Search This Blog

15.8.10

மங்கை பாடிய கொங்கை! - ஆண்டாள் பிரதாபம்!

ஆண்டாள் பிரதாபம்!


விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சாசனம் வலியுறுத்தினால் என்ன? மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் வெளியேறிட வேண்டும் என்று பொதுவாக யார் கூறினால்தான் என்ன?

அதுபற்றி எல்லாம் நம் நாட்டு ஊடகங்களுக்குக் கவலையில்லை; சமூகப் பொறுப்புணர்ச்சி என்பது காயிலாங் கடையில் வாங்கும் சரக்கா என்று கேள்வி கேட்கும் நிலையில் தான் இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் மக்கள் மவுடிகச் சேற்றில் மூழ்கிக் கிடக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்களை நல்லவிதமாக மொட்டை அடிக்கலாம் என்று கருதுகிற கழுகு மனப்பான்மைதான் பெரும்பாலான நம் நாட்டு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும். மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் தரமான ஏடுகளை எதிர்பார்ப்பார்களே! முற்போக்கான தகவல்களை தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும் என்று கூறுவார்களே! அப்படியெல்லாம் ஏடுகள் நடத்த, தொலைக்காட்சிகளை இயக்க போதிய அறிவு விசாலமும், பொது அறிவும் தேவைப்படுமே!

மூடச் சரக்கு என்றால், போர் போராகக் கொட்டிக் கிடக்கின்றன புராணங்களில். எண்ணிக்கையில் கூற முடியாத அளவுக்கு இறைந்து கிடக்கின்றன இதிகாசங்களில். தலைக்கு மேலே வழிந்து ஓடுகின்றன தல புராணங்கள்.

அதனால்தான் இந்த ஊடகக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆன்மிக இணைப்புகளை அள்ளி விடுகின்றன.

இதற்குப் புதிய சிந்தனைகள் தேவையில்லை. ஏற்கெனவே இவர்கள் ஒவ்வொரு வாரம் மாதத்திற்கேற்ற மூடப் பண்டிகைகள், கோவில் விழாக்கள்பற்றி கொட்டியிருப்பவற்றை அப்படியே வெளியிட்டால், யார் என்ன கேட்கப் போகிறார்கள்?

வருடா வருடம் மீனாட்சிக் கல்யாண விழா மதுரையில் நடக்கத்தான் செய்கிறது. அதற்கான புராணக் கதைகள் மாறவா போகின்றன?

திருவில்லிப்புத்தூர் ஆடிப் பூரம் என்பதற்குப் புதிதாக எதைக் கண்டுபிடித்து இலக்கியக் கட்டுரைகள் தீட்டப் போகிறார்கள்?

மக்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியே வருவதற்கு ஏதாவது போதைகள் தேவைப்படுகின்றன.

அந்த இடத்தை மதவாதிகள் கைப்பற்றி தங்கள் கைச்சரக்கை அவிழ்த்து வருகிறார்கள். ஊடகக்காரர்கள் அதனைக் கடன் வாங்கி கடைச் சரக்காக்கி கல்லாப் பெட்டிகளை நிரப்பி விடுகிறார்கள்.

நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? பன்றி விற்ற காசு நாறவா போகிறது?

தந்தை பெரியார், சாமி கைவல்யம் போன்றவர்கள், சுயமரியாதைக்காரர்கள் இந்தப் புராண ஆபாசங்களை நார் நாராகக் கிழித்துத் தோரணங்களாகத் தொங்க விட்டுத்தான் பார்த்தனர்.

ஏடுகள் நடத்தி, அவற்றில் புதைந்து கிடக்கும் இழிவுகளை எல்லாம் விலாவாரியாக எடுத்து எழுதித்தான் பார்த்தார்கள்.

அதில் ஓரளவு விழிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

திருநீறு பூசினால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்கிற அளவுக்குக் கீழ்த்தரமாக எழுதி வைத்துள்ளார்களே என்று தன்மான இயக்கம் பகுத்தறிவுக் கருத்துகளை திருப்பித் திருப்பி எடுத்துச் சொன்ன நிலையில், நெற்றி கொஞ்சம் சுத்தமாக ஆக ஆரம்பித்தது என்பது உண்மைதான்.

ஆண்கள்கூட குங்குமம் வைத்துக் கொண்ட காலம் இருந்ததுண்டு. இப்பொழுது வெட்கப்பட்டு நெற்றியை விலாசம் எழுதும் விளம்பரப் பலகையாக ஆக்கிக் கொள்வதைத் தவிர்த்துள்ளனர்.

