இன்றைக்கு தமிழகமெங்கும் ஈழத்தில் நடந்த
இனப் படுகொலையினை எதிர்த்து சாதி, மத, கட்சி வேறுபாடுகளை கடந்து ஒரு பெரிய
எழுச்சி உண்டாகியுள்ளது. வேதனையான தருணத்திலும் ஆறுதலான ஒன்று. அதுவும்
சமீப காலங்களாக சாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்திய கட்சி களுக்கு பெரும்
பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. (ஆமாம் அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்!
கொஞ்ச நாட்களாக கடை மூடியே உள்ளதே) பற்பல அமைப்புகள் இனப் படுகொலையினை
எதிர்த்தும், ஈழ தமிழரின் இன்னல்கள் நீங்க தொடர்ந்து குரலெழுப்பி
வந்தாலும், டெசோ அமைப்பின் மறுவுருவாக்கத்திற்குப் பிறகு போராட்டம் அடுத்த
முக்கிய கட்டத்திற்கு சென் றது என்றால் அது மிகையாகாது. டெசோ அமைப்பு
சரியான நேரத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்களால் தமிழர் தலைவர் ஆசிரியர்,
எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுபவீ அவர்கள்
ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டது. டெசோவின் சாதனை!
ஈழத் தமிழர் பிரச்சினையினை பல சிறிய
அமைப்புகள் ஆதரித்து குரல் எழுப்பி வந்தாலும் தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ
அதைப் பெரிதாக அவர்களால் கொண்டுச் செல்ல முடியவில்லை, எந்த தாக்கத்தையும்
ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. டெசோ அதை செய்து
காட்டிவிட்டது. இந்த தருணத்தில், எல்லோரும் ஒருங்கிணைந்து தங்கள் சுய
விருப்பு வெறுப்புகளை களைந்து டெசோ மூலமாக இப்பிரச்சினைக்கு தொடர்
அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு இது மிக முக்கியமான காலக் கட்டம். ஆனால்
நடப்பதோ வேறு. ஒரு சில அமைப்புகள் மற்றும் பத்திரிகை கள் தாங்கள் தான்
ஈழத் தமிழரின் வாழ்விற்கு ஏக போக உரிமையாளர்கள் போலவும் மற்றவர் களுக்கு
இதில் என்ன வேலை என எண்ணிச் செயல்படுவது வேதனையிலும் வேதனை. அது
மட்டுமின்றி, குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழி பறித்தது போல,டெசோ
அமைப்பையும் குறிப்பாக திமுக மற்றும் கலைஞர் அவர்களை குறிவைத்து தாக்குவது
நமக்கு அவர்களின் அடிப் படை நோக்கத்தினையே சந்தேகப்பட வைக்கிறது. எந்த
தொலைக்காட்சியில் நடக்கும் விவாதம் ஆகட்டும், எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு
எதுவேண்டும் என்றாலும் இருக்கட்டும், ஒரே குறிக்கோள் கலைஞரைக்
கொச்சைப்படுத்த வேண்டும். தாக்க வேண்டும்.
ஆபிரகாம் லிங்கன் சொன்னது மாதிரி, ஒரு
சிலரை எப்போதும் ஏமாற்றிவிடலாம். எல்லோரையும் ஒரு சில முறை
ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றி விட முடியாது
என்பதுதான் உண்மை. இவர்களால் தொடர்ந்து தங்கள் பொய்ப்புரை மூலமாக மக்களை
ஏமாற்றி விடமுடியாது. நேற்று முளைத்த மழையில் இன்று முளைத்த காளான்கள் நுரை
யீரல் பிதுங்கக் கத்துவதுதான் வேடிக்கை. இதில் ஒரு காளான், ஏதோ தம்பி
பிரபாகரனின் தளபதியாக போர்முனையில் இருந்து போரினை நடத்தியது போல
பேசுவதுதான் 'சுத்தக் காமெடி'. தமிழ் திரைபடங்களில்தான் எவ்வளவு சோகமான
துயரமான கதையாக இருந்தாலும் இடை யிடையே நகைச்சுவை காட்சி என்கிற கோமாளித்
தனம் அரங்கேறும். ஒருவேளை அத் துறையினை சார்ந்த 'தமிழர்' என்பதால்
தொடர்ந்து நகைச் சுவையாக பேசி வருகிறார் போலும். வரலாறுகளை
மறந்துவிட்டாரா அல்லது தெரியாமலேயே பேசுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது.
80களின் தொடக்கத்தில் வெளிக்கடை சிறையில் குட்டி மணி தங்கதுரை உட்பட 35
பேர் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நேரத்தில் தமிழகத்தில்
பெரும் கிளர்ச் சியையும் கொந்தளிப்பையும் உரு வாக்கியதில் பெரும் பங்கு
திமுக விற்குதான் என் பதை மறக்கமுடியுமா? அன்று முதல் திமுக கட்சி தலைமை
மட்டுமின்றி. எல்லா மட்டத்திலும், கடைநிலைத் தொண்டன், மற்றும் திமுக
அனுதாபிகள் வரை தொடர்ச் சியாக முழு மூச்சாக ஈழப் பிரச் சினையில் தங்களை
அர்பணித்துக் கொண்டவர்கள்.
எம்.ஜி.ஆர்.,
மறைந்த முன்னாள் முதல்வர்
எம்ஜியார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பண உதவி செய்திருந்தாலும் உளமார
அவர் இந்த ஈழப் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை என்பதுதான்
உண்மை. இதை அனை வரும் அறிந்திருந்தாலும் காலஞ்சென்ற டி ஜீ பி மோகன்தாஸ்
அவர்களின் புத்தகம் இதற்கு கூடுத லாக இன்னொரு சாட்சி. (கொடுமை என்னவென்
றால் திமுக 1981இல் அறவழியில் போராட்டம் நடத்திய பொழுது அதிமுக அரசு கலைஞரை
கைது செய்து சிறையில் தள்ளியது). அதிமுக கட்சியின் தலைமையே இப்படியென்றால்
அதிமுக கட்சியினரைப் பற்றி ஒன்றுமே கேட்கவேண்டாம். அய்யோ பாவம்,
அரிச்சுவடியே அறியாதவர்கள். 'இங்கிருந்து பிழைப்புக்காக அங்கே போய்விட்டு
தனி நாடு கேட்பது என்ன நியாயம்' என்கிற அளவு தான் அவர்களுக்கு ஈழ மக்களின்
இன்னல்களைப் பற்றிய அறிவு. ஆனால், திமுகவின் நிலையே வேறு. அவர்கள்
உணர்வு பூர்வமாக இதை எதிர் கொண்டவர்கள். ஈழப் பிரச்சினைக்காக தன்
இன்னுயிரை முதன்முதலாக மாய்த்துக் கொண்ட வன் ஒரு திமுக தொண்டன். 80களின்
இறுதிவரை ஈழ உணர்வினை அணையாமல் பார்த்துக் கொண் டவர்கள் திமுகவினர்.
திமுக சந்தித்த இழப்புகள் இதனால் அவர்கள்
எந்தக் காலகட்டத்திலும் அரசியல் பயன் அடைந்தவர்கள் அல்ல. இழந்தது தான்
ஏராளம். ஆட்சிப் பறிபோனது ஒருபுறம். சிறை தண்டனை, பொருள் இழப்பு, கட்சிப்
பிளவு, அவமானம் எத்தனை எத்தனையோ. ஒரு முறையல்ல இருமுறை ஆட்சியை இழந்த
கட்சி திமுக.தான். இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனைகள்
திமுகவிற்கு மட்டும் தான் ஏற்பட்டது. எந்த அரசியல் கட்சி இதுவரை இப்படி
தங்கள் எதிர்காலத்தையே விலை கொடுத்திருப்பார்கள்? (பாரதீய ஜனதா கட்சி கூட
ஒட்டு வராது என்று தெரிந்ததும் இராமரை கழட்டி விட்டுவிட்டார்களே!). ஆனால்
திமுக தலைமை என்றுமே தடம் புரண்டது இல்லையே. அதைவிட அக்கட்சியின்
இலட்சக்கணக்கான தொண்டர்கள் நெஞ்சில், ஈழம் என்றத் தீயை அணையாமல்
வைத்திருந்தனரே. (அதன் வெளிப் பாடே இன்றைக்கு டெசோவின் ஆர்ப்பாட்டங்
களுக்கு கட்சியினரிடம் பெரும் எழுச்சி காண முடிகிறது). காங்கிரஸ்
கூட்டணியை விட்டு விலகிய தும் பட்டாசு வெடித்து கொண்டாடியது,
இதுநாள்
வரை மூடிவைத்திருந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு தானே. வேறு எந்தக்
கட்சிக்கும், குறிப்பாக மற்றொரு பெரிய கட்சியான அதிமுக வினர்க்கு ஈழப்
பிரச்சினை என்பது என்றைக்கும் நோக்கமாக இருந்தது இல்லை. திமுகவின் தொடர்
தோல்விகளை அவர்கள்தானே அறுவடை செய்து கொண்டனர். ராஜீவ் கொலையை ஏதோ திமுக
தலைமை திட்டம் போட்டுச் செய்தது போல சுப்பிரமணிய சுவாமி, சோ மற்றும்
வாழப்பாடிக் கூட்டங்கள், ஊடகங்கள் மூலமாக பரப்பிவந்தனர்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசும் (இதில்
காங் கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் என்ற வித்தியாசம் பாராமல்) மாநில அதிமுக
அரசும், தமிழகத்தில் ஈழம், பிரபாகரன் என்கிற சொற்றொடர்களை பயன்படுத்துவதே
தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற ஒரு நிலையினைக் கொண்டுவந்தது. அப்படி
மீறிப் பயன் படுத்தியவர்களை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளி அச்ச உணர்வினை
உருவாக்கினர்.
அதிமுகவைக் குறை கூறாதது - ஏன்?
இன்றைக்கு
திமுகவை குறை கூறும் 'ஞானிகள்' அதிமுகவையோ, முதல்வர் ஜெயலலிதாவையோ எந்தக்
குற்றமும் கூறமாட்டார்கள். காரணம் ஒரு பக்கம் 'அவாள்' பாசமாக இருந்தாலும்
இன்னொரு பக்கம் சிறைக்கு போய்விடுவோமோ என்ற பயம். கலைஞரைத் தானே சகட்டு
மேனிக்கு விமர்சிக்க முடியும். மே 2009இல், பெரிய உலக நாடுகளின் ,
இந்தியா உட்பட, மேற்பார்வையில் ஈழத்தில் இனப் படுகொலை நடந்து முடிந்த
பிறகு, இன்றைக்கு திமுகவின் மீதும் அதன் தலைவரின் மீதும் ஒரு சில
விஷமிகள், வேண்டுமென்றே குற்றச்சாற்றுகள் சுமத் துவது ஏதோ உள்நோக்கம்
உள்ளது போல இருக் கிறது. திமுகவின் மீது மட்டும் குற்றம் சொல்பவர்கள் ஏன்
அதிமுகவினரை வசதியாக விட்டுவிட்டார்கள் என்பது புரியவில்லை. அன்றைக்கு
வாய்மூடி மௌனியாக இருந்தது எல்லா அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்களும்
தானே. ஏன் இன்றுப் போல அன்று மக்கள் வீதிக்கு வந்து போராடவில்லை? எந்த
திரைக்காட்சி அன்றைக்கு ரத்து செய்யப்பட்டது?
மக்கள் எப்பொழுதும் போலத்
தானே தொலை காட்சியிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி இருந் தார்கள். மேதகு
பிரபாகரன் அவர்களின் மரணம் சாதிக்க முடியாததை இன்று அவர்தம் அன்பு மகனின்
மரணம் சாதித்து விட்டது. 30 ஆண்டுக்களுக்குப் பிறகு மீண்டும் அதே எழுச்சி.
அதே உணர்ச்சி பிரவாகம். இதை மட்டுப்படுத்த உளவுத்துறை இந்த அமைப்புகள்
மூலம் சதி செய்கிறதோ என்கிற அய்யம் தான் வருகிறது. முதல்வர் ஜெயலலிதா,
இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இனப் படுகொலையினை, 'போர் என்றால் பொது மக்கள்
சாவது நடைமுறையில் ஒன்று' என்றார். அதைப்பற்றி இன்று யாரும் விவாதிப்பது
இல்லையே. திரும்பத் திரும்ப திமுகவே தாக்கப்படுகிறது. 'அன்றே ஆட் சியை
விட்டு திமுக வெளியேறி இருக்க வேண்டும்' என்று கூறுவது ஈழத் தமிழரின்பால்
உள்ள அக்கறை போலத் தெரியவில்லை. நிச்சயமாக இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது.
