்கள், கதவுகள், நாற்காலிகள் மேஜைகள், தொட்டில் முதல் கட்டில் வரை பல்வேறு மரச்சாமான்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் கண் முன்னால் தோன்றும் வீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், நகரங்கள் எல்லாம் - வீடு ஒன்றுக்கு நாற்பது மரங்கள் வீதம் என்றால் - எத்தனை லட்சக்கணக்கான மரங் களை வெட்டிச் சாய்த்து உருவாக்கப் பட்டு இருக்கின்றன என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

புதிய வீட்டு மனைகள் போடுப வர்கள் ஒவ்வொரு மனையைச் சுற்றி லும் குறைந்தது பத்து மரக்கன்று களாவது வைத்து அவற்றை வளர்த் துக் காட்டிய பிறகே, அவற்றுக்கு நகரமைப்புத் துறை அனுமதி வழங்கல் வேண்டும். இப்போது அந்த அதிகாரம் மக்களாட்சி முறையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
புவியியல் நீர் சுழற்சி முறையினைக் காடுகள் கட்டுப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் 1750 கோடி ஏக்கர் காடுகள் இருந்தன. அவை, கடந்த 25 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகளுக் காக, சரிபாதிக்கும் மேலாக அழிக் கப்பட்டுள்ளன. அதிக மழை பெய் கின்ற சிரபுஞ்சி, காடுகள் அடர்ந்த பகுதி என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் அமைக்கவும், அணைகள் கட்டவும், போக்குவரத் துகளுக்காகச் சாலைகள் போடவும், வேளாண் பொருள்கள் உற்பத்திக் காகவும் சுமார் 25 லட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. காட்டு வளமே நாட்டு வளம். காடு செழித் தால் நாடு செழிக்கும். அடர்ந்த காடுகள் நாட்டிற்கு அரண். மரங்கள் கார்பன்டை ஆக்சைடை பெற்றுக் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குகின்றன. மரங்களில் உள்ள இலைகள் மண்ணில் விழுந்து மண் ணுக்கு வளம் சேர்க்கின்றன. நோய் தீர்க்கும் மூலிகைகள் காடுகளி லிருந்து கிடைக்கின்றன. உயிர்களைக் காக்கும் இயற்கைச் சக்தியாகக் காடுகள் செயல்படுகின்றன. இதனால் பூமியின் தட்பவெப்ப நிலை ஒரே சீராக அமைகிறது.

எனவே நம் ஊரில் உள்ள ஒவ் வொரு சதுர அடி நிலத்தையும் வீணாக்காமல் மரம் வளர்க்க நம் முடைய இளைஞர்களைப் பயிற்று விக்க வேண்டும். மரங்களில் பழ மரங்கள், மூலிகை மரங்கள், தீவன மரங்கள், மலர் மரங்கள், மூங்கில் மரங்கள், பலகை மரங்கள், விறகு மரங்கள், நிழல்தரு மரங்கள், வேலியோர மரங்கள் முதலான பலவகை உண்டு. அவற்றை மண் ணின் தன்மைக்கும், நீரின் தன்மைக் கும், வெப்பச் சூழலுக்கும் ஏற்ப மரங்கள் ஊர்தோறும் வளர்க்கப்பட வேண்டும். மக்களுக்காக உயிர் காக்கும் உயிர்க் காற்று கிடைக்கும். மனிதர்கள் நோயற்ற வாழ்வு வாழ லாம். நீண்ட காலம் வளமான சிந் தனையுடன் கூடிய வாழ்வு பெறலாம்.

தமிழ் ஓவியா said...

அழிந்து வரும் மரவளர்ப்புப் பண்பைக் கல்வி மூலம் துளிர்விட்டு வளரச் செய்ய வேண்டும். இதன் மூலம் உற்பத்தி உணர்வு உருவாவ தோடு இளைஞர்களுக்கு அவரவர் வீட்டிலேயே வேலைவாய்ப்பும் கிடைக்கும். அத்துடன் அவர்களை சமூக விரோதச் செயல்களில் ஈடு படாதபடி செய்துவிடும். அவரவர் சுற்றுக்சூழலைப் பாதுகாக்க முடியும். தஞ்சையில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் (திரு. டி.வி.அந்தோணி) கிராமப்புறங்களில் நடந்த ஒவ்வொரு விழாக்களிலும் ஒரு முருங்கைப் போத்தும், ஒரு பப்பாளிக்கன்றும் வழங்குவார். இந்த இரண்டையும் முதலில் ஓராண்டு காலத்திற்கு மட்டும் சிறுவேலி கட்டிப் பாதுக்காத்துக் கொள்ளுங்கள். உங்கள் சமையலறைத் தண்ணீரை ஊற்றினாலே போதும் உங்கள் குடும்பத்திற்கு தேவையான வைட்ட மின் சத்து நிறைந்த முருங்கைக் கீரை, முருங்கைக்காய்கள், கிடைக்கும், புரோட்டீன் சத்துமிகுந்த பப்பாளி கிடைக்கும் நீங்களும் உங்களின் குழந்தைகளும் நோயின்றி புத்தி சாலிகளாக வளரலாம் என்று அறிவுரை வழங்குவதோடு அவர் இங்கு பணியாற்றியவரையில் நேரில் சென்றும் ஆய்வு செய்து வருவார். அப்பகுதி இப்போது முருங்கைச் சோலையாக விளங்குகிறது.

தரிசு நிலங்களைத் தாவர நிலங் களாக்குவதுதான் வனம் வளர்ப்பு. இப்பணியை அரசுத் திட்டங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியாது. மக்கள் ஒவ்வொருவருக்கும் மரம் வளர்க்கும் மனம் வர வேண்டும்; வளர வேண்டும், செடி, கொடி, மரம் வளர்ப்பு தொடக்கக் கல்விப் பாடத் திலேயே இடம் பெற வேண்டும்.

ஆசிரியர் பயிற்சித் திட்டத்தில் மரம், செடி, கொடி வளர்த்துக் காத் திடும் பாடத்தை, பயிற்சியைத் தருதல் வேண்டும். தற்போது பணியாற்றி வரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கள் அனைவருக்கும், மரம் வளர்க்க, வனம் வளர்த்துக் காத்திட, சுற்றுச் சூழலைத் தூய்மையோடு பராமரிக் கத் தக்க பயிற்சி வழங்கப்பட வேண் டும். ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு மரம் வளர்ப்புப் பண்பாடு சென்று, மாணவர் வழி மக்களுக்கு என வனம் வளர்க்கும் மனம் வளர்த்திட வேண் டும். இது காலத்தின் கட்டாயம்.

மகளிர் உயிர்கள் மரங்களைக் காத்தன என்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி யொன்றைக் குறிப்பிடுவார்கள். மார்வார் பகுதியை 1730-இல் அஜீத்சிங் என்னும் சிற்றரசர் ஆண்டு வந்தார். டில்லியில் இருந்த மொக லாய அரசர்கள் ராஜபுத்திரர்களிடம் ஓயாது சண்டையிட்டு அவர்களைப் பணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போரிட்டு வந்தனர்.

அவர்களிடமிருந்து அஜித்சிங் தனது நாட்டைக் காப்பாற்ற வலி மையான கோட்டையை அமைக்கத் திட்டமிட்டார். பெரிய பெரிய செங்கல் காளவாய்கள் அமைத்து செங்கற்களை உருவாக்கி மலைபோல அடுக்கி வந்தனர். ராஜஸ்தானத்தி லிருந்த பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.

தமிழ் ஓவியா said...

அந்தப் பாலைவனத்தில் ஒரு சிறு பகுதி மட்டும் வன்னிமரச் சோலை யாக அந்தப் பகுதி மக்களால் பல ஆண்டு காலமாகப் பாதுகாக்கப் பட்டு வந்தது. மன்னரின் சேனை மரங்களை வெட்ட வருகிறபோது அந்த ஊர் மக்கள் முதியோர் முதல் பெண், ஆண், குழந்தைகள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து மரங் களை வெட்டக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள். ஒன்று திரண்டி ருந்த மக்களின் ஆவேசத்தைக் கண்டு திகைத்த தளபதி மன்னனிடம் சென்று மக்களின் எதிர்ப்பைத் தெரி வித்தார்.

மன்னன் கோபங்கொண்டு அர சாணையை ஏற்காத குடிமக்களைக் கொன்று கோட்டையைக் கட்ட மரங்களைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டான் - மன்னனின் சேனை மக்கள் கூட்டத்தின் முன் வந்தபோது ராம்கோட் - என்பவரின் மனைவி அமிர்தாதேவி எங்கள் உயிர்நாடியான மரங்கள் போன பின்பு எங்களால் உயிர் வாழ முடியாது என்று சொல்லி முதலில் உள்ள மரத் தைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரது மகள்களையும் ஆளுக்கு ஒரு மரமாகக் கட்டிப்பிடித்துக் கொள்ள வும் சொன்னார். சேனாதிபதி அரச னின் ஆணையை ஏற்காத பெண் களோடு சேர்த்து மரங்களையும் வெட் டுங்கள் என்று கட்டளையிட்டான்.

அமிர்தாதேவியும் அவரது மூன்று மகள்களும் கொலையுண்டு வீழ்ந் தனர். இரத்த வெள்ளம் பெருக் கெடுத்தது. இந்தக் காட்சியைக் கண்ட மக்கள், அதுபோலவே ஆண்டாண் டுகளாக அவர்களது முன்னோர்கள் வளர்த்த மரங்களைக் காப்பாற்ற ஆளுக்கு ஒரு மரமாகக் கட்டி அணைத்துக் கொண்டார்கள். படை வீரர்களால் தொகை தொகையாக மக்கள் கொல்லப்பட்டனர். பாலை வனத்தில் மக்களின் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்தது. இந்தச் செய்தி மன்னனுக்கு எட்டியது. வெகு வேகமாக குதிரைகளில் அமைச்சர் பெரு மக்களோடு அரசர் வந்து சேர்ந்து கொலையை உடனே நிறுத்த உரத்தக் குரலில் ஆணையிட்டான். அதற்குள்ளாக ராஜபுத்திர மக்கள் 363 பேர் பலியாகி விட்டனர். அதில் மிகுதியானவர்கள் மகளிர்.

அரசன் கண்ணீர் பெருக்கெடுத்து மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரினான். உடனடியாக அப் பகுதியில் மரங்கள் மட்டுமல்ல, மிருகங்களும் பறவைகளும் கூட அங்கே எவரும் வேட்டையாடக் கூடாது என்று செப்புத் தகட்டில் சாசனம் செய்து கொடுத்த பின்னரே அந்த மண்ணைவிட்டு அகன்றான். இன்றும் அந்த தியாகத் திருநாளை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளில், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் யாவற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு அவை எல்லாம் சீராக வளர்க்கப்பட்டு வரு கின்றன. கடந்த வெள்ளியன்று தஞ் சையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கணேசன் அவர்களின் மகள் - திருமணத்தில் வந்திருந்தோர் அனை வரும் விடை பெற்றுச் செல்லும் போது அனைவருக்கும் தேங்காய் பழம் கொடுத்து அனுப்புவது போல ஆயிரத்துக்கு மேற்பட்ட நல்ல வளமான மரக்கன்றுகளை நன்றியை வெளிப்படுத்தும் விதமாகக் கொடுத்தனுப்பினார். இதுபோலவே புதுமனை புகுவிழா போன்ற விழாக்களிலும் கொடுக்க வேண்டும்.

முன்னுதாரணமாக பொறியியல் கல்லூரித் தோட்டத்தில் முதலாம் ஆண்டு சேருகின்ற மாணவர் தமது பெயரில் ஒரு மரம் நட்டு அது வாரா வாரம் அதற்கு ஓய்வுப் பிரிவு வேளையில் தண்ணீர் ஊற்றி அவர்கள் கல்லூரியை விட்டுப் பொறியாளராக விடைபெறுகின்றபோது நல்லதொரு மரத்தை உருவாக்கிச் செல்கிறார்கள்.

மரம் வளர்ப்பு நல்லதொரு பண் பாடாக வளர்க்கப்பட வேண்டும். அவர்கள் வாழ்நாளெல்லாம் வீட்டின் வாயில்களில், ஜன்னல்களில், மேல் மாடியில் சூரிய ஒளி படும் இடமெல் லாம் செடி வளர்க்கும், மரம் வளர்க்கும் பண்பாட்டைப் பெறு வார்கள். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் - மகிழ்வான வாழ்வு பெறுவோம். காட்டு வளமே நாட்டு வளம்!

தமிழ் ஓவியா said...


மதுரையில் நடந்த மன்றல் - 2013 குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு


இணை தேடல் விழாவில் அசத்திய சகோதரர்கள்!

தூத்துக்குடியைச் சேர்ந்த பால ஜெயராமன், முத்துக்குமரன் மற் றும் திருப்பதி மூவரும் உடன் பிறந்தவர்கள். மூவரும் மாற்றுச் சாதியில் மணமுடிக்க விரும்பு கின்றனர். அவர்களுக்கு வரதட் சணை தேவையில்லை எனவும் அறிவித்துள்ளனர்.

மதுரையில் நடந்த திராவிடர் கழகத்தின் கிளையான பெரியார் சுயமரியாதைத் திருமண நிலை யத்தின் இணை தேடு விழாவில், வந்திருந்தவர்கள் அனைவரின் முன்னிலையில் இவ்விதம் கூறி கைத்தட்டல்களைப் பெற்றனர்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக திருப்பதி ராஜா முதலில் அழைக்கப்பட்டார். அவர் பெண்ணிடமிருந்து ஒரே ஒரு தகுதியைத்தான் நிபந்தனை யாக அறிவித்தார். அதாவது பெண்ணுக்கு நன்கு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அடுத்து அழைக்கப்பட்ட அவரது அண் ணன் முத்துக்குமாரும், அதே நிபந் தனையைத்தான் சொன்னார், வந் திருந்த கூட்டம் முழுவதும் இந்த நிபந்தனைகளைக் கேட்டு கைதட்டி ஆதரவளித்தனர் அதற்கு அவர் கள் இருவரும் தங்களது மூத்த அண்ணன் பால ஜெயராமனும், தனது வாய்ப்பிற்காகக் காத்து உள்ளதாகவும், அவரது நிபந்த னையும் தங்களுடையதேதான் என்று கூறி வந்திருந்தோரை ஆச் சர்யத்தில் ஆழ்த்தினர்.

தமிழ் ஓவியா said...

உடன் பிறந்த மூவரும் தாங்கள் பெண்ணின் சாதி, நிறம், வரதட் சிணை பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. அவர்கள் கல்யா ணங்களில் நடத்தப்படும் சடங்கு களிலும் நம்பிக்கையில்லை. மூவ ரும் எதிர்பார்ப்பது என்னவென் றால் வர இருக்கும் பெண்ணிற்கு ருசியாக, வகைவகையாகச் சமைக் கத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடல் வளம் பெறுவதற்கு சுவை யான உணவு முக்கியம் என்றனர்.

மேலும் பெரியாரினாலும் அவர் தம் தொண்டர்களினாலும், சொல்லப்பட்ட கருத்துக்கள் தங் களை ஈர்த்ததால் பல ஆண்டுக ளுக்கு முன்பே தாங்கள் மாற்று சாதித் திருமணம் செய்து கொள்ள உறுதி பூண்டிருந்ததாக அவர்களி டம் கூறினர். இருந்தாலும் அவர் கள் தங்கள் கருத்துக்களை ஒரு வருக்கொருவர் இதனை தெரி வித்துக் கொள்ளவில்லை.

செய்தித்தாளில் சுயமரியாதை சாதி மறுப்பு திருமண நிகழ்ச்சி பற்றி அறிந்தவுடன் அவர்கள் கூடிப் பேசினர். மூவர் கருத்துக்களுமே ஒன்று பட்டிருந்தன.

மண முறிவு பெற்ற 32 வயதான முன்னவர் பால ஜெயராமன் எங்கள் தந்தையாரும் பெரியார் வழி நடப்பவர், அம்மாவோ எங் கள் விருப்பத்துக்கு மாறாக நடக்க மாட்டார், சொன்னவுடனே ஒப்புதல் கொடுத்து விட்டார். நான் 32 வயதாக இருந்தபோது மணம் செய்து கொண்ட பெண் ணிற்கு மனநிலை சரியில்லாத தைச் சொல்லாமல் ஏமாற்றி விட் டார்கள். மண முறிவு பெற மூன் றாண்டு காலம் ஆயிற்று என்று சொன்னார்.

மூன்று சகோதரர்களும் அவர் களது முன்னோர்கள் வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர், மூவரும் நன்கு சம்பாதிக்கின்றனர்.

பாலஜெயராமன் சிவில் படிப்பு படித்து இப்பொழுது புகழ் பெற்ற வீடுகட்டும் நிறுவனத்தின ராக உள்ளார். மாதம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். திருப்பதி ராஜா மின் பொறியிய லில் பட்டயப்படிப்பு படித்து, சொந்தத் தொழிலில் மாதம் ரூபாய் 35,000 சம்பாதிக்கிறார். முத்துக்குமார் நிறுவனத்தில் கிரேன் ஓட்டுநராகப் பணியாற்றி மாதம் ரூபாய் 15,000 சம்பாதிக்கிறார்.

மூன்று சகோதரர்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள். அதே வீட்டில் அவர்கள் வாழ்க் கையை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
18.3.2013)

தமிழ் ஓவியா said...


9 ஆண்டுகளில் தி.மு.க. சாதித்தவை திருச்சி சிவா எம்.பி.,


சென்னை, மார்ச் 21- மத்திய அரசுடன், கடந்த 9 ஆண்டு காலமாக கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு எத்த னையோ திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. எத்தனையோ சாதனை களைப் படைத்துள்ளது என்று அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வந்த திமுக தற்போது அதிலிருந்து விலகி விட்டது.

இந்தக் காலகட்டத்தில் அது பல்வேறு முக்கிய அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளது. இந்த உறவு தற்போது முறிந்துள்ளது - இந்த நிலையில், திமுக தமிழகத்திற்கு என்னென்ன செய்தது என்பதை திருச்சி சிவா பட்டியலிட்டுள்ளார்.

செம்மொழி தமிழ்

தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி, சேது சமுத்திர திட்டம் என பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு பெற்று வந்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. இதில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு பல்வேறு முட்டுக்கட்டை ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிற்கின்றன.

தங்க நாற்கர சாலைகள்

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி நான்கு வழி சாலையாக மாற்றியது. தங்க நாற்கர சாலையை விரைவுபடுத்தி முடித்தது. மதுரவாயல்-துறைமுகம் இடையே ரூ.1655 கோடி யில் பறக்கும் சாலை திட்டம், சென்னை கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், பாடி மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலம் என சாலை விரிவாக்கத்தில் தமிழ்நாட்டிற்கு முன் னுரிமை கொடுத்து செயல்படுத்தியது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் சென்னை விமான நிலைய விரி வாக்கம், நெம்மேலி கடல்நீரைக் குடி நீராக்கும் திட்டம், கிழக்குக் கடற் கரைச் சாலையில் கடல் சார் பல் கலைக் கழகம், தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை உள்பட பல்வேறு திட்டங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறந்த முறையில் செயல்படுத்தியது என்ற பெருமை திமுகவுக்கு உண்டு. உச்சநீதிமன்றமே இதனைப் பாராட்டியது.

சென்னைக்கு மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், ஓரகடத்தில் வாகனங்களுக்கான தேசிய ஆராய்ச்சி மய்யம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வந்தது.

செல்போன் கட்டணக் குறைப்பு

இன்று பாமரர் கையிலும் செல்போன் இருக்கும் வகையில் கட்டணத்தைக் குறைத்து இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில் பேச வழிவகை செய்தது தி.மு.க.வின் சாதனையாகும். இந்தப் பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம் என்றார் சிவா.

தமிழ் ஓவியா said...


உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்! - கலைஞர் கடிதம்


ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர்களுக்கு கலைஞர் கண்டனம்!

உடன்பிறப்பே,

அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நான்கு முறை திருத்தப்பட்டு, பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதாலும்; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யாததாலும்; மத்திய அமைச்சரவையிலிருந்தும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.கழகம் உடனடி யாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.கழகம் உரிய நேரத்தில் தக்க முடிவை மேற்கொண்டுள்ள தென உன்போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும், பல்வேறு தரப்பினரும் பெருமளவுக்கு வரவேற்றுள்ளனர். 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடை பெற்ற தி.மு.கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானம் ஒன்றை நான் முன்மொழிந்து பொன்னம் பலனார் வழிமொழிந்த நாள் முதல், இன்று வரை எந்தவிதத் தொய்வும் இல்லாமல், ஈழத் தமிழர் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து நாம் குரல் கொடுத்து வருவதை, ஈழத் தமிழர்களும், ஈழத் தமிழர்களின் தலைவர்களும் அன்றும் இன்றும் நன்றாகவே அறிவர்.

இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பு

ஈழத் தமிழர்களுக்காக 1976ஆம் ஆண்டிலும், 1991ஆம் ஆண்டிலும் என இரண்டு முறை ஆட்சி யையே பறிகொடுத்தது மட்டு மல்லாமல், சட்டப் பேரவை உறுப்பினர் பதவி யையும் பேராசிரியரோடு இணைந்து ராஜினாமா செய்தவன் நான். ஈழத் தமிழர்கள் பாதிப்புக்கு ஆளான போதெல்லாம் பதறியடித்து, முதல் குரல் எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம். ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காக பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மாநாட்டுத் தீர்மானங்கள், மனிதச் சங்கிலிகள், வேலை நிறுத்தம், டெசோ அமைப்பு உருவாக்கம், மீள் உருவாக்கம் என ஜனநாயகம் அனுமதிக்கும் அத் தனை வகையான அறவழி - அமைதி வழிப் போராட்டங்களையும் நாம் நடத்தி யுள்ளோம். இன்றைய (19-3-2013) செய்தியாளர்கள் கூட்டத்தில்கூட, 2009ஆம் ஆண்டில் இலங்கையில் போர் நடந்தபோது நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறதே? எனக் கேட்டபோது, 2009ஆம் ஆண்டில் நாங்கள் என்ன செய்ய வில்லை?

தமிழ் ஓவியா said...

அப்போது நாங்கள் ஒன்றும் அமைதி யாக இல்லை என்று பதில் சொன்னேன். 28-3-2009 அன்று இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா உதவிட வேண்டுமென்று கேட்டு, பிரதமருக்கும், திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் நான் கடிதம் எழுதினேன். 31-3-2009 அன்று திருமதி சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய நீண்ட பதிலில், இலங் கையில் முதல்கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நமது அரசு, இலங்கை அரசுடன் போர் நிறுத்தத்தைப் பற்றித் தொடர்பு கொண்டு வருகிறது என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார். போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்குப் பிறகும், இலங்கை அதிபர் ராஜபக்சே போரை நிறுத்தவில்லை. 7-4-2009 அன்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியாகாந்தி, வெளி யுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை, இலங்கையில் ஒட்டுமொத்த தமிழின மக்கள் கூண்டோடு அழிக்கப்படுவதிலிருந்து அவர் களைக் காப்பாற்ற வேண்டும்; போர் நிறுத் தத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நான் அவசரத் தந்தி மூலம் கேட்டுக் கொண்டேன். இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்ற நாடுகளின் சார்பிலும், அய்.நா. சபையின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்களும் ராஜபக்சேவைக் கேட்டுக் கொண்டும்கூட, ராஜபக்சேவின் சிங்களப் பேரின வாதமும், தமிழினத்தை அழித்தொழிக்க வேண்டு மென்ற ஆவேசமுமே பொங்கி வழிந்தது. 9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் இலங்கை அரசே போரை நிறுத்து! என்று முழக்கமிட்டவாறு மிகப் பிரம்மாண்டமான பேரணி ஒன்று நடத்தப் பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சே இரண்டு நாள் போர் நிறுத்தம் என்று அறிவித்தார். 23-4-2009 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டு மென்ற எனது கோரிக் கையை ஏற்று, வேலைநிறுத்தம் தமிழகத்தில் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடை பெற்றது. 24-4-2009 அன்று உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் அவர்கள் என்னைச் சந்தித்து விவரங்களை விளக்கினார். பிரதமர் அவர்களும் தொலைபேசியில் மத்திய அரசு எடுத்த முயற்சிகளை எல்லாம் என்னிடம் கூறினார். 25-4-2009 அன்று இலங்கை அரசு, ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழ் ஓவியா said...

27-4-2009 அன்று நான் எதிர்பார்த்த எந்தச் செய்தியும் வரவில்லை என்பதோடு, இலங்கை அரசு போரையும் நிறுத்தவில்லை என்பதால், விலாப் புறத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையிலும், அதிகாலையில் அண்ணா நினைவிடம் சென்று உண்ணாநோன்பைத் தொடங் கினேன். அன்று பகல் 11 மணியளவில் இலங் கைப் பாதுகாப்புக் கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தி 12 மணியளவில் இலங்கை வடக்கில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப் படையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் போர் நடவடிக் கைகள் முற்றுப் பெற்றுவிட்டன என்று அறிக்கை வெளியிட்டு அதன் நகலை, நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே அனுப்பி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ராஜபக்சே அரசு சொன்னதை உலக நாடுகளும் நம்பின; மத்திய அரசும் நம்பியது; மத்திய அரசு எனக்கும் நம்பிக்கையை ஊட்டியது. அதுமாத்திரமல்ல; அமெரிக்க அரசே அதை நம்பி, அமெரிக்க அரசின் செய்தித் தொடர் பாளர் ராபர்ட் உட் அவர்கள் இலங்கை அரசின் போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்தார். மத்திய அரசு என்னைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும் மற்றும் அனைத்துக் கட்சி யைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் வலியுறுத் தியதன் அடிப்படையிலும் நான் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டேன்.

கபட நாடகம்

இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்று வதற்கும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் எனது உயிரைப் பணயம் வைத்து, இப்படி எல்லாம் சங்கிலித் தொடர்போல நடவடிக்கைகளை மேற் கொண்ட தற்குப் பிறகும்; தி.மு.கழகத்தையும் என்னையும் ஆரம்ப காலம் முதலே குற்றம் காண் பவர்களும் - குறை சொல்பவர்களும், ஈழத் தமிழர் களுக்காக எதையுமே இழக்க முன்வராதவர்களும், எத்தனையோ முறை தேவையான விளக்கங் களைக் கொடுத்ததற்குப் பிறகும், அதையே திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவது நிரந்தர மான விரோதத்தினாலும், திசை திருப்பிடும் தீயநோக்கத்தாலுமே தவிர வேறல்ல. அது அவர்களால் நடத்தப்படும் கபட நாடகம்!

2001 செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பிறகு, விடுதலைப் போராளி களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை உலக நாடுகள் பல மறந்து போய் விட்டதையும்; அதனாலேயே பல நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததையும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் மிலி பாண்ட் - பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கூச்சனர் போன்றோர் வல்லரசுகளின் சார்பில், ஈழச் சிக்கலைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொண்டும் முடியாமல் போனதையும்; இங்குள்ள ஒரு சிலர் மறைத்து விட்டாலும்கூட, வரலாறு மறந்துவிடாது.

தமிழ் ஓவியா said...


ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரண மாகவே ஜெயலலிதா - கழகம் இன்று மேற்கொண்டு அறிவித்துள்ள முடிவைக் கபட நாடகம் என்றும்; 2009ஆம் ஆண்டு இலங்கை யில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது நான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும்; தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத் தின்மீது நான் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்ட தாகவும்; கடந்த ஆண்டு அய்.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும்; மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக இந்திய பாராளு மன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென்று நான் சொல்லி யிருப்பதாகவும்; ஈழத் தமிழர் பிரச்சினையில் நான் எதுவுமே செய்யாததைப் போலவும், ஜெயலலிதா அதற்காகத் தனி அவதாரமே எடுத்திருப்பதைப் போலவும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளவை எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானவை என்பதை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள்.

பிரபாகரனை கைது செய்ய தீர்மானம் போட்டவர்கள் யார்?

ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்லாமல், தமிழர்களின் ஒட்டுமொத்த நலனோடு தொடர் புடைய பல்வேறு பிரச்சினைகளிலும் இரட்டை வேடம் போட்டுக் கபட நாடகம் ஆடி வருபவர் ஜெயலலிதா. அண்ணாவின் கனவான சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினை யிலும், காவிரிப் பிரச்சினையிலும் முன்னுக்குப் பின் முரணாக, கருத்துக்களைச் சொல்லிக் கபட நாடகம் என்பதற்கு இலக்கணம் வகுத்திருப்பவர் ஜெயலலிதா. ஈழத் தமிழர் பிரச்சினையில்; 16-4-2002 அன்று அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகச் சட்டப்பேரவையில் - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடி யாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப் பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும் என்றும்; சிறீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய இராணுவத்தை சிறீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபா கரனைச் சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் - தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, வேலுப் பிள்ளை பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பரம விரோதியைப் போல உலகுக்குக் காட்டிக் கொண்டவர் ஜெயலலிதா. ராஜபக்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல; விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான் என்று அபாண்டமாகப் பொய் சொல்லி அகிலத்தையே அதிர்ச்சியுறச் செய்தவர் ஜெயலலிதா!

தமிழ் ஓவியா said...

17-1-2009 அன்று, இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான். என்று ராஜபக்சே அரசு கொத்துக் கொத்தாகக் குண்டுகளை வீசி, பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தியும், இலங்கை ராணுவத்திற்கு வக்காலத்து வாங்கியும் அறிக்கை வெளியிட்டவர் ஜெய லலிதா. இப்போது, தமிழகத்தில் மாணவச் செல்வங்களின் தன்னியல்பான பேரெழுச் சியை காவல் துறையைக் கொண்டு, அடக்கியும் ஒடுக்கியும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தனது மனநிலையை ஜெயலலிதா வெளிப்படுத்திடத் தவறவில்லை! அப்படிப் பட்டவர் ஈழத் தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் நீலிக்கண்ணீரே அன்றி வேறல்ல; ஜெய லலிதா போடுவது நாடகம், அதுவும் கபட நாடகமே அன்றி வேறல்ல.

சேது சமுத்திரத் திட்டம்

ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா காட்டிய முரண்பாடான அணுகுமுறையைப் போலவே; தென்மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான சேது சமுத்திரத் திட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்துக்களைச் சொல்லிக் கபட நாடகம் ஆடி வருகிறார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யில், ராமேசுவரத் திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறை களை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது, சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்றும்; 2004ஆம் ஆண்டு ஜெய லலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்று வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரை யறைக்குள் நிறைவேற்றிட வேண்டுமென்று வலியுறுத்துவோம் என்றும் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, தற்போது ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சொல்வது எத்தகைய முரண்பாடு? எப்படிப்பட்ட கபட நாடகம்?

தமிழ் ஓவியா said...


காவிரிப் பிரச்சினையில்....

டெல்டா மாவட்ட மக்களின் - குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குக் காரண மாகக் கருதப்படும் காவிரிப் பிரச்சினையிலும், வேறுபாடான நிலைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா. இந்தியப் பிரதமராக இருந்த திரு. வாஜ்பய் அவர்கள் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதைப் பல் இல்லாத ஆணையம் என்றும்; செயல் படாத ஆணையம் என்றும் தரக்குறைவாக விமர்சித்ததோடு; காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பய் மீதே தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கே ஆளானவர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானபோது, 6-2-2007 அன்று கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால்தான், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது என்று ஆத்திரங் கொப்பளிக்கச் சொன்னவர்; அந்தப் பாதகமான தீர்ப்பு தற்போது மத்திய அரசிதழில் வெளியிடப் பட்டதைத்தான், முப்பதாண்டு காலத்தில் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று சொல்லி, பொன்னியின் செல்வி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டு, ஜெயலலிதா பரவசப்பட்டிருக்கிறார். இப்படி காவிரிப் பிரச்சினையிலும் ஜெயலலிதா ஆடி வருவது கபடி நாடகமே!

டெசோவின் தொடர் பணி

கடந்த ஆண்டு அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த தொடர்ச்சி யான அழுத்தத்தின் காரணமாகத்தான், இந்திய அரசு ஆதரித்தது என்பதையும்; தற்போது நாம் கேட்கும் திருத்தங் களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி - அமெரிக்கத் தீர்மானத்தோடு அந்தத் திருத்தங் களையும் இணைத்து ஆதரித்திட வேண்டு மென்ற நமது நிலைப்பாட்டையும்; டெசோ மாநாட்டுக்கும், தீர்மானங்களுக்கும், ஆர்ப் பாட்டங்களுக்கும், வேலை நிறுத்தத்திற்கும் தமிழக மக்கள் மத்தியிலும் - மாணவர்கள் மத்தியிலும் கிடைத்த மிகப் பெரிய வரவேற் பையும்; ஈழத் தமிழர்களின் நலன் காக்க யார், எப்பக்கமிருந்து குரல் கொடுத்தாலும் வரவேற்கக் கூடியதே என்றும் - ஒவ்வொரு வரும் மாறுபாடான குரல் கொடுத்து ஈழத்தமிழர் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் - நமக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை மறந்து ஈழத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஒரே குரலில் எதிரொலித்திட வேண்டும் என்றும் - நான் ஏற்கனவே விடுத்த வேண்டு கோளையும்; ஜெயலலிதா மறந்துவிட்டாரா? அல்லது திரை போட்டு மறைத்திட முயற்சிக்கிறாரா? பிரதமர் வாஜ்பய்க்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மையாருக்கும் செய்த துரோகத்தையும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் செய்த துரோகத்தையும், சுயநல அரசியலின் காரணமாகத் தற்போது தமிழக மக்க ளுக்கே தொடர்ந்து செய்து வரும் துரோகத்தையும் மறைப்பதற்காக; மற்றவர்களைப் பார்த்து, துரோகம், துரோகம் என்று கூக்குரலிடும் உத்தியை, இங்குள்ள தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்; உலகத் தமிழர்களும் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்!
அன்புள்ள,

மு.க.
(நன்றி: முரசொலி, 21.3.2013)

தமிழ் ஓவியா said...


நெத்தியடி யாருக்கு? அ.இ.அ.தி.மு.க.வுக்கு!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் நெத்தியடி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரின் கேலிப் படத்தை வெளியிட்டு, அவர்களுக்கே உரித்தான அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்தி சாடியுள்ளனர் (21.3.2013).

சிரங்கு - சொறி என்றெல்லாம் தங்கள் வசம் உள்ள சரக்கை அவிழ்த்துக் கொட்டியுள்ளனர்.

தி.மு.க. மத்திய அரசிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் விலகியதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி விட்டாராம் - பொறுக்குமா நொய்யரிசிகளுக்கு?

பந்தை அடிக்க முடியவில்லையானால், காலை அடிக்கும் வேலை அவர்களுக்கு மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும்!

தி.மு.க. விலகியது ஒரு கொள்கையின் அடிப்படையில். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிபந்தனையின் அடிப்படையில்.

ஆனால், அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி. அமைச்சரவையி லிருந்து விலகியதே - நினைவிருக்கிறதா? - அது எதன் அடிப்படையில்?

இதனை விடுதலை சொல்லுவதைவிட அன்றைய பிரதமர் வாஜ்பேயி (பி.ஜே.பி.) வாயால் சொல்ல வைப்பதுதான் சிலாக்கியமானது - மிகமிகப் பொருத்தமானதும்கூட!

இதோ வாஜ்பேயி பேசுகிறார், படியுங்கள் - கேளுங்கள்!!

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும்போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை. நியாயமற்ற நிபந்தனை களை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி அமைக் கப்படும்பொழுது, இதைப் போன்ற நிபந்தனை களை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந்தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில் அ.தி. மு.க.வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார்.

சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங் களில் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட் டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலை யுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்கவேண்டும் என்பதுதான் அந்த விலை. அதுமட்டுமல்ல; பல ஊழல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும், அவருடைய நிபந்தனையாக இருந்தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடிபணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவ தில்லை என்பதை உணர்ந்தவுடன், அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.

குமுதம், 20.9.1999

நமது எம்.ஜி.ஆர் ஏடே! இதற்குப் பதில் என்ன?

ஒரு கொள்கைக்காக தி.மு.க. மத்திய அமைச்சர வையிலிருந்து வெளியேறுகிறது - அதற்காக திராவிடர் கழகத் தலைவர் வரவேற்கிறார் - பாராட்டுகிறார்.

தன்னலத்துக்காக - பக்கா சுயநலத்திற்காக செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படலாமா? நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெயலலிதாவை சங்கடப்படுத்த வேண்டுமென்றே அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், பலே! பலே!!

தொடரட்டும் அந்தக் கைங்கரியம்

தமிழ் ஓவியா said...

பதில் சொல்லும் ஓய்...பாப்போம்

தமிழகத்தில் ஜாதியின் அடிப்படையில் நம்மைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகள்
விசுவஹிந்து பரிஷத் ஆலோசகர் எஸ். வேதாந்தம்.

ஜாதி அடிப்படையை இந்து மதத்துல வச்சிருக்கிறது யாருங்கானும்?அரசியல் கட்சிகள் தோன்றி ஒரு நூறு நூத்தம்பது வருசம் இருக்குமா? ஆனா, ஜாதி ஆயிரமாயிரம் வருசமா இருக்கே! ஜாதிய `மனுங்கிற உங்களவா உண்டாக்கினாரு; அத நீங்க கெட்டியாப் பிடிச்சுண்டு இன்னும் எங்களப் பிரிச்சி வெச்சிருக்கேள்; இன்னும் கோவில்ல எங்களவா மணியாட்ட முடியல. அர்ச்சகர் படிப்புப் படிச்சிட்டுப் போராட்டம் பன்ணிண்டிருக்கா...உங்களவா கேஸ் போட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்கிற சட்டத்தைத் தடுத்து வெச்சிருக்கா. கிராமக் கோவில் பூசாரிகள் மாநாடு போடுறேளே... ஏன் பெரிய கோவில் அர்ச்சகர்கள் மாநாடு போடுறதில்ல? சொல்லும் ஓய்... கிராமத்துல இருக்கிறதெல்லாம் எங்களவா. அவளா பலி ஆடா ஆக்கிண்டு, பெரிய பெரிய கோவில்ல இருக்கிற உங்களவா நன்னா உருட்டி உருட்டி நெய்யும் பருப்புமா உள்ள தள்ளுறா. அந்த இடத்துக்குப் போட்டி வந்திடும்னுதானே அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்துக்குத் தடை வாங்கினேள்... பதில் சொல்லும் ஓய்... பாப்போம்.

தமிழ் ஓவியா said...

திருப்பதி பாலாஜியே டூப்பு... இதுல இது வேறயா...?

திருப்பதி திருமலை தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியுள்ளதாக ஏழுமலையான் பக்தர்கள் புகார் தந்துள்ளனராம். திருப்பதி பாலாஜியே போலிதான் என்பது இந்தப் பக்தர்களுக்குத் தெரியுமா?அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் நக்கீரனில் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? தொடரில் புட்டுப் புட்டு வைத்துள்ளார். ஏழு குன்றுகள் உள்ளதால் ஏழுமலை எனப் பெயர் பெற்ற திருப்பதியில், மலையில் வாழும் பழங்குடி மக்கள் மலைக்காளி உருவத்தைக் கல்லில் வடித்து வழிபட்டு வந்தனர். பல ஆண்டுகள் கழித்து அங்கு சென்ற பார்ப்பனர்கள் ஆகமங்கள், மந்திரங்கள் என அவர்களுக்குப் புரியாதவற்றைக் கூறி அச்சமூட்டினார்களாம்.

பின்னர் அந்தக் கடவுளை ஆண் கடவுளாக்கி பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றினார்கள் என்கிறார் தாத்தாச்சாரியார். (நக்கீரன் வெளியீட்டில் இந்நூல் தற்போதும் விற்பனையில் உள்ளது. www.thathachariyar.blogspot.in /2011/01/76-to-82-1.html என்ற வலைத்தள முகவரியில் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்.) பல மணிநேரம் காத்திருந்து இந்தப் போலிக் கடவுளைக் காணச் செல்லும் பக்தர்களே... அக்னிஹோத்ரம் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்.

தமிழ் ஓவியா said...

இவள் கண்ணகி


- வி.சி.வில்வம்

கண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் ? கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாது, கண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக் கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில்லை.நமக்கொரு சந்தேகம். கண்ணகியைப் பிடிப்பவர்களுக்குக் கண்ணகி மாதிரி ஒரு மகள் வாழ்க்கையும், பிள்ளையாரைப் பிடிப்பவர்களுக்குப் பிள்ளையார் மாதிரி ஒரு மகன் வாழ்க்கையும் கிடைத்தால் ஏற்பார்களா என்பதே நம்முடைய சிறிய கேள்வி ?

தமிழர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது பார்ப்பனத்தனம். அதை அப்படியே ஏற்பது பண்பாட்டுத்தனம் போல.

ஆனால் இவைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். இதன் அண்மைக்கால அடையாளமாக பிரளயனின் நாடகத்தை நாம் பார்க்கலாம். அதன் பெயர் வஞ்சியர் காண்டம். தமிழ்நாட்டின் 10 நகரங்கள் இந்த நாடகத்தைக் கண்டிருக்கின்றன.
நாடகம் என்றவுடன் உங்களுக்குத் தொலைக்காட்சிகள் நினைவுக்கு வரக்கூடும். அது பிழை. நம் குழந்தைகளுக்கும் சேர்த்து செய்கின்ற பெரும் பிழை. நிஜ நாடகம் பாருங்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும் தேடி, ஓடிப் பாருங்கள். அது சொல்லும் கலை; அது சொல்லும் கருத்து. கருத்தைக் கலையாய்ச் சொல்லும் பிரளயன் நாடகங்கள், முப்பதுக்கும் மேல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

இந்நாடகத்தைப் பேராசிரியர் ராஜு நெறியாள்கை செய்துள்ளார். இசை, பாடல்கள், காட்சியமைப்பு என அனைத்துமே அத்தனை அழகு. சுமைதூக்கும் தொழிலாளி, வர்ணம் பூசுபவர், அப்பள வியாபாரி, அரசு ஊழியர், ஆய்வு மாணவர்கள் என 45 பேர்களின் கூட்டுழைப்பு!

வாராந்திரத்தின் ஓர் இறுதி நாளில் இவர்கள் திருச்சியில் கூடினார்கள். இவர்களே வியக்கும் வண்ணம் மக்களும் கூடினார்கள்.