ஆனாலும் பய+பக்தி இருக்கிறதே! ஆம் பயம் இருந்தால்தான் பக்தி வரும். அதனைச் சன்னமாகச் செய்வதில்தான் இந்த ஊடகங்கள் மீசையை முறுக்கிக் கொண்டு திரிகின்றன.

ஆடிப்பூரம் ஸ்பெஷலாம்; அது என்னப்பா ஆடிப்பூரம்?

திருவில்லிபுத்தூரில் உள்ள பெருமாள் கோயிலில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் நாள்தோறும் பூக்களைப் பறித்து, பெருமாளுக்குச் சூட்டும் பணி பெரியாழ்வாரைச் சார்ந்தது.

ஒரு நாள் பூ பறிக்க அந்த நந்தவனத்துக்குச் சென்றபோது, குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டதாம்! ஆச்சரியத்தோடு அங்கு மிங்கும் கண்களைச் சுழல விட்ட அய்யங்காரின் கண்களில் ஒரு குழந்தை பட்டது. அதைத் தூக்கி மார்போடு வாரி அணைத்து, வளர்த்து வந்தாராம். (பூமாதேவிதான் அந்தக் குழந்தையாகப் பிறந்தது என்பது ஒரு புராண அளப்பு!)

சீதைகூட அனாதையாகக் கண்டு எடுக்கப்பட்ட கதை வைணவத்தில் இது ஒரு தனிப் பாணி போலும்!

திருவல்லிபுத்தூரில் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்த நாள்தான் ஆடிப் பூரமாம்.

கோதை நாச்சியார் என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டி வளர்த்தார் பெரியாழ்வார்.

வளர்ந்த அந்தக் குழந்தை என்ன செய்ததாம்? பெருமாளுக்குத் தம் தந்தையார் நாள்தோறும் கட்டி வைத்த பூமாலையை, பெருமாளுக்கு அணிவிப்பதற்கு முன்பே தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாளாம்.

ஒரு நாள் அவ்வாறு ஆண்டாளாகிய (கோதை நாச்சியார்) அந்தப் பெண் தன் கழுத்தில் பெருமாளுக்குரிய மாலையை அணிந்திருந்தபோது பெரியாழ்வார் பார்த்துத் திடுக்கிட்டாராம்.

பகவானுக்குச் சூட்டப்பட வேண்டிய மலையை பாவ ஜென்மமான மனிதன் சூட்டி மகிழலாமோ! அபச்சாரம் அல்லவா!

மீண்டும் நந்தவனம் சென்று, புதிதாகப் பூக்களைப் பறித்து மாலை கட்டிக் கொண்டு போனபோது பெருமாள் மறுதலித்தாராம்.

ஆண்டாள் கழுத்தில் அணிந்த மாலைதான் தமக்கு வேண்டும் என்று ஆண்டவன் அடம் பிடித்தானாம்.

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்! என்ற பட்டம் இவ்வாறு தான் வந்ததாம்.

பக்தையாக அந்தப் பெண் எப்படியாம்? பிஞ்சில் பழுத்தது.

பகவானாகிய கண்ணனைக் கலியாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டதாம்.

கடவுளுக்கும் பக்தைக்கும் காதலாம். திருவரங்கத்தின் கோபுரத்திலிருந்து, திருவரங்கத்தில் உள்ள தம் காதலியான ஆண்டாளுடன் காதல் கண்களை சிமிட்டுவாராம்.

உறவு முறையில் பார்க்கும்போது, பக்தை என்பவள் பகவானின் மகள்தான் ஆனாலும் அந்த மகளைத் தான் பகவான் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்தினானாம்! நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் என்று மானம் உள்ளவர்கள் கொதிக்கலாம். ஆனால் பக்தி என்று வந்து விட்டால் அனைத்தையும் உதிர்க்க வேண்டியதுதானே!

இந்தக் கதை எப்படியோ இருக்கட்டும்! பக்தையாகிய அந்த மகள், தகப்பனாகிய அந்தக் கடவுளிடம் மையல் கொண்டு பாடிய பாடல்கள் ஒன்றா இரண்டா? 143 பாடல்கள் இந்தத் தொகுப்புதான் நாச்சியார் திருமொழி என்பதாகும்.

