Search This Blog

1.3.13

திராவிடம் என்றால் ஜாதி ஒழிப்பு என்று பொருள்

ஜாதி - தீண்டாமை: கம்பம் காட்டும் ஒளி! 
கம்பம் மாநாட்டுத் தீர்மானங்களில் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்  பட்டுள்ளது.

ஜாதி என்பதும், அதன் விளைவான தீண்டாமை என்பதும் - பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், மனிதத் தன்மைக்கும் விரோதமானதால், அந்தப் பிறவிப் பேதங்களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப் பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறது! - என்று முதல் தீர்மானமே மாநாட்டின் நோக்கத்தை தெளிவாக வெளிப் படுத்திக் கொண்டு விட்டது.

ஜாதி என்பது தமிழினம் என்ற கோட்பாட்டை சிதைக்கக் கூடியதாகும். தமிழர்களிடையே பேதத்தை உருவாக்கக் கூடியதாகும்.
தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் இந்த இடத்தில் சரியான புரிதல் இல்லாமல் திண்டாடு கிறார்கள். ஜாதி ஒழிப்பை முதன்மைப்படுத்தினால் தான் தமிழர்கள் தாங்கள் புகழ் பெற்ற ஓரினத்துக்குச் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் ஏற்படும்.

தமிழின ஒற்றுமையை, தமிழர்கள் ஓரினம் என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தாமல், தமிழர்களின் உரிமைகளை எப்படி ஈட்ட முடியும் என்பது அடிப் படையான, அறிவார்ந்த வினாவாகும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, தமிழ்த் தேசியம்தான் தங்களின் மூச்சு என்றும் மற்றொரு பக்கத்தில் பேசிக் கொண்டு, ஜாதி அடிப்படையில் கட்சி கட்டுவோரை நினைத்தால், அவர்கள்மீது வெறுப்பை விட சிந்தனா சக்தியில் அவர்கள் எந்தளவுக்குப் பலகீனப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை அறிந்து பரிதாபப்பட வேண்டியுள்ளது.

ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு, எப்படி தமிழ்த் தேசிய உணர்வை இவர்கள் உருவாக்கப் போகிறார்கள் என்பதற்கு விடையில்லை. பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களால்தான் தந்தை பெரியார் ஊட்டிய சிந்தனை வழி வந்தவர்கள் தான் இப்படி அறிவார்ந்த முறையில் ஆழமாகச் சிந்திக்க முடியும்.

திராவிடம் என்றால் ஜாதி ஒழிப்பு என்று பொருள் - ஜாதியின் மூல ஊற்றான ஆரியத்திற்கு எதிரானது என்பது பொருள். இந்தப் பால பாடத்தை முதலாவதாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் ஜாதி ஒழிப்பை முன்னெடுத்துக் கொண்டு பாடுபட்டு வருபவர்கள், பிரச்சாரம் செய்து வருபவர்கள் யார் என்பதை ஒரே ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும் - வரலாற்றைப் புரட்டிப் பார்க்கட்டும்; ஏன் யதார்த்த உலகத்தை மாசற்ற கண்களால் துழாவியும் தான் பார்க்கட்டுமே.

வைக்கம் போராட்டம் தொடங்கி, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை  பெற்றது உட்பட, இன்றைய தினம் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மன்றல் தேடல் வரை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருப்பது திராவிடர் கழகம் அல்லாமல் வேறு யார்? வேறு அமைப்புதான் எது?

தமிழ்த் தேசியம் பேசுவோர் தங்களுடைய பிரச்சாரத் திட்டத்தில் ஜாதி ஒழிப்பை முன்னிறுத்த வில்லையே! மாறாக  ஜாதிப் பத்திரிகையைத் துணை கொண்டு தானே தங்கள் முகத்தை மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டு திரிகிறார்கள் - மறுக்க முடியுமா?

ஜாதி என்பது ஒற்றுமையைக் குலைத்து, பகைமைத் தீயை மூட்டுவதோடு மட்டுமல்லாமல் தனி மனித வளர்ச்சி, சமூக வளர்ச்சி என்பதற்கெல்லாம் தடையாக இருந்து வருவதாகும்.

சமூகச் சிந்தனையாளரான தந்தை பெரியார் ஜாதி அமைப்பு முறையைப் பலவாறாகச் சிந்தித்து ஆழமான கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.

பிரபல பொருளாதாரப் பேராசிரியரான ஆர்தர் லூயிஸ் (A theory of Economic Development) குறிப் பிடுகிறார்:

இந்தச் சமூகம் பொருளாதார தேக்க மடைந்ததற்கு மனித இனம் பல ஜாதிப் பெட்டிகளுள் (The Water Tight Compartment of Castes)
அடைக்கப் பட்டு தொழிலாளர் புழக்கம் (Mobility of Labour) தடைப்பட்டது ஒரு முக்கிய காரணம் என்று குறிப் பிட்டுள்ளார். இந்த ஜாதிக் கட்டமைப்பு ஓரளவு தளர்ந்ததற்குத் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும், இவற்றின் அயராப் பிரச்சாரங்களும், போராட்டங்களும், தியாகங்களும் - கல்வி சம்மட்டி மூலம்தான் இந்த மலைகளை உடைக்க முடியும் என்ற அறிவார்ந்த அணுகுமுறையால் சமூகநீதியை முன்னிறுத்திப் பாடுபட்டு வெற்றி பெற்றதுமே காரணமாகும் என்பதை அறிவைப் பயன்படுத்தும் எவரும் ஒப்புக் கொள்வர்.

ஜாதிக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு பதவிக் கிளைக்குத் தாவலாம் என்ற நினைப்பு - தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பிழைப்பைக் கெடுக்கும் என்று எச்சரிக்கிறோம்!

கம்பம் மாநாட்டுத் தீர்மானங்களை இன்னொரு முறை வாசித்து சுவாசியுங்கள்!

 --------------------”விடுதலை” தலையங்கம் 1-3-2013

25 comments:

தமிழ் ஓவியா said...


இனமலரின் பார்ப்பனப் புத்தி!


டெசோ கூட்டத்தன்று டெசோ தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட தொண்டை வலி காரணமாக செய்தியாளர்களைச் சந்திக்க இயலாமல் டெசோ சார்பில் டெசோ உறுப்பினரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களைச் சந்தித்தார் என்பது எல் லோருக்கும் தெரியும். தொலைக்காட்சிகள் அந்தப் பேட்டியை ஒளிபரப்பின; ஏடுகள் செய்திகளை வெளியிட்டன.

ஆனால், இனமலரான இந்த ஏடு மட்டும் வீரமணி அவர்களின் பெயரை இருட்டடிக் கிறதாம் - பூனை கண்மூடினால் பூலோகம் இருண்டு போய்விடுமோ! அதே நேரத்தில், பார்ப்பன ஏட்டின் இனவெறியினை தமிழர்கள் அறியவேண்டாமா?

தமிழ் ஓவியா said...


நம் இளைஞர்களின் நிலை



நாம், நம் இளைஞர்களைத் தயா ரிக்க வேண்டும்; வாக்கு வங்கி அரசிய லுக்குத்தான் நம் இளைஞர்கள் இருக்கி றார்களா?

தந்தை பெரியார், காமராசர், திராவிடர் இயக்கம் இவர்களின் உழைப் பால் இன்று சிகாகோவிலும், லண்டனி லும் கணினிப் பொறியாளர்களாக கைநிறைய சம்பளம் பெறுபவர்களாக இருக்கின்றனரென்றால் அதற்கு எந்தத் தடியும் தாடியும் காரணம்?

இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து கிரிக்கெட் பார்க்க டிக்கெட் வாங்குகிற இளைஞர்கள் பல்வேறுப் போதை களுக்கு ஆட்பட்டுள்ளனர் நுகர்வுக் கலாச்சாரம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கிறார்கள். ஒரு வீதியில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தால், அந்தத் தீ உன் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? என்று தெரியாமல் இருக்கின்றனர்.