நாடகம் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டத்தின் ஒரு பகுதியே நாடகக் கரு என்று அறிவித்தார்கள்.

கண்ணகியைப் புதுமையாய்ப் பார்க்கலாம் என்று விளம்பரமும் செய்திருந்தார்கள்.

கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவில் கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி மற்றும் ஐயை ஆகியோர் பங்கேற்கின்றனர். தெய்வக்கோலம் பூண்ட கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபவத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் நிறைய முரண் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

கண்ணகியை எல்லோரும் தொழுகிறார்கள். நீங்கள் ஏன் தொழவில்லை? எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார். கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள்? கண்ணகியா தெய்வம்? யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணகி எனப் பொரிந்து தள்ளுகிறார். கண்ணகியின் கோலம் கோவலனுக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் உண்மைக் கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா? கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன், அவளை எப்படி நான் தெய்வமாய்ப் பார்ப்பேன்? என அழுகிறார். தொடர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

கண்ணகியின் 12 ஆவது வயதில் கோவலனோடு திருமணம் முடிகிறது. அப்போதுதான் தேர்ந்த பொற்கொல்லர்களால் காற்சிலம்பு செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த ஓர் ஆண்டில் கோவலன் பிரிந்து போகிறான். ஒருசமயம் கண்ணகியின் கால் ஒன்றில் காற்சிலம்பைக் காணவில்லை. பதறிப் போகிறார் செவிலித்தாய். உன் தந்தை ஆசை ஆசையாய் வழங்கிய பரிசு அது. எங்கே சிலம்பு? எனக் கேட்க, கால் அருகியதால் கழற்றிவிட்டேன் எனக் கண்ணகி பதில் சொல்கிறார்.

நாளடைவில் கோவலன் வரமாட்டான் என்கிற முடிவுக்குக் கண்ணகி வருகிறார். ஆனால் செவிலித்தாயோ உன் கணவர் நிச்சயம் வருவார், கவலைப்படாதே என்கிறார். பகல் _ இரவு, நிலவு _ -கதிர், நீர் _ நெருப்பு, குளிர் _ வெப்பம், இன்பம் _ துன்பம் என்பதைப் போல காதல் _ -பிரிவு என்பதும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் கண்ணகி. நீ செவிலித்தாயாக இருந்து எங்கள் குடும்பத்திற்குச் சேவகம் செய்கிறாய். நீங்கள் உரிமைகள் இழந்த அடிமை மக்களாக இருக்கிறீர்கள். நானோ அடிமை என்பதையே உணராத அடிமையாக இருக்கிறேன். காற்சிலம்புகள் எனக்கு, கால் விலங்குகள் போல உள்ளன. எனவே அதைக் கழற்றிவிடுங்கள் என்கிறார். இறுதியில் இன்னொரு சிலம்பும் அகற்றப்படுகிறது.

அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன? எனக் கண்ணகி கேட்க, செவிலித்தாய் தெரியவில்லை என்கிறாள். என்னைப் போல எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது என்று கண்ணகி சொல்வதாகச் செவிலித்தாயின் நினைவலைகளில் ஓடி முடிகிறது.

இந்நிலையில் கண்ணகியின் தோழி தேவந்தி சிலவற்றைப் பகிர்கிறார். கோவலன் சென்ற பிறகு எல்லா அணிகலன்களையும் துறந்த நிலையில் கண்ணகி இருக்கிறாள். அந்நேரத்தில், நாளை கோவலன் பெற்றோர் வருகிறார்கள். மலர்கள் சூடி, காற்சிலம்பை அணிந்து கொள் என்கிறார் தோழி. கோபமுற்ற கண்ணகி, காற்சிலம்பை வாங்கி எறிகிறாள். என் மாமனார், மாமியாருக்காக நான் எந்த அணிகலனும் அணியமாட்டேன். என் விருப்பத்திற்கு மாறான எதையும் செய்யச் சொல்லாதீர்கள் எனக் குமுறுகிறாள்.

இப்படியெல்லாம் பேசாதே கண்ணகி. தெய்வங்களை நன்றாகத் தொழு. நிச்சயம் உன் கோவலன் வருவான் என்கிறாள் தேவந்தி. தெய்வங்களைத் தொழுவது என் இயல்பு அல்ல என்கிறாள் கண்ணகி. அப்படியானால் உங்களுக்காக நான் தொழுகிறேன் என்கிறாள் தோழி. வேண்டாம், எனக்காக நீ தொழ வேண்டாம். உன் கணவனுக்காக நீ நாள்தோறும் தொழுகிறாயே, உன் கணவன் வந்துவிட்டானா எனத் திருப்பிக் கேட்கிறாள் கண்ணகி.

இப்படியாக அடிமைத்தனத்தை வெறுப்பவராக, அடிமை மக்களின் உரிமைகளுக்குப் பரிவு காட்டுபவராக, மூடத்தனங்களை அகற்றுபவராக, முற்போக்குக் குணம் கொண்டவராக கண்ணகி சித்தரிக்கப்படுகிறார்.

தெய்வமாக்குவதும் , வழிபடுவதும் தவறு என்பதாக நாடகம் முடிவு பெறுகிறது.

தமிழ் ஓவியா said...

நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளை சமசரப்போக்கு மூலமாக முறியடித்து விடக் கூடாது. பெண்களை அவமானப்படுத்துதல், துன்புறுத்தல் போன்றவற்றில் சமரசத்துக்கு முயலுவது நீதியைக் கவிழ்ப்பதுடன் பெண்களின் கவுரவத்தை சற்றும் பொருட்படுத்தாத தையே காட்டுகிறது.
- நாடாளுமன்ற மேலவை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி

தமிழ் ஓவியா said...

பெண்ணின் மனவலிமை இயல்பாகவே ஆண்களின் ஈகோவை உசுப்புகிறது. அவள் நமக்கு சமமாக இருக்கிறாள் என்பதையே பெரும்பாலான ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆண்களின் பார்வை மாற வேண்டும்.
திரைப்பட நடிகை குஷ்பு

தமிழ் ஓவியா said...

நம்ம பேருக்கு, புகழுக்கு, பணத்திற்கு உழைத்துவிட்டு, `ரொம்ப கஷ்டப்பட்டேன்னு சொல்லிக்கிறது நல்லாவா இருக்கு? கடமையையும், செய்ய வேண்டிய உழைப்பையும் கஷ்டம்னு சொன்னால் அவனை விட சோம்பேறி யாரும் கிடையாது. - திரைப்பட இயக்குநர் பாலா

தமிழ் ஓவியா said...

கல்கி


- பாண்டு

மகாலட்சுமி... மகாலட்சுமி... மகாலட்சுமி...

தனது நாற்கரங்களில், இருகரங்களிலும் தாமரை ஏந்தி ஒரு கையில் தங்கக் குடமும், மறுகரத்தை ஆசீர்வதிக்கும் பாவத்துடனும், மரகதம் மாணிக்கம் மணிவைரம் பதித்த பொற்கிரீடமுடன் கூண்டில் வந்து நின்றாள் சாட்சாத் அந்த எம்பிரான் ஏழுமலைவாசன் திருப்பதி வெங்கடாசலபதியின் தர்மப் பத்தினி. நீதிபதி, வழக்குரைஞர்கள் மற்றும் உள்ள அவையினர் யாவரும் எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டனர். அவர்கள் எழுந்து அமரும்போது நீதிமன்றத்தில் பழைய நாற்காலிகள் க்ரீச்சிடும் ஒலியும், பலரின் முணுமுணுப்புகளும் அவையை நிறைத்தன. அப்போது அங்கு நின்றிருந்த குமாஸ்தா சற்றுத் தலையைச் சாய்த்தபடி, காலண்டர்ல எல்லாம் கையில இருந்து ரூவா நோட்டா, கொட்டுமே... இங்க வெறுங்கையை வீசிட்டு இந்த அம்மாவாட்டுக்கு வந்துட்டே...? இல்ல உள்ள வரும்போதே இந்த அம்மாட்ட இருந்தும் இருக்கிறதெல்லாத்தையும் புடுங்கிட்டானுகளா? என்று முணுமுணுக்க.. அவையோரெல்லாம் சிரிக்கலாயினர்.

ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்... அவையில் எழுந்த சலசலப்பை நிறுத்திவிட்டுத் தன் கறுப்பு ஃப்ரேம் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி தொடர்ந்தார் நீதிபதி. ஜெகன்மாதா, உலகைக் காக்கும் தாயே! மேலோகத்தில் இல்லாத நீதிமான்களா? தர்மவான்களா? அதை விடுத்து இந்த பூலோகத்தில் வந்து வழக்குத் தொடுக்க வந்த காரணம் என்ன? வழக்கின் விபரத்தையும் கூறுங்களேன்.

அரிதப்பழசான காற்றாடி ஒன்று சுற்றுவதா வேண்டாமா என க்ரங் க்ரங் என்றபடி சுற்றிக் கொண்டிருக்க, தாமரைப்பூவால் விசிறியபடி தொடர்ந்தார் மகாலட்சுமி. கணம் நீதிபதி அவர்களே! ஸ்ரீநிவாசன், மதுசூதனன், வேங்கடநாதன் என 108 திவ்ய நாமங்களால் அழைக்கப்படும் எம் மணநாதன் எடுக்கப்போகும் பத்தாவது அவதாரமாகிய கல்வி அவதாரத்தை எடுக்காதபடி தடை கோரவே வழக்குத் தொடுக்க வந்துள்ளேன்!

கோர்ட்டே சற்று சலசலத்தது...

அமைதி... அமைதி.. அமைதி... என்று கோர்ட்டார் சற்று உரக்கக் கூறி விட்டுத் தொடர்ந்தார்...
அம்மா... நீங்கள் தொடருங்கள் என்று கூறித் தன் கருப்பு அங்கியைச் சரிசெய்து கொண்டார்.

மேலோகத்தில் நீதிமான்களா? ஹா.. ஹா.. பேருக்குக் கூட இல்லை. இதுதான் உண்மை. அங்கு பெண்களுக்கு மிகவும் அநீதி இழைக்கப்படுகிறது. ஆனால் இப்பூவுலகில் பெண்கள் போற்றப்படுகிறார்கள்; அவர்களது உரிமை பாதுகாக்கப்படுகிறது என நாரதர் சொல்லிக் கேள்வியுற்றேன். பெண்ணாகிய தாங்கள் நீதிபதியாய் அமர்ந்திருப்பதே அதை உறுதி செய்கிறது. ஆகவே எனக்கும் தகுந்த நீதி கிடைக்குமென வழக்குத் தொடுக்க இங்கு வந்துள்ளேன். பெண்ணின் மனசு பெண்ணுக்குத் தானே புரியும்.

அப்போது வெடுக்கென எழுந்த அரசாங்க வழக்குரைஞர் தன் மேல்கோர்ட்டை இருகரத்தால் பிடித்தபடி அம்மா, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். பிரம்மா கலைமகளுக்குத் தன் நாவிலும், பெருமாள் அலைமகளாகிய தங்களுக்குத் தன் இதயத்திலும், ஈசன் மலைமகளாகிய உமைக்குத் தன் இடபாகத்தையே தந்தார்கள் அல்லவா? என்று குறுக்கிட்டார்.

தமிழ் ஓவியா said...


வாயில் வெற்றிலை சீவல் போட்டபடி, சுமார் அய்ம்பது வயது மதிக்கத்தக்க அவரைப் பார்த்து வழக்குரைஞர் அய்யா, ஒருவர் தருவதும் ஒருவர் பெறுவதும் எப்படி உரிமையாகும்? இது, மாபெரும் சக்தியின் வடிவாகிய நாங்கள் எப்போதும் அவர்களுக்குள் அடக்கம். அதாவது அடங்கியே இருக்க வேண்டும் என்றல்லவா காட்டுகிறது... சரி ஈசன் தான் தன் இடபாகத்தையே கொடுத்தார் என்று திரும்பத் திரும்ப பீத்துகிறீர்களே!? இங்குள்ள சாதாரண மக்களே கொடுக்கும்போது வலக்கையால் தான் கொடுக்கிறார்கள்.

ஒருத்தருக்கு ஒரு பசுமாடு சொந்தமாக இருந்தது. அவர் இறந்ததும் அதை அவரோட இரண்டு பசங்களுக்குப் பங்கு பிரித்தார்கள். எப்படியென்றால்? ஒருத்தருக்கு முன் பாகம், இன்னொருத்தருக்குப் பின் பாகம். அதாவது, ஒருத்தர் அதோட முன் பக்க வாய்க்குத் தீனி போட்டுக்கிட்டே இருக்கணும். இன்னொருத்தர் நோகாம பின் மடியில் பால் கறந்துக்கிட்டே இருப்பார். இது எப்படி இருக்கு. அப்படித்தான் இருக்கு நம்ம ஈசன் செஞ்ச வேலை. ஆசிர்வாதம் பண்ற வலபாகத்தை அவர் வச்சுடுவாராம். மலம் கழுவும் இடபாகம் உமைக்காம். அதான் சொல்றேன் மேலோகத்துல பெண்களுக்கு மரியாதையும் கிடையாது; உரிமையும் கிடையாது.
சரி... சரி... நாங்க பக்கத்து நாட்டு அரசியலையே தலையிட மாட்டோம்.. மேலோகத்து அரசியல் எதுக்கு? பாய்ண்டுக்கு வாங்கம்மா. மக்கள் எல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற, இப்ப வரும் அப்ப வரும்னு நம்பிக்கிட்டு இருக்கிற கல்கி அவதாரத்த ஏம்மா தடை செய்யனும்ணு கேட்கிறீங்க...? சற்று கோபமாகவே கேட்டார் அரசாங்க வழக்குரைஞர்.

தமிழ் ஓவியா said...

இந்த அவதார புருஷன் இருக்காரே, அவர் பாட்டுக்கு லோகத்த ரட்சிக்கிறேன், மக்களக் காப்பத்துறேன்னு பொசுக்குப் பொசுக்குன்னு இங்கு உள்ள சில கணவன்மார்கள் பொண்டாட்டிய விட்டுட்டு ஜாலியா டூர் போறமாதிரி அவதாரம் எடுத்து கிளம்பிடுறார். அதாவது பரவாயில்லை. ஆனா ஒவ்வொரு அவதாரத்துலயும் பெண் இனத்தை மதிப்பதும் இல்லை; அவர்களது உரிமைகளும் பறிக்கப்படுகிறது. மேலும் அவரது தர்ம பத்தினியான என்னையும் நோக அடிப்பதே அவரது வாடிக்கை. காலங்காலமாக பெருமையெல்லாம் பெற்றிருந்தாலும் இழிநிலைக்குத் தள்ளப்படும் பெண்களின் சார்பாகவும்; அதனையே தொடர்ந்து நிலை நிறுத்தப் பார்க்கும் அவதார ரகசியங்களை அம்பலப்படுத்தவுமே இவ்வழக்கைத் தொடுத்துள்ளேன் என்று பணிவோடு தன் வாதத்தை வைத்தார் லட்சுமி.

இப்படி மொட்டக்கட்டையாய் சொன்னால் எப்படி? சற்றுப் புரியும்படி சொல்லுங்கள் தாயே. என்று கேட்டார் நீதிபதி.

பரசுராமன் அவதாரத்துல, அவர் தந்தைப் பேச்சைக் கேட்டு தன் தாய் தலையையே வெட்டினவர்னு உங்களுக்குத் தெரியாதா? அத விடுங்க. கிருஷ்ணவதாரத்துல ஒரு பக்கம் ருக்மணி மறுபக்கம் ராதை. இது போதாதுனு கோபியர்கள். அதுவும் போதாதுன்னு பத்தாயிரம் மனைவிமார்கள் வேற. சொல்லவே நா கூசுது.

சட்டென குறுக்கிட்ட அரசாங்க வழக்குரைஞர் தாயே! கிருஷ்ண அவதாரத்துல, அவரே நேர்ல தோன்றி சீலை கொடுத்து பாஞ்சாலி மானத்தைக் காப்பாத்தினவராச்சே.. அந்த ஒரு காரணத்திற்காச்சும்... அவர தூசிக்காம இருக்கலாம்ல...

அட மங்குனி வழக்குரைஞர் அய்யா! துரியோதனன் தனது அண்ணியின் சீலைய உருவச் சொல்லி மானபங்கம் படுத்தினானாம்... உங்க பரமாத்தமா வந்து சீலைய கொடுத்து மானத்தக் காப்பாத்தினாராமாம்... கேட்கிறவன் கேனயனா இருந்தா கொசு ஹெலிகாப்டர் ஓட்டுதுன்னு புரூடா விடுவாங்க... உங்களுக்குப் புத்தி இல்லையா?

வழக்குரைஞர் திருதிருவென முழிக்கலானார்.

துரியோதனன் எப்படிப்பட்டவன்னு தெரியுமா? தன் மனைவியின் முத்து மாலைய கர்ணன் கை தவறி அறுத்திட்டப்ப, நண்பா! எடுக்கவா கோர்க்கவானு நிதானமாகக் கேட்டவன். தன் மனைவிய சந்தேகப்படாத உத்தமன். அவன் எப்படி தன் அண்ணிகிட்ட அவசரப்பட்டுத் தரக்குறைவா நடப்பான். அவன் சீலைய பறிக்கச் சொன்னான்னா நீங்க ஊலுஊலுன்னு தலையாட்டுறீங்க.

தமிழ் ஓவியா said...


நீதிமன்றத்தில் அனைவரும் கண்ணிமைக்காது கேட்கலாயினர். மகாலட்சுமி மேலும் தொடர்ந்தார்... நம்ம ஆபத்பாண்டவர் இருக்காரே அவர் லட்சணம் தெரியுமா? கோபியர்கள் குளிக்கும்போது அவர்கள் ஆடைய எடுத்து வச்சுக்கிட்டு, கோபியர்களே! வெட்கத்தைக் களைத்துவிட்டு நீரிலிருந்து மேலே வாருங்கள்னு சொல்லி நிர்வாணமா வரச்சொல்லி ஆடை கொடுத்த கிருஷ்ணர்... பாஞ்சாலிக்கு மானம் போகக்கூடாதுனு சீலைய கொடுத்தாராம்...

இதையும் நீங்க கேட்டுட்டு ஊலுஊலுன்னு தலையாட்டுறீங்க.... போங்கப்பா போங்க.

அம்மா! நீங்க சொல்றதெல்லாம் சரின்னே வச்சுக்கிடுவோம். பின்ன ஏன் பாஞ்சாலி சீலைய துரியோதனன் துச்சாதனனை விட்டு களையச் சொல்லனும்? என்று வழக்குரைஞர் அய்யா கிடுக்கிப்பிடி போட.

லூசாயா நீங்க! மன்னிக்கணும் கோர்ட்டார் அவர்களே... என் உள்ளக்கொதிப்பால் வக்கீலை அப்படிக் கூறிவிட்டேன். என்ன சொல்ல? காலங்காலமாய் இந்த இதிகாசக் குப்பைகளால், புராணப் புளுகுகளால் உங்கள் அறிவு மழுங்கடிக்கப்படுகின்றது... நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். சரி, பொறுமையாய்ச் சொல்கிறேன்... இங்க உள்ள படிச்சவங்க -_ மேதைகள் இந்த சமூகத்தின் நலனில் அக்கறை உள்ளோர் எல்லாம் சொல்றது என்ன? ஜாதிகள் இல்லைனு ஆனால் கீதையில கிருஷ்ணர் என்ன சொல்றார்.... நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்னு சொல்றார் அவரா பேதமற்றவர்?

தமிழ் ஓவியா said...

ஒருத்தர பிறப்பினால உயர்ந்தோர் தாழ்ந்தோர்னு சொல்றது நாகரீக சமூகத்துல எவ்ளோ கேவலமானது... பிறப்பு தெரியலனு தானே கர்ணன ஒதுக்கி வைச்சாங்க... ஆனா அவன் குணமறிந்து, பண்பறிந்து கர்ணனத் தூக்கிப்பிடிச்ச துரியோதனன் சிறந்தவனா இல்லையா?

உயர்ந்த ஜாதி எப்போதும் உயர்ந்த ஜாதியா இருக்கணும் தாழ்ந்த ஜாதி எப்போதும் தாழ்ந்த ஜாதியா இருக்கணும் இதுதானே நம்ம பரமாத்வோட உயர்ந்த லட்சியம்... இவரப்போயி நீங்க அனாத இரட்சகர்னு சொல்றீங்க...

சரி சொல்லிவிட்டுப் போங்க, போராட்டமே என்னனு தெரியாதவங்களுக்கு புரட்சி சூறாவளி புரட்சிக் கனல்னு பட்டம் கொடுக்கிறவங்கதான நீங்க. புரட்சிங்கிற சொல்லையே சினிமாக்காரங்களுக்கு பட்டமா கொடுத்து அசிங்கப்படுத்துனவங்கதானே நீங்க...

மேற்படி சம்பவத்துல நடந்தது என்னனா? பெண்ணுக்குச் சம உரிமைனு நீங்க குரல் கொடுக்குறிங்க... ஆனால் தர்மர்னு புகழப்படுறவர்... தன் மனைவியைத் தனக்கு உரிமையவள்... தனக்கு உரியவள்னு கருதாம தன் உடைமைனு கருதி சூதுல அடகுவைக்கிறார்.