மார்கழி நோன்பிருந்த ஆண்டாள் தன் தோழியரை விடியற்காலையில் எழுப்புவதாக அமைந்த 30 பாசுரங்கள் அடங்கிய நூலுக்கு திருப்பாவை என்று பெயர். இப்பாடல்களுக்குமுன் கொக்கோகம் தோற்று ஓடும் ஓடியே விடும்!

எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல். திராவிட இயக்க எழுத்தாளராக விளங்கிய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மறைந்த தோழர் பொன்மலைபதி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை ஒன்று போதும் பக்தியின் யோக்கியதைக்கு (உண்மை 1.10.1977)

விரகதாபம் எடுத்து, வெட்கம் சிறிதுமின்றி வண்டல் வண்டலாகப் பாடும் அந்த ஆபாசத்தை வெளிப்படுத்தினால்தான் பத்தில் ஒருவராவது சிந்தித்துப் பார்ப்பார்கள். அந்தக் கட்டுரையை தனியே காண்க!

------------------- மின்சாரம் அவர்கள் 14-8-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


************************************************************************************

மங்கை பாடிய கொங்கை!

பொன்மலை பதி

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண்ணாழ்வார்! அவர்தான் ஆண்டாள் அம்மையார். கோதையென்றும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும், நப்பின்னைபிராட்டி, பூமிப் பிராட்டி, பெரிய பிராட்டி என்றும் வியப்போடு அழைப்பர். அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசி மலரில், பூமிப் பிராட்டியராக, அமசையாய் அயோநிஜையாய் திருவவதரித் தருளினாராம். அதாவது யோனிவழி பிறவாத, பூமியில் கண்டெடுத்த கரும்பார் குழற்கோதையாவார்! அனாதையோவென அய்யுற வேண்டாம்! அவதாரமென மெய்யுணர் வீரே! அவரைக் கண்டெடுத்து, வளர்த்து, திருமாலுக்கே கைப்பிடித்து இட்டவர் விஷ்ணுசித்தர் எனப் புகழ் பெற்ற பெரியாழ்வாரே!

அலங்காரப்பித்து

ஆண்டாள் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மிக்க திறமையும், ஆர்வமும் கொண்டவர்.

அவனுக்கு நேரொவ்வா திருக்கிறேனோ?

ஒத்திருக்கிறேனோ?

என்று காரை பூண்டு, கூறையுடுத்து, கைவளை குலுக்கி, கோவைச் செவ்வாய் திருத்தி எப்படி ஒப்பனை! அவ்வொப்பனை யழகைக் கண்ணாடியிலே கண்டு கண்டு மகிழ்வாராம்!

திருமணப் பேச்சு அடிபடுவதற்கு முன்னமேயே, கட்டிலறைக் கனவுகள் காண்பதில் வல்லவர்! காதல் வேட்கையால் உந்தப்பட்டு பற்பல பாக்கள் பரவசமாய்ப் பாடியிருக்கிறார். உறுப்புகளின் அழகை வருணிப்பதில் ஆண்கள் கெட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக, கவர்ச்சியாக, பாலுணர்ச்சி சுவையோடு பாடியவர்கள் ஆண்களுக்கு நிகர் ஆண்டாளே!)

அப்படிப்பட்ட ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார்திருமொழி யிலோ:

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்

ஆதரித் தெழுந்த என்தட முலைகள்

உன்னித் தெழுந்த என்தட முலைகள்

சாயுடை வயிறும் என் தட முலைகள்

துவரைப் பிரானுக்கே! ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்!

கிருஷ்ணன், துகிலைத் திருடிக் கொண்டு மரக்கிளையில் போட்டு, அமர்ந்து கோபியரின் கொங்கையழகையும், அல்குலின் கண்கவர் அகலத்தையும் நீச்சலுடைகூட இல்லாத அப்படிப்பட்ட அம்மணக் குட்டிகளைக் கண்டு களிப்பதைப் பெண் ஆழ்வாராகிய ஆண்டாளே பாடுகிறார்:

தோழியும் நானும் தொழுதோம்

துகிலைப் பணித் தருளாயே!

இது என் புகுந்ததுஇங்கு அந்தோ!

நீ வேண்டிய தெல்லாம் தருவோம்!

பட்டைப் பணித்தருளாயே!

கோலச் சிற்றாடை பலவும்

கொண்டு நீயேறி யிராதே!

கோலம் கரிய பிரானே!

நீரிலே நின்று அயர்க்கின்றோம்!

நீதியல்லாதன செய்தாய்!