இந்த இளைஞர்களை சரியான பாதைக்குக் கொண்டு வரவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அதனைச் செய்வோம்.

- சென்னை பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (25.2.2013)

தமிழ் ஓவியா said...

சென்னைக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முழக்கம்


இந்தச் சிறுவனை விட்டு வைத்தால் இன்னொரு பிரபாகரனாக வருவான் என்று சுட்டுக் கொன்றனர் கொடியவர்கள்!
சென்னைக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முழக்கம்

சென்னை, மார்ச் 1- பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை ஏன் சுட்டுக் கொன்ற னர் இவன் பிரபாகரனின் மகன் - பிரபாகரனின் மரபணு இவன் ரத்தத்திலும் இருக்கும் - இப்பொழுதே இவனைக் கொல்லாவிட்டால் எதிர் காலத்தில் இன்னொரு பிரபாகரனாக தோன்றுவான் என்று கருதியே சுட்டுக் கொன்றனர் என்றார் தொல்.திருமா வளவன்.

சென்னை பெரியார் திடலில் 25.2.2013 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது:-

மிகப் பெரிய குற்றவாளியான ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு ஒருபுறம் - வீரப்பன் கூட்டாளிகளுக்குத் தூக்குத் தண் டனை இன்னொருபுறம் - என்ன விசித்திரம் இது.

அடிவயிறு கலங்கியது

மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தீனியைத் தின்று கொண்டிருந்த அந்தக் காட்சியைப் பார்த்தபோது அடி வயிறு எல்லாம் கலக்கியது.

இந்த நால்வரும் வீரப்பனை ஒரு முறை கூட சந்தித்ததே இல்லை. உண் மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வக்கில்லாத காவல்துறை, நிரபராதி களைப் பிடித்துத் தண்டிப்பது சரி யானதுதானா?

கண்ணிவெடியில் சிக்கியது எப்படி? யார் காரணம்?

கண்ணி வெடியில் 18 பேர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், இருவர் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், 16 பேர் அப்பாவி பொதுமக்கள்.

இவர்கள் வீரப்பனைத் தேடிச் சென்ற வாகனத்தில் வெடிமருந்து இருந்தது. வீரப்பன் வைத்த கண்ணி வெடியினால் காவல்துறை வாகனம் தூக்கி எறியப்பட்டது.

வாகனத்தில் இருந்த வெடி மருந்துகளும் கையெறிக் குண்டுகளும் வெடித்ததால்தான் காவல்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் உட் பட அவர்கள் சின்னா பின்னமானார் கள். இதில் கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

இந்தச் சம்பவத்துக்கும் இப் பொழுது தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டவர்களுக்கும் என்ன சம் பந்தம்? கீழ் நீதிமன்றத்தில் ஆயுள் தண் டனை, மேல் முறையீட்டில் தூக்குத் தண்டனையா? இது என்ன நியாயம்?

தமிழ் ஓவியா said...

கருணை மனுவின் மீது...

குடியரசுத் தலைவரிடம் அளிக் கப்பட்ட கருணை மனுவின் மீது முடிவு கூற குடியரசுத் தலைவர் அதிக காலத்தை எடுத்துக் கொண்டு விட்டார். சட்ட நிலையில் அப்படி எடுத்துக் கொண்டால் தூக்கை நிறை வேற்ற முடியாது என்று சொல்லப் படுகிறதே. அதே சட்ட நியாயம் இந்த வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல் லப்படுபவர்களுக்குப் பொருந்தாதா!
164 நாடுகள் மரண தண்டனை கூடாது என்று முடிவு செய்து விட் டன. அந்தப் பட்டியலில் இந்த திரா விடம் சேர வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

ராஜ்குமாரும் - வீரப்பன் கூட்டாளிகளும்

கருநாடக நடிகர் ராஜ்குமாரின் உயிரைக் காப்பாற்ற இரண்டு மாநிலங்கள் துடியாய்த் துடித்ததைப் பார்த்தோம். அதே நேரத்தில் இந்த நான்கு உயிர்கள் பற்றியும் கவலைப் பட வேண்டாமா?

பாலகன் பாலசந்திரனையும் அவருக்குப் பாதுகாவலராக சென்ற நான்கு பேர்களையும் சிங்கள இரா ணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்ற னரே. அந்தப் பாலகன் கண்முன்னே அந்த நான்கு பேர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு அதற்குப் பிறகு பால சந்திரனையும் மார்பில் குண்டுகள் துளைக்க சுட்டு மகிழ்ந்துள்ளனர்.

எதிர்காலத்தில் இன்னொரு பிரபாகரனா?

இன்று இவன் சிறுவனாக இருக் கலாம். பிரபாகரனின் மரபணு இவன் இரத்தத்தில் இருக்கத்தான் செய்யும். இவனை இப்பொழுது உயிரோடு விட்டுவிட்டால் எதிர்காலத்தில் இன்னொரு பிரபாகரனாக இவன் உருவாவான் என்று எண்ணியே படுகொலை செய்துள்ளனர். அரச பயங்கரவாதம் என்பது இதுதானே.

தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த நிலை

இந்தியாவில் 35 மாநிலங்கள் இருக் கின்றன. அதில் ஒரே ஒரு மாநிலமான தமிழ்நாடு மட்டும் பலவிதப் பிரச் சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

இலங்கையைப் பகைத்துக் கொள்ள முடியாதாம். நட்பு நாடு என்கிறார்கள் அப்படி சொல்லிவிட்டு தமிழ்நாட்டிலே அவர்களுக்குப் பயிற்சி கொடுப்போம் என்கிறார்களே!

இதுதான் தமிழ்நாட்டின் நிலை இந்த நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

அரசியல் காரணமும் இருக்கிறது

இதற்கு அரசியல் காரணமும் இருக்கிறது. 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதனால் தமிழ் நாட்டுத் தமிழன் மீது மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் மீதும் கோபம் கொப் பளிக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்ன தமிழ்நாடு எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறது.

தமிழ்நாடு பாலைவனமாகப் போகிறது - எச்சரிக்கை!

இன்னும் 15 ஆண்டுகளில் தமிழ் நாடு பாலைவனமாகப் போகிறது. தண்ணீர் பிரச்சினை அதற்குக் காரண மாக இருக்கப் போகிறது. நம்மைச் சுற்றிலும் உள்ள மாநிலங்கள் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கின் றன. எதிர்காலத்தில் தண்ணீர் என்பது நமக்குப் பொதுப் பிரச்சினையாக இருக்கப் போகிறது.

தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டாமா? யாரோ சிலர் தூக்கி லிடப்படுகின்றனர் என்று நினைக் கலாமா என்றார் தொல்.திருமாவள வன் அவர்கள்.

தமிழ் ஓவியா said...


தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்க! பேரா. சுப.வீரபாண்டியன் முழக்கம்!


சென்னை, மார்ச் 1- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட வர்கள் மீதான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சட் டத்தில் இடம் உண்டு என்றார் திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன். 25.2.2013 அன்று சென்னை பெரி யார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட் டதாவது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தமதுரையில் குறிப் பிட்டதாவது:-

நாகப்பட்டினத்தில், தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்து ஏட்டில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப் பட்டதை பார்த்த போது திடுக்கிட்டோம்.

அதே நேரத்தில் நமது ஆசிரியர் அவர்கள் சென் னையில் இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாமா என்று கருத்து கூற பத்தே நிமிடத்தில் இந்த கூட் டம் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நாட்டிலே தண் டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் வரவேற் கப்படுகிறார்கள் - வர வேற்கப் பட வேண்டிய வர்கள் தண்டிக்கப்படு கிறார்கள்.