நம்ம ஆபத்பாண்டவர், அவளை அடகு வைக்கும்போது வந்து தர்மருக்கு ரெண்டு கொடுப்புக் கொடுத்திருந்தார்னா நான் சபாஷ் போட்டுருப்பேன்... ஆனா அவர் வரலையே! இத்தனைக்கும் பாஞ்சாலி அவருக்குத் தங்கச்சி முறை. ம்... என்று பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தார்.

தமிழ் ஓவியா said...


அடிமைகள் மேலாடை உடுத்தக்கூடாதுனு அந்தக் காலத்து விதி... மேல்ஜாதி தெருவுக்குள்ள போகும்போது சட்டை இல்லாமதான் போகணும் மேல்துண்ட இடுப்புல கட்டிக்கணும்னு இங்க நடைமுறைல நாம பார்த்ததுதான்... இப்பவும் கூட நம்ம வழக்குரைஞர் அய்யா பெரிய கோயிலுகளுக்குப் போனா அவரு சட்டையையும் கழட்டிட்டு உட்றாங்களே... என்று லட்சுமி சொல்ல, நீதிமன்றத்தில் கலகலப்பு கூடியது. அங்கு பார்வையாளர் பகுதியிலிருந்த ஒரு கருப்புச்சட்டைக்காரர் விசில் அடிக்க, அவரைக் காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

இதையெல்லாம் வேடிக்கையாகப் பார்த்து ரசித்த லட்சுமி தொடர்ந்தார். கிருஷ்ணர் சீலைய கொடுத்தது... பாஞ்சாலி சத்ரிய குலத்திலிருந்து அடிமைக் குலமா தாழ்த்தப் படக்கூடாது... எப்பவும் உயர் ஜாதி அந்தஸ்துல இருக்கணும்னு தான்... அவர் காக்க விளைந்தது நீங்க நினைக்கிற மாதிரி பாஞ்சாலி மானத்த இல்ல _ குல மானத்தை... என்று கூற... அவையோர் எல்லாருக்கும் தலையே சுற்றியது...

நீதிபதி, இதற்கு மேல் தாங்காதென்று வழக்கை மறுநாளைக்கு ஒத்தி வைத்தார்...

மறுநாள் நீதிபதியே தொடர்ந்தார்... அம்மா! நீங்கள் சொன்ன விஷயம் நேற்று என்னைத் தூங்கவிடவில்லை... இரவெல்லாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன்... மற்ற ஏனைய அவதாரங்களை விடுங்கள். இராமவதாரத்தை எண்ணிப் பார்க்கும் போது, உங்கள் குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இந்த உலகுக்கே வாழும் நெறியைப் போதித்தவர் அல்லவா! அந்த ஒன்றிற்காகவே அவரை வாயாரப் புகழலாம் இல்லையா?

தமிழ் ஓவியா said...

கணம் நீதிபதி அவர்களே! கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்... இராமன் ஏக பத்தினி விரதன் என்றால் உங்கள் கணவர் என்ன ஏகப்பட்ட பத்தினி விரதரா? என்று லட்சுமி கேட்க...
இல்லை இல்லை என்று பதறிப்போய் தலையாட்டினார் நீதிபதி. அவையில் குசுகுசுவென நகைப்பொலி எழுந்தது....

பத்து அவதாரத்தில் ஒன்றில் மட்டும் ஏகப்பத்தினி விரதனாய் இருந்த என் கணவரைவிட உங்கள் கணவரே சிறந்தவர்... இல்லையா? நீங்கள் உங்கள் கணவரையே போற்றலாம்; புகழலாம். சரியா? என்று சிரித்தார் லட்சுமி.

மேலும் அவரே தொடர்ந்தார்... அசோகவனத்தில துயரில் உழன்று வந்த என்னைக் கட்டி அணைக்காமல் சந்தேகத் தீயில் இறக்கி வேடிக்கைப் பார்த்தவரை எப்படிப் போற்றுவது? இதற்கு, தன் மனைவியை எள்ளளவும் அய்யுறாத துரியோதனனே மேல் அல்லவா?

இராமன் இருக்குமிடந்தான் சீதைக்கு அயோத்தி என அவருடன் வனவாசம் வந்த என்னை நிறைமாசம் என்றும் பாராமல் வனத்தில் தனியே தவிக்கவிட்டவரை எப்படிப் புகழ்வது? லவகுசன் இருவரை வனத்தில் தனியே வளர்க்க நான் பட்ட சிரமங்கள் போற்றுதற்கில்லையா?

இப்படி எல்லா வகையிலும் நோகடித்துவிட்டு, அவருக்கு மட்டும் ஏகபத்தினி விரதன் என்ற பட்டமும் புகழும்... என்று கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிய நின்றார் லட்சுமி.

அவையே மிக அமைதியானது. நீதிபதியின் கண்களிலும் லேசாய் கண்ணீர் அரும்பத் தொடங்கியது.

அம்மா! கல்வியில் சிறந்த கலைமகள் இருக்க, வீரத்தில் தேர்ந்த மலைமகள் இருக்க, தாங்கள் மட்டும் வழக்குத் தொடுக்கவந்த நோக்கமென்ன? என்று கோர்ட்டார் வினவ...

அவர்கள் இருவரும் என் கருத்துக்கு மாற்றுக்கருத்து உடையோர் அல்லர். ஆயினும் பெண் விடுதலை என்பது, பெண்கள் என்னதான் கல்வியில் தேர்ந்தவராயினும், வீரத்தில் சிறந்தவராயினும் பொருளாதாரச் சுதந்திரத்தால்தான் கட்டமைக்க முடியும் என்பதை உணர்த்தவே நான் வந்தேன்.

லட்சுமி சொல்லிக்கொண்டு இருக்கையில், நீதிபதியின் பேனா, கல்கி அவதாரத்திற்கு இடைக்காலத் தடை என்று எழுதிக் கொண்டிருந்தது.

தமிழ் ஓவியா said...

காரிருள் காமகே(கோ)டிஅன்று
வேலைக்குச் செல்லும் பெண்கள்
ஒழுக்கமற்றவர்கள் - என்று
உளறிக் கொட்டிய ஒழுக்கக் கேடர்!
இன்று
கண்ணில்லாத உடல்
மோட்சமடையாது
அதனால்,
கண்தானம் கூடாது - என்று
செயந்திரர் சொல்கிறார்.
அறிவுக் கண்ணற்ற
அறியாமைக் குருடன்
வாழ்க்கை நெறியற்ற
வருணாசிரம மூடன்.
மாந்தநேய மற்றவன்!
உயிர்நேயம் கொண்டு
உடல் கொடையும்
ஈகம் செய்யும் நாளில்
விடம் கக்கும்
மடத் தலைவன் நீ.
பெண்ணடிமை பேசும் பேதையே!
மடமை தவிர்த்து - பொது
உடைமை காணும்
கடமையோடு வந்திருக்கிறோம்
காரிருள் காமகோடியே
கதிரொளியாய் பெரியார்
விலகிப் போ...
விடியல் வந்திடும்

- பெ.குமாரி, சண்முகாபுரம், புதுச்சேரி

தமிழ் ஓவியா said...

சிறந்த நூலில்இருந்து சில பக்கங்கள்


நூலின் பெயர்: சாதி முறையைத் தகர்க்க இயலுமா?

ஆசிரியர்: டி.ஞானையா

வெளியீடு: விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை--41. செல்பேசி: 9444265152

பக்கங்கள் : 184 விலை ரூ. 150/- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்; 92 வயதிலும் ஓயாது உழைப்பவர்; 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவுடைமைக் கொள்கையைக் கடைப் பிடித்து வருபவர் டி.ஞானையா.இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி முக்கால் நூற்றாண்டைக் கடந்த நிலையில், அதுகுறித்த ஆழ்ந்த சிந்தனைகளைத் தயங்காது வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் வெளிவந்த இவரது நூல்களில் மிக முக்கியமான நூலாக இந்நூல் கருதப்படுகிறது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் பார்க்கத் தவறிய பார்வைகளை இந்நூல் முன்வைத்துள்ளது.அவற்றிலிருந்து சில பக்கங்கள் இங்கே...

இந்திய தலித்துகளால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் சமூகப் பொருளாதார அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காடிலாக் காரில் பயணம் செய்யக்கூடிய கறுப்பினக் கோடீசுவரர்களைக் கொண்ட நீக்ரோ குடியினர் அதிகரித்திருப்பதை நீக்ரோ இதழான எபோனி பெருமையுடன் சுட்டிக் காட்டுகிறது. உயர்குடிப் பெண்கள் பங்கேற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை அனுப்புகின்றனர். வெள்ளையர்களைப் போலவே தங்கள் இனத்திலுள்ள அடித்தட்டு மக்களை வெறுக்கின்றனர். கறுப்பின முதலாளிகள் குறித்துக் கறுப்பின எழுத்தாளரான பிரைசர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். புதிய நீக்ரோ மத்திய தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது எனவும் அது வெள்ளையர்களின் மத்திய தர வர்க்கத்தைப் போலவே செயல்படுவதாகவும் எபோனி குறிப்பிடுகிறது. அமெரிக்க அதிபருக்கு அடுத்த வலுவான அரசியல் நிலையில வெளியுறவு அமைச்சர்களாகக் காண்டலிசா ரைசம், அவருக்கு முன் ஜெனரல் காலின் பாவெலும் இருந்ததை நாம் கண்டோம். இறுதியில் ஆப்ரிக்கக் கென்ய வம்சாவழித் தோன்றல் ஒபாமா இரண்டாம் முறையாக அதிபராகியுள்ளார். வரும் காலங்களில் மேலும் பல ரைஸ், பாவல் மற்றும் ஒபாமாக்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். சுய மரியாதையுள்ள எந்தவொரு நீக்ரோவும் சாதாரண சிகரெட்டைப் புகைக்க மாட்டார் என எபோனி (ணிதீஷீஸீஹ்) சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் இது ஒரு அர்த்தமுள்ள விமர்சனமாகும்.

தமிழ் ஓவியா said...

**

மார்க்சிய இயக்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கிய டு போய்ஸ் எதிர்கொண்ட இனப் பிரச்சனை சாதிப் பிரச்சனைபோல வரலாற்றுப்பூர்வமானதும் சிக்கலானதுமாக இருக்கவில்லை. இனப் பிரச்சனையைக் காண்பதும் புரிந்து கொள்வதும் ஆராய்வதும் தீர்வுக்கான வழிவகுப்பதும் சுலபம். அதனால் டு போய்ஸ் மார்க்சியத்தோடு சமாதானமாகப் போக முடிந்தது. விடுதலைக்கான கறுப்பர் போராட்டம் வர்க்கப் போராட்டத்தோடு சுலபமாக இணைய முடியும். வெள்ளை இனத்தின் கம்யூனிஸ்டுகள் தமது இன அடையாளத்தை வீசி எறிந்து விடுவது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவிலோ மார்க்சியர்களும் கம்யூனிஸ்டுகளும் தமது சாதி சமூகத்தில் - ரத்த உறவுகளால் பிணையப்பட்ட வேர்விட்டுப் படர்ந்த மரபுகளில் வாழ்ந்தனர். அவர்கள் ஒரே சாதியைச் சார்ந்து அந்த சாதியின் அனைத்து சமூக பழக்கங்களையும் கடைப்பிடித்தனர். மரபுகள் சுலபமாக அழிவதில்லை. சாதிய மனோபாவம் உணர்வின் எல்லைக்கு அப்பாலும் இயங்குகிறது. உணர்வுக்கு அப்பாலானதாகவும் இருக்கிறது. இந்து மதம் முன் வைக்கும் இந்து இறை இயல் மற்றும் இந்து பண்பாடு மற்றும் நாகரிகம் போன்றவற்றுக்கு இதுவே அடிப்படை.

**

அம்பேத்கர் மார்க்சியத்தை விரிவாகக் கற்றவர், அதனை ஆதரித்தவர், ஆனாலும் தனியானதொரு தொழிலாளர் கட்சி ஒன்றை அவர் தொடங்கினார். சாதிப் பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் இணைந்து வர வேண்டுமென விரும்பினார். எல்லா விதமான சமூக மாற்றங்களுக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே கருவியாகும் என்ற நிலையைக் கம்யூனிஸ்டுகள் எடுத்த காரணத்தால், தொழிலாளி வர்க்கப் பிரச்சனைகள் சிலவற்றில் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து நின்றாலும் ஒரு தவிர்க்கவியலாத பிளவு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை வர்க்க முரண்பாடுதான் அடிப்படையானது. பிற அனைத்துச் சமூக முரண்பாடுகள் மீதும் அது தலையிடுகிறது. தனது செல்வாக்கைச் செலுத்துகிறது. அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், உயர்சாதி மற்றும் உயர் வர்க்கங்களால் தலைமை தாங்கப்படும் பல வர்க்க அய்க்கிய முன்னணியைக் கட்டுவதற்கு உந்தித் தள்ளியது. இந்த அடிப்படை நிலையை ஒட்டியே பிற அனைத்துப் பிரச்சனைகளும் அணுகப்பட்டன. இதன் காரணமாக, அம்பேத்கரிடமிருந்து மட்டுமல்லாது பெரியார் மற்றும் ஜோதிபா பூலேவின் சத்திய சோதக் மண்டல் ஆகியவற்றிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் விலகி நிற்க நேர்ந்தது. அவர்கள் ஏகாதிபத்திய ஆதாரங்கள், தேச விரோதிகள் எனப் பலவாறாக தூற்றப்பட்டனர். அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டுகளுடனும் மார்க்சியர்களுடனும் மிகவும் கசப்படைந்தார். மார்க்சியத்தை வறட்டுத்தனமாகவும் இயந்திரகதியாகவும் பயன்படுத்தியதன் விளைவாகப் பிரிவு விரிசலாகிப் போனது.

**

இன அடிப்படையிலான இந்து தேசியம் அல்லது இந்துத்துவா முன்னோடிகளான திலகர், மாளவியா-, ஸ்ரதானந், லஜபதிராய் போன்றவர்கள் மூலம் சாதி மேலாண்மை இணைக்கப்பட்டது. இந்த உயர் சாதியினர் தம்மை ஆரியர்கள் எனப் பெருமையோடு அழைத்துக் கொண்டனர். இந்து மதத்தின் அதாவது இந்திய நாகரிகத்தின் மைய அடித்தளமாக வேதங்களும் சமஸ்கிருதப் புராதன இலக்கியங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. இதன் விளைவுதான் இந்திய தேசிய காங்கிரஸ் (1885), அதன் உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர் என பலரும் உயர்சாதிக்காரர்களாகப் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தனர். இதில் பெரும்பாலோர் நில உடைமையாளராகவும் இருந்தனர். இந்திய தேச வாதம் என்பதைக் கட்டியவர்களில் மிகப் பெரும்பான்மையோர் இப்படித்தான் இருந்தனர்.

**

தமிழ் ஓவியா said...


கி.பி. 12ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சூத்திர ஞானிகள், கவிஞர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களான குருநானக், கபீர், சொக்கமேளா, துக்காராம், துளசிதாசர் போன்றோர் தோன்றினர். அவர்களில் பெரும்பாலோர் சனாதன தருமத்தையும் வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்து ஒற்றைக் கடவுள் கோட்பாட்டைப் போதித்தனர். அவர்கள் பிராமணியத்தைப் புறம தள்ளி சமத்துவத்தையும், பொதுவான அன்பையும் வலியுறுத்தினர். தமிழ்ச் சித்தர்கள் தமது புகழ்பெற்ற பாடல்களின் மூலம் சமுதாயத்தைப் பற்றிய உண்மை நிலையை வெளிக்கொணரும் பகுத்தறிவுக் கருத்துகளை முன் வைத்தனர். அத்தகைய மூலதத்துவப் போக்குகள் பாடநூல்களிலிருந்து திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டன. சாருவாகர்களுக்கும் அவர்களுடைய உலகாயதக் கருத்துகளுக்கும் எங்கும் இடமில்லை. இடைக்காலத்தைச் சேர்ந்த சூத்திரத் துறவிகள் பற்றி பாடத் திட்டங்களில் எதுவுமில்லை. நமது குழந்தைகள் பிராமணியக் கண்ணோட்டத்திலான அறிவை மட்டுமே பெறுகின்றனர்.

அதனை மறுத்த சூத்திரர்கள் மற்றும் தலித்துகளின் இலக்கியங்களிலிருந்து எதனையும் பெறவில்லை.

**

அம்பேத்கரின் இந்துமதம் குறித்த புதிர்களும், இராமர், கிருஷ்ணரைப் பற்றிய புதிர்களும் என்ற நூல் அனைத்து மாநிலப் பாடநூல்களிலும் ஏன் இடம் பெறவில்லை? இராமாயணத்தைப் பற்றிய பெரியாரின் விமர்சனமும், அறிவியல் மற்றும் பகுத்தறிவு குறித்த சிங்காரவேலரின் நூல்களும் ஏன் மாணவர்களிடம் கொண்டு செல்லப்படவில்லை? அம்பேத்கர், பூலே, சாகுமகராஜ் மற்றும் பெரியாரை தேசியத் தலைவர்களாக உருவாக்கும் உணர்வு பூர்வமான மாற்றைக் கட்டமைக்க உ.பி.-யில் மாயாவதி முயற்சித்தார். அம்பேத்கர் மற்றும் பிற தலித், சூத்திரத் தலைவர்களுக்குப் பெரும் நினைவுச் சின்னங்களை அவர் எழுப்பினார். ஆகப் பெரும்பகுதியான மக்களாக உள்ள தலித்துகளாலும், சூத்திரர்களாலும் அவர்கள் மரியாதை செய்யப்படவில்லையா? லக்னோவில் பெரியாரின் சிலையை நிறுவியது வட இந்தியாவிலுள்ள மேல்தட்டினரின் கோபத்துக்கு ஆளானது ஏன்? இராமாயணம், மகாபாரதம், மனுஸ்மிருதி குறித்த அவருடைய கருத்தை அடித்தட்டு சாதியினரும் தெரிந்து கொள்ளட்டும், 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் திரேதாயுகத்தில் இராமன் வாழ்ந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அயோத்தியில் அவர் பிறந்த இடத்தை அடையாளம் காட்ட முடியுமா? 9 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியிலோ அல்லது உலகில் வேறு எங்குமோ மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் அவர்களுக்குத் தெரிய வேண்டும். தசரத மன்னனுக்கு 64,000 மனைவிகளும் கிருஷ்ணபிரானுக்கு 1,16,108 மனைவிகளும் ஒரே சமயத்தில் இருந்ததாக மாணவர்களிடம் கூற வேண்டும். இது ஒருவருடைய நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம். இதனை மாணவர்களிடம் கூறுவதற்கு அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்?

கிருஷ்ணபிரானுக்கு எத்தனையோ மனைவிகள் இருந்த போதிலும் அவர் வேறொருவருடைய மனைவியான ராதையுடன்தான் குடும்பம் நடத்தினார். அதை மறைப்பது ஏன்? உங்களுடைய சொந்தப் புனித நூல்கள் கூறும் விஷயத்தில் எதற்காக வெட்கப்பட வேண்டும்? ஸ்

இன்றைய தினம் பிராமணர்களே மிகத் தெளிவானவர்களாகவும், மிகவும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பதையே நமது அனுபவங்கள் காட்டுகின்றன.

பிராமணர்களிடம் சாதிப் பஞ்சாயத்துகளோ, கருணைக் கொலைகளோ ஏதும் நடைபெறுவதில்லை. பிராமணிய மேலாண்மையின் கோட்டையாகத் திகழும் தமிழகத்தில் பிராமணியச் சமூகமே தமது சமூகப் பழக்க வழக்கங்களை வேகமாக மாற்றி வருகிறது. விதவைப் பெண்களுக்கு மொட்டையடித்துக் காவி அல்லது வெள்ளை உடை உடுத்தும் வழக்கத்தைக் கடந்த அய்ம்பதாண்டுக் காலத்தில் அவர்கள் அமைதியாகக் கைவிட்டுவிட்டனர். பிராமணப் பெண்கள் மடிசார் புடவை உடுத்துவதைக் கைவிட்டு விட்டனர்.

குடுமி வளர்ப்பதையும், நெற்றியில் நாமமிடுவதையும் ஆண்கள் விட்டுவிட்டனர். சூத்திரர்களைக் காட்டிலும் தமிழகப் பிராமணர்களிடையேதான் பெருமளவில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. சூத்திரர்களைப்போல பிராமணியக் குடும்பங்களில் கலப்புத் திருமணத்தால் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது குறித்த குற்றச்சாட்டு எதுவும் வருவதில்லை. சூத்திரர்களிடத்தில் இன்னும் சொல்லப்போனால் தலித்துகளிடம் சாதியப் பிடிமானமும், வைதிகச் செயல்பாடுகளும் வலுவாகவும், உறுதியாகவும் உள்ளன. பிராமணர்கள் கடற்பயணம் மேற்கொள்வதைச் சாத்திரங்கள் தடை செய்திருந்தன. ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. தற்பொழுது உலகம் முழுவதும் குறிப்பாக உயர் வேலை வாய்ப்புகளில் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவில் சிலிகான் பள்ளத்தாக்கின் தெருக்களில் உங்களைக் கடந்து செல்லும் மூவரில் ஒருவர் இந்தியப் பிராமணராக இருப்பார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் ஆசிரியர்களாக உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?