இன்றைக்கு கூட மாணவர் களின் எழுச்சியினை ஒடுக்க ஆளும் அதிமுக அரசு தொடர்
விடுமுறை அளித்து போராட்டத்தை நீர்த்துப் போக முயற்சிக்கிறதே ஏன் வாய்
திறந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்பப்பா என்ன கபட நாடகம்! இரட்டை
வேடம்!
ஏற்கனவே இருமுறை திமுக ஆட்சியை
இழந்தபொழுது, மக்கள் ஈழப் பிரச்சினையை கருத்தில் கொண்டு திமுகவை வெற்றிப்
பெற செய்யவில்லையே. ஏன் ஈழ போராட்ட வரலாற் றின் அசகாய 'சூரர்' வைகோவை 2009
நாடாளு மன்ற தேர்தலில் அவர்தம் தொகுதி மக்களே அவரைத் தோற்கடித்து
விட்டனர்-- அதற்கு என்ன பதில்? எந்த அரசியல் கட்சியும் மக்கள் நாடித்
துடிப்பை அறிந்துதான் செயல்பட முடியும் என்பது வரலாறு நமக்கு சொல்லும்
பாடம் -- திமுக அதையும் தாண்டி தேர்தல் இலாப நட்ட கணக்கு பாராமல் தங்களை
ஈழப் பிரச்சினையில் ஈடுப்படுத்தி கொண்டது என்பது தான் உண்மை. இன்னொரு
செய்தியையும் நினைவில் கொள்ள வேண்டியது, ஆட்சிதான் திமுகவிடம் இருந்ததே
தவிர அரசாங்கம் பார்ப்பனியத்திடமும் மலை யாளிகளிடமும் தான் இருந்தது.
பெரும்பாலான தமிழர்கள் கணினி துறைக்கு வேலைக்கு சென்று விட்டு, முகநூலில்
'லைக்', 'கமெண்ட்' போடுவ தோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்
கின்றனர். தமிழர்கள் முக்கிய முடிவெடுக்கும் மத்திய அரசுத் துறைகளிலும்,
ஆங்கில ஊடகங் களிலும் கோலோச்சவில்லை என்பது இன்னொரு குறை.
அம்மாவுக்கு டில்லி சிம்மாசனமா?
திமுகவை அரசியலில் தோற்கடித்துவிட்டு
எப்படியாவது 'அம்மாவை' டில்லியில் அரியாசனம் ஏற்றிவிடவேண்டும். அதற்காக
பக்கம்பக்கமாக இன்றைக்கு திமுக மீது குற்றம் சுமத்தும் ஆனந்த விகடன், மே
19க்கு பிறகு அவர்கள் பத்திரிகையின் போக்கில் என்ன மாறுதல் செய்து
விட்டார்கள் ? இனிமேல் அரை குறை ஆடையோடு நடிகைகளின் கவர்ச்சிப் படம் போட
மாட்டேன் என்று முடிவு செய்ததார்களா? இல்லையே. புலம் பெயர்ந்த தமிழர்களின்
உணர்வு களை தூண்டி இங்கு கல்லா கட்டியதுதான் மிச்சம் . ஒரு பக்கம் ஈழ
மக்களுக்கு கண்ணீர். அடுத்த பக்கத்திலேயே நடிகையின் ஆபாசப் படம் போட்டு இன
உணர்வினை காயடிப்பது. இதைத் தானே விகடன் செய்து வந்தது. ஏமாளி தமிழன்
வெட்கம் கெட்டு அந்தப் பத்திரிகையை வாங் கியதுதான் வேதனை. ஆமாம் திமுக
அப்படித்தான் தமிழர்க்கு துரோகம் செய்தது என்றால் ஏன் தளபதி ஸ்டாலின்
அவர்களைப் பற்றி விகடன் நூல் வெளியிட்டுக் காசு பார்க்க வேண்டும். அடடா
என்ன தமிழ்ப் பற்று!
தொலைக்காட்சி விவாதங்களில் வரலாறுகளை
திமுகவினரோ அல்லது திமுக ஆதரவாளர்களோ சொல்ல வரும்பொழுது இடைமறித்து
'எதற்கு பழைய கதை, மே 2009அய்ப் பற்றி பேசுங்கள் என்று விவாதத்தினை திசை
திருப்புவதும் ஒருவகையில் முரண் தானே!. மே 2009 மட்டும் பழையக் கதை
அல்லாமல் புதிய கதையா ?
அடுத்த படம் சூட்டிங்குக்கா?
இப்பொழுது வாய் கிழிய தொலைக்காட்சியில்
பேசுபவர்கள் அப்போது எங்கிருந்தார்கள் என்பதுதான் நம் கேள்வி.
எல்லோரையும் போல இவர்களும் இனப்படுகொலையை வேடிக்கை தானே பார்த்தார்கள்.
குறைந்தப் பட்சம் 'அய்யோ எல்லாம் முடிந்து போய்விட்டதே, இனி நான் இருந்து
என்ன பயன்' என்று யாரும் தங்கள் வாழ்கையை முடித்துக் கொள்ளவில்லையே.
அடுத்த படச் சூட்டிங்குக்கு தானே கிளம்பினார்கள். இன்னும் சிலர், இன்னும்
'தம்பி இறக்க வில்லை'யென்று எல்லோரையும் நம்பவைத்து பிரச்சினையை வேறு
திசைக்கு அல்லவா திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்.. இவர்கள் என்றைக் குமே
ஈழப் பிரச்சின்னைக்கு உருப்படியாக எதுவுமே செய்தது இல்லை. தாங்கள்தான்
ஒட்டு மொத்த குத்தகைகாரர்கள் போல நினைத்துக் கொண்டு மற்றவர்கள்
எல்லோரையும் ஏளனப்படுத்தி மொத்த பிரச்சினையையும் செயலிழக்க செய்து
கோமாவில் வைத்திருந் தார்கள். இதைத் தானே மத்திய அரசும், உளவுத் துறையும்
எதிர்ப்பார்த்தது . டெசோ தொடங்கிய பிறகுத் தானே தமிழகத்தில் மீண்டும்
உணர்வு பூர்வமான எழுச்சி, அமைப்புரீதியாக ஏற்பட்டது. வட இந்தியர்களும்,
ஏன் உலக அளவிலும் பல நாட்டு தூதுவ ர்கள் அளவில் கொண்டு சென்றது டெசோ தானே.
தயவுசெய்து 'தமிழ் ஆர்வலர் களிடம்' வேண்டுவது இந்த நேரத்தில் எல்லோரும்
ஒன்று சேர்ந்து மத்திய அரசாங்கத்திற்கும், அய்.நா. அமைப்புக்கும் அழுத்தம்
கொடுத்து, ராஜபக் சேவிற்கு தண்டனை வாங்கித்தருவதும், ஈழ விடுதலை அடைவதுமாக
நம் லட்சியம் இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் குறை கூறி லட்சியத்தை
சிதைத்து விடக் கூடாது. தமிழர் தலைவர் கூறியது போல எது நம்மை இணைக்கிறதோ
அதில் கவனம் செலுத்திக் குறிக் கோளினை நோக்கி முன்னேறுவோம். இலக்கை
அடைந்தவுடன் வேண்டுமானால் மோதிக் கொள் ளலாம். ஆதலினால், உங்களது
செய்கைகளால் இப்பொழுது ஏற்பட்டுள்ள உணர்வுகளை மங்கச் செய்து விடவேண்டாம்.
இதுவே தாழ்மையான வேண்டுகோள்.
சிந்தித்துப் பாருங்கள்... தெளிவாகப் புரியும்.
------------------------------- வெளிச்சம் --”விடுதலை” 24-3-2013
36 comments:
சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பார்ப்பன நியமனம்
உயர்நீதிமன்றம் தடை
மதுரை, மார்ச் 24- சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இடஒதுக்கீட்டுக்கு விரோதமாக பார்ப்பனர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடையை வழங்கியுள்ளது.
பிப்ரவரி - 13 ஆம் தேதியிட்டு, சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு என்ற தலைப்பில், ஒரு அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. அதில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த, தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு 15.03.2013 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன, அதாவது
1. பதவி பெயர் - இளநிலை உதவியாளர்
ஊதிய விகிதம் - ரூ. 5,200 - 15,900
+ தர ஊதியம் - ரூ. 2,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 3
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் கணினி - தட்டச்சுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் - பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
2. பதவி பெயர் - பிரதான ஆலயக் காவலர்
ஊதிய விகிதம் - ரூ. 4,000 - 10,000
+ தர ஊதியம் - ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 10
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 3. பதவி பெயர் - பிரதான ஆலய சிறீபாதம்
(சிலையைத் தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் - ரூ. 4,100 - 10,000
+ தர ஊதியம் - ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 4
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பதவி பெயர் - உபகோயில் சிறீபாதம்
(சுற்றுப் பிரகார சிலையை தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் - ரூ. 2,800 - 8,400
+ தர ஊதியம் - ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பதவி பெயர் - உபகோயில் காவலர்
(சுற்றுப் பிரகார கோயில் காவலர்)
ஊதிய விகிதம் - ரூ. 2,800 - 8,400
+ தர ஊதியம் - ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 7
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
6. பதவி பெயர் - சன்னதி வாசல்
(சுற்றுப் பிரகார கோயிலின்
அர்ச்சகர்)
ஊதிய விகிதம் - ரூ. 4,100 - 10,000
+ தர ஊதியம் - ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
7. பதவி பெயர் - உபகோயில் பரிசாரகர்
(உதவி வேலைகள்)
ஊதிய விகிதம் - ரூ. 2,800 - 8,400
+ தர ஊதியம் - ரூ. 1,200
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 1
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட ஏழு வகையான பணியிடங்களுக்கும் இணை ஆணையரிடம் - செயல் அலுவலர் எஸ்.கல்யாணி அவர்களின் பெயரிலும், இரா.சேஷாயி (தலைவர்) எஸ்.பி.ரங்காச்சாரி, கே.என்.சீனிவாசன், ஏ.டி.கஸ்தூரி, பராசர.ஆர். சிறீவெங்கட பட்டர் (சுழல் முறை அறங்காவலர்) ஆகிய அறங்காவல் குழுவினர் பெயரிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பையடுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் திருவண்ணாமலை அரங்கநாதன் சார்பில் வழக்கறிஞர் ராஜூ மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில் அறநிலையத்துறையின் சட்டப்படி, ஜாதியைக் குறிப்பிட்டு வேலைக்கு அழைக்க முடியாது. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படியும், இந்து அறநிலையத்துறை சட்டப்படியும் செல்லத்தக்கது அல்ல என்றும், அரசாங்கத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, அர்ச்சகர் பதவிக்கு நியமனம் செய்வது செல்லாது. ஆகவே மேற்கண்ட பணியிடங்களுக்கான நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு 20.3.2013 அன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹரி பரந்தாமன் அவர்கள் இதை விசாரித்து சிறீரங்கம் கோயில் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிக்கிறார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
இதுபற்றி வழக்கறிஞர் ராஜூவிடம் கேட்ட போது, இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு அரசியல் சட்டத் தின் சரத்து 16-க்கு விரோதமானது. வேலைக் காக ஜாதிப் பாகுபாடுகள் காட்டக்கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆகவே இதற்கு இடைக்காலத் தடை பெற்றிருக்கிறோம் என்று கூறினார். இவர் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிற அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் - வழக்கிலும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சார்பிலும் வாதாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது
இதைப்பற்றி தமிழ் அர்ச்சகர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.இராஜவிண்ணரசு அவர்கள் குறிப்பிடும் போது சிறீரங்கம் கோயிலில் காலி பணியிடத்திற்கான தேர்வு என்பது, இந்திய அரசியலமைப்புக்கும், இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கும் விரோதமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த அறிவிப்பை வெளியிட்ட அறங்காவலர் குழுவே, இட ஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமாக உள்ளது. அதாவது அறங் காவல் துறை சட்டப்படி இந்தக் குழுவில் ஒரு தாழ்த்தப் பட்டவர், ஒரு பெண் இருக்க வேண்டும். ஏ.டி.கஸ்தூரி என்பவர் இருக்கிறார். ஆனால் தாழ்த்தப் பட்டவர் இல்லை. முழுக்க முழுக்க இந்த அறங்காவல் குழுவினரின் தலைவர் இரா.சேஷாயிலிருந்து ஏ.டி.கஸ்தூரி உட்பட அனைவரும் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். இதுவே இடஒதுக்கீட் டுக்கு எதிராக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
அவாளுக்கே உரிய தந்திரம்
இராஜவிண்ணரசு மேலும் கூறும் போது பணியிடங் களுக்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, சன்னதி வாசல் - என்ற வார்த்தை அர்ச்சகர் - என்ற வார்த் தைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, இளநிலை உதவியாளர், பிரதான ஆலயக் காவலர், பிரதான ஆலய சிறீபாதம் (சிலையைத் தூக்குகிறவர்), உபகோயில் சிறீபாதம் (சுற்றுப்பிரகார சிலையைத் தூக்குகிறவர்), உபகோயில் காவலர், உபகோயில் பரிசாரகர் (உதவிப் பணியாளர்) என்றெல்லாம் பணிகளின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு, சுற்றுப்பிரகார கோயிலின் அர்ச்சகர் பணிக்கு மட்டும், அர்ச்சகர் - என்ற வார்த்தையை நேரிடையாக பயன்படுத்தாமல், சன்னதி வாசல் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இப்படிப்பட்ட தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
நிரந்தரத் தீர்வு என்ன?