பாலச்சந்திரன் படு கொலை செய்யப்பட்டுக் கிடந்த காட்சியைவிட அடுத்துத் தனக்கு என்ன நடக்கப் போகிறது என் பதை அறியாமல் தின் பண்டத்தைத் தின்று கொண்டிருக்கும். காட்சி தான் நம்மைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. ஒரு படம் உலகையே உலுக்கி எடுத்து விட்டது.

இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் டெசோ சார்பில் மார்ச் 7ஆம் தேதி மாநாடு - கருத் தரங்கம் நடைபெற உள் ளது. அது உலகம் முழு வதும் நம் உணர்வைக் கொண்டு சேர்க்கும்.

இரண்டு செய்திகள் கொலைக்காரன் ராஜ பக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் கூட்டாளிகள் என்பதற்காக நான்கு பேர் களுக்குத் தூக்கா.

இழுத்து மூடு நீதிமன்றத்தை!

தூக்குத் தண்ட னையே கூடாது என்று சொல்லுபவர்கள் நாம். கசாப் தூக்கிலிடப்பட் டது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டது ஏனென் றால் வெளியில் தெரிந் தால் சில மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றம் சென்று விடுவார்களாம்.

எப்படிப்பட்ட தந் திரம். அப்படியென்றால் மனித உரிமைகள் பற்றி இந்த அரசினர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! நீதிமன் றங்கள் இந்த நாட்டில் ஏன்? இழுத்து மூட வேண்டியதுதானே!

குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்தார் - அவரைத் தொடர்ந்து அப்துல் கலாம் இருந்தார் - அப் பொழுதெல்லாம் அவர் கள் கருணை மனுக் களை நிராகரிக்கவில்லை; தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்ல வில்லை.

பிரணாப் குடியரசுத் தலைவராக ஆனபின்...

பிரணாப் முகர்ஜி குடி யரசுத் தலைவரானபின் தூக்குத் தண்டனைகள் அவசர அவசரமாக நிறை வேற்றப்படு வது - ஏன்? தெரிந்து கொள்ளலாமா?

வீரப்பன் கூட்டாளி கள் என்பதற்காக தூக்குத் தண்டனையா? இங்கே அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நம் எதிரில் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்துள் ளார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லு வதெல்லாம் கலங்காதீர் கள்! கலங்காதீர்கள்!! உங் களுக்காகக் குரல் கொடுக் கக் கூடியவர்கள் நியாயம் கேட்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட் டவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட னர். இப்பொழுது அவர் களைத் தூக்கில் போட வேண்டும் என்று கூறுகி றார்கள். ஒரு குற்றத்திற் காக? இரண்டு தண்டனை களா? சட்டத்தில் அதற்கு இடமுண்டா?

இதுபோன்ற வழக்கு களை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியே கூறி இருக்கிறார். அதைத் தான் நாங்களும் வலி யுறுத்துகிறோம். இந்தக் கூட்டத்தின் வாயிலா கவும் வலியுறுத்துகிறோம்.

சு.சாமி ஓட்டம்

சு.சாமி ஒரு தொலைக் காட்சிப் பேட்டிக்கு வந்தார். அப்பொழுது அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உங் களை எப்பொழுது கைது செய்யப் போகிறார்கள் என்று கேட்டேன் ஏன்? என்னை எதற்குக் கைது செய்யவேண்டும் என்று கேட்டார். ஜெயின் கமிஷ னில் உங்கள் பெயரும், சந் திரசாமி பெயரும் குறிப் பிடப்பட்டுள்ளதே என்று சொன்னேன். உடனே நடையைக் கட்டிவிட் டார் என்று குறிப்பிட் டார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாள்



தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழர் தலைவர் வரவேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து!

சென்னை, மார்ச் 1- தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2013) அவர் பெரியார் திடலுக்கு வருகை தந்து, தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். முன்னதாக மு.க. ஸ்டாலினை தமிழர் தலைவர் வரவேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2013) தி.மு. கழகம் சார்பில் இளைஞர் எழுச்சி நாளாக பல்வேறு சமூகநலத் திட்டங்கள் தமிழகம் முழுவதும் நடை பெறுகிறது.

பெரியார் திடலுக்கு வருகை

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வருகை தந்தார்.

முன்னதாக அவரை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

பெரியார் நினைவிடத்தில்
மு.க. ஸ்டாலின் மரியாதை

பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு தமிழர் தலைவர் மு.க. ஸ்டாலினை அழைத்துச் சென்றார். இதையடுத்து தந்தை பெரியார் நினை விடத்திலும், அன்னை மணியம்மையார் நினை விடத்திலும் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பெரியார் நூல்கள் அளித்து வாழ்த்து!

இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்தில் உள்ள நினைவு கல்வெட்டு அருகில் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், பொன் னாடை அணிவித்து தந்தை பெரியார் நூல்களை வழங்கினார்.

இனிப்பு வழங்கப்பட்டது

தி.மு.க. வட்டச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த இனிப்புகளை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்.

கலந்துகொண்டோர்:

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி மு.க. ஸ்டாலின் அவர்களுக்குச் சால்வை அணிவித்தார். திராவிடர் கழகச் சட்டத் துறைத் தலைவர் த. வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் வெ. ஞானசேகரன், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், ஆவடி மாவட்டத் தலைவர் கந்தசாமி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் செங்குட்டுவன், முன்னாள் துணைவேந்தர் பெ. ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு, க. பொன்முடி, தா.மோ. அன்பரசன், சுகவனம் எம்.பி., முன்னாள் துணை சட்டப் பேரவைத் தலைவர் வி.பி. துரைசாமி, முன்னாள் சென்னை மேயர் மா. சுப்பிரமணியம், தி.மு.க. அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், தென்சென்னை தி.மு.க. மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப் பினர் ஜெ. அன்பழகன், வடசென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, எழும்பூர் பகுதி தி.மு.க. ஏகப்பன், எழும்பூர் பகுதி வட்டச் செய லாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, தேவநிதி தோழியர்கள் நிர்மலாதேவி, ராஜாத்தி, ஆரோக்கியம், வள்ளி, ரோசி உள்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


இலங்கை சிங்கள அரசுக்கு எதிராக திரளும் உலகக் கருத்துகள்!


லண்டன், மார்ச் 1- உலகில் முதற்தட வையாக பிரித்தானியத் தலைநகர் லண்ட னில் தமிழீழத் திற்கான தமிழீழ சுதந்திர சாச னம் அறிமுக அரங்கம் நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தினால் ஹறோ கவுன்சில் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்த அறிமுக அரங்கில் ஈழத் தமிழர்கள் என்ற உணர்வோடு அமைப்பு வேறுபாடு இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ்வறிமுக அரங்கை நாடுகடந்த தமிழீழ அரசாங் கத்தின் அரசியல் விவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் தலைமை தாங்கி தமிழீழ சுதந்திர சாச னம் தொடர்பான விரிவான விளக் கத்தை வழங்கினார்.

1955 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா சுமார் 50,000 தொண்டர்களைக் கொண்டு மக்கள் கருத்துப் பெற்று அவர்களின் நியாயமான விருப்புகளையும், கோரிக் கைகளையும் உள்ளடக்கியதாக தனது விடுதலைக்கான சாசனத்தை வரைந் திருந்தது.

அதே போன்று ஈழத்தில் (தாயகத் தில்) வாழ்கின்ற அடிமட்ட மக்கள் முதல் புத்திஜீவிகள் வரை அனைவரது கருத்து களையும், ஆலோசனைகளையும் உள் வாங்கியே இந்த தமிழீழ சுதந்திர சாசனம் அமைய இருக்கிறது.