- கி.தளபதிராஜ்

பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும் என்று புதிய தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்!தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு பாப்பாத்தி என்றும் ஆண் குழந்தைகளுக்கு அய்யர் என்றும் பெயர் சூட்டியுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அவர்களை எல்லாம் இந்த வியாதிகள் பார்ப்பனர் என்றே கூறுவார்களோ?

திராவிட் என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றா? சைதாப்பேட்டையை ஆங்கிலத்தில் சைதாபேட் என்று கூறுவது போல் திராவிட் என்பது இடத்தைக் குறிக்கும்.

திராவிட என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம். திராவிட என்பது இடத்தைக் குறிக்கும் சொல். திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் திராவிடர் என்பது இனத்தைக் குறிக்கும். தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கலாம். எந்தப் பார்ப்பானாவது திராவிடர் என்று தன்னை சொல்லிக் கொண்டதுண்டா?

தமிழ் ஓவியா said...

மனோன்மணியம் சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர் நீங்கள் என்ன கோத்திரம்? என்று கேட்டாராம். அதற்கு மனோன்மணியம் சுந்தரனார் அளித்த பதில் தன்மானம் மிக்க தென்னாட்டுத் திராவிடன் என்பதே! (மனோன்மணியம் சுந்தரனார் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து) இந்துக்கள், திராவிடர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான், இந்து நாகரீகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. (நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது). மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டினார் என்று கூறும் இவர்கள், தமிழர் அடையாளத்தை அழிக்கவே திராவிடர் இயக்கங்கள் பயன்பட்டதாக நா கூசாது கூறத்துவங்கிவிட்டனர். தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று கூறப்படும் மறைமலை அடிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். ஜாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை. பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர் என்றார்.

இப்படி தாகூரும், மனோன்மணியம் சுந்தரனாரும், மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்கப் பார்க்கிறார்கள்!
பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து நமக்கு விடுதலை தேவைப்பட்டது. அவர்களிடமிருந்து நம் இனத்தைக் காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாளச் சொல் தேவைப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்.
தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை! எந்தக் கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலைத் தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச் சொல்!.

தமிழர் என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள என்றும் பின்னர் திராவிடன் என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும் ஆதாரமாகக் கொண்டு, தம்மையே திராவிடன் என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே தேயம் என்பதுதான் தேசம் ஆனது என்று எந்தப் பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்---_திரமிளர்_-திராவிடர் செய்தியும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர் போராட்டத்தின் (?) விளைவால் அமையப் போகும் தமிழ்த் தேசியத்தை எந்தத் திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில் ஈடுபடுகிறார்களா? தமிழ்த் தேசியம் கூடாது திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்தத் தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் உங்களை இப்படிப் பேசவைக்கிறதா?

தமிழ் ஓவியா said...

திருமணம்


ஒன்னுக்கு
ஒம்பது இடத்துல
ஜாதகம் பாத்து
பத்துக்கு
இருபது பேரிடம்
பொண்ணு எப்படி
மாப்பிள்ளை எப்படினு விசாரிச்சு
கெட்ட நேரம்
நல்லநேரம் பாத்து
சாமிக்குச் செய்யிற
சடங்குல இருந்து,
அர்ச்சகருக்கு
அம்பது நூறுனு அழுது
கண்ணீரும் கவலையுமா
பெத்தவ நிக்கா...
மக வாங்கி வந்த
விவாகரத்த நெனைச்சு!

- ஆல.தமிழ்ப்பித்தன்,
புனல்வேலி

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவர் மக்களைத் திட்டலாமா? - பேரா.ந.வெற்றியழகன்


சொன்ன சொல்லை மறந்திடலாமா?

வாழ்வியல் நெறி வகுத்த வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்தும் அ(றி)றவுரைகள் பலப்பல. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். இன்சொல் கனி போன்றது; அதனையே பேசுதல் வேண்டும். வன்சொல் காய் போன்றது; அதனைப் பேசுதல் கூடாது. இன்சொல் தனக்கும் பிறர்க்கும் இன்பம் தரும்; வன்சொல் துன்பம் தரும். எனவே, மனிதன் எதற்காக வன்சொல் வழங்க வேண்டும்? இக்கருத்தமைந்த குறட்பாக்கள் கீழ்வருபவை;

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று - (குறள்: 100)

இன்சொல் இனி(தீ)ன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது? _ (குறள்: 99)

இவ்வண்ணம், அடுத்தவருக்கு அறிவுரை வழங்கிய வள்ளுவர், சில இடங்களில் கடுஞ்சொல்லை, வன்சொல்லை, தாம் மட்டும் ஏன் வழங்க வேண்டும்? வழங்கலாமா? மக்களைத் திட்டுகிறார். திட்டலாமா? தாம் சொன்ன சொல்லைத் தாமே மறந்திடலாமா? தமது அறிவுரையைத் தாமே துறந்திடலாமா?

என்வழி தனிவழி

திட்டித் திருத்துவது அறுவை மருத்துவம் போன்றது; தந்தை பெரியார், அறுவைச் சிகிச்சை முறை (Surgical Cure) யினையே கையாண்டார். இது, என் வழி - தனி வழி என, வெளிப்படையாக அறிவித்தார். நோயாளிக்கு, துன்பம் _ வலி வந்தாலும் தாழ்வில்லை, நோய் தீரவேண்டும்; ஆள் பிழைக்க வேண்டும் _ இதுதான் என் வழிமுறையின் நோக்கம் _ அடிப்படை என்றும் தெளிவுபடுத்தினார்.

வள்ளுவர் பெரியார் வழியில்

இதே நடைமுறையைத்தான் வள்ளுவரும் அந்தக் காலத்திலேயே கையாண்டிருக்கிறார். திட்டுவது மனிதன் திருந்துவதற்காக; புண்படப் பேசுவது அவன் பண்பட வேண்டும் என்பதற்குத்தான்! மனிதன், மனிதன் போல வாழக்கூடாது; மனிதனாக வாழ்தல் வேண்டும் என்பதற்காகத்தான்.

எப்படி எல்லாம் ஏசுகிறார்?

திருத்த முடியாத மனிதனை, விலங்கு, மரம், மரப் பொம்மை, மண், மண்பொம்மை, பதர், மயிர், பிணம் என்றெல்லாம் திட்டுகிறார்; சாடுகிறார். மனிதன், தன் மேலான நிலை தவறி, இறங்கி, தாழும்போது அவனை மனிதன் எனக் கூறாமல் அவனை இழிபொருள்கள் போலவும், இழிபொருள்கள் ஆகவும் கருதுகிறார்; திட்டுகிறார்.

வள்ளுவர் கையாளும் வழிவகை

திட்டுவதற்குக் கூட வள்ளுவர் இரண்டு வழிவகைகளை மேற்கொள்கிறார். ஒன்று, உவமை. அதாவது அது போலாதல். இரண்டு உருவகம். அதாவது அதுவேயாதல். ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
வழிவகை மி. உவமை _ அது போலாதல்

தமிழ் ஓவியா said...

1. விலங்கு நிலை

அறிவு தரும், பெறும் நூல்களைக் கல்லாது, உருவத்தில் மட்டும் மனிதனாக _ மனிதர்களாக இருப்பவர்களை விலங்குகள் போன்றவர்கள் எனச் சாடுகிறார். அக்கருத்தமைந்த குறள் இது:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ(டு) ஏனை யவர் _ (குறள்: 410)

2. மரம் நிலை பச்சைப் பசுமரம்:

என்னதான் கூரிய அறிவுடையராயினும் மக்கட்பண்பு அவரிடம் இல்லாமல் போனால் அவர்கள் மக்கள் அல்லர்; மரம் போல்வர் என்று சாடுகிறார் வள்ளுவர். அரம்போலும் கூர்மையரேனும், மரம் போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் _(குறள்: 997)

இது உயிர் மரம்: பசுமை மரம். நீ காற்று; நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன் _ என ஒரு திரைநாயகன் தான் மரம் என்பதை எத்துணை வெளிப்படையாக, தயக்கம் இன்றி ஒத்துக்கொள்கிறான் பாருங்கள்!

பட்டுப்போன மொட்டை மரம்

அன்பு எனும் ஈரம் இல்லாது மனிதன் உயிர்வாழ்வது, உள்ளபடியே வறண்ட பாலை நிலத்தில் பட்டுப்போன வற்றல் மரம் தளிர்த்து நிற்பதற்கு ஒப்பாகும். அதாவது, பட்ட (வற்றல்) மரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதுபோல, அன்பு இல்லாத மனித வாழ்க்கை தழைக்காது! இந்தக் கருத்தமைந்த குறட்பா இது: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று _ (குறள்: 78)

மட்கிப் போன மரம்:

உலகியலோடு ஒத்துப்போதல்; அதாவது மற்றவர் உணர்வை மதித்து நிற்கும் நயத்தக்க நாகரிகம் ஆகிய கண்ணோட்டம் இல்லாத மாந்தர் மண்ணோடு மண் ஆகி மட்கிப் போன மரத்துக்கு ஒப்பாவார் என்கிறார் _ இல்லை இழித்துரைக்கிறார் வள்ளுவர்.
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர் _ (குறள்: 576)

தமிழ் ஓவியா said...

3. மண் நிலை உப்பு (உவர்_களர்) மண்:

கல்வியறிவில்லாதவர் எவருக்கும் எந்த வழியிலும் பயன்படாத அவர் உயிரோடு இருக்கிறார் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், வாக்காளர் பட்டியல் அட்டையில், குடும்ப அட்டை (Ration Card) யில் ஓர் எண் (Number) ஆகத்தான் இடம் பெற்று இருக்கிறார். மக்களிடையே அவர் ஓர் உறுப்பினர்(Member) அல்லர். அந்த அளவுக்குத்தான் அவர் மதிப்பு உள்ளது. அத்தகையோர், எதுவும் விளைய முடியாத உப்பு (உவர்-_களர்) மண் போன்றவர் எனத் தாழ்த்திப் பேசுகிறார் குறளாசான். உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். _ (குறள்: 406)

4. மண்பொம்மை நிலை கண்கவரும் மண்பொம்மை:

நுண்மையானவற்றிலும் பருமையானவற்றிலும் (Microcosom amd Macrocosom) உள் நுழைந்து ஊடுருவி ஆராய்ந்து உண்மை காணும் அறிவு இல்லாதவர்களின் அழகு ஒப்பனைப் பகட்டாரவாரம் எல்லாம் மண்ணால் புனைந்த வனப்பான பொம்மையினைப் போன்றதாகும். மனிதன் ஆனாலும்அவன் மண்பொம்மைதான் என்கிறார் வள்ளுவர். ஒரு திரைப்பாடலில் வரும்,
தஞ்சாவூரு மண்ணை எடுத்து
தாமிரவருணி தண்ணியை விட்டுச்
சேர்த்துச் சேர்த்துச் செய்ததிந்தப் பொம்மை
என்ற அடிகளை இங்கு நினைவு கூர்க.

மண் பொம்மை _ அதுவும் பெண் பொம்மை தான் அது. உண்மையான பெண் அல்ல. இதுதான் அக்கருத்தமைந்த குறட்பா.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று _ (பாவை _பொம்மை) (குறள்: 407)

5. மயிர்நிலை மண்ணில் உதிர்ந்த மயிர்

தம் உயர்ந்த பண்பு நிலையிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டால் அவர், தலையிலிருந்து, கீழே மண்ணில் _ தரையில் உதிர்ந்து விழுந்த மயிர் போன்றவர் என்று மிகமிகத் தாழ்த்திப் பேசுகிறார் வள்ளுவர் பேராசான்.

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. _ (குறள்: 964)
மயிர் அத்துணை இழிவா? எனக் கேட்கலாம்.

தமிழ் ஓவியா said...

கண்களா மின்னலா?
கூந்தலா ஊஞ்சலா?
ஆறடி கூந்தல் காலடி மீதில்
மோதுவ(து) என்னடி சந்தோசம்?
என்றெல்லாம் கவிஞர் புகழ்ந்து பாடியுள்ளனரே? அது அத்துணை இழிந்ததா? கவிஞர், தலைமயிரைப் புகழ்ந்து பாடுவர். அது, தரைமயிர். ஆனால்? புறம் தள்ளுவர்; மக்கள் ஒதுக்கி விடுவர். கேட்கலாம், ஒட்டுமுடி (சவரிமுடி)யாகி தலையில் ஏறியிருக்கிறதே, பெருமையல்லவா? _என்று. உண்மை! ஆனால், ஒட்டுமுடிதான்; இயற்கை முடி அல்ல; அது! அதற்கு மேற்கொண்ட வளர்ச்சியும் இல்லை; வாழ்வும் இல்லை!

6. மரப்பொம்மை கயிற்றால் இயங்கும் மரப்பொம்மை

மனத்தின்கண் நாணம் இல்லாதவர்களாய் இருந்து, உலகில் சிலர் நடமாடி வருகிறார்கள் என்றால் அந்த நிலை மரத்தாலாகிய பொம்மை கயிற்றினால் இயக்கப்பட்டு உயிருள்ளது போல மயக்கும் தன்மையை ஒத்ததாகும்.

நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று _(குறள்: 1020)

(நாண் _1. வெட்கம், 2. கயிறு)

வழிவகை மிமி. உருவகம் _ அதுவேயாதல்

1. மறுபடியும் மரம் வலுவற்ற மரம்:

இதற்கு முன், மரம் போலும் மனிதர்களைக் காட்டித் தாழ்த்திப் பேசிய வள்ளுவர் இப்பொழுது, அதுவேயாதல் என்னும் உருவக நிலையில் எடுத்துரைக்கிறார். ஒருவருக்கு வலிமை என்பது ஊக்க மிகுதியேயாகும். அதுவே நிலைத்த வலுவான செல்வம். அவ்வூக்கம் இல்லாதவர்கள் மரங்கள் என்றே கருதப்படுவர். மரங்களுக்கும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மக்களுக்குள்ள தனித் தோற்ற வடிவில் காணப்படுவதேயாகும் என்கிறார் அவர்.

உரமொருவற்(கு) உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு _ (குறள்: 600)

2. பதர் பயனற்ற பதர்:

பயனற்ற வீண்சொற்களைப் பெரிதுபடுத்திப் பேசுபவனை மனிதன் என்று சொல்லாதே! அவன் மக்களிடையே இருக்கும் பதர் ஆவான். பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல் _ (குறள்: 196)

3. பிணம் அவர் இறந்து போனாரே!

அய்யப்பாட்டிற்கு இடமில்லாமல், தம்மை நல்லவர் என்று நம்பிய ஒருவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தவறான ஒழுக்கத்தில் ஈடுபடுபவர் இறந்து போனவரைக் காட்டிலும் வேறானவர் அல்லர். அவர் இறந்தவரே ஆவார்! உயிர் அற்ற வெறும் தசைப் பிண்டம்தான்! என்று இழிவாகப் பேசுகிறார் குறளார். விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்து ஒழுகுவார் _ (குறள்: 143)
(விளிந்தார் _ இறந்தவர். இல் _ மனைவி)செத்தவர் பட்டியலில் சேர்த்துவிடலாம்:
பிற உயிர் படும் துயர் கண்டு தானே அத்துயர் அடைந்தவனுக்கு ஒப்பாக தன்னைக் கருதி செயல்படுபவனே (ஒத்தது அறிபவனே) உள்ளபடியே உயிர் வாழ்பவன் எனப்படுவான்.

இந்த ஒப்புரவுப் பண்பு இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும்கூட அவன் செத்துப் போனவர்கள் பட்டியலிலே (ஜிலீமீ றீவீ ஷீயீ லீமீ பீமீணீபீ) சேர்க்கப்பட வேண்டியவனே ஆவான் என்பது வள்ளுவப் பெருமகனாரின் திருவாய்மொழி.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். _(குறள்: 214)

அதுமட்டுமல்லாமல், அப்படிச் செத்துப் போனவன் வைக்கப்படும் இடம் வீடல்ல; ஊர் அல்ல; பிணத்தைச் சுட அல்லது புதைக்க வைக்கப்படும் சுடுகாடு அல்லது இடுகாடுதான் என்றும் பொருள்படுவது காண்க!

செத்த பிணம் என்ன செய்யும்?

தன் இல்லம் நிறைய பெருஞ்செல்வத்தைச் சேர்த்து வைத்துள்ள ஒருவன், அதனைக் கொண்டு வயிறார உண்டு, அவனும் பிறரும் நுகரவில்லை என்றால் எதுவுமே செய்ய முடியாமல் பிணமாக இருக்கும் செத்தவனே ஆவான் என்றும் திட்டுகிறார் வள்ளுவப் பெருமகனார். வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
_ (குறள்: 1001)

திட்டுவது தேவைதானே?

மனிதனை, விலங்கு, மரம், மரப்பொம்மை, மண், மண்பொம்மை, மயிர், பதர், பிணம் என்றெல்லாம், உவமையாலும் உருவகத்தாலும் மனிதத் தன்மையற்றவனை _ அற்றவரை திருவள்ளுவர் திட்டுவது தேவைதானே? சாடுவது சரிதானே? திட்டுவதன் காரணம் இப்பொழுது நமக்குத் தெளிவாகப் புரிந்திருக்குமே? தவறு செய்தவன் திருந்திட வேண்டும்; தப்பு செய்தவன் வருந்திட வேண்டும்; என்பதற்காகவே திருவள்ளுவர் மனிதனை அவ்வளவு கடுமையாகத் திட்டியுள்ளார். இப்பொழுது சொல்லுங்கள், திருவள்ளுவர் மக்களைத் திட்டலாம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

தேவை : உலகின் மனிதநேயப் பார்வை


உலகின் பல பகுதிகளிலும் போர்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவை மதம், இனம், மொழி, அதிகாரம், பணவெறி, நிலவளம் (எண்ணெய்) போன்ற காரணங்களால் நடக்கின்றன. ஆயுத விற்பனைக்காகவும் போர்கள் உருவாக்கப் படுகின்றன. இந்தக் காரணங்களில் ஒன்றான இனபேதத்தால் இலங்கையில் நடந்த போர் மற்ற எல்லாப் போர்களைவிடவும் கொடூரமானது என்பதை இப்போதுதான் உலகம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.ஆரிய ஹிட்லருக்குப் பிறகு இன்னொரு ஆரிய சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவின் கோர முகத்தை, பச்சிளம் சிறுவன் பாலச்சந்திரன் அம்பலப்படுத்திவிட்டான். ஈழத்தமிழர் போராட்டத்தின் இணையற்ற நாயகன் பிரபாகரனின் மகன் 12 வயதே ஆன பிஞ்சு. அந்தப் பிஞ்சின் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தெடுத்த படம் இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. உலகப் போர்கள் கண்டிராத அடாத அக்கிரமங்களைச் செய்த ராஜபக்ஷேவின் கொடூர மனத்தை உலகம் அறியச் செய்த லண்டனின் சேனல் 4 ஆவணப் பட இயக்குநர் கேலம் மாக்ரே ஈராக்கில் கூட்டுப் படைகளின் போர்க்குற்றங்கள் குறித்து 3 புலனாய்வுப் படங்களை எடுத்தவர். ``இலங்கையில் நடந்த அதிகமான போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை பற்றி உலகுக்குத் தெரியவே இல்லை. எனவே, இது பற்றி நாம் மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது புலனாய்வுப் பத்திரிகையியலின் ஒரு முக்கிய நடவடிக்கை மட்டுமல்ல, என்னுடைய பணிகூட என்கிறார் கேலம் மாக்ரே.

இனவெறுப்பு, பித்தலாட்டம், கொடுங்கோன்மை, நம்பிக்கைத் துரோகம், வஞ்சகம் என என்னென்ன தீய குணங்கள் உண்டோ அத்தனையும் கொண்ட ஒரே மனித(?)மிருகம் ராஜபக்ஷேவின் சிங்கள அரசு வழக்கம்போல சேனல் 4 எடுத்த இந்தப் படத்தைப் பொய்யானவை என்று கூறியுள்ளது. ஆனால், இதனை மறுத்துள்ள கேலம் மாக்ரே, ``படுகொலைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் ஆகியவற்றைக் காட்டும் காட்சிகள், படங்களை போரன்சிக் டிஜிட்டல் இமேஜ் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஒரு முன்னணி தடயவியல் மருத்துவர் ஆகியோரை வைத்து நன்கு ஆராய்கிறோம். டிஜிட்டல் நிபுணர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஆய்வு செய்கிறார்கள். அதில் ஏதேனும் வெட்டி ஒட்டும் வேலைகள் செய்யப்பட்டுள்ளதா, மாறுதல் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஒளியின் திசை, பிம்பத்தில் குளறுபடி ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தார்கள். அதில் எந்த ஏமாற்று வேலையும் செய்ததற்கு ஆதாரம் இல்லை. இடங்கள், தேதி, காட்சிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டும் பார்த்துக் கொண்டோம் என்று கூறும் அவர் அதன் பின்னரே இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல்படம் எடுக்கும்போது இலங்கைக்கு நேரில் சென்று வந்துள்ள மாக்ரே அங்கு சிலரைச் சந்தித்துள்ளார். இதனையடுத்து அயல்நாடுகளுக்குத் தப்பிவந்த சிலரைப் பார்த்துப் பேசியுள்ளார். வெளிப்படையாகப் பேச மறுக்கும் அவர்கள் இலங்கையில் வாழும் தங்களின் உறவினர்களை எண்ணி அஞ்சுவதாகக் கூறுகிறார். சிங்கள அரசின் அராஜகங்களைப் பேசும், எழுதும் சிங்களப் பத்திரிகையாளர்களே கொல்லப்படும் போது, காணாமல் போகும்போது தமிழர்கள் எப்படிப் பேச முன்வருவார்கள்?