இராஜவிண்ணரசு மேலும் கூறுகையில், இடைக் காலத் தடை பெற்றிருப்பது மட்டும் தீர்வாகாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் வெற்றி பெறுவது தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். அதற்குத் தடையாய் இருப்பது, இந்த வழக்கின் எதிர்மனுதாரராக வழக்காடி வரும் வழக்கறிஞர் பராசரன், அவர் ஒரு பார்ப்பனர். தொடக்க காலம் முதலே இந்த வழக்கில் வாதாடி வருகிறார். எங்கள் தரப்பில் இதுபோன்ற நிலையான வழக்கறிஞர் இல்லை. இதுவே இந்த வழக்கு வெற்றி பெறுவதற்கு பெருந்தடையாக இருக்கிறது, என்று கூறிவிட்டு மேலும் அவர் இதற்காகவே காலமெல்லாம் பாடுபட்டுவரும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்த கொள்கையில் ஒத்த கருத்துள்ள முற்போக்கு அமைப்புகள் இணைந்து ஒரு நிரந்தரமான வழக்கறிஞர் குழுவை நியமிக்க வேண்டும் என்பதை என்னுடைய கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன் என்று கேட்டுக் கொண்டார்.
ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபற்றி ராஜபக்சே ஆணவப் பேச்சு
கொழும்பு, மார்ச்.24- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் வெற்றி கண்டது குறித்து இலங்கை அதிபர் ராஜ பக்சே கருத்து தெரிவிக் கையில், தொடுக்கப் பட்ட தாக்குதல்கள் எங்களை அடக்கி விட முடியாது என ஆணவத் துடன் கூறியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத் தின் மீது கடந்த 21-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடந் தது. இதில் 25 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக இலங்கை அதிபர் ராஜபக்சே மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில், இலங்கையின் வடமேற்கு மாகாணம், குருணேகலா ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்க தீர்மானம் குறித்து கருத்து வெளியிட் டார். அப்போது அவர் ஆணவத் துடன் கூறியதாவது:-
இந்த தாக்குதல் (அமெரிக்க தீர்மான ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி) எங்களுக்கு வியப்பை அளிக்கவில்லை. இந்த தாக்குதல் எங்களை அடக்கி விட முடியாது. இவை எங்களை தோற்கடித்து விடவும் இயலாது. எந்த விதத்திலும் எங்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது. விடுதலைப்புலிகளை எனது தலைமையிலான ராணுவம் வீழ்த்தி விட்ட நிலையில், இந்த தாக் குதல்களை விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப் பிடம் இருந்தும், இலங்கை எதிர்ப்பு சக்தி களிடமிருந்தும் எதிர் பார்த்தேன். எனது அரசு மீதான அனைத்து குற்றச் சாட்டுகளும் தவறானவை. உண் மைக்கு அப்பாற்பட்ட நோக்கம் கொண்டவை.
இந்த நாட்டின் ஒரு பகுதி 2009-க்கு முன்பு (தமிழ்) ஈழம் என அடையாளம் காணப்பட்டது. இது போர் நிறுத்த உடன்படிக்கையிலும் ஏற்கப்பட்டு, சிறிது அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச சமூகம் வழிவகுத்த போர் நிறுத்த உடன்படிக்கையை நாங்கள் ஒழிக்க முடியாமல் போயிருந்தால், இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.
மக்களை ஏமாற்றும் ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!
திரிபுரா அரசு முடிவு!!
அகர்தலா, மார்ச் 24- ஜோசியர்களும், சாமி யார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுரா மாநிலத் தில் சில ஜோசியர்கள் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சி களை நடத்து கின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என் றும் தங்களை அழைத் துக் கொள்ளும் சில ரும் தொலைக்காட்சி யில் நிகழ்ச்சி நடத்து கின்றனர்.
இந்த நிகழ்ச்சி களின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின் றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும் பத்தின் நலனுக்காக சில சித்து வேலை களை செய்ய வேண் டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந் திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத் துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
சாமியார்களும், மந் திரவாதிகளும் ஜோசியர் களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.
இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம் பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சி களை தொலைக்காட்சி யில் செய்து காட்டுகின் றனர். தொலைபேசி யில் கேள்வி கேட்டு இறுதி யில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசி யர்களும் மந்திரவாதி களும் அழைப்பு விடுக் கின்றனர்.
இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படு கின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய் துள்ளது.
சட்டமன்ற தேர் தல் போன்ற சில முக் கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என் றும் தற்போது சட்ட மன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்தி ரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.
கடவுள்கள் காப்பாற்றவில்லையே! பெண்களிடம் செயின் வழிப்பறி திருட்டு
ஆவடி, மார்ச் 24- ஆவடி காந்தி நகர் வேதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி ராதா (53). நேற்று இரவு ராதா தனது மாமியார் அம்முகுட்டியுடன் அங்குள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து இரவு திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர்களை மறித்து நிறுத்தினர். ராதா அணிந்திருந்த அய்ந்து பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
திருநின்றவூர் லட்சுமிபுரம் 4ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராகிணி (40). இவர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ராகிணி, மகன் கார்த்திக்குடன் முருகேசன் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு திரும் பினார். 12ஆவது குறுக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை பகுதியில் அவர்களை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மறித்தனர். ராகிணியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து தப்பிவிட்டனர். இரண்டு வழிப்பறியிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ஆவடி, திருநின்றவூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அம்மன் கோவிலில் நகை கொள்ளை
திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் பழண்டியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் கொள்ளையர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை திருடினர். பின்னர் உண்டியலை கடப் பாரையால் உடைக்க முயற்சித்தனர். சத்தம்கேட்டு அருகில் வீட்டில் வசிக்கும் ஒருவர் குரல் கொடுக்கவே கொள்ளையர்கள் தப்பிசென்று விட்டனர்.
யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்
ஒற்றுமை உணர்வால்தான் உறுதியை காப்பாற்ற முடியும்
தொழிலாளர்களிடையே கலைஞர் பேச்சு
சென்னை, மார்ச் 24- ஒற்றுமையாக இருங்கள். அரவணைத்து செல்லுங் கள். நீங்கள் காட்டும் உறுதியை ஒற்றுமை உணர்வால்தான் காப்பாற்ற முடியும் என தொ.மு.ச. பேரவை கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் பேசினார்.
தொமுச பேரவை 23ஆவது பொதுக் குழு சிறப்பு கூட்டம் கலைஞர் அரங்கில் நேற்று (23.3.2013) மாலை நடந்தது. பேரவை தலைவர் செ.குப்பு சாமி தலைமை தாங்கினார். திமுக தொழிலாளர் அணி செயலாளர் பேரூர் நடராஜன் முன்னிலை வகித் தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், பேரவை பொருளாளர் ரத்தின சபாபதி, இணை பொது செயலாளர் பேச்சிமுத்து ஆகியோர் பேசினர். பேரவை பொதுசெயலாளர் மு.சண் முகம் வரவேற்றார். இதில் 79 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் பேசியதாவது:
இந்த தொழிற்சங்கத்துக்கு நிகரான தொழிற்சங்கம் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இல்லை என்ற அள வுக்கு நடத்தி கொண்டிருக்கிறோம். இது சாமான்யமான காரியம் அல்ல. ஒரு கட்சியை உருவாக்கி நடத்தலாம். தமிழ் நாட்டில் கட்சி உருவாக்கு வதும் நடத்துவதும் பெரிய காரியம் அல்ல. பெரிய பெரிய விளம்பரம் செய்தாலே, பெரிய கட்சி என்று எண்ணும் நிலை உள்ளது. திடீர் திடீர் என்று இயக்கங் கள் முளைத்து வருகின்றன.
திமுக திடீரென்று காலையில் பெய்த மழையில் மாலையில் உருவான செடி அல்ல. இது அரும்பாடுபட்டு, வியர்வை, ரத்தம் சிந்தி உழைப்பை நல்கி பல்லா யிரக்கணக்கானோர் நடத்தும் இயக் கம். நாம் பட்டபாடு வீண்போகாது.
மே தினம் கொண்டாடுவோம் என்று அரசின் சார்பில் அறிவித்தோம். என்றாவது எதிர்பார்த்தோமா? விடு முறையோடு கூடிய மே தினத்தை கொண்டாடுகிறோம். சட்டமன்றத் தில், நான் முதல்வராக இருந்தபோது, கம்யூனிஸ்ட் நண்பர் கேட்டார், மே தின பூங்கா இல்லையே என்று. அடுத்த வாரமே அமைக்கப்பட்டது. இது பிள்ளையார் கோயில் கட்டுவது போன்றதல்ல. புரட்சியின் சின்னம். தொழிலாளர்களின் உரிமை, நன் மைக்காக எத்தனையோ புரட்சிகள் நடந்துள்ளன. அந்த வரலாற்று புகழ் வாய்ந்த மே தினத்தை நாம் கொண் டாடுகிறோம்.
மே தினம் என்றால் குறிப்பிட்ட கட்சிக்கு உரியது என்று எண்ணாமல், உலக தொழிலாளர்கள் அனைவருக் கும் பொதுவான நாள் என்று நாம் கொண்டாடுகிறோம். நாம் ஆட்சியில் இருந்தால், தொழிலாளர்களுக்காக சாதனை புரிகிறோம். ஆட்சியில் இல்லாவிட்டால், அவர்களுக்காக போராடுகிறோம். எந்த தியாகத்துக் கும் தயார் என்று உரைத்து அதை நிறைவேற்றும் வல்லமை உடையவர் கள் தான் திமுக, தொமுச பேரவை.
நான் தொழிற்சங்க போராட்டம் நடத்தி பயிற்சி பெற்றவன். நான் ஈடு பட்ட முதல் போராட்டம் விவசாய போராட்டம். குளித்தலையில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதும். நங்கவரம் ஜமீன்தார் விவசாய தொழிலாளர் களை நியாயமாக நடத்தாததால் நான் போராட்டம் நடத்தினேன். அதன் பிறகு ஜமீன்தார் பணிந்தார். இது போல் வேறு சில போராட்டங்களி லும் ஈடுபட்டவன் நான்.
திருச்சியில் பீடி தொழிலாளர் களுக்காக போராட் டம் நடத்தினேன். திமுகவும், அன்றைய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் இணைந்திருந்து வெற்றி பெற்றோம். ஒன்றும் தெரியா தவன், போராட்டம் தொழிற்சங்கம் பற்றி பேசுகிறான் என்று நீங்கள் சந்தேகப்படக்கூடாது என்பதால் இதை கூறினேன். எனவே திமுகவில் யாராக இருந்தாலும் எந்த பொறுப் பில் இருந்தாலும் உழைப்பவர்கள் விவசாயிகளின் வேதனை அவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இருக்க மாட்டார்கள். உழவர்கள், உழைப் பாளிகளுக்கான இயக்கம் இது.
உடல்நலம் இல்லை என கூறினேன். ஆனால், கேட்கவில்லை. என்னை இங்கு உட்கார வைத்துவிட்டார்கள். நானும் பேசினேன். அறிவுரை கூறுங் கள் என்றார்கள். ஒரே ஒரு வேண்டு கோள். ஒற்றுமையாக இருங்கள். அர வணைத்து செல்லுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் அன்புடன் தொழிற்சங்கம், இயக்கத்தை நடத்தி செல்லுங்கள். பிரிவினை பெரும் வினை யாக மாறி நம்மையே அழித்துவிடும். தொடர்ந்து நீங்கள் காட்டும் உறு தியை ஒற்றுமை உணர்வால் தான் காப் பாற்ற முடியும். இது இங்குள்ளவர் களுக்கு மட்டுமல்ல திமுக தோழர் களுக்கும், தொழிலாளர் தோழர் களுக்கு இதை கூறுகிறேன். நான் அறிவுரை கூற முனிவரல்ல. உங்களை போல உழைப்பாளி. எனவே, ஒற்று மையாக இருந்து பணியாற்றுங்கள்.