என்று கதறிக் கதறிக் கேட்டும் கண் கொட்டாமல் களித்து இன்புற்ற காட்சியைக் காணாத கண் என்ன கண்ணோ! வென ஏங்குவார்களேவென்றுதான் கற்சிற்பங்களாக, வண்ண ஓவியமாக வடித்து வைத்து இன்றும் கோகுலாஷ்டமி கொண்டாடி களிக்கிறோம்!

ஏக்கத்தின் உருக்கம்

ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:

முத்தன்ன வெண்முறுவல்

செவ்வாயும் முலையும்

அழகழிந்தேன் நான்!

புணர்வதோராசையினால் என்

கொங்கை கிளர்ந்து

குமைத்துக்

குதூகலித்து ஆவியை ஆகுலம்

செய்யும் அங்குயிலே!

கண்ணீர்கள்

முலைக்கு வட்டில் துளி

சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து

கதுவப்பட்டு இடைக்கங்குல்

ஏமத்தோர் தென்றலுக்கு

இங்கிலக்காய்

நானிருப்பேனே!

என்னாகாத்திளங் கொங்கை

விரும்பித்தாம் நாள்தோறும்

பொன்னாகம் புல்குதற்கு

எனப் புரிவுடைமை

செப்புமினே!

கொங்கைமேல் குங்குமத்தின்

குழம்பழியப் புகுந்து

ஓர் நந்நாள்

தங்குமேல் என்னாவி

தங்குமென்று உரையீரே!

பாம்பறியும் பாம்பின்கால் என்பார்கள். அதற்கொப்ப நுட்பமான உட்பொருள்களையெல்லாம் அம்பலப்படுத்திப்பாட இப்படியெல்லாம் ஆணாழ்வார்களால் முடியுமா? அதற்காகவென்றே அத்தனை பேர்களுள் கொங்கைக் காமத்தைப் பாட, அதிருசி, தனிருசியுடன் பாட அவிதரித்தார் போலும் ஆண்டாளம்மையார்! மேலும், மேலும் கேட்க, படிக்க அவாவுறும் வகையில் தொடருகிறார்:

கொங்கைத் தலமிவை

நோக்கிக் காணீர்

கோவிந்தனுக்கல்லால்

வாயில் போகா!

கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!

இருக்கட்டும், இதைக் கேளுங்கள்:

காமப் பாதையில் கண்ணன் நாமம்

குற்றமற்ற முலைதன்னைக் குமரன்

கோலப்பணைத் தாளோடு

அற்றகுற்றமவைதீர அணைய

அமுக்கிக் கட்டீரே!

எப்படி அணைத்தல், அமுக்கல் வர்ணனைகள்! போதாவோ? சரி கேளுங்கள்.

கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை

தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி

லெறிந்து என்னழலைத் தீர்வேனே!

அப்பாடி! காமவேட்கைத் தீயின் சுவாலையை எப்படித்தான் எழுதுவது? நிற்க,

கொம்மை முலைகள் இடர்தீரக்

கோவிந்தற்கு ஓர் குற்றேவல்

என்றவாறெல்லாம் தவித்து, பக்த கோடிகளையும் ஒழுக ஒழுக உருக வைத்து எப்படி எப்படியெல்லாம் காமத்தினூடே கண்ணன் நாமம் பாடி நம்மையும் வாழவிட்டார் பார்த்தீர்களா?

---------------------- “உண்மை” 1.10.1977

**************************************************************************************

1 comments:

எம்.ஏ.சுசீலா said...

எல்லாவற்றையும் ஆழமாக ஆராய்ச்சி நோக்குடன் தெரிந்து கொண்டு சமநிலையோடு பேசுவது நல்லது.
விவரம் தெரிந்த எவரும் ஆண்டாள் மீது பரிவும்,இரக்கமுமே கொள்ள முடியுமே அன்றி அவளைத் தெய்வமாக்குவதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
ஆண்டாள் பெண்விடுதலையின் முன்னோடி என்பதும் பெண் எழுத்து என்ற வகைப்பாட்டுக்கு அடித்தளமிட்டது அவள் கவிதையே என்பதும் கட்டுரையாளருக்குத் தெரியுமா.
தெரியாவிட்டால் பார்க்கவும்
ஆண்டாளின் பெண்மொழி1,2,3.
http://masusila.blogspot.com/2009/01/blog-post_08.html
http://masusila.blogspot.com/2009/01/2.html
http://masusila.blogspot.com/2009/01/3.html