ஈழத்தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் விருப்பு, வெறுப்பு களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அரசியல் வெளியும் ஜனநாயக வெளியும் இல்லாத சூழலில் உள்ளதால் தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பான அவர் களின் உள்மனங்களில் உள்ள உள்ளக் கிடக்கைகளை, உண்மையான அரசியல் விருப்பைத் தெரிந்து கொள்ளும் முக மாக றறற.வயஅடைநநடயஅகசநநனடிஅஉயசவநச.டிசப எனும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தில் தாயகத் தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து உலகப் பரப்பெங்கும் வாழும் ஈழத் தமிழர்களின் கருத்து களையும் பதிவு செய்யும் வாய்ப்பும், இதனூடாக இத்தமிழீழ சுதந்திர சாசனத்தில் அனைத்து ஈழத்தமிழர் களும் பங்கு கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுவான சில கேள்விகள் அடங்கிய கேள்விக் கொத்தும் இவ்விணைய தளத்தில் உள்ளது.

இத்தமிழீழ சுதந்திர சாசனம் ஆனது உலகெங்கும் உள்ள தமிழீழ ஆதரவு கொண்ட அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள், இளையோர், ஊடகவிய லாளர்கள், தமிழீழ பிரதேசத்திற்குரிய மக்கள், மற்றும் தமிழீழ விடுதலைக்காக போராடிய போராளிகள் என அனைவரது ஆதரவோடும், ஆலோ சனைகளோடும் இச்சாசனம் உருவாக் கப்படவுள்ளதால் நேற்று நடைபெற்ற தமிழீழ சுதந்திர சாசனம் அறிமுக அரங்கில் கலந்துகொண்டவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகில் பல தமிழ் அமைப்புக்கள் வெவ்வேறு வேலைத்திட்டங்களில் தம்மை அர்ப்பணித்து செயற்பட் டாலும் எதிர்காலத்தில் அமையப் போகும் தமிழீழத்திற்கான தமிழீழ சுதந்திர சாசனத்தில் அனைவரும் ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் இணைந்து பணியாற்றுவர் என்றே பலராலும் நம்பப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


மோசமான திசையில் செல்லும் சிறீலங்காவைப் புறக்கணிப்போம்! கனேடியப் பிரதமர்


சிறீலங்கா விடயத் தில் மென்போக்குடன் நடந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப் புகளை நிராகரித்துள்ள கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், இந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் நடைபெற வுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக் கணிக்கும் முடிவில் இருந்து தாம் பின் வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

கனேடிய நாடாளு மன்றத்தில் உரையாற் றிய அவர்,

சிறீலங்காவில் நிலை மைகள் முன்னேற்ற மடையாது போனால், அங்கு நடை பெறும் காமன்வெல்த் தலைவர் களின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவ தில்லை என்று அறிவித் திருந்தேன்.

அந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், அங்கு ஏற்பட்டுள்ள மாற் றங்கள் கவலையளிக்கிறது. அந்த நாடு மோசமான திசையில் சென்று கொண் டிருக்கிறது என்று தெரி வித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட் டைப் புறக்கணிக்கும் முடிவை கனடா கைவிட வேண் டும் என்று காமன் வெல்த் செயலாளர் கம லேஸ் சர்மா கேட்டுக் கொண்டிருந்த போதும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கனேடியப் பிரதமர் ஸ்டீ பன் ஹாப்பர் தெரிவித் துள்ளார்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...


தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!


60 ஆம் ஆண்டில் அடிவைக்கும் இளைஞர்களின் இதயத்துடிப்பாம்

தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!

இன்று மார்ச் 1 இல் 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அருமைத் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரிளமைத் திறத்தோடு சிறப்பான உழைப்பின் உருவமாகி, பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் கலைஞரின் தகுதிமிக்க அரசியல் வாரிசாகி, வாகைசூடிடும் கொள்கை வைரமாகும்! அடக்கம், அன்பு, கொண்ட கொள்கையில் உறுதி, லட்சோபலட்ச இளைஞர் பட்டாளத்தின் ஈடுஇணையற்ற தளநாயகன், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைப்பில் கலைஞர் போல் உயர்ந்து நிற்கிறார்!

மேயராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி, எதிர்கட்சி தலைவராகவும் ஆகி அவர் வகிக்கும் அரசியல் பொறுப்பு எதுவானாலும் தன் அடிகளை அளந்து வைத்து எதிரிகளையும் வீழ்த்தி வியக்கச் செய்யும் வித்தகர் அவர்!

ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடர் இயக்கங்களின் அரசியல் சரித்திரத்தில் அடுத்தகட்ட அத்தியாயமாய் பரிணமித்து ஜொலிக்கிறார்!

உலகத்தமிழர்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவராய் உலா வருகிறார்!

சிறைச்சாலைத் தியாகங்களாலும், சீலத்துடன் கூடிய பொதுவாழ்வின் தொண்டறத்தாலும் மிளிறும் இத்தொண்டர்களின் தோழன், இயக்கத்தின் அரண், கட்டுப்பாடு காத்து, தன் தலைவர் கிழித்த கோட்டை தாண்டாத கொள்கைக் கோமானாகி, நாளும் வளர்கிறார், கழகத்தையும் வளர்க்கிறார் - கண்ணியத்துடன் கடமையாற்றும் கழகக் கட்டுப்பாட்டின் இலக்கணமாம் அவர்!

வளர, வளர அவரிடம் ஆர்வம் குன்றாது இருப்பதைப் போலவே, அடக்கம் அவரை உயர்த்திடும் அற்புதக் கவசமாகி அவரது வளர்ச்சிக்கு அதுவே வெளிச்சமாகவும் உதவுகிறது!

60ஆம் ஆண்டு அகவையில் கூட இளைஞர் போன்று ஓடி ஆடும் ஓயாத தேனீயாகி, இவர் எப்படி சலிப்பின்றி இலட்சியப் பயணம் செல்கிறார் என்று சிலர் வியக்கக் கூடும்.

அந்த இரகசியம் ஊர் அறிந்தது; உலகறிந்தது. 95 வயதிலும் போராட்டக் களம் காணவே ஆயத்தமான தலைவர் தந்தை பெரியார்தம் ஈரோட்டுக் குருகுல இணையற்ற மாணவராம் 90 வயது இளைஞர் நம் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் ஆணை ஏற்று, செயல்படும் இவர் 60 வயது இளைஞர் என்பதுதான்! இவர் எல்லாம் பெற்று, எதிர்காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் வரலாற்று வைரவரிகள் எழுதிட, வளர்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

1.3.2013 சென்னை

தமிழ் ஓவியா said...

விலைவாசி ஏற்றம், பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


2013-2014 நிதி நிலை அறிக்கை மிகவும் சாதுர்யமானது
வருமான வரி விலக்கு இலக்கை கூடுதல்படுத்த வேண்டும்

விலைவாசி ஏற்றம், பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களால் நாடாளுமன்றத்தில் நேற்றுத் தாக்கல் செய்யப்பட்ட 2013-2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் விலைவாசியும், பணவீக்கமும் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித் துள்ளார். அறிக்கை வருமாறு:

இந்திய அரசின் (பட்ஜெட்டை) 2013-14ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் நேற்று தாக்கல் செய்துள்ளார்.

பொதுத் தேர்தல் வரும் 2014இல் வரவி ருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பல தரப்பிலும் பல்வகை எதிர்பார்ப்புகள் இருந்தன.

பெட்ரோலியப் பொருள்கள் விலை முதற் கொண்டு, நாமக்கல் முட்டை விலை வரையில் மிகவும் எகிறியுள்ள நிலையில், - விலை வாசிகள் விண்ணை மூட்டும் நிலையில், ஒரு வரவு - செலவுத் திட்டத்தை, எல்லோரையும் ஓரளவு மகிழ்விக்கும் வகையில், எவராலும் கொண்டுவர இயலாது.

தமிழ் ஓவியா said...

நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், தன்னால் இயன்ற அளவுக்கு, பல்வேறு கண் ணோட்டச் சூழ்நிலைகளின் கைதியாகவே, தன்னை ஆக்கிக் கொண்டு, மிகவும் சாதுர்ய மான வரவு - செலவுத் திட்டமாக இதனைக் கொணர்ந்துள்ளார்!