- இவ்வாறு கலைஞர் பேசினார்.
செய்தியும் சிந்தனையும்
சி.பி.அய்.
செய்தி: மாணவர்களாகிய நீங்கள் நடத்திய போராட்டம்தான் தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து வெளியேறச் செய்தது. 2009இல் வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்; அவர்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டிருக்காது. - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு
சிந்தனை: 2009 மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம் என்று சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இப்பொழுதோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.அய்.டி.யூ.சி.யின் பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள், மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளிய கருத்து என்ன தெரியுமா?
இலங்கைப் பிரச்சினை - மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்குமிடையே உள்ள பிரச்சினை - இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கறாராகச் சொல்லி விட்டாரே!
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதத் துக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு சொல்லி நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் காப்பாற்றியிருக்கலாமே?
ஆக, கம்யூனிஸ்டு பார்வையில் இலங்கைப் பிரச்சினை ஒட்டு மொத்தமான நாட்டுப் பிரச்சினை இல்லை, அப்படித்தானே? இனி மேலாவது தோழர் தா.பா. நீட்டி முழக்க மாட்டார் என்று நம்புவோமாக! ஈழத் தமிழர் பிரச்சினையை ஏகடியம் செய்யும் கட்சியினர் தி.மு.க.வையே சதா குற்றம் சுமத்துவது தான் வேடிக்கை - விநோதம்!
நெஞ்சுக்கு நஞ்சு
கேள்வி: திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தி யில. நீங்க எப்படி அல்லா.. அல்லானு பாட்டுப் பாடினீங்க?
எம்.எஸ்.வி: அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங் களுக்குப் பக்கத்துலேயே இருப் பாங்க. முகமது பின் துக்ளக் படத்துல அல்லா.. அல்லா பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன்.
ஆனா, சோ அந்தப் பாட்டை நான் தான் பாடனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியா துன்னு சொல்லிட்டேன். சரி... யாரையெல்லாம் நீ பாட வைக் கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப் போம்னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. சரி.. ஆண்டவன் சித்தம் அதுதான் போலனு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டிலாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண் மையைச் சொன்னார் அது. சீட்டு எழுதுனப்போ எல்லா சீட்டு லயுமே என் பேரைத்தான் எழுதி வெச்சிருக் கார் அந்த மனுஷன்!
இசை இயக்குநர் எம்.எஸ். விசுவநாதன் ஆனந்தவிகடன் இதழுக்கு (27.2.2013) அளித்த பேட்டி தான் மேலே கண்டது.
மேம்போக்காக பார்த்தால் இதில் மறைந்திருக்கும் நாகப் பாம்பு என்ன என்று தெரியாது.
அந்தப் பாடல் நாகூர் அனிபா வால் பாடப்பட்டால் சிறப்பாக இருக் கும் என்று இசை இயக்குநர் எம்.எஸ்.வி. நினைக்கிறார். விட்டு விட வேண்டியதுதானே? எம்.எஸ்.வி.யைவிட இசை மேதையா திருவாளர் சோ ராமசாமி?
நாகூர் அனிபா முசுலிம் ஆயிற்றே - அவரைக் கொண்டு பாடச் செய்தால் எப்படி என்கிற இந்துத் துவா விஷப்பூனை தான் சோ மன தின் ஆழத்தில்.
யார் பாடுவது என்ற முடிவைச் செய்ய சீட்டுக் குலுக்கிப் போடும் தந்திரம் கையாளப்பட்டு, எல்லா சீட்டிலும் எம்.எஸ்.வி. பெயரையே எழுதி வைத்திருந்தார் சோ என்றால் இவர்களின் அறிவு நாணயத்தையும், மோசடியையும் நம் தமிழர்கள் என் றைக்கு உணரப் போகிறார்களோ!
புதிய போப்
வாடிகன் நகரத்தில் அமளி முடிந்து விட்டது - மூப்பின் காரண மாக பெனெடிக்ட் தாமாக முன் வந்து பதவி விலகி வழி விட்டார். அடுத்த போப் யார் என்பது உலக அரங்கில் கேள்வியாக எழுந்தது. ஜனநாயக அடிப்படையில் போப் தேர்வு என்பது கூட ஒரு சிறப்புதான் (அது என்ன சங்கராச்சாரி மடமா?)
புதிய போப் ஜார்ஜ் மேரியோ பெர் கோக்லியோ (இப்பொழுது பிரான் சிஸ் என்று பெயர் மாற்றம்!) எளிமையானவர், பேருந்தில் பயணம் செய்யக் கூடியவர் என்பதெல்லாம் வித்தியாசமானதுதான்.
பக்தர்களுக்கு இவர் வாழ்த்துச் சொல்லுவதற்குப் பதிலாக பக்தர்கள் இவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக் கிறார்கள்.
மற்றவர்களைவிட போப் உயர் வானவர் என்பதற்காக ஸ்டூல்மீது போப் நிறுத்தப்படுவது வழக்கமாம் - அதையும்கூட இவர் தவிர்த்து இருக்கிறார்.
இந்தப் பக்கம் கொஞ்சம் கவனத் தைத் திருப்புக! எங்கே உட்கார்ந் திருந்தாலும் சங்கராச்சாரியார் உயரமான மேடையில்தான் பீடத்தில் உட்கார்ந்திருப்பார் - காரணம் ஜகத் குருவாம்.
சென்னையில் 1983இல் இந்திய சமய கலை விழாவை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய போது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் அவ்விழாவில் பங்கு கொண்டார். அப்பொழுதுகூட சங்கராச்சாரி யாருக்கு உயரமான மேடை!
முதல் அமைச்சருக்கு சால்வை யைக்கூட அவர் கையால் போர்த் திடவில்லை தம் சிஷ்யர் ஒருவரிடம் கொடுத்துதான் போர்த்தச் செய்தார்.
போப்பையும் - சங்கராச்சாரி யாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
இசை இயக்குநர் இளையராஜா
எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் என்று நான் நம்பியிருந்த ஒருவரிடம் என்னுடைய வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் அனைத் தையும் ஒப்படைத்திருந்தேன். ஆனால், அவரோ என்னை மோசம் செய்துவிட்டு ஒரு கணிசமான தொகையுடன் ஓடித் தலைமறைவாகி விட்டார். நல்லவனாய் நடித்து இதுபோல் மோசம் செய்யலாமா? தெய்வம் இதைக் கேட்காதா?
- ராமசாமி, கோபிசெட்டிபாளையம்
இளையராஜா பதில்: இதை நாம் எடுத்துக் கொள்ளும் விதம்தான் நம்மை பாதிக்காமல் இருக்க வைக்கும். பகவான் சிறீ ரமண மகரிஷியிடம் - அவருடன் அருகில் இருந்து நாட்களைக் கழிக்க முடிவு செய்த ஒரு அயல் நாட்டுப் பெண் மணி, பகவானிடம் புகார் செய்தாள், பாவம் ஏழைப் பையனாய் இருக் கிறானே என்று என்னுடனேயே தங்க வைத்து எனக்கு ஏவல் வேலை செய்ய வைத்திருந்த பையன் என் நகையைத் திருடிக் கொண்டு ஓடி விட்டான் என்று.
பகவான் சொன்னார். பார்த் தாயா? நீ எப்போதோ போட்டுக் கொள்வதற்காக வாங்கி வைத்த நகையே - உன்னுடன் எப்போதும் துணைக்கு இருந்த பையனை நீ பிரியக் காரணமாகி விட்டது? என்று; ஆக எல்லாமே நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான இருக் கிறது! என்கிறார் இளையராஜா. (குமுதம் 27.3.2013)
அர்த்தம் கொழுத்த இந்து மதத்தில் தத்துவார்த்தங்களை இப்படி எல்லாம் இசை இயக்குநர் இளையராசா தொடர்ந்து குமுதத் திலே உதிர்த்துத் தள்ளுகிறார்.
இருந்தும் இருந்தும் ரமண ரிஷியைத் துணைக் கழைத்தாரே - அதுதான் படு தமாஷ்!
தம்முடன் தங்கி இருந்த சீடர் தன் நகைகளை திருடிக் கொண்டு ஓடியதற்கு ரமண ரிஷியையா எடுத் துக் காட்டுக்காகக் கூற வேண்டும்? - அவர் என்ன ஆசா பாசமற்றவரா? - பொருள்கள்மீதான பற்றினைத் துறந்தவரா?
ரிஷி வேடம் போட்டு ஏராளமான சொத்துக்களைக் குவித்த அந்த ஆசாமி, அத்தனை திரண்ட சொத் துகளையும், தன் சகோதரர் மகனுக் குத்தானே எழுதி வைத்தார்.
வழக்குத் தொடுக்கப்பட்டதே - துறவிக்கு அண்ணன் தம்பி பாச மெல்லாம் இருக்கலாமா? என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்பொழுது துறவி யானேன்? அதெல்லாம் ஒரு மண் ணாங்கட்டியும் கிடையாது! என்று நீதிமன்றத்தில் சொல்லவில்லையா ரமண ரிஷி?
(நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பாற்ற அருள்பாலித்த அந்த ரமணரிஷி எந்த நோய் கண்டு இறந் தார் என்றெல்லாம் சொல்லுவது உகந்ததல்ல என்பதால் அதனைப் புறந்தள்ளுகிறோம்).
திரிபுரா வழிகாட்டுகிறது!
ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்று கின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் தொலைக் காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.
இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச் சிகளை தொலைக்காட்சியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.
இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத் தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.
இந்தத் தகவல் இந்தியா முழுமையும் நல்லதோர் சிந்தனை - பகுத்தறிவு மனப்பான்மை முகிழ்த்துக் கிளம்புவதற்கு வித்திடும் என்று எதிர் பார்க்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய திரிபுரா மாநில அரசையும் முதல் அமைச்சரையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
சாமியார்கள்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் அவர்கள் மோசக்காரர்கள். காமக் கொடூரர்கள் என்பதை சந்தேகமற்ற முறையில் நிரூபித்துக் கொண் டுள்ளன.
விளம்பரம் பெற்ற சந்திரா சாமியார் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் - அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களின் ஆலோசகர்களாக இருந்து ஆயுத பேர ஊழல் வரைக்கும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு!
ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்பட்ட சங்கராச் சாரியார்கள் கொலைக் குற்றத்தில் சிக்கி சிறைச்சாலைக்குச் சென்று வந்து விட்டார்கள். இவர்களின் காவி வேடம் என்பது இவர்கள் செய்யும் காலித்தனங்களுக்கு, மோசடிகளுக்கு மூடு திரையாக உள்ளது என்பதுதான் உண்மை.
அதேபோல சோதிடம் என்பதும் இந்த நாட்டைப் பீடித்த கேடாகும். மக்களைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்தும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகும்.
பூமியிலிருந்து எத்தனையோ லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் இங்குள்ள மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்பதெல்லாம் எத்தகைய பைத்தியக்காரத்தனம்?
சோதிடத்துக்கும், அறிவியலுக்கும் ஏதாவது சம்பந்த முண்டா? கோள்களின் பட்டியலில் நட்சத்திரமாகிய சூரியனை இணைத்து சோதிடம் கூறிக் கொண்டு திரிகிறார்களே - இதைவிட நகைச்சுவை வேறு ஏதேனும் உண்டா?
பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளின் பட்டியலில் சேர்த்து பூமியைக் கை விட்டுவிட்ட இந்தப் புத்திசாலிகள்பற்றி எப்படி மதிப்பிடுவது!
உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடைபெற்ற நேபாளத்தில் இந்து மன்னர் குடும்பமே சோதிட நம்பிக்கை யால் படுகொலை செய்யப்பட்டதை எல்லாம் பார்த்த பிறகும் கூட சோதிடத்தை அனுமதிக்கலாமா?
பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சோதி டத்தைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்த்தது. தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைக்க முனைந்ததும் (திராவிடர் கழகத்தின் போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது) நாம் இன்னும் காட்டு விலங்காண்டி காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் அல்லவா!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51(ய)) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே. அதன்படி சோதிடம், சாமியார் குப்பை களை அறிவியல் கருவியான தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வெளியிடலாமா?
திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்காரை வெகுவாகப் பாராட்டுகிறோம். பல எதிர்ப்புகள் வரும், விமர்சனங்கள் வெடிக்கும்; அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உறுதியாக நின்று முறியடித்து இந்தியாவுக்கே பகுத்தறிவு வெளிச்சம் கொடுத்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இதற்குப் பிறகாவது மத்திய - மாநில ஆட்சிகள் அறிவுக் கொள்முதல் பெறட்டும்! செயல்படட்டும்!!
கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியது ஏன்? தி.மு.க. தலைமைச் செயற்குழு முடிவு
சென்னை, மார்ச் 25- அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது ஏன் என்பது குறித்து சென்னை - அண்ணா அறிவாலயத் தில் 25.3.2013 அன்று நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழு கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகம், 2004ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியோடு அரசியல் உறவு கொண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முதல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ருஞஹ-ஐ) அமைவதற்குப் பெரிதும் துணை புரிந்ததை அனைவரும் அறிவர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் அய்ந்து ஆண்டுகால ஆட்சிக்கு ஆதர வினை வழங்கி மத்தியில் நிலையான ஆட்சி நடைபெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக நின்றது.
இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதர வினை வழங்கி, மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இரண் டாவது அய்க்கிய முற்போக்கு கூட் டணி அரசு அமைவதற்கு பக்கபல மாக இருந்தது. எந்த நிலையிலும், தலைவர் கலைஞர் அவர்கள் கூட் டணி நெறிகள் என்கிற நியதிக்குப் பொருத்தமாக உறவை தளர்த்திக் கொள்ளாமல் உறுதியாக இருந்தார். பல சந்தர்ப்பங்களில் இக்கட்டான சூழ்நிலைகள் மத்திய அரசுக்கு ஏற்பட்டபொழுது - குறிப்பாக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற மத்திய அரசினுடைய பொருளாதாரக் கொள்கை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாக இருந்தும், நிலையான மத்திய அரசு வேண்டும் என்பதால், அது கவிழ்ந்து விடாமல் காப்பாற்றிய பெருமை தலைவர் கலைஞருக்கும், திராவிட முன்னேற் றக் கழகத்திற்கும் உண்டு. மேலும், இந்தியாவில் மீண்டும் மதவாத சக்திகள் ஆதிக்கம் பெற்று விடக் கூடாது என்பதிலும், மதச் சார்பற்ற இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஊறு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்திலும் உறுதியாக இருந்து இரண்டாவது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காப்பாற்றிய பெருமை தலைவர் கலைஞருக்கும் திராவிட முன்னேற் றக் கழகத்திற்கும் உண்டு என்பதை யும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
ஆனால், மனிதாபிமானமற்ற முறையில், ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையையும் (ழுநடிஉனைந) போர்க் குற்றங்களையும், மனித உரிமைகள் மீறலையும், தமிழ் இனத் தையே இலங்கைத் தீவில் அடை யாளம் தெரியாமல் செய்ய அதிபர் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு மேற்கொண்டுள்ள தொடர் நடவடிக்கைகளையும் அவ்வப் பொழுது, மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணர்த்தியும், டெசோ சார்பில் பல வடிவங்களில் அறப்போராட்டங் களை நடத்தி நிலைமைகளைத் தெளிவுபடுத்தியும், மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் கவலை கொள்ளாமல்; இலங்கையில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி அரசுக்கு நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து கொண் டிருக்கிறது. அண்டை நாட்டின் இறையாண்மையில் தலையிட மாட் டோம்; ஈழத் தமிழர்கள் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையென்பதால் தலையிட மாட்டோம்; என்றெல் லாம் மத்திய அரசு சார்பில் அறிவிக் கப்பட்டது, சிங்களப் பேரினவாத அரசுக்கு ஊக்கமளிப்பதாகவும், தமிழினத்திற்குப் பெரும் ஏமாற்றம் தருவதாகவும் அமைந்து விட்டது.
இந்திய நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழ் மக்கள் ஈழத்தில் படுகின்ற தொல்லைகளை யும் துயரங்களையும், சந்திக்கின்ற அநியாயங்களையும், அட்டூழியங் களையும், இங்குள்ள இதயமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொண்டு இருக்க இயலாது. மத்திய அரசினு டைய நடவடிக்கைகளும், அணுகு முறைகளும், ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையை மீட்டுத் தருவதாக இல்லை. தலைவர் கலைஞர் அவர் கள் தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் மத்திய அரசின் மூலமாக அமைதி யான முறையில் ஆக்கப் பூர்வமான தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
இலங்கை அரசாலும், இலங்கை அரசாங்கத்தின் நிருவாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்; மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரை யறைக்குள் இலங்கையில் நடை பெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமைகள் மற்றும் மனிதா பிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; என்ற இரண்டு திருத்தங்களை, முதலில் இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, பிறகு அந்தத் திருத்தங்களை அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெ ரிக்கா கொண்டு வரும் தீர்மானத் தோடு இணைத்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று திராவிட முன்னேற் றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசிடமும், 18.3.2013 அன்று மத்திய அரசு சார்பில் கலந்தாலோசனை செய்ய வந்த மூன்று மத்திய அமைச் சர்களிடமும் வலியுறுத்திச் சொல்லப் பட்டது. ஆனால், குதிரை குப்புறத் தள்ளியதுமல்லாமல், குழியும் பறித்த கதையாக அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தைப் பெருமள வுக்கு நீர்த்துப் போகவிட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன் மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீல னையும் செய்யவில்லை.
எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை களே உருவாக்கப்பட்ட நிலையில், அதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலி ருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப் பட்டு அறிவிக்கப்பட்டது.
தலைவர் கலைஞர் அவர்களின் இந்த முடிவை அரசியல் விற்பன்னர் களும், இலங்கைத் தமிழர் வாழ்வுரி மையில் அக்கறை கொண்டவர்களும், தமிழகத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். உரிய நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தகுந்த இத்தகைய நிலைப்பாட்டை இச்செயற்குழு முழுமையாக ஏற்றுக் கொண்டு, பாராட்டுகிறது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் - இனப் படுகொலை குறித்தும்; நம்பகத்தன்மை வாய்ந்த, சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றினை அமைத்து, குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை நடத்தி முடிப்பது குறித்தும்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வாக பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்தும்; இந்தியாவே தக்கதொரு தீர்மானத்தை அய்.நா. மனித உரிமை கள் ஆணையத்தில் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்ற வேண்டுமென் றும் இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தி.மு.க. செயற்குழுவில் டெசோ செயல்பாட்டுக்குப் பாராட்டு
சென்னை, மார்ச் 25- இன்று கூடிய திமுக செயற்குழுக் கூட்டத்தில் டெசோவின் முயற்சிக்கும், செயல் பாட்டுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப் பட்டது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சிகளுக்குப் பாராட்டு.
ஈழத் தமிழர்களுடைய பிரச்சி னைகளை முறையாக அணுகித் தீர்வு காணும் நோக்கத்துடன் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழீழ ஆதர வாளர் கூட்டமைப்பை (டெசோ) புதுப்பித்து 12.8.2012ஆம் நாள் சென்னை, ஒய்.எம்.சி.ஏ. திடலில், அ.தி.மு.க. அரசின் பல்வேறு இடை யூறுகளுக்கு மத்தியில், மாபெரும் மாநாட்டைக் கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிடச் செய்தார். அந்தத் தீர்மானங்களைக் கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்திலும், ஜெனி வாவில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நேரடியாகச் சென்று வழங்கித் தேவையான விளக் கம் அளித்து வந்தனர்.
தொடர்ந்து இலண்டனில் உள்ள பிரித்தானியா தமிழர் பேரவை சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மாநாட் டில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் ஈழத் தமிழர் ஆதரவு நடவடிக்கைகளைத் தொகுத்து விளக்கினார்.
டெசோ அமைப்பின் சார்பில் 8-2-2013 அன்று அதன் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் சென்னை யில் கறுப்பு உடை அணிந்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டனர். 5-3-2013 அன்று சென்னையில் இலங்கைத் தூதர கத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று, போராட்டத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான தமிழ்மக்கள் கைது செய்யப்பட் டனர். 12-3-2013 அன்று பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் அமை தியாகவும் வெற்றிகரமாகவும் நடத் தப்பட்டது.
பல்வேறு உலக நாடுகளின் தூது வர்களை நேரில் சந்தித்து, டெசோ மாநாட்டின் தீர்மானங்களை வழங்கி யதோடு, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த அனைத்து விளக்கங்களையும் கொடுத்து ஆதரவு திரட்டப்பட்டது. 7.3.2013 அன்று, டெசோ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றும் நடத்தப்பட்டது. திராவிட முன் னேற்றக் கழகத்தின் முயற்சியால் இந்திய நாடாளுமன்ற இரு அவை களிலும் ஈழத் தமிழருடைய பிரச் சினை அகில இந்திய அரசியல் கட்சி களின் உறுப்பினர்களால் விவாதிக்கப் பட்டது.
ஈழத் தமிழர் நலன் காக்க, இப்படி அடுக்கடுக்கான தொடர் முயற்சி களை மேற்கொண்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கும்; டெசோ அமைப்பின் உறுப்பினர்களான கழகப் பொதுச்செயலாளர் பேராசிரி யர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோ ருக்கும் இச்செயற்குழு நன்றி தெரி வித்துப் பாராட்டுகிறது.
போகாதே!
அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969
தமிழினப் பொறுக்கிகளை அழித்து முடிக்க பார்ப்பனப் படையைத் திரட்டுகிறாராம் பார்ப்பன சு.சாமி
துரோணாச்சாரி என்ற பார்ப்பனர் யுத்தத்திற்கு அர்ஜுனனைத் தயார் செய்ததுபோல தமிழர்களைத் தீர்த்துக் கட்ட பார்ப்பனப் படை ஒன்றைத் தயாரிக்கப் போகிறாராம்! தமிழர்கள் யார் தெரியுமா? பொறுக்கிகளாம்- சொல்லுவது யார்? ஒரு பூணூல் திருமேனி!
இது வன்முறை தூண்டுதல் அல்லவா? தமிழ்நாடு அரசு அடக்கப் போகிறதா? அல்லது தமிழர்கள் அடக்க வேண்டுமா? (வன்முறையால் அல்ல!)
சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!
சென்னை, மார்ச் 26- இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலி யுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறு வனம் சிங்களத்தில் துண்டறிக்கை அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான பிரச்சினையில் சரவணா ஸ்டோர் சிக்கியுள்ளது.
இந்தக் கடைகளில் பலவகையான சிங்களப் பொருள்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது. இந்தக் கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருள்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களுக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிருவாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது.
கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருள்கள் மற்றும் எந்தத் தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களையும் சிங்கள மொழியிலேயே அச்சடித்து தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டி வருகிறது.
கச்சத்தீவுப் பிரச்சினை
கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற ஒரு வேண்டு கோளைத் தமிழக முதலமைச்சர் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இல்லையேல் உச்சநீதி மன்ற வழக்கின்மூலம் அதனைச் சாதிப்போம் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினையைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது தேவையில்லாமல் தி.மு.க.வையும், அதன் தலைவரையும் குறைகூறியது தேவையானது தானா? அப்படி சொன்ன தகவல்களும் சரியானவை தானா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.
1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்தபோது, அன்றைய சட்ட அமைச்சர் மாதவன் (தி.மு.க.) அவர்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டு, நேரிலும், எழுத்து வடிவத்திலும் எதிர்ப்புத் தெரி விக்கப்பட்டதெல்லாம் ஆவண ரீதியான சான்றாகும்.
1974 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்கூட தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை உறுதி செய்யப்பட்டு இருந்தது.
நெருக்கடி நிலை காலத்தில் - 1976 இல் அந்த உரிமை பறிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 1976 முதல் 1989 வரை அ.இ.அ.தி.மு.க.தானே ஆட்சியில் இருந்தது -அதுவும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டுதானே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தம் செல் வாக்கைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்டிருக்க லாமே; செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறை முதலமைச்சர் ஆகியுள்ளாரே - இந்தப் பிரச்சினை யில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கவேண்டியதுதானே!