தமக்குக் கிடைத்த காட்சிகள் பலவற்றைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு மனதை நெகிழவைப்பது என்று கூறியுள்ள மாக்ரே, ``இறந்து போனவர்களை விட வாழ்பவர்களைக் காண்பதுதான் மிகத் துயரமான அனுபவமாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே.. அது அதைவிடக் கொடுமையானது என்கிறார்.

``உலகத்தின் மனசாட்சி இறுகிவிடவில்லை என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் நம்பிக்கை மிச்சம் உள்ளது. போரின் கடைசிக் கட்டத்தில் நடந்தது என்ன என்று இன்னமும் முழுவதும் தெரியவில்லை. சில சர்வதேச சுதந்திரமான விசாரணைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பதில்களைத் தேடுகின்றோம். ஆனால் பத்திரிகையாளர்கள் உண்மையைத் தேடும் பணியைத் தொடங்கவே முடியும். எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாது.

எல்லா போர்களும் மோசமானவை. ஆனால், இந்த அளவுக்குக் கொடுமைகள் எதிலும் நடக்கவில்லை. நான் பல போர்கள் பற்றி செய்தி சேகரித்துள்ளேன். சில பொதுவான அம்சங்கள் இருக்கும்தான். போர் முடிந்தபின்னால் சாதாரண மக்கள் யாருமே சாகவில்லை என்றார்கள். இப்போது பல்லாயிரம் பேர் இறந்தார்கள் என்று ஒப்புக் கொள்கிறார்கள். மெதுவாக உண்மை அவர்களைச் சுற்றி வளைக்கும். எங்கள் ஆதாரங்களை நாங்கள் பரிசோதித்துள்ளோம்.

தமிழ் ஓவியா said...

உண்மையில்லாத எதையும் எங்கள் படத்தில் சேர்க்கவில்லை. இது பயங்கரமான போர். அதிலும் கடைசி சில மாதங்கள் மிகக் கொடுமையானவை. அமைதியும் சமாதானமும் திரும்ப வேண்டு மானாலும் உண்மையும் நீதியும் தேவை. பன்னாட்டு மக்கள் சமூகம் ஒரு பாடத்தை நிச்சயம் கற்றுக் கொள்ளும் என்று நினைக் கிறேன். அய்.நாவும் சர்வதேச சமூகமும் இப்போரைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டன. அய்.நாவின் ஒவ்வொரு உறுப்பு நாடும் ஏற்றுக்கொண்ட அடிப்படைக் கடமை பாதுகாக்கும் பொறுப்பு. அதைச் செயல்படுத்துவதில் அனைவரும் தவறிவிட்டனர். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தவிர்க்க வேண்டுமென்பதை உலக சமூகம் உணர வேண்டிய நேரம் இது, என்று அந்திமழை (மார்ச் 2013) மாத இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் ஆணித்தரமாக தனது படத்துக்கான வாதங்களை அடுக்கியுள்ளார். கேலம் மாக்ரேயின் இந்த வலிமை வாய்ந்த ஆயுதத்தை ராஜபக்ஷே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தை மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் பல நாட்டு மக்களின் கோபம் சிங்கள அரசின் மீது திரும்பியுள்ளது.

இதன் உச்சமாக இலங்கை மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வர இருக்கிற நிலையில், அய்.நா. மனித உரிமைகள் ஆணையமே இலங்கை மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

38 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை கடந்த (பிப்ரவரி) மாதம் 11 அன்று நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் சமர்ப்பித்தார். இலங்கையின் போர்க் குற்றங்கள், தற்போது இலங்கை செயல்படுத்தி வரும் திட்டங்கள் உள்பட அதில் கூறப்பட்டு உள்ள சில முக்கிய விவரங்கள் இவை:- இலங்கையில் போர் நடந்த சமயத்தில் பெரியவர்களும், சிறுமிகளுமாக பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு சரியாகச் செயல்படுத்தவில்லை.

இந்த நிலையில், அங்கு போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஏன் திரும்பப் பெறப்படவில்லை? அதிகாரிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இருப்பார்களா? அல்லது வெளியேறிவிடுவார்களா? என்று அறிவிக்கப்படவும் இல்லை. மேலும், அவர்கள் அரசு நிர்வாகத்திலும் பங்கெடுத்து வருகிறார்கள். சிறுபான்மைத் தமிழர்கள், நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

ராணுவம் வாபஸ் பெறப்படாததுடன், மேலும் மேலும் ராணுவம் குவிக்கப்படுவதாலும், அதிகாரிகள் நிர்வாகத்தில் ஈடுபடுவதாலும், அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்கார அச்சம் நிலவுகிறது. பொதுமக்களும் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்துடன் உள்ளனர். உள்நாட்டுப் போருக்குப்பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன்றவை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல் திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. சிறுபான்மைத் தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிறையச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மனித உரிமைகள், மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தும் பணியை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. இலங்கை அரசு நியமித்த குழு சமர்ப்பித்த (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே இலங்கை அரசு நிறைவேற்றி உள்ளது. ஆகவே, சில பரிந்துரைகளைச் செயல்படுத்தும்படி இந்த ஆணையம் இலங்கைக்கு வலியுறுத்துகிறது. 2006-இல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையினரான தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம்.

போருக்குப் பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.- - இது அய். நா. மனித உரிமை ஆணைய அறிக்கை தரும் சில தகவல்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை சிங்கள ராஜபக்ஷே அரசு பதில் கூறவில்லை.

இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள டெசோ அமைப்பு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்வைத்து இயங்கி வருகிறது; இந்திய அரசை அசைத்துப் பார்த்துள்ளது.
டெசோ சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கருத்தரங்கம் 7.3.2013 அன்று டில்லியில் நடைபெற்றது. கருத்தரங்கில், டெசோ உறுப்பினர்கள் தி.க.தலைவர் கி.வீரமணி,தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின்,திராவிட இயக்கதமிழர் பேரவை சுப.வீரபாண்டியன்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத்,ஞானதேசிகன்,சுதர்சன நாச்சியப்பன்,என்.எஸ்.வி. சித்தன்,ராம்விலாஸ் பஸ்வான் அவர் களின் லோக்தளக் கட்சி செயலாளர், சரத்பவாரின் தேசியவாதி காங்கிரஸ் சார்பில் மாநிலங்கள் அவை உறுப் பினர் சுப்ரீயா சூலு, டாக்டர் ஷாபீர், தேசிய மாநாட்டுக் கட்சியினர், மனித உரிமை அமைப்புப் போராளி சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிகழ்த்திய உரையின் சுருக்கம்:

தமிழ் ஓவியா said...

இந்தக் கூட்டமானது தமிழ் ஈழ ஆதரவாளர்களால் கூட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு சகோதரத்துவம், மற்றும் மனித நேயத்தின் அடிப்படையில், இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவினால் அரங்கேற்றப்பட்டுள்ள அராஜகத்தை, சொந்த நாட்டுக் குடிமக்கள் மீதே அரசு இயந்திரத்தை ஏவிவிடப்பட்ட கொடுங்கோன்மையை, போர்க் குற்றத்தை, ஆய்வு செய்து அதற்கான ஒரு தீர்வை அளிக்க வேண்டும். அது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாம்! அந்தக் கூற்றின் பின்னே ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார் ராஜபக்ஷே!
இன வேறுபாட்டின் காரணமாக, இலங்கையின் மக்கள்தொகையின் ஒரு பகுதியை, கொத்துக்கொத்தாக, முற்றிலுமாக அழித்து ஒழிப்பதுதான், இறையாண்மை உள்ள நாட்டின் செயலும் உரிமையும் என்று கொள்ளலாமா? அது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. அது ஒரு திட்டமிட்ட, வெளிப்படையான இன அழிப்பு. இறையாண்மை கொண்ட நாடுகள்கூட பன்னாட்டுச் சட்ட விதிகளுக்குட்பட்டுச் செயல்பட வேண்டியவைதான்.

தமிழ் ஓவியா said...


சிங்கள அரசின் உச்சகட்டக் கொடுமையை, போர்க் குற்றங்களை, மனிதத் தன்மையற்ற செயல்களை உலகிற்கு எடுத்துக் கூற விழைந்த எத்தனையோ சிங்கள மனிதாபிமானிகளும், இதழாளர்களும், சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். சிலர், கண்டுபிடிக்க இயலாத அளவிற்குக் காணாமல் அழிக்கப்பட்டுள்ளனர்.

2009இல் இலங்கையின் கடைசித் தாக்குதல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன், அங்கு பணியிலிருந்த அய்.நா. சபையின் அதிகாரிகள் ராணுவத்தால் காலி செய்யச் சொல்லப்பட்டுள்ளனர். அதன் மூலம் அய்.நா. அதன் கடமையைச் செய்யத் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பாதுகாப்பு ஆணைகளையும் நிறைவேற்ற முடியவில்லை.

உலக அரங்கில், இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களால், அய்.நா., ராஜபக்ஷே அரசால் நிறைவேற்றப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்குமாறு சுதந்திரமான மூன்று சட்ட வல்லுநர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்தது. அதன் அறிக்கை ஒரு நடுநிலையானதாகவும் முழுமையானதாகவும் உள்ளது.

அது இலங்கை அரசு, சொல்லிக் கொண்டிருப்பதற்கு முரணாக நிகழ்வுகள் உள்ளன. காப்பாற்றும் முயற்சியில், ஒரு உயிருக்குக் கூட இழப்பேற்படாத முறையில் செயல்பட்டதாக ராணுவம் கூறுகிறது. உண்மையில் பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தையும், பன்னாட்டு மனிதநேயச் சட்டத்தையும் ராணுவமும் புலிகளும் புறந்தள்ளி உள்ளனர்.

போர் நடந்தபொழுது, அய்.நா. சபையின் செக்ரட்டரி ஜெனரல் பான்- கீ மூன், ஒரு சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்தி போர்க்களத்தில், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அது போலவே, இலங்கை அதன் சொந்தப் புலனாய்வுகளை நடத்த வேண்டும். இருதரப்பும், ஏதும் செய்யவில்லை. அறிக்கை கொடுக்க அய்.நா.சபை அதிக காலம் எடுத்துக் கொண்டது, இலங்கைக்குச் சாதகமாய்ப் போய்விட்டது.

இதனிடையில், பன்னாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்புப் பெற, இலங்கை அரசு, அய்க்கிய நாடுகள் சபையுடன் கூடிய உறவை சில சிறப்பு முயற்சிகளினால் பலப்படுத்திக் கொண்டது. ஈழப் போரின் இறுதியில் பங்கெடுத்துக் கொண்ட ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இலங்கையின் அய்.நா. துணைத் தூதராக நியமிக்கப்பட்டதால் பாதுகாப்புப் பெற்றார். பல ராணுவ அதிகாரிகள், ஈழ இறுதிப் போரில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் இன்று உலகம் முழுவதும் அய்.நா. அமைதிக் காப்பாளர்களாகப் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அய்.நா.வின் அமைதி காக்கும் குழுவில், மேஜர் ஜெனரல் சில்வா 10 உறுப்பினர்களில் ஒருவராக நுழைந்து கொண்டு உள்ளார்.

தமிழ் ஓவியா said...

அய்.நாவின் மனித உரிமைக் குழுத் தலைவர் நவி பிள்ளை, போர் இறுதியில் பல பன்னாட்டுப் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அதற்கு சில்வா பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதே போல பல பிரச்சினைகளுக்குரிய இலங்கையின் பிரிகேடியர்களும் ஜெனரல்களுமான ராணுவ அதிகாரிகள் உலகம் முழுவதும் அரசுத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் ஒரு சில அரசுகளே அவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதனிடையில் அய்.நா.வில் பணிபுரிந்த பல தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள பல தமிழர்கள் பன்னாடுகளுக்கும் புலம் பெயர்ந்துள்ளனர்.

மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் சில மேலைநாடுகள் இலங்கையில் இன ஒழிப்பு நடந்தபோது, தங்கள் கண்களை மூடிக்கொண்டன. தன்னைத்தானே ஆய்ந்து இலங்கை வெளிப்படுத்திய அறிக்கை, போருக்குச் சாதகமான அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. அறிக்கை எப்படியிருக்கும்?

தமிழ் ஓவியா said...


ஆயினும் அந்த விசாரணை சில உண்மைகளை, பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமென்றும், சில மருத்துவமனைகள் குண்டுகளால் தகர்க்கப்பட்டன என்பதையும் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆயினும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தாத இடத்தில் (ழிஷீ யீவீக்ஷீமீ ஞீஷீஸீமீ) திட்டமிட்டு குண்டுகளை வீசவில்லை என்றும் போராளிகள் வீசி இருக்கலாம் என்றும் சொல்லியுள்ளனர். பெண்கள் மீதான வன்முறைப் புணர்ச்சி பற்றியோ, வெள்ளைக் கொடி பிடித்து சரண் அடைய வந்த போராளிகள் புலி யும் நடேசனும் கொல்லப்பட்டதையும் குறிப்பிடவில்லை. போர்த்தளபதி பொன்சேகா, ராஜபக்ஷேயின் சகோதரர் உத்தரவின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

சில மேலைநாடுகள் இலங்கையை ஆரம்பத்தில் ஆதரித்தன. ஆனால், பிறகு மிகவும் சங்கடப்பட்டுள்ளன. இலங்கையில் நிலவும் சந்தேகத்திற்கிடமான ஜனநாயக ஆட்சிமுறையும் காரணம்.

அய்.நா. சபையின் வல்லுநர் குழுவின் அறிக்கை மேல்நடவடிக்கைக்காக அய்.நா. மனித உரிமைக் குழுவிடம் அளிக்கப்பட்டது. 2009இல் அந்த அறிக்கை இலங்கையின் புதிய நண்பர்களால் திருடப்பட்டு விட்டது. சீனாவும், சில அணி சேரா நாடுகளும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதையே எதிர்த்தன.

2012 மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நீர்த்துப் போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

இலங்கையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுக் கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தில் போர்க்குற்றம் என்ற சொல்லே இடம் பெறவில்லை.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் முயற்சி செய்தனர். ஜெனிவாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர்கள் தாக்கப்பட்டு மரண எச்சரிக்கை விடப்பட்டனர்.

இவ்வளவும் அய்.நா. கட்டிடத்திற்குள்ளேயே நடந்தது. இதைக் கண்டு நொந்துபோன மனித உரிமைகளுக்கான அய்.நா. ஹை கமிஷன் இதுவரை கண்டிராத _ ஒத்துக்கொள்ள முடியாத மிரட்டல்களும், தொந்தரவுகளும் தாக்குதல்களும் பற்றி ஒரு அறிக்கைவிட வேண்டியதாயிற்று.
இதிலிருந்தே இலங்கை எவ்வாறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் இதுவரையிலான பலன் ஏதுமில்லை. தமிழர்களுக்கான அதிகாரப் பரவல், பகிர்ந்துகொள்ளுதல் பற்றி மௌனமே காணக்கிடக்கிறது. மாறாக, தமிழர்களின் வாழ்க்கை மிகவும் கேவலமடைந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக, பழையனவற்றைத் தோண்ட வேண்டாம் புதியனவற்றில் கவனம் செலுத்துவோம் என்று விடுக்கும் செய்திகள் வேடிக்கையாக உள்ளன.

இரண்டு லட்சம் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்குள்ளேயே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 40 ஆயிரம் போர் விதவைகள் உள்ளனர். 1,65,000 பேர் போரில் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவெல்லாம் இருந்தும்கூட, 2011இல் இலங்கையின் ராணுவ பட்ஜெட் செலவு இதுவரை அத்தீவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது. தமிழர்களுக்குப் புது வாழ்வளிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு ராணுவ வீரன் என்ற கணக்கில் ஆள் சேர்த்துக் கொண்டுள்ளது, இலங்கை.

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனைக் கொன்றுள்ள கொடுமையைப் பற்றி என்ன சொல்ல?

டெசோ மூலம் செய்து வரப்படும் முயற்சிகள் உலகம் முழுதும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.
ஸ்டாலின் தலைமையில் வந்த டெசோ தூதுக்குழு அய்.நா. மனித உரிமைக்குழுத் தலைவரைச் சந்தித்து விவரங்கள் அளித்துள்ளது. இப்பொழுது ரஷ்யா, சீனா முதலிய நாடுகளின் தூதர்களிடமும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவாக, ஈழத் தமிழர்க-ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நம்முடைய காலத்தில் இப்பாதகச் செயல்கள் நடந்துள்ளன. இவற்றிற்குக் காரணமான ராஜபக்ஷேவையும், அவரது கூட்டத்தாரையும் நீதியின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்போம். அதற்காகக் குரல் கொடுப்போம்! தமிழரை வாழ வைப்போம்!

உலக மக்களின் மனிதநேயப் பார்வை ஈழத்தமிழரின் பக்கம் திரும்பவேண்டும் என்னும் கோரிக்கையை டெசோ டெல்லியில் விதைத்துள்ளது.

- புது டெல்லியிலிருந்து அன்பன் .

தமிழ் ஓவியா said...

பெண்களின் மூளைத்திறன்


ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்களாக இருப்பதற்கான காரணத்தை அறிய அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளை 8 சதவிகிதம் சிறியதாக இருந்தபோதிலும் பெண்கள் மூளையின் செயல்திறன் அதிகமாக உள்ளதே காரணம் என்ற முடிவைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிக்கலான பிரச்சனைகளில் பெண்களின் மூளை, மிகக் குறைவான செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தித் தீர்வு காணும் திறன் படைத்தது என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பேய்-பிசாசு : அறிவியல் சொல்வதென்ன?

- பெஞ்சமின் ரட்ஃபோர்ட்

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் குழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!- இந்தப் பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்.

பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் அடைமழையாய்ப் பொழிந்த காலகட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.

கடவுள் மூடநம்பிக்கைக்கு இணையாக மட்டுமல்ல, அதற்குத் துணையாகப் பரப்பப்பட்டது பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள். எங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.

பேய் பிசாசுகளை நம்புகிறீர்களா? நீங்கள் மட்டும் தனி ஆளல்ல. 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 37 விழுக்காடு, பேய் வீடுகளையும் மூன்றில் ஒரு பங்கு பேய் பிசாசுகளையும் நம்புகின்றனர். உலக முழுவதிலும், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு பொழுதுபோக்காக, ஆனால், மும்முரமாக, பேயைத் தேடி வருகின்றனர்! அய்யத்திற்கிடமான செய்திக் கோப்பைச் சேர்ந்த ஷாரன் ஹில் என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் 2000 தீவிர தொழில் முறையில்லாத பேய் வேட்டைக் குழுக்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்..

தமிழ் ஓவியா said...

கோடிக்கணக்கான ஆண்டுகளாக பேய்கள் மாக் பெத்திலிருந்து விவிலியம் வரை, மற்றும் எண்ணமுடியாத கதைகளிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு மிகுந்த ஜனரஞ்சகமான பொருளாகவே இருந்து வந்துள்ளன. உலகம் முழுவதும், பேய் பிசாசு பற்றிய இயற்கைக்கு மாறான நம்பிக்கைகள் பரவிக் கிடக்கின்றன.

சாவின் விளிம்பில் ஏற்படும் அனுபவங்கள், மரணத்திற்குப் பின் வாழ்வு, ஆவி உலகத் தொடர்பு உட்பட பல காரணங்கள் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளாக அமைகின்றன.

இறந்தவர்கள் ஆவியாக நம்முடன் இருக்கிறார்கள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது பலருக்கு அமைதியைக் கொடுக்கிறது. நமது அன்புக்குரிய, ஆனால் இறந்துபட்ட ஒரு குடும்ப உறுப்பினர் நம்மைத் தேடவில்லை; ஆனால் தேவைப்படும் நேரங்களில் நம்முடன் இருக்கிறார்களா? என்றெல்லாம் அவர்கள் நம்ப விரும்பவில்லை. பலர் பேய் பிசாசுகளில், சொந்த அனுபவத்தின் காரணமாகவே நம்பிக்கை கொண்டுள்ளனர்; சிலர் பார்த்துள்ளதாகக் கூறுகின்றனர். அல்லது, விளங்கிக் கொள்ள முடியாத சில தோற்றங்களை உணர்ந்து இருக்கின்றனர்.

பிசாசுகளைப் பற்றிய வாக்குவாதமும் அறிவியலும்

சொந்த அனுபவங்கள் என்பது ஒன்று ; ஆனால், அறிவியல் ஆதாரம் என்பது வேறு. பிசாசுகளைப் பற்றி ஆராய்வதில் உள்ள தொல்லை என்னவென்றால், பேய், பிசாசு என்பது பற்றி, உலக முழுதும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு விளக்கம் இல்லாததுதான். சிலர் அவை இறந்தவர்களின் ஆவி என்றும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் போகவேண்டிய இடத்தைத் தவறவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பேய் பிசாசுகள், தொலை உணர்வு உள்ள பிம்பங்கள் என்றும், உலகத்திற்கு நமது மனங்களிலிருந்து காட்டப்படுவதாகும் என்று கூறுகின்றனர்.