பிறகு மேலும் சில அறிவிப்புகள் வரக்கூடும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

வழக்கம்போல் பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு!

வழக்கம்போல பாதுகாப்புக்கான செலவு தான் முன்னுரிமையும், அதிக ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளது.

பக்கத்து நாடுகளிடையே ஒரு சிறந்த நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளும் வெளி யுறவுக் கொள்கைகள் அரசுகளால் உருவாக் கப்படும் வரை நாட்டின் பாதுகாப்பிற்கே பெரும் பெரும் தொகைகள் செலவிடப்படக் கூடிய நிலை. மற்ற நாடுகளின் கல்வி, சுகாதாரம், ஆகியவைகளுக்கான ஒதுக்கீடு சதவிகிதங் களுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டு ஒதுக்கீடு குறைவே ஆகும்!

என்றாலும் மகளிர், இளைஞர் வேலை வாய்ப்பு ஆகிய துறைகளிலும் நிதியமைச்சரின் கவனம் பாயாத நிலை இல்லை. எல்லோரையும் ஓரளவு திருப்தி செய்ய வேண்டும் என்றே முயன்றுள்ளார்!

கடும் நிதிப் பற்றாக்குறை என்ற கம்பிமீது ஏறி நின்று தான் நிதியமைச்சர் தனது வித்தைகளைக் காட்டிட வேண்டிய நெருக்கடி இன்றைய நிலை.

வருமான வரி விலக்கு விகிதங்களில் மாற்றமில்லாதது ஏமாற்றம் தருவதே!

வருமான வரி விலக்கு விகிதங்களில் மாற்றமில்லை என்ற அறிவிப்பு, நடுத்தர மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகும்.

அதுபோலவே நாட்டையே உலுக்கி வரும் கருப்புப்பண ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, அதனை வெளிக் கொணரும் முயற் சிகள் பற்றி பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடாததும் பெரிய ஏமாற்றமாகும்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தூத்துக் குடி துறைமுகத்திற்கு (அவுட்டர் ஹார்பர்) விரிவாக்கத்திற்கு ரூ.7500 கோடி ஒதுக்கி யுள்ளதும். சென்னை - பெங்களூரு தொழில் நெடும் பாதைத் திட்டம் (Industrial Coridar) ஆகியவற்றிற்கு 2013-14 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது!

மகளிர் வங்கி - நல்லதோர் துவக்கமே!

அதுபோலவே மகளிர் வங்கி மற்றும் அதற்கான மூலதனமாக ரூ.1000 கோடி ஒதுக் கியுள்ளது, பெண்களின் சுயதொழில் முயற்சி, வாழ்வாதார மேம்பாடு ஆகியவைகளுக்காக பயன்படுத்த இது ஒரு நல்ல துவக்கமாகும். ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையான வரியும் போடாது, ஆடம்பரப் பொருள்களுக்கே வரிகளைப் போட்டிருப்பது மிகவும் முற்போக் காளர்கள், சமூக ஆர்வலர்களால் பாராட்டப் பட வேண்டிய தொன்றாகும்.

வரிகள் யாருக்கு? எவற்றிற்கு?

சிகரெட், சுருட்டு போன்ற லாகிரிப் பொருள் வரி, ஆடம்பர சொகுசு கார்களுக்கு வரி, ஏசி வசதியுள்ள ஓட்டல்களின் உணவுப் பண்டங் களின் விற்பனைகள், 1 கோடி மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள தனி வீடு, அடுக்கு மாடி வீடு, 50 லட்சத்துக்கும் மேலான அசையா சொத்துக்களுக்கு வரி.

இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருள் களால் தயாரிக்கப்படும் பட்டுத்துணி வகைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செட்-அப் பாக்ஸ், இவை மீதெல்லாம் கூடுதல் வரிப் போடப்பட்டிருப்பது நியாயமானதே!

ஆடம்பர செல்போன்கள் விலையுடன் கூடுதல் வரியையும் குறை சொல்ல முடியாது! (ஏழை எளியவர்கள் பயன்படுத்தும் செல்போன் ரூபாய் 2000-த்துக்கும் குறைவானதே)

விலைவாசி ஏற்றம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்

விலைவாசி ஏற்றம் -பண வீக்கம் கட்டுப்படுத்த தொடர் முயற்சிகள் தேவை. பொதுவாக இது மகிழ்ச்சி அதிகம் உள்ள, புது வரிகள் ஏழை, எளியவர்களுக்கு இல்லாததால் எதிர்க் கட்சியினருக்கு இது பெரிதும் ஏமாற்றம் அளிப்பது, கடுமையாக விமர்சிக்க இயல வில்லையே என்பதுதான்.

வருமான வரி விலக்கை மேலும் கூட்ட வேண்டியது பற்றி பரிசீலிக்கலாம்.

அறிவிக்கப்படுவதில் இது முதலிடம் பெற்றால் நலம்! ஒட்டு மொத்தத்தில் இது ஒரு சாமர்த்தியமான, சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டே!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 1.3.2013

தமிழ் ஓவியா said...


சித்திரை முதல் நாள் அறிவிப்புக்கு வேதனை


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என
புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்குக் கோரிக்கை!
மலேசிய மாநாட்டில் தீர்மானம்!

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் தலைநகர் கோலாலம்பூர், தான்சிறீசோமா அரங்கில், கடந்த ஞாயிறன்று தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் உலகப் பரந்துரை மாநாடு, அதன் தலைவர் அ. இராமன் தலைமையில் நடைபெற்றது. காப்பாளர் இரா. தமிழ ரசி தமிழ் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது.

துணைச் செயலாளர் கரு. பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றினார். சமுதாயக் காவலர் சே.பி. சாமுவேல் இராசு மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். நீண்ட வரிசையில் நின்று மாநாட்டு மலரைப் பலர் பெற்றுக் கொண்டனர்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன், தமிழிய ஆய்வுக் களம், தலைவர் இர. திருச் செல்வம், மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர், திருமுறைச் செல்வர் ந. தர்மலிங்கம், தமிழ்நாடு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் பாவலர் கதிர். முத்தையன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழாலயம் சிறப்பாசிரியருமான பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மு. நிர்மலாதேவி தருமலிங்கம் தொகுத்து வழங்கிய, தொன்மை, நாகரிகம் தொடர் பான ஆவணப்படங்கள் மற்றும் குமரிக் கண்டம் ஆணவப் படங்கள் உள்ளடக்கிய வெண்திரைக்காட்சிகள் பார்வையாளர் களை வெகுவாகக் கவர்ந்தன.

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த வாழ்த்துச் செய்திகள் படிக்கப் பெற்றன.

தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் மா. கருப்பண்ணன், மாநாட்டின் தீர்மானங்களைப் படித்தார். அவை பலரால் முன்மொழியப்பட்டு வழிமொழியப் பட்டன.

துணைத் தலைவர் ந. பொன்னுசாமி நன்றி கூறினார்.

நடுவத் தலைவர் போகையா முனியாண்டி நெறியாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

1. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் இயற்றி அறிவித்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

2. அச்சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனத் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக இன்றைய தமிழக அரசு சட்டம் இயற்றியதற்கு மிகுந்த வேதனையை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

3. அச்சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, மீண்டும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் புதிய சட்டம் இயற்றி அறிவிக்க இன்றைய தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தை முதல் நாளைப் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டாக, மலேசியத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அந்நாளை, பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, மலேசிய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தொன்மை வாய்ந்த மூத்த தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிச் சிறப்பித்த இந்திய நடுவணர சுக்கும் அதற்குத் துணைபுரிந்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் சென்னையில் இயங்கிவரும் செம் மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி உதவி அளிப்பதுடன், தற்போது முடங்கிக் கிடக்கும் அதன் நிருவாகத்தைச் சீர்படுத்தி மேலும் சிறப்புடன் செயற்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. தமிழர் வாழ்வியல் திருமறையாக வும் உலகப் பொதுமறையாகவும் திகழும் திருக்குறளை, தேசிய நூலாக அறிவித் துப் பெருமைப்படுத்துமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மற்றும் பல தீர்மானங்கள் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


பாவம் ராஜாக்கள்!