முதன் முதலில் (1991 இல்) இவர் முதலமைச்சராக வந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது கச்சத்தீவை மீட்பேன்! என்று சூளுரைத்தாரே - அதற்குப் பின் எத்தனைத் தடவை தேசியக் கொடியை ஏற்றி யிருப்பார்? 22 ஆண்டுகளுக்குமுன் கொடுத்த அந்த முழக்கம் என்ன ஆனது என்ற கேள்வி எழாதா?
2008 இல் எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கச்சத்தீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே 1997 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார் (29.7.1997).
அதற்கு இரு நாள்களுக்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடத்தப்பட்ட தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் அறிவித்தபடி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு அது.
நீதியரசர் ஜெயசிம்மபாபு அவர்களால் விசா ரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்மனுதார ருக்குத் தாக்கீது அனுப்பப்பட்டது.
ரிட் மனுவில் தெளிவான சட்டப் பிரிவு சுட்டிக் காட்டப்பட்டது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(சி) என்ன கூறுகிறது?
எந்த ஒரு மாநிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட வேண்டுமானாலும், குடியரசுத் தலைவரின் பரிந் துரைப்படி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய அரசமைப்புப் பிரிவு 3 இல் இணைப்புப் பகுதியில் குறிப்பிடப்பட் டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில சட்டப் பேரவையின் அனுமதியையும் பெற்றிருக்கவேண்டும்.
சட்ட ரீதியான இந்த வழிமுறைகள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிரச்சினையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், தமிழர் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி என்ற அடிப்படையில் கச்சத்தீவின் உள்ளும், புறமும் உள்ளிட்ட இந்தியக் கடல் எல்லைக் குள் மீன் பிடிக்கும் வகையிலும் மாண்புமிகு நீதி மன்றம் உடனடியாக இடைக்கால ஆணை பிறப்பிக் குமாறும் அந்த ரிட் மனுவில் கேட்டுக்கொள் ளப்பட்டது.
16 ஆண்டுகாலமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் இது நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!27-3-2013
பரிதாபமே!
இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)
இட ஒதுக்கீடே வழங்கப்படாமல் 21,000 பணி நியமனங்கள்! அம்பலமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடி
நேற்றைய விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம் தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம் கருத்துக்கூறி வருகின்றனராம் முகநூலில்!
அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன என்றும் தெரியாது. ஏன் என்றும் தெரியாது. இதில் தகுதிக் குறைவு என்பதற்கு பேச்சே கிடையாது என்பதும் புரியாது. ஆயிரம் முறை சொன்னாலும் அதுகள் பேசுவதைப் பேசிக் கொண்டுதானிருக்கும். அவர்களுக்கும் இறுதியில் நாம் விளக்கம் சொல்வோம்.
முதலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்திருக்கும் மோசடிகள் பற்றித் தெரிந்து கொள்ள அடிப்படையாகச் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இடைநிலை ஆசிரியர்கள் (Secondary grade)
2. பட்டதாரி ஆசிரியர்கள் (Graduate assistants / BT assistants)
3. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (Post Graduate assistants)
இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அவசியமில்லை. நேரடிப் போட்டித் தேர்வோ அல்லது பதிவு மூப்பு அடிப்படையிலோ பணி நியமனம் செய்து கொள்ளலாம் (முன்பிருந்த முறைப்படியே).
இது குறித்து மத்திய அரசு புதிய விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை.
ஃ மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு, அவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர்களாகப் பணிபுரியத் தகுதியானவர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த பின்னர் தனியாக இப்படியொரு தேர்வு எதற்கு என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங் களிலும் எதிர்ப்புக் கிளம்பினாலும் இப்போது நாம் பேசப் போகும் செய்தி, அப்படி நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் - அவற்றின் முடிவுகள் - பணி நியமனங்கள் ஆகியவை சட்டப்படி நடந்திருக்கின்றனவா என்பது பற்றித்தான்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான முறைகேடு அரங்கேறியிருக்கிறது. நாமும் ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.
முதலில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த விவரங்கள். பணி நியமனங்கள் என்று வரும்போது எவ்வளவு காலிப் பணியிடங்கள்? அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு? என்பதைக் குறிப்பிட்டு அறிவிக்கை (Notification) வெளியாகும். நாமும் இந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளதா என்பதைப் பார்த்தாலே போதுமானது.
ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று மொத்தமாக 21,000 பேருக்கு வேலை. அதில் 10,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 8000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 3000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என்று செய்தி வெளிவந்த போது, நாமும் நிரப்பப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டி ருக்கிறதா என்ற பார்வையுடன் தான் இப்பிரச்சினையை அணுகத் தொடங்கினோம்.
அப்போதுதான் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் கொண்ட அறிவிக்கை கூட வெளியிடப்படாதது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையின் வேர் இன்னும் ஆழத்தில் இருப்பதும் புரியவந்தது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். அதென்ன தகுதித் தேர்வு? போட்டித் தேர்வு? தனித்தனியாகவா இருக் கிறது? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் நீங்கள் விழித்துக் கொண்டீர்கள் என்று பொருள். ஏனென்றால் இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் குழம்ப வைத்ததுதான் இந்தப் பணி நியமன மோசடியில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி!
UPSC, TNPSC, TRB என்றெல்லாம் நடத்தப்படுகின்ற னவே அவைதான் போட்டித் தேர்வுகள். அதாவது மொத்த காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்பதை அறிவித்து அதற்காகவென்றே நடத்தப்படுவதுதான் போட்டித் தேர்வு.
NET, SLET, SET, TET போன்றவையெல்லாம் தகுதித் தேர்வுகள் (Eligibility Test). இவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது வேலை பெறுவதற்கான தகுதித் தேர்வே தவிர, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை என்பது கிடையாது.
போட்டித் தேர்வு
1. வேலை வாய்ப்பிற்கான அறிவிக்கைகளின் கீழ் நடத்தப்படும் தேர்வு.
2. ஒவ்வொரு ஆண்டும் நடத்த அவசியம் இல்லை (எ.கா. TNPSC)
3. பெற்றுள்ள மதிப்பெண்களைப் பொறுத்து ஒவ்வோ ராண்டும் வகுப்பு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் மாறும்.
4. இதில் வெற்றி பெறுவோருக்கு தேர்ச்சிச் சான்றிதழ் தரப்படாது. மதிப்பெண்களை வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய முடியாது.
5. கட்-ஆப்க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி.
6. இதிலிருந்து நேரடியாக பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தயாரிக்க முடியும்.
தகுதித் தேர்வு
1. வேலை வாய்ப்புக்கான அறிவிக்கைக்கும் தகுதித் தேர்வுக்கும் தொடர்பில்லை
2. ஒவ்வோராண்டும் நடத்தப்படும் (TET ஒன்றுக்கு மேலும் நடத்தப்படலாம்).
3. மொத்த இடங்கள் எவ்வளவு என்ற பிரச்சினை இல்லை. எனவே வகுப்பு வாரியான தனித்தனி தகுதி அளவுகோல்கள் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகோல்கள் மாறாது.
4. வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்ட தனித்தனி தகுதி அளவுகோலுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
5. தகுதித் தேர்வில் பெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை என்பது உறுதி கிடையாது. இதில் வெற்றி பெற்றோரை தனியே விண்ணப்பிக்கச் சொல்லி, அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முறை என்னவோ அதற்கேற்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டித் தேர்வு மதிப்பெண் கட்-ஆப் / பதிவு மூப்பு தேதி கட்-ஆப் ஆகியன வகுப்பு வாரியாக அறிவிக்கப்படும். மற்றபடி இது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே!
6. இதிலிருந்து நேரடியாகப் பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியல் தயாரிக்க முடியாது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்து வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வதுபோல தகுதித் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதற்குள் அரசு அறிவிக்கும் ஆசிரியர் பணிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இந்தத் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். (தனியார் பள்ளிகளிலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் பணியில் இடம் பெற முடியும் என்பதுதான் இப்போதைய சட்டப்படியான நடைமுறை) அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க இத்தகுதி மதிப்பெண்கள் பயன்படும். பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வோ / பதிவு மூப்போ / வெயிட்டேஜ் மதிப்பெண்ணோ காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்பு வாரியான கட்-ஆப் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
இப்படியான தகுதித் தேர்வுகள் பல ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படுகிறது. NET / SLET தேர்வுகளில் வெற்றி பெற்றோர் தான் கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோ ராவர்.
அதேபோலத்தான் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு)ல் பெற்ற தேர்ச்சி பெற்றோர் தான் பள்ளி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெறுவதற்கு மட்டும்தான் TET பயன்படும்; பயன்படுத்தப்பட வேண்டும். மற்றபடி பணி நியமனத்திற்கும் TET-க்கும் நேரடித் தொடர்பே கிடையாது.
சரிங்க அப்படின்னாலும் TET-ல தகுதி மதிப் பெண் ணுக்கு மேலே தானே வேலை கொடுத்திருக்காங்க. தகுதி பெறாதவங்களையெல்லாம் வேலைக்கு எப்படி எடுக்க முடியும்? கல்வித்தரம் கெட்டுப் போயிடாதா? வேணும்னா அடுத்த வருசம் எழுதி தகுதிப்படுத்திக்க வேண்டியது தான்.
இந்த மாதிரிப் பிரச்சினையெல்லாம் NET/SLET-ன்னு சொன்னீங்களே அங்கேயெல்லாம் வருதா? என்று இந்த தகுதித் தேர்வில் தோல்வியடைந் தாகச் சொல்லப் படும் சிலரே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அப்படி தகுதியானவர்கள், தகுதியில்லாத வர்கள் என்று பிரித்துச் சொல்லும் மாபெரும் அளவுகோலான தகுதி மதிப்பெண் என்பது எவ்வளவு?
60 விழுக்காடு
அதாவது 100-க்கு 40 விழுக்காடு குறைவான மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை அவர்கள் தகுதியு டையவர்கள் என்பது தானே உயர்ந்தபட்ச தகுதிக்கான அளவு கோல்!
ஆமாம். அதேதான்.
இந்த 60 விழுக்காடு மதிப்பெண் என்பது யார் யாருக்கு?
அனைவருக்கும்தான். அதிலென்ன சந்தேகம்?
அனைவருக்கும் எப்படி ஒரே அளவுகோல்? இந்திய அரசியல் சட்டத்தில் சமூகநீதி அடிப்படை யிலான தனித்தனி அளவுகோல்கள்தான் நிர்ணயிக்கப் பட வேண்டும். திறந்த போட்டிப் பிரிவினருக்குத்தானே 60 விழுக்காடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியெனில் பிற்படுத்தப்பட்டோருக்கு...? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு...? தாழ்த்தப்பட்டோருக்கு...?
பழங்குடியினருக்கு...?
மாற்றுத் திறனாளிகளுக்கு...?
பார்வையற்றோர்களுக்கு...?
60, 60, 60, 60, எல்லோருக்கும் 60 விழுக்காடுதான், யாருக்கும் தனித்தனியாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட வில்லை.
இப்போது புரிகிறதா? பார்ப்பனர்கள் முதல் பார்வையற்றோர் வரை அனைவருக்கும் ஒரே அளவுகோல்! எப்படி இருக்க முடியும்? சமூக நீதியில் மோசடி என்றோமே அதன் அடிப்படை புரிகிறதா இப்போது? இதுவரை இந்தியாவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கவே முடியாது.
அரசியல் சட்டத்திற்கு விரோத மாக, உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை வழங்கியிருக்கும் எண்ணற்ற தீர்ப்புகளுக்கு மாறாக, இந்த தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்திற்கும் ஆணைக்குமே புறம்பாக இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது. திட்டமிட்ட சதி அரங்கேறியிருக்கிறது.
NCTE எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆணைய விதிப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தகுதித் தேர்வுகளை நடத்தி வகுப்புவாரியான தனித்தனியான கல்வி அளவுகோல்களை வெளியிட்டு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தந்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் வகுப்புவாரியான கட்-ஆப் மதிப்பெண்ணே கிடையாது என்று சமூகநீதிக்கும், அரசியல் சட்டத்திற்குமே எதிரான நிலைப்பாடு எப்படி எடுக்கப்பட்டது?
ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்று கேட்பதற் கான அடிப்படை வாய்ப்பையே இல்லாமல் செய்து, சமூகநீதிப்படி வேலை பெறும் தகுதிக்கான ஊற்றுக் கண்ணையே அடைத்தது யார்?