சிலர் வேறுவிதமான பிசாசுகளை உண்டாக்குகிறார்கள். மிச்சமான அச்சங்கள், புத்திசாலி பூதங்கள், நிழல் மனிதர்கள் போன்றவை அவை. பல இனமக்களின் தேவதைக் கதைகள் போலவும் டிராகன் கதைகள் போலவும், எத்தனை விதமான பேய் பிசாசுகளை நீங்கள் விரும்புகிறீர்களோ, அத்தனையும் உள்ளன. பேய்கள் பற்றிய கருத்துகளில், பல முரண்பட்டும், உள்ளடங்கியதாகவும் உள்ளன. உதாரணமாக, பேய்கள் என்பது பொருளா? அல்லது பொருளாக இல்லையா? அவை திடப் பொருள்களுக்கு ஊறு செய்யாமல், ஊடுருவிச் செல்ல முடியுமா? அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா? தர்க்க நியாயத்தின்படியும், உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்து தோன்ற வேண்டும்? மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்பட வேண்டும்? ரயில்கள், கார்கள், வண்டிகளிலும் கூட பேய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பழி வாங்கப்படாது இறந்தவர்களின் ஆவிதான் பேயென்றால், அவை ஒரு ஆவியுலகு சார்ந்த(?) இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை? அவை தங்களது கொலைகாரர்களைப் பற்றி அடையாளம் காணமுடியும். அதைப்போல, பேய் பிசாசுகளைப் பற்றி எந்த ஒரு செய்தியும், தர்க்க ரீதியான காரணங்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க வேண்டும்?

பேய் வேட்டையாடுவோர் பலரும் பேய்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஆக்கப்பூர்வமான முறைகளையும் ஏமாற்று வழிகளையும் கையாளுகின்றனர். உண்மையில் எல்லா பேய் தேடுவோர்களுமே, தாம் அறிவியல் முறையில் செயல்படுவதாகவே கூறுகின்றனர். அப்படியே தங்களைத் தோற்றப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் உயர்ந்த அறிவியல் கருவிகளையும், கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவி(Geiger counter), மின்காந்த நில கண்டுபிடிப்பான்கள், அயன் (Ion) கண்டுபிடிப்பான், இன்ஃப்ராரெட் (Infrared) காமிராக்கள், மிக நுண்ணிய மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு கருவியும் உண்மையில் பேய்களைக் கண்டுபிடிக்க உதவியதாகத் தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...

சிலர் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். பேய்கள் இருப்பதை நிரூபிக்க முடியாததற்குக் காரணம், ஆவி உலகத்தைப் பற்றி அறிய நாம் தகுந்த தொழில்நுட்பம் கொண்டு இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.. ஆனால், இதுவும் சரியாக இருக்க முடியாது. பேய்கள் நாம் வாழும் சாதாரண உலகத்தில் இருந்தால், அவை கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோ, ஆடியோ, ஃபிலிம் நிழற்படங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாததால், அவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேய்கள் இருந்து அவை அறிவியல்பூர்வமாக காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான சான்றுகள் நம்மிடம் இருப்பதாகக் கூற முடியும். நாம் அவ்விதம் சான்றுகள் கொண்டிருக்கவில்லை. பேய்கள் இருந்து, அவைகள், அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்படாமலிருந்தால், பின் எல்லா நிழற்படங்களும், வீடியோ, மற்றும் பேய்தான் என்று சொல்லப்படும் எல்லா பதிவுகளும், பேய்களினுடையதாக இருக்க முடியாது.
பேய்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. பல பத்தாண்டுகளாக, தொலைக்காட்சி உட்பட பல பேய் வேட்டைக்காரர்களும் ஒரு சிறிய சாட்சியத்தைக் கொண்டு கூட பேய் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமூட்டவில்லை.

பலர் ஏன் நம்புகிறார்கள்?

தற்கால இயற்பியலைவிட கடினமான அறிவியலில் பேய் இருப்பதற்கான ஆதாரங்களைக் காணமுடியும் என்று சிலர் நம்புகிறார்கள். பேய்களைக் காண ஒரு அறிவியல்பூர்வமான வழியை அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் யோசனை தெரிவித்துள்ளதாக பெரிதும் நம்பப்படுகிறது. சக்தி ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆனால் மாற்றம் அடைகிறது. நாம் இறந்தபின், நமது உடலில் உள்ள சக்தி என்ன ஆகிறது? எந்தவிதமாகவோ அது பேயாக ஆகக்கூடுமா?

நீங்கள் அடிப்படை இயற்பியல் தெரிந்திருந்தால் ஒழிய, அது ஒரு அறிவுப்பூர்வமான கருத்தோட்டமாகத் தெரியும். இதற்கான பதில் எளிதானதுதான்; மர்மமானதல்ல. ஒரு மனிதன் இறந்தால், உடலில் உள்ள சக்தியானது, மற்ற உடலில் உள்ள நுண்ணுயிர்களின் சக்தி எங்கே போகிறதோ, அங்கே சுற்றுப்புறத்தில் கலந்து விடுகிறது. அந்தச் சக்தியானது வெப்ப உருவத்தில் வெளிப்படுத்தப்பட்டு, அவற்றை உண்ணும் விலங்குகளிடம் சேருகிறது. வனவிலங்குகள் புதைக்கப்படாவிட்டால், புழுக்களும் மற்ற பாக்டீரியாக்களும் ஏற்பட்டு, அவற்றைத் தாவரங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. மனிதன் இறந்த பிறகு உடல் சக்தி உயிர் வாழ்வதுமில்லை; எல்லோரும் அறிந்த பேய் வேட்டை சாதனங்களால் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை.

பல பேய் வேட்டைக்காரர்கள் ஆபத்தில்லாத, பயனுமில்லாத பல செயல்களில் பங்கு பெறுவது வேடிக்கையாக இருந்தாலும்கூட, அவர்கள் வாழ்க்கையில் கரும் பக்கங்களும் உண்டு. பல ஜனரஞ்சக பேய் வேட்டை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பரவலாக இருந்த நேரத்தில் காவல்துறையினர், கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை உயருவதையும், காயப்படுபவர்களையும், பேய் வேட்டை கொல்லப்படுபவர்களையும் பதிவு செய்தது. 2010இல் பேய் வேட்டை காரணமாக ஒருவர் இறந்துபோனார். நண்பர்களுடன், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மோதிய ஒரு ரயிலின் பேயைப் பார்க்க முயற்சித்தபோது, வளைவில் வந்த ஒரு உண்மையான ரயிலால் அவர் கொல்லப்பட்டார்; ஆனால் பேய் ரயில் வரவேயில்லை!
பேய்களுக்கான சான்றுகள், ஒரு நூற்றாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, ஏன் ஒரு ஆண்டுக்கு முன்பிருந்ததைவிடக்கூட வளர்ச்சி பெறவில்லை.
முதலில், பேய்கள் என்பது இல்லை. பேய்களைப் பற்றிய செய்திகள், உளவியல், தவறான புரிந்து கொள்ளுதல், தவறுகள் மற்றும் புரளிகளால் உண்டாக்கப்படுகின்றன. இரண்டாவதாக, உண்மையில் பேய்கள் இருக்குமானால், நமது பேய் வேட்டைக்காரர்கள் முழுதும் திறமையற்றவர்கள். முடிவாக, பேய் வேட்டைக்காரர்கள் முயற்சிகள் சான்று பற்றியதல்ல; (அப்படி இருந்தால் எப்பொழுதோ பேய் தேடுதலைக் கைவிட்டிருப்பார்கள்.)

பதிலாக, நண்பர்களுடன் வேடிக்கை செய்வதிலோ, கதைகள் சொல்வதற்கும் தெரியாதவற்றின் நுனியைப்பற்றித்தான் தேடிக் கொண்டிருப்பதாகப் பாசாங்கு பண்ணுவதில் உள்ள ஆனந்தம் ஆகியவையே காரணமாகும்.

என்ன இருந்தாலும், பேய்க்கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் தானே?

தமிழில்: ஆர்.ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

முற்றம்


நூல்

நூலின் பெயர்: இளமை எனும் பூங்காற்று
ஆசிரியர்: சுப. வீரபாண்டியன்
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை--14. தொலைபேசி: 044--43993029
பக்கங்கள்: 184 விலை ரூ. 110/-

இசை, கவிதை, நாட்டியம், வீரம், விஞ்ஞானம், மருத்துவம், தேசப்பற்று, சினிமா, விளையாட்டு, அரசியல்..... என்ற துறைகளில் சாதித்தவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கருத்துப் பெட்டகம். ஒரு தலைப்பைப் படித்ததுமே பல புத்தகங்களைப் படித்து நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்ட உளப் பூரிப்பை உண்டாக்குகிறது.

தமிழ் ஓவியா said...

நாம் அறிந்த பிரபலங்களைப் பற்றிப் படிக்கும் போது, சோதனைகளைக் கடந்துதான் சாதனைகளை ஒருவரால் படைக்க முடியும் என்ற எண்ணப் பிரதிபலிப்பை மனதில் பதிய வைத்து, சாதனைகளை நிகழ்த்தத் துடிப்போருக்கான ஊன்றுகோலாக - கலங்கரை விளக்கமாக மிளிர்கிறது. 21 புத்தகங்களைப் படித்த இன்பத்தை மனதிற்குத தந்து பூங்காற்றாக மனதை வருடியும் புயல் காற்றாக நெருடியும செல்வதே இளமை எனும் பூங்காற்று.

தகவல் தளம் www.indiapost.gov.in/pinஅஞ்சல் குறியீட்டு எண் அறிய முன்பெல்லாம் அஞ்சல் அலுவலகம்தான் செல்லவேண்டும் அல்லது அதற்கென இருக்கும் புத்தகத்தை வாங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால்,இப்போது உங்கள் வீட்டிலிருந்தே இணையத்தில் www.indiapost.gov.in/pin என்ற தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம். இந்திய அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான இதில் எண் தேடும் வசதியும் உள்ளது. ஊரின் பெயரை இங்கிலீஷில் குறிப்பிட்டால் உடனே அவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண்ணை அறியலாம்.

இணையதளம்
www.ilakkiyam.com

தமிழ் இலக்கியம் குறித்த இணையதளம்.இயல்,இசை,நாடகம் என தனித்தனியே பகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் சங்க இலக்கியம், திருக்குறள், அவ்வையார் பாடல்கள் உள்ளிட்ட முக்கிய நூல்கள் யுனிகோட் தமிழ் எழுத்துருவில் வழங்கப்பட்டுள்ளன. இசைப்பிரிவில், நாட்டுப்புறப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் போர்ப் புறப்பாடு, ஜாக்சன் துரையுடன் வாதம் செய்தல் ஆகிய திரைக்காட்சிகளும், பராசக்தி நீதிமன்ற உரையாடல், மனோகரா, வீர சிவாஜி வசனங்கள் எழுத்துவடிவிலும் அளித்துள்ளது அருமை.

குறும்படம்

அறிவிருந்தால்... -_ ஜெ.பாலா
செல்பேசி : 9095568365

இந்தியாவின் எதிர்காலத் தூண்களாம் குழந்தைகளைக் கோவிலின் பின்புறமுள்ள வேப்ப மரத்தடியில் அமர வைத்து வேப்பிலை வைத்தியம் செய்து விபூதி பூசி பண வசூல் செய்கிறார் காவி உடை அணிந்த மனிதர்.

வீட்டிற்கு வரும் அவர் தண்ணீர் குடிக்கும்போது இருமல் வருகிறது. காணிக்கை வந்த பணத்தை எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கிறார்.

ஒலியின்றி (Sound) ஒளிக்கு (Video) மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து காண்போர் கண்களை நிறைத்து மனதில் பதித்து உணர வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

வரம் தருவாள்சொருக்கவாயில் திறப்பு
சொருக்கம் புகுந்தனர்
மிதிபட்ட தம்பதியினர்!
.................
பூசெய் அறையில்
கோடீசுவரி காணாமல் போனது அவளது கழுத்து நகை!
.................
கேட்டவரம் தருவாள்
கருமாரியம்மன்!
பிள்ளைவரம் கிடைத்தது
கன்னிப் பெண்ணுக்கு!

- கோ.கலைவேந்தர்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு வினாக்கள்

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகை யீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்த போது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம்முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள்செய்தமையால் இத்தலத்திற்கு தாடகையீச்சரம் என்று பெயர் வந்தது.

இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

- மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29-31
உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா! -பாரதிதாசன்-


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதை விட வேறே என்னவேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியை சேர்ப்பதற்கும் பெரு நாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்து தீர்ப்பதற்கும், பெரு நோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களை பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழ்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலை யவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அறியாமக்கள்; தமைக் காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

உண்மை - 15.6.1983

தமிழ் ஓவியா said...


வர்க்கப் பார்வையை சிதைக்கும் சாதி


பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் தத்துவம் வேத சாஸ்திரக் கருத்துக்களோடு இணைந்து இந்தியாவில் சமூக ஆதிபத்தியக் கருத்தாக நிலைநாட்டி வருவது பிராமணியம் என்பதாகும்.

இந்தியாவைத் தவிர உலகில் மற்றெல்லா நாடுகளிலும், குறிப்பாக மேலை நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் அடிப்படையில் ஆதிபத்தியம் நிலவியது. பொருள் உற்பத்தி உறவு முறையில் - அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகார ஆதிக்கம் வகிக்கும் வர்க்கம் மேலான வர்க்கமாகக் கருதப்பட்டது.

உதாரணமாக மன்னர்கள் நிலப்பிரபுக்கள் முதலாளிகள் உயர்வான சமூக அந்தஸ்து படைத்தவர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் இந்தியாவில் மேற்கூறியவாறு வர்க்க அடிப்படையில் உயர்வு தாழ்வு எனும் சமூக அந்தஸ்து நிலவி வந்த போதிலும் இவை அனைத்திற்கும் மேலாக - முதன்மையாக பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் சாதிய முறை ஏற்படுத்தப்பட்டது வேத சாத்திர கருத்துக் களேயாகும்.

இந்தியாவில் அடிமை முறையும், நிலப்பிரபுத் துவ உற்பத்தி உறவுமுறையும், பின்னிப் பிணைந் திருந்த சமுதாயத்தில் பொருள் உற்பத்தி உறவு முறையில் அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் என்ற அமைப்பில் ஏற்படும் வர்க்கப் பாகுபாடு அல்லது வர்க்க பிரிவுகளை மக்கள் பார்க்க விடாது தடுத்தும், தடைப்படுத்தியும் வந்தது பிராமணியம் எனும் தத்துவமாகும்.

-எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திரப் பேய்களும், சாதிக்கதைகளும் (ஒரு மார்க்ஸியப் பார்வை) நூலின் பக்கம் 54-55

(சாதியா, பொருளாதார பார்வையா என்று நாம் இதுகாறும் எழுப்பி வந்த கேள்விக்கு பொருளாதாரமே என்று கிளிப்பிள்ளைப் பாடம் சொல்லி வந்த மார்க்ஸிஸ்டுகள் இன்றைய தினம் நம் கருத்தின் பக்கம் நெருங்கி வந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.)

உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை கிரக பலன்களையும் ராசி பலன் களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் வடிகட்டப் பட்ட மூட நம்பிக்கையாகும். நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப் படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது அறிவுள்ளவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதை படிப்பதும், அதன்படி நடப்பதும் நம் தலையில் நாமே மண்ணைப் போடுவது போன்றது. ஒவ்வொரு பத்திரிகையி லும் ஒரே ராசி உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைச் சொல்லி எழுதி, இந்தப் போலிகள் கணிசமான காசு பார்க்கிறார்கள். இந்த சாதாரண விவரங்கள் கூட தெரியாத முட்டாள்கள், இன்றும் இவற்றை நம்பிக் கொண்டு இருக் கின்றார்கள். ராசி பலன் எழுதி வந்த குஷ்வந்தசிங், தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும் அது ஒரு வடி கட்டப்பட்ட பொய் என்றும் அடித்துக் கூறி உள்ளார். பொருந் தாத எதிர்பார்ப்புகள்
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் பேன்றவற்றை அணிந்து கெள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப் பில் அவைகளை கட்டிக் கொள் கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக் கல் என்று கூறி அதை மோதிரங் களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்துச் செயல்களும் அறிவுக்குப் பொருந்தா என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு ரூபாய் கூடப் பெறாத தாமிரத் தகடுகளில் ஏதேதோ கிறுக்கி எழுதி, ஆயிரக்கணக்கில் இப்பொ ழுது பலரும் சம்பாதித்து வரு கிறார்கள். இதற்கு என்று டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து, இந்த ஏமாற்றுத் தொழிலில் லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண் டாட்டம்தான்.
பிள்ளையாரின் விலை?

இந்துக்களால் மதித்து வணங்கப் படும் பிள்ளையாரை ஒரு சாமி சிலைகள் செய்து விற்கும் நிறுவனத் தில் விலைப் பட்டியல்

இதோ!

1. வைரப் பிள்ளையார் ரூ.1.25 லட்சம்

2. தங்கப் பிள்ளையார் ரூ. 80,000
3. வெள்ளிப் பிள்ளையார் ரூ. 20,000
4. செம்புப் பிள்ளையார் ரூ. 1,200
5. மற்ற உலோகங்களில் ரூ. 300
6. பிள்ளையார் படங்கள் ரூ 125
7. லித்தோ படங்கள் ரூ. 45
8. நல்ல பேப்பரில் ஜெராக்ஸ் செய்யப்பட்டது ரூ.3 * கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஆக மொத்தத்தில் பிள்ளையா ருக்கு அல்ல, அவர் செய்யப் பட்ட உலோகத்திற்குத்தான் மதிப்பு உள்ளது என்பதே உண்மை.
எப்படியோ நகை வியாபாரிகளுக் குக் கொண்டாட்டமே!

தமிழ் ஓவியா said...


மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி?


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்

Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.

Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.

Language Bar க்கு வரவும்.

Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.

இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.

6.Windows XP பயனாளிகள்

Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.

முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.

இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.


7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:

Amma - அம்மா,
karpom - கற்போம்


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.
- பிரபு கிருஷ்ணா (கற்போம்

தமிழ் ஓவியா said...


எடை மேடை தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான்தி.மு.க தலைமைக் கழகப் பேச் சாளர் - எண்ணிய எண்ணத்தைத் துணிவாய்ச் சொல்லும் வல்லமையர் _- பெரியார் தொண்டர் மதுரைக் கவிஞர் இரா. ஜீவா.

பொறுக்குமணிகளாய்த் தேர்ந் தெடுத்த சொற்களில் நறுக்குக் கவிதைகளை கலகக்காரர் பெரியார் என்ற பெயரில் புத்தகமாய் வடித் துள்ளார்.

ஒவ்வொரு கவிதையும் கருத்துக் கருவை சூல்தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது என்று மானமிகு தமிழர் தலைவர் அவர்களின் பாராட்டுப் பட்டயம் பெற்ற புத்தகம்.

கவிஞர் ஜீவாவின் உள்ளத்து உணர்ச்சிகளின் ஒருசில துளிகள் இதோ உங்களுக்காக.

மூடத்தனம்
அழிந்தால்தான்
மூலதனம் வெல்லும் என
முடிவாய்ச் சொன்னவன்
தீப்பந்தம் இன்றி
தீண்டாமை
கொளுத்தியவன்
தமிழைச்
சீர்திருத்தியவர்
தமிழனைச்
சீர்படுத்தியவர்

உன்மீது
செருப்பை வீசினார்கள்
நாங்கள்
அக்ரஹாரத்திலும்
செருப்பணிந்து
நடந்தோம்.

தந்தையே உன்மீது
நரகலை வீசினார்கள்
நாங்கள் நாடாளவே
வந்துவிட்டோம்.
உன்மீது
அடிவிழ விழ
உயர்ந்தது தமிழ்இனம்
உருக்குலைந்தது
ஆரிய இனம்.
இவை போன்ற எண்ணற்ற கவிதைகளின் வழியாக தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான் என்பதை உணர்த்தும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது. கவிஞர் ஜீவாவை அழைத்து வாழ்த்த அழுத்த வேண்டிய எண்கள் 09443925216 கலகக்காரர் பெரியார் புத்தகம் கிடைக்குமிடம்: அஞ்சுகம் பதிப்பகம், 65, மேலப்பச்சேரி திருப்பரங்குன்றம், மதுரை -625 005.
விமர்சகர்
பா. சடகோபன்,
பகுத்தறிவாளர் கழகம்
மதுரை - 94433 62300

தமிழ் ஓவியா said...


யக்ஞவல்கியா கூறுகிறார்!


ஒரு பிராமணன் சண்டாளனுடைய கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடித்தால், அல்லது சண்டாளன் பாத்திரத்தில் தண்ணீர்க் குடித்தால் சாந்த பானா செய்ய வேண்டும். இவ்வாறு யக்ஞவல்கியா இயற்றிய அங்கிரா என்ற நூல் கூறுகிறது.

சாந்தபானா செய்வதென்றால், செய்த பாவம் அல்லது தீட்டுத் தீர ஒரு இரவும், ஒரு பகலும் பட்டினி கிடக்க வேண்டும். அதன்பின் முதலில் பஞ்சகவ்யம் அருந்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பகத்சிங்


இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)

1924 - பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டம். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன் னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.

சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!

நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல், நாமம், விபூதிப்பட்டை, குடுமி, தாடி, தலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.

வெறிபிடித்த இந்துத்து வாவாதிகள் முட்டாள்தன மாகப் புரட்சியாளர்கள் என்று கருதப்பட்ட காலம் அது.

மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எனும் பார்ப்பனர் சனாதன வெறிக் கண்ணோட்டத்தோடுதான் அதனைச் செய்தான்.

1908இல் வங்காளத்தில் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குதிர்ராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது, பகவத் கீதையைத் தன் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருந்தான்.

ஆனால் பகவத்சிங் எப்படி? சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில், சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்து, கடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோது, பகவத் சிங் மறுத்து விட்டான்! (இளை ஞர்களே எண்ணிப் பாருங்கள்!)

ஜாலியன் வாலாபாக் படுகொலை - அவனைப் புரட்சிவாதியாக்கிற்று.

தாங்கள் பயங்கரவாதி கள் அல்லர் - புரட்சியா ளர்கள் என்ற முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் யாருக்கும் உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் வெடி குண்டுகளை வீசி, காவல் துறையிடம் தங்களை ஒப் படைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூறும் வாய்ப்பாகத்தான் இதனை செய்தனர் என்பது சாதாரணமா?

இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மை யான சமத்துவமும், சாந்தமும் அளிக்கத்தக்கப் பாதையை பகத்சிங் காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட தந்தை பெரியார் - எவரும் அடைய முடியாத பேரை பகத்சிங் அடைந்தார் என்று குறிப் பிட்டு விட்டு பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்.

மாகாணத்துக்கு இது போன்ற 4 பேர்களைத் தூக்கிலிட வேண்டுமென்று நமது அரசாங்கத்தை மனமார வேண்டுகிறேன் என்ற (குடிஅரசு 29.3.1931) தந்தை பெரியாரின் சிந்தனை சாதாரணமானதுதானா? இளை ஞர்களே எண்ணிப் பாரீர்!

- மயிலாடன் 23-3-2013

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைக் கொடுமைகளோ - இன்னல்களோ?


கடைசி நேரத்தில் இந்தியா எப்படியும் எங்களை ஆதரிக்கும் - எதிராக வாக்களிக்காது என்று இலங்கை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் இந்தியாவின் போக்குகள் இருந்தன.

இலங்கை எதிர் பார்த்ததற்கு மாறாக இந்தியா ஜெனிவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நடந்து கொண்டாலும் அடிப்படையில் இலங்கைக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மூவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துகள் சற்று நம்பிக்கை அளிப்பது போல் இருந்தன.

இந்தப் பிரச்சினை பெரும் நெருக்கடியில் சிக்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று போதிய அவகாசம் இருந்தும், குறித்த நேரத்தில் பிரச்சினை மீது கவனம் செலுத்தி செயல்படாததேயாகும். கடைசி நேரத்தில் தான் மத்திய அரசுக்கு ஞானோதயம் ஏற்பட்டது போலும்.

போக்குகளை மிகவும் துல்லியமாகக் கணித்த கலைஞர் அவர்கள் அவருக்கே உரித்தான அனுபவம், முதிர்ச்சி காரணமாக, மத்திய அரசிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தை மட்டுமல்ல உலக நாடுகளிடையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.

கலைஞர் அவசரப்பட்டு விட்டார்; மேலும் காத்திருந்திருக்க வேண்டும், இந்தியா அமெரிக்கா வின் தீர்மானத்தில் திருத்தத்தைக் கொண்டு வரும் என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நடந்ததைப் பார்க்கும் போது கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந் திருக்கிறது என்று பேசப்படும் நிலை ஆகிவிட்டது.

இந்தியாவின் சார்பில் மனித உரிமை ஆணையத் தில் பேசிய திலிப் சின்கா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை; வெறும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல் லுவது - திருடன் கையில் சாவியை ஒப்படைத்த கதைதான்.

மறு சீரமைப்பு நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை

இலங்கை அரசே மேற்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று செல்லமாகத் தாலாட்டுப் பாடியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை, இத்தாலிய கடற்படைக்காரர்கள் கடற் கொள்ளைக் காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்றதற்கு உலகத்தையே குலுக்கியதும் இதே இந்தியாதான்!

அதே நேரத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழினத்தைச் சேர்ந்த - தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தாலும் சரி, படுகொலை செய்யப்படும் பொழுது ஏனிந்த பதற்றம் இல்லை? என்ற கேள்வி நியாயமானதல்லவா? இதனைக் குறுகிய பார்வை என்ற குண்டாந்தடியால் அடிக்க நினைக்கக்கூடாது; தமிழர்கள் ஒன்றும் ஏமாந்தவர்களோ, புரியாதவர்களோ இல்லை.

ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசு கணக்கிடவே முடியாத அளவுக்குக் கடும் கோபத் தீக்கு இரையாகி விட்டது. அது சார்ந்த அரசியல் கட்சியான காங்கிரசும் பெரும் சேதாரத்துக்கு ஆளாகி விட்டது.

உலக நாடுகளும் இந்தியாவைக் கேலியாகப் பார்க்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது.

இதற்கிடையில் ஒன்றைத் தவறாமல் குறிப்பிட்டாக வேண்டும்; இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் மட்டுமல்ல; அகில இந்தியக் கட்சிகளின் முகத்திரையும் கிழிந்து விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பது கோடி பொன் பெறும் கணிப்பாகும்.

உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லா விட்டால் இன்னும் என்னென்ன இன்னல்களோ - கொடுமைகளோ தெரியவில்லை.23-3-2013

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லைசரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபற்றி ராஜபக்சே ஆணவப் பேச்சு


கொழும்பு, மார்ச்.24- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் வெற்றி கண்டது குறித்து இலங்கை அதிபர் ராஜ பக்சே கருத்து தெரிவிக் கையில், தொடுக்கப் பட்ட தாக்குதல்கள் எங்களை அடக்கி விட முடியாது என ஆணவத் துடன் கூறியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத் தின் மீது கடந்த 21-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடந் தது. இதில் 25 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக இலங்கை அதிபர் ராஜபக்சே மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் வடமேற்கு மாகாணம், குருணேகலா ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்க தீர்மானம் குறித்து கருத்து வெளியிட் டார். அப்போது அவர் ஆணவத் துடன் கூறியதாவது:-

இந்த தாக்குதல் (அமெரிக்க தீர்மான ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி) எங்களுக்கு வியப்பை அளிக்கவில்லை. இந்த தாக்குதல் எங்களை அடக்கி விட முடியாது. இவை எங்களை தோற்கடித்து விடவும் இயலாது. எந்த விதத்திலும் எங்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது. விடுதலைப்புலிகளை எனது தலைமையிலான ராணுவம் வீழ்த்தி விட்ட நிலையில், இந்த தாக் குதல்களை விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப் பிடம் இருந்தும், இலங்கை எதிர்ப்பு சக்தி களிடமிருந்தும் எதிர் பார்த்தேன். எனது அரசு மீதான அனைத்து குற்றச் சாட்டுகளும் தவறானவை. உண் மைக்கு அப்பாற்பட்ட நோக்கம் கொண்டவை.

இந்த நாட்டின் ஒரு பகுதி 2009-க்கு முன்பு (தமிழ்) ஈழம் என அடையாளம் காணப்பட்டது. இது போர் நிறுத்த உடன்படிக்கையிலும் ஏற்கப்பட்டு, சிறிது அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச சமூகம் வழிவகுத்த போர் நிறுத்த உடன்படிக்கையை நாங்கள் ஒழிக்க முடியாமல் போயிருந்தால், இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கடவுள்கள் காப்பாற்றவில்லையே! பெண்களிடம் செயின் வழிப்பறி திருட்டு


ஆவடி, மார்ச் 24- ஆவடி காந்தி நகர் வேதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி ராதா (53). நேற்று இரவு ராதா தனது மாமியார் அம்முகுட்டியுடன் அங்குள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து இரவு திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர்களை மறித்து நிறுத்தினர். ராதா அணிந்திருந்த அய்ந்து பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

திருநின்றவூர் லட்சுமிபுரம் 4ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராகிணி (40). இவர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ராகிணி, மகன் கார்த்திக்குடன் முருகேசன் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு திரும் பினார். 12ஆவது குறுக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை பகுதியில் அவர்களை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மறித்தனர். ராகிணியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து தப்பிவிட்டனர். இரண்டு வழிப்பறியிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ஆவடி, திருநின்றவூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அம்மன் கோவிலில் நகை கொள்ளை

திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் பழண்டியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் கொள்ளையர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை திருடினர். பின்னர் உண்டியலை கடப் பாரையால் உடைக்க முயற்சித்தனர். சத்தம்கேட்டு அருகில் வீட்டில் வசிக்கும் ஒருவர் குரல் கொடுக்கவே கொள்ளையர்கள் தப்பிசென்று விட்டனர்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சி.பி.அய்.

செய்தி: மாணவர்களாகிய நீங்கள் நடத்திய போராட்டம்தான் தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து வெளியேறச் செய்தது. 2009இல் வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்; அவர்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டிருக்காது. - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு

சிந்தனை: 2009 மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம் என்று சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இப்பொழுதோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.அய்.டி.யூ.சி.யின் பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள், மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளிய கருத்து என்ன தெரியுமா?

இலங்கைப் பிரச்சினை - மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்குமிடையே உள்ள பிரச்சினை - இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கறாராகச் சொல்லி விட்டாரே!

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதத் துக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு சொல்லி நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் காப்பாற்றியிருக்கலாமே?

ஆக, கம்யூனிஸ்டு பார்வையில் இலங்கைப் பிரச்சினை ஒட்டு மொத்தமான நாட்டுப் பிரச்சினை இல்லை, அப்படித்தானே? இனி மேலாவது தோழர் தா.பா. நீட்டி முழக்க மாட்டார் என்று நம்புவோமாக! ஈழத் தமிழர் பிரச்சினையை ஏகடியம் செய்யும் கட்சியினர் தி.மு.க.வையே சதா குற்றம் சுமத்துவது தான் வேடிக்கை - விநோதம்!

தமிழ் ஓவியா said...

நெஞ்சுக்கு நஞ்சு

கேள்வி: திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தி யில. நீங்க எப்படி அல்லா.. அல்லானு பாட்டுப் பாடினீங்க?

எம்.எஸ்.வி: அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங் களுக்குப் பக்கத்துலேயே இருப் பாங்க. முகமது பின் துக்ளக் படத்துல அல்லா.. அல்லா பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன்.

ஆனா, சோ அந்தப் பாட்டை நான் தான் பாடனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியா துன்னு சொல்லிட்டேன். சரி... யாரையெல்லாம் நீ பாட வைக் கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப் போம்னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. சரி.. ஆண்டவன் சித்தம் அதுதான் போலனு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டிலாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண் மையைச் சொன்னார் அது. சீட்டு எழுதுனப்போ எல்லா சீட்டு லயுமே என் பேரைத்தான் எழுதி வெச்சிருக் கார் அந்த மனுஷன்!

இசை இயக்குநர் எம்.எஸ். விசுவநாதன் ஆனந்தவிகடன் இதழுக்கு (27.2.2013) அளித்த பேட்டி தான் மேலே கண்டது.

மேம்போக்காக பார்த்தால் இதில் மறைந்திருக்கும் நாகப் பாம்பு என்ன என்று தெரியாது.

அந்தப் பாடல் நாகூர் அனிபா வால் பாடப்பட்டால் சிறப்பாக இருக் கும் என்று இசை இயக்குநர் எம்.எஸ்.வி. நினைக்கிறார். விட்டு விட வேண்டியதுதானே? எம்.எஸ்.வி.யைவிட இசை மேதையா திருவாளர் சோ ராமசாமி?

நாகூர் அனிபா முசுலிம் ஆயிற்றே - அவரைக் கொண்டு பாடச் செய்தால் எப்படி என்கிற இந்துத் துவா விஷப்பூனை தான் சோ மன தின் ஆழத்தில்.

யார் பாடுவது என்ற முடிவைச் செய்ய சீட்டுக் குலுக்கிப் போடும் தந்திரம் கையாளப்பட்டு, எல்லா சீட்டிலும் எம்.எஸ்.வி. பெயரையே எழுதி வைத்திருந்தார் சோ என்றால் இவர்களின் அறிவு நாணயத்தையும், மோசடியையும் நம் தமிழர்கள் என் றைக்கு உணரப் போகிறார்களோ!

தமிழ் ஓவியா said...

புதிய போப்

வாடிகன் நகரத்தில் அமளி முடிந்து விட்டது - மூப்பின் காரண மாக பெனெடிக்ட் தாமாக முன் வந்து பதவி விலகி வழி விட்டார். அடுத்த போப் யார் என்பது உலக அரங்கில் கேள்வியாக எழுந்தது. ஜனநாயக அடிப்படையில் போப் தேர்வு என்பது கூட ஒரு சிறப்புதான் (அது என்ன சங்கராச்சாரி மடமா?)

புதிய போப் ஜார்ஜ் மேரியோ பெர் கோக்லியோ (இப்பொழுது பிரான் சிஸ் என்று பெயர் மாற்றம்!) எளிமையானவர், பேருந்தில் பயணம் செய்யக் கூடியவர் என்பதெல்லாம் வித்தியாசமானதுதான்.

பக்தர்களுக்கு இவர் வாழ்த்துச் சொல்லுவதற்குப் பதிலாக பக்தர்கள் இவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக் கிறார்கள்.

மற்றவர்களைவிட போப் உயர் வானவர் என்பதற்காக ஸ்டூல்மீது போப் நிறுத்தப்படுவது வழக்கமாம் - அதையும்கூட இவர் தவிர்த்து இருக்கிறார்.

இந்தப் பக்கம் கொஞ்சம் கவனத் தைத் திருப்புக! எங்கே உட்கார்ந் திருந்தாலும் சங்கராச்சாரியார் உயரமான மேடையில்தான் பீடத்தில் உட்கார்ந்திருப்பார் - காரணம் ஜகத் குருவாம்.

சென்னையில் 1983இல் இந்திய சமய கலை விழாவை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய போது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் அவ்விழாவில் பங்கு கொண்டார். அப்பொழுதுகூட சங்கராச்சாரி யாருக்கு உயரமான மேடை!

முதல் அமைச்சருக்கு சால்வை யைக்கூட அவர் கையால் போர்த் திடவில்லை தம் சிஷ்யர் ஒருவரிடம் கொடுத்துதான் போர்த்தச் செய்தார்.

போப்பையும் - சங்கராச்சாரி யாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

இசை இயக்குநர் இளையராஜா

எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் என்று நான் நம்பியிருந்த ஒருவரிடம் என்னுடைய வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் அனைத் தையும் ஒப்படைத்திருந்தேன். ஆனால், அவரோ என்னை மோசம் செய்துவிட்டு ஒரு கணிசமான தொகையுடன் ஓடித் தலைமறைவாகி விட்டார். நல்லவனாய் நடித்து இதுபோல் மோசம் செய்யலாமா? தெய்வம் இதைக் கேட்காதா?

- ராமசாமி, கோபிசெட்டிபாளையம்

இளையராஜா பதில்: இதை நாம் எடுத்துக் கொள்ளும் விதம்தான் நம்மை பாதிக்காமல் இருக்க வைக்கும். பகவான் சிறீ ரமண மகரிஷியிடம் - அவருடன் அருகில் இருந்து நாட்களைக் கழிக்க முடிவு செய்த ஒரு அயல் நாட்டுப் பெண் மணி, பகவானிடம் புகார் செய்தாள், பாவம் ஏழைப் பையனாய் இருக் கிறானே என்று என்னுடனேயே தங்க வைத்து எனக்கு ஏவல் வேலை செய்ய வைத்திருந்த பையன் என் நகையைத் திருடிக் கொண்டு ஓடி விட்டான் என்று.

பகவான் சொன்னார். பார்த் தாயா? நீ எப்போதோ போட்டுக் கொள்வதற்காக வாங்கி வைத்த நகையே - உன்னுடன் எப்போதும் துணைக்கு இருந்த பையனை நீ பிரியக் காரணமாகி விட்டது? என்று; ஆக எல்லாமே நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான இருக் கிறது! என்கிறார் இளையராஜா. (குமுதம் 27.3.2013)

அர்த்தம் கொழுத்த இந்து மதத்தில் தத்துவார்த்தங்களை இப்படி எல்லாம் இசை இயக்குநர் இளையராசா தொடர்ந்து குமுதத் திலே உதிர்த்துத் தள்ளுகிறார்.

இருந்தும் இருந்தும் ரமண ரிஷியைத் துணைக் கழைத்தாரே - அதுதான் படு தமாஷ்!
தம்முடன் தங்கி இருந்த சீடர் தன் நகைகளை திருடிக் கொண்டு ஓடியதற்கு ரமண ரிஷியையா எடுத் துக் காட்டுக்காகக் கூற வேண்டும்? - அவர் என்ன ஆசா பாசமற்றவரா? - பொருள்கள்மீதான பற்றினைத் துறந்தவரா?

ரிஷி வேடம் போட்டு ஏராளமான சொத்துக்களைக் குவித்த அந்த ஆசாமி, அத்தனை திரண்ட சொத் துகளையும், தன் சகோதரர் மகனுக் குத்தானே எழுதி வைத்தார்.

வழக்குத் தொடுக்கப்பட்டதே - துறவிக்கு அண்ணன் தம்பி பாச மெல்லாம் இருக்கலாமா? என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்பொழுது துறவி யானேன்? அதெல்லாம் ஒரு மண் ணாங்கட்டியும் கிடையாது! என்று நீதிமன்றத்தில் சொல்லவில்லையா ரமண ரிஷி?

(நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பாற்ற அருள்பாலித்த அந்த ரமணரிஷி எந்த நோய் கண்டு இறந் தார் என்றெல்லாம் சொல்லுவது உகந்ததல்ல என்பதால் அதனைப் புறந்தள்ளுகிறோம்).

தமிழ் ஓவியா said...

திரிபுரா வழிகாட்டுகிறது!


ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்று கின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் தொலைக் காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச் சிகளை தொலைக்காட்சியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.

இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத் தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.

இந்தத் தகவல் இந்தியா முழுமையும் நல்லதோர் சிந்தனை - பகுத்தறிவு மனப்பான்மை முகிழ்த்துக் கிளம்புவதற்கு வித்திடும் என்று எதிர் பார்க்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய திரிபுரா மாநில அரசையும் முதல் அமைச்சரையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

சாமியார்கள்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் அவர்கள் மோசக்காரர்கள். காமக் கொடூரர்கள் என்பதை சந்தேகமற்ற முறையில் நிரூபித்துக் கொண் டுள்ளன.

தமிழ் ஓவியா said...

விளம்பரம் பெற்ற சந்திரா சாமியார் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் - அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களின் ஆலோசகர்களாக இருந்து ஆயுத பேர ஊழல் வரைக்கும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு!

ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்பட்ட சங்கராச் சாரியார்கள் கொலைக் குற்றத்தில் சிக்கி சிறைச்சாலைக்குச் சென்று வந்து விட்டார்கள். இவர்களின் காவி வேடம் என்பது இவர்கள் செய்யும் காலித்தனங்களுக்கு, மோசடிகளுக்கு மூடு திரையாக உள்ளது என்பதுதான் உண்மை.

அதேபோல சோதிடம் என்பதும் இந்த நாட்டைப் பீடித்த கேடாகும். மக்களைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்தும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகும்.

பூமியிலிருந்து எத்தனையோ லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் இங்குள்ள மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்பதெல்லாம் எத்தகைய பைத்தியக்காரத்தனம்?

சோதிடத்துக்கும், அறிவியலுக்கும் ஏதாவது சம்பந்த முண்டா? கோள்களின் பட்டியலில் நட்சத்திரமாகிய சூரியனை இணைத்து சோதிடம் கூறிக் கொண்டு திரிகிறார்களே - இதைவிட நகைச்சுவை வேறு ஏதேனும் உண்டா?

பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளின் பட்டியலில் சேர்த்து பூமியைக் கை விட்டுவிட்ட இந்தப் புத்திசாலிகள்பற்றி எப்படி மதிப்பிடுவது!

உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடைபெற்ற நேபாளத்தில் இந்து மன்னர் குடும்பமே சோதிட நம்பிக்கை யால் படுகொலை செய்யப்பட்டதை எல்லாம் பார்த்த பிறகும் கூட சோதிடத்தை அனுமதிக்கலாமா?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சோதி டத்தைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்த்தது. தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைக்க முனைந்ததும் (திராவிடர் கழகத்தின் போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது) நாம் இன்னும் காட்டு விலங்காண்டி காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51(ய)) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே. அதன்படி சோதிடம், சாமியார் குப்பை களை அறிவியல் கருவியான தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வெளியிடலாமா?
திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்காரை வெகுவாகப் பாராட்டுகிறோம். பல எதிர்ப்புகள் வரும், விமர்சனங்கள் வெடிக்கும்; அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உறுதியாக நின்று முறியடித்து இந்தியாவுக்கே பகுத்தறிவு வெளிச்சம் கொடுத்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இதற்குப் பிறகாவது மத்திய - மாநில ஆட்சிகள் அறிவுக் கொள்முதல் பெறட்டும்! செயல்படட்டும்!!