கேள்வி: தகாத வழி களில் பணத்தைச் சம் பாதித்து ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுபவர்கள் உண்மை யான கடவுள் பக்தி உள்ள வர்களா?

இளையராஜா (இசை இயக்குநர்) பதில்: அந்தப் பணம் அவர்களிடமிருந் தால் மேலும் தகாத வழி களில் அவர்கள் உபயோ கித்து விடலாம் என்று கடவுள் தனது டோல் கேட்டின் மூலம் வசூலிக் கிறது போலும் என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? (குமுதம் 27.2.2013 பக்கம் 85).

திருப்பதி உண்டியலில் அப்படிப் போடப்படும் பணம் 5000 கோடி ரூபாய் ஒன்றுக்கும் பயன்படாமல் வங்கிகளில் தூங்குவதால் யாருக்கு என்ன பயனாம்?

பகுதி பணத்தை உண்டியலில் போட்டவன், தகாத வழியில் மறுபடியும் சம்பாதிக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்தர வாதம்? அவ்வாறு செய் வதற்குத்தானே ஒரு பகு தியைக் கோயில் உண்டிய லில் போடுகிறான்! பணம் உண்டியலில் போடாத வர்கள் எல்லாம் தக்க வழியில் சம்பாதிக்காத வர்களா?

ஏன் இவ்வளவு தூரம் மூக்கைத் தொட சுற்றி வளைப்பானேன்? தக்க வழியில் சம்பா தித்து தக்க வழியில் செல வழிக்கும் நல்ல புத்தியை அந்த ஏழுமலையான் கொடுக்கக் கூடாதா?

ஏன் நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை? அப்படி யென்றால் ஏழுமலையான் நல்லவன் கிடையாதா?

ஏழுமலையான் என்பது உண்மையாக இருந்து அந் தக் கடவுளுக்குச் சக்தி யிருந்தால் நல்ல புத்திதான் கொடுத்திருப்பான். அதெல் லாம் சுத்த கப்சா, யாரோ சிற்பி செதுக்கிய சிலையை வைத்து இல்லாதது பொல் லாததுகளைக் கற்பித்து, புத்தியைப் பறி கொடுத்த மக்களின் பக்தியைப் பயன் படுத்தி சுரண்டல் தொழிலை நடத்துகிறார்கள் என்பது தானே உண்மை!

ஏழுமலையானுக்கு சக்தியிருப்பது உண்மை யானால் உண்டியல் பணத்தை எண்ணும்போது நாலு பக்கமும் கேமிராவைப் பொருத்தி வைப்பது ஏன்? உண்டியலின் பக்கத்தில் ஏ.கே.47 துப்பாக்கி ஏந்தி காவலாளி நாலு பக்கமும் கண்களைச் சுழற்றிச் சுழற் றிப் பார்த்துக் கொண்டு நிற்பானேன்?

அரசர் கிருஷ்ணதேவ ராயன் அன்பளிப்பாக திருப்பதி கோயிலுக்குக் கொடுத்த நகைகளைக் காணவில்லை என்ற புகார் எழுவானேன்? நகைகள் கணக்குப் பார்த்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடு வானேன்?

பாவம் இளையராஜாக் கள்? சிறீரங்கம் கோயில் திருப்பணிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து என்ன பயன்? வெளியில்தானே நிற்க வைத்தனர்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வருமா?


கொண்டு வந்தால் இந்தியாவின் கடமை உணர்வையும்
உலகத் தமிழர்களின் உணர்வையும் அது எதிரொலிக்கும்

சென்னை, மார்ச் 3- ஜெனி வாவில் மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவே இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தால் அது இந்திய நாட்டின் கடமை உணர்வையும் உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொ லிப்பதாக அமையும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சென் னையில் இன்று காலை (3.3.2013) அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மணி விழா மலரினை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். அதுபோது செய்தியாளர்களை கலை ஞர் சந்தித்த விவரம் வருமாறு:-

செய்தியாளர் :- டெசோ சார்பில் நீங்கள் 5ஆம் தேதியன்று இலங்கை துதுவரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். இன்னொரு குழுவினர் 4ஆம் தேதி யன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக் கிறார்களே?

தலைவர் கலைஞர் :- நாங்கள் 3ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்காததற்குக் காரணம், அவர்கள் 4ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்திருப்பதால்தான்!

செய்தியாளர் :- மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை யில் தி.மு.கழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே?

கலைஞர் :- அதை நாங்கள் பல முறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக் கிறோம். தொடர்ந்து வலியுறுத்து வோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனை வரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். செய்தியாளர் :- 7ஆம் தேதி டில்லி யில் நடைபெறும் டெசோ கருத்தரங் கில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதா?

கலைஞர்:- அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

செய்தியாளர் :- தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே பேசும்போது இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவாக வும், டில்லியில் பேசும்போது எதி ராகவும் பேசுகிறார்களே?

கலைஞர்:- யார் அப்படி பேசு கிறார்கள்?

செய்தியாளர் :- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் அவர்களே அப்படி பேசியிருக்கிறாரே?

டி.ஆர். பாலு :- இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக டெல்லியில் அவர் பேசவில்லை.

செய்தியாளர் :- அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதற் குப் பதிலாக, இந்தியாவே தீர்மா னத்தை முன் மொழியுமா?

கலைஞர் :- இந்தியாவே தீர்மா னத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டும். இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வு களையும் எதிரொலிப்பதாக அமை யும். இந்தத் தீர்மானத்தின் மீது இந் தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அக் கறையோடு கவனிக் கிறார்கள்; நாங்களும் தான்!

செய்தியாளர் :- மதுவிலக்குப் பிரச்சினைக்காக காந்தியவாதி சசி பெருமாள் 33 நாட்களாக உண்ணா விரதம் இருக்கிறார். தற்போதைய சூழலில் மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

கலைஞர் :- சாத்தியம் இல்லை என்பதற்கு பல சான்றுகளை ஏற்க னவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக நல்ல காரியங் களை விட்டு விட முடியாது. அள வுக்கு மீறி மது புழக்கத்தையும், அதைப் பயன் படுத்துவதையும் அனு மதிக்க வேண்டுமா என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

செய்தியாளர் :- நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

கலைஞர்:- எப்படி இருக்கவேண் டும் என்று கேளுங்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

செய்தியாளர் :- ஒவ்வொரு முறை யும் ஆறு மாதத்திற்குள் மின் வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று ஆட்சியிலே இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், மின் வெட்டு நீங்கிய பாடில்லையே?

கலைஞர் :- அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. செய்தியாளர் :- இலங்கையில் ராஜபக்ஷேயை சுப்பிரமணிய சுவாமி சந்தித்ததைப் பற்றி?

கலைஞர் :- நீங்கள் அவரையே கேட்டிருக்கலாமே!