முன்னேறிய ஜாதியினரும், அனைத்து வாய்ப்புகளும் பெற்றவர்களே 40 விழுக்காடு குறைவாக 60 விழுக்காடு எடுத்திருந்தாலும் தகுதியானவர்கள்தான் என்னும்போது அவர்களை விட வாய்ப்புக் குறைந்த, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பார்வையற்றோருக்கும் சமூகநீதிப்படி நிர்ண யிக்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் ஏன் நிர்ணயிக்கப்பட வில்லை? திறந்த போட்டியைத் தவிர 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வெற்றிருக்க வேண்டிய ஒடுக்கப்பட்டவர்களுக் கான இடங்கள் ஒட்டு மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது இன்னும் விளங்கவில்லையா? இடஒதுக்கீடே வழங்கப்பட வில்லை என்பது புரியவில்லையா?
சட்டமும், நீதிமன்றமும் TET விசயத்தில் சொல்லியிருப் பவை என்ன? நடந்திருப்பது என்ன? நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? நடந்துள்ள சதியின் விவரங்கள் நாளைய விடுதலையில்!
தோழர்களே, பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்த்து விட்டீர்களா? அவர்களை ஒன்று திரட்டத் தயாராகி விட்டீர்களா?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!
எழுத்துரு அளவு Larger Font
தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.
ஆளும் கட்சி எப்படி இருக்க வேண்டும்? எதிர்க்கட்சி களுக்குப் போதுமான வாய்ப்பினை அளித்து அவர்கள் சுட்டிக் காட்டும் குறைபாடுகளைக் கவனமாக கருத்தூன்றிக் கேட்டு அந்தத் தவறுகளைக் களைந்திட முனைய வேண்டும் அதுதான் ஒரு நல்ல ஆளும் கட்சியின் பொறுப்பான கடமையாகவும் இருக்க முடியும்.
ஆனால், தமிழ்நாடு சட்டமன்றமே இதற்கு நேர் எதிராக உள்ளது. முக்கியமான தீர்மானத் தைக் கொண்டு வரும்போது, அந்தத் தீர்மானத் தின் நோக்கத்தை எடுத்துக் கூறி முதல் அமைச்சர் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
தீர்மானத்தின்மீது கருத்துக்களைக்கூற எதிர்க் கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுதான் சிறப்பான, ஆரோக்கிய மான நிலைப்பாடாக இருக்க முடியும்.
தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன்ன தாகவே முக்கிய எதிர்க்கட்சியையும், அதன் முக்கிய தலைவரையும் சாடுவதற்கே அதிக நேரத்தை எடுத்துக் கொள்வது சரியானது தானா?
அப்படி குற்றங் கூறும் பொழுது சம்பந்தப் பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எதிர்க் கட்சியினர் ஆளும் கட்சியைக் குற்றம் கூறினால் அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது அதே நேரத்தில் ஆளும் கட்சி தரப்பினர் குற்றங்களை அடுக்கினால் அவற்றை அட்சரம் பிறழாமல் அவைக் குறிப்பில் ஏற்றுவது என்பதெல்லாம் எந்தவூர் ஜனநாயகமோ தெரியவில்லை.
இந்தியாவிலேயே சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆளும் கட்சியாக இருந்தபோது சென்னை மாநில சட்டசபை நடக்கும் நேர்த் தியைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரர்கள் வருவார்களாம்.
சரியாகவோ தவறாகவோ திராவிடப் பாரம்பரியம் பேசும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உயர்ந்த புகழைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ஜெயலலிதா அம்மையாரா பேசுவது? யார் எதைப் பேசுவது என்ற வரை முறையே இல்லையா?
ஒரு கணம் அசை போட்டுப் பார்க்க வேண்டாமா?
2009இல் ஈழத்தில் இலங்கை சிங்கள இனவாத அரசால் நடத்தப்பட்ட இனப்படு கொலையை எதிர்த்தவரா அம் மையார்?
ஒரு யுத்தம் ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர் களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக் கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
- (Dr. நமது எம்.ஜி.ஆர். 18.1.2009)
இவ்வளவுப் பச்சையாக ஈழத் தமிழர் படுகொலையை நியாயப்படுத்தியவர், தி.மு.க. வையும், டெசோவையும் மனம் போன போக்கில் குறை கூறுவது சரியானதுதானா?
அதுவும் ஒரு தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியும்போது, அதற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் ஈர்க்கும் வகையில் அது இருக்க வேண்டாமா? மாறாக சீண்டுவதாக இருப்பது எந்த வகையில் சரி?
சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது. ஒரே நாமாவளியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்
(திருக்குறள் 448)
28-3-2013
பக்குவமடையாதவன்
அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
_ (விடுதலை, 3.4.1950)
விபச்சார விடுதி
கோயில்களை விபச்சார விடுதி என்று காந்தியார் சொன்னார் என்று நாம் சொன்னால் அதற்கு ஆதாரம் உண்டா என்று வினா தொடுப்பவர்கள் உண்டு.
ஆதாரம் இல்லாமல் எதையாவது திராவிடர் கழகம் சொன்னதுண்டா?
இதோ காந்தியார் பேசு கிறார்: தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக் கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களிலும் இருக் கிறார் என்று நீங்கள் சொல் வதைபற்றிப் பலர் குறைபட் டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக்கூட நான் விரும்பவில்லை. ஒரு வகை யில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான். கடவுள் எங் கும் இருக்கிறார்.
திருடர்கள் வாழும் குகைகளில்கூட இருக்கிறார். ஆனால் அதற் காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவ தில்லையே? அதற்குப் பதி லாக ஆலயங்களுக்குத் தானே போகிறோம்? ஆல யங்களில் தூய்மையான சூழ் நிலை நிலவும் என்பதற்காகத் தானே செல்கிறோம்? அந்தப் பொருளில்தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆல யங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன். அத னால் தான் அப்படியே அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்ட வன் இருப்பாரோ, அப்படித் தான் இருப்பார் என்று நான் சொன்னேன். இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண்படுத் துவதாக இருந்தால், அதற் காக நான் மிகவும் வருந்து கிறேன். ஆனால் இந்து சம யத்தின் நலனுக்காகவாகி லும், என்னுடைய அறிக்கை யைத் திரும்பிப் பெறவோ, மாற்றவோ முடியாது என் றார் காந்தியார். (நூல்: தமிழ்நாட்டில் காந்தி - காந்தி நூற்றாண்டு வெளியீடு - பக்கம் 586-587)
இது ஏதோ இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல - வெளிநாடுகளில் இருக்கும் இந்துக் கோயில்களின் யோக் கிதை இதைவிட ஆபாசம்!
9.3.2013 நாளிட்ட தின மலர் இணையதளத்தில் வெளி வந்த ஒரு செய்தி இதோ: ஜகார்த்தா : கோயில்களில், உடலுறவு கூடாது' என்ற எச்சரிக்கை பலகையை வைக்க, இந்தோனேசிய அரசு, முடிவு செய்துள்ளது. இந்தோனேசி யாவின் பாலி தீவில் உள்ள, சரசேடா கிராமத்தின், இந்து கோயிலில், பராமரிப்புப் பணி நடந்து வந்தது. அதைப் பார்வையிடச் சென்ற உள்ளூர் இளைஞர் குழு தலைவர், கோயிலுக்குள், எஸ்டோனியா நாட்டு காதல் ஜோடி ஒன்று, உடலுறவில் ஈடுபட்டதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார். அவர்களைப் பிடித்து விசாரித்த போது, "கோயிலுக்குள் உடலு றவு கொள்ளக் கூடாது என்பது, எங்களுக்கு தெரியாது' என, அவர்கள் கூறியுள்ளனர். "வெளி நாட்டினர் என்பதால், விஷ யத்தை பெரிதுபடுத்த வேண் டாம்' என, போலீசார் கேட்டுக் கொண்டனர். எனினும், கோயி லின் புனிதம் கெட்டு விட்டதால், அதை புனிதப்படுத்தும் சடங்கு செய்வது என, முடிவு செய்யப் பட்டது. இதற்காக, 1 லட்சம் ரூபாய் தர அந்த ஜோடி, ஒப்புக் கொண்டது. (அதிலும் சுரண்டல் தானோ!) இச்சம்பவத்தை தொடர்ந்து, புகைப்பிடிக்க கூடாது' என, எச்சரிக்கை பலகை வைப்பது போல், கோயில் களில், உடலுறவு கூடாது' என்ற அறிவிப்புப் பலகை வைக்க, இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.
(தினமலர் 9.3.2013)
இதற்கு விளக்கமும் வேண் டுமோ? இந்துக் கோயில்களின் தேர்களில் வடிக்கப்பட்டுள்ள சிலைகள்தான் எவ்வளவு ஆபாசமானவை - கீழ்த்தரமான உறவுகள்!
சீற்றம் வேண்டாம் சிந்தியுங்கள்!
- மயிலாடன் 28-3-2013
10-க்கு ஒன்பது
மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 10 பேர்களில் ஒன்பது பேர் வட மாநிலத் தவர்கள்; மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டிலிருந்து ஒரு வரும் இலர் - இந்தத் தகவலை தருமபுரி மக்க ளவை உறுப்பினர் இரா. தாமரைச் செல்வன் மக்க ளவையில் ஆதாரப்பூர்வ மாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.
இது ஒரு முக்கியமான பிரச்சினை. இந்தியாவில் முதல் நிலை அதிகாரம் படைத்த அய்.ஏ.எஸ். போன்ற பதவிகளுக்கான தேர்வாணையத்தில் பெரும் பாலும் இந்தி பேசும் மாநி லங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பது நீதிக்கு விரோதமான தாகும்.
இந்தி பேசுவோர் ஆதிக் கத்தில் இந்த ஆணையம் இருப்பதால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண் டவர்களுக்குச் சாதகமான முறையில் தேர்வு முறைகள் சிந்திக்கப்பட்டு செயல் வடிவமும் அளிக்கப்படு கிறது. புதிய திட்டம் என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர் கள் தத்தம் தாய் மொழி களில் தேர்வு எழுத முடியாத ஒரு நிலை திணிக்கப்பட் டுள்ளது.
கடந்த பல ஆண்டு காலமாக தாய்மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எஃப். எஸ். போன்ற பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்களா?
இந்தியிலும், இங்கிலீ லும் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தான் திற மையின் கிரீடமாக ஜொலிக்கிறார்களா?
வட மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு டிஸ்டிரிக்ட் மேஜிஸ்ட்ரேட் என்று பெயர். இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுகிறார்கள்.
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் தான் இதற்குள் அடங்கிய சூழ்ச்சியின் கூர்முனை என்னவென்று விளங்கும்.
இந்தி பேசாத மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் அவரவர் தாய்மொழியில் எழுத வாய்ப்பு அளிக்கப் பட்ட பொழுது, இந்தி பேசாத மாநிலங்களிலி ருந்தும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலைதான் பெரும்பாலும் இந்தி வாலாக்களாக இருக்கக் கூடிய தேர்வாணையத்தின் கண்களை கருவேல முள் ளாக உறுத்தியிருக்கிறது. அதன் தீய விளைவுதான் புதிய திட்டம். இது போன்ற பதவிகளில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
திராவிடர் கழகம் இதற் காக களத்தில் இறங்கிப் போராடியது. மக்களவையி லும் எதிர்ப்புப் புயல் வீசியது!
முக்கியமான பிரச் சினைமீது சிறப்பாகக் கருத்துக்களை எடுத்து வைத்த இரா. தாமரைச் செல்வன் எம்.பி. பாராட் டுதலுக்கு உரியவரே! - மயிலாடன் 29-3-2013
இலங்கைக்கு உதவும் இந்தியா
இலங்கையில் இருந்து வரியில் லாமல் இறக்குமதி செய்யும் ஆயத்த ஆடைகளின் அளவை இந்தியா அதிக ரித்துள்ளது. அண்மையில் இலங்கை சென்ற இந்திய தொழிற் துறை அமைச் சர் ஆனந்த் சர்மாவிடம், வரிவிலக் குடன் ஏற்றுமதி செய்யப்படும் ஆடை களின் அளவை அதிகரிக்க அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனடிப்படையில், வரியில் லாமல் இறக்குமதி செய்யக்கூடிய பருத்தி ஆயத்த ஆடைகளின் அளவை 50 லட்சத்தில் இருந்து 80 லட்சமாக இந்தியா உயர்த்தியுள்ளது.
இதுதவிர, தெற்காசிய சுதந்திர வணிக உடன்படிக்கைப்படி, இலங் கையில் இருந்து இறக்குமதியாகும் ஆடை வகைகளுக்கு விதிக்கப்படும் வரியை 11 சதவீதத்தில் இருந்து 5 சதவீ தமாக இந்தியா குறைத்திருக்கிறது.
மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்தை 6 மாதங்களில் இருந்து ஓராண்டாக இந்தியா அதிகரித்துள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசும் அரசி யல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலை யில், இலங்கை அரசுக்கு புதிய சலுகை களை வழங்கியிருக்கிறது இந்தியா.
இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊடுருவும் சீனா...
யாழ்ப்பாணம், மார்ச். 29- இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத் துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதி களைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இலங் கையில் சீனாவின் ஆதிக் கம் கடந்த சில ஆண்டு களாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங் கையில் திறக்கப்பட்டுள் ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற் போது மன்னார் வளை குடாவில் பெட்ரோல் எடுக்கும் உரிமமும் சீனா வுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்நிலையில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 20 மில்லி யன் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை சீன அரசு அளித்துள்ளது. இந்த நிதியில் ஏசி, கணினி நகல், இயந்திரங்கள், உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப் பட்டன. யாழ் பொது நூலகத்தில் யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ் வரி பற்குணராசா தலை மையில் நடைபெற்ற விழாவில் அவரிடம் சீன அரசின் முதலாவது செய லாளர் கியூ, ஸ்கியூபிங் இந்த உதவிகளை வழங் கினார். சிங்களர்கள் வாழும் பகுதியில் மட் டுமே ஆதிக்கம் செலுத் திய சீனா, மெல்ல மெல்ல யாழ் நூலகம் வரை தனது ஆதிக்கத் தினை வளர்த்துக் கொண் டுள்ளது. இந்த நாட் டைத் தான் இந்தியா வின் நண்பன் என்கிறது மத்திய அரசு.
அன்று தமிழர் தலைவர் எழுதியது - இதற்கும் பொருந்தும்!
இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதருக்கு இந்தியாவுக்குள் தலையிடும் அளவுக்கும், பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசக் கூடிய துணிவு வந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் இந்தியாவின் பலகீனமே!
வேறு எந்த நாட்டிலாவது இந்த நிலை ஏற்பட்டு விட முடியுமா? அப்படி கருத்துச் சொல்லியிருந்தால் அந்தத் தூதர் அடுத்த கணமே விமானத்தில் ஏற்றப்பட்டு இருப்பாரே!
இலங்கையில் 75 சதவிகிதமாக உள்ள சிங்கள வர்களின் பூர்வீகம் என்பது இந்தியா என்பதால், அந்தச் சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாப் பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும். டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத்கரிய வாஸம் கூறி இருக்கிறார். (இந்தியாவின் செயல் பாட்டைப் பார்க்கும் போது அந்த அடிப்படையில் தான் காரியங்கள் நடந்ததோ, நடக்கிறதோ என்ற அய்யமும் ஏற்படுகிறது)
இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மூக்கோடு ஒப்பிட்டு ஆரிய இனவழி வந்தவர்கள் நாம் என்று ஒப்பிட்டுச் சொன்னவராயிற்றே ஜெயவர்த்தனே!
இலங்கைத் தூதரின் விஷமமான பிரச் சாரத்தைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் கண்டனக் கணைகள் வெடித்தும்கூட, இந்தியா இதுவரை வாய் திறக்கவில்லை.
120 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை சுண்டைக்காய் தீவான இலங்கை இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் சிறுமைப்படுத்துமோ தெரியவில்லை.
இந்தியாவின் இந்த மவுனத்தால் நேற்று ஒருபடிமேலே சென்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கேவலமான சொற்களில் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் (9.6.2011) ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையின்மீது பொரு ளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதை இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே தரக் குறைவாக விமர்சனம் செய்த போது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டாரே! இது வெளிநாட்டவர் கூற்று என்பதால் இதற்காக உரிய ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையது அல்லவா என்ற வினாவையும் அந்த அறிக்கையில் எழுப்பி இருந்தார். கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது - மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முதல் அமைச்சரிடம் மாறுபடுபவர்கள்தான் நாம் பல்வேறு பிரச்சினைகளில், அவரது அணுகுமுறைகளில் என்றாலும் அது வேறு - இது வேறு.
இப்படி இங்குள்ள எவராவது பேசினால் அது சட்டமன்ற உரிமைப் பிரச்சினையாகி, அத்தகை யவர்களை சட்டமன்றத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தி விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுத்திருக்க முடியும்!
இது வெளிநாட்டவர் கூற்று என்பதால், இதற்காக ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையதல்லவா? மத்திய அரசு இதில் மவுன குருவாக இருக்கலாமா? கூடாது! கூடவே கூடாது!! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார்களே! (விடுதலை 12.8.2011)
கோத்தபய ராஜபக்சேகூட ஓர் அரசியல்வாதி - இந்தியாவில் உள்ள இலங்கைக்கான தூதர் அரசியல்வாதியா? ஓர் அதிகாரியல்லவா? அதிகாரி களுக்கென்று ஒரு வரம்பு உண்டே! எல்லா வற்றையும் தூக்கி எறிந்து தெருச் சண்டை போடும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் இதைவிட கேவலம் இந்தியாவுக்கு உண்டா?
இது 120 கோடி மக்களையும் துச்சமாக மதிக்கும் போக்கிரித்தனமாகும்.
இந்தியா செயல்படும் அரசாக இருக்க வேண் டும் - இதற்குமேல் என்னதான் சொல்ல முடியும்? 29-3-2013
முதல்வர் குற்றச்சாற்று: டி.ஆர்.பாலு பதிலடி
சென்னை, மார்ச் 29- டி.ஆர்.பாலு ரயில்வே போர்டு தலைவராக இருப்பது குறித்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாற்றுக்கு டி.ஆர்.பாலு எம்.பி., அளித்த பதில் வருமாறு:-
தமிழக முதல்வர் ஜெயலலிதா (27.03.2013) தமிழக சட்டமன்றத்தில் பேசிய போது இலங்கைப் பிரச்சினைக் காக ரயில்வே நிலைக்குழுவில் இருந்து டி.ஆர்.பாலு ராஜினாமா செய்யவில்லையே ஏன்? என்று பேசியுள் ளார். தமிழக முதல்வர் அவர்கள் ஒரு முறை பாராளு மன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். இப்போது மூன்றாம் முறை தமிழக முதல்வராக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சட்ட மன்ற நடவடிக்கைகளும் எப்படி நடைபெறுகின்றன என் பதையும் அவற்றின் நெறி முறைகளையும் அவர் அறிந்திருப்பார் என்று கருதுகிறேன். அதிமுக உறுப்பினர்கள் இடம்பெறவில்லையா?
பாராளுமன்ற உறுப்பினராக இருக் கும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட ஒவ் வொருவருக் கும் ஏதாவது ஒரு துறைக் கான நிலைக்குழுவிலும் மற்றொரு துறைக் கான கலந்தாய்வுக் குழுவிலும் இருப்பதற்கு அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து அந்த மரபுப்படி பாராளு மன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுவிலும் நிதித் துறையிலும் மற்றும் சில குழுக்களிலும் நான் பணியாற்றி வருகிறேன். பாராளு மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் மூத்த உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் ரயில்வே நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்ற அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து இருக் கிறார்.
பொதுவாக நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் அவையில் படித்த பிறகு சம்மந்த பட்ட துறைக்கான மானியக் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் அவைத் தலை வரால் நியமிக்கப்படும் இரு சபைகளின் உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு ஆய்வு செய்து நாடாளுமன்றத் திற்கு அறிக்கை அனுப்பிவைக்கும். இந்த நடை முறையின் அடிப்படையில்தான் என்னை போன்ற பலர் நிலைக்குழு உறுப்பினர்களாகவும் குழுக்களின் தலைவர்களாகவும் பணியாற்றி வருகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எல்லா கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து அறிக்கைகளைத் தயாரித்து நாடாளு மன்றத்தின் ஒப்புதலுக்கு வழங்கும் ஒரு ஏற்பாடாகத்தான் நிலைக் குழு செயல்படுகிறது. இதில் அமைச்சர்களின் குறுக்கீடும் கிடையாது அரசியல் தலையீடுகளும் இருக்க முடியாது என்பது குறைந்தபட்ச அரசியல் அறிந்தவர் களுக்குக்கூட தெரியும். நான் அங்கம் வகிக்கும் ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் நியமனத் திற்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமைச்சர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நிலைக்குழு மற்றும் இலாக்காக்கள் சம்மந்தப்பட்ட ஆலோசனைக் குழுக்களை நாடாளு மன்றத்தின் சபைத் தலைவர்கள் நியமிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் தம்பிதுரை உள்ளார்.
அ.தி.மு.க. குழுவின் தலைவர் தம்பிதுரை கூட பாராளுமன்றத்தின் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரத்தில் அவை நடவடிக்கைகளை நடத்தும் மாற்று தலைவர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். பல நேரங்களில் அவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை நடத்துகிறார். இதைப் போலவே நாடாளுமன்ற மேலவை யில் எங்கள் இயக்க உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்ற மேலவையின் நட வடிக்கைகளை நடத்தும் பொறுப்பு வகிக்கிறார்.
சபாநாயகரின் வரம்புக்கு உட்பட்டவை
அரசியல் கூட்டணி அமைப்புகள் - அமைச்சர் பொறுப்புக்கள் என்பவை பிரதமரின் அதிகார வரம்பு களுக்கு உட்பட்டவை. நாடாளுமன்ற நடவடிக்கைகள் - அதன் குழுக்களின் நடவடிக்கைகள் என்பவை சபாநாயகர் அவர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.
ரயில்வே நிலைக்குழு வில் இருந்து டி.ஆர்.பாலு விலக வேண்டும் என்று ஜெயலலிதா சாடி இருக்கி றார். இது நாடாளுமன்ற அவைத் தலைவரின் அதிகாரத் திற்கு சவால் விடுவது மட்டுமல்ல; எனது நாடாளுமன்ற உரிமைப் பிரச்சினையில் தலையிடுவதும் ஆகும் என்பதை ஜெயலலிதா அவர்களுக்கு முதலும் முடிவுமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மத்திய அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கழகம் முடிவு செய்து, தலைவர் கலைஞர் அவர் கள் ஆணையிட்ட போது, பன்னிரண்டு மணி நேரத்திற்குள் டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து அமைச்சர் பதவியை துறந்தவன் நான்.
இழப்புக்கு ஆளானவர்கள் தி.மு.க.வினர்
ஈழத் தமிழர் பிரச்சினையில், பல்வேறு கட்டங்களில் இழப்புக்கு ஆளானவர் கள்தான் தி.மு. கழகத்தினர் என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!
திருவாரூரில் ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது உருத்ர கோட்டீசுவரர் ஆலயம்.
சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன. பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் - வாடையும் சகிக்க முடியாததாக இருக்கிறது என்றும் - குடியிருப்புகள் பெருகி விட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப் புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் - நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இப்பகுதியில் உள்ள உருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம்.
எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா? உயிரில்லாக் கற்சிலைக்கும் - உதவாத அய்தீகத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்றுதான் திருந்துவார்களோ?
- சி.நா. திருமலைசாமி, சின்னநெகமம்
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 1983.
இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!
இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை? தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகிலே கோடியக்கரை என்ற ஒரு ஊர் இருக்கிறது. ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்கு சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதங்கள் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையை பார்த்தார் என்று சொல் கிறார்கள்.
திரவுபதை மஞ்சள் குளித்தாளா?
சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்ல புரம்; மகாபலிபுரம் என்றுதான் சொல் வழக்கு. ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்ட நகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளை பார்த்தால் ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும். அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டு பார்த்து பாறை யையும் தொட்டுப்பார்த்து அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்கமுடியுமா? என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.
இது என்ன என்று? என்று கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம் - ஒரு விளக்கம். இவை அத்த னையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக் கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.
(20.5.1983 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)
அறிவுப்பூர்வ ஆதாரம்!
பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விடும் என்று கருதும் பழக்கம் படித்தவர், படியாதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.
சித்திரையில் பிறந்த பெரியோர்கள்
சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியை தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், விக்டோரியா - நீண்டகாலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத், காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர், அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல் மார்க்ஸ் - புதியசமதர்ம சமுதாயக் கருத்தை தந்த கம்யூனிசத் தந்தை, டார்வின் - பரிணாம வாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோ தத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக் - பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி. - குமுதம், தகவல்: சம்பத்ராஜ், பேட்டவாய்த்தலை
உண்மை
உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய்.
உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.
கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, ரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.
-ஆர்.ஜி.இங்கர்சால்
Post a Comment