இவ்வாறு பேட்டியில் கலைஞர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


டெசோ கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி


இலங்கைக்கு சர்வதேசக் குழுவை அனுப்ப வேண்டும்
அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது

ஜெனிவா, மார்ச் 3- இலங்கையில் உள்ள நிலைமைகளைக் கண் காணித்து சர்வதேச குழுவினரை அனுப்ப வேண்டும் என்கிற புது தீர்மானம் ஒன்றை ஜெனிவா மனித உரி மைக் குழுவில் அமெ ரிக்கா ஒன்றைக் கொண்டு வர உள்ளது. டெசோ மாநாட்டில் இத்தகையதோர் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது என்பது குறிப் பிடத்தக்கதாகும். இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங் களை கண்டித்து அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நாளை 2ஆவது தீர்மானத்தை கொண்டு வருகிறது. இதை இந்தியா உள்பட பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுகிறது. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதிகட்ட போர் நடந் தது. அப்போது, பல ஆயிரக்கணக்கான அப் பாவி தமிழர்கள் கொல் லப்பட்டனர். மேலும், குழந்தை கள், பெண்கள் என்றும் பாராமல், எல்லோரை யும் ராணுவத்தினர் மிகக் கொடூரமாக நடத்திய தும் தெரிய வந்தது. இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற டி.வி, இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தின ரின் அத்துமீறல்களை வெளிகாட்டும் பல காட் சிகளை வெளியிட்டது. இதனால், உலக அளவில் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் எழுந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் 19ஆவது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர் மானம் கொண்டு வந் தது. தமிழர்கள் மறு வாழ்வு தொடர்பாக இலங்கையை நிர்ப்பந் தம் செய்யும் அந்த தீர் மானம், 47 உறுப்பினர் கள் கொண்ட கவுன்சி லில் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தது. இதனால், இலங்கையில் முள் வேலி முகாம்களில் அடைக்கப் பட்டி ருந்த தமிழர்களை மீண்டும் அவர்களின் பகுதிகளில் குடியேற்றி, மறுவாழ்வு பணிகளை மேற் கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சட்டப் படி விசாரிக்க அறிவுறுத் தப்பட்டது. ஆனால், இதுவரை இலங்கை அரசு அவற்றை முறைப் படி மேற்கொள்ளவில்லை. இந் நிலையில், இங்கிலாந் தின் சேனல் -4, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சில காட்சி களை வெளி யிட்டது. அதில், பிரபாகரனின் 12வயது இளைய மகன் பாலச் சந்திரன் எப்படி ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டான் என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இது உலக மக்களி டையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் இலங்கைக்கு எதிராக போராட் டங்கள் நடத்தின.

இதற்கிடையே, ஜெனிவாவில் அய்.நா. பாது காப்பு கவுன்சிலின் 22ஆவது கூட்டம், கடந்த வாரம் துவங்கியது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எஸ்தர் பிரிம்மர் பேசுகையில், இலங் கையை பொறுத்தவரை இந்த கவுன்சிலின் பணி இன்னும் முடியவில்லை. அங்கு எல்எல்ஆர்சி பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அங்குள்ள நிலைமைகளை கண்காணிக்க சர்வதேசக் குழுவினரை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக, இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா இங்கு கொண்டு வர உள்ளது என்றார். இதன்படி, இலங்கைக்கு எதிரான 2ஆவது தீர்மானத்தை அமெரிக்கா, அய்.நா. கவுன்சிலில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், போர்க் குற்றங்களை சர்வதேச சட்டப் படி விசாரிக்கவும், தமிழர் மறுவாழ்வு பணி களை சர்வதேச குழுவினர் கண்காணிப்பில் மேற்கொள்ளவும் வலியுறுத்தப் படும் என தெரிகிறது. இந்த தீர்மானத்தை பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், எளிதாக வெற்றி பெறும். இதனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுவ தாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர் களைச் சரிப் படுத்தும் வேலையில் இலங்கை அரசு ஈடு பட்டு வருகிறது.

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டின் 2ஆவது தீர்மானத்தில் காணப் படும் வாசகமாவது.

அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப் பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

பெரியார் -(விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...


எங்கு நோக்கினும் தலைகள்! தலைகள்!!


சுனாமியாக எழுந்தது தமிழினம்!
தளபதி மு.க. ஸ்டாலினின் எச்சரிக்கையும் காவல்துறை நடவடிக்கையும்


முற்றுகைப் போராட் டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். வள்ளுவர் கோட்டம் வட்டாரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

தி.மு.க., தி.க., விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக் கத் தமிழர் பேர வையைச் சேர்ந்தவர் களும், பொது மக் களும் தமிழின உணர் வாளர்களும் சுனாமி போல பொங்கி எழுந் தனர். மாவட்ட வாரி யாக அறிவிக்கப்பட்டு தோழர்கள் கைதாக அணி வகுத்து நின்ற னர். பல்லாயிரக் கணக் கான இம்மக்களை எப்படி கைது செய் வது? எத்தனை வாகனங்களில் ஏற்றிச் செல்லுவது? எங்கு கொண்டு போய் வைப் பது என்பதறியாமல் காவல்துறையினரே திகைத்தனர்.

அந்த நேரத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கைது செய் யும் பொறுப்பு காவல் துறையைச் சேர்ந்தது. காவல்துறைக்கு எல்லா வகையிலும் ஒத் துழைப்புக் கொடுக்க நாங்கள் தயார். வாகனங்களை ஏற்பாடு செய்யாவிட்டால் எங் களைக் கைது செய்ய முன் வராவிட்டால் இலங்கைத் தூதரகத் திற்கு நாங்கள் நடந்து செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தார்.

அதன் பிறகு வள்ளு வர் கோட்டத்திற்கு அனைவரும் செல்லு மாறு கேட்டுக் கொண் டதற்கிணைங்க, ஆயிரக் கணக்கான போராட்ட வீரர்களும் அமைதி யாக வள்ளுவர் கோட்டத் திற்கு நடந்து சென் றனர். இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. தமி ழீழம் தமிழர் தாகம்!

தமிழ் ஓவியா said...

இந்திராகாந்தி கடைபிடித்ததை
இந்திய அரசு கடைபிடிக்க வேண்டும்

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் கைதான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த போராட்டம் காவல்துறையினரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தின் நோக்கங்களை ஆசிரியர் வீரமணி விரிவாக குறிப்பிட்டுள்ளார். அய்.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும் சில நாடுகளில் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 1971-இல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும். - கைதான தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் இலங்கைத் தூதரகம் முன் முற்றுகை! பல்லாயிரம் தமிழர்கள் கைது!

இலங்கை தூதரகத்தைக் முற்றுகையிட, சென்ற டெசோ அமைப்பினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். (சென்னை -5.3.2013)

சென்னை, மார்ச் 5- கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப்பு கூடி, எடுத்த முடிவுக்கேற்ப, இன்று (5.3.2013) காலை, டெசோவின் சார்பில், இலங்கைக் கொடுங்கோலன் இராஜபக்சே நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மீறல், போர் நெறிகளுக்கெதிராக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தும், பிரபாகரனின் 12 வயது பச்சிளம் பாலகனின் மார்பில் அய்ந்து குண்டுகளால் துளைத்து அந்தப் பழியைக்கூட பிறர்மீது போட முயற்சிக்கும் பொல்லாத ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பதோடு, அவரது அரசின் துணைத் தூதரகம் தமிழ்நாட்டுத் தலைநகரில் இருக்க அனுமதிப்பது மிகப் பெரிய தேசிய அவமானம்; எனவே இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மூட வைக்கும் போராட்டம், இன்று காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின், ஆசிரியர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். காவல்துறை கைது செய்யவே திணறிய நிலை இருந்தது என்றாலும் வள்ளு வர் கோட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வந்து, கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டம் மார்ச் 7இல் டில்லியில் தேசிய தலைவர்கள், மனித உரிமை ஆணையம், உலக பொது மன்னிப்பு சபை அனைத்தும் கலந்து கொண்டு மாபெரும் மாநாடு நடத்தவிருப்பதில் மேலும் தனி சுதந்திர உரிமைகள், பொருளாதாரத் தடை இவற்றை வற்புறுத்து வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினர். பிறகு கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியம் கொண்டு சென்றனர். 49 ஆவது முறையாக தமிழர் தலைவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


வாய்மையைக் காணோம்! கண்டுபிடித்துக் கொடுத்த தமிழர்!


கண்ணன் கோவிந்தராஜூலு, ஒரு தமிழர். முன்னாள் ராணுவ வீரர். ராணுவக் கொடிகளைப் பார்த்த அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவற்றுள் அரசு முத்திரையான வாய்மையே வெல்லும் (சத்ய மேவ ஜெயதே) காணப்படவில்லை.

நான்கு சிங்கங்களின் கீழே பொறிக்கப்பட்டுள்ள அசோகச் சக்கரத்தின் கீழ் இருந்த, இருக்க வேண்டிய சத்யமேவ ஜெயதேவைக் காணவில்லை!

எடுத்துவிட்டார்களா? புறக்கணிப்பா! விடுபட்டு விட்டதா என்று அவருக்குப் புரியவில்லை.

உடன் ராணுவ அமைச்சகத்துக்கும், முப்படைத் தளபதிக்கும் கடிதங்கள் எழுதினார். அதில், 2005ஆம் ஆண்டின் இந்திய அரசு முத்திரை (தடையும் தகாத பயன்பாடும்) சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், இந்திய ராணுவக் கொடியில் இந்திய அரசின் சின்னத்தில் ஒரு பகுதியை, சத்ய மேவ ஜெயதே என்ற சொற்றொடரைக் காணவில்லை. ஆகவே அரசின் முத்திரை முழுமையாக இல்லை. இது ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்பது பலரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.

ராணுவ அமைச்சகம் அதை முப்படைகளுக்கும் அனுப்பி, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விட்டது. அதை ஆராய்ந்து பார்த்த ராணுவம்.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி கர்னல் வி.எஸ்.ரவத், பாதுகாப்புத் துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்து கோவிந்த ராஜுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ராணுவக் கொடியில் அரசு முத்திரையாக சத்ய மேவ ஜெயதே விடுபட்டுப் போயிருந்ததை கவனத் திற்குக் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்து அதைப் பற்றிய சரியான பயன்பாடு ராணுவத்திற்கு உணர்த்த வைக்கப்பட்டிருப்பதாகவும் அதைப் பற்றி எல்லாத் துறையினரும் மீண்டும் செயல்பட உத்தர விட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இனிமேலாவது இந்திய அரசு ஈழத் தமிழர்களை வாழ்விக்க முன்வரவேண்டும்


இனிமேலாவது இந்திய அரசு ஈழத் தமிழர்களை வாழ்விக்க முன்வரவேண்டும்
டெசோ தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, மார்ச் 5- தமிழ்நாட்டில் அனைவரும் போராட்டம் வாயிலாக தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இனிமேலாவது இந்திய அரசு ஈழத் தமிழர்களை வாழ்விக்க முன்வர வேண்டும் என்றார் டெசோ தலைவர் கலைஞர் செய்தி யாளர்களிடம் இன்று.

அவர் கூறியதாவது:

செய்தியாளர்: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் டெசோ சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதைப் பற்றி?

கலைஞர்: தமிழ்நாடு முழுவதிலுமே, தி.மு. கழகம் மாத்திரமல்லாமல், டெசோ இயக்கம் மாத்திரமல்லாமல், இலங்கைத் தமிழர்பால் பற்று கொண்டவர்கள் அனைவரும் தனித்தனியாகவும், இணைந்தும் பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டங்கள் தமிழ் நாட்டிலே ஒரு கட்சியின் சார்பாக மாத்திரம் இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்தக் குரலாகவும் எதிரொலிக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து, இந்திய அரசு இனிமேலாவது ஈழத் தமிழர்களை வாழ வைக்க முன்வரவேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்வரு வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியா ஒத்துழைக்கவேண்டும்

செய்தியாளர்: அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

கலைஞர்: தீர்மானம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கை இல்லாமல் இல்லை. அதற்கு இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் அழுத்தமான கோரிக்கை.

செய்தியாளர்: டெசோ அமைப்பின் செயல்பாடுகள் முறையாக ஈழத் தமிழர்களுக்கு உதவுவதாக உள்ளதா?

கலைஞர்: டெசோ அமைப்பின் செயல்பாடுகள் வெறும் கூக்குரலாக இல்லாமல் முறைப்படி, சட்டப்படி என்ற வகையில் எல்லா நாடுகளின் தூதர்களையும் சந்தித்து நிலைமைகளை விளக்கியிருக்கிறோம். அவர்களும் இந்த அணுகுமுறையை அலட்சியப்படுத்தாமல், தங்கள் ஆதரவைத் தெரிவித் திருக்கிறார்கள். மற்ற நாடுகளின் துதுவர்களும் எங்கள் கோரிக்கையை ஏற்று வழி மொழிந்திருக்கிறார்கள். அவர்களின் இந்த ஆதரவு வாக்கெடுப்பு நடைபெறுகிற நேரத்தில் பயன்படும் என்று நம்புகிறேன். டெசோ அமைப்பின் சார்பாக அய்.நா. மன்றத்திற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் நேரில் சென்று மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழர் களின் நிலைமைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

வேறு சிலர் நடத்திய போராட்டங்களுக்கும் ஆதரவு

செய்தியாளர்: இன்று டெசோ சார்பில் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டத்தில் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் பேர்வரை வள்ளுவர் கோட்டத்திற்கு முன்னால் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது டெசோ அமைப்பின் வளர்ச்சியைக் காட்டுகிறதா?

கலைஞர்: டெசோ மீண்டும் புத்துயிர் பெற்று, கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் இலங்கைத் தமிழர் களுக்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாகத்தான் இன்று இந்த முற்றுகைப் போராட்டம் இந்த அளவிற்கு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி யிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங் களுடைய ஆதரவு உண்டு.

தமிழ் ஓவியா said...


முற்றுகைப் போராட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!


எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம்

ஈழத் தமிழர்கள் எங்கள் ரத்தம்

எங்கள் முத்தம் எங்கள் முத்தம்

ஈழத் தமிழர்கள் கல்லறைக்கு எங்கள் முத்தம்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,

தலைவர் கலைஞர் காட்டிய வழியில்

அறவழிப் போராட்டம்! அறவழிப் போராட்டம்!

கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்

எங்கள் தொப்புள்கொடி உறவுகளை

கொத்துக் கொத்தாக கொன்று குவித்த

கொடுங்கோலன் ராஜபக்சேவை

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!

விடமாட்டோம், விடமாட்டோம்

கொடுங்கோலன் ராஜபக்சேவை

குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கும்வரை

விடமாட்டோம், விடமாட்டோம்!

இந்திய அரசே, இந்திய அரசே

துணை போகாதே, துணை போகாதே

சிங்கள ராஜபக்சே அரசுக்கு

துணை போகாதே, துணை போகாதே!

துரோகம் செய்யாதே, துரோகம் செய்யாதே

10 கோடி தமிழர்களுக்குத் துரோகம் செய்யாதே!

நிறைவேற்று, நிறைவேற்று

ராஜபக்சேவுக்கு எதிரான

தீர்மானத்தை நிறைவேற்று!

வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

உலகத் தமிழர்களிடையே

வாக்கெடுப்பு நடத்திடவேண்டும்!

வீர வணக்கம் வீர வணக்கம்

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்

விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் இயக்க

தமிழர் பேரவைச் சார்பில் வீர வணக்கம்

அன்புத் தம்பி பாலச்சந்திரனுக்கு

டெசோ அமைப்பின் சார்பில் வீர வணக்கம்!

- போன்ற ஒலி முழக்கங்கள் இன்றைய முற்றுகைப் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்


புதுடில்லி, மார்ச் 5- நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர் பாலு தலைமை வகித்தார்.

ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், போர்க் குற்றம் புரிந்துள்ள ராஜபக்சேவைக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், செல்வ கணபதி, ஜெபத்துரை, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கனிமொழி எம்.பி. கூறும்போது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி யும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு இதை கொண்டு வருவதற்காகவும் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்தினோம் என்றார்.